Monday, May 04, 2020

Montage (2013) - குற்றமும் தண்டனையும்






இன்றைய தேதியில் இந்திய சினிமாக்கள் உருவாகும் கதை விவாத அறைகளில் ஏஸி இருக்கிறதோ, சிகரெட் இருக்கிறதோ என்பது கூட முக்கியமல்ல. தென்கொரிய திரைப்படங்களின் டிவிடி நிச்சயம் இருக்க வேண்டும். ஆம். அந்த அளவிற்கு அதன் திரைக்கதைகள் சுடுவதற்கு, மன்னிக்கவும், இன்ஸ்பையர் ஆவதற்கு தங்கச் சுரங்கமாக இருக்கின்றன. பல தமிழ் திரைப்படங்களுக்கும் இந்த டிவிடிக்கள்தான் குலதெய்வம்.

ஹாலிவுட்டே வியந்து பார்க்குமளவிற்கு  தென்கொரியர்கள் அவர்களின் திரைப்பட ஸ்கிரிப்ட்டிலும் மேக்கிங்கிலும் அசத்திக் கொண்டு வருகிறார்கள்.

அப்படியொரு அபாரமான திரைக்கதையைக் கொண்டதுதான் Montage. 2013-ல் வெளிவந்த திரைப்படம். இதன் கதைப் போக்கு நிச்சயம் யூகிக்க முடியாதது. முதன்முறை பார்க்கும் போது நீங்கள் அத்தனை ஆச்சரியப்படுவீர்கள். சற்று கவனம் கலைந்தாலும் கூட ஒருவேளை புரியாமல் போய் விடக்கூடிய புதிர்த்தன்மையையும் கொண்டது இது.

இதன் கதை என்னவென்று சுருக்கமாக பார்க்கலாம்.

ஒரு குற்றம் நிகழ்ந்து காவல்துறையால் தீர்க்கப்படாமலேயே 15 வருடங்களை நெருங்கப் போகிறது. என்ன குற்றம்,? ஒரு சிறுமி  பணத்திற்காக கடத்தப்பட்டு கொல்லப்பட்டாள். குற்றவாளியின் ஒரு தடயத்தைக் கூட காவல்துறையால் இன்னமும்  கண்டுபிடிக்க முடியவில்லை. அத்தனை ஆண்டுகள் கடந்தும் கொல்லப்பட்ட சிறுமியின் தாயால் அந்த துயரத்தை மறக்கவே முடியவில்லை. மேலும் குற்றவாளி இன்னமும் தண்டிக்கப்படாமல் இருப்பது வேறு அவரைத் துன்புறுத்துகிறது. குற்றம் நிகழும் போது அருகில் இருந்த காவல்துறை அதிகாரிக்கும் கூட இந்த கேஸ் ஒரு சவாலாகவே இருக்கிறது. அந்த தாயின் கண்ணீர்  அவரது மனச்சாட்சியைத் துரத்திக் கொண்டே இருக்கிறது.

குற்றம் நிகழ்ந்து 15 வருடங்களை கடக்கப் போவதற்கு சில நாட்கள் முன்பு இத்திரைப்படம் துவங்குகிறது. அந்த நாளைக் கடந்து விட்டால்  பிறகு அந்த வழக்கு காலாவதியாகி விடும். அதற்குள் ஏதாவது செய்தாக வேண்டும். இல்லையென்றால் அதன் மீதான விசாரணை ஒரேடியாக நிறுத்தப்பட்டு விடும்.

என்ன செய்யலாம், என்ன செய்யலாம் என்று அதே யோசனையில் இருக்கிறார் காவல் அதிகாரி. சிறுமி கொல்லப்பட்ட இடத்தில் எவரோ ஒருவர் பூச்செண்டு வைத்து விட்டுப் போயிருப்பதை கவனிக்கிறார். 15 வருடம் கழிந்தும் மனச்சாட்சி உறுத்தலோடு குற்றவாளிதான் அதைச் செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அங்கிருந்து தன் விசாரணைப் புள்ளியை மீண்டும் துவக்கி ஓவ்வொரு கண்ணியாக தொடர்கிறார்.

'இந்த ஒரே கேஸை மட்டுமே பார்த்தா எப்படிப்பா.? இன்னும எவ்ளோ கேஸ் பெண்டிங்ல இருக்கு?.. என்று எரிச்சல்படும் தனது உயரதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூட இவர் தயங்குவதில்லை. அந்த அளவிற்கு இந்த வழக்கு அவருக்கு சவாலாக இருக்கிறது.

இன்னொரு புறம் சிறுமியின் தாயாரும் குற்றவாளியைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான சில முயற்சியில் ஈடுபடுகிறார்.

***

சில நாட்களில் இன்னுமொரு சிறுமி கடத்தப்பட்ட தகவல் தெரியவருகிறது. சற்று தீர விசாரிக்கும் போது அது ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்பு கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தின் அதே முறையைக் கொண்டிருக்கிறது. எனவே அதே குற்றவாளிதான் இதையும் செய்திருக்க வேண்டும் என்கிற முடிவிற்கு வருகிறார் காவலதிகாரி. விசாரணை வேகம் பெறுகிறது. கடந்த முறையில் பணத்தை எடுத்து வரச்செய்த அதே வழிமுறைகளைதான் குற்றவாளி இப்போதும் சொல்கிறான். சில பல சிரமங்களுக்கும் துரத்தல்களுக்கும் பிறகு பணத்தை எடுத்தவனை பிடித்து விடுகிறார்கள்.

அங்கே வைக்கிறார்கள் ஒரு டிவிஸ்டை. பணத்தை எடுத்துக் கொண்டு ஓடியவர் வேறு எவருமல்ல, சிறுமியின் தாத்தாதான்.  சிறுமியைக் காணவில்லை என்று அவர்தான் புகார் வேறு தந்திருக்கிறார். பணத்திற்காக தனது பேத்தியை அவரே கடத்திச் சென்று பேரம் பேசியிருக்க வேண்டும் என்று முடிவிற்கு வருகிறார்கள். ஆனால் அவரை விசாரித்தால் வேறு ஒரு கதை சொல்கிறார். தன்னை எவரோ கடத்திச் சென்று விட்டதாகவும் தாம் சொல்கிற படி சென்று பணத்தை எடுத்து வந்தால் சிறுமி விடுவிக்கப்படுவாள் என்று சொன்னதாகவும் கடத்தியவனின் முகத்தை பார்க்க முடியவில்லை என்றும் அழுது கொண்டே சொல்கிறார்.

ஆனால் காவல்துறை இந்தக் கதையை நம்ப மறுக்கிறது. தடயங்கள் எல்லாமே  மிகச் சரியாகப் பொருந்தி வருகிறது.  இந்த வழக்கு எப்படியாவது முடிந்து போனால் தேவலை என்று நினைக்கிறது. ஆனால் நம்முடைய காவல் அதிகாரி 'தாத்தா குற்றவாளியல்ல' என்று உணர்கிறார். தர்க்கம் பொருந்தி வரவில்லை. தாத்தா சொல்வது ஒருவேளை உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. 'ஓ.. இந்த ஆளை நான் பிடிச்சதால எனக்குப் பெருமை வந்துடும் -னு இப்படி டிராக்கை மாத்தறியா?" என்று அவரின் நண்பன் வேறு பொறாமையும் ஆத்திரமும் கொள்கிறான்.

'முட்டாள்களே.. உங்களுக்குப் புரியவில்லையா,? இந்த ஆள் குற்றவாளி அல்ல'' என்று தம்முடைய ஆதாரங்களைக் கொட்டுகிறார் காவல்அதிகாரி. ஆனால் உயர்அதிகாரிகள் இதை ஒப்புக் கொள்வதில்லை. தாத்தா கைது செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

***

இந்த நிலையில் சமீபத்தில் கடத்தப்பட்ட சிறுமி  இருக்கும் இடம் காவலதிகாரிக்கு தெரிய வருகிறது. அதைப் பின்தொடர்ந்து பார்க்கிறார். மீண்டும் ஒரு டிவிஸ்ட். அந்தச் சிறுமியை கடத்தி வைத்திருப்பவர் யார் தெரியுமா?

15 வருடங்களுக்கு முன்பு ஒரு சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு அந்த வழக்கு தீர்க்கப்படாமல் இருக்கும் காரணத்திற்காக அழுது கொண்டே இருக்கிறார் அல்லவா?  அந்த தாய்தான் இந்தச் சிறுமியை கடத்தி வைத்திருக்கிறார். ஏன் அவர் அப்படிச் செய்ய வேண்டும்?

இதையும் சொல்லி விட்டால் படத்தின் சுவாரசியம் போய் விடும். எனவே படத்தை தேடி நீங்கள் பார்ப்பதுதான் அந்த திரைக்கதையாசிரியருக்கு செய்யும் குறைந்த பட்ச மரியாதை.

***

இந்த திரைப்படத்தின் கதை  இங்கு நேர்க்கோட்டில் சொல்லப்பட்டிருந்தாலும் திரைக்கதை எழுதப்பட்டிருப்பது அவ்வாறு அல்ல. கடந்த கால குற்றத்தின் சம்பவங்களும் நிகழ்கால குற்றத்தின் சம்பவங்களும் மாறி மாறி சொல்லப்பட்டிருக்கின்றன. பொருத்தமான தருணத்தில் அவை இணைகின்றன; விலகுகின்றன.

நீங்கள் இருக்கையை விட்டு நகரவே முடியாதவாறு இதன் சுவாரசியம் அமைந்திருக்கிறது. சிக்கலின்  ஒரு புள்ளி அவிழும் போது இன்னொரு சிக்கல் இன்னமும் இறுக்கமாக வந்து மூடுகிறது. சேஸிங் காட்சிகளும் அதன் காமிராக் கோணங்களும் அற்புதமாக பதிவாகியிருக்கின்றன. காவலதிகாரியாக நடித்திருப்பவர் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த வழக்கை கண்டுபிடித்தேயாக என்கிற தீவிரமும் வெறியும் அவர் கண்களில் மின்னிக் கொண்டேயிருக்கிறது. போலவே சிறுமியின் தாயராக நடித்தவரும் அற்புதமாக நடித்திருக்கிறார். பின்னணி இசையும் அசத்தலாக இருக்கிறது.

இதன் திரைக்கதை ஓரு நூதனமான ஆனால் நியாயமான பழிவாங்கலை சித்தரிக்கிறது என்கிற ஒரு வாக்கியத்தைச் சொன்னால் ஒருவேளை இதன் கிளைமாக்ஸ் உங்களுக்கு படத்தைப் பார்க்காமலேயே பிடிபடலாம்.

Jeong Keun-seob இதன் இயக்குநர். திரைக்கதையை எழுதியவரும் இவரே.


***

தென்கொரிய திரைக்கதைகள்தான் இந்தியச் சினிமாக்களின் தங்கச் சுரங்கம் என்று சொல்லியிருந்தேன் அல்லவா?

அமிதாப்பச்சன், வித்யா பாலன் நவ்சுதீன் சித்திக் ஆகியோர் நடிக்கும் Te3n என்கிற இந்தி திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இயக்கம்: ரிபு தாஸ்குப்தா.


 இந்த பரபரப்பான டிரைய்லரைப் பார்த்தால் 2013-ல் வெளியான Montage திரைப்படத்தின் காட்சிகளையே அச்சு அசலாக பிரதிபலிக்கின்றன. இந்த நகல் குறித்த யூகங்களை பத்திரிகைகள் இப்போதே எழுத ஆரம்பித்து விட்டன. சிறுமியின் தாயார் பாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக வித்யா பாலன்.  இரண்டு குற்றங்களின் இடைவெளி ஒரிஜினலில் 15 வருடமாக இருந்தது, இதில் எட்டு வருடமாக மாறியிருக்கிறது. அதிகாரபூர்வமான ரீமேக்கா என்கிற தகவல் இல்லை.

எப்படியோ கத்தரிக்காய் சந்தைக்கு வநதால் இந்தக் குற்றத்தின் உண்மையும் வெளிவந்து விடும். 15 வருடங்கள் எல்லாம் காத்திருக்கத் தேவையில்லை. 

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

No comments: