Wednesday, April 27, 2011

சாய்பாபா: மரித்துப் போன கடவுள்?சமீபத்தில் இறந்து போன சாய்பாபாவின் மரணத்தை முன்னிட்டு கோர்வையற்று சில எண்ணங்களை எழுத உத்தேசம்.

'96 வயது வரை வாழ்வேன்' என்று தீர்க்க தரிசனத்துடன் சொல்லியிருந்த சாய்பாபா அதை பொய்யாக்கி விட்டு 'தானும் ரத்தமும் சதையும் நோயும் கொண்ட மனிதனே' என்ற பெளதீக உண்மையை வேறுவழியில்லாமல் தனது மரணத்தின் மூலம் அவரது பக்தர்களுக்கு தெரிவித்து விட்டு போய்ச் சேர்ந்து விட்டார். ஆனால் உலகமெங்கிலும் உள்ள அவரது பக்தர்கள் இந்த 'திடீர் மறைவை' ஏற்க முடியாமல் கண்ணீர் சிந்துகிறார்கள். பலருக்கு அற்புதங்களை வழங்கின பாபாவால் 'சுயசேவையாக' தனக்கே அந்த அற்புதத்தை வழங்கிக் கொள்ள இயலாதது ஒரு துரதிர்ஷ்டம்தான்.

தான் விஷேமானவன் என்பதை நிலைநிறுத்திக் கொள்ள பாபா செய்து வந்த 'மேஜிக்' தந்திரங்களின் மீது அறிவியலாளர்கள், பகுத்தறிவுவாதிகள் எழுப்பிய பல சந்தேகங்களுக்குப் பிறகு கூட எப்படி பல்லாயிரக்கணக்கானோரால் இவரை நம்ப முடிந்தது என்று யோசித்துப் பார்க்கிறேன். இதே பணியை இன்னும் பிரம்மாண்டமாக செய்யும் பி.சி.சர்க்கார் போன்றவர்கள் நகரம் நகரமாகச் சென்று விளம்பரப்படுத்தியும் பல நாட்கள் உழைத்தும் கூட சில ஆயிரங்களைத்தான் சம்பாதிக்க முடிகிறது எனும் போது அந்த உழைப்பு கூட இல்லாமல் எளிய தந்திரங்களின் மூலம் இருந்த இடத்திலேயே ஒருவரால் பல லட்சம் கோடிகளைச் சம்பாதிக்க முடிகிறது என்பதை யோசிக்க வியப்பாகத்தான் இருக்கிறது. ஒரே காரியத்தைச் செய்பவர்களில், ஒருவரை 'மேஜிக்மேனாகவும்' இன்னொருவரை உலகம் போற்றும் 'ஆன்மீக குருவாகவும்' இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்ளும் முரணை எவ்வாறு அணுகுவது என்று புரியவில்லை.

எவ்வாறு ஒரு தனிநபரை பல்லாயிரக்கணக்கான மக்கள் குருட்டுத்தனமாக தீவிரமாக நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. இம்மாதிரியான கூட்டம் காந்திக்குப் பின்னாலும் நிற்கிறது், ஹிட்லருக்கு பின்னாலும் நிற்கிறது. தங்களின் லெளகீக வாழ்வில் பல வாழ்வியல் பிரச்சினைகளையும் விடைகாணா இருத்தலியல் கேள்விகளையும் எதிர்கொண்டு தொடர்ந்து அபத்திரமான சூழலிலேயே வாழும் பொதுஜனம், ஆதார நம்பிக்கையாக எதையாவது பற்றிக் கொண்டுதான் முன்னகர வேண்டியிருக்கிறது. ஒரு நல்ல மேய்ப்பன் கிடைக்க மாட்டானா என்கிற  ஆவலில் அலைந்து கொண்டிருக்கும் இந்த மந்தை, லேசான தலைமைப் பண்புகளுடன் கூடிய ஒருவரைக் கண்டு விட்டாலே அது பாவனையா, உண்மையா என்றெல்லாம் ஆராயாமல் அதற்காகவே காத்திருந்தது போல் அவர் பின் செல்ல ஆரம்பித்து விடுகிறது.

என்னுடைய சுய வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு இதை  யோசித்துப் பார்க்க முயல்கிறேன்.

பொதுவாக எல்லோரையும் போலவே 'உம்மாச்சி கண்ணைக் குத்திடும்' என்று சொல்லியே வளர்க்கப்பட்டவன் நான். சிறுவயதுகளில் கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்படும் போது அங்கு கடவுளை வழிபட வந்தவர்கள், மாமிசமலை போன்ற பூசாரிகளின், குருக்களின் கால்களிலும் 'சாமி சாமி' என்று விழுந்து வணங்கியது தன்னிச்சையாக எரிச்சலை ஏற்படுத்தியது. பத்து ரூ-வை தட்டில் போடும் கனவான்களுக்கு கண்ணில் கனிவுடன் விபூதியையும் பூவையும் பிரசாதத்தையும் வழங்கும் அந்த மாமிச மலைகள், எளியவர்களுக்கு மிக அலட்சியத்துடன் விபூதியை தூக்கியெறியும் அலட்சியத்தைப் பார்க்க கொதிப்பும் இந்த ஆன்மீக (?!) இடைத்தரகர்களின் மீது அவநம்பிக்கையும் தோன்றின. எந்த கடவுளை தேடி மக்கள் வருகிறார்களோ, அதை பின்னுக்குத் தள்ளி விட்டு தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார்கள் இந்த பூசாரிகள். பங்காரு அடிகளார் என்றொரு ஆசாமி இருக்கிறார். முன்பு அவரின் ஆன்மீக நிறுவனம் வெளியிடும் படங்களில் அம்மன் படம் பெரிதாகவும் இவர் கீழே அமர்ந்திருக்கும் உருவம் சிறியதாகவும் இருக்கும். நாளடைவில் கீழே வளர்ந்திருப்பவர் பிரம்மாண்டமாக வளர்ந்து அவரே 'அம்மா'வாகி விட்டார். என்ன கொடுமை சரவணன் இது.
 
அதைத்தவிர இந்து மதத்திலுள்ள சில அர்த்தமில்லாத சடங்குகளும் சம்பிதாயங்களும் அவற்றை எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மந்தைத்தனமும் இறைநம்பிக்கை உள்ள காரணத்தினாலேயே தன்னை ஆச்சார அனுபூதியாய் நினைத்துக் கொண்டு அது குறைந்துள்ள அல்லது இல்லாதவர்களை இகழ்ச்சியாய் நோக்கும்  ஆனால் தனிமனித வாழ்க்கையில் கடைந்தெடுத்த அயோக்கியர்களாக இருக்கும் இரட்டைத்தனமும் ஆகிய பல விஷயங்கள் என்னை இறைமறுப்பு கொள்கையை நோக்கி  நகர்த்தின.

இடையில் விடலைப்பருவத்திற்கே உரிய சில மனச்சிக்கல்கள் காரணமாக மூன்று முறை தற்கொலைக்கு முயன்றேன். என்னளவில் அவை மூன்றுமே முழு உறுதியுடன் எடுக்கப்பட்ட தீவிரமான முயற்சிகள்தான். ஆனால் அவை மூன்றிலுமே எப்படியோ நான் காப்பாற்றப்பட்டேன் அல்லது பிழைத்துக் கொண்டேன். ஒருமுறை என்னை காப்பாற்ற முன்வந்தவரை நோக்கி "என்னை எப்படியாவது பிழைக்க வெச்சுடுங்க' என்று அதீத போதையிலும் புலம்பியது எப்படியோ மங்கலாக நினைவிருக்கிறது. உயிர் வாழ்வதையே தீவிரமாக என் ஆழ்மனது விரும்பியிருக்கிறது என்பது அதற்குப் பிறகே எனக்குப் புரிந்தது.

மூன்று விபத்துக்களிலிருந்தும் நான் காப்பாற்றப்பட்டிருப்பது குறித்து யோசிக்கும் போது 'எதற்காகவோ நான் கட்டாயமாக உயிர்வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்' என்கிற அசட்டுத்தனமான தத்துவ எண்ணங்கள் தோன்றின. ஒரு தற்கொலையைக் கூட உருப்படியாக நிகழ்த்த முடியாதவனால் பிற்காலத்தில் எதைத்தான் சாதிக்க முடியும் என்று இன்னொரு மனமே என்னை நக்கலடித்தது. இந்த சிக்கலான சூழலில் ஏற்கெனவே இறைநம்பிக்கையை விட்டொழித்த மனது வேறு எதையாவது பற்றிக் கொள்ளத் துடித்தது. அந்தச் சமயத்தில் ஆறுதலான பற்றுக்கோலாக அமைந்தது. இயற்கை. ஆம். இயற்கையின் மூலம்தான் என் ஆன்மீக தேடுதல் பாதையை அமைத்துக் கொண்டேன். இயற்கையின் ஒவ்வொரு அசைவையும் துளியையும் குழந்தைக்குரிய ஆர்வத்துடனும் பிரமிப்புடனும் பார்க்க கற்றுக் கொண்டேன். 'ஆதியிலே எல்லாமும் இருந்தது' 'பெருவெடிப்பின் மூலம்தான் இந்த பூமி தோன்றியது' என்று யூகங்களையும் ஆராய்ச்சிகளையும் கொண்டு பல தியரிகள் அமைந்திருந்தாலும், இதுவரை கண்டிராத கடவுளைவிட கண்ணெதிரேயே நிகழ்ந்து கொண்டிருக்கும் பெருங்கருணையான இயற்கையைப் போற்றுவது மேல் என்று தோன்றியது.

எந்தவொரு நம்பிக்கையையும் பின்பற்றாமல் உலகிலேயே மிக அதிக சுமையான இருத்தலியல் குறித்தான கேள்விக்குறிகளை சுமப்பது அசாத்தியம்.  சுயத்தைத் தவிர எதுவொன்றையும் நம்பாமலிருக்க எவ்வித பாசாங்குகளும் அற்ற அசாத்திய மனோபலம் தேவை. அவ்வாறானவனே உண்மையான நாத்திகனாக இருக்க முடியும். என் வாழ்க்கையில் இதுவரை அப்படியொரு நபரைச் சந்தித்ததேயில்லை.

ஏதோ ஒன்றைப் பற்றிக் கொண்டுதான் ஒவ்வொருவரும் முன்னகர வேண்டியிருக்கிறது என்பதற்காகவே என் சுயபுராணத்தை சற்று விஸ்தாரமாக சொல்ல வேண்டியிருந்தது. தனிமனிதனின் இந்த பலவீனத்தையே சாய்பாபாவைப் போன்ற ஆன்மீக வியாபாரிகள் சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தங்களிடமுள்ள கடவுள்தன்மையை (?!) புறவயமாக பாமரனுக்கு புரியவைக்க வாயிலிருந்து லிங்கம், மோதிரம் வரவழைப்பது, கையிலிருந்து விபூதி வரவழைப்பது போன்ற எளிய தந்திரங்களை மேற்கொண்டு 'இவரால் எதையும் செய்ய முடியும்' என்கிற நம்பிக்கையை பிரம்மாண்டமான நம்பிக்கையை விதைக்க முயன்று சிலர் அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறார்கள். இந்த வியாபாரத்தில் மளிகைக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை பல கடைகள். எளியவனுக்கு பீர்சாமியார் என்றால் கார்ப்பரேட்வாதிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு சாய்பாபா வகையறாக்கள். அரசியல், வணிக பேரங்கள் முதற்கொண்டு தனிமனித வக்கிரங்களை சாதித்துக் கொள்வது வரை பல அட்டூழியங்கள் இந்த ஆன்மீக போர்வைகளுக்குள் நிகழ்கின்றன.

அப்படி ஏமாற்றினால்தான் என்ன? குடிநீர் திட்டம், மருத்துவமனை முதற்கொண்டு எத்தனை நல்ல காரியம் செய்திருக்கிறார்கள் தெரியுமா? என்பது சில அப்பாவிகளின் கேள்வியாக இருக்கிறது. சம்பாதிக்கும் லட்சம் கோடியில் சில நூறு கோடிகளை எறிவது, மக்களின் மீதுள்ள அன்பினால் அல்ல, அவர்களின் ஆதரவை கேடயமாக பயன்படுத்திக் கொள்வதற்கும், வெளிநாட்டிலிருந்து வருகிற நன்கொடைகளை கணக்குக் காட்டுவதற்கும்தான். ஒவ்வொரு மனிதனுக்கும் சுத்தமான குடிநீர், சுகாதாரம் போன்றவற்றை வழங்குவது அரசின் கடமை. ஆனால் அப்படிச் செய்ய வேண்டிய அரசியல்வாதிகளே, குடிநீர் திட்டத்திற்கு இந்த சாமியார்களின் காலில் விழுவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம். உருப்படியில்லாத இலவச தொலைக்காட்சி திட்டத்திற்காக பல கோடி ரூபாய்களை வீணடிக்கும் அரசினால், அந்தப் பணத்தைக் கொண்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முடியாதா?

அறக்கட்டளைக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய்களை, சொத்துக்களை நிர்வகிப்பதில் அரசு எந்த தலையீடும் செய்யக்கூடாது என்று ஒரு அமைச்சரே பகிரங்கமாக அறிவிக்கிறார். யார் இனி இந்த அறக்கட்டளையை நிர்வகிக்கப் போகிறார்கள் என்பதற்கு கார்ப்பரேட் கம்பெனிகளின் போர்டிற்கு நிகராக அதிகாரப் போட்டி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள், இன்னொரு பாபாவை நோக்கி ஓடுவார்கள், அல்லது இறந்து போன பாபாவை இன்னும் அழுத்தம் திருத்தமான திருவுருவாக ஆக்கி பல நூற்றாண்டுகளுக்கும் நீடிக்கப் போகிற கடவுளாக மாற்றி விடுவார்கள்.

ஆன்மீகம் என்ற சொல்லே அர்த்தமிழந்திருக்கும் சமகால சூழலில் ஆன்மீக் வியாபாரிகளின் மீதுள்ள மயக்கம் மக்களுக்கு தீரும்வரை இம்மாதிரியான பாபாக்கள் தொடர்ந்து உருவாகிக் கொண்டுதானிருப்பார்கள்.

Image Courtesy: http://cartoonistsatish.blogspot.com/

suresh kannan

Tuesday, April 26, 2011

இயக்குநர் பாலாவும் பழுப்பு டை கிளிஷேவும்

 "ஏம்ப்பா இந்தாளை கூட்டினு போயி லேசா முடி இருக்கற மாதிரி செரச்சி்ட்டு பழுப்பு கலர் டை அடிச்சிடு.. அப்படியே அங்க ஆறு மாசமா தோய்க்காம வெச்சிருக்கறம்ல.. அந்த டிரஸ்ஸை போட்டு விட்டுடு...ரெண்டு மூணு மாசத்துக்கு குளிக்காதப்பா...என்ன...பல்லெல்லாம் கறை படிஞ்சிருக்கணும். கண்ணு ஒன்றரையா இருந்தா நல்லது. சுத்தமா தெரியலைன்னா இன்னும் நல்லது. எப்பவும் முரட்டுத்தனமா உர்- ருன்னு இருக்க பழகிக்க. ஆறு மாசத்துக்கு தலைகீழா நின்னு பழகு. யாருட்டயும் பேசாதே.. என்ன..

யாரும்மா ஹீரோயினா... ஏம்மா.. பாண்ட்ஸ் பவுடர் போட்டிருக்கே... மொதல்ல அழி. வெத்தலை பாக்கு போட்டுப் பழகிக்க, தலைமுடியெல்லாம் கலைஞ்சு கந்தர் கோலமா இருக்கணும். கால்மேல கால் போட்டு இங்கிலீஷ்ல இண்டர்வியூல்லாம் கொடுத்தா பிச்சுடுவேன். அவார்டு வாங்கணும்னு ஆசையிருக்கா இல்லையா? கதையைப் பத்தி மூச்சு விடக்கூடாது? யாருப்பா அங்க, ஒரு நூறு பேரு கை,கால் சரியில்லாதவங்க, பிச்சைக்காரங்கல்லாம் வேணும்னு கேட்டனே, என்னய்யா செஞ்சிட்டு இருக்கீங்க?... &*(^%$&


()

மேற்கண்ட உரையாடல் ஒரு நகைச்சுவையான கற்பனைதான் என்றாலும் இயக்குநர் பாலாவின் கதைகளும் மாந்தர்களும் தொடர்ந்து ஏன் ஒரே மாதிரியான வார்ப்பில் இருக்கிறார்கள் என்று யோசிக்கிறேன். தமிழ் சினிமாவில் யதார்த்தமான சித்தரிப்பு என்பதே அபூர்வமானது என்பதும் மாறாக எல்லாமே அதிலிருந்து விலகி போலித்தனமான அழகியல்தன்மையைப் தொடர்ந்து போற்றிப் பார்ப்பது தமிழ் சினிமாவிற்கு உரித்தான அபத்தங்களில் ஒன்று என்பதும் நமக்கு நன்றாகத் தெரியும். செத்து பிணமாய்க் கிடக்கும் காட்சியிலும் மருத்துவமனையில் ஆறு மாதமாய் படுத்துக் கிடக்கும் காட்சியிலும் தூங்கி எழுந்த காலை கொட்டாவியிலும் கூட பிளாஸ்டிக் 'ஒப்பனை'யை கை விடாத விநோத உலகம். ரிக்ஷாக்காரனாய், பிச்சைக்காரனாய் இருந்தாலும் ரீபோக் ஷூ போட்டிருக்கும் அதிசயம் அங்குதான் நடக்கும்.

செட்டுக்களிலிருந்து வெளிவந்து அசல் கிராமத்தை காண்பித்தவர் என்று பாரதிராஜாவின் மீது பொதுவான சிலாகிப்பு உண்டு. ஆனால் அவர் கூட அசலான கிராமத்தைக் காண்பிக்க வில்லையோ என்ற சந்தேகம் எனக்கிருக்கிறது. பச்சை பசேலென்றே வயல்களில் வண்ணத்துப்பூச்சிகள் படபடக்க, தாமரை நீர்க்குளங்களில், வேறு வேலை வெட்டியில்லாத காதலர்கள் 'தம்தனதம்தன' என்று தொடர்ந்து காதல் செய்துக் கொண்டிருப்பதும் அவர்களை தீவெட்டிகளை தூக்கி துரத்தி வரும் கிராமத்துக் காட்டான்களும். என்பதைத் தவிர பாரதி என்ன யதார்த்தமாக கிராமத்தை சித்தரித்து விட்டார் என்ற கேள்வி எழுகிறது? நகரத்தில் பிற்ந்த சத்யஜித்ரேவின் 'பதேர் பாஞ்சாலி'க்கு நிகரான ஒரு காட்சியைக் கூட கிராமத்தில் பிறந்த பாரதியின் திரைப்படங்களில் காணக் கிடைக்கவில்லை.

இந்த மிகையான அழகியல் சூழலில் பாலா முன்வைத்த அசலான மனநோயாளி தோற்றமுடைய 'சேதுவும்" 'முரட்டு இளைஞனான 'நந்தாவும்" பிதாமகன் சித்தனும்  (தோற்றத்தில் மாத்திரம். - பாத்திர சித்தரிப்பில் ஒப்புதல் இல்லை) ஒரளவிற்கு ஆறுதலளித்தனர் என்பதை மறுக்க முடியாது. "இப்ப வர்ற ஹீரோங்கள்லாம் ஏன் அழுக்கா இருக்காங்க. குளிச்சுட்டு வர்றச் சொல்லுங்க'" என்றார் சுஹாசினி, ஓரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில். 'கோபுரங்கள் சாய்வதி்ல்லை' படம் பூராவும் இது போன்ற தோற்றத்தில் நடித்தவரும் உலக சினிமா பார்வையாளருமான சுஹாசினி, இத்தனை அரைகுறைப் புரிதலுடன் பேசியது எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. ஆனால் எப்போதுமே அவர் அப்படித்தான் பேசுவார் என்பது அவர் நடத்தும் சினிமா விமர்சன நிகழ்ச்சியை பார்த்த பின்பு புரிந்தது. அவர் அவ்வாறு பேசியது அவரது மேட்டுக்குடி மனப்பான்மையைத்தான் வெளிப்படுத்துகிறது என்று எழுந்த விமர்சனத்தில் சிறிது உண்மை இருக்கலாம்.

விளிம்புநிலை மனிதர்களை பிரேமின் ஓரத்தில் சில நொடிகளுக்கு மேல் காட்டாத, பொதுப்புத்தியில் படிந்துள்ள அதே சிந்தனைகளுக்குத் தப்பாமல் திரையிலும் சித்தரிக்கிற (வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டாண்டா) தமிழ் சினிமாவின் மத்தியில் பாலா செய்து வரும் இந்த நுட்பமான புரட்சி ஒருவகையான ஆறுதலைத் தந்தது நிஜம்தான்.

ஆனால் ஏன் அவர் இதையே தனது டெம்ப்ளேட்டாக ஆக்கிக் கொண்டு தொடர்ந்து தனது திரைப்படங்களின் கதையையும் மாந்தர்களையும் ஒரே மாதிரியாக படைத்துக் கொண்டிருக்கிறார் என்கிற சலிப்பு 'அவன் இவன்' புகைப்படங்களை பார்க்கும் போது இயல்பாக ஏற்படுகிறது. இந்த கிம்மிக்ஸில் பாலாவை மாட்டிக் கொள்ளச் செய்தது எதுவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். 'வித்தியாசமான இயக்குநர்' என்று வந்து விட்ட பெருமையா, 'நான் பாலா படங்களின் ரசிகன்' என்று மணிரத்னமே புகழ்வதில் ஏற்பட்ட கிறுகிறுப்பா, வழக்கமான இயந்திர வாழ்க்கையில் சலிப்புற்றிருக்கும் நடுத்தர வர்க்க பார்வையாளர்களுக்கு பாம்பு - கீரிச் சண்டை மாதிரி அவர்களின் வாழ்க்கையில் அபூர்வமாக சந்திக்கிற அல்லது சந்தித்தே இருக்காத அல்லது சந்திக்க விரும்பாத சூழலை, மனிதர்களைக் காட்டி மிரட்சியை ஏற்படுத்துவதா?

இயக்குநர் கே.பாலச்சந்தர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்திருந்தாலும் 'நடுத்தர வர்க்க' மனிதர்களையே தொடர்ந்து தேர்ந்தெடுத்து அதையொட்டியே காட்சிகளை அமைத்து ஒருவகையான கிளிஷேவில் மாட்டி பின்பு நீர்த்துப் போனார். 'கிராமத்தை அசலாக காட்டினவர்' என்று சிலாகிக்கப்பட்ட பாரதிராஜாவே சடக்கென்று மாறி அதே 'சப்பாணியை' 'நகரப் பின்னணயில்' சிகப்பு ரோஜாக்களாக, சைக்காலிஜிக்கல் திரில்லர் படங்களுக்கே உரிய படிமங்களுடன் எடுத்து ஆச்சரியப்படுத்தினார். இன்றும் நான் வியக்கும் விஷயம் அது. வெவ்வேறு வகையான சூழலை, மனிதர்களை, நிகழ்வுகளை வெவ்வேறு பின்னணியில் அசலாக சித்தரிக்க பாவனை செய்வதே ஒரு திரைஇயக்குனனின் முன்னுள்ள சவால். 'ஆர்ட் பிலிம்' என்றழைக்கப்படும் படங்களே ஒரே மாதிரியாக போராத்தாகத்தான் இருக்கும் என்று பொதுப் பார்வையார்களிடம் படிந்து போயிருக்கின்ற எண்ணங்களிடமிருந்து சத்யஜித்ரே படங்களும் தப்ப முடியவில்லை. ரேவின் படங்களை பார்த்திருக்காதவர்கள்தான் இந்த குற்ற்ச்சாட்டை சொல்ல முடியும். அகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பான படங்கள், திரில்லர் படங்கள், குழந்தைகள் படங்கள், சமூகப் பிரச்சினையை ஆராயும் படங்கள் என்று பல்வேறு வகைமைகளில் அவர் முயற்சி செய்திருக்கிறார் என்பது அவரது படங்களை பார்த்திருந்தவர்களுக்கு தெரியும். இயக்குநர் என்பதைத் தாண்டி, ஓவியர், பத்திரிகையாளர், எழுத்தாளர் என்று பன்முகப்பட்ட ஆளுமை கொண்டவர் என்பதால் இது சாத்தியமாகியிருக்கலாம்.

தனது குருகுலத்திலிருந்து வெளிவந்தவர்கள், பெரும்பாலும் தனது குரு இயக்குநர்கள் எடுத்த அதே பாணியிலேயே தங்களின் படங்களையும் உருவாக்குவது பொதுவான வழக்கம், தமிழில் பாரதிராஜா பள்ளி, பாலச்சந்தர் பள்ளி என்று முன்உதாரணங்கள் பல உண்டு. ஷங்கர் வித்தியாசமான இயக்குநர் என்று பொதுவாக அறியப்பட்டாலும் தனது குருவான எஸ்.ஏ. சந்திரசேகர் எடுத்திருந்த 'ராபின்ஹூட்' வகைப்படங்களையே இன்னும் பிரம்மாண்ட மசாலாவாக, பல்வேறு சுவாரசிய மாய்மாலங்களுடன் எடுப்பவர் என்பதை சற்று உன்னிப்பாக கவனித்தாலே புரிந்து கொள்ள முடியும். (பாய்ஸ் விதிவிலக்கு). ஹாலிவுட் ஷங்கரான ஸ்பீல்பெர்க்கால் கூட தி கலர் பர்ப்புல், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் போன்ற ஆப்-பீட் படங்களை எடுக்க முடிந்தது. ஆனால் இன்னமும் ஷங்கரால் தனது முதல் எளிய முயற்சியான 'மயிலை' திரையில் கொண்டு வர முடியாதபடியான வணிக கிளிஷே வட்டத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் பாலுமகேந்திரா பள்ளியிலிருந்து வெளிவந்திருந்தாலும் பாலாவால் தன்னுடைய குருவின் பாணியிலிருந்து எளிதில் வெளிவந்து தனக்கென பிரத்யேகமான ஒரு பாணியை உருவாக்க முடிந்தது. ஆனால், வித்தியாச மேக்கப்பில்தான் செய்தால் கமல்படம் என்று கமல் ஒருவகையான கிளிஷேவில் மாட்டிக் கொண்டிருப்பது போல, அழுக்கான, கோரமான மனிதர்களை மையமாக வைத்து எடுப்பதுதான் பாலாவின் பாணி என்கிற வட்டத்தில் பாலாவும் மாட்டிக் கொண்டு விட்டாரோ என்று தோன்றுகிறது.

அவரின் சமீபத்திய படமான 'அவன் இவன்' திரைப்பட ஸ்டில்களை பார்க்கும் போது இவ்வாறான எண்ணம் எழுவதைத் தடுக்க முடியவில்லை. படம் வெளிவரும் முன்னரே அதைப் பற்றிய விமர்சனமா?... என்று சிலர் முணுமுணுக்கலாம். ஆனால் கவனியுங்கள். நான் படத்தின் கதையைப் பற்றி எதுவும் பேசவில்லை. 'நகைச்சுவைப் படம்' என்பதைத் தாண்டி அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவ்வாறான படத்தையும் தன்னுடைய முந்தைய படங்களின் சாயல்களில் உள்ள மனிதர்களை வைத்து உருவாக்கி, தன் பாணி படம் என்கிற கிளிஷேவில் பாலாவும் மாட்டிக் கொள்ள வேண்டுமா என்பதே எனக்குத் தோன்றும் சங்கடமான கேள்வி. பாலாவின் படங்களின் மீது சில பல விமர்சனங்கள் இருந்தாலும், நுண்ணுணர்வுமிக்க நுட்பமான காட்சிகளை உருவாக்கி இயக்குநரின் இருப்பை வலுவாக நிலைநாட்டும் கூறுகள் அவர் படத்தில் உண்டு. எனவேதான் பிரத்யேகமாக பாலாவைக் குறித்து இவ்வாறு கவலைப்படுகிறேன்.

என் கவலை தேவையற்றது என்கிற சாத்தியத்தை 'அவன் இவன்' திரைப்படத்தின் உள்ளடக்கம் ஏற்படுத்துகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 suresh kannan

Friday, April 22, 2011

அஞ்சலி : ர.சு. நல்லபெருமாள்


 பைண்டிங் செய்யப்பட்டிருந்த அந்த தொடர்கதைப் புத்தகம் எப்படி, யாரால் எங்கள் வீட்டிற்கு வந்தது என்பதும் பின்பு எப்படி மறைந்து போனது என்பதும் என்று எதையுமே நான் அறிந்திருக்கவில்லை அல்லது நினைவில் இல்லை. ஆனால் அம்புலிமாமா, ராணி, கல்கண்டு, குமுதம் வகையறா துணுக்குகளைத் தாண்டி சுமார் 15  வயதில் நான் வாசித்த முதல் முழு புதினம் என்கிற வகையில் அந்த நூல் என் நினைவில் இன்னமும் பசுமையாகவே உள்ளது. ரங்கமணி, திரிவேணி, தீட்சிதர், வெங்கி, சர்தார், கமலா... என்று அந்தப் புதினத்தின் பாத்திரங்கள் இன்னமும் என் மூளையின் நியூரான்களில் பத்திரமாக உள்ளனர்.

கல்கியில் தொடராக வந்து, அந்த நாவல் போட்டியில் முதல் பரிசை வென்ற 'கல்லுக்குள் ஈரம்' புதினத்தின் வார சேகரிப்பு தொகுப்பு நூல்தான் அது.

சுதந்திரப் போராட்ட காலத்தின் பின்னணியில் இயங்கும் அந்தப் புதினத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் வன்முறையில் தம் உறவுகளை இழந்த ரங்கமணி, அவர்களைப் பழிவாங்க வன்முறையை கையாள முயல்வான். காந்தியவாதியான திரிவேணி மெல்ல மெல்ல அவனின் வன்முறை எண்ணங்களை திசைமாற்ற முயல்வாள். இறுதியில் அவளின் மரணத்தில்தான் அது சாத்தியமாகும். இடையில் ரங்கமணி, திரிவேணி, முன்னாள் காதலி கமலா என்கிற முக்கோணக் காதல்  நிகழ்வுகளுடன் புதினம் சுவாரசியமாக இயங்கும். இலட்சியவாத எழுத்து வகைமையில் இந்த நாவல் இயங்கினாலும் ஒரு சுவாரசியமான திரைப்படத்தின் ஸ்கிரிப்ட்டுக்குண்டான கச்சிதங்களுடனும் சுவாரசியங்களுடனும் அமைந்திருந்த காரணத்தினால் பல முறை இந்தப் புதினத்தை வாசித்திருக்கிறேன். (இதையே நடிகர் கமலும் பல முறை வாசித்திருக்கலாம் என்பது 'ஹேராம்' வெளிவந்த போது உணர முடிந்தது. ரங்கமணி காந்தியைக் கொல்லப் போகும் சம்பவங்கள் முதற்கொண்டு அவன் வாழ்க்கையில் குறுக்கிடும் இரண்டு பெண்கள் என்பது வரை புதினத்தின் பல பகுதிகள் திரைப்படத்தோடு ஒத்துப் போகும். இதையொட்டி புதினத்தின் ஆசிரியரே எழுப்பிய ஆட்சேபணையை கமல் ஏற்றுக் கொண்டாரா என்பது தெரியவில்லை).

கல்லுக்குள் ஈரம் ஏற்படுத்திய சுவாரசியமே பிற்பாடு என் வாசிப்பு ஆர்வம் கூடியதற்கு ஒரு வித்தாக அமைந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. அதுவே இந்தப் புதினத்தின் மீது காரணம் சொல்ல முடியாத ஒரு பிரியத்தை ஏற்படுத்துகிறது. பிறகு இந்த ஆசிரியர் எழுதிய மற்ற நாவல்களை  தேடினேன். 'மாயமான்கள்' என்று ஞாபகம். சாமியார்களின் போலித்தனங்களைப் பற்றியது. அவை போலியானவை என்றாலும் மக்களின் நம்பிக்கையும் அது தரும் நிவாரணமும் காரணமாக இந்த போலித்தனங்களும் சமூகத்தின் ஒரு தேவையான பகுதிதான் என்பது போல் அந்த புதினத்தின் சாரம் அமைந்திருக்கும்.

'கல்லுக்குள் ஈரம்' புதினத்தின் ஆசிரியரான ர.சு.நல்லபெருமாள் மறைந்த செய்தியை அறிந்த போது தன்னியல்பாக வருத்தம் எழுந்தது. அவருக்கு என் அஞ்சலி. suresh kannan

Tuesday, April 19, 2011

ஹாலிவுட் 'கெளரவம்' (Witness for the Prosecution (1957)


இனி பார்க்கிற திரைப்படங்களில் பிடித்தமானவற்றைப் பற்றிய அடிப்படை குறிப்புகளையாவது அதிவேகமாக இங்கு எழுதியிட திட்டம். அப்படியாக சமீபத்தில் பார்த்ததுதான் மேலே குறிப்பிட்டுள்ள Courtroom Drama படம்.

எழுத்தாளர் அகதா கிறிஸ்டியின்  சிறுகதை மற்றும் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அருமையான சஸ்பென்ஸ் படத்தின் இடையே சம்பந்தா சம்பந்தமில்லாமல் உள்ளூர் தயாரிப்பான சிவாஜியின் 'கெளரவமும்' 'எதிரொலியும்' நினைவிற்கு வந்து தொலைத்தது துரதிர்ஷ்டம்தான். வெளிநாட்டுத் திரைப்படங்களைப் பற்றி பேசும் போது தமிழ்த் திரைப்படங்களை கூடவே திட்டித் தீர்ப்பது முறையல்ல என்றாலும்  திரைப்பட உருவாக்கத்திலும் கூட நாம் எத்தனை மோசமான நிலையில் இருந்தோம் / இருக்கிறோம் என்பதை எண்ணும் போது வரும் எரிச்சலும் சுயபரிதாபமும் தவிர்க்க முடியாததாக இருக்கின்றன. 


இந்தப்படத்தின் ஹீரோ சர்வநிச்சயமாக வயதான பாரிஸ்டர் பாத்திரத்தில் வரும் Charles Laughton-தான். மனிதர் உடல்நலம் குன்றி சற்று தேறி மருத்துவர்களின் எச்சரிக்கையுடன் அப்போதுதான் தொழிலுக்கு திரும்புகிறார். கூடவே 'அய்யோ, பிராண்டியா குடிக்கிறீர்கள், சுருட்டையா எடுக்கிறீர்கள், இதோ டாக்டருக்கு போன் செய்கிறேன்' என்று அன்புத் தொந்தரவு பிளாக் மெயிலராக 'தொண தொண' செவிலி பாத்திரத்தில் Elsa Lanchester. (இருவருமே அகாதமி விருதின் சிறந்த நடிகர் பிரிவிற்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தார்கள்).

திறமையான அந்த வழக்கறிஞர், தனது வழக்குகளை மிக அலட்சியமாக கையாள்வது போல் தோன்றினாலும் தனது தொழிலின் மீது அவர் வைத்துள்ள அக்கறையும், குற்றஞ்சாட்டப்பட்டவரின் தகவல்களை துரிதமாக உள்வாங்கி வழக்கிற்காக செரித்துக் கொள்கிற கச்சிதமும் பிரமிக்க வைக்கிறது. கூடவே அவரது அலட்டலான நகைச்சுவையும். ஒரே ஒரு காட்சியை உதாரணிக்கிறேன்:

'ஒய்வெடுங்கள்' என்று நச்சரித்துக் கொண்டேயிருக்கிற நர்ஸின் தொந்தரவைப் பொறுக்க முடியாமல் வேறு வழியின்றி உள்ளே செல்கிறார் பாரிஸ்டர். அப்போதுதான் புதிய வழக்கை எடுத்துக் கொண்டு வரும் ஒரு கிளையண்டை வெறுப்பாக பிறகு வரச்சொல்கிறார். என்றாலும் அப்போதுதான் வந்தவரின் பாக்கெட்டில் இருக்கும் சுருட்டுக்களை கவனித்து விட்டு  திடீரென்று மனதை மாற்றிக் கொண்டு அவரை மாத்திரம் அழைத்துக் கொண்டு வழக்கு பற்றி உரையாடுவதாக நர்ஸிடம் பாவ்லா காட்டி விட்டு அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டு விடுகிறார். ஆனால் சுருட்டு வைத்திருக்கிற அந்த நபர் நெருப்பு வைத்திருக்கவில்லை. (இதற்காகவே அவரை ஜெயிலில் போடலாம்). வெளியே காத்திருக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் நெருப்பு இருப்பதாக தெரிகிறது. பாரிஸ்டர் படு அமர்த்தலாக வெளியே வந்து நர்ஸை ஓரக்கண்ணால் புறக்கணித்து வெளியே நிற்பவரிடம் சொல்கிறார்.

"இந்த வழக்கு தொடர்பான விவரங்களில் ஒரு புதிய வெளிச்சம் கிடைப்பதற்காக நீங்கள் தேவைப்படுகிறீர்கள். உள்ளே வாருங்கள்"

இப்படியாக பல சரவெடிகள்... கோர்ட்டில் மருந்து என்கிற பெயரில் பிராந்தி அருந்திக் கொண்டே அவர் பிராசிகியுஷன் தரப்புகளை காலி செய்யும் விதம் அதிரடி.

அகதா கிறிஸ்டியின் இந்தக் கதை போகும் போக்கு பெரும்பாலான Courtroom drama-க்கள் போலத்தான். கொலை வழக்கில் சிக்கியிருக்கும் ஒரு நபர் தன்னை நிரபராதி என்று கூறிக் கொண்டு பாரிஸ்டரிடம் வருகிறார். அவருடைய நடவடிக்கைகளும் விவரங்களும் அவ்வாறே தெரிவிக்கின்றன. படம் நகர நகர குற்றங்களின் பின்னணியும் வழக்கின் போக்குகளும் விரிகின்றன. ஆனால் ஜிஎஸ்டி ரோடின் அபாயமான திருப்பம் போல படம் ஒரு கட்டத்தில் தடாலென 360 டிகிரிக்கு திரும்புகிறது. 'படத்தை முடிவை வெளியில் சொல்லாதீர்கள்' என்பது இந்தப்படம் வெளியான சமயத்தில் விளம்பரத்தில் உபயோகித்தார்களாம் 1957-ல் விடப்பட்ட அந்த வேண்டுகோளை இந்த 2011-லும் காப்பாற்ற நான் விரும்புகிறேன். படத்தைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

நான் வழக்கமாக வியந்தது ஹாலிவுட்களின் அந்த நேர்மையான திரைக்கதை பயணத்தைத்தான். 'நீயும் நானுமா' என்கிற உணர்ச்சி அலறல்கள் இல்லை. 'குடிமகனே.. என்ற சிஐடி சகுந்தலாவின் கவர்ச்சி (?) ஆட்டமில்லை. அசட்டுத்தனமான சென்டிமென்டுகளோ, தேவையில்லாத காட்சிகளோ சுத்தமாக இல்லை. நூல் பிடித்தாற் போல் படம் வழக்கு தொடர்பான காட்சிகளோடே நகர்கிறது. ஹாலிவுட்டின் கவுரத்தைக் காப்பாற்றிய படம் என்பதால் பதிவின்  தலைப்பு அப்படி அமைந்திருக்கிறது. 

'I hate Tamil films' என்று அலட்டுபவர்களின் மீது ஒரு காலத்தில் எனக்கு கொலை வெறி வரும். ஆனால் அதன் நியாயம் இப்போதுதான் புரிகிறது.

suresh kannan

Thursday, April 14, 2011

buzz-ல் பஸ் பற்றி, சாய்பாபா பொங்கல், மனப்பாட இலக்கியம்

சமீபத்தில் Google buzz-ல் கிறுக்கியவை இவை. தஞ்சாவூர் கல்வெட்டுக்களில் இடமில்லாததால் இங்கே பதிந்து வைக்கிறேன். 
***


சென்னை மாநகர 'பல்லவன்' பஸ்களின் நவீன உள்வடிவம் குறித்த அதிருப்தி நீண்ட நாட்களாகவே இருக்கிறது. இங்கு அதைப் பற்றி எழுதுவதால் ஒரு உரோமமும் ஆகப் போவதில்லை என்றாலும் நடுத்தரவர்க்கத்தின் மன நமைச்சலாவது சற்று குறையலாம் என்றுதான்.

சமீபத்திய பேருந்துகளின் உள்வடிவமைப்பிற்கு ஒப்புதல் அளித்த அறிவிலி அதிகாரி குழுமம் யாரென்று தெரியவில்லை. வெளிநாட்டு பேருந்துகளின் வடிவத்தை காப்பியடித்ததெல்லாம் சரி.. ஆனால் அது மக்கள் தொகை பெருக்கம் அதிகமுள்ள இந்தியாவிலுள்ள நகரங்களுக்கு பொருந்துமா என்பதை சற்று யோசித்திருக்கலாம். அடித்தட்டு மற்றும் கீழ் நடுத்தர மக்களுக்கான திட்டங்களை ஏஸி அறையில் மாத்திரமே இருந்து பழகியவர்கள் போடுவதால் வரும் கொடுமைகளில் இதுவொன்று.

இரண்டு பேர் அமரும் இருக்கைகளில் ஒருவரையொருவர் இடித்துக் கொண்டுதான் அமர வேண்டியிருக்கிறது. மேலும் பெரிதும் உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வில்லாத சூழலில் கலோரி மலைகள் நிறைந்த நகரத்தில் இது மேலதிக யதார்த்த சிக்கல்களை முன்வைக்கிறது. சில இருக்கைகளில் (ஓட்டுநரின் பின்புள்ள இருக்கைகள் மற்றும் சக்கரப்பகுதிகளின் மேலுள்ள இருக்கைகள்) அமர்வதற்கு ஏணி தேவைப்படுகிறது. அப்படியே ஏறி அமர்ந்தாலும் உயரமான ஒட்டுத் திண்ணையில் தொங்கிக் கொண்டிருக்கிற அபாயம் போலவே இருக்கிறது.

ஆண்கள் மற்றும் பெண்கள் இருக்கைகளுக்கு இடையே நிற்பவர்களின் பகுதி இன்னும் குறுகலாகியிருக்கிறது. இடிராஜாக்கள அசெளகரியப்படக்கூடாது என்பதற்காக இந்த சிறப்பு ஏற்பாடு போல. கற்பு, தமிழர் பண்பாடு, பெண் தெய்வம் என்றெல்லாம் வாய் கிழிய பேசும் பாசாங்குக்காரர்களை இந்தப் பேருந்துகளில் பயணிக்க வைக்கலாம். வயது வித்தியாசமின்றி பெண்கள் தங்கள் கற்பிதக் கற்பை தவணை முறையில் இழக்குமிடங்களில் நகரப் பேருந்துகளுக்கு முதலிடம் தரலாம்.

பேருந்து எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை நின்று பயணிக்கும் நபர்கள் நெரிசலான நேரங்களில் கவனிப்பதற்கு அடிமைப் பெண் எம்.ஜிஆர் மாதிரியே குனிந்து நோக்கிக் கொண்டே வரவேண்டியிருக்கும். அப்படியாக பக்கவாட்டுப் புறங்களை இன்னும் கீழாக மறைத்து வைத்திருக்கிறார்கள். இதனால் காற்று உள்ளே வருவதும் தடைபடுகிறது. சில பேருந்துகளில் தானியங்கி கதவு அமைத்து அந்த வழியையும் இறுக்க மூடி விடுகிறார்கள். (படியில் பயணிக்க முடியாதபடி உள்ளபாதுகாப்பு ஒன்றுதான் இதிலுள்ள பயன்) பேருந்தின் மேலே அமைக்கப்பட்டிருக்கும் வென்ட்டிலேட்டர்களும் கோளாறால் மூடிக் கொண்டிருந்தால் வெயில் காலங்களில் நரகம்தான்.

சாதாரணக் கட்டணங்களை கொண்ட பேருந்துகளை எளிதில் பார்க்கவே முடியாது. அதிலும் M என்ற போர்டு வைத்து அதிகம் காசு வசூலிக்கிறார்கள். ஆனால் அதே பேருந்து நிறுத்தங்கள்தான். M என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டார் நண்பர். வேறென்ன MONEYதான். விரைவு்ப் பேருந்து என்பதெல்லாம் மறைமுகமாக அதிக காசு வசூலிப்பதற்குதான் பயன்படுகிறதே ஒழிய நகர நெரிசலான போக்குவரத்தில் அதுவொரு நகைச்சுவையே.

எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது பேருந்துகளின் பழைய வடிவமே எவ்வளவோ தேவலை. நான் நகரத்திற்குள் செல்ல மின்ரயில்களையே பெரும்பாலும் உபயோகிக்கிறேன். புதிதாக் எங்கு செல்ல வேண்டுமென்றாலும் மினரயில் வழி உள்ளதா என்பதையே முதலில் யோசிக்க வேண்டியிருக்கிறது. செலவும் குறைச்சல் என்பதோடு பேருந்து அலுப்பு என்பதும் கிடையாது.

நகரத்தில் புழங்குவதற்கு இருசக்கர வாகனம் ஓட்டத் தெரியாதது மிகப் பெரிய குறைபாடாக இருக்கிறது.
  ***
இன்றைய சூழலில் கூட ஒரு கவிதையையோ, செய்யுளையோ, பாடலையோ மனப்பாடமாக சொல்லக்கூடியவன்தான் சிறந்த வாசகன், ரசிகன் என்று அபத்தமாக நம்புகிறார்கள். குறிப்பாக பட்டிமன்றங்களில் உரத்த சப்தத்தோடு செயற்கையான உணர்ச்சியோடு சங்கப்பாடலை சொல்லிவிட்டால், பார்வையாளர்கள் புரியவில்லையென்றாலும் சொல்லப்பட்ட விதம் காரணமாகவே பரவசத்தோடு கையைத் தட்டும் பழக்கம் இன்னும் போகவில்லை.

அச்சு வடிவம் இல்லாத காலத்தில் ஒரு படைப்பை நினைவில்தான் இருத்திக் கொள்ள வேண்டியிருந்தது. ஞாபகத்திலிருந்து சொல்லி வாய்மொழியாகத்தான் அது பரவ வேண்டியிருந்தது. அதற்குத் தோதாக எதுகையும் மோனையும் ஓசை நயங்களுடன் கூடிய சுருக்கமான வார்த்தைகள் 'ரூம் போட்டு யோசித்து' கருத்துக்களும் கற்பனைகளும் அதில் திணிக்கவோ அமரவோ வைக்கப்பட்டன.

அச்சுவடிவம் பரவலாக புழங்கின பிறகு, சுருக்க வடிவம் தேவையில்லாத உரைநடை புழக்கத்திற்கு வந்தே பல வருடங்கள் கடந்து விட்டன. கவிதையை ரசிப்பதென்பது அதை மனப்பாடமாக சொல்ல முடிவதே என்னும் சிலரின் (மூட) நம்பிக்கை சரியா என்பது விவாதத்திற்கு உரியது.
 
 ***  இன்றைய புலம்பல்: :)

நேற்று ஒரு வேலையாக குடும்பத்துடன் மைலாப்பூர் சென்றிருந்தோம். திரும்பும் வழியில் மனைவி சாய்பாபா கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று நச்சரித்தார். அவர் சாய்பாபாவின் மித பக்தை. அங்கு தரப்படும் பிரசாதங்கள் சுவையாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருந்ததால் நானும் ஒப்புக் கொண்டேன். பெரும்பாலும் கீழ்/உயர் நடுத்தர குடும்பங்கள், நபர்கள். பக்தர்கள்.

எனக்கு வழிபடும் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாததால், குடும்பத்தினரை உள்ளே அனுப்பி விட்டு நுழைவு வாயிலுக்கு முன்னதாக பக்தர்கள் அமரும் பகுதியில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அமைதியான அந்த சூழலே சற்று மனதைக் கவர்ந்தது. இந்துக் கோயில்களில் நான் வெறுக்கும் விஷயங்களில் பிரதானமானது அதன் சப்தம். சிறுமணியொலியாக ஒலித்துக் கொண்டிருந்த பாரம்பரியம், இயந்திரங்களுக்கு மாறி தணார் தணார் என்று ஒலிக்க ஆரம்பித்து விட்ட பெரும்பாலான கோயில்களில் காற்று வரும் வசதியின்றி, கூட்டத்தின் வியர்வை கசகசப்பும், வம்புப் பேச்சுகளும், குழந்தைகளின் அழுகைகளும், உரத்த உரையாடல்களும், குருக்களின் அலட்டல்களும் விரட்டல்களும் என எரிச்சலாக இருக்கும். நல்ல வேளையாக இங்கு அப்படியில்லை. (வியாழக்கிழமையன்று அப்படி இருக்குமோ என்னமோ. செவ்வாய் என்றால் அந்தோணியார், வெள்ளி என்றால் காளிகாம்பாள்... என்று ஒரு நாளை சரியாக குறித்துக் கொண்டு மொத்த ஜனமும் அன்று இடித்து நெரித்து ஆன்மீகத்தை வளர்ப்பதில் நம்மவர்களுக்கு அத்தனை ஈடுபாடு).

வெண்பளிங்கில் அமர்ந்திருந்த பெரிய அளவு சாய்பாபா சிலையை தரிசிக்க இரண்டு U அருகருகே வைத்தாற் போன்ற வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. ஓர் உயர்நடுத்தர குடும்பம் வரிசையில் திரும்பும் சமயத்தில் சடக்கென்று எதிர்வரிசையின் இடைவெளியின் உள்ளே புகுந்தது. பின்னர் அவர்களின் உறவினர்களை அழைக்க, அவர்களும் குறுக்கே இருந்த சங்கிலியை உயர்த்திக் கொண்டு அவர்களுடன் இணைந்தனர். சபரிமலை, திருப்பதி என்று...இது போல் பல இடங்களில் எரிச்சலுடன் இதைக் கவனித்திருக்கிறேன்.

திரையரங்கில் அனுமதிச் சீட்டைப் பெற முண்டியடித்துக் கொண்டு வரிசையை மீறுவதைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது. இதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. நாமே கடவுள், வழிபாடு, ஜேஜா கண்ணைக் குத்திடும் என்றெல்லாம் நம்பிக் கொண்டு ஒரு வளாகத்திற்குள் நுழைகிறோம். அங்கு கூட குறைந்தபட்சம் நம்முடைய அயோக்கியத்தனங்களை, கீழ்மைகளை கைவிட முடியவில்லையெனில் அதை எவ்வாறு புரிந்து கொள்வது? மேற்குறிப்பிட்ட வரிசையின் பின்னால் கைக்குழந்தைகளுடன், பல சிறு குழந்தைகளும் வரிசையில் வந்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு சிலர் புகுவதால் அவர்கள் இன்னும் சில அதிக நிமிடங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த சிறு நியாய உணர்வு கூடவா வரிசையில் புகுபவர்களுக்குத் தோன்றாது.... என்னமோ கடவுளின் அருள் ஒரு குழாயில் வடிந்து கொண்டிருப்பது போலவும், இவர்கள் போவதற்குள் அது காலியாகி விடப் போவது போலவுமான அலைபாய்தல் ஏன்?

பல வருடங்களுக்கு முன்பான அனுபவம். திருப்பதியில், விலங்குகள் போல் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டு மனிதர்கள், இன்னொரு கூண்டிற்கு மாற வேண்டிய தருணத்தில் அடித்து பிடித்துக் கொண்டு ஓடினார்கள். முதியவர்கள் உட்பட சிலர் கீழேயும் விழுந்தார்கள். முதன்முறையாக அப்போதுதான் நம்முடைய வழிபாட்டு சடங்குகளின் அபத்தம் குறித்தான கேள்வி முதன்முறையாக என்னுள் புகுந்தது.

இந்த எரிச்சலை சற்று தணித்தது அங்கு தரப்பட்ட பிரசாதம். சுடச்சுட கணிசமான அளவு வெண்பொங்கல். எனக்காக மகள் சென்று வாங்கி வந்தாள். அபாரம். கூட கொஞ்சம் தேங்காய் சட்டினி இருந்திருந்தால் ரகளையாக இருந்திருக்கும். இது போல் ரவா கேசரி, சாம்பார் சாதம் என்று வேளா வேளைக்கு பலதும் தருகிறார்களாம். இனி மயிலை பக்கம் செல்லும் போதெல்லாம் கோயிலுக்குச் செல்வதை துணைவியார் மறந்தால் கூட நானே ஞாபகப்படுத்துவேன்.

suresh kannan

Wednesday, April 13, 2011

ஜனநாயகத் திருவிழா


வாக்கு அளித்து விட்டு வந்த கையோடு .. மன்னிக்க விரலோடு..சுடச்சுட எழுதுகிறேன். 'ஜனநாயகம்' என்கிற வார்த்தைக்கு உண்மையாகவே அர்த்தத்தைத் தரும் நாளிது. மற்ற நாட்களில் ஜீரோவாக இருக்கும் மிஸ்டர்பொதுஜனம், ஹீரோவாக உணரக்கூடிய ஒரே ஒரு நாள். மற்ற நாட்களில் உரோமமாக கூட மதிக்காத அரசியல்வாதிகள், 'பொன்னான வாக்குகளை' எப்படியும் பெற்று விடுவதற்காக இந்த பொதுஜனத்தின் முன் அடித்துக் காட்டிய பல்டிகளையும், கூழைக்கும்பிடுகளையும், வெற்றுச் சவடால்களையும், தனிநபர் அவதூறு நாடகங்களையும், அநாகரிகங்களையும் நிறையவே பார்த்து விட்டோம்.

தேர்தல் கமிஷனின் அபார சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். மக்கள்தொகைப் பெருக்கம் கொண்ட இந்தியா போன்ற தேசத்தில், இத்தனை கச்சிதமான திட்டமிடல்களுடனும் ஏற்பாடுகளுடன் ( தன்னுடைய இருப்பை, கமிஷனின் அதிகாரத்தை நிலைநாட்டிய, டிஎன் சேஷனுக்குப் பிறகு) கண்டிப்புடனும் கறார்த்தனத்துடனும் தேர்தல் செயற்பாட்டை நிகழத்தும் கமிஷனுக்கு ஒரு ராயல் சல்யூட். நம்மை ஆளப் போகும் அதிகார சக்தியை தேர்ந்தெடுக்கும் பல சிறு புள்ளிகளுள் நானும் ஒருவன் என்பதை இயந்திரத்தை அழுத்தும் போது பெருமையாகவும் புல்லரிப்பாகவும் இருந்தது. கூடவே மிகப் பெரிய அபத்த நாடகத்தின் ஒரு கையாலாகாத பார்வையாளன் என்கிற உணர்வும்.

இந்த முறை யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் எனக்கு குழப்பமேயில்லை. பொதுவான தமிழகத்தின் மனநிலையையே நானும் பிரதிபலிக்கிறேன். சில நல்ல விஷயங்களும் நிகழ்ந்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்கு ஆயிரம் காரணங்களை அடுக்க முடியும்.  இந்திய வரலாறு இதுவரை கண்டிராத அளவிலான ஊழல், ஆக்டோபஸ் குடும்பத்தின் வணிக ஆதிக்கம், அட்டூழியம், பொதுநலம் சார்ந்த கொள்கைகளை குழிதோண்டி புதைத்து விட்டு பதவியைப் பெற, அதை தக்க வைத்துக் கொள்ள, இன்னும் கொள்ளையடிக்க என... முழுக்க முழுக்க சுயநலம் சார்ந்த அரசியல் முடிவுகள், ஈழம் மற்றும் தமிழக மீனவர் பிரச்சினையை கையாண்ட அலட்சியம், அதன் மூலமும் தேடிய அரசியல் ஆதாயம்,  இலவசங்களை ஆசைகாட்டி வாக்குகளைப் பிடுங்க முயலும் அநாகரிக அரசியல், ரவுடிகளின, ஊழல் அதிகாரிகளின் ஆதிக்கம், மக்களின் அடிப்படை வசதிகளுக்கான வரிப்பணத்தை சுயலாபங்களுக்காக, ஆடம்பரங்களுக்காக இறைத்த அநியாயம்..

சொல்லி மாளாது.

சரி. நடப்பு ஆட்சியை தூக்கியெறியலாம். ஆனால் இதற்கு மாற்று?. பெரும்பாலோனரைப் போலவே இந்தக் கேள்விதான் எனக்குள்ளும் பெரியதொரு துக்கமாக, ஏக்கமாக உள்ளுக்குள் மண்டிக் கிடக்கிறது. தீயில் தப்பித்து நெருப்பில் விழுந்த கதையாக, எல்லாமே ஒரே சகதிக் குழிகளாகத்தான் இருக்கிறது. வேறு நாதியில்லாத இந்த துரதிர்ஷ்டமான சூழலில், 'இருப்பதிலேயே குறைந்த மோசம்' என்பதைத் தேர்ந்தெடுக்கும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறோம்.

என்னைப் பொருத்தவரை அரசியல் கட்சிகளையும், அவற்றின் உருப்படாத கொள்கைகளையும் இரண்டாமிடத்தில் வைத்து, வேட்பாளர்களைத்தான் முதலில் கணக்கில் எடுத்துக் கொண்டேன். முன்னணி அரசியல் கட்சிகளை மாத்திரம் மனதில் கொண்டு சில குறைந்த பட்ச நியாயவான்களை 'இவருக்கு வாக்களிப்பதால் என்ன பயன்?' என்கிற மனோநிலையை விட்டொழிக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். இந்த மனோநிலையே நமக்குள் பெரும்பான்மையாக இயங்குவதால்தான் இரண்டு கட்சிகளே மாறி மாறி நம் பிரதேசத்தை நாசப்படுத்திக் கொண்டிருக்கின்றன. குறைந்தபட்சமாகவது தொகுதிக்காக உண்மையாகவே உழைப்பார் என்று தோன்றினால், மற்ற எதையும் யோசிக்காமல் அவருக்கு வாக்களிப்பதே சிறந்ததாக இருக்கும் என்பது என் அபிப்ராயம். (சொற்ப உதாரணங்களில் ஒன்று: 'டிராபிக் ராமசாமி - சென்னை, திநகர் தொகுதி). மோசமான அரசியல்வாதிகளை தொடர்ந்து குற்றஞ்சொல்லி வம்பு பேசிக் கொண்டிருப்பதில் எந்த உபயோகமும் இல்லை.

49-ஓ என்னும் பிரிவை ஞாநிதான் தொடர்ந்து கவனப்படுத்தி பிரபலமாக்கினார் என நினைக்கிறேன். 'யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை' என்பது கசப்பின் உச்சத்தில் எடுக்க வேண்டிய, ஊழல்அரசியல்வாதிகளுக்கு ஓர் அச்ச முள்ளாக உணர வைக்க வேண்டிய ஓர் ஆயுதமாக இருந்தாலும், அடிப்படையில் இது ஜனநாயகத்தின் தொடர்ந்த செயற்பாட்டுக்கு இடையூறாகவே இருக்கும். தப்பித்தல் மனோபாவத்தின் நுண்ணிய வடிவமாக இந்த 49ஓ  எனக்குப் படுகிறது.

எழுத்தாளர் பாஸ்கர்சக்தி கிராமங்களில் மேற்கொண்ட பயணங்களைப் பற்றி முன்னர் ஒரு பத்திரிகையில் தொடராக எழுதும் போது ... ஓட்டையும் உடைசலுமான அந்தப் பேருந்து தடதட சப்தத்துடன் ஏதோ ஒரு தர்மத்திற்குக் கட்டுப்பட்டு ஓடிக் கொண்டிருந்தது..' என்று எழுதியிருப்பார். இந்திய ஜனநாயகத்தையும் இந்தப் பேருந்துடன் ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது. இந்திய அரசியல்வாதிகள் தொடர்ந்து மக்களைச் சுரண்டிக் கொண்டிருந்தாலும்,  சில நல்ல விஷயங்களுடன் ஏதோ ஒரு தர்மத்திற்குக் கட்டுப்பட்டு இந்த தேசம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே அந்த குறைந்த பட்ச நம்பிக்கையைக் கொண்டு 'இருப்பதிலேயே குறைந்த மோசக்காரரை' தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறு வழியேயில்லை. தேர்தலைப் புறக்கணிப்பதோ, யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பமில்லை என்பதோ நிச்சயம் இதற்கு மாற்று இல்லை. குறைந்த பட்சம் நல்லவர் என்று நீங்கள் நம்பும் சுயேட்சைக்காகவது உங்கள் வாக்கை அளியுங்கள். இந்தச் சந்தர்ப்பத்தை வீணாக்காதீர்கள்.

()

இத்தனைக் கோடி ஜனங்களில் ஒரு சிறுபுள்ளியாக என் ஜனநாயகக் கடமையை ஆற்றிய பெருமையுணர்ச்சியுடனும் கறையுடனும் (கறை நல்லது) வீட்டிற்குள் நுழைந்த என்னை "தூங்கின போர்வையைக் கூட மடிச்சு வெக்காம போயிட்டு... கட்மையாற்றிட்டாராம்" என்று நொடித்து ஒரே நொடியில் அத்தனை போதையையும் இற்க்கி தரையில் கால்பட வைத்தார் வீட்டின் முதலமைச்சர்.

கடந்த தேர்தலின் போது எழுதிய பதிவு.

suresh kannan

Wednesday, April 06, 2011

விதிகளை மீறும் விளையாட்டு


 (டிஸ்கி 1: இணைய விலகல் அறிவிப்பு buzz-ல்  வெளியிடப்பட்டவுடன் அதற்கு செய்யப்பட்ட ஒர் எதிர்வினை என்னை மிகவும் மன வருத்தமடையச் செய்தது. அதைக் குறித்து இறுதியில் காண்போம்).

(டிஸ்கி 2: இணைய விலகல் தொடர்பாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த பதிவு தொடர்பான விளக்கப்பதிவு இது. இதன் வளவளா வரலாற்றுப் பின்னணிகளைத் தாண்ட விரும்புபவர்களும் நேராக இறுதிப் பகுதிக்குச் சென்று விடலாம்).


நண்பர்களுக்கு

முன்னர் மடற்குழுமங்களிலும் பின்பு 2004 முதல் வலைப்பதிவிலும் இயங்கிக் கொண்டிருந்தாலும் 2006 ஏப்ரலில்தான் முதன்முதலில் அந்த நாசகார எண்ணம் தோன்றியது. ஏப்ரல் 1-க்காக நண்பர்களை சற்று ஏமாற்றிப் பார்த்தாலென்ன?

பொதுவாக எனக்கு  இவ்வகையான ஆபத்தில்லாத சிறுகுறும்புகளை அவ்வப்போது செய்யப்பிடிக்கும். சில நண்பர்களுக்கு என் எழுத்தை முன்னிட்டு எப்படியோ என் மீது 'தீவிரவாதி' எண்ணம் தோன்றியிருக்கிறது. 15 தினங்களுக்கு ஒருமுறைதான் அரைசென்டி மீட்டர் சிரிப்பவன் என்று நினைத்துக் கொண்டிரு்க்கிறார்கள். ஒரு மனிதனின் அகச்சித்திரத்தைப் பற்றி (ஆரம்பிச்சிட்டான்யா) அவனே முழுமையாக அறிவானா என்பதே கேள்விக்குறியாக இருக்கும் போது அதை மற்றவர் அறிந்து கொள்ள இயல்வது அதில் சில துளிகளாத்தான் இருக்கும். ஓர் இலக்கியக் கூட்டத்தில் கவனித்தேன். இரண்டு சமகால பெரிய எழுத்தாளர்கள் அருகருகே அமர்ந்திருந்தும் ஒருவரையொருவரை பார்த்து புன்னகை கூட செய்யவில்லை.  'உர்'ரென்று அமர்ந்திருந்த அந்த இருவரும் கூட்டம் முடிவதற்குள் 'ஏன்யா, எனக்கு வெச்சிருந்த தண்ணி பாட்டிலை எடுத்தே' என்று மோதிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்குமளவிற்கு இருந்தது அவர்களின் உடல்மொழி. இவர்களுக்கு சிரிக்கக் கூட தெரியுமா என்று சந்தேகமாக இருந்தது. சிறிது காலத்திற்குப் பிறகு ஒரு குழுமத்தின் மூலம் அவர்களுக்குள் பொதிந்திருந்த அபாரமான நகைச்சுவையுணர்வையும் அற்புதமான  நட்பையும் அறிந்து கொள்ள முடிந்தது. பின்னர் அந்த நகைச்சுவையில் ஒன்று பெரிய சர்ச்சையாகியது வரலாற்றின் காவிய சோகங்களில் ஒன்று. ஒருவரை சில சதவீதங்களேனும் புரிந்து கொள்ள முடிவது அத்தனை எளிதல்ல என்று அப்போது தோன்றியது.

என்னுள் எஞ்சியிருக்கும் குழந்தைமையை நான் எப்போதும் இழக்க விரும்பியதேயில்லை. என் குழந்தைகளிடம் குழந்தையாக இணைந்து குறும்புத்தனமாக விளையாட்டுவதில் அலாதியான இன்பமுண்டு. இதை முன்னிட்டு எழும் மற்றவர்களின் விநோதமான பார்வைகளை நான் பொருட்படுத்துவதில்லை. இவை பல சமயங்களில் இன்பத்தையளித்தாலும் சமயங்களில் வினையாகி விடுவதும் உண்டு.

ஒரே ஓர் உதாரணம் சொல்கிறேனே. அன்று இரவு அசைவ உணவு சமைக்க இருப்பதாக மதியம் தொலைபேசியில் சொல்லியிருந்தார் மனைவி. என்ன மெனு என்பதையெல்லாம் சொல்லி எதிர்பார்ப்பை எகிறச் செய்திருந்தார்.  நல்ல பசியிருந்தாலும் அன்று வீட்டிற்குக் கிளம்ப நேரமாகி விட்டது. வீட்டை அடைய பத்து நிமிடமிருக்கும் போதுதான் அந்த 'சுயசூன்ய' யோசனை குறுக்கிட்டது. மொபைலில் வீட்டை அழைத்து 'திடீரென்று தெரிவிக்கப்பட்ட நண்பனின் பிறந்த நாள் ஒனறில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் வருவதற்கு தாமதமாகும் என்றும், இரவு உணவு தேவையில்லை என்றும்'  போலித் தயக்கத்துடன் கெத்தான குரலில் சொல்லி முடித்தேன். 'காச் மூச்' செனறு எதிர்முனையிலிருந்து வசவொலி. இதைத்தானே எதிர்பார்த்தோம்?

ஏழெட்டு நிமிடங்களுக்குள் வீட்டை அடைந்து 'டொட்டடொய்ங்க்' என்ற ஒலியுடன் நுழைந்து சொன்ன வசவையெல்லாம் நினைவுப்படுத்தி அவரை அசடு வழியச் செய்யும் திட்டம். எதிர்பாராதவிதமாக டிராபிக்கினால் வீட்டை அடைய சில நிமிடங்கள் அதிகமாகி விட்டது. உறுப்பினர்கள் உறங்குவதற்கான முஸ்தீபுகளில் இறங்கிக் கொண்டிருக்க, சமையலறையில் காலி பாத்திரங்கள் என்னை வரவேற்றன. 'உணவு வேண்டாம்' என்கிற செய்தி ஏற்படுத்தின வெறுப்பில் அத்தனையையும் வாட்ச்மேனிடம் அத்தனை சீக்கிரம் தந்து விட்டிருக்கிறார் மகராசி. 'ஒவ்வொரு அரிசிப் பருக்கையிலும் அதை சாப்பிடவுள்ளவரின் பெயர் எழுதப்பட்டிருக்கும்' என்கிற பொன்மொழியின் மீது அழுததமாக நம்பிக்கை ஏற்பட்டது அன்றுதான். வாட்ச்மேன் அவர்கள் செட்டிநாடு சிக்கன் கிரேவியையும் நண்டுப் பொரியலையும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, பிரெட் ஜாமுடன் தலைவிதியையும்  தடவி வெறுப்புடன் சாப்பிட்டேன்.

2006- ஏப்ரலில் இருந்து டிராக் மாறி விட்டேன்.

நண்பர்களை ஏமாற்றுவதற்காக என்னையும் அறியாமல் ஒரு கொடூரமான திட்டம் உள்ளே எழுந்தது. ஒரு தொலைக்காட்சி தொடரில் நான் நடிக்கவிருப்பதாகவும் மறுநாள் இரவு அதைப் பார்க்கலாம் என்பதாக அறிவித்தேன்.  என் எதிரிக்கும் தரக்கூடாத தண்டனைதான். வழக்கத்திற்கு மாறாக பல நண்பர்கள் அன்று தொடரை பார்த்து விட்டு மறுநாள் கடுப்புடன் தொலைபேசினார்கள். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுவிட்டேன்.

(இந்த அறிவிப்பில் விளையாட்டுத்தனமாக எழு்ததாளர் பாஸ்கர் சக்தியின் பெயரை இணைத்தது மிகப் பெரிய தவறாகப் போய் விட்டது. பின்னூட்டத்தில் அவரே வந்து கோபித்துக் கொண்டார். அங்கேயே நான் அவரிடம் மன்னிப்பு கேட்டாலும் 'பிடித்த எழுத்தாளர் ஒருவரை புண்படுத்தி விட்டோமே' என்று இது பெரிய குற்றவுணர்வாகவே என்னுள் அமிழ்ந்து கிடந்தது. அவரை நேரில் சந்திக்கும் போது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். புத்தகக் காட்சியில் சில முறை அவரை பார்க்க நேர்ந்தாலும் என்ன தயக்கத்தினாலோ சந்திப்பதை தவிர்த்து விட்டேன். பிறகு டோண்டு அவர்களின் பதிவின் மூலம் அவர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அறிந்தேன். சமீபத்திய புத்தகக் காட்சியில் அந்த பிரியமான மனிதரைச்  சந்தித்தேன். இணையம் அப்போது அவருக்கு புதிது என்பதால் 'என்னவோ ஏதோ' என்று கருதி விட்டதாகவும் எனவேதான் அவ்வாறு கடுமையாக பின்னூட்டமிட்டதாகவும் இப்போது யோசித்துப் பார்க்கையில் அது சங்கடத்தை அளிப்பதாகவும் என்னை ஆற்றுப்படுத்தினார்).

()
 
இப்போது 2011- ஏப்ரலில் மறுபடியும் அதே போன்ற நாசகார எண்ணம். 

'இணையத்திலிருந்து விலகுகிறேன்' என்றொரு அரதப்பழசான மொக்கை ஐடியாவை பஸ்ஸில் மெலிதாக நூல் விட்டு பார்த்தேன். ஆனால் அது சிறிது எடுபடும் என்று தோன்றியது. ஏனெனில் அதற்கு முன்புதான் மிக தற்செயலாக அதற்குத் தோதானதொரு பதிவை buzz-ல் எழுதியிருந்தேன். இணையத்தில் வெளிப்படும் வன்மம், காழ்ப்பு மற்றும் ஆபாசமான மொழியில் வெளிப்படும் உரையாடல் குறித்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் இங்கும் அது குறித்து பகிர உத்தேசம்.  எந்தவொரு உருப்படியான விவாதத்தையும உரையாடலையும் கைப்பற்றி அதை பாழ்படுத்துவது, உரையாடல் பொதுவானதொன்றைப் பற்றி இருந்தாலும் அதை தனிநபர் அவதூறுகளை நோக்கி இழுத்துச் செல்வது, மறைமுகமாகவும் சமயங்களில் நேரடியான ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவது என்று இணையத்தில் சிலர் செயல்படுகிறார்கள். எண்ணிக்கையில் இவர்கள் சொற்பமாக இருந்தாலும்  பொதுவெளியில் ஒட்டுமொத்த இணையத்தின் முகமே கோரமாகவும் ஆபாசமாகவும் தெரிவதற்கு இவர்களே காரணம்.

இதில் என்னை ஆச்சரியப்படுத்தும், எரிச்சலூட்டும் விஷயம் என்னவெனில், உள்ளுர் பிரச்சினையிலிருந்து சர்வதேச பிரச்சினை வரை அனைத்தையும் 'தார்மீக அறத்துடனும் ஆவேசத்துடனும்' அலசும் பதிவர்களும் டிவிட்டர்களும், இந்த ஆபாச வியாதிகளை கண்டும் காணாமல் போவதுதான். 'நமக்கேன் வம்பு' என்று ஒரு மெலிதான எதிர்ப்பை கூட பதிவு செய்யாமல் நழுவுகிறார்கள். உருப்படியாக எழுதும், உரையாட விரும்புபவர்கள் கூட இந்த ஆபாச வியாதிகளினால் தங்களின் செயற்பாட்டை சுருக்கிக் கொள்கிறார்கள் அல்லது காணாமற் போகிறார்கள்.

இணையச் செயற்பாட்டை ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்துச் செல்ல விரும்புவர்கள் இவர்களை அடையாளங்கண்டு முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும், தேவையெனில் இவர்களின் வெற்றுச் சவடால்களுக்கு அஞ்சாமல் தம்முடைய எதிர்ப்பை நாகரிகமாக முன்வைக்க வேண்டும் என்பதையும் அந்த buzz-ல் தெரிவித்திருந்தேன். இதற்குப் பொருள், ஆபாச மொழிகளிலிருந்து விலக்கி என்னை 'நாகரிகமானவனாக' முன்னிறுத்திக் கொள்ளும் முயற்சியல்ல. வடசென்னையில் பிறந்து வளர்ந்த நான் முழுக்க புழங்குவதே இதையும் விட மோசமான ஆபாச மொழிகளின் இடையில்தான். (ஆனால் அவர்கள் பெரும்பாலும் கல்வியறிவும் நுண்ணுர்வும் இல்லாதவர்கள் என்பதால் பரிதாபத்துக்குரியவர்கள்.) அந்தப் பாண்டியத்துடன் துணை கொண்டு மேற்குறிப்பிட்ட ஆபாசவியாதிகளுடன் சரிக்குச் சரியாக மல்லுக்கட்டி சாக்கடையில் சஙகமமாக முடியும். ஆனால் அது இந்த ஆபாசக் கலாசாரத்திற்கு துணை போவதாகவே அமையும்.

மேலும் சமயங்களில் ஆபாச மொழி எனக் கருதப்படுபனவற்றை அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக அல்லாமல் ஒரு வலிமையான ஆயுதமாகக் கூட பயன்படுத்த முடியும். சமீபத்தில் சென்னை சங்கமம் சார்பில் நடைபெற்ற திரைப்பட கருத்தரங்கில் பேசிய எடிட்டர் லெனின் அரசின் சில அபத்தமான விதிகளை கசப்புடன் பேசிக் கொண்டிருந்தவர், அதன் தொடர்ச்சியாக ரெளத்திரத்துடன்  'தூ'.... என்று சொல்லிச் சென்றார். அவர் பேசியிருந்ததின் தொடர்ச்சியோடு யோசிக்கும போது அது மிக இயல்பாகவும் கம்பீரமான வசவாகவும் இருந்தது. (நான் கடவுள் திரைப்படத்தில் விக்ரமாதித்யன் பேசும் வசனம் போல).

மறுபடியும் சற்று டிராக் மாறியதற்கு மன்னிக்கவும்.

இந்த சர்ச்சை தொடர்பாக  எழுதின பஸ்ஸிற்கு பதிவிற்கு அடுத்து 'இணைய விலகல்' அறிவிப்பை செய்யும் யோசனை தற்செயலாக அமைந்ததால் அது பொருத்தமாக இருக்கும் என்று யோசனை செய்தேன். ஆனால் முதலில்  சில நண்பர்கள்  வருத்தம் தெரிவித்தாலும் சில எமகாதக நண்பாகள் இந்த விளையாட்டை எளிதில் கண்டுபிடித்து விட்டனர். எனவே இதை சற்று தீவிரப்படுத்தி வலைப்பதிவிலும் அறிவிக்கலாம் என்று தோன்றியது.

எல்லா விளையாட்டிற்கும் விதிகள் உண்டு. கண்ணாமூச்சி விளையாடுகிறவன் கூட கண்டுபிடிக்கப்பட்டவுடன் தோல்வியை ஒப்புக் கொள்வதே நியாயம். பஸ்ஸில் இந்த முயற்சி தோல்வியடைந்தவுடனே நான் இதை நிறுத்தியிருக்க வேண்டும். விதிகளை மீறுவதுதான் இயல்பிலேயே ஊறிப்போய் விட்டதே. அந்த தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் அதையே இன்னும் தீவிரமான பாவனையுடன் வலைப்பதிவில் இட்டேன்.

அதுவரை இது விளையாட்டு என்று யூகித்துக் கொண்டிருந்தவர்கள் உட்பட பல நண்பர்கள் தொலைபேசியில் அழைத்தார்கள். தனிமடல் அனுப்பினார்கள். பின்னூட்டங்களில் தங்களின் அன்பையும் ஆதரவையும தெரிவித்தார்கள். நெகிழ்ந்து போனேன். உண்மையில் இம்மாதிரியான விலகல் முடிவை சிந்திக்கும் ஒரு சூழல சில மாதங்களுக்கு முன் ஏற்பட்டது. அப்போது ஏறக்குறைய இதே நண்பர்கள் ஆதரவாகவும் அக்கறையாகவும் என் பக்கத்தில் நின்றார்கள். இம்மாதிரியான விலகல்கள் ஆபாசவியாதிகளை ஊக்கப்படுத்துமே ஒழிய பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தாது என்பதை உணரச் செய்தார்கள். அவர்களை விளையாட்டு என்ற பெயரில் ஏமாற்றுகிறோமே என்று குற்றவுணர்வே ஏற்பட்டு விட்டது.

ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியுடன் கூடிய நன்றியும், விளையாட்டுத்தனமாக ஏமாற்றியதற்காக மன்னிப்பும். விலகல் அறிவிப்பைக் கண்டவுடன் பட்டாசு வெடித்து கொண்டாடியவர்களுக்கும் நன்றி, தங்களின் அற்பத்தனங்களை தாங்களே வெளிப்படுத்திக் கொண்டு அதன் மூலம் தங்களை அடையாளங் காட்டிக் கொண்டமையால்.

இந்தப் பதிவின் மூலம் சுருக்கமாகச் சொல்ல வருவது என்னவென்றால் இணையத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது ஏப்ரல் 1-க்கான விளையாட்டே தவிர உண்மையில்லை.

இனி இந்தத் தளத்தில் இப்படியான விளையாட்டுக்களை வருங்காலத்தில் நிகழ்த்தும் எண்ணமோ திட்டமோ எதுவுமில்லை.

(இப்படி சீரியஸா சொன்னாலும் நீங்க நம்பவா போறீங்க)

டிஸ்கி 1-க்கான விளக்கம்:

சென்ஷி என்றொரு பதிவர். இலக்கிய ஆர்வலர். குட்டி உவேசா போல் சிறந்த சிறுகதைளாக கருதப்படுபவற்றை தன் முய்றசியிலும் நண்பர்களின் மூலமாகவும் தேடித் தேடிப் பெற்று மெனக்கெட்டு தட்டச்சி இணையத்தில் பதிவு செய்பவர். பஸ்ஸில் என்னிடம் தொடர்ந்து உரையாடுபவர். விலகுவதாக அறிவித்ததும், என்ன செய்திருக்க வேண்டும். ஒருவேளை இவன் உண்மையாகவே விலகப் போகிறானோ என்கிற benefit of doubt-யாவது அளித்து ஆறுதலாக ஏதாவது சொல்லியிருக்க வேண்டுமா, இல்லையா?.

எக்பர்ட் சச்சிதானந்தத்தின் 'நுகம்' என்னும் சிறுகதையை இவரின் சேகரிப்பிற்காக ஸ்கேன் செய்து அனுப்புவதாகச் சொல்லியிருந்தேன். விலகும் சமயத்தில் ஒரு பாவனைக்காவது ஆறுதலாக ஏதாவது சொல்வதை விட்டு விட்டு 'அந்தச் சிறுகதை இன்னும் வரவில்லை' என்று கேட்டு விட்டார். இந்த ஏப்ரல் 1 விளையாட்டு நிகழ்வில் என் மனதை அதிகம் பாதிப்படையச் செய்தது சென்ஷியின் மறுமொழிதான். சென்ஷி, உங்களின் இலக்கிய ஆர்வத்திற்கு ஓர் எல்லையே இல்லையா? :)))
 
suresh kannan

Friday, April 01, 2011

விடைபெறுகிறேன் நண்பர்களே! நன்றி


இணையத்தில் இயங்குவதென்பது மனஉளைச்சல்களாலும் கசப்புகளாலும் நிரம்பி வழிய ஆரம்பித்து விட்ட சமகால சூழலில் அதைச் சகித்துக் கொண்டு தொடர்வது இனியும் என்னால் சாத்தியப்படவில்லை. இனி இணையத்தில், பதிவோ, பஸ்ஸோ... இன்ன பிற எந்தவொரு வடிவத்திலும் என் எழுத்து வராது.

இதுவரை என் வலைப்பதிவை வாசித்து பின்னூட்டமிட்டு ஆதரவு தந்த நண்பர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி.

(இது நாள் வரை பழகிய நட்புகளிடம் சொல்லி விட்டு செல்வதே நன்று என்று தோன்றியதால் இந்த அறிவிப்பு. தயவு செய்து அனுதாப / திரும்ப வா - பின்னூட்டங்களையோ இட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவற்றிற்கு பதிலளிக்கும் மனநிலையிலும் நான் இல்லை. புரிதலுக்கு நன்றி).


(POST SCRIPT: இந்த அறிவிப்பை நேற்று கூகுள் buzz-ல் வெளியிட்ட போது இது ஏப்ரல் 1-க்கான விளையாட்டு என்று சில நண்பர்கள் கருதி விட்டனர். இந்த முடிவை நான் எடுத்ததும் ஏப்ரல் 1 நெருங்கியதும் மிக தற்செயலே. அவர்களின் பின்னூட்டங்களைக் கண்ட பிறகுதான் எனக்கே அது உறைத்தது. இது அவ்வாறு அல்ல என்பதை உறுதிப்படுத்துவதற்காக பதிவிலும் மீண்டும் வெளியிடுகிறேன்.)


suresh kannan