Saturday, May 02, 2020

Room (2015) - வீடென்னும் சிறை

 

 

ஒரு சிறிய அறை. அதில் உள்ள தொலைக்காட்சியும்  கூரையின் மேலே சதுரவடிவ கண்ணாடி வழியே  தெரியும் துண்டு வானமும் மட்டுமே வெளிக் காட்சி. அங்கிருந்து உரக்க கத்தினால் கூட வெளியில் எவருக்கும் கேட்க முடியாத அளவிற்கான இடம் அது.

ஓர் இளம்பெண் ஏழு வருடங்களாக அந்த அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். கூடவே அவளுடைய ஐந்து வயது மகனும். அந்தச் சிறுவன் பிறந்ததில் இருந்தே வெளியுலகத்தைப் பார்த்ததில்லை. அது சார்ந்த இழப்பை, மனபாதிப்பை அவன் அடையக்கூடாது என்பதற்காக அந்த அறைதான் 'உண்மையான உலகம்' என்று அவனை நம்ப வைக்கிறாள் அவனுடைய தாய்.

ஒரு நிலையில் இருவரும் அங்கிருந்து தப்பி வெளியுலகைப் பார்க்கும் சூழல் ஏற்படுகிறது. இருவருக்கும் என்னவாகும்? பிறந்ததில் இருந்து  கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் பறவை, ஒரு காலக்ககட்டத்திற்குப் பிறகு வெளியே பறக்க விடப்பட்டாலும் குழம்பி திரும்பவும் கூண்டுக்குள்ளேயே வந்து அமரும் துயரத்தைப் போல இருவரின் உளவியல் சிக்கல்கள் காட்சிகளாக பின்னர்  விரிகின்றன.

ஐரிஷ் நாவலாசிரியையான Emma Donoghue எழுதிய நாவலான  'Room' அதே பெயரால் திரைப்படமாகி 2015-ல் வெளியானது. தாய் பாத்திரமான 'Joy' ஆக நடித்த பிரி லார்சன் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார்.

***

ஜாயின் கணவன் என்று நம்பப்படும் ஓல்ட் நிக் எனும் நபரால் அவளும் அவளுடைய மகனும் அந்த அறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவன் இரவில் மட்டும் வருவான். ஜாயோடு உறங்குவான். விடிந்ததும் கிளம்பி விடுவான்.  தூங்கும் பகுதியிலிருந்து அவனை ஒளிந்திருந்து பார்ப்பான் சிறுவன் ஜாக். ஓல்ட் நிக்  சிறுவனைப் பார்ப்பதையோ தொடுவதையோ ஜாய் விரும்புவதில்லை.


ஒரு பக்கம் சிறுவன் கேட்கும் குழப்பமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நெருக்கடி. மறுபுறம் அங்கிருந்து வெளியேற முடியாத சிக்கலும் அந்த துயரத்தை எவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத தனிமையின் அவஸ்தையில் தவிக்கிறாள் ஜாய். கணவனின் வன்முறை பெருகிக் கொண்டே போக ஒருநிலையில் அங்கிருந்து சிறுவனை மட்டுமாவது தப்ப வைக்க முடிவு செய்கிறாள். அதற்கான மனதளவில் அவனை தயார்ப்படுத்துகிறாள். அது வரையிலான அறை வாழ்க்கைதான் உலகம் என்பது உண்மையல்ல என்பதையும் அந்த அறைக்குப் பின்னால் பரந்த உலகமும் அதில் நிஜமான மனிதர்களும் பொருட்களும் இருக்கிறார்கள் என்பதை அவனுக்கு உணர வைக்கிறாள்.

பிறகு அவன் வெளியேறுவதற்கான உபாயத்தை கற்பிக்க ஆரம்பிக்கிறாள். அவனுக்கு கடுமையான சுரம் என்று சொன்னால் அவனது தந்தை மருத்துவத்திற்காக வெளியே அழைத்துச் செல்வார்; அப்போது வண்டியிலிருந்து குதித்து விட வேண்டும் என்று ஏற்பாடு. அன்றிரவு வரும் கணவன், 'நாளை மருந்து வாங்கி வருகிறேன்' என்று போய் விடுகிறான். அன்றைய நாடகம் தோல்வியடைகிறது. வேறு வழியில்லாமல்  சிறுவனை பிணமாக நடிக்கச் சொல்கிறாள். அவனை ஒரு போர்வையில் சுற்றி வைக்கிறாள். மறுநாள் வரும் கணவன் சற்று அதிர்ச்சியாகி பிணத்தை அப்புறப்படுத்த டிரக்கில் போட்டு எடுத்துச் செல்ல  தாய் சொல்லித் தந்தபடியே வண்டியிலிருந்து குதித்து உதவிக்காக கத்துகிறான் ஜாக்.

காவல்துறையினரின் உதவியுடன் அவனும் அவனது தாயும் மீட்கப்படுகிறார்கள். முதன்முறையாக வெளியுலகையும் அந்நிய நபர்களையும் காணும் ஜாக்கிற்கு அந்த சூழல் மிரட்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் மெல்ல மெல்ல  அதற்குப் பழக்கப்படுகிறான்.

ஏழு வருடங்கள் அடைத்து வைக்கப்பட்ட ஜாய் மகிழ்ச்சியடைவதற்கு பதிலாக உளவியல் ரீதியிலான சிக்கலை அடைகிறாள். பெற்றோர்களிடம் எரிந்து விழுகிறாள். தற்கொலைக்கு முயல்கிறாள். மருத்துவமனையிலிருந்து வெளியே வரும் போது வெளியுலகத்திடம் பழக ஆரம்பித்து விட்ட மகனைக் கண்டு மகிழ்ச்சியடைகிறாள்.  பிறகு அவளும் சிறுவன் ஜாக்கும் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையை சென்று பார்க்கும் காட்சியோடு படம் நிறைவடைகிறது.

படத்தின் முதல்பாதி முழுவதையும்  ஒரே அறையில் உருவாக்க வேண்டிய சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறார் இயக்குநர் Lenny Abrahamson. ஜாயின் மனஉறுதியையும் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதான உணர்வு சிறுவனுக்கு தோன்றி விடக்கூாது என்று அவள் தரும் ஜாக்கிரதையான பயிற்சிகள் நுட்பமாக பதிவாகியிருக்கின்றன. சிறுவன் தப்பும் காட்சிகள் பதட்டத்தை ஏற்படுத்துகின்றன.

ஆஸ்கர் விருதில் குழந்தை நடிகர்களுக்கான பிரிவு இருந்திருந்தால், சிறுவனாக நடித்த Jacob Tremblay நிச்சயம் விருது வென்றிருப்பான். அத்தனை அபாரமான நடிப்பு.


***


ஒரு மேலோட்டமான பார்வையில் ஒரு குற்ற சம்பவத்தைப் பற்றிய படமாக இத்திரைப்படம் தெரிந்தாலும் வீடுகளில் அடைபட்டிருக்கும் இல்லத்தரசிகளின் அகரீதியான சிக்கலையும் துயரத்தையும் பற்றி பேசுகிறது. ஆணாதிக்க மனோபாவத்தால் வீடுகளில் நிகழும் குடும்ப வன்முறையையும் அதை மெளனமாக எதிர்கொள்ள வேண்டிய பெண்களின் மனஅழுத்தங்களைப் பற்றி உரையாடுகிறது.

சம்பாதித்து தருவதோடு தன் பணி முடிந்தது என்று நினைக்கும் கணவன்மார்கள், "வீட்ல சும்மாதானே இருக்கே" என்கிற மனோபாவத்திலேயே மனைவிகளை அணுகுவார்கள். வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்கும் மனைவியின் ஆதாரமான  செயற்பாடுகளை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாமல் அது அவர்களின் பிரத்யேகமான கடமை என்று ஒதுங்கி விடுவார்கள்.

அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஜாயைப் போலவே பெரும்பாலான இல்லத்தரசிகள் காலம் காலமாக அறைகளின் நான்கு சுவர்களின் இடையே கட்டி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எங்கு சென்றாலும் நிழல் போலவே  வீட்டைப் பற்றிய நினைவுகளும் கவலைகளும் அவர்கள் கூடவே வருகின்றன.

படத்தின் பிற்பகுதியிலான ஒரு காட்சியில்,  படிக்கும் காலத்தில் தான் பங்கு பெற்றிருந்த விளையாட்டுக் குழுவையும் அதிலிருந்த தோழிகளையும்  புகைப்படத்தின் மூலம்  சிறுவனுக்கு காட்டுகிறாள் ஜாய். 'அப்போது நாங்கள் வெற்றிகரமான விளையாட்டு வீராங்கனைகளாக இருந்தோம். பிறகு அவர்களுக்கு என்ன ஆயிற்று தெரியுமா? எதுவும் ஆகவில்லை. அவர்களும்  என்னைப் போலவே எந்த அடையாளமுமில்லாமல் இருக்கிறார்கள்" என்கிறாள்.

இல்லத்தரசிகளின் முந்தைய திறமைகளும் பிரத்யேகமான தனித்தன்மைகளும் திருமண வாழ்க்கைக்குப் பிறகு முற்றிலுமாக அழிந்து போய் விடும் துயரமான சூழலை இந்த ஒரு காட்சியே அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

***

ந.ஜெயபாஸ்கரனின் கவிதை ஒன்றிருக்கிறது. சமையலறையில் உள்ள எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கு பரிச்சயம் உள்ள தன் மனைவியைப் பற்றி விவரிக்கும் அந்தக் கவிதை,  இவ்வாறு முடிகிறது.


அவளிடம் சொல்லிக் கொள்வதில்லை நான்
நீ மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக
அங்கேயிருக்கிறாய் என்று!


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)
 


suresh kannan

No comments: