Wednesday, January 23, 2008

டைம்ஸ் ஆ·ப் இந்தியா - சுஜாதா - இலக்கியச் சிறப்பிதழ்

பாரம்பரியம் மிக்க நாளிதழான Times of India, (நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு கொண்டிருந்த இதன் 'சென்னை பதிப்பு' வரும் ஏப்ரலில் இருந்து வரும் என்கிறார்கள்) தமிழில் எழுத்தாளர் சுஜாதாவை தொகுப்பாசிரியராகக் கொண்டு இலக்கியச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு 'இந்தியா டுடே'வும் வருடத்துக்கு ஒரு முறை இவ்வாறான இலக்கியச் சிறப்பிதழ்களை வெளியிட்டுக் கொண்டிருந்தது. அரசாங்கக் காகிதங்களில் அச்சடிக்கப்பட்ட சோகையான தோற்றத்தில் ஆனால் கனமான உள்ளடக்கங்களைக் கொண்ட சிற்றிதழ்களுக்கு மத்தியில் பளபளப்பான வண்ணமயமான இந்தியாடுடே இதழ்கள், அசட்டு சிவப்பு சாயம் பூசின உள்ளூர் ரிகார்டு டான்சர்களைக் கண்டு நொந்திருந்த ஒருவன், யானா குப்தாவை அருகில் பார்த்தமாதிரி அந்தச் சமயத்தில் பிரமிப்பை ஏற்படுத்தின. பிற்பாடு காலச்சுவடு, உயிர்மை போன்ற இடைநிலை இதழ்கள் இந்த இடைவெளியை நிரப்பின.

டைம்ஸின் வடிவமைப்பும் ஏறக்குறைய இந்தியாடுடே பதிப்புகளை ஒத்திருக்கிறது. விலைதான் சற்று அதிகம். ரூ.100/-. (பக்கத்திற்கு பக்கம் காணப்படுகிற வண்ணவிளம்பரங்களின் மூலம் ஈட்டியிருக்கும் வருவாயின் மூலம் இதழின் விலையை சற்று குறைத்திருக்கலாம் என்று எனக்குப் படுகிறது) ஆனால் இந்தியாடுடேவின் விலை ஏறக்குறைய ரூ.25/-ல் இருந்தது.

Photobucket

'என் எழுத்து வாழ்க்கையில் இதையும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதுகிறேன்' என்கிற தொகுப்பாளர் சுஜாதாவின் முன்னுரை (தொகுப்பில் உதவி: மனுஷ்யபுத்திரன்) 'தமிழுக்கு 2008 ஒரு நல்ல காலம்' என்று ஆருடம் கூறுகிறது.

சிறுகதைகளின் வரிசையில் சுஜாதா, நாஞ்சில் நாடன், உமா மகேஸ்வரி, எஸ்.ராமகிருஷ்ணன், தேசிகன் (அட!), சுரேஷ் குமார இந்திரஜித், வண்ணதாசன், பிரபஞ்சன், அசோகமித்திரன், இமையம், இந்திரா பார்த்தசாரதி, மனோஜ், ஆர்.உண்ணி (மலையாளம்; தமிழில்: சுகுமாரன்), யுவன் சந்திசேகர் ஆகியோர் பங்கேற்று இருக்கின்றனர்.

கட்டுரைகளின் வரிசையில் பாலுமகேந்திரா, வாஸந்தி, அ.முத்துலிங்கம், ஷாஜி, ஜெயமோகன், செழியன், கே.எஸ்.குமார், சாருநிவேதிதா, குமார் ராம நாதன், டிராட்ஸ்கி மருது, சுகுமாரன், எஸ்.கே.குமார் ஆகியோர்....

ஞானக்கூத்தன், வைரமுத்து, (கவிப்பேரரசு என்று குறிப்பிடாவிட்டால் தப்பாகிவிடுமோ?), .நா.முத்துக்குமார், கலாப்ரியா, அழகுநிலா, சுகுமாரன், மு.சுயம்புலிங்கம், எம்.யுவன், மனுஷ்யபுத்திரன், கனிமொழி, ரஞ்சனி, தேவதேவன், சங்கர ராமசுப்பிரமணியன், தமிழச்சி, செல்வி, வா.மணிகண்டன் ஆகியோரின் கவிதைகள்.

()

வெகுஜன பத்திரிகைகள் ஏற்படுத்தி வைத்திருந்த மிகப்பெரிய வெற்றிடத்தை நிரப்பும் நோக்கத்துடன் பல இலக்கிய கோட்பாடுகளை/சர்வதேச எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி கனமான உள்ளடக்கங்களோடும் பல பேரின் தியாகங்களோடும் வெளியான பல சிற்றிதழ்கள் பெரும்பாலும் நின்று போய் அவற்றின் இடத்தை இடைநிலை இதழ்கள் பிடித்துக் கொண்டன. இவ்வாறான சிற்றிதழ்கள்/இடைநிலை இதழ்கள் ஆகியவற்றில் பங்கேற்கும் படைப்பாளர்களை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் போது சில பெயர்களே திரும்பத்திரும்ப தோன்றிக் கொண்டிருப்பதை பார்க்கிறேன். ஒரு புது இதழை வாங்கிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு சில பிரபல பெயர்களை யூகித்தால் கட்டாயம் அவைகளில் பல இடம் பெற்றிருக்கும். இந்த பத்திருபது பேர்களை விட்டால் நவீன இலக்கியப் பரப்பில் யாருக்குமே இடமில்லையோ என்கிற பிரமையை இந்த இதழ்கள் எனக்கு ஏற்படுத்தியிருக்கின்றன. அல்லது இதழாசிரியர்கள் வியாபார நோக்கத்துடன் பிரபல இலக்கியவாதிகளையே தொடர்ந்து பயன்படுத்திக் கொள்கிறார்களா என்றும் தெரியவில்லை. புதுரத்தம் பாய வேண்டிய தருணமிது என்பது மட்டும் தெளிவாகிறது.

ஆறுதலாக இந்தச் சிறப்பிதழில் சில புதுக்குரல்களை கேட்க முடிகிறது.

()

வாங்கின குளிர்ச்சியோடு சில படைப்புகளை உடனே படித்துப் பார்த்தேன். அவற்றைப் பற்றி:

'ஒரு என்.ஆர்.ஐ. திருமண ஏற்பாடு' என்கிற சுஜாதாவின் சிறுகதையோடு இதழ் துவங்குகிறது. சுஜாதாவின் சம்பிதாயமான, இறுதியில் வாசகனுக்கு செயற்கையான அதிர்ச்சியை ஏற்படுத்துவதான பாவனையில் எழுதப்பட்ட வழக்கமான சிறுகதை. நகரம், ·பிலிமோத்ஸவ்.... என்று பல ஆச்சரியங்களை நிகழ்த்தின சுஜாதாவின் சமீப கால படைப்புகள் ஏன் இப்படி நீர்த்துப் போயிருக்கின்றன என்று தெரியவில்லை.

My dear Sujatha, சிறிது காலத்திற்கு நீங்கள் சிறுகதை எழுதுவதை நிறுத்தி வைக்கலாம்.

'சுஜாதா' கேட்டுவிட்டாரே, சரி எழுதிக் கொடுத்துவிடுவோம் என்கிற பாலுமகேந்திராவின் சிறிய கட்டுரை.

சிறுகதை+கட்டுரை ஆகிய இரண்டு வடிவங்களையும் இணைத்தாற் போல் எழுதப்பட்ட நாஞ்சில் நாடனின் அற்புதமான சிறுகதை (கோம்பை). கதையின் சில வரிகளை உருவி விட்டால் நாஞ்சில் நாட்டு வழக்குடன் மீன்களைப் பற்றியும், மீன் விற்பவர்களைப் பற்றியுமான ஒரு ஆய்வுக்கட்டுரை போலிருக்கிறது. சிறுகதை என்கிற வடிவிலும் மிக அழகாகப் பொருந்தியிருக்கிறது.

'கவிதை எழுதுவதற்கு லைசன்ஸ்' என்கிற அ.முத்துலிங்கத்தின் கட்டுரை, புலம் பெயர் இலக்கியம் என்று தனியாக வகைமைப்படுத்துவதான அபத்தத்தின் காரணங்களை ஆராய்கிறது. (கட்டுரையின் ஒரிடத்தில் குறிப்பிட்டிருப்பது போல உரிமம் பெற்றவர்கள்தான் கவிதை எழுத முடியும் என்கிற சூழல் எழுந்தால் தமிழகத்தில் கவிஞர்களின் சதவீதம் எத்தனை குறையும் என்பதை கற்பனை செய்து பார்க்க சுவாரசியமாயிருக்கிறது)

இளையராஜாவைப் பற்றி இசை விமர்சகர் ஷாஜி எழுதியிருக்கும் ஒரு கட்டுரை. ராஜாவைப் பற்றி பெரும்பாலும் பரவலாக அறிந்திருக்கிற தகவல்களைக் கொண்டு இந்தச் சிறப்பிதழ் கட்டுரையை எழுத ஷாஜி தேவையில்லை என்றே எனக்குப் படுகிறது. தமிழகம் பெரிதும் அறிந்திராத திரையிசைப் பாடகர்கள்/பாடல்கள் ஆகியவற்றைப் பற்றின நுண்ணிய தகவல்கள் கொண்ட இவரின் கட்டுரைகளை உயிர்மையில் ஆர்வத்துடன் வாசித்திருக்கிறேன். சலீல் செளத்ரியின் முறையான அறிமுகம் எனக்கு இவரின் மூலமாகத்தான் கிடைத்தது. இன்னும் ஆழமானதொரு கட்டுரையை எழுதியிருக்கலாம்.

புதிய குரல்கள், புதிய தடுமாற்றங்கள்: தமிழ்ச்சிறுகதை, இன்று.... என்ற, மிகுந்த உழைப்பை கோரியிருக்கும் கட்டுரையொன்றை ஜெயமோகன் எழுதியிருக்கிறார். சிறுகதை என்கிற வடிவத்தை உலகளாவிய அளவில் நோக்கும் கட்டுரையின் துவக்கம், பருந்துப் பார்வையில் தமிழ்ச்சிறுகதை உலகத்தை பல உதாரணங்களுடன்/எழுத்தாளர்களுடன் துல்லியமாக ஆராய்கிறது. சமகால இலக்கியத்தின் சில குறிப்பிடத்தக்க இளம் படைப்பாளிகளையும் இந்தக் கட்டுரை சுட்டுகிறது. நவீன தமிழ் இலக்கியம் தொடர்பாக சமீப காலத்தில் எழுதப்பட்ட மிக முக்கியமான கட்டுரையாக இதைப் பார்க்கிறேன்.

சொற்ப அளவிலான விதிவிலக்குகள் தவிர, எழுபத்தைந்து ஆண்டு கால தமிழ் சினிமா எவ்வாறு அபத்தங்களால் நிரம்பியிருக்கின்றது என்பதை சூடும் சுவையுமான மொழியில் கூறுகிறது செழியனின் கட்டுரை. (... அப்படிக் காதலையே எழுபத்தைந்து வருடங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் நாம் அந்த ஒரு துறையிலாவது பிறர் அணுக முடியாத புலமையைப் பெற்றிருக்கிறோமா? உலகின் மிகச் சிறந்த காதல் படங்களென எத்தனை தமிழப் படங்களைச் சொல்ல முடியும்) என்றாலும் நம்பிக்கைத் தொனியோடு நிறைகிறது.

சாருநிவேதிதாவின் கட்டுரையில் (எங்கே செல்கிறது இந்த வாழ்க்கை) அவரது வழக்கமான புலம்பல். பாரிஸைப் பாருங்கள்... சிங்கப்பூரைப் பாருங்கள்... இந்தியா எவ்வளவு கேவலமாக இருக்கிறது. அன்றாட வாழ்வியல் உதாரணங்களுடன் கூறும் அவரது கருத்துக்கள் எல்லாம் நிஜம்தான். நம்முடைய/அதிகாரத்தின் சொரணையில் உறைக்க வேண்டியதுதான். ஆனால் எத்தனை நாளைக்கு தொடர்ந்து இதையே கேட்டுக் கொண்டிருப்பது என்கிற சலிப்பை ஏற்படுத்துகிறது.

மகாபாரத பாத்திரமான கர்ணனின் மனைவியின் பெயர் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? சுகுமாரன் தான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு கவிதையில் இதை குறிப்பிட வேண்டி நீண்ட காலமாக தேடிக் கண்டுபிடித்ததை சுவையாக விவரிக்கிறார்.

தமிழ் ஊடகச் சூழல்: ஏமாற்றங்களும் நம்பிக்கைகளும் என்கிற எஸ்.கே.குமாரின் கட்டுரை இன்றைய தொலைக்காட்சி ஊடகத்தின் அசுரத்தனமான/வணிக நோக்கமான வளர்ச்சியை தூர்தர்ஷன் காலத்திலிருந்து துவங்கி webcasting வரைக்குமான இன்றைய காலகட்டம் வரை விரிவாக ஆராய்கிறது.

பிற படைப்புகளைப் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில்.

பலப்பம் தின்ற காலத்திலிருந்தே கவிதை என்றால் அலர்ஜி என்பதால் அவற்றைப் பற்றி ஏதும் எழுதாமல் விடுகிறேன்.

()

இதழில் சொற்ப அளவில் காணப்படும் எழுத்துப் பிழைகளை பொருட்படுத்த தேவையில்லையெனினும், படைப்புகளின் இடையில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எழுத்துக்கள் தமிழ் எழுத்துருவில் பொருளில்லாமல் நிறைய இடங்களில் அப்படியே பிரசுரமாகியிருப்பது தவிர்க்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக அ.முத்துலிங்கத்தின் கட்டுரையில் இவ்வாறு ஒரு பகுதி வருகிறது.

... கூகி வாதியோங்கோ என்பவர் ஆங்கிலத்தில் எழுதும் கென்யா நாட்டு எழுத்தாளர். இவருடைய பிரசித்தி பெற்ற இரண்டு நாவல்களான "நிளழிஸ்ரீ ஐலிமி ளீஜூஷ்யி, வீஜூள யூஷ்ஸள¦ஷ்யளமிழளலஐ" ஆகியவை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டவை. இவை நாவல்களின் மொழிபெயர்க்கப்பட்ட கென்ய தலைப்புகளின் பெயர்களோ என்று நீங்கள் மயங்கக்கூடாது.

()

இலக்கியம் தொடர்பான சிறப்பிதழ்கள் என்னுடைய சேகரத்தில் தவறாமல் இடம் பெற வேண்டும் என்கிற நோக்கில் இந்தச் சிறப்பிதழை வாங்கினேன். சில குறிப்பிடத்தகுந்த படைப்புகளுக்காக இலக்கிய ஆர்வலர்களுக்கு பெரிதும் இதை பரிந்துரைக்கிறேன்.

ஜெயமோகனின் கட்டுரையை இந்தச் சுட்டியிலும், மனோஜின் சிறுகதையை இந்தச் சுட்டியிலும் சொடுக்கி வாசிக்கலாம்.

Friday, January 18, 2008

'நான் வித்யா' - புத்தகப்பார்வை (பகுதி -2)

முந்தைய பதிவின் தொடர்ச்சி

வந்தாரை வாழ வைக்கும்/மனிதத்தை சாகடிக்கும் சென்னை.

நண்பர் ஒருவரின் உதவியுடன் இருக்க இடம் தேடுவதற்கான போராட்டம். திருநங்கைகளுக்கான பல தொண்டு நிறுவனங்களை அணுகுகிறார் வித்யா. திருநங்கைகளான அவர்களிடமிருந்தே கூரைக்குப் பதிலாக அறிவுரைதான் கிடைக்கிறது, ஆணாக இருந்து கொண்டே படிப்பை தொடரச் சொல்லி.

()

..... படிப்பு, சமுகம், நாலு பேர் பேசும் பேச்சுக்கள், 'நீ ஆணாக ஆண் உடையிலேயே இரு' என்று எல்லோரும் சொன்ன அதே அறிவரையை அவரும் சொன்னார். .........

.....எனக்குப் புரியவில்லை. இவர்களும் என்னைப் போலத்தானே. இவர்கள் மட்டும் பெண்ணாக மாறியிருக்க, ஏன் என்னை மட்டும் ஆணாகவே இரு என்று அறிவுறுத்த வேண்டும்? இது ஒன்றும் நான் நாடகத்தைத் தெரிவு செய்ததைப் போல விருப்பம் சார்ந்த தேர்வு அல்ல. என்னுடைய தேவை. என்னுடைய அத்தியாவசியம். என்னுடைய இருப்பு. நிலை. நான் பெண். கண்டிப்பாக ஆண் இல்லை. அது ஏன் இவர்களுக்கே புரியவில்லை? என்ன முட்டாள்தனம்! எரிச்சலாக வந்தது. (பக்கம் 87/88)

()

வித்யாவின் ஒரே தீவிரமான நோக்கம், அறுவை சிகிச்சை செய்துக் கொண்டு முழுமையான பெண்ணாக மாறுவது. மேற்படிப்பை தொடரச் சொல்லும் நண்பர்களின் அறிவுரைகள் அவர் காதில் விழவில்லை. சர்வே எடுக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. என்றாலும் அவரால் அதைத் தொடர இயலவில்லை.

.... "என்னால முடியல குமரன். இந்த ரெட்டை வாழ்க்கை வேண்டாம்னு தோணுது. நான் பெண்ணா மட்டும் வாழணும். என்னை தயவுசெஞ்சி புரிஞ்சுக்குங்க. பிச்சை எடுத்தாலும் பெண்ணாத்தான் வாழ விரும்பறேன்" (பக்கம் 91)..

கல்வியோ திறமையோ இருந்தாலும் பிழைக்க அவர்களுக்கு முன் இருக்கும் இரண்டே வழிகள் - பிச்சை/விபச்சாரம். பகலில் அவர்களை தமக்கு நிகராக இணைத்துக் கொள்ள தயங்கும் இச்சமூகம் இருளில் மாத்திரம் தன்னருகே வக்கிரமான ஆசையுடன் அனுமதிக்கிறது. வித்யாவிற்கு இரண்டாவது தொழில் அறவே பிடிக்காத காரணத்தினால் பிச்சை எடுத்து தன்னுடைய அறுவைச் சிகிச்சைக்கான பணத்தை சேகரிக்க முடிவு செய்கிறார். சென்னையில் அதற்கான சூழல் சுமூகமாக அமையாததால் புனே-க்கு பயணமாகிறார்.

()

முதன் முதலாக பிச்சை எடுக்கச் சென்ற அனுபவத்தை அவர் விவரிக்கும் போது எனக்கு தொண்டை அடைத்தது.

நான் படிக்கும் காலத்தில் ஆண்டு விடுமுறையாக கிடைக்கும் இரண்டு மாதத்தில் எங்காவது வேலைக்கு பெற்றோர் அனுப்புவார்கள், அடுத்த ஆண்டுப் படிப்பிற்கு ஆகப் போகும் செலவிற்கு ஒரளவிற்காவது உதவுமே என்று. அவ்வாறான ஒரு சமயத்தில் சுமார் 13 வயதில் எனக்கு கிடைத்த வேலை லாட்டரி டிக்கெட் விற்பது. அதுவரை புத்தக பைண்டிங், அலுவலக உதவியாள் என்று உட்புற சூழ்நிலையிலேயே பணிபுரிந்த எனக்கு மிகுந்த கலக்கமாய் இருந்தது. கூடவந்த அனுபவமிக்க சிறுவன் இரண்டு கடைகளில் மாத்திரம் விற்று demo செய்து காட்டி விட்டு என்னை தனிமையில் விட்டுவிட்டு அகன்றான். முதன்முதலாக நான் ஒரு கடையில் டிக்கெட்டை விற்கச் செல்லும் போது அவமானத்திலும்/சுயபரிதாபத்திலும் கண்ணீர் வழிந்தது. என்ன முயன்றும் மதியம் வரை என்னால் இரண்டு டிக்கெட்டுகளுக்கு மேல் விற்க முடியவில்லை. முதலாளியிடம் குட்டு வாங்கிய பின் அழுகையுடன் வீட்டுக்கு ஒரே ஓட்டம். அம்மாவின் மடியைப் பிடித்துக் கொண்டு 'ஓ'வென்று அழுதேன். "இனிமே இந்த வேலைக்கு போக மாட்டேன்".

அந்தச் சமயத்தில் எட்டாவது வகுப்பு படித்த ஒரு சிறுவனான நான், விற்பனையாளனாக ஒரு பொருளை விற்கச் சென்றதற்கே அவமானமாக உணர்ந்தேன் என்றால், கல்லு¡ரிப்படிப்பை முடித்த/சுயமரியாதை உடைய, சமூகத்தின் பார்வையில் எப்போதும் கேலிப் பொருளாகவே பார்க்கப்படுகிற ஒருவர் கடை கேட்க சென்றால் எப்படி உணர்வார்?

()

..........அய்ய என்ன பாக்குற .. போய் அடுத்த கடயில கேளு' என்றாள் சட்டென்று.

எனக்குப் பகீர் என்றது. அடுத்த கடையில் நானா? திடீரென இது என்ன.... ஏன் இப்படி என்று என்னவோ போலாகி விட்டது எனக்கு. எந்த முன் தகவலும் இல்லாமல் திடுதிடுப்பென்று என்னை அடுத்தக் கடையில் போய் பிச்சையெடு என்கிறாள்.

சரி. எதிர்பார்த்துதான். தெரிந்ததுதான். செய்ய வேண்டியதும் கூட. ஆனால் கை நீட்ட நினைக்கிறேன், ஒத்துழைக்க மறுக்கிறது. கண்களில் அழுகை முட்டிக் கொண்டு வருகிறது. மாதக்கணக்கில் மறந்து போயிருந்த எம்.ஏ., மொழியியல் படிப்பு அப்போது ஞாபகம் வந்து தொலைக்கிறது. என்ன சொல்வது? தயங்கி நிற்கிறேன்.

.. அய்ய இது என்னாம்மா இந்த கோத்தி.... கட கேக்க சொன்னா பே..ன்னு நிக்குது. படிச்சவங்குறதெல்லாம் இங்க பாக்கக்கூடாது. கோத்திங்கள்ல படிச்சவங்க... படிக்காதவங்க எல்லாம் ஒண்ணுதான். டக்கு டக்குன்னு கேளு... (பக்கம் 118)

()

கடை கேட்பதில் ஆரம்பத் தயக்கங்கள் இருந்தாலும், அறுவைச் சிகிச்சைதான் தன்னுடைய பிரதான நோக்கம் என்பதால் அதை நிறைவேற்றிக் கொள்ள நாளடைவில் இயல்பாகவும் திறமையாகவும் செயலாற்றுகிறார் வித்யா. தமிழகத்தைப் போலல்லாமல் வட இந்திய மக்கள் திருநங்கைகளை கிருஷ்ண அவதாரமாகப் பார்க்கிறார்கள். அவர்களிடம் ஆசி பெறுவதால் நன்மை பயக்கும் எனும் நம்பிக்கை ஒருபுறமும் அவர்களின் சாபம் தம்மை பாதிக்கும் என்றும் நம்பிக்கையும் இருப்பதால் பெரும்பாலும் காசு கொடுக்க தயங்குவதில்லை. என்றாலும் திருநங்கைகள் வன்முறையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

............ நான்கு பேர் வரிசையாக ஓரிடத்தில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுள் மூன்று பேர் வாட்டசாட்டமாக, விறைப்பாக இருந்தார்கள். ஒருவன் மட்டும் கொஞ்சம் சாது போல் தெரிந்தான். பொதுவாக முரடாகத் தோற்றமளிக்கும் ஆள்களைத் தவிர்ப்பது என் வழக்கம். எனவே, அந்த மூவரைத் தவிர்த்துவிட்டு நான்காவதாக இருந்த அந்தச் சாது நபரிடம் போய்ப் பிச்சை கேட்டேன்.

தந்தார். இரண்டு ரூபாய். அவர் தமிழர்தான். எனவே, இயல்பாக ஓர் உரிமை எடுத்து 'என்ன தமிழ்க்காரரே, ஒரு அஞ்சு ரூபா தரக்கூடாதா?' என்று கேட்டேன்.

நான் வாக்கியத்தை முடித்திருக்கவில்லை. சற்றும் எதிர்பாரா விதத்தில் பளாரென்று கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. நிலை குலைந்து போனேன். நான் காசு கேட்டவனுக்கு எதிரில் அமர்ந்திருந்த எருமை மாடு அது.

"அவர்தான் ரெண்டு ரூபா தரார்ல? அப்றம் என்ன அஞ்சு ரூபா?"

ஒரு கணம் பதறிவிட்டாலும் உடனே நிதானத்துக்கு வந்துவிட்டேன். 'அடி செருப்பால. அதுக்கெதுக்குமடா கை நீட்டுற நாயே.... உன்னையா கேட்டேன்.?"

"பிச்சையெடுக்குற நாயி யார வாடா போடாங்குற"..?

அவ்வளவுதான். யார் எவரே என்றே தெரியவில்லை. நாலைந்து பேர். சேர்ந்தாற்போல் அடித்து துவம்சம் செய்தார்கள். முட்டி மோதி அங்கிருந்து சற்றுத் தள்ளிச் சென்று விட்டேன்.

கைகால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. ஏன்? யாரிவர்கள்? எதற்காக இத்தனை வன்மம்? சிறிது நேரத்திற்கு எதுவும் புரியாமல் நின்று கொண்டிருந்தேன். கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. வாய்விட்டு அழ வேண்டும் போல் இருந்தது. ....

()

ஏறக்குறைய மரணத்தை நெருங்குகிற அபாயகரமான அந்த அறுவைச் சிகிச்சையை முடித்துக் கொண்டு பெண்மையின் முழுமையை அடையும் தன் லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்ட வித்யாவிற்கு முன்பு போல் ஆர்வமாக கடை கேட்க இயலவில்லை. பிச்சை எடுப்பது அவமானகரமான தொழிலாக அப்போதுதான் முழுமையாக உணர்கிறார். ஏதாவது வியாபாரம் செய்தாவாவது பிழைக்கலாம் என்று நினைக்கிறார். இதே மனநிலையில் உள்ள இன்னொரு திருநங்கையின் துணையுடன் வழிகாட்டும் ஒரு நண்பரின் உதவியுடன் ரயிலில் மொபைல் கவர், லேஸ், கீசெயின் போன்ற பொருட்களை விற்க முனைகிறார். ஆனால்...

...... வியாபாரம் அத்தனை சுலபமாக இல்லை. பொதுவாக ரயில்களில் வாங்கும் வழக்கம் கொண்டவர்கள்கூட எங்களிடம் ஏனோ முகம் கொடுக்க மறுத்தார்கள். கைதட்டிப் பிச்சை எடுத்து போதுகூடக் காசு தர முன் வந்தவர்கள், வியாபாரம் என்று வந்தபோது, வேறுபக்கம் திரும்பிக் கொண்டார்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது 'உழைச்சு திங்க வேண்டியதுதானே.. போங்க, போங்க.' என்று விரட்டிய மகராசன் யாரும் அந்த ரயில்களில் ஏனோ வரவில்லை. .. (பக்கம் 153)

.. ஒரு நல்ல நாளில் மீண்டும் பழையபடி பிச்சையெடுக்க ஆரம்பித்தோம்...

....ஒரு முறை ஹைதராபாத் வண்டி ஒன்றில் வழக்கம் போல் பிச்சையெடுத்துக் கொண்டு வந்த நான் திடுக்கிட்டுப் போனேன். கம்பார்ட்மெண்ட்டில் அமர்ந்திருந்த அவர்.....

... ஒரு கணம் எனக்கு உலகமே இருண்டுவிட்டது போலிருந்தது. அவர் அமர்ந்திருந்த இடத்துக்கு எதிரே கையேந்திய கோலத்தில் நான். மலத்தை மிதித்தது போல் உணர்ந்தேன். ஒரு கணம் கூடத் தாமதிக்கவில்லை. சடாரென்று பாய்ந்து அவர் கண்ணிலிருந்து மறைந்துவிட்டேன். எத்தனை நாராசமாகிவிட்டது என் வாழ்க்கை! (பக்கம் 155/156).

(தொடரும்)

Thursday, January 17, 2008

ஒரு திருநங்கையின் வலிமிகுந்த வாழ்க்கை

(பகுதி 1)

நான் வித்யா - 'லிவிங் ஸ்மைல் வித்யா - கிழக்கு பதிப்பகம் - 216 பக்கங்கள் - விலை ரூ.100/-


'ஒம்போது', 'பொட்டை', 'அலி' - இவ்வாறாக திருநங்கைகள் (Transgenders) குறித்து பொதுப்புத்தியுடன் அணுகுகிற மனோபாவம்தான் எனக்கும் ஒரு காலகட்டத்தில் இருந்தது. சிறுவயதில் என் அம்மாவுடன் அசைவம் வாங்குவதற்காக மீன்கள் விற்கும் கடைகளுக்கு செல்ல நேர்ந்த போதுதான் நான் முதன்முதலில் 'ஒருவரை' பார்க்க நேர்ந்தது. மிகச் சரளமாகவும், விநோதமான உரத்த குரலுடனும்/தோற்றத்துடனும் மீன் விற்றுக் கொண்டிருந்த அவரைப் பார்த்த போது உடனே தோன்றிய உணர்வு - பயம். சமூகம் அவர்களை கேலி/அருவெறுப்பு/கிளர்ச்சி/விநோதம் போன்ற உணர்வுகளோடு அணுகியதை கவனிக்க நேர்ந்த போது நானும் அதில் ஒருவனாகிப் போனேன். நண்பர்களிடையே வசவு வார்த்தைகளை பரிமாறிக் கொள்ளும் போது கூட 'தே..... பையா' என்கிற வசவை விட 'போடா பொட்டை' என்கிற வசவிற்குத்தான் வீர்யமும்/எதிர்வினையும் அதிகமிருந்தது. தனது ஆண்மையை மறுக்கும்/பங்கம் ஏற்படுத்தும் எந்தவொரு விஷயத்தையும் ஒர் ஆண் எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை.

இத்தகைய அறியாமையின் பரப்பில் சற்றே சலனத்தை ஏற்படுத்தியது, சு.சமுத்திரத்தின் 'வாடாமல்லி' என்கிற நாவல். 'பெரும்பாலும் ஒரு ஆணுக்குள் சிறைப்பட்டிருக்கிற பெண்மைதான் ஒரு காலகட்டத்தில் விழித்தெழுந்து ஆண்மையை மறுதலித்து உச்சநிலையில் திருநங்கையாக உருமாற வைக்கிறது' என்கிற அரைகுறையான புரிதலே அப்போதுதான் ஏற்பட்டது. அதுவரை அவர்கள் ஏதோ ஒரு விசித்திரமான உலகிலிருந்து வந்து சமூகத்தினுள் உலாவுபவர்கள் என்கிற எண்ணம்தான் எனக்கு இருந்தது. அந்த நூல்தான் பிற்பாடு அரவாணிகள் என்றழைக்கப்பட்ட திருநங்கைகள் குறித்து மருத்துவ/உளவியல் ரீதியான உண்மைகளை நோக்கி பயணம் செய்ய வைத்தது. 'எஸ்ட்ராஜென், டெஸ்டெஸ்ட்ரோன் ஆகிய இரு கூறுகள்தான் பெண்மை/ஆண்மை விழைவுகளை, அவற்றைக் கூர்மைப்படுத்தும் உடற்கூறு சா¡ர்ந்த நுகர்வின்பத்தைத் தீர்மானிக்கிறது' என்கிறது அ.மங்கையின் ஒரு சிறு நூல்.

()

ஆச்சாரமான சூழலில் மாத்திரம் ஒரு கால கட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த நவீன தமிழ் இலக்கிய பரப்பின் எல்லை விரிந்து விளிம்பு நிலை மனிதர்களும் தங்களுக்கான இடத்தை போராடியேனும் பெற்றுக் கொண்டு வரும் சூழல் ஆரோக்கியமானதாகவே எனக்குப் படுகிறது. நளினி ஜமீலா என்கிற பாலியல் தொழிலாளியின் சுயசரிதை மொழிபெயர்ப்பின் வரவு ஒரு சிறந்த உதாரணம்.

அந்த வரிசையில் வந்திருக்கும் இன்னொரு முக்கியமான நேரடி தமிழ் நூலாக "நான் வித்யா" என்கிற, சகவலைப்பதிவாளாரான 'லிவிங் ஸ்மைல் வித்யா' எழுதின புத்தகத்தை நான் பார்க்கிறேன். திருநங்கைகளைப் பற்றி மற்றவர்கள் எழுதிய கட்டுரைகள், இனவரைவியல் ஆய்வுத் தொகுதிகள், அரவாணிகளே சுயமாக எழுதிய கட்டுரைகள் என்று தமிழில் பல வந்திருந்தாலும் திருநங்கை ஒருவரே நேரடியாக தம் வாழ்வை எழுதிய முதல் சுயசரிதை நூல் இதுதான் என்று நினைக்கிறேன். வித்யாவின் வாழ்க்கையை புத்தகத்தின் பக்கங்களில் ரத்தமும் சதையுமாக நாம் கடந்து செல்லும் போது வேதனையடையாமல் இருக்கவே முடியாது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை ஒரு எழுத்தாளன் உள்வாங்கி எழுதுவதை விட அந்த மக்களில் ஒருவரே எழுதுவதால் படைப்பின் தாக்கம் அதிகமாகிறது.

'என்னைத் தவிர எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்களோ' என்கிற தாழ்வுணர்ச்சி பெரும்பாலோருக்கு தோன்றுவதைப் போலவே எனக்கும் அவ்வப்போது தோன்றுவதுண்டு. துக்ககரமான மனநிலையில் 'எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறேன்" என்று வாழ்க்கையை திரும்பிப்பார்க்கும் போது சுயபரிதாபம் மனமெங்கும் நிறைந்து வழியும். ஆனால் வித்யா அனுபவித்த வேதனையான சூழல்களை வாசிக்கும் போது அதை நம்மோடு ஒப்பிட்டுக் கொள்ளும் போதும் நம்முடைய துயரங்கள் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தோடு தோன்றுகிறது.

()

சரவணன், தான் பெண்ணாக உணரும் மனநிலையை சமூகத்தின் கிண்டல்களுக்கு பயந்து முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் உள்ளுக்குள்ளேயே போராடி, அழுத்தம் தாங்காமல் வெடித்து சூழலிலிருந்து வெளியேறி பல்வேறு வேதனையான சூழல்களைக் கடந்து அறுவைச் சிகிச்சை மூலம் ஆண்குறியை நீக்கிக் கொண்டு (நிர்வாணம் என்று சொல்லப்படுகிறது) தன்னை முழுமையான பெண்ணாக மாற்றிக் கொள்ளும் உத்வேகத்துடன் பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலையோடு இந்த நூல் துவங்குகிறது.

Sex Reassignement Surgery என்று குறிப்பிடப்படும் பால்மாற்று சிகிச்சை சட்டரீதியாக தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு விட்டது. ஆனால் இந்தியாவில் செய்யப்படுவது Casteration என்கிற பிறப்புறுப்பை நீக்குவது மட்டுமே. பெரும்பாலும் இந்த சிகிச்சை முறையான மருத்துவ முறை இல்லாமல் சட்டவிரோதமாகத்தான் நடத்தப்படுகிறது.

சில சூழல்களை நூலாசிரியரின் மொழியிலேயே குறிப்பிட்டால்தான் வாசிப்பவரால் சரியாக புரிந்து கொள்ள முடியும் என்பதால் அவற்றின் சில பகுதிகளை மாத்திரம் தேவையான இடங்களில் கிழக்கு பதிப்பகத்திற்கும் வித்யாவிற்கும் நன்றி கூறி மீள்பிரசுரம் செய்கிறேன்.


()

.......... மருத்துவர் கத்தியை எடுத்து முதல் கீறலை என் அடிவயிற்றில் தொடங்கிய போதுதான், எனக்கு இன்னும் முழுமையாக மரத்துப் போகவில்லை என்பதை உணர்ந்தேன். வலியில் நான் அலறுவதைப் பார்த்து மேலும் ஒரு ஊசியைத் தண்டுவடத்தில் ஏற்றினார்கள். முன்பை விட இப்போது வலி குறைந்ததேயன்றி முற்றிலும் நின்றுவிடவில்லை. கை கால்களை மட்டும்தான் அசைக்க முடியவில்லை. ஆனால் கத்தி நகரும் தடமும், வலியும் நன்றாகவே உணர முடிந்தது.

... வலிக்க வலிக்க மருத்துவம் பா¡க்கும் டாக்டரையும், உதவியாளரையும் கொன்றுவிடலாம் என என்¦ன்னவோ மனதில் தோன்றியது. வலியைக் கடக்க வழி தெரியாமல் கிழவி சொன்னது போல் மாத்தா மாத்தா என்று அரற்றிக் கொண்டிருக்கும் போது 'மாஆஆ...த்ததாஆஆஆ' என்று பெருவலியொன்றால் உச்சத்தில் அலறினேன். ஆபரேஷனின் உச்சகட்டமாக வயிற்றின் உள்ளாகக் கம்பியை விட்டு உள்ளிருக்கும் குடல் அனைத்தையும் உருவுவது போல் ஒரு வலி. ஆம். அந்த நொடியில் நான் கண்டதின் பெயர்தான் மரணம். (பக்கம் 17)

..... பிறப்புறுப்பு நீக்கப்படும் போது எவ்வாறு வலிக்கும் என்பதை ஒரு போதும் வெறும் சொற்களால் விவரிக்க முடியாது. அது வீண் முயற்சி. அதற்குப்பதில் இறந்துவிடலாம் என்று அவசியம் தோன்றும். பலர் இறந்தும் இருக்கிறார்கள். அநேகமாகக் கசாப்புக் கடைகளில் செய்யப்படுகிற காரியத்துக்குப் பல விதங்களிலும் நெருக்கமான ஆபரேஷன் இது. (பக்கம் 140)

.....சட்டவிரோதமாகாவது அப்படியொரு அறுவைச் சிகிச்சை ஏன் செய்து கொள்ள வேண்டும்? இது நல்ல கேள்வி. இதற்கான பதில் நாங்கள் எங்களை ஆணாக ஒருபோதும் உணர்வதில்லை என்பதுதான். ஆணுக்குரிய பிறப்புறுப்பு அடையாளம் துரதிருஷ்டவசமாக எங்களுக்கு அமைந்துவிடுகிறது. மனத்தளவில் பெண்ணாகவே எங்களைக் கருதுகிறோம். (பக்கம் 139)

()

சில பெண்குழந்தைகளுக்குப் பின் ஆண்குழந்தைக்காக தவமிருந்து பிறந்தவன்தான் சரவணன். இதனால் மற்றவர்களை விட வீட்டில் அதிகச் சலுகை கிடைக்கிறது. துப்புரவு பணியாளரான அப்பா, தான்படும் கஷ்டம் மகனின் காலத்திலாவது நீங்க வேண்டும் என்பதால் மகனின் கல்வியில் அதிக கவனத்தை செலுத்துகிறார். மகன் நன்றாகப் படித்தாலும் வழக்கமான முதல் ரேங்க் தவறி ஒரு முறை இரண்டாவது ரேங்க் வாங்கும் இயல்பான நிலையைக் கூட அப்பாவால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாமல் அடித்து நொறுக்கி கடுமையாக நடக்கின்றார். விளையாடக்கூட அனுமதிக்காமல் எப்போதும் படிக்கச் சொல்லும் அப்பாவின் கண்டிப்பு, அன்பான சகோதரிகளுக்கிடையே வளரும் சூழல், பாசமான அம்மாவின் மரணத்திற்குப் பிறகு சித்தி என்று கலவையான சூழலில் வளரும் சரவணன் ஆறுதலாக உணர்வது தனது சித்தப்பாவின் வீட்டில். தனிமையில் பெண்களின் உடையைப் போட்டுப் பார்த்து மகிழ்கிறான். மற்றவர்களால் இதற்காக கிண்டல் செய்யப்படுகிறான்.

கல்லூரிப் படிப்பின் போது கலை நிகழ்ச்சிகளில் ஆர்வம் ஏற்பட்டு அதில் தீவிரமாக ஈடுபடுகிறான். நாடகத்துறை பேராசிரியராக இருந்த மு.ராமசாமி உட்பட பல நாடகக் கலைஞர்களின் அறிமுகம் கிடைக்கிறது உற்சாகமாக இருந்தாலும் மறுபுறம் உள்ளுக்குள் அடைபட்டிருக்கும் பெண்மை உணர்வு தன்னை நிரூபித்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கும் சூழல் வேறு. ஒரு நிலையில் சூழ்நிலைகளின் உச்ச அழுத்தத்தில் வீட்டை விட்டு விலக முடிவு செய்கிறான்.

(தொடரும்)

Tuesday, January 15, 2008

நானும் புத்தகக் கண்காட்சியும் சில எழுத்தாளர்களும்

இரண்டு மூன்று நாட்களாக கை நடுக்கம் கொண்டிருந்தது. போதைப் பொருள் உபயோகிப்பாளன் அதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியின் ஆரம்ப நிலை போல் உணர்ந்தேன். இந்த வருடம் புத்தக கண்காட்சிக்கு போகவே கூடாது / எந்தப் புத்தகத்தையும் வாங்கக்கூடாது என்று முடிவு செய்ததிலிருந்து, மறுபுறம் சென்றே ஆக வேண்டும் என்று என் ஆல்டர் ஈகோ எனக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டேயிருந்தது. 'சரி புத்தக வாசனையை மாத்திரம் முகர்ந்துவிட்டு திரும்பி விடலாம்' என்று சமாதானம் செய்து கொண்டு ஒரு வழியாக இன்று கீழ்ப்பாக்கத்திற்கு (!) கிளம்பினேன். என்னை மகிழ்ச்சிப் படுத்தும் வகையில் கூட்டம் குறைவாகவே இருந்தது. போன முறை 'காணும் பொங்கலன்று' சென்று விட்டு இலவச தொலைக்காட்சி வாங்க முண்டியடிக்கும் கூட்டத்தில் சிக்கியவன் போல் தவித்துப் போனேன்.

பொதுவாகவே எனக்கு கூட்டம் என்றால் அலர்ஜி. எனக்கு திருமணம் நடந்த நாளன்று கூட பக¦ல்லாம் உறவினர் கூட்டத்தில் சிக்கி அவஸ்தைப்பட்ட அனுபவத்தில், இரவன்று "உள்ள கூட்டமா இருக்காதுல்ல" என்று கேட்டுவிட்டு பிறகை நாக்கை கடித்துக் கொண்டேன்.

()

அரங்கினுள் நுழைவதற்கு முன் வலது, இடது புறங்களில் வரிசையாக வண்ண விளம்பர பலகைகள். நடிகர்களின் பந்தாக்களுக்கு எந்தவித குறைச்சலுமில்லாமல் எழுத்தாளர்களின் கவிஞர்களின் பிரம்மாண்ட புகைப்படங்கள். 'பில்லா' திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் ஒன்று போல் கவிப்பேரரசு வைரமுத்துவும் 'குளிர் கண்ணாடி' அணிந்து கொண்டு விநோதமாக காட்சியளித்தார். பார்வையாளர்கள் உள்ளே நுழைய நிறைய வாசல்களை ஏற்படுத்தி வைத்திருந்ததும், ஒவ்வொரு நுழைவிலும் அந்தப்பகுதியில் அமைந்திருக்கின்ற பதிப்பகங்களின் பட்டியலை வைத்திருந்ததும் வசதியாக இருந்தது. எந்தவொரு வரிசையிலும் மனம்மாறி அடுத்த வரிசையை சென்றடைய இடைவெளிகள் ஏற்படுத்தியிருந்ததும் இன்னொரு வசதியான ஏற்பாடு. வளப்பமான சில பெண்களை அதிகம் நோட்டமிடாமல் 'நாகரிகமானவனைப்' போல் செல்வது சற்றே சிரமமான காரியமாக இருந்தது.

எல்லாக் கடைகளையும் ஒரு 'பறவைப் பார்வையில்' பார்க்கலாம் என முடிவு செய்தேன். மக்கள் எந்தமாதிரியான புத்தகங்களை அதிகம் விரும்பி வாங்குகிறார்கள் என்றொரு 'சர்வே' எடுத்தால் பலருக்கு உபயோகமாக இருக்கும் என்று தோன்றியது. 'அன்னம்' பதிப்பகத்தில் இயக்குநர் தங்கர் பச்சான் நின்று கொண்டிருந்தார். பொதுவாக சினிமா பிரபலங்களை முறையான அறிமுகம் இல்லாமல் சென்று பேசுவது எனக்கு இயல்பில்லாத ஒன்று. ஆனால் அவரே என்னைப் பார்த்து மந்தகாசமாக புன்னகை செய்ததால், "உங்கள் திரைப்படங்களை தொடர்ந்து கவனிக்கிறேன். ஒரு சிறுவிமர்சனம் சொன்னால் தவறாக எடுத்துக் கொள்வீர்களோ" என்றேன். "சொல்லுங்க ஐயா" என்றார் கனிவாக. அந்த தைரியத்தில் "உங்களின் படங்களில் பொதுவாக நிறைய இரைச்சலாக இருக்கிறது. கதாபாத்திரங்கள் தேவையேயின்றி உரக்கப் பேசுகிறார்கள் அல்லது கத்துகிறார்கள். இது என்னை அசெளகரியமாக உணரச் செய்கிறது" என்றேன். "உங்களுக்கு எந்த ஊர்" என்றார். "சென்னைதான்"

"என்னுடைய படங்களில் வருகிறவர்களில் கிராமப்புறங்களைச் சேர்ந்த அடித்தட்டு மக்கள். அவர்களின் பேச்சு அப்படித்தான் இருக்கும்" என்றார் சற்றே ஆவேசமாக. "இல்லீங்க. நான் அதச் சொல்லல. அத என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா செயற்கைத்தனமாக கத்தறாங்களே" என்றதற்கு "எங்கே ஒரு உதாரணம் சொல்லுங்க" என்றார். நான் தொலைக்காட்சியில் 'ஒன்பது ரூபாய் நோட்டு" திரைப்படக்காட்சிகளில் பார்த்த அர்ச்சனா நடித்த ஒரு காட்சியை சொன்னேன். "நான் சொன்னதுலயே எல்லாப் பதிலும் இருக்குது. உங்களுக்குப் புரியல. நீங்க இதுவரைக்கும் பார்த்த தமிழ் சினிமாவ வெச்சுக்கிட்டு என் படத்த புரிஞ்சுக்க முடியாது" என்றார். நான் சர்வதேச திரைப்படங்களை பார்ப்பவன் என்பதை அவருக்கு உணர்த்திவிட்டு, என் கேள்வியை சற்றே மாற்றி மீண்டும் கேட்க அவரும் சளைக்காமல் முந்தைய பதிலையே சொன்னார். "இல்லீங்க. நான் டெக்னிக்கலா....." என்றவுடன் குறுக்கிட்டு "சினிமாவில் டெக்னிக்கே கிடையாது" என்றார் அதிரடியாக. எங்கள் இருவருக்குள்ளும் ஏதோ "மொழிப் பிரச்சினை" இருப்பதை உடனடியாக உணர்ந்தவனாக அவரிடமிருந்து புன்னகையுடன் அவசரமாக விடைபெற்றுக் கொண்டேன்.

()

கை நடுக்கம் அதிகமானதால் அதை குறைப்பதற்காக சில சிற்றிதழ்களையும் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டேன். 'எனி இந்தியனில்' ஹரன்பிரசன்னா தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார். ஜெயகாந்தன் புத்தகங்களும் ஆனந்தவிகட பதிப்பக புத்தகங்களும் அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருப்பதை கவனிக்க முடிந்தது. அவர் ஆசுவாசமடைந்தவுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பிரசன்னா சில முக்கியமான எழுத்தாளர்களின் அறிமுகத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். மிக இயல்பாக உரையாடின யுவன் சந்திரசேகரிடம், 'கதைக்குள் கதை' என்று அவர் எழுதுகிற பாணி எனக்கு பிடித்திருப்பதை தெரிவித்தேன்.

மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்த இரா.முருகனிடம் செலவழித்த சுமார் 15 நிமிடங்கள் உபயோகமானதாயிருந்தது. .. வலைப்பதிவு உலகம், ராயர் காப்பி கிளப், ஜெயமோகனின் சமீபத்திய கட்டுரைகள், காலத்தைக் கடந்து நிற்கும் சில சிறுகதைகள், அரசூர் வம்சத்தின் மொழிபெயர்ப்பு, தேவதாசிகள்.... என்று ஒரு மினி ரவுண்டு வந்தாகிவிட்டது. அவரிடம் நான் பேசினதின் சுருக்கமான அம்சம் 'We miss you'. இணையத்தில் மீண்டும் தீவிரமாக இயங்கும்படி அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன். நவீன தமிழ் இலக்கியத்தின் சிறுகதை ஆசிரியர்களில் மிக முக்கியமானவராக அவரைப் பார்க்கிறேன். சுஜாதாவை சற்றே நினைவுப்படுத்தும் ஆனால் வேறு தளத்தில், மொழியில் இயங்கும் அவரின் சிறுகதைகள் -சமீப கால கட்டத்தில் - நிறைய வெளிப்படாதது நமக்கு இழப்பே. "நாவல் என்கிற பெரிய வடிவத்தில் கை வீசி நடந்த பிறகு, சிறுகதை என்கிற குறுகிய வடிவத்தில் கட்டுப்படுத்திக் கொள்வது சிரமமாய் இருக்கிறது. பார்க்கலாம்" என்றார்.

()


பிறகு வந்தார்கள் சுரேஷ் கண்ணனும், வ.ஸ்ரீனிவாசனும். இணையக்குழு மூலமாக கிடைத்த சமீப நண்பர்கள். இதில் சுரேஷ் கண்ணன் 'உயிர்மை'யில் இளையராஜா இசை குறித்து எழுதிய கட்டுரை வெளியான போது 'நீங்கள் எழுதியதா' என்று என்னை பலர் விசாரித்தார்கள். பெயர் குழப்பம். 'வேணு வனம்' என்று சமீப காலமாக எழுதிவரும் இவரின் வலைப்பதிவில் பிரத்யேகமான சுவையுடன் கூடிய நகைச்சுவைக் கட்டுரைகளை வாசிக்கலாம். முதல் சந்திப்பிலேயே நீண்ட நாட்கள் பழகினவரைப் போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தி விட்டார். வ.ஸ்ரீனிவாசன் 'பிரமிள்' குறித்து எழுதிய கட்டுரை ஒன்று சமீபத்திய 'உயிர் எழுத்து'வில் பிரசுரமாகியிருக்கிறது.

சூத்ரதாரி என்கிற எம்.கோபாலகிருஷ்ணனிடம் சற்று நேரம் பேச முடிந்தது. மிக எளிமையான அவரிடம் போன வருட உயிர்மை விழாவில் சுதேசமித்திரனின் நாவல் குறித்து அவர் ஆற்றின அறிமுக உரை மிகச்சிற்ப்பாக இருந்ததை நினைவுகூர்ந்தேன். அவரின் படைப்புகளை இணையத்தில் பகிர்ந்து கொள்ளும்படியும் இணையத்தில் எழுதும்படியும் பிரசன்னா கேட்டுக் கொண்டதற்கு உடனே ஒப்புக் கொண்டார். சிற்றிதழ்களில் மாத்திரம் அறியப்பட்டிருக்கும் குறுகிய வட்டத்தில் இயங்கும் எழுத்தாளர்களை இணையச் செயல்பாடுகளில் ஈடுபட வைப்பதின் மூலம் வேறு வகை வாசகர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்கிற பிரசன்னாவின் திட்டத்தில் எனக்கு உடனே உடனே உடன்பாடு ஏற்பட்டது.

()

ஜெயமோகனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் சுகா. "ஓ... பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணன்தானே" என்று அவர் என்னுடைய வலைப்பதிவின் பெயரோடு கூறியது ஆச்சரியமாக இருந்தது. கண்களை focus செய்து கொண்டு என்னை அவர் கூர்ந்து கவனித்த போது, சமீபகாலமாக அவரின் இன்னொரு பக்கமான நகைச்சுவை கூடின எழுத்தை அறிந்து கொள்ள முடிந்த காரணத்தினால் "என்னைப் பற்றி என்ன கிண்டலான வரி இப்போது அவர் மனதில் ஓடுகிறதோ' என்று தேவையில்லாத கலக்கம் ஏற்பட்டது. ஜெயமோகன் என்றாலே மிக கடுமையான மொழியுடன் தீவிர இலக்கியப் பரப்பில் இயங்குபவர் என்று என்னுள் ஏற்பட்டிருந்த பிம்பம், அவருடைய சமீபத்திய கட்டுரைகளினால் சிதைந்து போனது. சற்றே இளைப்பாறிக் கொள்ள இவ்வாறு எழுதுகிறாரோ என்று தெரியவில்லை. என்றாலும் இவ்வாறு தன்னுடைய பிம்பத்தை தானே சிதைத்து அல்லது உருமாற்றிக் கொள்வதென்பது இன்றைய பின்நவீனத்துவ காலகட்டத்தில் ஒரு எழுத்தாளனுக்கு மிக தேவையான ஒன்றுதான் என்று எனக்குத் தோன்றுகிறது.

எஸ்.ராமகிருஷ்ணனிடம் 'தமிழ் வலைப்பதிவாளர்கள்' குறித்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பற்றி கேட்டேன். "சுமார் 15 நிமிடம் பேசினதை எவ்வாறு எடிட் செய்து போட்டார்கள் என்று தெரியவில்லை" என்றார். வலைப்பதிவுலகில் ஏற்கெனவே புழங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த நிகழ்ச்சியில் புதிதான எந்த தகவலுமில்லை. அறிமுகம் இல்லாதவர்களுக்கு வலைப்பதிவுலகத்தைப் பற்றின எளிமையான, முழுமையான ஒரு அறிமுகத்தை அந்த நிகழ்ச்சி ஏற்படுத்தவில்லை என்கிற என் கருத்தை அவரோடு பகிர்ந்து கொண்டேன். எஸ்.ராவின் சில சிறுகதைகள், புத்தக மதிப்புரைகள், முழுமையான நேர்காணல்கள் கொண்ட இணைத்தளம் விரைவில் வெளியாகவிருக்கும் தகவலை தெரிவித்தார். நாஞ்சில் நாடனை சந்திக்க முடியாமற் போனது ஒரு குறை.

எழுத்தாளர்கள் என்றால் தலைக்கு பின்னால் ஒளிவட்டத்தை சுமந்து கொண்டு பக்தர்களுக்கு அருளும் கடவுள் போன்ற பார்வையுடன் வாசகர்களை அணுகுவார்கள் என்று முந்தைய சில அனுபவங்களினால் எண்ணியிருந்த என்னை மேற்சொன்ன எழுத்தாளர்களுடனான சந்திப்பு முற்றிலுமாக கலைத்துப் போட்டது.

()

ஏறக்குறைய எல்லாக் கடைகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக புத்தகங்கள் வாங்கிக் கொண்டிருந்தார்கள் அல்லது பார்வையிட்டுக் கொண்டிருந்¡ர்கள். சுஜாதா சொன்ன மாதிரி 'என்ன மாதிரியான புத்தகம்' வாங்குகிறார்கள் என்பதைவிட புத்தக வாசிப்பு என்கிற விஷயமே கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டிருக்கும் நிலையில் இத்தனை புத்தக விரும்பிகளை ஒருசேர பார்ப்பதே நிறைவான விஷயமாக இருந்தது. நிறைய சிறு கடைகளில் ஆனந்தவிகடன், கிழக்கு பதிப்பக புத்தகங்களையே பிரதானமாக வைத்துக் கொண்டிருந்தார்கள். குறுகிய காலத்தில் ஏற்பட்டிருக்கும் கிழக்கு பதிப்பகத்தின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாக எனக்குத் தோன்றுகிறது. மணிமேகலைப் பிரசுரத்திற்கு போட்டியிடுகிறாற் போன்று ஆழமில்லாமல் இருக்கும் அவர்களின் புத்தகங்களின் உள்ளடக்கம் குறித்து எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும், எளிமையான மொழியோடு, வாங்குகிற ஆர்வத்தை ஏற்படுத்துகிற சிறப்பான வடிவமைப்போடு, ரயில்வே புத்தகக்கடைகளிலும் கிடைக்கக்கூடிய அளவிற்கு சாமானியனை சென்று சேரும் வசதி என்று அவர்களின் மார்க்கெட்டிங் உத்தி வியக்கவே வைக்கிறது. ஆரம்பக்கட்ட அறிமுக புத்தகங்களை படிக்கும் ஒரு வாசகன், மெள்ள ஆழமான வாசிப்பிற்கு உந்தித் தள்ளப்படக்கூடும் என்ற நம்பிக்கையை இந்தப் புத்தகங்கள் ஏற்படுத்துகின்றன.

()

நான் வாங்கிய சில புத்தகங்கள்:

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன் - உயிர்மை
நினைவோடை வரிசை: சுந்தரராமசாமி: - ஜி.நாகராஜன் - காலச்சுவடு
நினைவோடை வரிசை: சுந்தரராமசாமி: - தி.ஜானகிராமன் - காலச்சுவடு
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஜான் பெர்கின்ஸ் - தமிழில்: இரா.முருகவேள் - விடியல்
ரஜினியின் சினிமா, ரஜினியின் அரசியல் - அ.ராமசாமி - பாரதி புத்தகாலயம்
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் - கந்தர்வன் - பாரதி புத்தகாலயம்
பெண் ஏன் அடிமையானாள் - பெரியார் - பாரதி புத்தகாலயம்
கதை சொல்லும் கலை - ச.முருகபூபதி - பாரதி புத்தகாலயம்
நான் வித்யா - 'லிவிங் ஸ்மைல் வித்யா' - கிழக்கு
வேலைக்காரிகளின் புத்தகம் - ஷோபாசக்தி - கருப்புப் பிரதிகள்

தமிழினி இதழ் -
நிழல் - திரைப்பட இதழ் - பெர்க்மன் சிறப்பிதழ்
நிழல் - திரைப்பட இதழ் - எம்.ஆர்.ராதா சிறப்பிதழ்
புனைகளம் - இதழ் எண்.4

()

வீடு சென்று அடைந்ததும் என்னுடைய ஏழு வயது மகளிடம் நான் வாங்கின புத்தகங்களை காண்பித்தேன். "எனக்கு என்ன புத்தகம் வாங்கி வந்தீங்க?" என்ற அவளின் எதிர்பாராத கேள்வியில் என்னை கேவலமாக உணர்ந்து தலையை குனிந்தேன்.

Friday, January 04, 2008

இரண்டு செருப்படிகள்

சில செய்திகளைப் பற்றி அறிய வரும் போதோ, எங்காவது காணும் போதோ, அனுபவப்பூர்வமாக உணரும் போதோ அது இதயத்தின் மீது செலுத்தப்படும் அட்லிரின் மருந்து போல நேரடியாக உடனே நம்மை பாதிக்கும். கொச்சையான மொழியில் சொன்னால்.. யாரோ நம் முகத்தில் செருப்பால் அடித்தது மாதிரி இருக்கும். அம்மாதிரி சமீபத்தில் நான் உணர்ந்த தருணங்களைப் பற்றி இங்கே பகிர உத்தேசம்.

'நதியின் கரையில்' என்றொரு கட்டுரைத் தொடரை பாவண்ணன் 'புதிய பார்வை'யில் எழுதிவருவதை உங்களில் பெரும்பாலோனோர் அறிந்திருப்பீர்கள். சமீபத்திய இதழில் பிரசுரமான கட்டுரையை ஆசிரியர் தாம் படிக்க நேர்ந்த பத்திரிகைச் செய்தியோடு ஆரம்பிக்கிறார். அதை ஆசிரியரின் மொழியிலேயே அறிவதுதான் நியாயமான செயலாக இருக்குமென்பதால், அதை இங்கே மீள்பிரசுரம் செய்கிறேன். (நன்றி புதிய பார்வை | பாவண்ணன்)

()

ஐதராபாத்தில் தொண்டாற்றிவரும் ஒரு மனநல மருத்துவமனை நோயாளிகளுக்கிடையே புத்துணர்ச்சியை ஊட்டும் பொருட்டு ஒரு சின்ன கலை நிகழ்ச்சியை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது. அதன் ஒரு பகுதியாக நோய்வாய்ப்பட்டிருந்த சிறுமிகளிடையே ஓர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. அப்பந்தயத்தில் எட்டு சிறுமிகள் கலந்து கொண்டார்கள்.

ஓடத்தொடங்கலாம் என்பதற்கு அடையாளமாக விளையாட்டுத் துப்பாக்கியிலிருந்து வெடிச்சத்தம் கிளம்பியது. அடுத்த கணமே இலக்குப்புள்ளியில் கட்டப்பட்டிருந்த வண்ண நாடாவை நோக்கி ஒவ்வொருவரும் ஓடத் தொடங்கினார்கள்.

பார்வையாளர்கள் அரங்கில் குழுமியிருந்தவர்கள் சிறுமிகளைப் பார்த்து சையசைத்து உற்சாகப்படுத்தினார்கள். எங்கெங்கும் ஆரவாரம். ஓடிக்கொண்டிருந்த ஒரு சிறுமி கால் தடுக்கி கீழே விழுந்து விட்டாள். பயமோ, வேதனையோ தெரியவில்லை. விழுந்த இடத்திலிருந்து எழுந்திருக்கத் தெரியாமல் ஓவென்று கதறி அழத் தொடங்கினாள் அச்சிறுமி.

ஏதோ கட்டளைக்கு அடிபணிந்ததைப் போல அவள் அழுகுரலைக் கேட்டதும் மற்ற ஏழு சிறுமிகளும் ஓடுவதை நிறுத்தி தன்னிச்சையாக அவளை நோக்கி ஓடிவந்தார்கள். விழுந்து கிடந்த சிறுமியைத் தூக்கினாள் ஒரு சிறுமி. கூட்டத்திலேயே சற்றே வயது கூடிய சிறுமி அவளுடைய கண்ணீரைத் துடைத்து தன் தோளோடு ஆதரவாகச் சாய்த்துக் கொண்டாள். அவள் உடைமீதும் உடல்மீதும் படிந்திருந்த புழுதியைத் தன் கைகளாலேயே தட்டித்தட்டித் தூய்மை செய்தாள் இன்னொரு சிறுமி. 'அழாதடி, அழாதடி' என்று எல்லாச் சிறுமிகளும் அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள். அவள் அழுகையை நிறுத்தியதும் எல்லாச்சிறுமிகளும் ஒருவரோடு ஒருவர் கைகளைக் கோர்த்துக் கொண்டு இலக்குப்புள்ளியில் காணப்பட்ட வண்ணநாடா வரைக்கும் நடந்தே வந்தார்கள். குழுமியிருந்த கூட்டமே அக்காட்சியைக் கண்டு நெகிழ்ந்தது. பல நிமிடங்கள் விடாமல் கைதட்டி தம் வாழ்த்துக்களைத் தெரிவித்தது. .......

()

உண்மையிலேயே யார் மனநிலை பிறழ்ந்தவர்கள் என்பதையும், உலகமயமாக்கத்தின் இக்காலகட்டத்தில் வெற்றி என்பதன் வரையறை என்ன என்பது குறித்தும் பல கேள்விகளை மேற்குறிப்பிட்ட செய்தி என்னுள் எழுப்பியது. பாவண்ணனின் இக்கட்டுரையை தொடர்ந்து படித்து முடிக்கும் தருணத்தில் நான் உணர்ச்சிப் பெருக்கில் தொண்டை அடைத்துக் கிடந்தேன். ஓடிக் கொண்டிருந்த ரயில் வண்டியில் அசசமயத்தில் மாத்திரம் இல்லாமல் தனிமையில் இருந்திருந்தால் மெளனமாகவேனும் ஒரு வேளை அழுதிருப்பேனோ என்னவோ.

இன்னொரு செருப்படி வந்து விழுந்த இடம் வண்ணதாசனிடமிருந்து. (இவ்வாக்கியமே ஒரு முரண்தான். மென்மையும் குழைவுமான விஷயங்களைப் பற்றி மட்டுமே தன் படைப்புகளில் சிந்திக்கிற ஒரு ஆளுமையின் பெயரையும் 'செருப்படி' என்கிற கடுமையான வார்த்தையையும் அடுத்தடுத்த இடத்தில் வைப்பதே ஒரு முரண்தான்).

.. நரிக்குறவச் சிறுவர்களின் பிரத்யேக அழகு, குடிசைப்பகுதிக்காரர்களை அதிகாரம் அப்புறப்படுத்திவிட்ட பிறகு அந்த இடத்தின் வெறுமை, பன்னீர்ப்பூக்களின் மேல் சிறுநீர் கழிக்க விரும்பாத பள்ளிக்கூட மாணவன், கூட்ட நெரிசலில் இயல்பாக இயங்கும் பேருந்து நடத்துநர்..... என்று நாலைந்து விஷயங்களை ஆற அமர அவருக்கு உரித்தான பிரத்யேக மொழியில் ரசனையாக விவரித்து விட்டு ... கட்டுரையை இவ்வாறு முடிக்கிறார்.

... இதையெல்லாவற்றையும் பற்றி நமக்கென்ன? நமக்குத்தான் இருக்கிறதே இருபத்து நான்கு மணிநேரத் தொலைக்காட்சிகள். யார் அசத்துகிறார்கள், யார் கலக்குகிறார்கள் என்று பார்த்துக் கொண்டு இருந்தால் போதாதா?! (ஆனந்த விகடன் கட்டுரை).