Friday, January 23, 2015

அனந்தியின் டயறி - அனந்தி என்கிற சிநேகிதியின் டைரிக்குறிப்புகள்


16.11.2014

பொ.கருணாகரமூர்த்தியின் 'அனந்தியின் டயறி' நூல் வந்து சேர்ந்தது. உடனே வாசிக்க ஆரமபித்திருக்கிறேன்.


இதைப் புதினம் என்று வகைப்படுத்த முடியுமா என தெரியவில்லை. சேகுவாராவின் 'பொலிவியின் டயறி'யை புதினம் என்றா அழைக்க முடியும்? அனந்தி என்கிற இளம்பருவத்து பெண் தொடர்ந்து அவளது டயறியில் எழுதும் குறிப்புகளின் தொகுப்பாகத்தான் இந்நூலின் வடிவமிருக்கிறது. அ.முத்துலிங்கத்தின் 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' எனும் நூல் அவரது தன்வரலாற்று குறிப்புகளின் அடிப்படையில் இருந்தாலும் ஒருவகையில் அதனை புதினமாக பாவிக்க முடியும். ஆனால் இது? இந்த வடிவத்தின் முன்னோடி ஏதும் இல்லையென்றால் இதையே டயறிக் குறிப்புகளின் தொகுப்பாக வந்த முதல் தமிழ் நூல் என்று வகைப்படுத்த முடியும். வெங்கட் சாமிநாதனின் முன்னுரை, தென்அமெரிக்காவில் காலங்காலமாக வசித்து வந்தாலும் சரவணபவன் சாம்பாரை தாண்டாத தமிழர்களின் எழுத்துக்கலையை கிண்டலடிக்கிறது, சில விதிவிலக்குகள்தான் என்கிற பெருமூச்சுடன். கருணாகரமூர்த்தி 'என்னுரையில்' குறிப்பிட்டிருப்பது போன்று ஒரு தேர்ந்த புகைப்படக்கலைஞனின் புகைப்பட ஆல்பத்தை புரட்டுவது போன்றே இந்த நூலும் கலைடாஸ்கோப் வழிகாட்சிகள் போன்று சட்சட்டென்று மாறும் காட்சிகள் பார்க்கிறதொரு சுவாரசியமான அனுபவத்தை தருகிறது.


19.11.2014

பலத்த மழை பெய்து கொண்டிருக்கும் இரவில் போர்வையை இழுத்துப் போார்த்திக் கொண்டு நூலொன்றை வாசிப்பது அபாரமான அனுபவம்.

 'அனந்தியின் டயறி' நூலை கால் சதவீதம் கடந்து விட்டேன். இந்நூலை முதலில் இருந்து தொடர்ச்சியாக வாசிப்பதுதான் ஒருவகையில் சரிதான் என்றாலும் அவ்வாறுதான் வாசிக்க வேண்டுமென்கிற கட்டாயமேதும் ஏதும் இல்லாததே இந்நூலின் சிறப்பு. தோன்றுகிற பக்கத்தை பிரித்து எங்கிருந்து வேண்டுமானாலும் வாசித்துக் கொண்டு போகலாம். வாசிப்பதை சற்று நிறுத்தி பொ.கருணாகரமூர்த்தி என்கிற பெயரை முதன் முதலில் எங்கு கேள்விப்பட்டேன் என்று சற்று யோசித்துப் பார்த்தேன்.

பழைய கணையாழியில் 'தி.ஜானகிராமன் நினைவு விருது' குறுநாவல் போட்டிக்காக தொடர்ச்சியாக குறுநாவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. எனக்கு குறுநாவல் எனும் வடிவம் சற்று பிடிபட்டது அப்போதைய வாசிப்பில்தான். (இந்த குறுநாவல்கள் தொகுப்பாக வந்திருக்கிறதா என்று தெரியவில்லை, வந்திருந்தால் நல்லது).

அந்த வரிசையில்  'ஒரு அகதி உருவாகும் நேரம்' என்ற குறுநாவல் யாழ்ப்பாணத் தமிழில் அமைந்திருந்தது. பொ.கருணாகரமூர்த்தி என்கிற பெயரும் சட்டநாதன் என்கிற ஒரு கதாபாத்திரத்தின் பெயரும் மனதில் அழுத்தமாக பதிந்தது அந்தச் சமயத்தில்தான். உலகிலிருக்கும் மஹா அசடுகளை பட்டியலிட்டால் அதில் திருவாளர் சட்டநாதன் நிச்சயம் பத்துக்குள் வந்து விடுவார். அப்படியொரு மனிதர். தலைமாற்றி கள்ள பாஸ்போர்டில் ஆட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் குழுவொன்று சட்டநாதனை விதம் விதமாக மாற்றி மாற்றி அனுப்ப முயல்கிறது. ஆனால் மனிதரோ, துரத்தப்பட்ட கரப்பான்பூச்சி போல துரத்தியவரிடமே மிக வேகமாக வந்து சேர்கிறார்.

இயந்திர வாழ்வின் சிடுக்குகளில் இருந்து அவல நகைச்சுவையை பிரித்தறிந்து எழுதுவதென்பது நுட்பமான காரியம். பொ.கருணாகரமூர்ததிக்கு இது மிக எளிதாக கைவரப் பெற்றிருக்கிறது. புலம்பெயர் மக்களுக்கான பிரத்யேக துயரங்களை நேரடியாக புலம்பிக் கொட்டாமல் வாழ்க்கையனுபவங்களின் துளிகளிலிருந்து வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். இது போன்ற அவல நகைச்சுவையை திறம்பட வெளிப்படுத்துவர், இன்னொரு ஈழ எழுத்தாளரான அ.முத்துலிங்கம். தலைப்பு நினைவில் பிடிபடாத அவரது சிறுகதையொன்றில், வழக்கம் போல் தம்முடைய இளமைப்பருவ நினைவுகளை சுவாரசியமான தொனியில் பதிவு செய்து கொண்டே போகும் முத்துலிங்கம், சிறுகதையின் இறுதியில் சிங்கள ராணுவத்தினரின் நுழைவு எழுதப்பட்டிருக்கும் சொற்ப வரிகளின் மூலம் அச்சிறுகதையின் நிறத்தையே வேறு வகை துயரமாக மாற்றி விடுகிறார்.

25.11.2014


பனிக்காலத்தினால் ஏற்பட்டிருக்கும் ஜலதோஷமும் காதடைப்பும். மருத்துவரின் அறையின் முன்பான வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறேன். எங்கு போனாலும் பாழாய்ப்போன இந்த வரிசை. கையில் புத்தகம் வைத்திருந்தது நல்லதாய்ப் போயிற்று...

'அனந்தியின் டயறி' வாசிப்பு மிக சுவாரசியமாகப் போகிறது. இது அனந்தி என்கிற மாணவியின், காளிதாஸ் என்கிற புலம்பெயர் தமிழரின் மகளின் நோக்கில் விரிகிற டைரிக்குறிப்புகள் என்றாலும், நூலாசிரியராகிய கருணாகரமூர்த்தியும் அனந்தியுனுள் இரண்டறக் கலந்திருக்கிறார் என்பது வெளிப்படை. நூலாசிரியர் மகளுடன் கலந்து ஆலோசித்து எழுதினாரோ அல்லது எழுத்தாளர்களுக்கேயுரிய கூடுபாயும் திறமையுடன் எழுதினாரோ தெரியவில்லை, இளம்பருவத்து பெண்ணுக்குரிய தன்மைகளும் கனிவுகளும் குறும்புகளும் குழப்பங்களும் அந்த டயறிக் குறிப்புகளில் துல்லியமாக வெளிப்படுகின்றன. ஜெர்மனியில் அடைக்கலமாகியிருக்கும் தமிழ்க்குடும்பம் என்பதால் இருநாட்டு மக்களின் கலாசாரக் குறிப்புகளும் அதன் Cross Culture தன்மையோடு இயல்பாக பதிவாகியிருக்கின்றன. இரு தேசத்து பண்பாட்டுப் பின்புலத்தை குறுக்குவெட்டு சித்திரமாக வெளிப்படுத்தும் நூல்இது என்றும் சொல்லலாம். மாத்திரமல்லாமல் தமிழர்கள், தங்களுக்கு என்று பிரத்யேகமாகயுள்ள சில வழக்கங்களை அட்லாண்டிக் கடலுக்குள் குடிபுகுந்தால் கூட கைவிட மாட்டார்கள் என்கிற உண்மை இந்த நூலின் மூலம் மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.


04.12.2014


உடல்நலக்குறைவால் நூல் வாசிப்பதை தள்ளிவைக்க வேண்டியிருந்தது. என்றாலும் மனதினுள் காளிதாஸூம் அனந்தியும் கடம்பனும் மாறியோவும் உலவிக் கொண்டேதானிருக்கிறார்கள்...

டைரிக்குறிப்புகளைக் கொண்ட நூல் என்பதால் எந்தப் பக்கத்திலும் நுழைந்து எந்தப் பக்கத்தின் வழியாகவும் வெளியேறும் தன்மையை இந்த நூல் கொண்டிருக்கிறது. இதிலொரு பிரச்சினையும் உண்டு. புதினம் மாதிரியல்லாமல் ஒரு தனிநபரின் டைரியைப் போலவே ஒரே மாதிரியான, ஒரே விஷயத்தின் தொடர்ச்சியான சம்பவங்களின் குறிப்புகள் இடம்பெறுவதால் ஒருவிதமான சலிப்புத்தன்மையையும் இந்த நூல் ஏற்படுத்துகிறது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். ஒரு பெரிய இனிப்புத் துண்டை தொடர்ந்து சாப்பிடும் போது ஏற்படும் திகட்டல் போல. ஆகவே வெவ்வேறு இடைவெளிகளில் இந்த நூலை வாசிப்பதுதான் சரியானதாக இருக்கும். நானும் அவ்வாறுதான் இதை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.


07.12.2014


சமீபத்தில் மறைந்து போன இயக்குநர் ருத்ரய்யாவின் நினைவாக அவரின் திரைப்படமான 'அவள் அப்படித்தான் - ஐ பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னமும் தூக்கம் வரவில்லை. எனவே அனந்தியின் டயறி.....ஒரு வழியாக இன்று நூலை வாசித்து முடித்து விட்டேன்..

ஒவ்வொரு ஆங்கில வார்த்தைக்கும் பொருள் தேடும் அனந்தியின் டிக்ஷனரி குறிப்புகள், சமயங்களில் வெறுப்பேற்றும் தம்பி கடம்பனின் lateral thinking கேள்விகள், அனந்தி முகநூலில் வாசித்த கவிதைகள், சக மாணவிகளின் குணாதிசயங்கள், வாசித்த நூலைப் பற்றிய குறிப்புகள், பார்த்த சினிமாக்கள், Frau. Stauffenberg -க்கு பணிவிடை செய்யும் அனுபவங்கள், சீட்டு பிடித்தலில் ஏமாந்து நிற்கும் அம்மாவின் அப்பாவித்தனங்கள், காதல் முறைப்பாடு செய்யும் கண்ணியமானதொரு இளைஞனான 'மாறியோவிடம்'  'தமிழர் வாழ்வியலை' சற்று விளக்கி அவனை தள்ளி நிற்கச் செய்யும் சாமர்த்தியங்கள்...அவசரத்திற்கு பணம் வாங்கி பிறகு தராமல் ஏமாற்றும் தமிழர்களின் பிரத்யேக சிறுமைத்தனங்கள்...வீட்டுக்கடன் பயமுறுத்தல்கள்.... பாலுறவு குறித்து பாசாங்கு ஏதுமில்லாமல் இயல்பாக சிந்திக்கும் மேற்குலகின் முதிர்ச்சித்தனங்கள் என்று கலந்து கட்டி வரிசையாக வரும் இனிமையான யாழ்ப்பாணத் தமிழ் குறிப்புகளின் மூலம் அனந்தியின் குடும்பத்தை மிக நெருக்கமாக உணர முடிகிறது.

பொ. கருணாகரமூர்த்தி ஏற்கெனவே எழுதிய முந்தைய சில சிறுகதைகள் (கஞ்சத்தனம் கொண்ட மாணவி) இதில் மீண்டும் அப்படியே மீண்டும் வந்திருப்பது ஒருவகையில் இயல்புதான் என்றாலும் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது.  வாசிப்பதற்கு மிக மிக சுவாரசியமானதொரு நூல். அனந்தியுடன் சிநேகிதம் கொள்வதற்காவாவது தமிழுலகம் இந்நூலை வாசித்தாக வேண்டும். 

மதிப்புரை.காம் -ல் வெளியானது. (நன்றி: மதிப்புரை.காம்)

suresh kannan

Tuesday, January 20, 2015

உள்ளங்கையில் உலக சினிமா - வரமா சாபமா?

 80-களின் காலக்கட்டத்தில் அயல் சினிமாக்களைப் பார்ப்பதற்காக  சிறிய அளவில் இயங்கும் சினிமா சங்கங்கள் ஆங்காங்கே இருந்தன. பயங்கரவாத தலைமறைவு இயக்கங்கள் போலவே அவை ரகசியமாக இயங்கின. கிரந்த எழுத்துக்கள் தாராளமாய் புழங்கும் 'கீவ்ஸ்லோஸ்கி, தார்க்கோவ்ஸ்கி' போன்ற அந்நிய பெயர்கள் அந்த வட்டங்களின் உரையாடல்களில் இருந்து உதிர்ந்து கொண்டேயிருந்தன. குறுந்தாடி (பிரான்சு), முரட்டுக் கதர் ஜிப்பா, தடித்த பிரேம் கண்ணாடி ஆகியவை  அந்த அறிவுஜீவிகளை எளிதில் கண்டு கொள்ளும்படியாக  பொதுவான  புற அடையாளங்களாக இருந்தன. ..misconception of the plot is highly... என்று அவர்கள் தீவிரமாக உரையாடிக் கொண்டிருக்கும் போது இடையில் புகுந்தால் சிகரெட் புகையின் இடையில் தீவிரமாய் முறைக்கப்படும் போது . 'நான் கடைசியா பார்த்த இங்கிலிஷ் படம் ஷோலேங்க' என்று சொல்லி விட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடி வர வேண்டியிருக்கும். மனிதனின் காலில் இருந்து தலை ஆரம்பிக்கும் விநோதமான ஓவியங்கள் அட்டைப்படங்களாக இருக்கும் தேசலான புத்தகங்களில்....  பிரதிக்குள் பிரதி இயங்கும் அநேர்க்கோட்டு வடிவத்தின் மெட்டா சினிமாவான... என்பது போன்ற வாக்கியங்கள் முற்றுப்புள்ளி இல்லாமல் ஓடும் போது மொட்டையாக கூட நமக்கு ஏதும் புரியாது. தமிழ் சினிமாக்களை ஓரமாய் ஒதுக்கி நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து போலவே இவர்கள் அணுகுவார்கள்.. இந்த மாதிரியான திரைப்படங்களில் ஏதாவது 'மேட்டர்' தேறாதா என்று வேறு வகையான தேடல்களில் இருந்தவர்களும் இந்த ஜோதியில் கலந்திருந்தார்கள்.


-  உலக சினிமாக் குழுக்களைப் பற்றியும் அது சார்ந்து இயங்கியவர்களைப் பற்றியுமான என் அப்போதைய  மனப்பதிவு இப்படித்தான் இருந்தது.

ஓர் உலக சினிமாவைப் பார்ப்பதற்கே அல்லாடின காலம் போய் உலகமயமாக்கம்  எல்லாக் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து விட்டதில் நுட்ப வளர்ச்சிகளின் எதிரொலியாக டிவிடிகளாகவும் கணினி வழியாகவும் உலக சினிமாக்கள் இன்று வீட்டு வாசலில் வந்து கொட்டும் காலத்தில் இருக்கிறோம். இந்தியாவின் பெருநகரங்கள் எங்கும் திரைப்பட விழாக்கள் கார்ப்பரேட் அடையாளங்களுடன் கோலாகலமாய் கொண்டாடப்படுகின்றன. யானை பேண்ட் போட்டு டான்ஸ் ஆடும் இராமநாராயணன் படங்கள் பார்த்து வளர்ந்த இளைஞர்கள் .. அந்த மிட் ஷாட்ல காமிரா அப்படியே டிராவல் ஆகி.. என்று உரையாடுமளவிற்கு நுட்பங்கள் காலில் மிதிபட்டபடி இறைகின்றன. சினிமா உருவாக்கப்படும் நுட்பங்களை ஒளித்து வைத்த காலமெலலாம் மலையேறி விட்டது. behind the screen, making of the shots.. என்று டிவிடிகளின் இணைப்புகளில் காணப்படும் காட்சித் துண்டுகளின் மூலம் எல்லாமே வெட்ட வெளிச்சம். நல்லதுதான்.

என்றாலும் முதல்பாராவில் குறிப்பிடப்பட்ட குறுந்தாடி அறிவுஜீவிகளின் காலக்கட்டத்தில் சினிமா தேடலில் இருந்த அர்ப்பணிப்பும் உண்மையான ஆர்வமும் மாறி உலக சினிமா என்பது பாப்கார்ன் மாதிரி கொறிக்கும் விஷயமாக ஆகி விட்ட சமகாலத்தில் இருக்கிறோமா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

()


ஒவ்வொரு டிசம்பர் மாதமும் நிகழும் சென்னை சர்வதேச திரைப்பட விழா இந்த வருடமும் தொடர்ந்து 12வது ஆண்டாக  நடைபெற்றது. பல்வேறு நாடுகளின்  171 திரைப்படங்கள் இதில் திரையிடப்பட்டன. இந்த திரைவிழாவில், கண்களில் சினிமாக்கனவுகள் மின்ன பல இளைஞர்கள் தென்பட்டார்கள். பல லட்சம் முதலீடு செய்து பெற்ற இன்ஜினியரிங் கல்வியைக் கூட தூக்கிப் போட்டு இயக்குநராக வரத்துடிக்குமளவிற்கு சினிமாவின் மீதான மோகம் தலைவிரித்து ஆடுகிறது. அது கலைச்சேவை செய்வதின் உண்மையான தீவிர அடையாளம் என்று புரிந்து கொள்வதா அல்லது ஒரு ஜாக்பாட் அடித்தால் குறுகிய காலத்திலேயே புகழும் பணமும் கிடைக்கிற குறுக்கு வழியின் மீதான விருப்பம் என்று புரிந்து கொள்வதா என்று தெரியவில்லை.

உலக சினிமாக்கள் குறித்த ஆர்வமும் பரவலான விழிப்புணர்வும் தேடலுமான, எளிதில் கிடைக்கக்கூடியதுமான இந்த தற்போதைய நிலை, தமிழ் சினிமாவிற்கு சாதகமானதா என்று பார்த்தால் சில விஷயங்கள் சாதகமாகத்தான் இருக்கின்றன. கூடவே பாதகங்களும்.

ஒரு திரைப்படத்தை அணுகுவதில் பார்வையாளர்களிடமும் உருவாக்குவதில் இளம் இயக்குநர்களிடமும்  மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறன. தமிழ் சினிமாவின் தேய்வழக்கு காட்சிகள் இன்று பார்வையாளர்களிடம் நகைப்பை ஏற்படுத்துகின்றன.  இணையங்களில் கதறக் கதற கிண்டலடிக்கிறார்கள். உள்ளூர் சினிமாக்களை உலக சினிமாக்களோடு ஒப்பிட்டு அதிருப்தி அடைகிறார்கள்.  இந்த ரசனை மாற்றத்தை புரிந்து கொண்ட சில இயக்குநர்கள் கதை சொல்லும் உத்திகளிலும் காட்சிப்படுத்துதல்களிலும் இயன்ற அளவிற்கான வித்தியாசங்களை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் இந்த மாற்றங்கள்  குறுகிய அளவில் சொற்ப எண்ணிக்கையிலான இயக்குநர்களின் மூலமாகவே மட்டும் சாத்தியமாகின்றன. இவையும் தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைக்குள்தான் பயணிக்கின்றன. உள்ளடக்கங்களில் பெரிதாக ஏதும் மாற்றமில்லை. அதற்கான சூழலும் மலரவில்லை.

எந்தவொரு காட்சியோ அல்லது கதையோ அயல் சினிமாக்களில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நகலெடுக்கப்பட்டால், முன்பு போல் குறுகிய வட்டத்தில் மட்டும் அறியப்படுவது என்றில்லாமல், இன்று உடனடியாக  அதைக் கண்டுபிடித்து இணையப்  பெருவெளியில் அம்பலப்படுத்தி விடுகிறார்கள். ஒரு படைப்பிற்காக புகழப்படும் எந்தவொரு இயக்குநரின் நிலையும் அது கண்டுபிடிக்கப்படும் வரை சாஸ்வதமாக இல்லை. இன்னொரு அபத்தமும் நிகழ்கிறது. தூண்டுதலுக்கும் நகலெடுப்பிற்கும் உள்ள வித்தியாசம் அறியாமல் தேசலான ஒற்றுமைகளைக் கொண்டே அது நகலெடுக்கப்பட்டது என்று உரக்க கூவி தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள முயலும் சில ஆர்வக்கோளாறான ஆசாமிகளும் ஒரு புறம் இருக்கத்தான் இருக்கிறார்கள்.

உலக சினிமா என்கிற பாவனையில் சில போலியான படைப்புகள் அயல்நாடுகளில் வெளிவருவதைப் போலவே தமிழ் சினிமாவில் நிகழும் இம்மாதிரியான சமகால முயற்சிகளிலும் போலிகளும் அசட்டுத்தனமான நகலெடுப்புகளும் நிகழ்கின்றன. 80-களில் பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரய்யா போன்றவர்கள் ஐரோப்பிய பாணியிலான திரைப்படங்களின் பாதிப்பிலும்  பாணியிலும் தம்முடைய திரைப்படங்களை உருவாக்கினாலும் அவை அந்த படைப்புகளால் தூண்டப்பட்டு செரிக்கப்பட்டு உள்வாங்கி உள்ளுர் கலாசார பிரதிபலிப்புகளுடன் வெளியாகின. ஆனால் உலக சினிமாக்கள் பரவலாக காணக் கிடைக்கிற இன்றைய சூழலில் சில இளம் இயக்குநர்கள் அதிலிருந்து கதைகளை, காட்சிகளை அப்படியே நகலெடுத்து இணைக்கிறார்கள். எனவே இவை நம்முடைய கலாசார அடையாளங்களின் தொடர்பின்றி துருத்திக் கொண்டு நிற்கின்றன.

I Am Sam என்கிற ஆங்கிலப்படத்தின் கதை முதற்கொண்டு பிரதான பாத்திரத்தின் சிகையலங்காரம் வரை மோசமாக நகலெடுக்கப்பட்டு தமிழில் 'தெய்வ திருமகளாக' உருவானது. ஆங்கில திரைப்படத்தில் சாமும் அவனது நண்பர்களும் பலூன் வாங்கச் செல்லும் காட்சி, தமிழில் முன்பின் தொடர்ச்சி ஏதுமின்றி எவ்விதப் புரிதலும் இல்லாமல் அப்படியே தமிழில் நகலெடுக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படத்தில் ஓர் ஆசாமி டைட்டானிக் திரைப்படம் பின்னணியில் ஓட அத்திரைப்பட நாயகன் படமுள்ள மூகமுடியை அணிந்து கொண்டு நாயகியின் மூகமூடியணிந்த ஒரு பெண்ணுடன் சல்லாபம் செய்து கொண்டிருப்பான். இது Mask Fetishism எனும் மேற்கத்திய கலாசாரத்தின் அடிப்படையில் அமைந்த பாலியல் நுகர்விற்கான ஒரு விநோதமான தேர்வு. இது அதிகம் போனால் இந்திய காஸ்மோபாலிட்டன்  நகரங்களின் மேல்தட்டு மக்களிடம் இருக்கலாம். ஆனால் தமிழகத்தின் ஒரு சிறுநகரத்தில் உள்ள ரவுடியிடம் இது உள்ளதாக சித்தரிக்கப்படுவது கலாசார முரணாக, பொருத்தமற்றதாக உள்ளது. அயல்சினிமா டிவிடி சினிமாக்களில் பார்த்த காட்சிகளால் தூண்டப்பட்டதை அப்படியே பொருத்தமில்லாமல் பயன்படுத்துவதால் நேரும் அவல விபத்து இது.

()


இந்த சர்வதேச திரைவிழா, சிறிய அளவில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு சினிமா சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு சினிமா ஆர்வலர்களின், நடிகர்களின், தனியார் நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் இன்று பெரிய அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சாத்தியத்தை வந்தடைந்திருக்கிறது. உலக சினிமாக்களை பொதுவெளியில் பரவலாக்கும் இந்த முயற்சியும் அதன் பின்னணியில் இருக்கும் நபர்களின் உழைப்பும் ஆர்வமும் பாராட்டப்பட வேண்டியது.

தமிழக அரசு இதற்கான மானியத்தை அளித்து ஒதுங்கிக் கொள்ளாமல் இந்த முழு விழாவையும் தானே ஏற்று தகுதியான நபர்களின் ஒத்துழைப்புடனும் வழிகாட்டுதல்களுடனும் திறம்பட நடத்த வேண்டும். சினிமாவை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மாத்திரமே அணுகும் ஒரு மனப்பான்மை இங்கு உள்ளது. நல்ல சினிமாக்களை தொடர்ந்து பரப்புவதின் மூலம் அதை பொதுச் சமூகத்திடம் கொண்டு செல்வதின் மூலம் அறம் சார்ந்த விழுமியங்களை, அது தொடர்பான சிந்தனைகளை, செயலாக்கங்களை அந்த சமூகத்து மனிதர்களிடம் மெல்ல மெல்ல தூண்ட முடியும்.

பல்வேறு தனிநபர்களின் கூட்டு உழைப்புகளுக்குப் பிறகுதான் இது போன்ற திரைவிழாக்கள் சாத்தியமாகின்றன என்றாலும் இந்த ஏற்பாடுகளில் உள்ள சில நடைமுறை குறைகளை மாத்திரம் பணிவாக சொல்ல விரும்புகிறேன்.

உலக சினிமா என்கிற அடையாளத்துடன் வெளிவருகிற போலியான திரைப்படங்களை இனங்கண்டு அதை நிச்சயம் ஒதுக்கி விட வேண்டும். இத்தனை எண்ணிக்கையிலான திரைப்படங்கள் திரையிடப்படவிருக்கின்றன என்பதில் சாதனையோ பெருமையோ ஏதுமில்லை. மாறாக சிறந்த திரைப்படங்களையே எல்லா அரங்குகளிலும் வெவ்வேறு இடைவெளிகளில் திரையிடுவதின் மூலம் இந்த இடைவெளியை நிரப்ப முடியும். பெரும்பாலான பார்வையாளர்கள் இந்த சிறந்த திரைப்படங்களை தவற விடாமல் பார்ப்பதற்கு இந்த ஏற்பாடு உதவியாக இருக்கும். எது சிறந்த திரைப்படம், அதற்கான அளவுகோல் என்ன, யார் அதை தீர்மானிப்பது என்பதும் புறந்தள்ளி விட முடியாத கேள்விகள்தான் என்றாலும் உலக அளவில் பெரும்பான்மையாக ரசிக்கப்பட்டவை, விருதுகள் வாங்கியவை எனும் அளவுகோலை பின்பற்றலாம். உதாரணமாக ROSEVILLE  என்கிற பல்கேரிய திரைப்படம் மூன்றாந்தர ஹாரர் படம் போலவே இருந்தது என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். இது திரையிடப்படுவதற்கு முன் வேறு ஒரு திரைப்படம் தவறுதலாக திரையிடப்பட்டு  அது ஏறத்தாழ பதினைந்து நிமிடங்கள் ஓடின பிறகே படம் மாற்றப்பட்டது.

நம்மூர் அரங்குகளின் தரமே சற்று முன்னும் பின்னுமாக இருக்கும் போது அதில் திரையிடப்படவிருக்கும் பிரிண்ட்டுகளின் தரத்தையும் பார்க்க வேண்டும். கேஸினோவில் திரையிடப்பட்ட 'Now or Never' என்கிற பிரெஞ்சு திரைப்படம், சினிமா கண்டுபிடிக்கப்பட்ட போது உருவாகின திரைப்படம் போல மங்கலாக இருந்தது.

நான்கைந்து அரங்குகள் அமைந்திருக்கும் ஒரே கட்டிடத்தில் இந்த திரைவிழா நிகழ்த்தப்பட்டால், இன்னொரு அரங்கிற்கு குறுகிய நேரத்திற்குள் அடித்து பிடித்து ஓட வேண்டிய தேவையின்றி அடுத்த திரைப்படத்திற்கு சற்று சாவகாசமாக செல்ல முடியும்.

'திரைப்படம் துவங்கிய பத்து நிமிடங்களுக்குப் பிறகு அரங்கத்தின் கதவுகள் மூடப்படும்' என்று அட்டவணையில் பெயரளவில் உள்ள நிபந்தனையை கறாராக நடைமுறையாக்கலாம்.

()

இந்த திரை விழாவிற்கு வரும் பல ஆர்வமுள்ள இளைஞர்களை கவனிக்கிறேன். அவர்களின் தேடலும் ஆர்வமும் திரைப்படத்தை அணுகும் விதமும் சற்று பிரமிப்பை ஏற்படுத்தும் விதமாகத்தான் உள்ளன. ஆனால் ஒரு திரைப்படத்தை காட்சிக் கோணங்களை சிலாகிக்கும் வழியாக மாத்திரமே அணுகும் அபாரமான  ஞானமுள்ளவர்களையும் பார்க்கிறேன். திரைப்படம் என்பது வெறும் நுட்பம் மட்டுமா? அவை தரும் அனுபவங்களும் அவை நம் மனதினுள் படிய வைக்கும் சிந்தனைகளும் அவற்றின் மையங்களும்தானே பிரதானமாக அணுகப்பட வேண்டியது?

இதன் ஊடே 'ஏதாவது சீன் உள்ள படமா?' என்று இன்னொரு விதமான தேடலில் ஈடுபட்டிருக்கும் நபர்களையும் பார்க்கிறேன். 'அந்த படத்துல செம சூடாம்' என்று பரபரப்புடன் அதைப் பார்க்க முட்டி மோதுகிறார்கள். சுஜாதாவின் 'பிலிமோத்ஸவ்' என்கிற அற்புதமான சிறுகதை நினைவிற்கு வருகிறது. பாலியல் வறட்சி கொண்டிருக்கும் ஆனால் அதை பாசாங்குகளால் மூடி மறைக்கும் இச்சமூகத்தில் அதன் வடிகாலாலுக்கான சில விஷயங்களை பெரிய குற்றமாக கருத முடியாதுதான்.  ஆனால் மூன்றாந்தர மலையாளப் படங்களே அரைகுறையான  பாலியல் காட்சிகளை பார்ப்பதற்கான ஒரே வழி என்று இருந்திருந்த காலக்கட்டத்தில் வேண்டுமானாலும், சென்சார் செய்யப்படாத படங்களின் காட்சிகளைப் பார்க்க அலைமோதுவதற்கு ஒரு நியாயமான காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் பளிங்கு போன்ற பார்ன் வீடியோக்கள் இன்று சல்லிசான விலையில் கிடைக்கும் காலக்கட்டத்திலும் அந்த மாதிரியான காட்சிகளுக்காக அயல் திரைப்படங்களை நாடுவதும் பின்பு அதிருப்தியோடு எழுந்து சென்று சக பார்வையாளர்களை இடையுறு செய்வதும் நிச்சயம் முறையானதல்ல. பாலியல் காட்சிகளைப் பார்ப்பதற்காக ஒருவன் இது போன்ற திரைவிழாக்களை நாடுவான் எனில் அது போன்ற அபத்தமானதொன்று இருக்கவே முடியாது. திரைக்கதையின் அடிப்படையில் பாலியல் காட்சிகள் கொண்ட ஒரு சிறந்த திரைப்படத்தைக் கூட 'பிட்டு படமாக' பார்க்கும் குறுகலான, முதிர்ச்சியற்ற மனப்பான்மைக்கே அந்த மனோபாவம் இட்டுச் செல்லும்.

()


இந்த திரைவிழாவில் நான் முக்கியமாக அறிந்து கொண்ட நடைமுறை அனுபவம், அரங்கத்தின் கதவு அமைந்திருக்கும் அருகிலுள்ள இருக்கைகளில் அமரக்கூடாது என்பது. கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி தமிழ் என்றெல்லாம் அதன் தொன்மத்தை சிலாகிக்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் நாகரிகம் உருவாகி விட்ட வரலாற்றுக் கதைகளை பெருமையுடன் வாசிக்கிறோம். 'வரலாறு முக்கியம் அமைச்சரே' என்கிற பாணியில் உருவான புனைவுகளா அவை என்று எண்ணத் தோன்றுகிறது. அது உண்மையெனில் அதன் தொடர்ச்சி எங்கே, எதனால் அறுந்து போனது? இன்னமும் கூட பொதுவெளியில் புழங்கத் தெரியாத, மற்றவர்களுக்கு இடையூறு செய்யத் தெரியாத, நாகரிகம் பழகாத, நுண்ணுணர்வுகள் மழுங்கிப் போன சமுதாயமாக நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோமா என்று கவலையாக இருக்கிறது. அதன் உதாரணங்களை இது போன்ற பொது நிகழ்வுகளில் பார்க்கிறேன்.

ஒரு திரைப்படம் எத்தனை மணிக்கு துவங்கும் என்பது திரைவிழா பார்வையாளர்களுக்கு முன்பே அச்சிடப்பட்ட அட்டையின் மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய எல்லோருமே அதை வைத்திருக்கிறார்கள். ஆனால் படம் துவங்கி அரைமணி நேரம் வரை சிறிது சிறிதாக ஏறத்தாழ நூறு நபர்களாவது கதவைத் திறந்து உள்ளே நுழைந்து கொண்டேயிருக்கிறார்கள். சிலர் வெளியேறிக் கொண்டேயிருக்கிறார்கள். படம் பார்க்கும் மற்றவர்களுக்கு இடையூறு செய்கிறோமே என்கிற உணர்வு சிறிது கூட இருப்பதாக தெரியவில்லை. கைபேசியில் 'எங்க இருக்கே.. அங்க சீட் இருக்கா?" என்று ஏதோ சொந்த வீட்டில் நுழைவது போல உரத்த குரலில் பேசிக் கொண்டே நுழைகிறார்கள். போக்குவரத்து உள்ளிட்ட இன்ன பிற நடைமுறைக் காரணங்களுக்காக வேறு வழியில்லாமல் தாமதமாக நுழைபவர்களை கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வெளியே தேநீர்க்கடைகளில் அரட்டை அடித்து விட்டு தாமதமாக நுழைவதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கும் நபர்கள்தான் இப்படி எரிச்சலூட்டுகிறார்கள். ஒரு கலையை இத்தனை அலட்சியமாக அணுகுகிற  அந்த மனோபாவம்தான் கவலையை அளிக்கிறது. இன்னும் சிலர் படத்தின் இடையிலேயே மற்றவர்களைப் பற்றி ஒரு கவலையுமின்றி உரத்த குரலில் உரையாடுகிறார்கள். நம்முடைய ஆட்பேசத்தை தெரிவித்தால் முறைத்து விட்டு உரையாடலைத் தொடர்கிறார்கள்.

நன்றாக கவனியுங்கள். நான் குறை சொல்லிப் புலம்புவது ஏதோ ரஜினி திரைப்படத்தின் முதல் நாள் வெளியீட்டில் 'ஒரே கூச்சலாக இருக்கிறதே' என்று கூட அல்ல. அந்த அளவிற்கெல்லாம் கூட நான் எதிர்பார்க்கவில்லை. நல்ல கலைப்படைப்புகளை தேடி வருகிறவர்களுக்கு சில பொது குணாதிசயங்களும் மனோபாவமும் ரசனையும் உருவாகி இருக்கும். அதில் நுகர்வதில் ஏற்படும் இடையூறுகள் ஒருவருக்கு எந்த அளவிற்கான மனத் தொந்தரவுகளை அளிக்கும் என்பதை உணர்ந்திருப்பார்கள். ஆனால் அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு இப்படி அநாகரிகமாக நடந்து கொள்வது எப்படி என்பதுதான் புரியவில்லை. ஒரு நிகழ்ச்சிக்கு தாமதமாக வருவதுதான் பெருமை என்பது எப்படியோ நமக்குள் படிந்திருக்கிறது.  நம்முடைய குடிமையுணர்விலும் கலாசார வழக்கங்களிலும் எத்தனை பலவீனமாக இருக்கிறோம் என்பதையே இவையெல்லாம் சுட்டிக் காட்டுகின்றன. ஐரோப்பிய நாகரிகங்களை நாமும் பின்பற்ற வேண்டுமா? அவைதான் உயர்வானதா என்று விவாதித்து தங்களின் தவறுகளை நியாயப்படுத்த சிலர் முயலலாம். நல்ல பண்புகள் எந்தவொரு சமூகத்தில் இருந்தாலும் அதை நாமும் நகலெடுப்பதில் பின்பற்றுவதில் தவறில்லை. அதனால் எல்லாம் நம்முடைய அடையாளங்களை இழந்து விடுவோம் என்கிற தாழ்வுணர்வுகள் தேவையில்லை. அவை நம் சமூகம் இன்னமும் மேன்மையை அடையவே உதவும்.

உலக சினிமாக்களை பார்த்து விட்டோம் என்று அசட்டுத்தனமாக வெற்றுப் பெருமையுணர்வு கொள்வதில் ஏதும் உபயோகமில்லை. அவை நம் அகத்தில் ஏற்படுத்தும் அனுபவங்களும் மாற்றங்களும்தான் முக்கியமானவை. ஒருவகையில் இது போன்ற சினிமாக்கள் உருவாக்கப்படும் நோக்கமும் இதுதான்.

காட்சிப்பிழை, ஜனவரி 2015 இதழில் பிரசுரமானது - நன்றி காட்சிப்பிழை

suresh kannan

Monday, January 19, 2015

Manju is not a sex starved bitch....

ஒரேயொரு திரைப்படத்திற்காக, தமிழ் சினிமாவின் வரலாற்றின் பக்கங்களில் விமர்சகர்களாலும் ஆர்வலர்களாலும் ஒரு படைப்பாளி தொடர்ந்து நினைவுகூரப்படுகிறார் என்றால் நிச்சயம் அது அபூர்வமான விஷயம்தான். அத்திரைப்படம் 'அவள் அப்படித்தான்' - அந்த இயக்குநர் 'ருத்ரய்யா'. இதுவரை வெளியான அத்தனை தமிழ்த் திரைப்படங்களையும் வடிகட்டி அதில் கறாராக பத்து சிறந்த சினிமாக்களை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் அந்தப் பட்டியலில் என்னுடைய தேர்வாக நிச்சயம் 'அவள் அப்படித்தான்' இடம்பிடித்து விடும். அத்திரைப்படம் வெளிவந்த காலக்கட்டத்தையும் பின்னணியையும் வைத்து யோசிக்கும் போது அந்த திரைப்படத்தின் குறைகளையும் போதாமைகளையும் கடந்து கூட அதுவொரு மிகச் சிறந்த உருவாக்கம் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

1978-ல் வெளிவந்த இத்திரைப்படத்தை ஏறத்தாழ என்னுடைய 22 வது வயதில், அதாவது 1992-ல் பார்த்தேன். யாரிடம் இத்திரைப்படத்தைப் பற்றி முதலில் கேள்விப்பட்டேன் என்று நினைவில்லை. எழுத்தாளர் சுஜாதாவாக இருக்கலாம். ஏனெனில் என்னுடைய ரசனை மாற்றத்தின் பல வாசல்களை திறந்து விட்டவர் அவரே. அவருடைய அபுனைவு எழுத்துக்களில்தான் முதன்முறையாக பல சிறந்த எழுத்தாளர்களின், சத்யஜித் ரே உள்ளிட்ட பல அற்புதமான திரைக்கலைஞர்களின் அறிமுகங்கள் என்கேற்பட்டது. சத்யஜித் ரே மரணத் தறுவாயில் இருக்கும் போது ஞானோதயம் வந்த தூர்தர்ஷன் அவருடைய திரைப்படங்களை அப்போது தொடர்ச்சியாக  ஒளிபரப்பியது. 'பதேர் பாஞ்சாலி' என்கிற உன்னதத்தின் பின்னணியைப் பற்றி ஏதும் அறியாமலேயே அதை முதன்முறை பார்த்து விட்டு உறைந்து அமர்ந்திருந்த அந்த நள்ளிரவு நினைவுக்கு வருகிறது.

அதைப் போலத்தான் 'அவள் அப்படித்தானும்' பல நாட்கள் இத்திரைப்படத்தை தேடித் தேடி பின்பு நண்பர் ஒருவரிடமிருந்து இரவல் பெற்ற வீடியோவில் பார்க்க முடிந்தது. முதல் கவனிப்பிலேயே இது நிச்சயம் வித்தியாசமானதொரு திரைப்படம் என்கிற எண்ணம் உருவாகி விட்டது. பின்பு சில பல முறைகள் பார்த்த பிறகு, ஏன் சமீபத்தில் பார்த்த பிறகும் கூட இத்திரைப்படத்தின் மீதான ஆச்சரியமும் பிரமிப்பும் குறையவேவில்லை. தமிழ் சினிமாவின் துவக்கந்தொட்டே பெண் கதாபாத்திரங்களுக்கென்று பிரத்யேக தனித்தன்மையோ முக்கியத்துவமோ அளிக்கப்பட்டதில்லை என்பது வெளிப்படை. தன்னுடைய ஆளுமையை தன் திறமைகளினால் தானே உருவாக்கிக் கொண்ட பானுமதி போன்ற விதிவிலக்குகள் இருக்கலாம். என்றாலும் கே.பாலச்சந்தரின் திரைப்படங்களுக்குப் பிறகுதான் சுயஅடையாளமுடைய நடுத்தர வர்க்க பெண் கதாபாத்திரங்கள் திரையில் உருவானார்கள். என்றாலும் அவர்கள் இயல்பு மீறிய நாடகத்தனத்துடனும் மிகையுணர்ச்சியுடனும் இயங்கினார்கள். இந்த வகையில் 'மஞ்சு'தான் பிரத்யேக தனித்தன்மையோடு  யதார்த்தமாக உருவாக்கப்பட்ட தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி எனலாம். ஆண்களின் தொடர்ச்சியான கயமைத்தனங்களால் ஓர் இளம்பெண்ணின் மனதில் படிந்திருந்த புழுதிகளை, அதன் சிடுக்குகளை உளவியல் நோக்கோடும் யதார்த்த அழகியலோடும் ஒரு பெண் கதாபாத்திரம் 'மஞ்சு' விற்கு முன்னாலும் பின்னாலும் உருவாக்கப்படவேயில்லை என்று கூறலாம். அது வரை கவர்சசி பிம்பமாகவே நோக்கப்பட்டிருந்த ஸ்ரீபிரியா எனும் நடிகையை இத்தனை துல்லியமான திறமையுடன் இத்திரைப்படத்திற்கு முன்பும் பின்பும் எவரும் பயன்படுத்தவில்லை என்பதிலிருந்தே கதாபாத்திரங்களை செதுக்குவதில் ருத்ரய்யாவிடமிருந்த நுட்பமான கலையாளுமையை கண்டுகொள்ள முடியும்.

இத்தனை சிறப்பான திரைப்படத்தை தந்திருந்தவர் வேறு எந்த திரைப்படமாவது உருவாக்கியிருக்கிறாரா என தேடிப்பார்த்தேன். 'கிராமத்து அத்தியாயம்' என்று தெரியவந்தது. வழக்கம் போல் இதற்கான பிரதியை தேடியலைந்தேன். எங்கும் கிடைக்கவில்லை. வரலாற்று ஆவணங்களையும், பழைய திரைப்படங்களின் பிரதிகளையும் பாதுகாக்கத்தவறும் நம்முடைய அலட்சியம் குறித்து எத்தனை முறைதான் வேதனையும் பெருமூச்சும் கொள்வது? சில வருடங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சியில் 'கிராமத்து அத்தியாயம்' திரையிடப் போகிறார்கள் என்று அறிந்ததும் மிக்க மகிழ்ச்சியுடன் பார்க்க அமர்ந்தேன். மிக சுமாரான உருவாக்கமாகத்தான் அத்திரைப்படம் அமைந்திருந்தது. அது நாடகக் கலைஞர்களைப் பற்றிய திரைப்படம் என்பதாக நினைவு. பெரிய  விரிந்த விழிகளுடன் ராஜாவிற்கான உடைகளை அணிந்திருந்த சந்திரஹாசனின் ஒரு காட்சி மாத்திரமே இப்போது நினைவில் தங்கியிருக்கிறது. இத்திரைப்படத்தின் பாடல்கள் மாத்திரம் இன்று இணையத்தில் காணக் கிடைக்கி்ன்றன.

()


'அவள் அப்படித்தான்' திரைப்படம் வெளியானதற்கு முன்னும் பின்னுமான காலக்கட்டத்தை சற்று கவனிக்க வேண்டும். புராண நாடகங்கள் ஓய்ந்ததற்கு பின் மிகையுணர்ச்சி சமூக நாடகங்கள் வெற்றிகரமாக அரங்கேறிக் கொண்டிருந்த சமயத்தில் உலக சினிமாக்களில் ஏற்பட்டதாக்கத்தினாலும் இயல்பாகவும் தமிழ் திரையில் சிலபல மாற்றங்கள் ஏற்பட்டன. ஒருபுறம் அதுவரை ஒலித்துக் கொண்டிருந்த மரபு சார்ந்த கர்நாடக இசையையும் மெல்லிசையையும் உடைத்துக் கொண்டு தனது பிரத்யேக நாட்டுப்புற இசை கொண்டு ஆரவாரத்துடன் உள்ளே நுழைகிறார் இளையராஜா (1976). ஜான் ஆப்ரகாமின் 'அக்ரஹாரத்தில் கழுதை' வெளிவந்து அறிவுஜீவி பார்வையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்துகிறது (1977). படப்பிடிப்புத் தளங்களிலேயே மூச்சுத் திணறி சிக்கிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை தனது 'பதினாறு வயதினிலே' மூலம் வெளியே கொண்டு வந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைக்கிறார் பாரதிராஜா. அசலான கிராமத்து மனிதர்கள் திரையில் தோன்றி வட்டார மொழியில் பேசி பார்வையாளர்களுடன் நெருக்கமாகிறார்கள். (1977). ஒருபுறம் பாலுமகேந்திராவும் (அழியாத கோலங்கள் -1979) இன்னொரு புறம் மகேந்திரனும்  (உதிரிப்பூக்கள் - 1979) உன்னதமான படைப்புகளை தந்து கொண்டிருக்கிறார்கள். மேற்கு வங்கத்தையும், கேரளத்தையும் போலவே தமிழ் சினிமாவிலும் யதார்த்த திரைப்படங்களின் அலை அடிக்கத் துவங்கின காலகட்டம். இதற்கு இடையில்தான் 'அவள் அப்படித்தான்'  வெளியாகிறது (1978). இந்தச் சூழல் அப்படியே கனிந்து அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்திருந்தால் ஒருவேளை இன்று தமிழ் சினிமாவைப் பார்த்து நாம் இத்தனை எரிச்சல் கொண்டிருக்காததொரு சூழல் மலர்ந்திருக்கலாம். பின்னர் 'முரட்டுக்காளை' 'சகலகலாவல்லவன்' போன்ற வணிக மசாலாக்கள் வெளிவந்து ஆரவாரமான வெற்றியையும் கவனத்தையும் பெற்று இந்தச் சூழலை அப்படியே மூழ்கடிக்கின்றன.

'அவள் அப்படித்தான்' போன்றதொரு அற்புதமான திரைப்படத்தைத் தந்து விட்டு ருத்ரய்யா என்கிற இந்த மனிதர் தமிழ் சினிமா வெளியிலிருந்து ஏன் காணாமற் போனார் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். அவரது சமீபத்திய மறைவிற்குப் பின் அவரது நண்பர்களின் மூலம் வெளிவந்த நினைவஞ்சலிக் கட்டுரைகளிலிருந்து அவர் தமிழ் சினிமாவில்  பணியாற்றுவதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டும் அதற்காக பல முயற்சிகளை திட்டமிட்டுக் கொண்டும், முட்டி மோதிக் கொண்டும்தான் இருந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. ரோமியோ - ஜூலியட் வகை கதையொன்றை வைத்து ஏ.ஆர்.ரகுமானின் இசையில் ஒரு 'மியூஸிக்கல்' திரைப்படத்தை கொண்டு வருவதான சமீபத்திய கனவு வரை இந்த நிறைவேறாத பயணம் தொடர்ந்திருக்கிறது. அவள் அப்படித்தான் திரைப்படத்திற்கு முன்பே தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' புதினத்தை திரைப்படமாக்குவதற்கான முயற்சிகள் திட்டமிட்டு தி.ஜாவிடம் அனுமதியும் பெறப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கப்பட்டிருக்கிறது. அதிகம் வெளிப்புறப்படப்பிடிப்புகளையும் அதற்கான செலவுகளையும் கோரும் படைப்பு என்பதால் அது சாத்தியமாகாத சூழலில் எளிமையான திட்டமாக 'அவள் அப்படித்தான்' துவங்கியிருக்கிறது. இதற்கான பின்னணிகளில் கமல்ஹாசன் தனது விலைமதிப்புள்ள நேரத்தையும் ஆர்வத்தையும் ஒத்துழைப்பையும் தந்திருக்கிறார். ஆனால் ஓர் அசலான கலைஞனுக்கேயுரிய நுண்ணுணர்வுத்தன்மையும் சுயமரியாதையும் சமரசமற்ற தன்மையையும் கொண்டிருந்த ருத்ரய்யாவால் வணிகத்தை மாத்திரமே தனது பிரதான நோக்காக கொண்டிருக்கிற தமிழ் சினிமாவின் அபத்தமான சூழலில் ஏன் தொடர்ந்து இயங்க முடியவில்லை என்பதை உத்தேசமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

()


ஆறுமுகம் என்று அறியப்பட்ட இயக்குநர் ருத்ரய்யா,  சென்னை அரசு திரைப்படக்கல்லூரியில் இயக்குநர் பயிற்சியை முடித்து தங்கப்பதக்கம் பெற்ற சாதனையாளராக 1975-ல் வெளியேறுகிறார். பிரான்சில் உருவான புதிய அலை திரைப்படங்களின் தாக்கம் சென்னையிலும் பரவத் துவங்குகிறது. ஆங்காங்கே சிறிய அளவில் திரைப்படச் சங்கங்களும் திரையிடல்களும் நிகழ்கின்றன. கோடார்ட், போலன்ஸ்கி, ரோஸெலினி, பிரெஸ்ஸான் போன்ற பெயர்கள் அந்நியமின்றி பரிச்சயமாகத் துவங்குகின்றன. இவைகளால் பாதிக்கப்பட்ட அறிவுஜீவி இளைஞர்களில் ஒருவரான ருத்ரய்யா தமிழ் சினிமாவிலும் அவைகளைப் போன்றதொரு பரிசோதனை முயற்சியை நிகழ்த்த வேண்டுமென்கிற ஆர்வத்தைக் கொள்கிறார். இதே போன்றதொரு ஆர்வத்தைக் கொண்டிருந்த கமல்ஹாசனின் அறிமுகம் கிடைக்கிறது. முன்பே குறிப்பிட்டபடி தி.ஜா.வின் புதினத்தை சாத்தியப்படுத்த முடியாதபடி நடைமுறைச் சிக்கல்கள் வந்ததால் எளிய திட்டமாக 'அவள் அப்படித்தான்' திரைப்படத்திற்கான முயற்சிகள் துவங்குகின்றன. உலக சினிமாக்கள் பற்றி நிறைய அறிமுகங்களும் ஞானமும் கொண்ட, பாலச்சந்தரின் உதவியாளராக இருந்த 'அனந்து' இந்த திட்டத்திற்கு மிகப் பெரிய பக்கபலமாக வந்து சேர்கிறார். (உலக சினிமா ஞானமுள்ள அனந்து இயக்கிய திரைப்படமான 'சிகரம்' ஏன் அத்தனை சுமாராக இருந்தது என்பது எனக்கு எப்போதுமே ஒரு ஆச்சரியமான விஷயம்).

ஒளிப்பதிவாளர்களாக ருத்ரய்யாவின் சக மாணவரான நல்லுசாமியும் ஞானசேகரனும் (பாரதி திரைப்படத்தின் இயக்குநர்) அமைகிறார்கள். இன்னொரு சகமாணவரான சோமசுந்தரேஸ்வரர் (பின்னர் அமரன் போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜேஷ்வர்)  எழுதிய கதைக்கு ருத்ரய்யா திரைக்கதை எழுதுகிறார். அனந்துவின் பல ஆலோசனைகளும் பங்களிப்பும் மிக பக்கபலமாக  இருக்கின்றன.  (இத்திரைப்படம் அனந்துவிற்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது) . அனந்துதான் ரஜினிகாந்த்தை இந்த திரைப்படத்திற்குள் கொண்டு வருகிறார். எனவே ரஜினிக்கான காட்சிகள் விஸ்தரிக்கப்படுகின்றன. இதில் நடிப்பதற்கான சம்பளத்தையும் ரஜினி வாங்க மறுத்திருக்கிறார்.

வசனங்களின் உருவாக்கத்தில் எழுத்தாளர் வண்ணநிலவனும் இணைகிறார். 'மஞ்சு' கதாபாத்திரத்திற்கு முதலில் படாபட் ஜெயலட்சுமியை யோசிக்கிறார்கள். அது சாத்தியப்படாததால் அப்போது புகழின் உச்சத்தில் இருந்த (ஆட்டுக்கார அலமேலுவில் நடித்த ஆடும் உலகப் புகழ் பெற்றிருந்தது) ஸ்ரீபிரியாவை அழைத்து வருகிறார் கமல்ஹாசன். திரைப்படக்கல்லூரி மாணவர்களின் முயற்சி என்பதால் மிகக் குறைந்த சம்பளத்திற்கு ஒப்புக் கொள்கிறார் ஸ்ரீபிரியா. தன்னுடைய திரைப்பட பயணத்திலேயே மிக மிக முக்கியமானதொரு இடத்தை தரப் போகின்ற படைப்பிது என்பது அவருக்கு அப்போது நிச்சயம் தெரிந்திருக்காது. கண்ணதாசனும் (வாழ்கை ஓடம் செல்ல) கங்கை அமரனும் பாடல்களை எழுதுகிறார்கள். 'பன்னீர் புஷ்பங்களே' பாடலின் சரணங்களை  கமல் எழுதியதாக ஒரு தகவலும் உண்டு. இத்திரைப்படத்திற்கு இசையமைக்க அப்போது பிஸியாக இருந்த இளைராஜாவை அழைத்து வருகிறார் கமல். அற்புதமான பாடல்களின் மூலம் இத்திரைப்படம் இன்றும் நினைவில் இருப்பதற்கு காரணம் ராஜா என்பதை யாரும் மறுக்க முடியாது. பின்னணி இசைக்காக அவர் பணிபுரிய இயலாத சூழ்நிலையில் இத்திரைப்படத்திற்கான பின்னணி இசையை எல்.வைத்தியநாதன் அமைத்திருக்கிறார்.

கமல்- ரஜினி- ஸ்ரீபிரியா என மூவருமே பிஸியான நடிகர்கள் என்பதால் அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்  சமயங்களில்தான் படப்பிடிப்பு நடக்கிறது.  காட்சிகளை கட் செய்து எடுத்தால் அதிக நேரமும் செலவும் ஆகும் என்பதால் பல காட்சிகள் லாங் டேக்கில் கிடைக்கிற வெளிச்சத்தில் பதிவாகின்றன. குறைவான ஆட்களுடன் இயங்கும் குழு என்பதால் சமயங்களில் இயக்குநர் ருத்ரய்யாவே லைட்டிங்கிற்கு உதவியிருக்கிறார். நடிகர்கள் ஒப்பனைகள் ஏதுமில்லாமல் தான் அணிந்திருக்கும் அதே ஆடைகளுடன் நடிக்கிறார்கள். நடிகர்களின் வீடுகள், அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன் என்று கிடைத்த இடங்களில் எல்லாம் சாத்தியமானவற்றைக் கொண்டு ஏறத்தாழ நியோ ரியலிச பாணியில் இந்த எளிய திரைப்படம் உருவாகி 30, அக்டோபர் 1978-ல் வெளியாகிறது. வண்ணப்படங்கள் பரவலாக வெளிவந்து கொண்டிருந்த சமயத்தில் இடையில் இந்த கறுப்பு - வெள்ளைத் திரைப்படம். ஒருவேளை இது வண்ணத்தில் வெளியாகியிருந்தால் கூட இத்தனை அழகியலுடன் இருந்திருக்குமா என சந்தேகமே.

அவள் அப்படித்தான் வெளியான சமயத்தில் கமல்- ரஜினி- ஸ்ரீபிரியா என்று இதே கூட்டணியில் வெளிவந்த இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படம் வெற்றிகரமாக ஓடியிருந்த சமயம். அதே மாதிரியான திரைப்படம் என்று நினைத்து ரசிகர்கள் உள்ளே நுழைந்தார்களா என தெரியவில்லை. முதல் நாளிலேயே அவர்களுக்குப் பிடிக்காமல் திரையரங்குகளில் நாற்காலிகளை உடைத்து கலாட்டா செய்ததில் இரண்டு நாட்களிலேயே அரங்குகளில் இருந்து படத்தை தூக்கி விட்டார்கள். படக்குழுவினர் சோர்ந்திருந்த சமயத்தில் அப்போது சென்னை வந்திருந்த மிருணாள் சென், இத்திரைப்படத்தை யதேச்சையாக பார்த்து விட்டு 'இத்தனை சிறப்பாக வெளிவந்துள்ள திரைப்படம் ஏன் இங்கு ஓடவில்லை?' என்று பத்திாிகையாளர் சந்திப்பில் கேட்டிருக்கிறார். பாரதிராஜாவும் இத்திரைப்படத்தைப் பற்றி சிறப்பாக பேட்டியளித்திருக்கிறார். அதன் காரணமாக மறுவெளியீட்டில் இத்திரைப்படம் ஓரளவிற்கு நன்றாக ஓடியுள்ளது.

()

பெண் சுதந்திரம், விடுதலை, அவர்கள் படும் துயரங்கள் (கட் இட்)  பற்றி ஆவணப்படமொன்று எடுக்கும் உத்தேசத்துடன்  சென்னைக்கு வருகிறவன் அருண். (கமல்ஹாசன்). கலைஞனுக்கேயுரிய மென்மையும் நுண்ணுணர்வும் உள்ளவன். பெண்கள் படும் துயரங்களை உணர்ந்து அவர்களை அனுதாபத்துடன் அணுகுகிறவன்.

தாயின் துர்நடத்தையாலும் அதனால் எழும் குடும்ப சச்சரவுகளாலும் சிறுவயதிலேயே மனக்கசப்புகளை அடைகிறவள் மஞ்சு. (ஸ்ரீபிரியா). தகப்பன் வயதுள்ள தாயின் காதலனால் பாலியல் தொந்தரவிற்கு ஆளாகிறவள். விடலைப்பருவ வயதில் வரும் காதலில் சற்று ஆறுதலை அடைந்தாலும் கோழைத்தனமான காதலனால் அதில் தோற்றுப் போகிறவள். பின்னர் ஆறுதலும் ஆதரவாயும் கிடைக்கிற நண்பனொருவன் தன்னுடைய வாழ்க்கைத் துணையாயும் வருவான் என நினைக்கும் போது  அவனும் இவளை உபயோகப்படுத்தி விட்டு 'அவ என் தங்கச்சி மாதிரி' என்கிறான். இப்படி ஆண்களால் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதால் ஆண்கள் குறித்த ஒவ்வாமையும் அது தொடர்பான மனச்சிக்கல்களையும் கொண்டவள். என்றாலும் தன்னுடைய கசப்பான அனுபவங்களிலிருந்தே அதை எதிர்கொள்ளும் துணிச்சலையும் பெற்றுக் கொள்கிறாள்.

விளம்பரக் கம்பெனி நடத்தும் தியாகு. அப்பட்டமான ஆணாதிக்கத்தன்மையைக் கொண்டவன். வாழ்க்கையின் எல்லா விஷயங்களையும் இரண்டு தலைப்புகளில் அடக்கி அபத்தமான தத்துவங்களைப் பொழிகிறவன். 'பெண்கள் ரசிக்கப்படுவதற்கும் ருசிக்கப்படுவதற்கும் மட்டுமே பிறந்தவர்கள்' என்கிற அளவிற்கான பெண் பித்தன். ' You are a prejudiced ass' என்று அருண் இவனை கோபத்துடன் விமர்சிக்கும் போது  'Yes am a male ass' என்று அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் அளவிற்கான கோணலான நேர்மை கொண்டவன்.

இந்த மூன்று வெவ்வேறு  குணாதிசயங்களின் முரணியக்கங்களோடு திரைப்படம் இயங்குகிறது. தன்னுடைய விளம்பரக் கம்பெனியில் பணிபுரியும் மஞ்சுவை, அருணுக்கு அறிமுகப்படுத்தி அவனுடைய ஆவணப்பட வேலைகளில் ஒத்தாசையாக இருக்குமாறு மஞ்சுவை கேட்டுக் கொள்கிறான் தியாகு. மென்மையான மேன்மையான குணத்தைக் கொண்ட அருணுக்கு அதன் எதிர்திசையில் கோபமாகவும் துணிச்சலாகவும் இயங்கும் மஞ்சுவை நுட்பமாக கவனிக்கத் தோன்றுகிறது. எதிர் துருவங்கள் இயல்பாகவே ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்படுகின்றன. மஞ்சுவின் சினிக்கலான தன்மைக்கு பின்னணியில் உள்ள காரணங்களை மஞ்சுவிடமிருந்தே அறிந்து கொள்ளுமளவிற்கு அவளுடைய நம்பிக்கையைப் பெறுகிறான். மஞ்சுவும் அருணை நெருங்கி வந்தாலும் தன்னுடைய சுபாவப்படி அவனுடைய ஈகோவை தொடர்ந்து சீண்டிக் கொண்டேயிருக்கிறாள். மஞ்சுவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அருணுக்கு ஒரு கட்டத்தில் பொறுமையின் எரிபொருள் தீர்ந்து விடுகிறது. தன்னுடைய தந்தையின் உருக்கமான வேண்டுகோளையாவது  நிறைவேற்றுவோம் என்று அவர் பார்த்து வைத்திருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக ஊருக்குத் திரும்புகிறான்.

ஆணாதிக்கத் திமிரோடு தன்னை தொடர்ந்து அவமதித்துக் கொண்டேயிருக்கும் தியாகுவை ஒரு கட்டத்தில் அதற்கான பழிவாங்கலை முடித்த மஞ்சு, அருணிடம் தன்னை வெளிப்படுத்த முடிவெடுக்கும் போது காலம் கடந்து விடுகிறது. அருண் தன் புது மனைவியோடும் (சரிதா) தியாகு மற்றும் மஞ்சுவோடும் காரில் பயணிக்கும் காட்சியோடு படம் நிறைகிறது.

()


படத்தின் ஒன்லைனை எழுதிய ராஜேஷ்வர் அப்போது ஆவணப்படம் எடுக்கிறவராக இருக்கிறவராக இருந்ததால் அருணின் பாத்திரமும் அதையே எதிரொலித்திருக்கலாம். ஒவ்வொரு பாத்திரமும் அதற்குரிய தனித்தன்மையோடு மிக கச்சிதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மென்மையானதொரு ஜென்டில்மேன் பாத்திரம் கமல்ஹாசனுக்கு. அவர் உருவத்திற்கு மிகப் பொருந்தியிருக்கிறது. மஞ்சுவின் உளச்சிக்கலை புரிந்து கொண்டு அனுதாபத்தோடு அணுகும் சமயங்களில் அவளிடம் தோற்றுப் போகும் அவமான உணர்வை மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஊருக்கு திரும்பும் முன்பு மஞ்சுவின் தோழியிடம் மஞ்சுவைப் பற்றி 'அவங்க கூண்டில் அடைபட்ட புலி மாதிரி. வெளியே இருந்து வேடிக்கைதான் பார்க்க முடியும். உள்ளே போய் பார்க்க முடியாது' என்கிற வசனத்தில் "கூண்டில் அடைபட்ட புலி' என்பது மஞ்சுவின் கதாபாத்திரத்தைப் பற்றியதொரு சிறப்பான படிமம்.

கையில் விஸ்கியோடும் வாயில் சிக்கனோடும் நெற்றியில் விபூதிப் பட்டையோடும்  'இங்க பாருடா மாப்ள' என்று பெண்களைப் பற்றிய கீழ்மையான தத்துவங்களை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும் ஒரு ஆணாதிக்கப் பன்றியின் சித்திரத்தை மிக மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினிகாந்த்.  ரஜினியை வணிக சினிமாவின் முகமாக மட்டுமே அறிந்திருக்கும் இன்றைய இளைய தலைமுறை ரசிகர்கள் இத்திரைப்படத்தில் ரஜினியின் அநாயசமான நடிப்பை நிச்சயம் பார்க்க வேண்டும். ரஜினி என்கிற இயல்பான நடிகன்,  சூப்பர் ஸ்டார் என்கிற வணிக பிம்பத்திடம் சிக்கி அடைபடாமலிருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்கிற பெருமூச்சையே ரஜினியின் அற்புதமான நடிப்பு உணர்த்துகிறது.

இத்திரைப்படத்தில் அதிகம் ஸ்கோர் செய்திருப்பவர் சந்தேகமேயின்றி ஸ்ரீபிரியா தான். (இவருடைய இளவயது பாத்திரத்தில் நடித்திருப்பவர் சித்ரா). தன்னுடைய சினிக்கலான தன்மையை வெடுக்கென்று வசனங்களின் மூலமும் முகபாவங்களின் மூலமும் வெளிப்படுத்துவது அருமை.  தன்னை நெருங்கி வரும் அருணை ஹிஸ்டீரியா மனநிலையில் கத்தி துரத்துவதும் பின்பு அவனையே கட்டியணைத்து அந்த அரவணைப்பில் அமைதி கொள்கிற ஒரு காட்சிக் கோர்வையில் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார் ஸ்ரீபிரியா. ஆண்களின் தொந்தரவுகளை தவிர்க்க தன்னை கோபக்காரியாக சித்தரித்து போட்டுக் கொள்ளும் வேலியே அவளது அடையாளமாக மாறிப் போகும் துயரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

திரைப்படம் என்பது காட்சிகளால் உணர்த்தப்பட வேண்டிய ஊடகம் என்றாலும் கூட இத்திரைப்படத்தின் வசனங்கள் மிக முக்கியமானவை. ருத்ரய்யா, ராஜேஷ்வர், வண்ணநிலவன் என்று மூவருக்குமே இதில் பங்கிருப்பதால் யாருக்கு கிரெடிட் கொடுக்க வேண்டுமென்று கூட தெரியவில்லை. இன்றைய கால திரைப்படத்தில் கூட எழுத தயங்குமளவிற்கான துணிச்சலான, கூர்மையான வசனங்கள். 'அவன் என்னை தங்கச்சி -ன்னு சொல்லாம தேவடியா -ன்னு கூப்பிட்டிருநதா கூட நான் சந்தோஷப்பட்டிருப்பேன்' -  படத்தின் இறுதிக்காட்சி முக்கியமானது. கமலின் புது மனைவியிடம் மஞ்சு கேட்பாள் ' பெண் சுதந்திரம் பற்றி என்னை நினைக்கறீங்க?" அவள் அப்பாவித்தனமாக சிரித்து விட்டு 'அதைப் பற்றி எனக்கொன்னும் தெரியாது" - உடனே மஞ்சு சொல்வாள் "அதனாலதான் நீங்க சந்தோஷமா இருக்கீங்க".  அறியாமையே பேரின்பம். இந்த ஆணாத்திக்கத்தனமான சூழல் இன்றும் கூட மாறவில்லை. பெண்கள் தங்களின் கூடுகளில் இருந்து வெளியே வந்து பறக்க முயல்வதை, இத்தனை ஆண்டுகள் கழித்தும் கூட பழமைவாத ஆண் மனங்கள் விரும்புவதில்லை. மஞ்சு மாத்திரமல்ல, சமகால பெண்கள் கூட மீண்டும் மீண்டும் இறந்து கொண்டே மறுபடிமறுபடி பிறந்து கொண்டுதானிருக்கிறார்கள்.  'பெண்ணிய சிந்தனை உள்ள ஒருவர் கடைசியில் நடுத்தெருவில் நிற்பார் என்பதுதான் இந்தப் படத்தின் செய்தியா?" என்று இந்த திரைப்படத்தைப் பற்றி ஒரு பெண் எழுத்தாளர் கேட்டாராம். ஒரு படைப்பை அதன் எதிர் திசையில் புரிந்து கொளவது என்பது இதுதான்.

படத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மையான அண்மைக் கோணங்கள், தவளைப் பாய்ச்சல் உத்திகளும் வசீகரமாக இருக்கின்றன. அப்போதைய காலக்கட்டத்தில் நிச்சயம் இது புதுமையாக இருந்திருக்கும். படத்தின் பின்னணியிசை தேவையான இடங்களில் அளவாய் ஒலித்து காட்சிகள் மெருகேற உதவியிருக்கிறது. ஐரோப்பிய பாணியிலான சினிமாவை தமிழில் பார்த்த உணர்வை தருகிறது இத்திரைப்படம். குறைந்த அளவு சாத்தியங்களுடனேயே இத்தனை அற்புதமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம், இயக்குநர் கற்பனை செய்த அளவிற்கு சாத்தியப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. 'பதேர் பாஞ்சாலி' திரைப்படத்தை இன்னமும் பார்க்காதவர்கள் தங்கள் வாழ்வின் உன்னத அனுபவமொன்றை இழந்தவர்கள்' என்றார் சுஜாதா. இந்த வாக்கியங்களை 'அவள் அப்படித்தான்' திரைப்படத்திற்கும் அப்படியே பொருத்திப் பார்க்க விரும்புகிறேன்.

காட்சிப்பிழை, ஜனவரி 2015 இதழில் பிரசுரமானது - நன்றி காட்சிப்பிழை

   
suresh kannan

Sunday, January 18, 2015

கே.பாலச்சந்தர் - கலகக்குரல்களின் முன்னோடி 'கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு கர்வமா இருக்கலாம், கர்ப்பமாத்தான் இருக்கக்கூடாது'  - அவள் ஒரு தொடர்கதை என்கிற திரைப்படத்தில் இருந்த இந்த ஒரு வரி வசனத்தில் இருந்த குறும்புத்தனமும் சீற்றமும்தான் யார் இந்த பாலச்சந்தர் என்று என்னை தேடிப் பார்க்க வைத்தது. 'கட்டில் சத்தம் தாங்கலை' என்பது  திருமணமாகாத பெண்ணொருத்தி தன்னுடைய அண்ணியிடம் சொல்லும் அதே திரைப்படத்தில் வரும் இன்னொரு வசனம். 'சக்ஸஸ் சக்ஸஸ்' என்பது போன்ற சென்ட்டிமென்ட் வசனத்துடன் துவங்கும் அப்போதைய தமிழ் சினிமாக்களில் இப்படிப்பட்ட அதிர்ச்சிகர வசனங்கள் எல்லாம் இன்று கூட  நினைத்துக் கூட பார்க்க முடியாதவை. இப்போதைய இயக்குநர்கள் கூட கையாளத் தயங்குபவை. கவிதாவிற்கு திருமணமே ஆகக்கூடாது என்று இயக்குநர் திட்டமிட்டு அடுக்கிய சதிகளின் தொகுப்பாக  கூட இத்திரைப்படம் ஒருவிதத்தில் எனக்கு தோற்றமளிக்கும். கடவுள்களைப் போலவே கதாசிரியர்களும் சாடிஸ்ட்டுகளாக இருந்தால்தான் அந்த புனைவு விளையாட்டுகள் சுவாரசியமாக அமையும் போலிருக்கிறது. என்றாலும் பொறுப்பற்ற ஆண்களின் உலகில் சிக்கிக் கொள்ளும் பெண்கள் ஆண்களுக்காகவும் சேர்த்து கடைசி வரையிலும் உழைத்தேதான் தன்னை வருத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது எனும் கசப்பான யதார்த்தத்தைதான் அத்திரைப்படத்தில் முன்வைத்திருக்கிறார் என்று சமாதானப் படுத்திக் கொண்டேன்.

சினிமாவை வெறுமனே பொழுதுபோக்கு அம்சமாக மாத்திரமே இச்சமூகம் அணுகிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அதை மத்தியதர வர்க்க குடும்பங்களின் வரவேற்பறை விவாதங்களாக மாற்றிய வகையில் பாலச்சந்தரின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தனித்தன்மையும் முக்கியத்துவமும் உண்டு. 'அரங்கேற்றம்' திரைப்படம் வெளிவந்த போது அப்போதைய சமூகப் பிரச்சினைகளுள் ஒன்றாக இருந்த 'குடும்பக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தை' வெளிப்படுத்தும் விதமாக அத்திரைப்படம் அமைந்திருந்தாலும் கூட ஒரு பிராமண பெண்ணை பாலியல் தொழிலாளியாக சித்தரித்தற்காக  பிராமண சமூகத்தின் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது. இந்த சர்ச்சைக்கு பத்திரிகை ஆசிரியா் சோ  அளித்த விளக்கத்தை வாசித்த நினைவிருக்கிறது.  'ஒரு கதையில் உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு பாத்திரம் அதல பாதாளத்தில் விழும் போதுதான் பார்வையாளர்களுக்கு இயல்பாகவே அதன் மீது அதிக பரிவுணர்ச்சி ஏற்படும். அந்த வகையில்தான் இத்திரைப்படத்தை அணுக வேண்டும்'. புனைவில் இயங்கும் ஒரு கதாபாத்திரம் அதன் தன்மைக்கு முரணான எதிர் துருவ நிலையில் பயணப்படும் போதுதான் அந்த முரணியக்க நிலையில் அந்தப் புனைவு சுவாரசியமாக அமையும் என்கிற வகையில் சோவின் இந்த விளக்கம் சரியானது போல தோன்றினாலும் சாதிய நோக்கில் அது ஒரு சமூகத்தை உயர்த்தி சொல்வது போல் சுயநலமாக அமைந்திருப்பது முறையற்றது.

பாலச்சந்தரின் பெரும்பாலான திரைப்படங்கள் இவ்வாறான சர்ச்சைகளையும் விவாதங்களையும் அப்போதைய தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தின. அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி கவனத்தை ஈர்த்தன.  ஆனால் தம்முடைய படைப்புகளை வெறுமனே அதிர்ச்சி மதிப்பீட்டு நோக்கில் திட்டமிட்டு அவர் உருவாக்கியதாக தெரியவில்லை. ஏனெனில் அவைகளில் சமூகத்தின் மீதான கடுமையான விமர்சனங்களோடு கூடவே அதற்கான பரிவுணர்ச்சியும் கலந்திருந்தது.  "பாலு.. உன்னோட படங்கள்ல மட்டும்தான் பாடல்கள் எழுதுவதற்கு சவாலாக அமைகிற மாதிரியான சிக்கலான, சுவாரசியமான கதைச் சூழல்கள் இருக்கு" என்று கண்ணதாசன், பாலச்சந்தரிடம் சொன்னதாக ஒரு தகவல் உண்டு.

கிராமங்களில் நிகழ்ந்த புராணக்கதைகளின் மீது அமைந்த தெருக்கூத்து நாடகங்களும் அதன் தொடர்ச்சியாக திரை நடிகர்கள் நடித்த ஸ்பெஷல் புராண நாடகங்களும் வெற்றிகரமாக செயல்பட்ட காலத்தில்  சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் அப்போது தங்களுக்கென சொந்தமான நாடகக்குழுவைக் கொண்டிருந்தார்கள். எஸ்.வி. சகஸ்ரநாமம், எம்.ஆர்.ராதா, போன்று பல நடிகர்கள் ஒருபுறம் திரைப்படங்களிலும் இன்னொரு புறம் தங்களின் மரபு தொடர்ச்சியை கை விட்டு விடாமல் பெருவிருப்பத்துடன் நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார்கள். இம்மாதிரியான நாடகங்கள் பின்னர் திரைப்படங்களாகவும் உருவாகின. இந்தக் காலக்கட்டங்கள் மங்கிய சூழலில் கல்வியறிவு பெற்ற நகரத்தின் மத்திய தர வர்க்க இளைஞர்கள் தங்களின் கலைத்திறமையை வெளிக்காட்ட அமெச்சூர் நாடகக்குழுக்களை உருவாக்கினார்கள். இந்த நாடக மரபிலிருந்து உருவாகி வநதவர் கே.பாலச்சந்தர். சிறு வயதுகளில் எம்.கே.தியாகராஜ பாகவதர் திரைப்படங்களைக் காண்பதில் ஆர்வம் கொண்டிருந்த பாலச்சந்தருக்கு நாடகங்களை எழுதுவதில் உள்ள ஈடுபாடு இளமையிலேயே உண்டானது.

அரசு அலுவலகத்தில் அவர் பணிபுரிந்து கொண்டிருந்த போது புதிதாக பொறுப்பேற்க வந்த அதிகாரியை வரவேற்கும் விழாவிற்கு அவர் ஆங்கிலத்தில் எழுதிய நாடகமான 'மேஜர் சந்திரகாந்த்' பரப்பரப்பான வரவேற்பை பெற்றது. பிறகு நண்பர்களின் வற்புறுத்தலின் காரணமாக பொதுமக்களும் இதைக் காண ஏதுவாக தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட போது அமோகமான வெற்றியைப் பெற்றது. அப்போது ஓடிய திரைப்படங்களுக்கு ஈடான கூட்டத்தை பாலச்சந்தரின் நாடகங்களும் பெற்றன. திரையுலகினர் திரும்பிப் பார்க்கிற அளவிற்கான வளர்ச்சியைப் பெற்றிருந்தார் பாலச்சந்தர். இவரின் 'மெழுகுவர்த்தி' எனும் நாடகத்தை காண வந்திருந்த எம்.ஜி.ஆர், 'இது போன்ற திறமையான இளைஞர்கள் திரைத்துறைக்கு நிச்சயம் வரவேண்டும்' என்று கூறி 'தெய்வத்தாய்' திரைப்படத்தில் வசனமெழுத வாயப்பளித்தார். அத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடினாலும் தம்முடைய தனித்தன்மையும் திறமையும் அதில் வெளிப்படவில்லையே என்கிற வருத்தம் பாலச்சந்தருக்கு ஏற்பட்டதால் தம்முடைய நாடகங்களையே திரைப்படமாக்கும் பணிகளில் ஈடுபட்டார். கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய 'சர்வர் சுந்தரம்' மகத்தான வெற்றியைப் பெற்றது. அதுவரை நகைச்சுவை நடிகராக அறியப்பட்டிருந்த நாகேஷை மறுகண்டுபிடிப்பு செய்து இன்னொரு பரிமாணத்தில் சித்தரித்த பெருமை பாலச்சந்தரையே சாரும். அபத்தமான சென்டிமென்ட் உணர்வுகளும் வழக்கங்களையும் இன்னமும் கூட கொண்டிருக்கும் தமிழ்  சினிமாவில் தன்னுடைய இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படத்தையின் தலைப்பையே 'நீர்க்குமிழி' என்று வைக்கும் துணிச்சலையும் புதுமையையும் பாலச்சந்தர் கொண்டிருந்தார்.அதுவரை தமிழ் சினிமாவில் மாறாதிருந்த பல பழமைவாதப் போக்குகளை பாலச்சந்தரின் படங்கள் சிதறடித்தன.

காதலனை கொன்றவனை பழிவாங்குவதற்காக அவனுக்கே சித்தியாக வந்து அதிர்ச்சி தரும் ஒரு பெண் (மூன்று முடிச்சு), திருமணமான ஒருவன் மகள் வயதுள்ள பெண்ணுடன் கொள்ளும் பாலுறவால் ஏற்படும் குடும்பச் சிக்கல்கள் (நூல்வேலி), காதலன், சேடிஸ்ட் கணவன், ஒருதலையாக காதல் செய்யும் அப்பாவியொருவன் என்று மூன்று ஆண் முனைகளில் அலையுறும் ஒரு பெண் (அவர்கள்), அதிக வயது வித்தியாசமுள்ள இரு ஜோடிகளின் காதலினால் ஏற்படும் உறவுச்சிக்கல்கள் (அபூர்வ ராகங்கள்) திருந்தி மைய நீரோட்ட வாழ்க்கையில் புக விரும்பும் ஒரு ரவுடியையும் பாலியல் தொழிலாளியையும் இச்சமூகம் அவர்களின் பழைய நிலைக்கே தள்ளும் அபத்தம் (தப்புத் தாளங்கள்) என்று வித்தியாசமான பல கதையோட்டங்களை கையாண்ட இயக்குநராக பாலச்சந்தர் திகழ்ந்தார்.

துவக்க காலத்தில் நாடகபாணிக் கதைகளையே கையாண்டாலும் ஒரு கட்டத்தில் சமூகப் பிரச்சினைகளை அலசும், அதற்கு தீர்வு காண முயலும், அவற்றை முன்வைக்கும் லட்சியவாத மனிதர்களைக் கொண்ட திரைப்படங்களை உருவாக்கினார். சமூகக்கதைகளை மாத்திரமல்லாமல் எதிரொலி, நூற்றுக்கு நூறு போன்ற 'ஹிட்ச்காக்' வகை சஸ்பென்ஸ் படங்களை இயக்குவதிலும் அவருடைய திறமை வெளிப்பட்டது.

எம்.ஜி.ஆர் படம், சிவாஜி படம் என்று நடிகர்களால் திரைப்படங்கள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருந்த சூழலில், ஸ்ரீதருக்குப் பிறகு 'இயக்குநரின் திரைப்படங்களாக' அவை அடையாளம் காணப்பட்டு இயக்குநர்களுக்கான முக்கியத்துவத்தையும் பெருமையையும் நிறுவியதில் பாலச்சந்தரின் பங்களிப்பிற்கு முக்கியத்துவமுண்டு. அதைப் போலவே ஆண்மையவாத சிந்தனைகளில் உதிர்ந்த படைப்புகளாக தமிழ் சினிமாக்கள் உருவாகிக் கொண்டிருந்த நேரத்தில் பெண் கதாபாத்திரங்கள் வெறும் கவர்ச்சி பிம்பங்களாகவும் சென்ட்மென்ட் உபயோகங்களுக்காகவும் ஆண்களால் காப்பாறப்பட காத்துக் கொண்டிருக்கும் அபலைகளாகவும் சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். இதிலிருந்து முற்றிலும் விடுபட்டு பெண்களை முன்னிலைப்படுத்தியும் அவர்களின் பிரச்சினைகளை மையப்படுத்தியும் சித்தரித்த வகையில் பாராட்டத்தக்க ஓர் இயக்குநராக பாலச்சந்தர் இருந்தார். பணக்கார பண்ணையார் - ஏழை விவசாயி என்று சமூகத்தின் மேல்நிலை x கீழ்நிலை பாத்திரங்களையே கொண்டு அதுவரையான தமிழ் சினிமாக்கள் இயங்கிய போது அதை விட குழப்பங்களும் சிக்கல்களும் கொண்ட மத்திய தர வர்க்க மனிதர்களையும் அவர்களின் பிரச்சினைகளையும் தமிழ் திரையில் பதிவு செய்த வகையில் பாலச்சந்தர் ஒரு முன்னோடியாக செயல்பட்டார். மிகச் சிறிய கதாபாத்திரங்கள் கூட அவருடைய திரைப்படங்களில், பார்வையாளர்களின் கவனத்தைப் பெறுமளவிற்கு அவற்றின் தனித்தன்மைகளோடு உருவாக்கப்படும். (அபூர்வ ராகங்களில் மருத்துவராக நடித்திருந்த கண்ணதாசன் பாத்திரத்தை உதாரணமாக சொல்லலாம்).

திரைப்படத்துறையில் தன் பயணத்தை வெற்றிகரமாக துவங்கிய பின்னரும் கூட தன்னுடைய அரசுப்பணியை இழப்பதில் அவருக்கு தயக்கமிருந்தது. ஏவிஎம் செட்டியார் அவருக்கு தைரியம் கூறி மூன்று வருட ஒப்பந்தம் போட்டுக் கொண்ட பின்புதான் தன் அரசுப்பணியிலிருந்து விடுபட்டார். பாலச்சந்தரின் இந்த நடுத்தர வர்க்க  பின்னணியின் மனோபாவத்தை பிரதிபலிப்பது போலவே அவரது பெரும்பாலான கதாபாத்திரங்கள் இயங்கின. 'கல்வி'யின் மூலம்தான் தங்களின் சமூகத்தின் வறுமையிலிருந்து விடுபட்டு மேலேற முடியும் என்கிற மத்தியதர வர்க்கத்தின் சிந்தனையை அவரது பல கதாபாத்திரங்கள் எதிரொலித்தன. ஸ்டார் நடிகர்களின் பின்னால் ஓடாமல் தம்முடைய திறமையின் மீது அசாத்திய நம்பிக்கை கொண்டு பல புதுமுகங்களை பட்டை தீட்டி அறிமுகப்படுத்தி வெற்றிபெறச் செய்தவர் என்கிற வகையில் 'சினிமா என்பது இயக்குநர்களின் கையில் இருக்க வேண்டிய ஊடகம்' என்கிற செய்தியை தொடர்ந்து நிருபித்துக் கொண்டேயிருந்தார். 'மனதில் உறுதி வேண்டும்' திரைப்படத்தில் சுஹாசினியைத் தவிர்த்து விவேக் உள்ளிட்ட ஏறத்தாழ அனைத்து நடிகர்களும் புதுமுகங்களே. தம்முடைய திரைப்படங்களில் வரும் பாடல் வரிகளும் இசையும் காட்சிக் கோணங்களும் வித்தியாசமாக அமைவதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கன. எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இசையமைப்பாளர்களின் பங்களிப்பில் பாலச்சந்தரின் திரைப்பட பாடல்கள் பிரத்யேக சிறப்புகளுடன் வெளிப்பட்டன. ரஜினி -கமல் இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும்' திரைப்படத்தின் பாடல்கள் பொதுவெளியில் பார்வையாளர்கள் இடையே கோலாகலமான, கொண்டாட்டமான மனநிலையை உருவாக்கின.

வங்காளப் படங்களின் பாதிப்பு பாலச்சந்தரின் படங்களில் இருந்தது. குறிப்பாக சத்யஜித்ரே, ரித்வக் கட்டக் ஆகியோரைச் சொல்லலாம். 'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படம் ரித்விக் கட்டக்கின் 'மேஹ தாஹ தாரா' என்கிற வங்காளப் படத்தின் தழுவலே. பாலியல் தரகராக இருக்கும் நபர் எதிர்பாராத சூழலில் தன்னுடைய மகளை பாலியல் தொழிலாளியாக கண்டு அதிர்ச்சியுறும் காட்சியும் ரே திரைப்படத்தின் ஒரு காட்சியே. 'பாலச்சந்தர் ஒரு நடிகராக வந்து விடக்கூடாது என்கிற பிரார்த்தனையும் கவலையும் எனக்குண்டு. ஏனெனில் அவர் நடிகராக வந்தால் நாங்கள் எல்லோரும் காணாமல் போக வேண்டியிருக்கும். அத்தனை சிறந்த நடிகர். அவர் எங்களுக்கு கற்றுத் தரும் நடிப்பின் சில சதவீதத்தையாவது ஒழுங்காக செய்து விட்டால் கூட அது சிறப்பாக அமைந்து விடும்' என்று தனது நேர்காணல்களில் கமல்ஹாசன் உயர்வுநவிற்சியுடன் அடிக்கடி கூறியதை காண நேர்ந்ததையொட்டி பாலச்சந்தர் நடிப்பதைக் காண பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் அவர் நடிப்பைக் காணும் போது அது அத்தனை சிலாகிக்கும்படியாக இல்லாதது ஒரு புதிரே.

சினிமாவில் சாதித்த பிறகு தொலைக்காட்சியில் பணிபுரிவதென்பது ஒருபடி கீழான செயல் என்று இன்றும் கூட நம்பப்பட்டிருக்கும் சூழலில் 90 களிலேயே பல தொலைக்காட்சி நாடகங்களை இயக்கி அனைவரையும் கவனிக்க வைத்தார். மற்றவர்களின் திரைப்படங்கள் தோல்வியடைந்தால் அதைக் கொண்டாடி மகிழும் மனப்பான்மையும் உள்ள திரையுலகில் புதிய இயக்குநர் முதற்கொண்டு எந்தவொருவரின் படைப்பு சிறப்பாக இருந்தாலும் அதை தம்முடைய கையெழுத்துடன் கூடிய கடிதத்தில் எழுதி வெளிப்படுத்தும் பிரத்யேகமான பண்பு பாலச்சந்தரிடம் இருந்தது.

தமிழ் சினிமா தனது  முன்னோடி படைப்பாளிகளை ஒவ்வொருவராக இழந்து வருவது வருந்தத்தக்கது. சமீபத்தில்தான் பாலுமகேந்திரா காலமானார். அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் இன்னொரு முக்கியமான இயக்குநரும் பாலச்சந்தரும் காலமானது பேரிழப்பே. பழமைவாத மனோபாவங்கள் ஆழமாக வேரூன்றிய காலக்கட்டத்திலேயே அதைச் சிதறடிக்கும் விதமாக புதுமையான, புரட்சிகரமான படைப்புகளை உருவாக்கிய பாலச்சந்தரின் பாதையை இளம் இயக்குநர்களும் பின்பற்றுவதுதான் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

- உயிர்மை - ஜனவரி 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

suresh kannan

Friday, January 09, 2015

எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் கவனத்திற்கு:என்னுடைய வலைத்தளத்தில் இந்த வருடம் சினிமாவைப் பற்றி எழுதுவதைக் குறைத்துக் கொண்டு வாசிக்கும் நூல்களைப் பற்றி அதிகம் எழுதலாம் என்றிருக்கிறேன். கடந்த வருட துவக்கத்தில் 'சினிமா 365' என்கிற தலைப்பில் தினம் ஒரு சினிமாவைப் பற்றி எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது சாத்தியமா என்று சஞ்சலமாக இருந்தது. அறிவித்து விட்டு நிறுத்தினால் எனக்கே அவமானமாக இருக்கும். 

எனவே மாறுதலாக இந்த வருடத்தில் புத்தகங்களைப் பற்றி அறிவித்து விட்டு எழுதலாம் என்று உத்தேசம். வாங்கும் மற்றும் நூலகத்திலிருந்து எடுத்து வரும் பல நூல்களில் குறைந்தது சுவாரசியமான நூல்களைப் பற்றி சிறிய அறிமுகமாவது செய்து விடலாம் என்று நினைப்பேன். எப்படியோ இயலாமல் ஆகிவிடும். இந்த 2015 முழுக்க அதை சாத்தியப்படுத்தலாம் என்று யோசனை. பார்ப்போம். சமூக வலைத்தளங்களில் எதையோ எழுதிக் கொண்டிருக்காமல் இதன் மூலம் என்னை நானே  செயலூக்கமாக்கவும் ஆக்கபூர்வமாகவும் இயங்க வைக்கலாம் என்ற திட்டம்.

எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் கவனத்திற்கு:

உங்களின் எந்தவொரு நூலையும் என் வலைத்தளத்தின் மூலம் அறிமுகப்படுத்த விரும்பினால் அனுப்பி வைக்கலாம். எனக்கு சுவாரசியமானதாக இருக்கும் பட்சத்தில் அவற்றைப் பற்றி எழுதுவேன். விருப்பமுள்ள வாசகர்களும் நூல்களை வாங்கி அனுப்பி உதவலாம். சினிமா பற்றிய நூல்களுக்கு முன்னுரிமை. என் முகநூல் பக்கத்திலும் இந்த விவரம் வெளியாகும்.

மேல் விவரங்களுக்கு மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்.

sureshkannan2005  at gmail.com

நண்பர்கள் இதை பகிர்ந்துதவ வேண்டுகிறேன்.suresh kannan

Thursday, January 08, 2015

குறத்தியாறு - கெளதம சன்னா - நூல் வெளியீட்டு விழா - 07.01.2015


உயிர்மை பதிப்பகத்தின், கெளதம சன்னா எழுதிய புதினமான 'குறத்தியாறு' நூல் வெளியீட்டு விழாதான் என்றாலும் நான் பிரதானமாக சென்றது கோணங்கி பேசுவதைக் காண.

புகைப்படங்களிலும் சில விழாக்களிலும் அவரைப் பார்த்திருக்கிறேனே தவிர அவர் மேடையில் பேசுவதை இதுவரை கண்டதில்லை, கேட்டதில்லை. பல வருடங்களுக்குப் பிறகு ஒரு விழா மேடையில் கோணங்கியைப் பார்க்கும் ஓர் அபூர்வமான நிகழ்வு என்று மனுஷ்யபுத்திரன் தன்னுடைய வரவேற்புரையில் குறிப்பிட்டார்.. போலவே எழுத்தாளர் ஜெயமோகனையும் கோணங்கியையும் ஒரே மேடையில் காண்பது தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே (?!) இதுவே முதன்முறையாக இருந்தது போலும்.

கோணங்கி பேசிக் கொண்டிருந்ததை கவனிக்கவே அத்தனை சுவாரசியமாக இருந்தது. ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் தனக்கேயுரிய பிரத்யேக சங்கேத மொழியில் நூல்களில் தான் காணும் தொன்மங்களைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். ஒலிப்பெருக்கி இருக்கும் திசையை நோக்கி உரையாடினால்தான் பார்வையாளர்களுக்கும் தெளிவாக கேட்கும் என்கிற மேடை நடைமுறை விதிகளெல்லாம் அவரைக் கட்டுப்படுத்தவில்லை. அவருக்கான பிரத்யேகமான அந்தரங்க உலகத்திலேயே எப்போதும் புழங்கிக் கொண்டிருக்கும் மனிதர் என்பதாக தோன்றியது. நல்ல அனுபவம்.

கெளதம சன்னா என்கிற பெயரை நான் அறிந்தது, ஜெயமோகனின் வெள்ளையானை நூல் வெளியீட்டு விழாவின் போதுதான். அந்த விழாவில் நாவலைப் பற்றியும் பழைய சென்னையின் வரலாற்றுத் தகவல்களையும் இணைத்து பல நுட்பமான விஷயங்களைப் பேசியது அத்தனை ஆச்சரியமாக இருந்தது. அரசியல் அமைப்பைச் சார்ந்த ஒரு நபரிடமிருந்து இத்தனை ஆழமான விஷயங்களை அறிந்த ஓர் இலக்கியவாதியை நான் எதிர்பார்க்கவில்லை. எனவே அவருக்காகவும் இந்த விழாவிற்கு சென்றிருந்தேன். பொதுவாக தீவிரமான அரசியல் கட்டுரைகளை எழுதுபவரிடமிருந்து இலக்கிய நயம் வாய்ந்த ஒரு புதினத்தை அவரை நன்றாக அறிந்தவர்களே எதிர்பார்க்கவில்லை என்பதாகவே இந்த விழாவின் மூலம் அறிந்தது.

கடந்த வருடமே வெளியாக வேண்டியிருந்த இந்த நூல், ஒவியம் சந்ருவின் கோட்டோவியங்களோடுதான் வெளியாக வேண்டும் என்று அவருக்காக ஒரு வருடம் காத்திருந்து பல நினைவூட்டல்களுக்குப் பின் ஓவியங்களை இணைத்த பிறகே இந்த நூலை வெளியிடப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து சன்னாவின் பிடிவாதமான கலையார்வத்தை புரிந்து கொள்ள முடிகிறது. இதற்காக நூலாசிரியரும் ஓவியரும் இணைந்து புதினத்தின் பின்புலமாக அமைந்துள்ள இடங்களுக்கு சென்ற அனுபவத்திற்குப் பின் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. 'இந்த நாவல் சன்னாவும் சந்ருவும் இணைந்து எழுதியது' என்பதாக கோணங்கி குறிப்பிட்டது இதைப் பற்றிதான் இருக்க வேண்டும். ஓவியர் சந்ரு அவர்களையும் இந்த விழாவில்தான் முதன்முறையாக பார்த்தேன். குச்சி குச்சியான சிறுநரைமுடிகளோடும் முக்கால் வேட்டியோடும் ஓர் அசல் நாட்டுப்புற மனிதர் போல் அத்தனை எளிமையாக இருந்தார். அவரது உடல்மொழியும் அத்தனை வெள்ளந்திதனமாக இருந்தது. அவரின் ஓவியங்களைக் கண்டபிறகும் உரையாற்றும் போதுதான் அவரது மேதமையைக் உணர முடிந்தது.   இவ்வாறான எளிமையான மேதைகளை அவ்வளவாக கண்டுகொள்ளாமல் வெற்றுப் படோபடங்களின் பின்னால் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

ஜெயமோகன் பேசும் போது "தலித் இலக்கியத்தின் மிக முக்கியமான திருப்புமனையை இந்த நாவல் ஏற்படுத்தும் என கருதுகிறேன். இதுவரையான தலித் இலக்கிய படைப்புகள் யதார்த்த வகை படைப்புகளாகத்தான் உருவாகி வந்திருக்கின்றன. ஆனால் தொன்மத்தின் அழகியலுடனும் காவிய  மரபு மொழியில் இந்நூல் உருவாகியிருப்பது தலித் இலக்கியத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாக அமைந்திருக்கும்" என்றார். விழாவின் துவக்கத்தில் ஒவியர் நட்ராஜ், இந்த நாவலின் சில பகுதிகளை வாசித்துக் காண்பிக்கும் போது அது கோணங்கியின் மொழியின் அடையாளத்துடன் அமைந்திருப்பதாகத் தோன்றியது.

தலைமையுரையாற்றிய தொல்.திருமாவளவன், சிறுகதைகள், நாவல் போன்ற புனைவு வகை இலக்கியங்களை நான் வாசிப்பதில்லை எ்னறார். ஏனெனில் அவை நம்மை கனவுலகத்தில் ஆழ்த்தி மயக்குபவை. மாறாக யதார்த்தவகை இலக்கியங்களான வரலாற்று, தத்துவ வகை நூல்களே நம்மை விழிப்பாக இருக்க வைப்பவை. என்றாலும் நான் முழுமையாக வாசிக்கவிருக்கும் முதல் நாவலாக இந்த 'குறத்தியாறு' இருக்கும் என்றார். மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்த இடைவெளி தருணத்தில் விழா மேடையிலேயே வாசித்து விட்ட சில பக்கங்களை மிக நிதானமாக விவரித்து சிலாகித்து மகிழ்ந்தார்.

ஏற்புரை வழங்கிய கெளதம சன்னா விரிவாக பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நேரமின்மை காரணமாக சுருக்கமாக முடித்துக் கொண்டார். 'சிலர் கருதுவது போல இதை வெறுமனே அழகியல் நோக்கத்தில் எழுதவில்லை. எனக்கென்று உள்ள அரசியல் பார்வையில்தான் இந்தப் புதினத்தை எழுதியிருக்கிறேன்" என்றார்.

விழா முடிந்ததும் வெளியே நண்பர்கள் சிவராமன், சிறில் அலெக்ஸ், எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர்களோடு அமைந்த உரையாடல் விழாவில் கல்ந்து கொண்டதைத் தவிர மேலதிக நிறைவைத் தந்தது.

Sunday, January 04, 2015

உயிர்மை - காலச்சுவடு நூல் வெளியீட்டு விழா - 03.01.2015


டிசம்பர்-ஜனவரி மாதங்கள் வந்தாலே சென்னைக்கு புதுநிறம் வந்து விடுகிறது. ஒருபுறம் கர்நாடக இசை விழா, இன்னொரு புறம் சர்வதேச திரை விழா, புத்தக கண்காட்சி, நூல் வெளியீட்டு விழாக்கள் என்று பல்வேறு கலாசார நிகழ்வுகள் காற்றில் மிதக்க ஆரம்பித்து விடுகின்றன. ஒரே சமயத்தில் இரண்டு விருப்பமான நிகழ்வுகள் நடைபெறும் போது எதற்குப் போக வேண்டும் என்று குழப்பம் வந்து விடுகிறது. பிலிம் பெஸ்டிவல் சமயத்தில் இவ்வாறு சற்று அல்லாடினேன். ஒரே சமயத்தில் நிகழும் இரண்டு நிகழ்ச்சிகளுமே முக்கியம் என நினைக்கும் போது பரத்தையிடம் ஜாலி செய்யப் போயிருக்கும் நண்பனை பொறாமையுடன் நினைத்துக் கொண்டே சாமியார் பிரசங்கத்தில் அவஸ்தையுடன் அமர்ந்திருப்பவன் கதை போல அல்லாடும் இரட்டை மனதுடன் அமர்ந்திருக்க வேண்டியிருக்கிறது. பதிப்பக அரசியல், எழுத்தாள அரசியல், குழு அரசியல் ஆகியவற்றில் நம்பிக்கையும் ஆதாயமும் உள்ளவர்களுக்கு இம்மாதிரியான எவ்வித குழப்பமும் இருப்பதாகத் தெரியவில்லை. தெளிவாகவும் தீர்மானமாகவும் இருக்கிறார்கள். இவ்வாறான அரசியல்களைத் தாண்டி  படைப்புகளின் மூலமாக மாத்திரமே ஓர் எழுத்தாளரை அணுகும் அப்பாவி இலக்கியத் தொண்டர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நூல் வெளியீட்டு விழாக்களைப் பற்றி இப்போதெல்லாம் புகைப்படங்கள் போடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அங்கு என்ன உரையாடப்பட்டது என்று பெரும்பாலும் பதிவு செய்யப்படுவதில்லை என்று எம்.டி.முத்துக்குமாரசாமி சமீபத்தில் முகநூலில் எழுதியிருந்தார். உண்மைதான். சமூகவலைத்தளங்களின் மூலம் மைக்ரோ பிளாக்கிங் வகையான சுருக் எழுத்துக்களைத் தாண்டி நீளமான பதிவுகளை வாசிக்க எவருக்கும் பொறுமையும் நேரமும் ஆர்வமும் இருப்பதில்லை. அப்படி வெட்டியாக பதியுமளவிற்கு நூல் வெளியீட்டு விழாக்களில்அப்படியொன்றும் உன்னதமாக யாரும் பேசி விடுவதில்லை என்பதும் இன்னொரு விஷயம். 'நான் இந்த நூலை இன்னமும் வாசிக்கவில்லை' என்கிற அசட்டுத்தனமான பெருமையுடன் கூடிய ஒப்புதல் வாக்குமூலத்துடன்தான் பொதுவாக துவங்குகிறார்கள். வெற்றுத்தனமான சம்பிரதாயங்களுடன்தான் இம்மாதிரியான நிகழ்வுகள் முடிகின்றன. அசலான இலக்கியத்தில் இன்னமும் நம்பிக்கை கொண்டிருக்கக்கூடிய நபர்களின் மூலம்தான் அற்புதமான, ஆத்மார்த்தமான பேச்சுகள் அபூர்வமாக நிகழ்கின்றன.

***

உயிர்மை பதிப்பகத்தின் பத்து நூல்களின் வெளியீட்டு விழா ஸ்பென்சர் பிளாசா எதிரில் உள்ள புக் பாயிண்ட் நூல் அரங்கில் நடைபெற்றது. உள்ளே நுழையும் போதே, நீண்ட நாட்களாக பாாக்க நினைத்திருந்த 'மெல்லிய கண்ணாடி அணிந்திருந்த பூனை' யான போகன் சங்கரை பார்க்க நேர்ந்தது நல்ல சகுனம். கூடவே டயட்டில் இருக்கும் இராமசாமி கண்ணன். 'பிசாசு படத்துல அப்படி என்னய்யா இருக்கு...சொல்லுங்க பார்க்கலாம்' என்கிற அதிரடியான கேள்வியுடன் வரவேற்றவரை 'வணக்கம் ஐயா' என்று கூறி விடைபெற்றேன். சிவராமன், விநாயக முருகன், அருண் (தமிழ் ஸ்டுடியோ), உமா மஹேஸ்வரன் என்று இன்னமும் சில நண்பர்களை சந்திக்க முடிந்தது. அதிஷாவை கூப்பிட்டு வெளியிடப்படவிருக்கும் அவரது நூலுக்காக வாழ்த்து சொன்னேன். அதிஷாவின் எழுத்தை அதன் துவக்கத்திலிருந்தே இணையத்தில் கவனித்துக் கொண்டிருக்கிறேன். எளிமையான ஆனால் நுட்பமான நகைச்சுவையும், அவதானிப்பும் அவற்றை இன்னமும் எளிமையான எழுத்தில் வெளிப்படுத்தும் லாகவமும் என ஓர் எழுத்தாளரின் திறமைளைக் கொண்டிருக்கிறார். இன்னமும் தீவிரமாக முயன்றால் அவரால் கவனத்துக்குரிய எழுத்தாளராக மலர முடியும் என்பது என் நம்பிக்கை.

மனுஷ்யபுத்திரனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி துவங்கியது. தியோடர் பாஸ்கரனின் நூலைப்பற்றி (சோலை எனும் வாழிடம்) முன்னாள் நீதியரசர் சந்துரு பேசினார்.

'பொதுவாக சினிமா விமர்சனம் எழுதுபவர்கள், தாம் பார்க்கும் சினிமாக்களில் உள்ள பலவீனங்களை பட்டியலிட்டு இயக்குநரை நோக்கின உரையாடலாகத்தான் தமது பதிவுகளை எழுதுகிறார்கள். மாறாக என்னுடைய பதிவுகள் ஒரு பார்வையாளனின் நோக்கில்தான் பெரும்பாலும் அமைந்திருக்கும்' என்று தன்னுடைய நூலைப் பற்றி (தமிழ் சினிமா: காட்டப்படுவதும் காண்பதுவும்) குறிப்பிட்டார் பேரா. அ.ராமசாமி.

அ.ராமசாமியின் நூலைப் பற்றி பேசிய தியோடர் பாஸ்கரன், 'சினிமாவைப் பற்றிய சிறந்த விமர்சன நூல்கள் தமிழில் குறைவாகத்தான் இருக்கின்றன. சினிமா நுட்பங்களைப் பற்றிய கலைச்சொற்கள் தமிழில் பெரிதும் உருவாகாமல் இருப்பதே இதற்கொரு காரணம். 'Casting' என்பதை தமிழில் எவ்வாறு குறிப்பிடுவீர்கள். சினிமா பற்றிய அ.ராமசாமியின் பார்வை நுட்பமானதாகவும் தனித்துவமானதாகவும் இருக்கிறது' என்றார்.

'தடித்த கண்ணாடி அணிந்த பூனை' என்கிற போகன் சங்கரின் கவிதை நூலைப் பற்றி பேசின எழுத்தாளர் சுகுமாரன், "சுமார் ஒரு மணிநேரத்திற்கொரு கவிஞர்கள் உருவாகி விடுகிற சமகால சூழலில் நான் கவனித்த வரை போகன் சங்கர் முக்கியமானதொரு கலையாளுமையாக தெரிகிறார்" என்று பாராட்டி சங்கரின் இரண்டு கவிதைகளை வாசித்தார்.

நான் மிக மதிக்கும் ரகசியமாக காதலிக்கும் படைப்பாளுமைகளுள் ஒருவர் சுகுமாரன். அவரிடமிருந்து வாழ்த்தும் பாராட்டும் பெறுவது மிக முக்கியமானது. போகன் சங்கர் மீது பொறாமையாகவும் பெருமிதமாகவும் இருந்தது. கவிதை என்கிற வடிவம் என் இளமைக்காலத்திலிருந்தே ஒவ்வாமையை அளிக்கும் விஷயமென்றாலும் இணையத்தில் அவ்வப்போது வெளியாகும் சங்கரின் சில கவிதைகளை வாசித்து வியந்ததுண்டு. இப்போது சுகுமாரனின் பாராட்டிற்குப் பிறகு அவரின் எல்லாக் கவிதைகளையும் நிதானமாக வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

பள்ளி மாணவி போல் தோற்றமளித்த மனுஷியின் கவிதை நூலைப் பற்றி அபிலாஷ் சந்திரன் பேசினார். 'அட்டையில் இவரது பெயரை எடுத்து விட்டால் இந்தக் கவிதைகள் ஓர் ஆணினால் எழுதப்பட்டதோ என்று நினைக்குமளவிற்கு, பொதுவாக பெண் எழுத்தாளர்களின் கவிதைகளில் உள்ள மென்மை, இளகும் தன்மை ஆகியவை இவைகளில் இல்லை' என்றார்.

செந்தில்குமாரின் சிறுகதைகளைப் பற்றி எழுத்தாளர் பாவண்ணன் பேச எழுந்தார்.


என்றாலும் பெருமாள் முருகனின் நாவல் தொடர்பாக சமீபத்தில் எழுந்த சர்ச்சை குறித்த எண்ணங்களே என்னுடைய மனதில் ஓடிக் கொண்டிருந்ததாலும் அருகில் அமைந்திருக்கும் இன்னொரு அரங்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலச்சுவடின் ஏழு புனைவு நூல் வெளியீட்டில் அவருடைய பங்களிப்பும் இருந்ததாலும் அதைக் கவனிக்கலாமே என்று எழுந்து சென்றேன். மெட்ரோ ரயில்காரர்களின் ஆக்ரமிப்பினால் போருக்குப் பிந்தைய காட்சிகள் போல் கொந்தப்பட்டிருக்கும் அண்ணாசாலையின்  சாலைகளை அபாயகரமாகக் கடந்து குறிப்பிட்ட அரங்கம் எங்கே இருக்கிறது என தேடினேன். நான் முன்னர் அதிகம் சென்றிராத, எனக்கு அவ்வளவாக பிடித்திராத சூழலைக் கொண்டிருந்த பழைய ஆனந்த் திரையரங்கு கட்டிடத்தை மனதில் கொண்டே தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் அது இடிக்கப்பட்டு பல்லடுக்கு அலங்கார மாளிகையாக உருமாறியிருந்ததை பிறகுதான் கண்டுகொண்டேன்.. பளபளப்பான லிஃப்ட்டில் ஏறி ஒரு கார்ப்பரேட் மீட்டிங் நடக்கக்கூடிய இடம் மாதிரியான நவீன தோற்றத்தில் இருளும் வெளிச்சமுமாக இருந்த 'உமாபதி கலையரங்கில்'  நுழையும் போது மிகச் சரியாக பெருமாள் முருகன் உரையாடிக் கொண்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட அரவிந்தனின் 'பயணம்' எனும் புதினத்தைப் பற்றியதாக பெருமாள் முருகனின் பேச்சு அமைந்திருந்தது. ஓர் ஆசிரமத்தில் நிகழும் முறைகேடுகளை, ஊழல்களைப் பற்றியதாக அரவிந்தனின் புதினம் இருக்கலாம் என்பது அந்தப் பேச்சிலிருந்து நான் கொண்ட யூகம்.

 'அரவிந்தன், தன்னுடைய நாவலில் கோவையில் உள்ள ஒரு ஆசிரமம் என்று பொதுவாக குறிப்பிடுகிறார். தவிரவும் சாதியைப் பற்றிய இடங்களைப் பற்றிய நேரடியான விவரங்களை தவிர்த்து விடுகிறார். இந்த ஒரு அம்சத்தை அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது'  என்று சமீபத்தில் தமக்கேற்பட்டுக் கொண்டிருக்கும் அனுபவங்களின் எதிரொலியாக பெருமாள் முருகன் பேசிய போது அந்தக் கசப்பான நகைச்சுவையை அரங்கில் இருந்தவர்களும் ரசித்தார்கள். தவிரவும் தம்முடைய புதிய நாவலின் முன்னுரையில் எழுதியிருந்த ஒரு disclaimer -ஐ பெருமாள் முருகன் வாசித்துக் காட்டிய போது கைத்தட்டலால் அரங்கம் அதிர்ந்தது.

அவருடைய உரை நிறைந்த பிறகு எழுத்தாளர் சுகுமாரன் மேடைக்கு வந்து (ஆம் டூயல் ரோல்) சமீபத்திய சர்ச்சையால் பெருமாள் முருகன் தாம் எதிர்கொண்டிருக்கும் சங்கடமான அனுபவங்களைப் பகிர்வார்' என்று அறிவித்த பிறகு பெருமாள் முருகன் அதைப் பற்றி பேசத் துவங்கினார். (என் நினைவிலுள்ளதை வைத்து எழுதுகிறேன்).

'இந்தப் புதினம் குழந்தைப் பேறில்லாத ஒரு தம்பதியினரின் சிக்கல்களையும் அதற்குத் தீர்வாக நமது பண்பாட்டின் தொன்மையிலேயே காணக்கிடைக்கும் ஒரு வழக்கத்தையும் இணைத்து எழுதப்பட்டது. தியோடர் பாஸ்கரன், அ.கா.பெருமாள் போன்ற பண்பாட்டு ஆய்வாளர்கள் பண்டைய சமூகத்தில் நிலவும் இது போன்ற வழக்கங்களை பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் நாவல் வெளியாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு - பாஜக மைய அரசில் பொறுப்பேற்ற பிறகு - சில சாதிய அமைப்புகளும் பக்தி வழிபாட்டு சங்கத்தினரைச் சேர்ந்தவர்களும், பிஜேபி,ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்த நபர்களும் இந்தப் புத்தகத்தை எரித்தும் என்னுடைய புகைப்படத்தை செருப்பால் அடித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிலர் இரவு என்று கூட பாராமல் வீடுதேடி வந்து விளக்கம் கேட்டனர்.  புரிந்து கொள்ளக்கூடியவர்களுக்கு விளக்கம் சொல்லத் தயாராகவே இருக்கிறேன். ஆனால் புரிந்து கொள்ள விரும்பாமல் அரசியல் ஆதாயத்திற்காகவும் கவனஈர்ப்பிற்காகவும் செய்யப்படும் இது போன்ற சம்பவங்களால் மிகுந்த சங்கடத்திற்கும் மனஉளைச்சலுக்கும் ஆளாகிறேன்.

தமுஎச உடனே இது குறித்த தனது கண்டனத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது. நண்பர்களிடமிருந்தும் அறிவுசார் சமூகத்திடமிருந்தும் அரசியல் கட்சிகளிடமிருந்தும். எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு ஆறுதலைத் தருகிறது. இதை கடந்து போகும் துணிச்சலையும் தருகிறது. இது போன்ற  ஆதரவுகளுக்குப் பின்னர் பிஜேபி,ஆர்எஸ்எஸ் நபர்கள் இந்தப் போராட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். நாவலை தடை செய்ய வேண்டும், எழுத்தாளரை கைது செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை விலக்கிக் கொண்டனர். ஆனால் சில சாதிய அமைப்புகளும் வழிபாட்டு இயக்கங்களும் இந்தப் பிரச்சினையை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்புகிறார்கள். அவர்களுடைய கோரிக்கை என்னவென்பதே தெளிவாக தெரியவில்லை. இந்த நாவலின் சில பக்கங்களை மாத்திரம் ஆயிரம் நகல்கள் எடுத்து கோயிலுக்கு வருபவர்களிடம் ஒரு துண்டறிக்கையுடன் விநியோகிப்பதாக அறிகிறேன். அந்தப் பக்கங்களை மாத்திரம் வாசித்தால் இந்த நாவல் சமகாலத்து பின்னணியில் எழுதப்பட்டது போன்ற தோற்றத்தை தரும். இதற்குப் பின்னர் பிஜேபி அரசியல் நபர்கள் மறைமுகமாக இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை. இந்த சர்ச்சை துவங்கப்பட்டது முதல் சொந்த ஊரில் தங்க முடியாமல் தலைமுறைவாக ஆங்காங்கே சென்று கொண்டிருக்கிறேன்.

இது ஏதோ என்னுடைய தனிப்பட்ட பிரச்சினை என்பதாக அறிவுசார் சமூகம் கருதி விடக்கூடாது. இனி மேல் எந்தவொரு படைப்பிலும் எந்தவொரு சாதியைப் பற்றியோ அதன் வழக்கங்கள் பற்றியோ எழுத முடியாமல் போகும். கருத்துச் சுதந்திரத்தை எதிரான ஆபத்தை இட்டுச் செல்லக்கூடியது இது."

இவ்வாறாக அவரது உரை அமைந்திருந்தது.


***

பெருமாள் முருகன் மீதான எதிர்ப்பும் போராட்டமும் மிரட்டல்களும் ஏதோ உதிரி அமைப்புளைச் சார்ந்த நபர்களால் செய்யப்படுவது என்பதாக நாம் கருதி புறக்கணித்து விட முடியாது என்பதாக எனக்குத் தோன்றுகிறது. எழுத்தாளராகவும் ஒரு தனிநபராகவும் அவர் எதிர்கொள்ளும் மனஉளைச்சலையும் அது அவரது பிந்தைய படைப்பாற்றலை பாதிக்கக்கூடிய ஆபத்தையும் நம்மால் யூகிக்க முடியும். எனவே அறிவுலகம் சார்ந்து இயங்கும் அனைத்து படைப்பாளிகளும் பதிப்பாளர்களும் நபர்களும், தங்களின் அரசியல்களை, கருத்து வேறுபாடுகளை தற்காலிகமாவது ஒதுக்கி - ஓரணியாக நின்று எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு தங்களின் ஆதரவை தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.


suresh kannan

Friday, January 02, 2015

பாலுமகேந்திராவின் 'தலைமுறைகள்'
படவெளியீட்டின் போது பார்க்க முடியாமல் போன, நீண்ட நாட்களாக பார்க்க நினைத்திருந்த, பாலுமகேந்திரா இயக்கிய கடைசி திரைப்படமும் அவர் தன்னுடைய நிரந்தர அடையாளத்தை கழற்றி வைத்து நடித்திருந்த முதல் திரைப்படமுமான 'தலைமுறைகள்' திரைப்படத்தை இன்று ஜெயா டிவியில் பார்த்தேன். ஒரு கலைஞனின் பரிணாம வளர்ச்சியின் படி சரியான இடத்திற்குத்தான் பாலுமகேந்திரா வந்து சோ்ந்திருப்பதாகத் தோன்றுகிறது.

எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை இவ்வாறு எழுதின நினைவு: 'அந்த இளைஞனை இறுகக் கட்டிக் கொண்டு வண்டியில் பயணிக்கும் இளம் பெண்ணை பார்க்கிறேன். கவலையாக இருக்கிறது. இளைஞனின் கண்களில் இருக்கும் நோக்கம் அத்தனை ஆரோக்கியமானதாக இல்லை. ஒரு காலத்தில் இளம்பெண்களின் அனாட்டமிகளை மாய்ந்து மாய்ந்து வர்ணித்தவன், இப்போது இந்தப் பெண்ணுக்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.'

'வீடு' 'சந்தியா ராகம்' தவிர்த்து பெரும்பாலும் தனிநபர்களின் அகச்சிக்கல்களையும் துயரங்களையும் மகிழ்ச்சிகளையும் மையப்படுத்தி பதிவு செய்து வந்திருந்த பாலுமகேந்திரா, தான் சார்ந்திருக்கும் சமூகம் குறித்த சமகால பிரச்சினையை மையப்படுத்திய படம் 'தலைமுறைகள்' தங்களது முந்தைய கலாசாரங்களோடு முற்றிலும் துண்டித்துக் கொண்டு இறக்குமதி நாகரிகங்களோடு வேறு வகையில் விநோதமாக வளரும் இளையதலைமுறையினர் குறித்த ஆதாரமான கவலையையும் அதற்கான மென்மையான தீர்வையும் பதிவு செய்திருக்கிறது இத்திரைப்படம். மொழியையும் இயற்கையையும் விட்டு விலகி நிற்கும் அபத்தங்களையும்.

பாலுமகேந்திரா சுதந்திரமாக இயங்க விரும்பும் திரைப்படங்களின் படி மிக நிதானமாக நகரும் காட்சிகளும் திரைக்கதையும் சிறு சிறு மினிமலிச கதைகளாக பல நெகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டிருந்தாலும் சற்று சலிப்பையும் ஏற்படுத்துகிறது. இத்திரைப்படத்தின் மையமும் ஆதாரமான நோக்கமும் உயர்வானதாக இருந்தாலும் அதை கலையுணர்வுடன் அழுத்தமாக பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறதா என்றால் சற்று தயக்கத்துடன் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

தினமும் தவறாது திருவாசகம் படிக்கும் சைவப்பிள்ளையாகவும் சாதிய இறுக்கத்தின் மனோபாவமுள்ள பழமைவாத மனம் கொண்டவராகவும் கறாரான பிடிவாதக்காரராகவும் தன்னுடைய பாத்திரத்தை வடிவமைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் பாலுமகேந்திரா. தள்ளாமையின் கையறு நிலையில் தன்னுடைய பிடிவாதங்களை தளர்த்தி கைவிட்ட உறவுகளை சுயநலக்காரணங்களோடு அரவணைப்பதாக பழமைவாத மனநிலை சற்று இளகியிருப்பதாக அந்தப் பாத்திரத்தின் மாற்றங்களில் ஏற்படும் பயணத்தை நுட்பமான காட்சித் தொடர்ச்சிகளில் பதிவு செய்திருந்தாலும் இம்மாதிரியான ஒரு நபர் ஒரே காட்சியில் சாதியைத் துறக்கும் நாடகத்தனமான காட்சியமைப்புகளையெல்லாம் பாலுமகேந்திரா போன்ற மாஸ்டர்கள் செய்யக்கூடாது. (தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படைப்பாக இந்த திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பதை இந்த சமயத்தில் நினைவு கொள்வது நல்லது).

பாலுமகேந்திராவின் சில அற்புதமான முகபாவங்களை கவனிக்கும் போது இவர் முன்பே நடிக்க வந்திருக்கலாமே என்கிற உணர்வு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. இது ஏதோ அவர் இறந்து விட்டாரே என்கிற நெகிழ்ச்சியுடன் மீது அமைந்த உணர்வல்ல. உண்மையாகவே சில காட்சிகளில் மனிதர் அசத்தியிருக்கிறார். (பாலச்சந்தர், பாரதிராஜா போன்று இவரின் நடிப்பு எரிச்சலை மூட்டாதிருந்ததே நல்ல விஷயம்).

இளம்தலைமுறையைச் சார்ந்த சிறுவனொருவன் தம்முடைய முன்னோர்களின்  பண்பாடு மற்றும் கலாசாரங்களிலிருந்து விலகிய பிரதிநிதியாக நிற்கிறான் என்பது இயக்குநர் சொல்ல விரும்பியிருக்கிற விஷயம். ஆனால் சென்னையில் வளர்ந்து வரும் சிறுவன், ஏதோ லண்டனில் பிறந்து வளர்ந்தவன் போல ஒருவரி தமிழ் கூட அறியாமலும் பிள்ளையார் சிலையைக் கூட அறியாதவனாகவும் சித்தரித்திருக்கும் விதம் நெருடலை ஏற்படுத்துகிறது. போலவே  சென்னையில் இருக்கும் அவனது பெற்றோர்களும் ஆங்கிலத்திலேயே - அந்தப் பெண் பின்னர் தமிழ் கற்ற போதிருந்த போதிலும் - உரையாடிக் கொள்வது பொருந்தாமல் இருக்கிறது.  படத்தின் துவக்கத்தில் காட்டப்படும் மகள் வயிற்று மூன்று பேரப் பிள்ளைகள் பிறகு எங்குமே தென்படாமலிருப்பதும் அவர்கள் மீதும் சுப்பு அன்பு செலுத்தினாரா என்பதெல்லாம் தெளிவாக இல்லை.

திரைக்கதையில் இது போன்ற சிறு சிறு மைக்ரோ விஷயங்களில் செலுத்தப்படும் கவனங்கள்தான் தொடர்புள்ள திரைப்படத்தின், காட்சிகளின் மீதான நம்பகத்தன்மையைக் கூட்டுகின்றன என்பதை மறக்கக்கூடாது. சசிகுமாரின் தங்கையாக விநோதினி நடித்திருந்தாலும் casting இந்த விஷயத்தில் பொருத்தமாக இல்லை. சுப்பு தமிழ் மீது பிடிப்புள்ளவராக இருந்தாலும் பேரன் சொல்லித்தரும் ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதில் உள்ள உற்சாகத்தில் மொழி வெறியர்களுக்கு ஒரு செய்தி உள்ளது. ஆனால் மருமகளும் பேரனும் அந்த ஊரிலேயே தங்குவது, அதற்கான காரணங்கள், எவ்வித சிணுங்கலும் இல்லாமல்  பேரன் தமிழ் கற்றுக் கொள்வது, ஸ்பஷ்டமாக திருக்குறள் சொல்வது  எல்லாம் சரியாக சித்தரிக்கப்படாமல் யதார்த்தமற்ற  நாடகத்தனங்களாக உள்ளன.

இத்திரைப்படத்திலேயே என்னை அதிகம் நெளிய வைத்தது. இதன் sound editing தான். பாலு மகேந்திரா உருவாக்கும் பெரும்பாலான டெலி பிலிம்களில் அவுட்டோர் காட்சிகளில் பறவைகளின் சப்தம் தொடர்ந்து ஒலிப்பதைக் கவனித்திருக்கலாம். இண்டோர் காட்சி என்றாலும் கூட வெளியிலிருந்து கத்தும் காக்கையின் சப்தம் அவர் டெலிவிஷனுக்காக உருவாக்கிய 'கதை நேரத்தில்' எபிஸோட்களில் வழக்கமான விஷயமாக இருக்கும். இதில் அவுட்டோர் காட்சிகளில் அவ்வாறு இணைக்கப்பட்டிருக்கும் பறவைகளின் ஒலிகள் மிக செயற்கையாக பொருத்தமற்று அமைந்திருந்தன. பாலுமகேந்திரா பறவைகளின் காதலனாக இருந்திருக்கலாம். (இதில்கூட பேரன் வாங்கி வரும் கூண்டுப் பறவையை சுதந்திரமாக பறக்க திறந்து விடுவது போல் ஒரு காட்சி உள்ளது). ஆனால் அதற்கான ஒலிகள் மிக கவனமாகவும் இயல்பாகவும் இணைவது நல்லது. எனில் லைவ் சவுண்ட் உத்தியை பயன்படுத்தியிருக்கலாம்.

குறிப்பிட்டு குறிப்பிட்டு சலித்து போன விஷயம்தான். அதுவரை நாம் கோபமாகவே பார்த்துப் பழகிய பள்ளி ஆசிரியரை அபூர்வமாக அவரது வீட்டில் சந்திக்க நேரும் போது அவர் வாய்விட்டு சிரிப்பதை ஆச்சரியமாக கவனிப்பது போல  சில குறிப்பிட்ட இயக்குநர்களின் படத்தில் மாத்திரம் ராஜாவின் இசை பிரத்யேக உன்னதங்களுடன் அமைவது வாடிக்கையான விஷயம்தான். படத்தின் டைட்டில் காட்சி முதற்கொண்டு சில நெகிழ்ச்சிகரமான தருணங்களில் ராஜாவின் இசை அந்தக் காட்சிகளை மேலதிக உயரத்திற்கு அழைத்துச் செல்கிறது. சில சமயங்களில் ஆர்வக்கோளாறாக தேவையற்று ஒலித்து எரிச்சலையும் உண்டாக்குகிறது. இன்னும் சில இடங்களில் மெளனமே இசையாக அமைந்ததில் இயக்குநரின் பங்கும் வலியுறுத்தலும் இருந்திருக்கலாம்.

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி இத்திரைப்படத்தின் மையமும் நோக்கமும் உன்னதமான காரணங்களோடு அமைந்திருந்தாலும் திரைக்கதையும் காட்சிக் கோர்வைகளும் தூர்தர்ஷனில் உருவாக்கப்பட்ட டெலிபிலிம்களின் தரத்தில்தான் உள்ளன. கலை சார்ந்த திரைப்படமென்றாலும் ஒரு திரைப்படத்தின் மேக்கிங் தற்போது எவ்வளவு தூரத்திற்கு நகர்ந்திருக்கிறது என்பதை சமகால உலக சினிமாக்களையாவது - அல்லது குறைந்த பட்சம் அவர்களது சிஷ்யர்களின் திரைப்படங்களையாவது - பார்த்து ஆசான் சற்று சுதாரித்திருந்திருக்கலாம். பாலுமகேந்திரா இப்போது மறைந்து விட்டார் என்பதற்காக அதன் மீது எழும் நெகிழ்வுணர்ச்சிகளின் காரணமாக  இத்திரைப்படத்தின் குறைகளை மழுப்பி  ஆஹா ஓஹோ என்று புகழலாம். (இயக்குநர் உயிரோடு இருந்த போதே இத்திரைப்படம் குறித்து எழுதிய சாருநிவேதிதா அதைத்தான் செய்திருந்தார்). ஆனால் அந்தப் பொய்களின் மீது எழுப்பப்படும் வெற்றுப் புகழுரைகள் இயக்குநரின் ஆன்மாவை துன்புறுத்துவதாகத்தான் அமையும். தலைமுறை இடைவெளிகளோடு அமைந்த உருவாக்கத்துடன் அமைந்திருப்பதுதான் இத்திரைப்படத்தின் பின்னடைவு.

ஏறத்தாழ இதே மாதிரியான திரைக்கதையுடன் ஆனால் மிகுந்த நுண்ணுணர்வுடனும் கலையமைதியுடனும் உருவான The Way Home என்கிற கொரிய திரைப்படத்தைப் பார்த்திருநதால் நான் சொல்ல வருவது புரியும்.