Friday, May 29, 2020

பொன்மகள் வந்தாள் - சினிமா விமர்சனம்
‘சிகை’ ‘ஆர்.கே.நகர்’ போன்ற சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் ஏற்கெனவே OTT-ல் வெளியாகியிருந்தாலும் திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பு, தயாரிப்பாளர்களின் ஆதரவு போன்ற சர்ச்சைகளைத் தாண்டி அமேஸான் பிரைமில் வெளியாகியிருக்கும் முதல் பிரபலமான திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’.

அசலான ஏற்பாட்டின் படி திரையரங்கில் வெளியாகியிருக்க வேண்டிய இந்தத் திரைப்படம், கொரானோ பிரச்சினை காரணமாக வெளியீடு தள்ளிப் போய், ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படியும் நஷ்டத்தைத் தவிர்க்க வேண்டியும் நேரடி இணைய வெளியீடாக வந்துள்ளது.

தவிர்க்க முடியாத இந்தச் சூழலின் வாயிலாக தமிழ் சினிமாவின் ஒரு புதிய கதவு அதிகாரபூர்வமாக திறந்துள்ளது எனலாம். கொரானோ இடைவெளியில் மக்கள் ஏற்கெனவே அமேஸானிலும் நெட்பிளிக்ஸிலும் குவிந்திருக்கும் போது தமிழ் சினிமாவும் அதிலிருந்து விலகியிருக்க முடியாது. இந்தச் சந்தையின் வழியாக இனி பல்வேறு தமிழ்த் திரைப்படங்கள் OTT-ல் வெளியாகக்கூடும் என்கிற அழுத்தமாக சமிக்ஞையை தந்திருக்கிறது ‘பொன்மகள் வந்தாள்’.

ஆனால் இதன் கூடவே இன்னொரு சோதனையும் இருக்கிறது. பொதுவாக எந்தவொரு தமிழ் திரைப்படம் வந்தாலும் முதலில் அதனுடைய மொக்கையான கள்ள நகல் வெளியாகும். நல்ல பிரிண்ட் வருவதற்கு நான்கைந்து நாட்களாவது ஆகி விடும். ஆனால் ‘பொன்மகள் வந்தாள்’ வெளியான சில மணி நேரங்களுக்குள்ளாகவே பளிங்கு போன்ற பைரஸி பிரிண்ட் வெளிவந்து விட்டது.

வீட்டிற்கே சினிமாவைக் கொண்டு வந்து சேர்க்கும் தொழில்நுட்ப வளர்ச்சியின் அனுகூலங்களைப் போலவே அதன் தவிர்க்க முடியாத கசப்பு பக்கங்கள் இவை.

**

சரி. இத்தனை பெருமையுடன் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ ஒரு அதிரடி வெளியீடாக, கனகம்பீரமாக உள்ளே நுழைந்திருக்கிறதா என்று பார்த்தால், ஏமாற்றத்துடன் ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

டிரைய்லர் கட்டில் இருந்த குறைந்த சுவாரசியம் கூட படத்தில் இல்லை. ‘கோர்ட் ரூம் டிராமா’ போல அறியப்பட்ட இந்தத் திரைப்படத்தை முழுமையாகப் பார்க்கும் போது ஸ்கூல் டிராமா போல இருக்கிறது.

இந்தத் திரைப்படம் சொல்ல வந்த ஆதாரமான செய்தி அவசியமானது என்றாலும் இழுவையான, அமெச்சூர் டிராமாவின் மூலம் இதன் காண்பனுபவத்தை மிக சலிப்பானதாக ஆக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் J. J. Fredrick.

**

ஊட்டியின் பின்னணியில் ஒரு அமைதியான, அழகான நிலப்பரப்போடு படம் துவங்குகிறது. சில துப்பாக்கித் தோட்டாக்கள் வெடிப்பதில் அந்த அமைதி கலைகிறது. ஜோதி என்கிற பெண், சைக்கோத்தனமாக குழந்தைகளைக் கடத்திக் கொல்வதாகவும், அப்படி அவர் ஒரு குழந்தையைக் கடத்திய போது தடுக்க வந்த இரு இளைஞர்களைச் சுட்டுக் கொன்று விட்டதாகவும் செய்திகள் பரபரப்பாக தெரிவிக்கின்றன. பிறகு நடந்த என்கவுண்ட்டரில் ஜோதியும் செத்து விடுகிறார்.

சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு ‘வெண்பா’ (ஜோதிகா) என்கிற வழக்கறிஞர் இந்த வழக்கைத் தூசு தட்டி எடுக்கிறார். ‘எங்கள் குழந்தைகளைக் கடத்திக் கொன்ற ஒரு பெண்ணுக்காகப் போய் வாதாடுகிறாயே” என்று ஊர் மக்கள் வெண்பாவைத் தூற்றுகிறார்கள்.

வெண்பாவின் முயற்சி வெற்றியடையாதவாறு சில நிழலான முயற்சிகள் நடக்கின்றன. பலவீனமான அரசு தரப்பு வழக்கறிஞர் மாற்றப்பட்டு, புகழ்பெற்ற, ஆனால் கிரிமினல்தனமான வழக்கறிஞரான ராஜரத்தினம் (பார்த்திபன்) வெண்பாவை எதிர்கொள்ள வருகிறார்.

யார் இந்த வெண்பா? எதற்காக அவர் 15 வருடங்கள் கழித்து இந்த வழக்கை நடத்த வேண்டும்? ஏன் அவருக்கு எதிரான முயற்சிகள் நடைபெறுகின்றன.

கோர்ட் டிராமா காட்சிகள் வழியாகவும் அதன் வெளியில் நடைபெறும் சம்பவங்களின் வழியாகவும் இதன் முடிச்சுகள் மெல்ல அவிழ்கின்றன.

**

பெண்மையத் திரைப்படங்களில் ‘ஜோதிகா’ நடிக்கிறார் என்றாலே உள்ளுக்குள் சற்று ‘கெதக்’ என்றுதான் ஆகி விடுகிறது. ராட்சசி போன்ற ஆறுதலான விதிவிலக்குகள் தவிர பலவற்றில் நம்மை பலமாக ஜோதித்திருக்கிறார் ஜோ. இதிலும் அந்த சோதனை தொடர்கிறது. ஆனால் இதற்காக ஜோதிகாவைக் குறை சொல்வதற்குப் பதிலாக அவரைச் சரியாக பயன்படுத்தாத இயக்குநர்களைத் தான் சுட்டிக் காட்ட வேண்டும்.

வெண்பாவாகவும் இன்னொரு பாத்திரத்திலும் நடித்திருக்கும் ஜோதிகா தன் பங்கையும் உழைப்பையும் இயன்ற அளவிற்கு தர முயன்றிருந்தாலும் பலவீனமான திரைக்கதை, நாடகத்தனமான காட்சிகள் போன்றவற்றால் பெரிதாக எந்தக் காட்சியும் சோபிக்கவில்லை.

பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் என்று அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள் கம் நடிகர்கள் இதில் இருக்கிறார்கள். ஆனால் எவருமே சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. துணை நடிகர்கள் போலவே வந்து போகிறார்கள். அநியாய விரயம்.

அதிலும் பாண்டியராஜனின் நிலைமை ரொம்பவும் மோசம். அவர் ஒரு காட்சியில் நீதிபதியின் உதவியாளர் போல இருக்கிறார். இன்னொரு காட்சியில் பார்வையாளர்களின் நடுவில் உட்கார்ந்திருக்கிறார்.

செல்வாக்கு மிக்க ஒருவரிடம் நீதிபதி பிரதாப் போத்தன் விலை போவது போல காண்பித்து விட்டு பிறகு மாற்றி விடுகிறார்கள். டிவிஸ்ட்டாம். இப்படி மொக்கைத்தனமான, எளிதில் யூகிக்க முடிகிற டிவிஸ்ட்கள் படம் பூராவும் வந்து நெளிய வைத்துக் கொண்டேயிருக்கின்றன. அதிலும் படம் ஏறத்தாழ முடிந்து நாம் கணினியை ஆஃப் செய்யலாம் என்று முடிவு செய்யும் போது கடைசியிலும் இயக்குநர் ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கிறார்.. பாருங்கள்.. முடியல.

**

ஒரு திரைப்படத்தில் casting மிக முக்கியம். கோயிஞ்சாமி போல இருக்கிற சுப்பு பஞ்சுவையெல்லாம் ஊழல் செய்கிற காவல் அதிகாரியாக கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை.

தியாகராஜனின் முகத்தில் பல நூற்றாண்டுகளாக எப்போதுமே எக்ஸ்பிரஷன் வராது. இதிலும் அப்படியே ரோபோத்தனமான வில்லத்தனத்தை செய்து விட்டுப் போகிறார்.

இந்த வரிசையில் ஆறுதலாக இருப்பவர் பார்த்திபன் மட்டுமே. அவருடைய பிரத்யேகமான பாணியில் ‘வெண்பா’ன்னு பேர் வெச்சுக்கிட்டு வெண்பா.. வெண்பா.. வா பேசிக்கிட்டே போறீங்க” என்று அவர் நக்கலடிக்கும் வசனங்கள் மட்டுமே சற்று புன்னகைக்க வைக்கிறது. அது கூட இயக்குநரைத் தாண்டி பார்த்திபனே சொல்லியதாக இருக்கக்கூடும்.

**
ஒளிப்பதிவு ராம்ஜி, எடிட்டிங் ரூபன் போன்று பலமான தொழில்நுட்பக் கலைஞர்களின் வரிசை இருந்தாலும் மொக்கையான திரைக்கதை காரணமாக படத்தைக் காப்பாற்ற முடியவில்லை.

படத்தின் பெரும்பாலான பின்னணி ஊட்டியில் நடப்பது போல் இருந்தாலும் பல காட்சிகளை சென்னையில் படமாக்கி மேட்ச் செய்ய முயன்றிருப்பார்கள் போலிருக்கிறது. ஒரு பாத்திரம் ஸ்வெட்டர் போட்டு வந்தால் அது ஊட்டி என்று நாம் நம்பியாக வேண்டும் போல.

படத்தின் ஆதாரமான கோர்ட் ரூம் காட்சிகளிலும் பெரிதாக எந்வொரு சுவாரசியமும் இல்லை. அதிலும் நீதிமன்றத்திலேயே ஒருவரையொருவர் ஏக வசனத்திலும் ‘நீதான்யா. ஃபிராடு.. நீதாண்டா கிரிமினல்’ என்றெல்லாம் பேசிக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. அதிலும் ஒரு பெண் நீதிபதியை ‘இல்ல மாமி.. நான் என்ன சொல்றேன்னா” என்கிறார் பாக்யராஜ். அரசு தரப்பு வழக்கறிஞரை ‘வாங்க நல்லாயிருக்கீங்களா.. காஃ.பியா கூல்டிரிங்ஸா.. என்ன சாப்பிடறீங்க?” என்று கேட்காத குறையாக வரவேற்கிறார் நீதிபதி பிரதாப் போத்தன்.

படத்தின் தயாரிப்பாளர் ஜோதிகாதான். அதற்காக இரண்டு முக்கிய பாத்திரங்களிலும் அவரையே நடிக்க வைத்திருக்க வேண்டுமா என்ன? அதைச் சமாளிப்பதற்காக இறுதியில் தந்திருக்கும் டிவிஸ்ட் சகிக்கவில்லை.**

பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைகளைப் பற்றி பேசுகிற இந்தத் திரைப்படம் சொல்கிற ஆதாரமான செய்தி முக்கியமானதுதான். ஆனால் செயற்கையான பல திருப்பங்களுடன் கொட்டாவி வரும் படி சொல்லியிருப்பதுதான் இந்தத் திரைப்படத்தை மிகச் சுமாரான முயற்சியாக ஆக்கியிருக்கிறது.

“மேடம்.. இந்தப் படத்துல நீங்கதான் சென்ட்டர் ஆஃப் அட்ராக்ஷன். படமே உங்களை வெச்சுதான் ஒடுது” என்று ஜோதிகாவிடம் இனி எந்தவொரு இயக்குநராவது கதை சொல்ல வந்தால் சூர்யாவின் குடும்பம் உஷாராகி விடுவது நல்லது. ஆம். இந்தத் திரைப்படம் ‘சூர்யா –ஜோதிகா’ தயாரிப்பு.

‘பொன்மகள் வந்தாள்’ – ‘வாடி ராசாத்தி’ என்று சொல்லி வரவேற்க வேண்டியதை ‘ஏம்மா வந்து இம்சை பண்றே’ என்று சலிப்போடு சொல்ல வைத்திருக்கிறார்கள்.suresh kannan

No comments: