Friday, January 02, 2015

பாலுமகேந்திராவின் 'தலைமுறைகள்'
படவெளியீட்டின் போது பார்க்க முடியாமல் போன, நீண்ட நாட்களாக பார்க்க நினைத்திருந்த, பாலுமகேந்திரா இயக்கிய கடைசி திரைப்படமும் அவர் தன்னுடைய நிரந்தர அடையாளத்தை கழற்றி வைத்து நடித்திருந்த முதல் திரைப்படமுமான 'தலைமுறைகள்' திரைப்படத்தை இன்று ஜெயா டிவியில் பார்த்தேன். ஒரு கலைஞனின் பரிணாம வளர்ச்சியின் படி சரியான இடத்திற்குத்தான் பாலுமகேந்திரா வந்து சோ்ந்திருப்பதாகத் தோன்றுகிறது.

எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை இவ்வாறு எழுதின நினைவு: 'அந்த இளைஞனை இறுகக் கட்டிக் கொண்டு வண்டியில் பயணிக்கும் இளம் பெண்ணை பார்க்கிறேன். கவலையாக இருக்கிறது. இளைஞனின் கண்களில் இருக்கும் நோக்கம் அத்தனை ஆரோக்கியமானதாக இல்லை. ஒரு காலத்தில் இளம்பெண்களின் அனாட்டமிகளை மாய்ந்து மாய்ந்து வர்ணித்தவன், இப்போது இந்தப் பெண்ணுக்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.'

'வீடு' 'சந்தியா ராகம்' தவிர்த்து பெரும்பாலும் தனிநபர்களின் அகச்சிக்கல்களையும் துயரங்களையும் மகிழ்ச்சிகளையும் மையப்படுத்தி பதிவு செய்து வந்திருந்த பாலுமகேந்திரா, தான் சார்ந்திருக்கும் சமூகம் குறித்த சமகால பிரச்சினையை மையப்படுத்திய படம் 'தலைமுறைகள்' தங்களது முந்தைய கலாசாரங்களோடு முற்றிலும் துண்டித்துக் கொண்டு இறக்குமதி நாகரிகங்களோடு வேறு வகையில் விநோதமாக வளரும் இளையதலைமுறையினர் குறித்த ஆதாரமான கவலையையும் அதற்கான மென்மையான தீர்வையும் பதிவு செய்திருக்கிறது இத்திரைப்படம். மொழியையும் இயற்கையையும் விட்டு விலகி நிற்கும் அபத்தங்களையும்.

பாலுமகேந்திரா சுதந்திரமாக இயங்க விரும்பும் திரைப்படங்களின் படி மிக நிதானமாக நகரும் காட்சிகளும் திரைக்கதையும் சிறு சிறு மினிமலிச கதைகளாக பல நெகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டிருந்தாலும் சற்று சலிப்பையும் ஏற்படுத்துகிறது. இத்திரைப்படத்தின் மையமும் ஆதாரமான நோக்கமும் உயர்வானதாக இருந்தாலும் அதை கலையுணர்வுடன் அழுத்தமாக பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறதா என்றால் சற்று தயக்கத்துடன் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

தினமும் தவறாது திருவாசகம் படிக்கும் சைவப்பிள்ளையாகவும் சாதிய இறுக்கத்தின் மனோபாவமுள்ள பழமைவாத மனம் கொண்டவராகவும் கறாரான பிடிவாதக்காரராகவும் தன்னுடைய பாத்திரத்தை வடிவமைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் பாலுமகேந்திரா. தள்ளாமையின் கையறு நிலையில் தன்னுடைய பிடிவாதங்களை தளர்த்தி கைவிட்ட உறவுகளை சுயநலக்காரணங்களோடு அரவணைப்பதாக பழமைவாத மனநிலை சற்று இளகியிருப்பதாக அந்தப் பாத்திரத்தின் மாற்றங்களில் ஏற்படும் பயணத்தை நுட்பமான காட்சித் தொடர்ச்சிகளில் பதிவு செய்திருந்தாலும் இம்மாதிரியான ஒரு நபர் ஒரே காட்சியில் சாதியைத் துறக்கும் நாடகத்தனமான காட்சியமைப்புகளையெல்லாம் பாலுமகேந்திரா போன்ற மாஸ்டர்கள் செய்யக்கூடாது. (தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படைப்பாக இந்த திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பதை இந்த சமயத்தில் நினைவு கொள்வது நல்லது).

பாலுமகேந்திராவின் சில அற்புதமான முகபாவங்களை கவனிக்கும் போது இவர் முன்பே நடிக்க வந்திருக்கலாமே என்கிற உணர்வு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. இது ஏதோ அவர் இறந்து விட்டாரே என்கிற நெகிழ்ச்சியுடன் மீது அமைந்த உணர்வல்ல. உண்மையாகவே சில காட்சிகளில் மனிதர் அசத்தியிருக்கிறார். (பாலச்சந்தர், பாரதிராஜா போன்று இவரின் நடிப்பு எரிச்சலை மூட்டாதிருந்ததே நல்ல விஷயம்).

இளம்தலைமுறையைச் சார்ந்த சிறுவனொருவன் தம்முடைய முன்னோர்களின்  பண்பாடு மற்றும் கலாசாரங்களிலிருந்து விலகிய பிரதிநிதியாக நிற்கிறான் என்பது இயக்குநர் சொல்ல விரும்பியிருக்கிற விஷயம். ஆனால் சென்னையில் வளர்ந்து வரும் சிறுவன், ஏதோ லண்டனில் பிறந்து வளர்ந்தவன் போல ஒருவரி தமிழ் கூட அறியாமலும் பிள்ளையார் சிலையைக் கூட அறியாதவனாகவும் சித்தரித்திருக்கும் விதம் நெருடலை ஏற்படுத்துகிறது. போலவே  சென்னையில் இருக்கும் அவனது பெற்றோர்களும் ஆங்கிலத்திலேயே - அந்தப் பெண் பின்னர் தமிழ் கற்ற போதிருந்த போதிலும் - உரையாடிக் கொள்வது பொருந்தாமல் இருக்கிறது.  படத்தின் துவக்கத்தில் காட்டப்படும் மகள் வயிற்று மூன்று பேரப் பிள்ளைகள் பிறகு எங்குமே தென்படாமலிருப்பதும் அவர்கள் மீதும் சுப்பு அன்பு செலுத்தினாரா என்பதெல்லாம் தெளிவாக இல்லை.

திரைக்கதையில் இது போன்ற சிறு சிறு மைக்ரோ விஷயங்களில் செலுத்தப்படும் கவனங்கள்தான் தொடர்புள்ள திரைப்படத்தின், காட்சிகளின் மீதான நம்பகத்தன்மையைக் கூட்டுகின்றன என்பதை மறக்கக்கூடாது. சசிகுமாரின் தங்கையாக விநோதினி நடித்திருந்தாலும் casting இந்த விஷயத்தில் பொருத்தமாக இல்லை. சுப்பு தமிழ் மீது பிடிப்புள்ளவராக இருந்தாலும் பேரன் சொல்லித்தரும் ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதில் உள்ள உற்சாகத்தில் மொழி வெறியர்களுக்கு ஒரு செய்தி உள்ளது. ஆனால் மருமகளும் பேரனும் அந்த ஊரிலேயே தங்குவது, அதற்கான காரணங்கள், எவ்வித சிணுங்கலும் இல்லாமல்  பேரன் தமிழ் கற்றுக் கொள்வது, ஸ்பஷ்டமாக திருக்குறள் சொல்வது  எல்லாம் சரியாக சித்தரிக்கப்படாமல் யதார்த்தமற்ற  நாடகத்தனங்களாக உள்ளன.

இத்திரைப்படத்திலேயே என்னை அதிகம் நெளிய வைத்தது. இதன் sound editing தான். பாலு மகேந்திரா உருவாக்கும் பெரும்பாலான டெலி பிலிம்களில் அவுட்டோர் காட்சிகளில் பறவைகளின் சப்தம் தொடர்ந்து ஒலிப்பதைக் கவனித்திருக்கலாம். இண்டோர் காட்சி என்றாலும் கூட வெளியிலிருந்து கத்தும் காக்கையின் சப்தம் அவர் டெலிவிஷனுக்காக உருவாக்கிய 'கதை நேரத்தில்' எபிஸோட்களில் வழக்கமான விஷயமாக இருக்கும். இதில் அவுட்டோர் காட்சிகளில் அவ்வாறு இணைக்கப்பட்டிருக்கும் பறவைகளின் ஒலிகள் மிக செயற்கையாக பொருத்தமற்று அமைந்திருந்தன. பாலுமகேந்திரா பறவைகளின் காதலனாக இருந்திருக்கலாம். (இதில்கூட பேரன் வாங்கி வரும் கூண்டுப் பறவையை சுதந்திரமாக பறக்க திறந்து விடுவது போல் ஒரு காட்சி உள்ளது). ஆனால் அதற்கான ஒலிகள் மிக கவனமாகவும் இயல்பாகவும் இணைவது நல்லது. எனில் லைவ் சவுண்ட் உத்தியை பயன்படுத்தியிருக்கலாம்.

குறிப்பிட்டு குறிப்பிட்டு சலித்து போன விஷயம்தான். அதுவரை நாம் கோபமாகவே பார்த்துப் பழகிய பள்ளி ஆசிரியரை அபூர்வமாக அவரது வீட்டில் சந்திக்க நேரும் போது அவர் வாய்விட்டு சிரிப்பதை ஆச்சரியமாக கவனிப்பது போல  சில குறிப்பிட்ட இயக்குநர்களின் படத்தில் மாத்திரம் ராஜாவின் இசை பிரத்யேக உன்னதங்களுடன் அமைவது வாடிக்கையான விஷயம்தான். படத்தின் டைட்டில் காட்சி முதற்கொண்டு சில நெகிழ்ச்சிகரமான தருணங்களில் ராஜாவின் இசை அந்தக் காட்சிகளை மேலதிக உயரத்திற்கு அழைத்துச் செல்கிறது. சில சமயங்களில் ஆர்வக்கோளாறாக தேவையற்று ஒலித்து எரிச்சலையும் உண்டாக்குகிறது. இன்னும் சில இடங்களில் மெளனமே இசையாக அமைந்ததில் இயக்குநரின் பங்கும் வலியுறுத்தலும் இருந்திருக்கலாம்.

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி இத்திரைப்படத்தின் மையமும் நோக்கமும் உன்னதமான காரணங்களோடு அமைந்திருந்தாலும் திரைக்கதையும் காட்சிக் கோர்வைகளும் தூர்தர்ஷனில் உருவாக்கப்பட்ட டெலிபிலிம்களின் தரத்தில்தான் உள்ளன. கலை சார்ந்த திரைப்படமென்றாலும் ஒரு திரைப்படத்தின் மேக்கிங் தற்போது எவ்வளவு தூரத்திற்கு நகர்ந்திருக்கிறது என்பதை சமகால உலக சினிமாக்களையாவது - அல்லது குறைந்த பட்சம் அவர்களது சிஷ்யர்களின் திரைப்படங்களையாவது - பார்த்து ஆசான் சற்று சுதாரித்திருந்திருக்கலாம். பாலுமகேந்திரா இப்போது மறைந்து விட்டார் என்பதற்காக அதன் மீது எழும் நெகிழ்வுணர்ச்சிகளின் காரணமாக  இத்திரைப்படத்தின் குறைகளை மழுப்பி  ஆஹா ஓஹோ என்று புகழலாம். (இயக்குநர் உயிரோடு இருந்த போதே இத்திரைப்படம் குறித்து எழுதிய சாருநிவேதிதா அதைத்தான் செய்திருந்தார்). ஆனால் அந்தப் பொய்களின் மீது எழுப்பப்படும் வெற்றுப் புகழுரைகள் இயக்குநரின் ஆன்மாவை துன்புறுத்துவதாகத்தான் அமையும். தலைமுறை இடைவெளிகளோடு அமைந்த உருவாக்கத்துடன் அமைந்திருப்பதுதான் இத்திரைப்படத்தின் பின்னடைவு.

ஏறத்தாழ இதே மாதிரியான திரைக்கதையுடன் ஆனால் மிகுந்த நுண்ணுணர்வுடனும் கலையமைதியுடனும் உருவான The Way Home என்கிற கொரிய திரைப்படத்தைப் பார்த்திருநதால் நான் சொல்ல வருவது புரியும்.

2 comments:

ஹரி நிவாஸ் said...

ஏறத்தாழ இதே மாதிரியான திரைக்கதையுடன் ஆனால் மிகுந்த நுண்ணுணர்வுடனும் கலையமைதியுடனும் உருவான The Way Home என்கிற கொரிய திரைப்படத்தைப் பார்த்திருநதால் நான் சொல்ல வருவது புரியும். i too felt the same as you (alredy seen the way home )

ஆத்மா said...

திரைக்கதைக்கு அவசியமான சிறு சிறு விடயங்களில் கவனம் செலுத்தி உயிரோட்டமுள்ள திரைப்படங்களை தருவதற்கு தமிழ் சினிமா தவறிக்கொண்டேதான் இருக்கின்றது.
பணமே குறிக்கோளாய் திரிகிறார்கள் :(