Showing posts with label பிளாக் காமெடி. Show all posts
Showing posts with label பிளாக் காமெடி. Show all posts

Saturday, February 10, 2018

தமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்


உலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் மெல்ல அறிமுகமாகத் துவங்கியிருக்கின்றன. அவல /  அபத்த / இருண்மை நகைச்சுவை என்று இவை தமிழில் குறிப்பிடப்படுகின்றன.

கருப்பு பணம் தெரியும். அதென்ன கருப்பு காமெடி?

நவரசங்களில் ஒன்றான நகைச்சுவை பற்றி  நாம் அறிவோம். கிண்டல், நையாண்டி, பகடி என்று பல்வேறு பாணி வசனங்களினால் செய்யப்படுவது ஒருவகை. தமிழ் சினிமாவில் என்.எஸ்.கிருஷ்ணன், கவுண்டமணி, விவேக், வடிவேலு போன்றவர்கள் இந்த முறையில் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். கோணங்கித்தனமான அசைவுகளின் மூலம் சிரிக்க வைப்பது இன்னொரு வகை. சந்திரபாபு, நாகேஷ் போன்றவர்கள், வசனங்களால் மட்டுமன்றி உடலசைவுகளினாலும் நகைச்சுவையை உருவாக்கும் திறமையைப் பெற்றிருந்தார்கள்.

இவையெல்லாம் வழக்கமான நகைச்சுவை பாணிகள். இதனுள் உள்ள உபபிரிவுதான் ‘பிளாக் காமெடி எனும் அவல நகைச்சுவை’. பொதுவான நகைச்சுவை பாணியில், வார்த்தைகளில் விளையாடுவது, ஒருவரை எள்ளல் செய்வது, இகழ்வது, அடித்து உதைப்பது போன்றவையெல்லாம் ஓர் எல்லை வரை இருக்கும். ஆனால் பிளாக் காமெடி என்பது பொதுவான நகைச்சுவையோடு சேர்ந்து அதையும் தாண்டிய வதையும் துயரமும் கலந்து  பிரத்யேகமான பாணியில் அமைந்திருக்கும்.

ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்தம் வழிய துடித்துக் கொண்டிருப்பார். ஆனால் பார்வையாளர்களாகிய நாம் திரையில் அதைக் கண்டு சிரித்துக் கொண்டிருப்போம். குறிப்பிட்ட காட்சியின் போக்கு அவ்வாறாக அமைக்கப்பட்டிருக்கும் என்பதே அதற்கு காரணம்.

மனித மனதின் ரகசியமான, இருட்டான பகுதிகளில் இருந்து ரசிக்கப்படும் மெல்லிய குரூரத்தை இவை கொண்டிருப்பதால் ‘டார்க் காமெடி’ என அழைக்கப்படுகிறதோ, என்னவோ. Coen brothers, Quentin Tarantino, Guy Ritchie போன்ற அயல்நாட்டு இயக்குநர்கள் இவ்வகை திரைப்படங்களை உருவாக்குவதில் புகழ் பெற்றவர்கள். சார்லி சாப்ளின் போன்றவர்கள் இவற்றின் முன்னோடி எனலாம்.

நிழல்உலகம், வன்முறை, குற்றம், திருட்டு, துரோகம் ஆகிய எதிர்மறை விஷயங்களோடு இந்தத் திரைப்படங்கள் பெரிதும் சம்பந்தப்பட்டிருக்கும். எதிர் அரசியல் விமர்சனங்களின் மூலம் மரபையும் புனிதங்களை கலைத்துப் போடும். நேர்மறை உணர்வுகளாக கருதப்படும் அறம், நேர்மை, வீரம் ஆகியவற்றின் எதிர் தரப்பில் நின்று எள்ளி நகையாடும்.

ஓர் உதாரணத்திற்காக, சமீபத்தில் வெளிவந்த ‘தரமணி’ திரைப்படத்தின் காட்சி ஒன்றை பார்க்கலாம். தன் காதலி வெளிநாடு செல்வதற்காக ஒரு ரயில் பயணியிடமிருந்து பணத்தை திருடிவிடுவான் ஹீரோ. அப்படி திருடியதற்காகவும், அந்தப் பயணி மாரடைப்பால் இறந்து விட்டதை பிறகு அறிந்தும் குற்றவுணர்வு அடைவான். வாழ்க்கை பல அனுபவங்களை அவனுக்கு பாடமாக கற்றுத் தந்த பிறகு மனம் திருந்தி அந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் சென்று சேர்ப்பான்.

குறைந்தபட்சம் திருட்டுப் போன பணமாவது அந்தக் குடும்பத்திற்கு திரும்ப வந்து விட்டதே என்று பார்வையாளர்கள் ஆறுதல் அடைந்து கொண்டிருக்கும் போது ‘வாய்ஸ் ஓவரில்’ வரும் இயக்குநர் ராம் ஒரு வெடிகுண்டை தூக்கிப் போடுவார். பழைய 500, 1000 ரூ நோட்டுக்கள் செல்லாது என்பது அன்றைய நாளில்தான் அறிவிக்கப்பட்டிருக்கும்.

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பணத்தை வைத்துக் கொண்டு தாங்கள் நடைமுறையில் அனுபவித்த அவஸ்தைகள் மற்றும் திரையில் காட்டப்பட்ட துயரம் ஆகியவற்றையும் மீறி பார்வையாளர்கள் அந்த ‘வாய்ஸ் ஓவருக்கு’ தியேட்டரில் தன்னிச்சையாக சிரித்தார்கள்.  எங்கிருந்து இந்த சிரிப்பு உருவாகிறது என்பதை யோசித்தால் ‘கருப்பு நகைச்சுவை’யின் அடையாளம் புலப்பட்டு விடும். வாழ்க்கையின் அபத்த தருணங்களின் மீதாக எழும் புன்சிரிப்பே ‘பிளாக் காமெடி’ என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

**

உலக சினிமாக்களின் பாதிப்பினால், இந்த வகை பாணியிலான பிரத்யேக திரைப்படங்கள் தமிழில் சமீபத்தில்தான் மெல்ல உருவாகத் துவங்கியிருக்கின்றன. ஆனால் இதன் துண்டு துண்டான அடையாளங்கள் பழைய திரைப்படங்களில் ஏற்கெனவே உள்ளன. எம்.ஆர்.ராதாவின் நகைச்சுவை சிறந்த உதாரணம். “டேய்… பூசாரி….அம்பாள் எந்தக் காலத்திலே பேசினாள்?” என்கிற கருணாநிதியின் வசனம். ‘தில்லானா மோகனாம்பாள்’ வைத்தியின் பாத்திரம் (நாகேஷ்) போன்றவற்றில் இருண்மை நகைச்சுவையின் அடையாளங்களை காண முடியும்.

இதுவரையான தமிழ் சினிமாக்களின் வரிசையில் கருப்பு நகைச்சுவையின் கூறுகள் ஆங்காங்கே தென்பட்டாலும் ஒட்டுமொத்த நோக்கில் முதன்மையான முயற்சி என்று 2005-ல் வெளிவந்த ‘மும்பை எக்ஸ்பிரஸ்’  திரைப்படத்தை சொல்லலாம். திடகாத்திரமும் புத்திசாலித்தனமும் இணைந்தவர்களே அதுவரை பெரும்பாலும் கதாநாயகர்களாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டு வந்த விதத்திலிருந்து விலகி, காதுகேட்கும் திறனில் குறைபாடுள்ளவன்தான் இதில் ஹீரோ.. ஒரு காவல்துறை அதிகாரியின் இரண்டாவது மனைவிதான் ஹீரோயின். நான்கு முட்டாள்கள் இணைந்து ஆள் கடத்தலில் ஈடுபடுவார்கள். இவர்கள் செய்யும் கோணங்கித்தனங்களின் மூலம் ஒட்டுமொத்த படமும் நகரும். அபத்த நகைச்சுவையின் பாணி படம் முழுவதும் இருக்கும். துரதிர்ஷ்டவசமாக இந்த முயற்சி அதிகம் கவனிக்கப்படவில்லை. இது போன்ற பிளாக் காமெடிக்கு தமிழ் சினிமா பார்வையாளர்கள் அதிகம் பழகாததால் இதைப் புரிந்து கொள்ள முடியாமல் நிராகரித்தார்கள்.

புஷ்கர் – காயத்ரியின் ‘ஓரம்போ’ மற்றும் ‘வ’ ஆகிய திரைப்படங்கள், பிளாக் காமெடி வகையில் பிறகு வந்த  தொடர் முயற்சிகளாக அமைந்தன. ஒரு க்வார்ட்டருக்காக இரவு முழுவதும் அலையும் ஒருவனின் அனுபவங்கள்தான் ‘வ’. மேற்சொன்ன காரணத்தைப் போலவே ‘உலக சினிமா’ பரிச்சயமுள்ளவர்கள், இவற்றை கொண்டாடினார்களே தவிர, சராசரி பார்வையாளர்கள் திகைத்து விலகி நின்றார்கள்.

அடுத்த முயற்சி ‘ஆரண்ய காண்டம்’. சினிமா ஆர்வலர்கள் இன்னமும் கூட இந்த திரைப்படத்தை கொண்டாடுகிறார்கள். கருப்பு நகைச்சுவை என்பது திறமையாகவும் வசீகரமாகவும் உபயோகப்படுத்தப்பட்ட தமிழ் திரைப்படம் என்று இதைச் சொல்லலாம். ஒரு காட்சியில் பிரதான வில்லன் ஒரு வசனம் பேசுவார். “நீ மட்டும் உயிரோட இருந்த.. கொலை பண்ணியிருப்பேன்”. அவர் பேசுவது ஒரு பிணத்தை நோக்கி. இதிலுள்ள முரண் சுவைக்காக சிரித்தீர்கள் என்றால் கருப்பு நகைச்சுவையை உணர்கிறீர்கள் என்று பொருள். இதே வில்லன் இன்னொரு காட்சியில் ‘பிரபு – குஷ்பு’ என்பார். இது எந்த சூழ்நிலையில், எப்படி சொல்லப்படுகிறது என்கிற பின்னணியை அறிந்தால் வெடித்து சிரிப்பீர்கள்.

இதன் தொடர்ச்சியாக உருவாகி வந்தவர் ‘நலன் குமாரசாமி’. இவர் இயக்கத்தில் வெளியான ‘சூது கவ்வும்’ என்பது அருமையான ‘பிளாக் ஹியூமர்’ திரைப்படம். ‘மும்பை எக்ஸ்பிரஸை’ போலவே, கோணங்கித்தனமான நான்கு பேர் இணைந்து ஆள் கடத்தல் செய்வதே இந்த திரைப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் நிறைந்திருக்கும். ‘அதிகாரத்தின் மீது கைவைக்காதே’ போன்ற ஐந்து விதிகளோடு தங்களின் தொழிலைத் தொடரும் நாயகன், பேராசையால் மீறும் போது சிக்கலில் மாட்டிக் கொள்வார். ‘நலன்’ இயக்கிய அடுத்த முயற்சியான ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படமும் கருப்பு நகைச்சுவையின் தன்மை அடங்கியதுதான். உள்ளுக்குள் கோழைத்தனத்தை வைத்துக் கொண்டிருக்கிற ஒரு ரவுடியின் கதை.

நவீன் இயக்கிய ‘மூடர் கூடம்”, திரஜ் வைடியின் ‘ஜில் ஜங் சக்’ கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா’ போன்ற சில தொடர்ச்சியான முயற்சிகளை இந்த வகையில் குறிப்பிடலாம். ஆனால் சில முயற்சிகளைத் தவிர, இவற்றில் பெரும்பான்மையானவை அயல் சினிமாக்களின் தழுவலாக, நகலாக இருக்கின்றன. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அந்நியமாக இருக்கின்றன.

அனைத்துப் பிரதேச மனிதர்களின் வாழ்க்கையிலும் கருப்பு நகைச்சுவைக்கான சந்தர்ப்பங்கள் உண்டு. எனவே உள்ளூர் கலாசார பின்னணியில் இந்த பிளாக் ஹியூமர் திரைப்படங்கள் அமைந்தால் இவற்றின் சுவை இன்னமும் அதிகமாக இருக்கும். தமிழிற்கான பிரத்யேக ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள் வருங்காலத்தில் உருவாகும் என நம்புவோம்.

{குமுதம் - சினிமா சிறப்பிதழில் வெளியானது. (நன்றி குமுதம்) }


suresh kannan

Sunday, September 15, 2013

மூடர் கூடம்


தமிழ் சினிமா எண்பது ஆண்டுகளைக் கடந்திருந்தாலும்  black comedy எனும் அபத்த நகைச்சுவை வகைமைக்கு அதில் இடமேயில்லாமலிருந்தது. தற்செயலாக சில உதிரிகள் அமைந்திருக்கலாம். தில்லானா மோகனாம்பாள் வைத்தியை இந்த வகையில் சேர்ககலாமா?.. மேற்கில்...Quentin Tarantino, Coen brothers, Guy Ritchie போன்ற இயக்குநர்கள் இதில் விற்பன்னர்கள்.

இந்த வகைமையிலான பிரக்ஞையுடன்  தமிழில் வந்த முதல் திரைப்படம் என தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்ய காண்டத்தை சொல்லலாம். அதைத் தொடர்ந்து  'சூது கவுவும்' போன்ற முயற்சிகள். இப்போது 'மூடர் கூடம்'.

என்றாலும் ஆரண்ய காண்டம், மற்றவை தொட்டு விட முடியாத, ஒப்பிட முடியாத அதே உயரத்திலேயே இருக்கிறது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

***

முதலில் இயக்குநர் நவீனைப் பாராட்டி விடலாம். முதல் படமாக இருப்பதால் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள பாதுகாப்பாக வழக்கமான தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட்டின் பின் ஓடாமல் வித்தியாசப்பட்டு நிற்க வேண்டும் என்கிற முடிவிற்காகவும் பிடிவாதத்திற்காகவும். நவீனுக்கு நவீன சினிமாவின் இலக்கணங்கள் குறித்த அறிவும் இலக்கணமு்ம் தெரிந்திருக்கிறது என்பதை அறியவே மகிழ்ச்சியாக இருக்கிறது. வீட்டில் வளரும் நாய் முதற்கொண்டு ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குமான பிரத்யேக வார்ப்பையும், பின்புலத்தையும் கதைச் சூழலுக்கு பொருத்தமாக உருவாக்கியுள்ளார். அப்படியே ஒவ்வொரு பாத்திரத்திற்கும், துவக்க கால மெளன சினிமா, அனிமேஷன் என்று வகைவகையான பிளாஷ்பேக்குகள். (அதற்காக கிளைமாக்ஸ் முன்பு வரை கூட பிளாஷ்பேக் நீட்டித்திருப்பது சற்று ஓவர்தான்).
 
அதே போல் திரைக்கதையையும் பாத்திரங்களையும் பாடல்களையும் கூட தன்னுடைய பிடிவாதத்தின்படியே உபயோகித்திருக்கிறார் என யூகிக்கிறேன். படத்தில் பல இழைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன. சுமார் பன்னிரெண்டு வயதுச் சிறுமிக்கு, 25 வயது இளைஞன் மேல் வரும் அந்த இனக்கவர்ச்சி, இதுவரை தமிழ் சினிமா பார்த்திராதது. வயதுக்கு வந்த பெண்ணை, தந்தை உட்பட எவரும் அடிக்கக்கூடாது என்பதற்கு சொல்வதற்கான பழமையான காரணமும் அதில் அடங்கியிருக்கிறது. அதற்காக தமிழ் சினிமாவிலிருந்து உதாரணம் ஒன்றை முன்னோட்டமாக அவர் தந்திருப்பதும் சிறப்பு. அதே போல் செண்ட்ராயன் எனும் திறமையான இளைஞனை சிறப்பாக பயன்படுத்தியிருப்பதும்.
 
சாதாரணமாகச் சென்று கொண்டிருக்கும் வசனங்களில் சில 'அட' என்று நிமிர்ந்து பார்க்குமளவிற்கு புத்திசாலித்தனமாக எழுதப்பட்டிருக்கின்றன. (காதல் தோல்வி -ன்றதுலாம் ஆடம்பரமான விஷயம். சோத்துக்கே லாட்டரி அடிக்கற நமக்கு அதெல்லாம் தேவையா). அது போல் கஞ்சா வாங்க வருகிறவர் பனியனில் உள்ள காந்தி படம், சுடப்படுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறவர் பந்து விளையாடும் படம்... என்று பல காட்சிகள், எதிர்பாராத இடங்களில் வித்தியாசமான பாடல் காட்சிகள் என ரகளையாகவே உள்ளன.


***
ஆனால் படம் எங்கே தவறி விட்டது என்றால் படத்திற்குள் இயங்கியிருக்க வேண்டிய நம்பகத்தன்மையிலும் தீவிரத்தன்மையிலும். ஒரு சிறந்த நகைச்சுவைப் படத்தை எடுப்பதே கடினமான காரியம் எனும் போது, எதிர் அறத்தினைப் பாட வேண்டிய பிளாக் காமெடி திரைப்படத்தை உருவாக்குவது இன்னமும் சிரமமான காரியம். நகைச்சுவையான சம்பவங்கள், காட்சிகள், வசனங்கள் என்றாலும் மைய இழையாக ஒரு தீவிரத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்.
 
க்ளிஷே எனும் விஷயத்தை பகடி செய்ய வேண்டிய இந்த வகைத்திரைப்படமே பல க்ளிஷேக்களில் மாட்டிக் கொண்டியிருப்பது சோர்வை ஏற்படுத்துகிறது. ஒரு வீட்டை நான்கைந்து முட்டாள்கள் இணைந்து கொள்ளையடிக்க முடிவு செய்வதிலிருந்து பொம்மைக்குள் வைரத்தை ஒளித்து வைப்பது வரை பல க்ளிஷேக்கள். மேலும் பல நம்பகத்தன்மையற்ற காட்சிகளாலும் சுவாரசியமற்ற திரைக்கதையினாலும் சமயங்களில் முதிர்ச்சியற்ற ஒரு டெலி பிலிமைப் பார்ப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது.
 
ஒரு காட்சியில் துப்பாக்கியைக் காட்டினால் பின்பு எங்காவது அது வெடித்தேயாக வேண்டும் என்கிற அடிப்படையெல்லாம் சிறப்பாகவே பயன்படுத்தியிருக்கிற இயக்குநர் நவீன் சிறப்பாகவும் நடித்திருக்கிறார். ஆனால் இன்னமும் கடுமையாக உழைத்திருந்தால் 'மூடர் கூடத்தை' சிறப்பாக உருவாக்கியிருந்திருக்கலாம். என்றாலும் அத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிற அவருக்குப் பாராட்டுக்கள்.
 
வழக்கமான மசாலா சினிமாக்களை எதிர்பார்த்துச் செல்பவர்களுக்கு இந்தப் படம் நிச்சயமாய் பிடிக்காது. மாறாக அதிலிருந்து சலித்துப் போய் மாற்று முயற்சிகளை விரும்பகிறவர்களுக்கும் ஆதரிக்க விரும்புகிறவர்களுக்கும் இது நிச்சயம் ஒரு ஆறுதலான முயற்சியாகத் தோன்றும் என்பதில் சந்தேகமில்லை.

suresh kannan