Monday, May 25, 2020

Taxi (2015) - 'டாக்ஸி… டாக்ஸி…'




‘இந்தக் கதை மட்டும் கிடைச்சிருச்சுன்னா உடனே பூஜை போட்டுடலாம்ஜி’ என ‘காதலிக்க நேரமில்லை’ செல்லப்பா மாதிரி நிறைய இயக்குநர்கள் அலப்பறை தருவார்கள். ஆனால் நம்மைச் சுற்றியே எத்தனையோ கதைகள் காற்றில் உலவிக் கொண்டிருக்கின்றன. கண்ணையும் காதையும் திறந்து வைத்திருந்தாலே போதும் என்பதை பல உலக சினிமாக்கள் சொல்கின்றன. அந்த வகையில் இரானிய சினிமாக்கள் முன்வைக்கும் உலகத்தின் கதைகள் மிக இயல்பானவை.

ஜாபர் பனாஹி இயக்கியிருக்கும் ‘டாக்ஸி’ திரைப்படம் அந்த வகையில் ஒன்று. சில அந்நியர்களையும் அறிந்தவர்களையும் தன்னுடைய டாக்ஸியில் ஏற்றி பயணம் செய்கிறார் இயக்குநர். அவர்களின் உரையாடல்களும் காட்சிகளும்தான் முழுத் திரைப்படமும். பெரும்பாலான காட்சிகள் காரின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் காமிராக்கள் மூலமாகவே காட்டப்படுகின்றன. இந்த உரையாடல்களின்  மூலமாக இரானிய தேசத்தின் அடக்குமுறை கலாச்சாரம், கருத்துரிமை மீதான தடை, மதஅடிப்படைவாதம், கலாச்சார காவலர்களின் அராஜகம், எந்நேரமும் கண்காணிப்பில் இருக்கும் சமூகம் போன்றவை நமக்கு புலப்படுகின்றன.

**

டாக்ஸியில் ஏறும் அவர்கள் இயல்பாக பேசத் துவங்குகிறார்கள். இளைஞன், கார் டயர்களை திருடுபவர்களைப் பற்றி திட்டத் துவங்குகிறான். “இவர்களையெல்லாம் தூக்குல போடணும் சார்.. திருட்டுப்பசங்க.. ஒண்ணு, ரெண்டு பேருக்கு மரண தண்டனை கொடுத்தாதான் மத்தவனுங்களுக்கு பயமிருக்கும்”

பின்னால் அமர்ந்திருக்கும் பெண்மணி இதை பலமாக ஆட்சேபிக்கிறார். “குற்றத்தின் காரணங்களை கண்டுபிடிக்காமல் ரெண்டு பேரை தூக்குல போட்டுட்டா  மட்டும் குற்றங்கள் குறைஞ்சுடுமா? இப்பவும் குற்றங்கள் அப்படியேதானே இருக்கு”.

இதை அவன் ஒப்புக் கொள்வதில்லை. “நீங்க என்ன வேலை செய்யறீங்க? டீச்சரா? அதான் இப்படிப் பேசறீங்க.. இப்படி செய்யாம அவங்க திருந்த மாட்டாங்க” இப்போது அந்தப் பெண்மணி கேட்கிறார். “நீங்க என்ன வேலை பாக்கறீங்க?”

டாக்ஸியிலிருந்து இறங்கிக் கொண்டே அவன் சொல்கிறான் “நானா? பிக்பாக்கெட் அடிக்கற தொழில் செய்யறேன். இருந்தா கூட கார் டயர் திருடற அளவிற்கு கேவலமானவன் இல்ல” என்ற படி சென்று விடுகிறான்.

**

விபத்தில் சிக்கிக் கொள்ளும் ஒருவனை இவரது டாக்ஸியில் ஏற்றுகிறார்கள். அவனது மனைவி ஒப்பாரி வைக்கிறாள். அடிபட்டவன் அவசரம் அவசரமாக ‘தன் உயிலை எழுத வேண்டும்’ என அடம்பிடிக்கிறான். இயக்குநரின் மொபைலில் உள்ள வீடியோ கேமிரா மூலம் அவன் சொல்வது படமாக்கப்படுகிறது. ‘எனக்குப் பிறகு என் வீடு மனைவிக்கு செல்ல வேண்டும்” பிறகு சுயநினைவை இழந்து விடுகிறான்.

மருத்துவமனைக்குள் அவனை கொண்டு செல்கிறார்கள். அவசரம் அவசரமாக திரும்பி வரும் அவனின் மனைவி வீடியோவை கேட்கிறாள். ‘அவனுக்கு ஏதாவது ஆகி விட்டால் இதுதான் எனது சாட்சியம்” என்கிறார். தான் பிறகு அனுப்புவதாக சொல்கிறார் இயக்குநர். என்றாலும் மறுபடியும் தொலைபேசியில் அவரை அழைத்து நினைவூட்டிக் கொண்டே இருக்கிறாள்.

**

திருட்டு டிவிடி விற்கும் ஒருவன் டாக்ஸியில் ஏறுகிறான். இயக்குநரை அடையாளங் கண்டு சிரிக்கிறான். “என்னைத் தெரியலையா சார். நான்தான் உங்க வீட்டிற்கு வந்து டிவிடில்லாம் தருவேன். உங்க மகன் கூட வாங்குவார்”. இயக்குநர் மையமாக புன்னகைக்கிறார். பிறகு அவனது வாடிக்கையாளர் வீட்டிற்கு செல்லச் சொல்கிறான். டிவிடி வாங்க வரும் வாடிக்கையாளன் இயக்குநரைப் பார்த்து ஆச்சரியமடைகிறான்.

தானும் படம் இயக்க விரும்புவதாக சொல்லி அதற்கு ஆலோசனைகள் கேட்கிறான். ‘நீயேதான் அதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்” என்கிறார் இயக்குநர். திருட்டு டிவிடி விற்கிறவன் இயக்குநரை தன்னுடைய கூட்டாளி என்பது போல் வாடிக்கையாளனுக்கு சொல்லியிருக்கிறான் என்பது தெரிகிறது. பிறகு அதை சிரித்தபடி விசாரிக்கிறார் இயக்குநர். “சார்.. நீங்க கூட இருந்ததாலதான் அவன் எல்லா டிவிடியும் வாங்கினான்”

**

இரண்டு வயதான பெண்கள் டாக்ஸியில் ஏறுகிறார்கள். பதட்டமாக இருக்கிறார்கள். என்னவென்று விசாரிக்கிறார் இயக்குநர். அவர்கள் குடுவையில் வைத்திருக்கும் மீனை கோவில் குளத்தில் மதியம் 12 மணிக்குள் போட்டு விட வேண்டும். மீனுக்கு ஏதாவது ஆகி விட்டால் அவர்களுக்கு ஏதாவது தீங்கு நடக்கும் என அச்சப்படுகிறார்கள். “சீக்கிரம் போப்பா’ என அவசரப்படுத்துகிறார்கள். வழியில் மீன் குடுவை உடைகிறது. அதை ஒரு பிளாஸ்டிக் கவரில் மாற்றித் தந்து அவர்களை வேறு காரில் ஏற்றி அனுப்புகிறார் இயக்குநர்.

**

உறவுக்கார சிறுமி இவருக்காக பள்ளியின் வாசலில் காத்திருக்கிறாள். ‘வர்றதுக்கு இவ்ள நேரமா? என்னை யாராவது கடத்திட்டு போயிருந்தா என்ன செய்யறது?” என விளையாட்டுக்கு பொரிந்து தள்ளுகிறாள். டாக்ஸியில் பயணிக்கும் போது அவளுடைய பள்ளியில் தந்திருக்கும் போட்டி ஒன்றைப் பற்றி சொல்கிறாள். ஒரு குறும்படம் எடுக்க வேண்டும். அந்தப் படத்தில் எவையெல்லாம் இருக்கக்கூடாது என்று ஆசிரியர் சொன்னதைப் பட்டியல் போடுகிறாள். மதத்திற்கு எதிரானதாக எதுவும் இருக்கக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகள். அவளுக்கு எதுவும் புரிவதில்லை.

அடுத்து, மனித உரிமை வழக்குகளை கையாளும் வழக்கறிஞர் பெண்மணி காரில் ஏறுகிறார். ஆண்கள் விளையாடும் ஒரு போட்டியைப் பார்க்கச் சென்ற காரணத்திற்காக பெண்ணொருத்தி சிறையில் இருப்பதைப் பற்றியும்  அங்கு அவள் உண்ணாவிரதம் இருப்பதைப் பற்றியும் உரையாடல் அமைகிறது.

டாக்ஸியில் எவரோ பர்ஸை விட்டுச் சென்றிருப்பதை சிறுமி சொல்கிறாள். மீன் குடுவை வைத்திருந்த முதிய பெண்மணிகளுடையது. அவர்களைத் தேடி கோயிலுக்குச் செல்கிறார் இயக்குநர். அந்த நேரத்தில் இவருடைய டாக்ஸியில் ஒருவன் காமிராக்களை திருடுவதோடு படம் நிறைகிறது.

**

இதில் நடித்திருப்பவர்கள் பெரும்பாலும் தொழில்முறை நடிகர்கள் அல்ல. பல சர்வதேச விருதுகளைப் பெற்ற திரைப்படம் இது.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: