Sunday, July 28, 2013

Cross My Heart - பிரெஞ்சு திரைப்படம் - சிறுவர்களின் அகவுலகம்La fracture du myocarde - பிரெஞ்சு திரைப்படம் சிறுவர்களுக்கிடையே நிலவும் அற்புதமான தோழமையைப் பற்றி பேசுகிறது.

பெரியவர்கள், தாமே சிறுவர்களின் உலகை கடந்து வந்தவர்கள்தாம் என்றாலும் கூட கடந்து வந்த பிறகு சிறுவர்களின் உலகை புரிந்து கொள்ளவோ கணிக்கவோ தவறி விடுகிறார்கள். அவர்களுக்குள் நிரம்பியிருக்கும் அனுபவம், சிறுவர்களின் உலகிலுள்ள அறியாமையுடன் கூடிய களங்கமற்ற தன்மையை புரிந்து கொள்ள விடாமல் தடுக்கிறது. மாறாக சிறுவர்கள் பெரியவர்களை எத்தனை அற்புதமாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய ஆச்சரியமாகவும் இருக்கிறது.

தகப்பன் யார் என்று அறியாச் சிறுவன் மார்ட்டின். படத்தின் துவக்கத்திலேயே அவனுடைய தாய் இறந்து விடுகிறார். தாம் அநாதை என்பது வெளிப்பட்டு விட்டால் அதற்குரிய விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுவோம் என்பதால் வெளியுலகத்திற்கு தெரிவிக்காமலேயே இருக்கிறான். இதை அறிந்து கொள்ளும் அவனுடைய பள்ளி நண்பர்கள் பிணத்தை யாருக்கும் தெரியாமல புதைத்து விட்டு மார்ட்டினுக்கு மிக ஆதரவாக இருக்கிறார்கள். அவனுடைய தாய் இறந்து போனது வெளியுலகிற்கு தெரியாமல் மிக சாமர்த்தியமாக சமாளிக்கிறார்கள். அதுவரை பள்ளியில் மந்தமாக இருந்த மார்ட்டின் அதிக மதிப்பெண் பெற உதவுகிறார்கள். ஆனால் படத்தின் இறுதியில் உண்மை வெளிப்பட்டு மார்ட்டின் ஆதரவற்றோர் பள்ளியில் சேர்க்கப்பட்டு விடுகிறான். நண்பர்கள் அவனை சந்தித்து விட்டு சோகத்துடன் திரும்புவதுடன் படம் நிறைகிறது.

Cross My Heart எனும் திரைப்படத்தைக் காணும் போது இது ஒரு திரைப்படம் எனும் உணர்வே நமக்கு வருவதில்லை. அந்த அளவிற்கு நேர்த்தியான இயக்கமும் சிறுவர்களின் பங்களிப்பும் இப்படத்தில் நிரம்பியுள்ளது. மார்ட்டினாக நடித்திருக்கும் சிறுவன் இறுதிவரை தம்முடைய இறுக்கமான மனநிலையை கைவிடுவதில்லை. இப்படியாக ஒவ்வொரு நண்பர்களுக்கும் உள்ள தனித்தன்மை மிக கச்சிதமாக உருவாக்கப்பட்டு அதே நிலையில் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்குள் உள்ள நட்பு, ரகசியமான காதல், திருட்டுத்தனங்கள், அந்த வயதிற்கேயுரிய பிரத்யேக குணங்கள் போன்றவை மிகத் திறமையாக பதிவாக்கப்பட்டிருக்கின்றன.

குழந்தைகள் நம்மை மிகவும் விரும்புகிறார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது ஒரளவில் உண்மை என்றாலும் மறுபுறம் நம்மை எந்த அளவிற்கு வெறுக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை அல்லது புரிந்து கொள்ள விரும்புவதில்லை. கீழே இறங்கி அவர்களின் உலகிற்குள் உள்ளே நுழையாமல் இந்த மனத்தடையை தாண்டிவர முடியாது என்பதும் இந்தத் திரைப்படத்தில் அற்புதமாக பதிவாகியிருக்கிறது. 


 பொதுவாகவே பிரெஞ்சுத் திரைப்படங்கள், சிறுவர்களின் அகவுலகை மிக நுட்பமாகவும நேர்த்தியாகவும் பதிவாக்குகின்றன. The 400 Blows, The kid with a Bike  போன்ற திரைப்படங்கள் உடனடி நினைவுக்கு வருகின்றன. நம்முடைய தமிழ்த் திரைப்படங்களில் செயற்கையான புத்திசாலித்தனத்துடன் உருவாக்கப்படும், பெரியவர்களை மிமிக்ரி செய்யும் குழந்தைகளை இதில் காண முடிவதில்லை. மாறாக அவர்களின் வயதுக்கேயுரிய யதார்த்தமான மனநிலையுடன்தான் இயங்குகிறார்கள். குடும்பம், பள்ளி போன்ற நிறுவனங்கள் எத்தனை அபத்தமான சட்டதிட்டங்களை போட்டிருக்கின்றன என்பதும் சிறுவர்கள் எத்தனை புத்திசாலித்தனத்துடன் தங்களின் வழியில் அதை அணுகுகிறார்கள் என்பதையும் இத்திரைப்படத்தில் காண முடிகிறது.

யாருமே அறியாமல் எப்படி சிறுவர்களால் ஒரு பிணத்தை புதைக்க முடியும் என்கிற 'பெரியவர்களின்' கேள்விகள் எழுப்புகிற நம்பகத்தன்மையைத் தவிர இத்திரைப்படம் மிக இயல்பாகவும் யதார்த்தமாகவும் இயங்குகிறது.

இறுதிக் காட்சியில் ஆதரவற்றோர் பள்ளியில் சேர்க்கப்படும் மார்ட்டின் தன் நண்பர்களிடம் சொல்லும் ஒரு வசனம் அற்புதமானது. "நான் adult ஆகி விட்ட பிறகு சுதந்திரமாக இருப்பேன். அப்போது சந்திப்போம். ஆனால் அப்போது நாம் இதே மாதிரி இருப்போமா என்று தெரியாது". ஆம். பெரியவர்களாகி விட்ட பிறகு  நட்பு உட்பட, எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காத எந்தவொரு செயலையும் நாம் பெரும்பாலும் செய்வதில்லை.

suresh kannan

Wednesday, July 24, 2013

பொதுச் சமூகமும் திரைப்பட ரசனையும்

அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுவது என்பது ஒன்று. இன்னொன்று பொதுச் சமூகத்தை நோக்கி உண்மையைப் பேசுவது. பொதுக்கூட்டங்களிலும் பட்டிமன்றங்களிலும் பேசுபவர்களைக் கவனித்தால் கைத்தட்டலுக்காகவும் ஆதரவிற்காகவும்,  பெரும்பான்மைச் சமூகத்தின் மனநிலையை பகைத்துக் கொள்ள விரும்பாமல் அதற்கு ஆதரவாகத்தான் பேசுவார்கள். அப்படியே எதிர்க்கருத்துக்களை வைக்க விரும்பினாலும் பெரும்பான்மைக்கு வலிக்காமல் நாசூக்காகத்தான் பேசுவார்கள். மாறாக பொதுச் சமூகத்திற்கு உறைக்கிறாற் போல் அவர்களின் முன்னால் உண்மையை உடைத்து பேச அசாத்தியமான துணிச்சலும் நெஞ்சுறுதியும் வேண்டும். சிலவற்றோடு முரண்பட்டாலும் பெரியார் போன்ற ஆளுமையை உதாரணமாகச் சொல்லலாம்.

எதற்குச் சொல்ல வருகிறேன்.. என்றால் தங்கமீன்கள் திரைப்பட வெளியீட்டின் தாமதம் பற்றிய சில பதிவுகளை வாசித்த போது அதன் வணிகம், தயாரிப்பாளர்களின் அதீத லாப மோகம்,  திரையரங்கு கிடைப்பதின் பின்னுள்ள சிக்கல்கள் ஆகியவற்றைப் பற்றிதான் பலரும் பேசுகிறார்களே தவிர, மக்கள் ரசனையின் பங்கு யாரும் பேசுவதில்லை. உண்மையில் இதுதான் பிரச்சினையின் ஆணிவேர். நல்ல சினிமாவின் மீது அக்கறையுள்ள திரைத்துறையில் பணியாற்றுபவர்களே.. பொதுச் சமூகத்தை பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை. 'நல்ல படம் வந்தாதான் மக்கள் பாக்கத்தான் செய்யறாங்க" இயக்குநர் செல்வராகவன் சமீபத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியைப் பாருங்கள்..மற்ற எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு விமர்சிக்கும் அவர்... 'மக்களை நான் குறை சொல்ல மாட்டேன்'' என்கிறார்.என்னதான் சினிமாவின் தரம் பற்றி பேசினாலும் அது மிகுந்த பொருட்செலவை கோரி வரும் நிற்கும் வடிவம் என்பதால் அதன் பின்னுள்ள வணிகத்தை புறந்தள்ளவே முடியாது. வணிகர்கள் லாபத்தைத்தான் கோருவார்கள். மிக அடிப்படையான எளிய உண்மை இதுவே. வணிகர்களாகவும் இருந்து கொண்டு சினிமாவையும் விரும்பும் அரிதான சிலரினால்தான் சில நல்ல முயற்சிகளாவது வெளிவருகிறது. ஆண்டிற்கு இத்தனை திரைப்படங்கள் வெளிவந்தாலும் சர்வதேச திரைப்படங்களோடு ஒப்பிடக்கூடிய.... அது கூட வேண்டாம் .. அதை நெருங்கக் கூடிய ஒரு திரைப்படத்தைக் கூட நம்மால் இதுவரை உருவாக்க முடியவில்லை என்பது கசப்பான உண்மை.

இதற்கான தீர்வு நம்மிடம்தான் இருக்கிறது. மிகக் கறாராக நல்ல திரைப்படங்களை மாத்திரமே திரையரங்கில் சென்று பார்ப்பது என்கிற தெளிவான தீர்மானம். நல்ல திரைப்படம் என்றவுடனே அது மாற்று சினிமா என்று மாத்திரமே பொருள் கொள்ள தேவையில்லை. வெகுஜன  திரைப்படமென்றாலும் அது எவ்வகையிலாவது இதுவரை வந்த திரைப்படங்களிலிருந்து வேறுபட்டிருக்கிறதா என்று பார்ப்பது நல்லது. இந்த மனநிலை மெதுவாக வளர்ந்து பரவலாக வளரத் துவங்கினால் அதன் மாற்றம், திரைப்பட உருவாக்கத்திலும் எதிரொலிக்கும். ஹீரோக்கள் மீதுள்ள அபிமானத்தினாலும் சந்தைப்படுத்துதலில் உள்ள சாமர்த்தியத்திலும் மயங்கி  அடித்துப்பிடித்து முதல் சில நாட்களிலேயே ஒரே மாதிரியாக உருவாக்கப்படும் வணிக மசாலாக்களை பார்ப்பதினால் மறைமுகமாக நல்ல சினிமாக்களுக்கு எதிராக நாமே இருக்கிறோம் என்பது புரியும்.

இதனால்தான் திரைப்பட ரசனை என்றொரு பாடத்தை கல்வித்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று இயக்குநர் பாலுமகேந்திரா தனியாளாக குரல் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். நிச்சயம் அது அதிகாரத்தின் காதுகளில் விழாது. மக்களை ஏதாவது ஒரு போதையிலேயே வைத்திருப்பதுதான் அதன் நோக்கமாக இருக்கும்.

சிங்கத்தை வெற்றிகரமாக கர்ஜிக்க வைத்து விட்டோம்.. இதோ தலைவன் வரப் போகிறது. என்ன செய்யப் போகிறோம்...?

suresh kannan

Sunday, July 14, 2013

Carnage - படுகொலை - ரோமன் பொலான்ஸ்கியின் திரைப்படம். (2011)மனிதன் என்கிற சமூக விலங்கு கூடிவாழ்வதில் உள்ள செளகரியங்களுக்காக அன்பு, பாசம், காதல் போன்ற கற்பிதங்களை ஊதிப் பெருக்கிக் கொண்டாலும் ஒவ்வொரு மனிதனும் அவர்களுக்கேயுரிய வன்மமும் சுயநலமும் கூடிய தனித் தனி தீவே. இந்த கசப்பான உண்மையை மெலிதான நகைச்சுவையுடன் நிர்வாணமாகக் காட்டுகிறது பொலான்ஸ்கியின் திரைப்படம்.

'Big Boss' என்கிற ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுண்டு.  சில கனவான்களை ஓர் அறையில் அடைத்து அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து அதற்கேற்ப மதிப்பிடுவது மாதிரியான நிகழ்ச்சி. இப்படி ஒவ்வொரு குடும்பத்தையும் நேரடியாக கவனிக்க முடிந்தால், குடும்பம் என்கிற நிறுவனம் எத்தனை போலித்தனங்களைக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடியும்.

யாஸ்மினா ரேஸா என்கிற பிரெஞ்சு நாடக ஆசிரியை எழுதிய நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாகியிருப்பதால், பெரும்பாலும் உரையாடலைக் கொண்டே அமைந்திருக்கிறது. படம் முழுவதுமே ஒரு வீட்டின் உட்புறத்தில் நிகழ்ந்தாலும் அதற்கான சலிப்பு ஏதும் ஏற்படாதவாறு திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள் இயக்குநரும் நாடகாசிரியையும்.

இரண்டு மரங்களுக்கிடையே உள்ள காமிரா கோணத்தில் சிறுவர் குழுவில் இரு சிறுவர்கள் மோதிக் கொள்ளும் மெளனமான லாங்ஷாட் காட்சிகளோடு படம் துவங்குகிறது. அதில் ஒருவன் இன்னொரு சிறுவனை கட்டையால் முகத்தில் அடித்து விடுகிறான்.  (இந்தக் காட்சிகளின் பின்னணி இசையும் அது முடியும் இடமும் அத்தனை அற்புதம்). கட்.

அடித்த சிறுவனின் பெற்றோர்கள் (Christoph Waltz  மற்றும் Kate Winslet ) அடிபட்ட சிறுவனின் பெற்றோர்களை (John C. Reilly மற்றும் Jodie Foster) இது குறித்து உரையாடுவதற்காக அவர்களின் வீட்டுக்கு காணச் செல்கிறார்கள். இந்த நால்வரின் உரையாடல்கள்தான் படம் முழுவதுமே. கலைடாஸ்கோப் வழி காட்சிகள் போல அவர்களின் குணாதிசயங்கள், கசப்புகள், சுயநலங்கள் போன்றவை அவர்களின் இன்டலெக்சுவல் வார்த்தைகளின் பசப்புகளையும் மீறி பொதுவில் வந்து விழுகின்றன. உரையாடலின் விவாதத்தில், தத்தம் மகன்கள் குற்றஞ்சாட்டப்படும் போது சுயநலமுள்ள பெற்றோராகவும், ஆண்களுக்கு எதிராக பெண்களும், பெண்களுக்கு எதிரான ஆண்களின் கூட்டணியாக மிக இயல்பாக பொருந்திக் கொள்கிறார்கள்.

நான்கு பேருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் கிறஸ்டோப் வால்ட்ஸ், ஒரு குயுக்தியான வழக்கறிஞரர் சினிக் ஆக வருகிறார்.  உரையாடலின் இடையே நமக்கே எரிச்சல் ஏற்படும்படி கைபேசியில் இடைமறி்த்து பேசிக் கொண்டேயிருக்கிறார். பெண்கள் வெளியே இருந்தாலும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். மாறாக ஆண்கள் வீட்டிற்குள் இருந்தாலும் வெளியுலகிலேயே சஞ்சரிக்கிறார்கள் என்பது பூடக நகைச்சுவையுடன் வெளிப்படுகிறது. ஒரு கட்டத்தில் இவரின மனைவி எரிச்சலடைந்து கைபேசியை பிடுங்கி நீருக்குள் போட, இரண்டு ஆண்களும் பதற, இரண்டு பெண்களும் விடுதலையான தங்களின் மகிழ்ச்சியை வெறித்தனமான சிரிப்பில் வெளிப்படுத்துவது மிக முக்கியமான காட்சி.

கேத் வின்ஸ்லேட், மது அருந்துவதற்கு முன்பும் பின்புமாக நடிப்பில் காட்டியிருக்கும் வித்தியாசம் சிறப்பானது. 12 Angry men, திரைப்படத்தை நினைவுப்படுத்தும் திரைக்கதையென்றாலும் மனிதர்கள் சிக்கலான சூழலில் இயங்கும் சில விநோதங்கள், பொலான்ஸ்கியின் நுட்பமான இயக்கத்தில் வெளிப்பட்டிருக்கின்றன. உள்ளூர் சினிமா ரசிகர்களுக்காக தோராயமாக உதாரணம் சொன்னால், மணிரத்னத்தின் 'அலைபாயுதே' திரைப்படத்தில் மாதவனின் தந்தையான பிரமிட் நடராஜன், பெண் பார்க்க ஷாலினியின் வீட்டிற்கு வரும் போது இரு பெற்றோர்களின் உரையாடல்களைக் கவனித்திருக்கிறீர்களா? (இம்ப்பிரியாரிட்டி/சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்). .இந்தப்படம் முழுவதுமே அதுதான்.

படம் முழுவதும் நிகழும் நாகரிகமான, தோழமையான, கசப்பான, வன்மமான உரையாடல்களை, இறுதிக் காட்சி ஒரு கேலிக்கூத்தாக்குவதுதான் பெரியதொரு நகைச்சுவை முரண்.

suresh kannan