Monday, September 28, 2009

புதன்கிழமையன்று பார்த்த உ.போ.ஒ.


கடந்த புதன்கிழமை, 'வெட்னெஸ்டே'வின் (ஆகா! என்ன பொருத்தம்) தமிழ் வடிவமான உ.போ.ஓ.வை பார்க்க நேர்ந்தது. வழக்கமாக கமல் படங்களின் மீது ஏற்படும் ஆர்வம் ஏனோ இந்த முறை முதலிலிருந்தே ஏற்படவில்லை. எனவேதான் நண்பர் ராஜ்குமார் விமர்சனம் குறித்து பின்னூட்டத்தில் கேட்ட போது இவ்வாறு எழுதியிருந்தேன்.

ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை இந்தப்படம் குறித்து இணையத்தில் வந்து விழும் விமர்சனங்களைக் கண்டாலே தலையைச் சுற்றுகிறது. இதில் என்னையும் கோதாவில் குதிக்கச் சொல்கிறீர்கள்.btw மூலத்தை ஏற்கெனவே பார்த்துவிட்டதால் இதைப் பார்க்கும் ஆவல் தோன்றவில்லை. ஒருவேளை பின்னர் இதைப் பார்த்தாலும் எழுதத் தோன்றுமா எனவும் தெரியவில்லை.


என்றாலும் பிறகு இந்தப் படத்தை பார்க்கும் ஆவலை என்னுள் ஏற்படுத்தினவர்கள் மூவர். மோகன்லால், இரா.முருகன், ஸ்ருதிஹாசன்.

நண்பரொருவர் வற்புறுத்தி அழைத்ததின் பேரில் சென்றேன். (மகளுக்காக செல்ல வேண்டியிருந்தது என்று எழுதினால் அடிப்பதற்கென்றே நாலு பேர் இருக்கிறார்கள்). அன்றிரவே ஒரு வார்ம்-அப்பிற்காக மூலவடிவ இந்திப்படத்தை மீண்டும் பார்த்தேன். இப்போது இந்தப் படத்தின் மையத்தை வேறொரு பரிமாணத்தில் உணர முடிந்தது.

()

வைரத்தை வைரத்தால் அறுப்பது போன்று தீவிரவாதத்தை ஒழிக்க தீவிரவாதத்தையே கையில் எடுக்கும் சாமானியனைப் பற்றிப் பேசும் இத்திரைப்படம் 'கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்' என்கிற கற்கால (அ)நீதியையொட்டிய ஆபத்தானதொரு கருத்தாக்கத்தை முன்வைக்கிறது. 'வன்முறைக்கு வன்முறை' என்பது வேறு வழியில்லாத நிலையில் தற்காலிக தீர்வாக இருந்தாலும் நிரந்தரத் தீர்வாகாது என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிருபித்துக் கொண்டேதான் இருக்கிறது. 'எப்படி, ஏன் தீவிரவாதிகள் உருவாகிறார்கள், வன்முறையின் மூலம் சமூக மையத்தின் கவனத்தைக் கவர முயல்கிற அவர்களின் பிரச்சினை என்ன?' ஆகிய கேள்விகளை முன்வைத்து அவர்களின் சமூக மற்றும் உளவியல் காரணங்களை ஒருவேளை இந்தப்படம் ஆராய்ந்திருந்தால் பாராட்டியிருக்கலாம். (குருதிப்புனலில் இதற்கான தடயங்கள் இருந்தது). அவ்வாறில்லாமல் தீவிரவாதம் குறித்து பொதுப்புத்தி கொண்டிருக்கிற வெறுப்பிற்கும் ஆனால் யதார்த்தத்தில் எதுவும் செய்ய இயலாத கையாலாகத்தனத்தினால் அதை ஏதோ ஒரு 'சூப்பர்மேன்-கம்-பொதுஜனம்' திரையில் செய்கிற போது அதை தாம் செய்து பார்ப்பதாக நினைத்து மகிழும் பார்வையாளனின் மன அரிப்பிற்கும் இந்தப் படம் தீனி போடுகிறது.

இது ஒரு பகற்கனவுப் (Fantasy) படம். 'ஒரு வேளை இப்படி நடந்தால்' என்னும் உத்தியைக் கொண்டிருக்கிறது. ஆனால் இதை முழுவதும் பகற்கனவு என்று ஒதுக்கிவிடவும் முடியாது. தீவிரவாதத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கிற அரசியல்வாதிகளின் மீதும், பயிரையை மேய்கிற அதிகார மையங்களின் மீதும் கண்ணுக்குத் தெரியாத மதம் மீதுள்ள வெறி காரணமாக முகம் தெரியாத அந்நியனைக் கூட கொல்லத் துணியும் மதஅடிப்படைவாதிகளின் கூட்டங்களின் மீதும் பொதுப்புத்தியில் பொறியாக படிந்திருக்கும் மெளனகோபம் நெருப்பாக கிளர்ந்து ஒரு வெடிகுண்டின் திரியில் போய் முடியலாம். அவ்வாறான நிலைக்கு முற்றிப் போக விடாமல் இருக்க அதிகார மையங்கள் தம் மீதுள்ள கறைகளைத் துடைத்துக் கொள்ள வேண்டிய ஒரு எச்சரிக்கை மணியை பலத்த ஒலியுடன் எழுப்புகிறது இத்திரைப்படம்.

()

தாடி வளர்ந்ததும் த்ரிஷாவிற்கு சற்று தமிழ் கற்றுத் தந்ததும் மாத்திரமே மிச்சம் என்று முடிந்த மர்மயோகி ப்ராஜக்டின் சலிப்பிலிருந்து விடுபட குறுகிய கால தயாரிப்பாக உ.போ.ஒ.வை உருவாக்க கமல் முடிவு செய்திருக்கலாம். எனவே தமிழ் உருமாற்றம் செய்ய சொற்ப மாற்றங்களைத் தவிர பெரிதாக எந்தவொரு பிரயத்தனமும் செய்யவில்லை. திரைக்கதை, காட்சிக்கோணங்கள், உரையாடல், எடிட்டிங் என்று எல்லாவற்றையும் மூலப்படத்திலிருந்தே நகல் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்திப்படம் பார்வையாளனுக்கு தந்த தாக்கத்தை இது தந்ததா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரிஜினல் ஒரிஜினல்தான். ஆனால் எந்தவித வணிக சம்பிரதாயங்களுமில்லாத இப்படியொரு படத்தை தமிழில் உருவாக்க முன்வந்ததற்காகவே கமலைப் பாராட்டலாம். ஒரு நல்ல சிறுகதை போன்று எங்கும் அலைபாயாத இறுக்கமான ஆங்கில பாணி திரைக்கதையுடன் தமிழில் வந்திருப்பது ஒரு இனிய ஆச்சரியம்.

ஆர்.கே. லக்ஷ்மணின் 'மிஸ்டர் பொதுஜனம்' கார்ட்டூன் கேரக்டர் போல நரைத்த தலையுடன் நஸ்ருதின் ஷா பார்வையாளனுக்கு இயல்பாக அளித்த 'பொது ஜனத்' தன்மையை பிரயத்தனப்பட்டும் கூட ஏனோ கமலால் தர இயலாமல் போனது துரதிர்ஷ்டம்தான். 'நான் குப்பனோ சுப்பனோ இல்லன்னு இப்பவாவது புரிஞ்சுக்கிட்டீங்களா?' என்று அலட்டும் போது 'மிஸ்டர் பொதுஜனம்' காணாமற் போய் விடுகிறார். ஆனால் சுமார் 1000 சதுரஅடி மொட்டைச் சுவற்றின் மீதே பெரும்பாலான காட்சிகளில் இயங்க வேண்டிய சவாலான சூழ்நிலையை தன்னுடைய தீவிரமான முகபாவங்களால் திறமையாக சமாளித்திருக்கிறார் கமல். தொடர்ச்சியான பெரும்பான்மையான அண்மைக் கோணக் காட்சிகளை (close-up shots) கமல் போன்ற ஒரு திறமையான கலைஞனால் மாத்திரமே எதிர்கொள்ள இயலும்.

ஆரம்பத்தில் தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவனைப் போல பார்வையாளனுக்கு தோன்றி இறுதியில் அதற்கொரு திருப்பம் தருவதுதான் இந்தப் பாத்திரத்தின் அடிப்படையான உருவம். ஆனால் பெரும்பான்மையான படங்களில் ஹீரோவாக நடித்து ஒரு 'சூப்பர்மேன்' பிம்பத்தை பொதுவான தமிழ் ரசிக மனங்களில் ஏற்படுத்தி வைத்திருக்கும் கமல் இந்தப் பாத்திரத்தில் நடிக்கும் போது 'எப்படியிருந்தாலும் நாயகன் கெடுதல் செய்ய மாட்டான்' என்கிற முன்தீர்மானத்தோடு பார்வையாளன் காட்சிகளைத் தொடரும் ஒரு அபாயத்தை அவரே ஏற்படுத்தியிருக்கிறார். 'எப்போதும் நல்லவனாகவும் வல்லவனாகவும் நடிக்கும் ஹீரோ நிஜ வாழ்க்கையிலும் அதே மாதிரித்தான் இருப்பான்' என்று அப்பாவியாக நம்பும், அவனிடம் தம்மை ஆளும் தலைமைப் பொறுப்பைக்கூட தரத்தயாராக இருக்கும் ரசிக மனம் இப்படித்தான் இயங்கும். எனவே கமல் தம்முடைய பாத்திரத்தை 'பிரகாஷ் ராஜ், அடுல் குல்கர்னி' போன்ற திறமையான, பிம்பமேதுமில்லாத நடிகர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கியிருக்கலாம். நடிகனை அவனின் தனிப்பட்ட பராக்கிரமங்களை ஒதுக்கிவிட்டு படைப்பின் ஒரு பாத்திரமாக மாத்திரமே அணுகும் முதிர்ச்சியை அந்த ரசிக மனம் பெற இன்னும் பல ஆண்டுகளாகலாம்.

'ஆறுச்சாமி' ரேஞ்சில் நிஜ போலீஸ் வெறியுடன் உலவியிருக்கும் மோகன்லால் பல காட்சிகளில் மிக அனாயசமாய் கமலை ஓவர்டேக் செய்கிறார். இந்தியாவில் உள்ள இயல்பாக நடிக்கும் மிகச் சிறந்த நடிகர்களில் தான் ஒருவன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் லால். தலைமைச் செயலாளரான லட்சுமியுடன் அதிகாரப் போட்டி காரணமாக இவர் நடத்தும் காரசாரமான உரையாடலின் ஊடே அற்புதமான நடிப்பை சிதறவிட்டிருக்கிறார். 'துப்பாக்கிய தூக்கிட்டு வெறியோட அண்ணாசாலைல ஓடச் சொல்றீங்களா?' என்று ஆத்திரமாக கேட்கும் போதும் 'என் தலை உருளட்டும். i'll take the responsibilty' எனும் போதும் கைகள் கட்டிப் போடப்பட்டிருக்கும் ஆதங்கமும் அரசியல்வாதிகளால் பலிகடாக்களாக ஆக்கப்படும் காவல்துறையினரின் சோகமும் தெரிகிறது. ஐ.பி.எஸ்-ஸ¥க்கும் ஐ.ஏ.எஸ்-ஸீக்கும் வழக்கமாக நிகழும் அதிகார போட்டியின் அரசியல் இந்த காட்சிகளில் மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. இந்திப்படத்தில் இது இவ்வளவு அழுத்தமாக வெளிப்படவில்லை. 'சேது'வாக நடித்திருக்கும் அந்த காவல்துறை அதிகாரி (பரத் ரெட்டி) தமிழிற்கு நல்லதொரு வரவு.

மூலப்படத்தின் பெரும்பாலான உரையாடல்களையே தமிழ்ப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு இரா.முருகன் ஆளாகியிருந்தாலும் சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டி தன்னுடைய தனித்தன்மையை நிருபித்திருக்கிறார். 'கியாரண்டி வாரண்டி எல்லாம் கொடுக்கறதுக்கு நான் என்ன குக்கரா விக்கறேன்' என்கிற நக்கலில் சுஜாதாவின் நிழல் தெரிகிறது. சமீபத்திய தேர்தலில் கமல் தேர்தலில் ஓட்டளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை படத்தில் சாமர்த்தியமாக இணைத்திருப்பது (இன்விசிபிள் மேன்) ரசிக்க வைக்கிறது. ஆனால் 'அதான் இன்னும் ரெண்டு இருக்கறதப்பா. அட்ஜஸ்ட் பண்ணிக்க' என்று இசுலாமியர்களின் கலாச்சாரத்தை கிண்டலடித்திருப்பது குரூர நகைச்சுவை. தமிழில் பிரத்யேகமாக உருவாக்கப்படுகிற திரைப்படத்தில் பணியாற்றினால்தான் முருகனின் முழு பரிமாணத்தை நம்மால் உணர முடியும். (படத்தின் விளம்பரங்களில் வசனகர்த்தா உட்பட பிரதான கலைஞர்களின் பெயர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. நான் பார்த்த திரையரங்கில் படத்தின் இறுதிக்காட்சி முடிந்தவுடனே புரொஜக்டரை அணைத்து விட்டார்கள்).

எப்போது மெளனத்தை பின்னணி இசையாய் தரவேண்டும் என்று ஸ்ருதிஹாசனுக்குத் தெரிந்திருக்கிறது. நான் முன்னர் பயந்த மாதிரி எந்தப் பாடலும் படத்தில் உபயோகப்படுத்தப்படவில்லை. புத்திசாலித்தனமான முடிவு. ஆனால் இதனால் சம்பந்தப்பட்ட பாடல்களுக்கு உழைத்தவர்களுக்கு எவ்விதமான அங்கீகாரமும் போகவில்லை எனும் போது எதற்காக பாடல்களை உருவாக்கியிருக்க வேண்டும் என்கிற கேள்வியும் கூடவே எழுகிறது. படத்தின் promotion-க்கு மாத்திரம் இவை கருவேப்பிலையாக பயன்பட்டிருக்கக்கூடும்.

இந்தப் படத்தின் புதிய தொழில்நுட்பமாக ரெட்ஒன் கேமராவை சொல்கிறார்கள். (இது பயன்படுத்தப்பட்ட முதல் திரைப்படம் அருண் வைத்யநாதனின் 'அச்சமுண்டு அச்சமுண்டு). ஆனால் ஒரு பார்வையாளனாக என்னால் எந்த வித்தியாசத்தையும் காண இயலவில்லை. நான் பார்த்த பாடாவதி தியேட்டரில் இது சிறப்பாக வெளிப்படவில்லையா என்பது குறித்து தெரியவில்லை.


()

இப்போது இந்தி -தமிழ் என்று இரு படங்களுக்குமுள்ள ஆறு வித்தியாசங்களை மாத்திரம் (சும்மா ஜாலிக்காக) கண்டுபிடிக்க முயற்சிக்கலாம்.

அளவில் சிறியது என்றாலும் 'லாஜிக்கான பிழைகள்' காட்சிகளின் நம்பகத்தன்மையைக் குறைத்துவிடும். உதாரணத்திற்கு தமிழப்படத்தின் ஒரு காட்சியை விவரிக்கிறேன். காவல் நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டிருக்கிற விவரம் தெரியவந்த பிறகு பாம் ஸ்குவாட்டும் மோப்ப நாய்களும் வரவழைக்கப்படுகின்றன. ஒளித்து வைக்கப்பட்டிருக்கிற பையை நாய் கண்டுபிடித்து சமிக்ஞை செய்தவுடன் பாம் ஸ்குவாட் குழுவில் ஒருவர் அந்தப் பையை ஏதோ காய்கறி முட்டை போல் இழுக்கிறார். ஆனால் இந்திப்படத்தில் இது சரியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒருவர் பையை முதலில் ஸ்கேன் செய்து பார்க்கிறார். பிறகு பையை நகர்த்தாமல் திறந்து பார்க்கிறார்கள்.

பொதுஜனத்தில் ஒருவனை இவ்வளவு தீவிரமான முடிவை நோக்கி நகர்த்தும் புள்ளியை இந்திப்படத்தில் ஒரு மென்மையான சிறிய பிளாஷ்பேக் காட்சிகளின் மூலம் விவரித்திருப்பார்கள். நஸ்ரூதின் ஷாவை தினமும் ரயிலில் சந்தித்து புன்னகைப்பான் ஒரு இளைஞன். இருவருக்குள் பேச்சு வார்த்தை கூட கிடையாது. தினமும் புன்னகை, ஹலோ... அவ்வளவுதான். தனக்கு திருமணம் நிச்சயமாகியிருப்பதை சமிக்ஞையின் மூலம் சொல்வான் அந்த இளைஞன். ஷா போக முடியாத ஒரு ரயில் தினத்தில் வண்டியில் குண்டு வைக்கப்பட்டு அவர் தினமும் சந்திக்கும் முகங்களெல்லாம் பிணமாக கிடப்பதை பார்த்து பதைபதைத்துப் போவதை பின்பு உரையாடலின் மூலம் சொல்வார். ஆனால் இது உ.போ.ஒ.வில் அழுத்தமாக வெளிப்படவில்லை.

தலைபோகிற பிரச்சினை ஒன்று வந்தால் எப்படி அரசு இயந்திரம் ஜகா வாங்குகிறது என்பதை உ.போ.ஒ. நிதர்சனமாக காட்டுகிறது. இதில் கருணாநிதி குரலிலேயே "தேர்தல்ல பாதிப்பு வராதில்ல' என்று கேட்பது தைரியமான நக்கல். 'மத்திய அரசின் உதவி தேவைப்படுமா?' என்றும் ஒரு கேள்வி முதல்வரால் எழுப்பப்படுகிறது. ஆனால் கமிஷனர் மோகன்லால் இதை மறுத்துவிடுகிறார். ஆனால் இந்திப்படத்தில் "இது நம் மாநிலப் பிரச்சினை. நாமே தீர்ப்போம்' என்று சொல்வதோடு ஸ்பாட்டுக்கு நேரடியாகவும் வந்துவிடுகிறார் முதல்வர். ம்.. வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது.

செய்தி ஊடகங்கள் செய்திகளை 'உருவாக்குவதற்காக' நிகழ்த்தும் மாய்மாலங்களை இந்திப்படம் மிகுந்த எள்ளலுடன் வெளிப்படுத்தியிருக்கும். குடிபோதையில் சாலையில் விழுந்த ஒருத்தவரை வலுக்காட்டாயமாக கேமரா முன் இழுத்து வந்து மின்கம்பம் விழுந்து அடிபட்டதாக அவரை தயார்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக பேச வைப்பார்கள். அவரும் கேமரா முன் நிற்கும் உற்சாகத்துடன் அள்ளிவிடுவார். இந்தக் காட்சிக் கோர்வை தமிழில் அறவே நீக்கப்பட்டிருக்கிறது.

தமிழில் நான் மிகவும் எதிர்பார்த்திருந்த ஒரு காட்சி, computer hacker வரும் காட்சி. தொடர்ச்சியான சப்தத்துடன் சரவெடி வெடித்துக் கொண்டிருக்கும் போது இடையில் ஒரு மத்தாப்பு பிரகாசமாக எரிந்தால் எப்படியிருக்குமோ அப்படியாக பரபரப்பான காட்சிகளின் இடையில் அந்த இளைஞனின் குறும்பு இந்திப்படத்தில் மிகப்பிரமாதமாக வெளிப்பட்டு பார்வையாளர்களை சிரிப்பால் அதிர வைத்திருக்கும். ஆனால் இந்த மேஜிக் தமிழ்படத்தில் அத்தனை சுவாரசியமாக வெளிப்படவில்லை.

தமிழ்ப்படத்தில் + ஆக ஏதும் இல்லையா என்றால் இருக்கிறது. முன்னமே குறிப்பிட்ட IAS vs IPS முரண்களின் காட்சிகளைத் தவிர ரயிலில் ஊருக்குப் போகும் காவல் அதிகாரியின் மனைவி அமர்ந்திருக்கும் இருக்கையின் அருகிலும் வெடிகுண்டு பை வைக்கப்பட்டு இடையிடையில் பார்வையாளர்களுக்கு சிறிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை திருத்தப்பட்டிருக்கும். இந்தியில் இது கிடையாது.

()

இவையெல்லாம் சிறிய உதாரணங்கள்தான். ஆனால் இரண்டு படங்களின் அடிப்படையான காட்சிகளிலுமே நிறைய லாஜிக் பிழைகளை காண முடிந்தது.

காவல் துறைக்கு சவால் விடுகிற ரகசியமான வேலையை ஏன் அந்த பொதுஜனம் ஏதோ மாஞ்சா காத்தாடி விடுவது போல் மொட்டை மாடியில் நின்று செய்கிறார், பக்கத்திலுள்ள கட்டிடங்களில் இவரைக் கவனிப்பவர்கள் விநோதமாக உணர்ந்து காவல்துறைக்கு சொல்ல மாட்டார்களா?

பொதுஜன தீவிரவாதி (?!) செய்தியாளரையும் தொடர்பு கொள்கிறான் என்று தெரிந்து கொள்கிற காவல்துறை ஏன் செய்தியாளரைப் பின்தொடரவோ அவரது தொலைபேசியை கண்காணிப்பதையோ செய்யவில்லை? இவ்வளவு பரபரப்பான செய்தி ஒரு சானலில் வந்தவுடனேயே மற்ற சானல்காரர்களும் இந்தச் செய்திக்கு படையெடுக்க மாட்டார்களா? அப்படியே ஒரு செய்தியாளர்தான் இதை 'கவர்' செய்கிறார் என்று வைத்துக் கொண்டாலும் அந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது மட்டும்தான் தீவிரவாதிக்கு 'செய்தி' எனும் போது ஏன் அதை காவல்துறை தீவிரவாதியை திசை திருப்ப அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை? இவ்வளவு பயங்கரமான தீவிரவாதிகளை உடனேயே இடமாற்றம் செய்யவோ, மிரட்டல்வாதியிடம் ஒப்படைக்கவோ எப்படி சில மணிநேரங்களிலேயே நத்தை வேகத்தில் இயங்கும் அரசு இயந்திரத்தின் அனுமதி கிடைக்கிறது?

இப்படியான பல சங்கடமான நடைமுறை கேள்விகள் படத்தினுள் முழுமையாக மூழ்கிப் போவதற்கு பார்வையாளனுக்கு இடைஞ்சலாக உள்ளதாக எனக்குப் படுகிறது. தமிழ் வடிவத்தை உருவாக்கும் போதும் கூட இந்தப் பிழைகள் ஏன் கவனிக்கப்படவில்லை என்றும் தெரியவில்லை.

படத்தின் இயக்குநர் சக்ரி டோலட்டி. 'சலங்கை ஒலி'யில் நடித்த சிறுவன் என்பதைத் தவிர இவரைப் பற்றின மேலதிக விவரங்கள் தெரியவில்லை. கமலின் பெரும்பான்மையான இயக்குநர்கள் இவ்வாறாக பூடகமாகவே இயங்குகிறார்கள். படஉருவாக்கத்தின் பெரும்பான்மையில் கமலே பின்னணியில் இயங்குவதாக கூறப்படுகிறது. ஏன் கமல் இவ்வாறு பினாமி படைப்பாளிகளின் நிழலில் இயங்க வேண்டும் என்பது புரியவில்லை. அந்த இயக்குநர்களுக்கு உண்மையாகவே திறமையிருக்கலாமே, ஏன் இவ்வாறு சந்தேகப்பட வேண்டும் என்றொரு கேள்வி எழலாம். 'அன்பே சிவம்' இயக்கின சுந்தர்.சியை எடுத்துக் கொள்வோம். 'அன்பே சிவம்' காட்சிகளை உருவாக்கின திறமையின் தடயங்கள் அவரது மற்ற திரைப்படங்களில் துளிக்கூட இல்லை என்பதைக் கவனிக்கலாம்.

இந்திப் படத்தில் பூடகமாக வெளிப்பட்டிருந்த இசுலாமிய வெறுப்பு தமிழ்ப்படத்தின் சில காட்சிகளில் அப்பட்டமாகவே வெளிப்பட்டிருந்தது. கைதிகளுக்கும் இசுலாமிய காவல்துறை அதிகாரிக்கும் நடக்கும் உரையாடலில் இது வெளிப்படையாகவே தெரிந்தது. முன்னரே குறிப்பிட்டிருந்தது போல் எந்த மதஅடையாளமுமில்லாமல் படம் முழுக்க வெளிப்பட்டிருந்த நஸ்ருதின் ஷாவிடம் கமல் தோற்றுப் போயிருந்தார். 'இன்ஷா அல்லா'ன்னு சொல்றீங்களா..? என்பது போன்ற பார்வையாளனை சீண்டும் வசனங்களை தவிர்த்திருக்கலாம். 'அப்ப ஆப்கானிஸ்தானுக்கு போக வேண்டியதுதானே?' என்பது இன்னொன்று. என்றாலும் இந்தக்குறையை சமன் செய்ய கமல் பல இடங்களில் முயன்றிருக்கிறார். "இந்த இந்து-முஸ்லிம் விளையாட்டை எத்தனை நாளைக்கு விளையாடப் போறீங்களோ?" என்பது ஒரு உதாரணம். "ஏன் நானொரு கிறிஸ்டியனாகவோ, பெளத்தனாகவோ, நாத்திகவாதியாகவோ, கம்யூனிஸ்டாகவோ இருக்கக்கூடாதா? அவங்களுக்கு கோவமே வராதா?" என்பது இன்னொன்று.

ஒட்டுமொத்தமான படத்தின் முழுவடிவம் என்ற வகையில் நீங்கள் ஒருவேளை மூலப்படத்தை பார்த்திருந்தீர்கள் என்றால் இதை பார்க்காமலிருப்பதே உத்தமம். இல்லை என்றால் நேரடியாக இந்திப் படத்தையே பார்த்துவிடலாம்.

()

இந்தப் படம் குறித்து இணையத்தில் வந்த சில அபத்தமான விமர்சனங்களையும் படிக்க நேர்ந்தது. பொதுப்புத்தியிலிருந்து விலகி நின்று தம்முடைய பார்வையை காத்திரமான மொழியில் வெளிப்படுத்துவது தேவையானதொன்றுதான். ஆனால் அது ...த்திரமான மொழியில் வெளிப்படும் போது பதிவின் ஆதார மையம் வாசிப்பவனிடமிருந்து இந்த காரணத்தினாலேயே விலகிப் போகிறது என்பதை இவர்கள் உணர்வதில்லை. மேலும் எந்தவொரு சமூக அநீதியென்றாலும் திரைப்படமென்றாலும் அதை பார்ப்பனக்குடுவையில் போட்டு குலுக்கியெடுத்து தம்முடைய மன அரிப்பை தீர்த்துக் கொள்ளும் போக்கை தொடர்ந்து காணும் போது பிறப்பால் பார்ப்பனன் அல்லாத (ஒரு தகவலுக்காக வேறு வழியில்லாமல் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது) எனக்கே எரிச்சலாக இருக்கிறது. இந்து தீவிரவாதம் வெறுமனே பார்ப்பனர்களால் மாத்திரமா நிகழ்த்தப்படுகிறது? இந்து மதத்தின் மற்ற அடுக்குகளில் உள்ளவர்கள் மதக்கலவரங்களிலும் அதற்கான பின்னணியிலும் ஈடுபடுவதே இல்லையா? அப்போது மாத்திரம் இவர்கள் ஏன் ஊமையாகிப் போகிறார்கள் என்று தெரியவில்லை. 'இசுலாமியர்கள் தீவிரவாதிகள்' என்று பொதுப்புத்தியில் படியுமாறு படைப்புகள் உருவாக்கப்படுவதால் எதிர்க்கிறோம் என்பது இவர்களின் வாதம். நானும் இவர்களால் தாக்கப்படுவேன் என்று தெரிந்தே கேட்கிறேன். யதார்த்தத்தில் இந்தச் செய்தியில் உண்மையே இல்லையா? உலகம் முழுவதும் நிகழும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களைப் பற்றின விசாரணை முடிவுகள் வரும் போது அவர்கள் பெரும்பாலும் இசுலாமியர்களாக இருப்பது உண்மையா அல்லது திட்டமிட்டு பரப்பப்படுவதா? இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது குறித்து கவலைப்படும் இவர்கள் ஏன் ஒரு பிரிவை தொடர்ந்து வன்மத்துடன் 'கொடூரர்களாக' சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்? இப்படி கேட்பதின் மூலம் இந்துத் தீவிரவாதத்தையோ மற்ற எந்தவொரு அமைப்பின் வன்முறையையோ எந்த வகையிலும் நான் நியாயப்படுத்த முனையவில்லை என்பதையும் குறிப்பிட்டு விடுகிறேன். வன்முறை எந்த வகையிலும் யாரிடமிருந்து வெளிப்பட்டாலும் அது கண்டிக்கத் தக்கது.

தங்களைத்தானே அறிவுஜீவிகளாக பாவித்துக் கொள்ளும் இவர்கள் கவலைப்படுவதைப் போல எந்தவொரு இனக்குழுவைச் சேர்ந்த 'பொதுஜனத்திற்கும்'வன்முறையில் ஈடுபடும் தீவிரவாதிகள் யார் என்றும் தம்மைப் போலவே இயங்கும் அப்பாவிகள் யார் என்றும் தெளிவாக தெரிந்திருக்கிறது. எனவேதான் விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டையும் ரம்ஜானிற்கு பிரியாணியும் அவர்களுக்குள் பரிமாறிக் கொள்ளப்படுகிறது. எந்தவொரு மதக்கலவரத்தின் போதும் இன்னொரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரகசியமாக அடைக்கலம் தருவதும் பாதுகாப்பு தருவதும் இவர்களே. சக மனிதனை அவனுடைய மத அடையாளத்தைத் தாண்டி வெறும் மனிதனாகவே பார்ப்பதும் இம்மாதிரியான பொதுஜனங்களே. இத்திரைப்படம் மாதிரியான படைப்புகள் அவர்களுக்குள் எந்தவித எதிர்மறையான சலனத்தையும் பெரிதாக ஏற்படுத்துவதில்லை. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என்னுடைய எந்தவொரு இசுலாமிய நண்பனையும் 'இவன் தீவிரவாதியாக இருப்பானோ' என்கிற சந்தேகத்தோடேயே நான் பழகுவதில்லை. அவனும் அப்படியே. எந்தவொரு கலவரத்தின் போதும் அவன் வயிற்றில் நான் கத்தியைப் பாய்ச்ச மாட்டேன் என்பதை அவனும் உறுதியாகவே நம்புகிறான். பெரும்பாலோரின் தனிப்பட்ட எண்ணமும் இதுவாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்.

எனவே போலி அறிவுஜீவிகள் தங்களின் அசட்டு வாதங்களை பரண் மீது போட்டுவிட்டு உருப்படியான வேலை ஏதுமிருந்தால் அதை பார்க்கப் போகலாம். 'நடாஷா-கரிகாலன்' என்பது போன்ற நுண்ணிய விவரங்களை வைத்துக் கொண்டு இவர்கள் செய்யும் கட்டுடைப்புகள்தான் மதஅடிப்படைவாதத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இவர்களின் மொழியில் வெளிப்படும் வன்மம் எந்தவொரு ஆதிக்கச் சாதியின் குரலில் வெளிப்படும் வன்மத்திற்கும் நிகராக இருப்பதால் இவர்களின் முற்போக்கான இயக்கம் நிஜமா அல்லது அந்தப் போர்வையில் வெளிப்படும் அடிப்படைவாதமா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தச் செய்கிறது.

கமல் ஒரு 'பார்ப்பனன்' என்கிற அடிப்படையில் வழக்கம் போல் எழுந்த வன்மம்மிக்க விமர்சனங்களையும் படிக்க நேர்ந்தது. கமல் சப்பாணியாக கோவணம் கட்டிக் கொண்டு நடித்தால் அதிலிருந்து கூட தமக்கான பூணூல்களை உருவி விடும் இந்த இணைய வித்தகர்கள் இருக்கும் வரை பரபரப்பிற்கும் சுவாரசியத்திற்கும் இணையத்தில் பஞ்சமிருக்காது. இவர்களின் அரசியல்களை பொதுஜனமாகிய நாம் நன்றாகவே அறிந்து வைத்திருப்பதால் இவர்களைப் புறக்கணிப்பதே நம்முடைய ஆரோக்கியமான மனநலத்திற்கு உகந்ததாக இருக்கும்.

தொடர்புடைய பதிவு: மிஸ்டர் பொதுஜனமும் புதன்கிழமையும்

suresh kannan

Saturday, September 19, 2009

அறிவுஜீவியும் பெனலோப் குருஸின் மார்பகங்களும்ஒரு மாறுதலுக்கு மொக்கையாகத் தோன்றியதொரு திரைப்படத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ள உத்தேசம். 2008-ல் வெளிவந்த திரைப்படம் Elegy.

கல்லூரிப் பேராசிரியரும் தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சிகளில் அடிக்கடி தோன்றுகிற அறிவுஜீவியான டேவிட், தம்மை மிகவும் கவர்கிற மாணவிகளை தேர்ந்தெடுத்து தனிமையில் வீழ்த்தி 'மேட்டர்' முடிந்தவுடன் மறந்துவிடுவதை பொழுதுபோக்காக கொண்டவர். சட்டத்தின் மீதுள்ள பயம் காரணமாக அவர்களின் மாணவப்பருவம் முடியும் வரை காத்திருந்து தம்முடைய வேலையை முடிக்குமளவிற்கு ஜாக்கிரதை உணாச்சி கொண்டவர். (Since they posted the sexual harassment hotline number down the hall from my office) தனிமை விரும்பி. மனைவியுடன் விவாகரத்து. இதனாலேயே கோபித்துக் கொண்டு அவருடன் விலகியிருக்கிற மகன்.

டேவிட் ஒரு மாதிரியான 'சினிக்'. சுயநலமி. அவருடைய பழைய மாணவி ஒருத்தி இன்னமும் தொலைவிலிருந்து பறந்து வந்து அவருடன் உறவு கொண்டவுடன் திரும்பி விடுகிற அளவிற்கு பெண்களைக் கவர்பவராக இருக்கிறார். இந்நிலையில் மேல்பட்டன் திறந்த நிலையில் அமர்ந்திருக்கிற ஸ்பானிய மாணவியான Consuelaவைக் கண்டவுடன் கட்டம் கட்டி விடுகிறார். அவளுடைய திறந்த மார்பகங்களை நேருக்கு நேராக சந்தித்து 'Work of Art' என்கிறார். இப்படி உடலை ஆராதிக்கிற மனிதரைக் கண்டவுடன் நெகிழ்ந்து போய் அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறாள் Consuela. ஒரு கட்டத்திற்குப் பிறகு அவளிடமிருந்து விலக முடியாமல் மலச்சிக்கல்காரன் போல் அவஸ்தைப்படுகிறார். என்றாலும் நண்பரின் தூண்டுதல் காரணமாக எப்படியோ இந்த தொடர்பு அறுபடுகிறது. பிரிவின் போதுதான் தாம் அவளை உண்மையாகவே காதலித்திருக்கிறோம் என்பதை உணர்கிறார். இரண்டு ஆண்டுகள் கழித்து Consuela பேராசிரியரை தொடர்பு கொள்கிறார். மார்பு புற்றுநோய் காரணமாக அவளுடைய இரண்டு மார்பகங்களும் அகற்றப்படவிருக்கின்றன என்பதை அறிந்து பேராசிரியர் துக்கப்படுகிறார். நினைவுச்சின்னமாக தம்முடைய மார்பகங்களை புகைப்படம் எடுத்துத் தரச்சொல்லி வேண்டுகோள் வைக்கிறாள் Consuela.

இப்படியாக போகிறது இந்த பாடாவதிப்படம். சுவாரசியமற்ற திரைக்கதை காரணமாக நத்தை வேகத்தில் செல்கிறது. டேவிட்டின் அரையிருட்டான வீட்டுக்குள்ளேயே பெரும்பாலும் காட்சிகள் இயங்குகிறது. என்றாலும் அற்புதமாக பதிவாகியிருக்கிற ஒளிப்பதிவிற்காக இதை சகித்துக் கொள்ளலாம்தான். டேவிட்டாக பென் கிங்க்ஸ்லி (ஆமாம். அவரேதான்) மிக அற்புதமாக நடித்திருக்கிறார். மிகவும் subtle ஆன திறமையான நடிப்பு மெதுவான திரைக்கதை ஓட்டத்தினால் வீணாகிப் போகிறது. அறிவுஜீவிப் பாத்திரம் அவருக்கு மிகப் பொருந்திப் போவது மட்டுமல்லாமல் அதற்காக தம்முடைய நியாயமான உழைப்பையும் தந்திருக்கிறார். Consuela-ஆக பெனலோப் குருஸ். இயல்பான நடிப்பு. இந்த மாதிரி வயசுப் பெண்கள் சமவயது ஆண்களை விட மாமா, தாத்தா வயது ஆண்களிடம் போய் எப்படி விழுகிறார்கள் என்பது ஆராயத்தக்கது. ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் பற்றின பிராய்ட்டின் கருத்தாக்கத்தில் இதற்கு விடை கிடைக்கலாம்.

எப்படி இந்தப் பதிவைப் படித்தீர்களோ அதே போன்றதொரு வெட்டியான நேரத்தில் வேண்டுமானால் இந்தப் படத்தைப் பார்த்துத் தொலைக்கலாம்.

suresh kannan

Thursday, September 17, 2009

'Reservoir Dogs' திரைப்படம் நாடகமாகிறது


Quentin Tarantino இயக்கிய முதல் திரைப்படமான 'Reservoir Dogs' (1992) நாடகமாக சென்னையில் நிகழ்த்தப்படவிருக்கிறது. SRM Sivaji Ganesan Film Institute-ன் உருவாக்கத்தில் மைக்கேல் முத்து இதை இயக்கியிருக்கிறார். சென்னை மியூசியம் தியேட்டரில் செப்டம்பர் 18ந்தேதி இரவு 07.15 மணிக்கும் 19ந் தேதி மற்றும் 20ந்தேதியில் முறையே மாலை 03.00 மணிக்கும் 07.15 மணிக்கும் நடக்கவிருக்கிறது.

தமிழ்ச் சூழலில், வெற்றிகரமான நாடகங்கள் திரைப்படமாக உருமாறியதற்கு பல உதாரணங்கள் உள்ளன. ஆனால் வெற்றி பெற்ற ஒரு (ஆங்கில)திரைப்படம் நாடகமாக உருவாக்கப்படுவது இங்கு இதுதான் முதன் முறை என்று கருதுகிறேன். பல்வேறு தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்படும் திரைப்படத்தை மேடையில் நிகழ்த்துவது மிகுந்த சிரமமான காரியம்தான் என்றாலும் Reservoir Dogs பெரும்பாலும் வசனங்களினால் அமைந்திருந்தது என்பதால் நாடகமாக ஆக்குவது சற்று எளிதானதே. ஆனால் Tarantino திரையில் நிகழ்த்தின சுவாரசிய அனுபவத்தை இந்த நாடகம் தருமா என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

இந்து நாளிதழ் செய்தி

Reservoir Dogs திரைப்படம் குறித்த எனது பார்வை

எனது இன்னொரு வலைப்பதிவான 'பகிர்தலில்' இந்த இடுகை திரட்டிகளில் சரியாக இணைக்கப்படாததால் ஒரு தகவலுக்காக இங்கும் இடுகிறேன்.

suresh kannan

'Reservoir Dogs' திரைப்படம் நாடகமாகிறது


Quentin Tarantino இயக்கிய முதல் திரைப்படமான 'Reservoir Dogs' (1992) நாடகமாக சென்னையில் நிகழ்த்தப்படவிருக்கிறது. SRM Sivaji Ganesan Film Institute-ன் உருவாக்கத்தில் மைக்கேல் முத்து இதை இயக்கியிருக்கிறார். சென்னை மியூசியம் தியேட்டரில் செப்டம்பர் 18ந்தேதி இரவு 07.15 மணிக்கும் 19ந் தேதி மற்றும் 20ந்தேதியில் முறையே மாலை 03.00 மணிக்கும் 07.15 மணிக்கும் நடக்கவிருக்கிறது.

தமிழ்ச் சூழலில், வெற்றிகரமான நாடகங்கள் திரைப்படமாக உருமாறியதற்கு பல உதாரணங்கள் உள்ளன. ஆனால் வெற்றி பெற்ற ஒரு (ஆங்கில)திரைப்படம் நாடகமாக உருவாக்கப்படுவது இங்கு இதுதான் முதன் முறை என்று கருதுகிறேன். பல்வேறு தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்படும் திரைப்படத்தை மேடையில் நிகழ்த்துவது மிகுந்த சிரமமான காரியம்தான் என்றாலும் Reservoir Dogs பெரும்பாலும் வசனங்களினால் அமைந்திருந்தது என்பதால் நாடகமாக ஆக்குவது சற்று எளிதானதே. ஆனால் Tarantino திரையில் நிகழ்த்தின சுவாரசிய அனுபவத்தை இந்த நாடகம் தருமா என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

இந்து நாளிதழ் செய்தி

Reservoir Dogs திரைப்படம் குறித்த எனது பார்வை

Saturday, September 12, 2009

சாருவிற்கு ஒரு பரிந்துரை

தன்னுடைய சமீபத்திய பதிவில் சாரு இப்படியாக எழுதுகிறார்.

...சமீபத்தில் என்னுடைய விருப்பத்திற்குரிய தமிழ் சினிமா பாடல் திரட்டைக் கண்ணுற்ற நண்பர் ஒருவர் அதிர்ந்து போனார். காரணம், சமகால இசையமைப்பாளர்களில் இடம் பெற்றிருந்தவர்கள், நான் தொடர்ந்து விமர்சித்து வரும் இளையராஜா (ஹே ராம் : நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி, குணா : கண்மணி அன்போடு), ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா என்றுதான் இருந்ததே தவிர அதில் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் இல்லை. ஏனென்றால், எனக்கு ரஹ்மானின் இந்திப் பாடல்கள்தான் பிடிக்கும் (உ-ம்: தில்லி 6). ...

இப்படியான அபத்தமான கருத்தை அவர் பிறிதொரு சமயங்களிலும் எழுதிய ஞாபகம். ஒருவரின் இசை இந்தியில் கேட்டால் பிடிக்கும்; தமிழில் கேட்டால் பிடிப்பதில்லை என்பதை எப்படி ஒருவரால் சொல்ல இயலும் என்பதே எனக்குப் புரியவில்லை. இசை மொழிகளைக் கடந்தது என்பதை நாமெல்லாம் அறிவோம். மேலும் மொழியின் துணைகொண்டு அமையும் பாடல்கள் எல்லாம் ஒரு பாவ்லாதான். இசைதான் ஆதாரம். எனவேதான் என்னால் அட்சரம் கூடப் புரிந்து கொள்ள முடியாத இந்தித் திரைப்பட இசையை, இந்துஸ்தானி இசையை, ஸ்பானிய இசையை... ஏன் சாருவே சிபாரிசு செய்த நான்சி அஜ்ரத்தைக் கூட இசைக்காக மாத்திரமே ரசிக்க முடிகிறது. சமயங்களில் பிரபலமான தமிழ்ப்பாடல்களினால் அமைந்த instrumental தொகுப்புகளை அசலை விடவும் அதிகமாக ரசிக்க முடிகிறது. நண்பர் சாருவிற்கு ரகுமானின் இந்த தமிழ்ப்பாடலை பரிந்துரைக்க விரும்புகிறேன்.கணினியின் சன்னலை சுருக்கி (minimise)வீடியோவை தவிர்த்து ஒலியை மாத்திரம் கேட்கவும். இந்தப் பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் என்னுள் ஏதோ ஒன்று உடைந்து போகின்றது. உள்ளுக்குள் இருக்கும் அத்தனை ரணங்களையும் கண்ணீரின் மூலம் வெளியே அடித்துத் தள்ள முயலும் மாயவித்தையை இந்தப் பாடல் செய்கிறது. இதே அனுபவம்தான் கேட்கும் அனைவருக்கும் (அது தமிழ் அறியாத அன்பர்களுக்கும் சேர்த்து) அமையும் என்று உறுதியாகச் சொல்ல இயலாவிட்டாலும் உங்களுக்குள் ஏதோவொரு சலனத்தை ஏற்படுத்தத் தவறாது என்பதை மாத்திரம் உறுதியாகச் சொல்ல முடியும். இந்தப் பாடலுக்காக ஸ்வர்ணலதாவிற்கு தேசிய விருது கிடைத்த ஞாபகம். பாடலை கேட்டு முடித்த ஒவ்வொரு முறையும் ஸ்வர்ணலதாவின் கையை முத்தமிட விரும்புகிறேன்.

suresh kannan

Wednesday, September 09, 2009

பெரியார் திரைப்படத்திற்கு விருதா?.. அநியாயம்


2007 திரைப்படங்களுக்கான 55வது தேசியவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுப்பட்டியலின் கூடவே சர்ச்சைகளும் இருப்பது இயல்பான மரபு. தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான போட்டியில் ஷாரூக்கான் (chakde), அமீர்கான் (Taare zameen par), பிரகாஷ்ராஜ் (Kanchivaram) ஆகியோர் இறுதிக் கட்டத் தேர்வில் இருந்தார்கள் என்று கேள்விப்பட்டேன். இதில் ஷாரூக்கானுக்கும் பிரகாஷ்ராஜூக்கும் இடையில் போட்டி கடுமையாக இருந்ததாக தெரிகிறது. பிரகாஷ் சிறந்த நடிகர் விருதிற்கு முழுமையான தகுதியுடையவர் என்பதில் யாருக்கும் குறிப்பாக தென்னியந்தியர்கள் பெரும்பான்மையோருக்கு மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்திவாலாக்கள் இந்த முடிவு குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று அறிய விரும்புகிறேன். இந்த முறை அதிர்ஷ்டக்காற்று பெரும்பான்மையான தென்னிந்தியப் படங்களின் மீது வீசிற்று.

ஆனால் சிறந்த நடிகருக்கான தேர்வை வாக்களிக்கும் சந்தர்ப்பம் எனக்கு அளிக்கப்பட்டிருந்தால் (அடங்குடா!) மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு நான் நிச்சயம் ஷாருக்கையே தேர்ந்தெடுத்திருப்பேன். ஏனெனில் 'சக்தே'வில் அவருடைய நடிப்பு மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. என்னைப் பொருத்த வரை இயல்பான நடிப்பு என்பது தம்முடைய வயதிற்கு,உடலிற்கு மாறாக ஒப்பனையை அணிந்து குலுங்கி குலுங்கி அழுவதல்ல. பாத்திரத்திற்கு ஏற்ப எந்த கோணங்கித்தனமுமில்லாத இயல்பான ஒப்பனையுடன் யதார்த்தமாக எதிர்வினையாற்றுவது. அது வங்கி அதிகாரியோ அல்லது சாராயம் காய்ச்சுபவனோ, அந்தப் பாத்திரம் ஏற்றிருந்தால் பார்வையாளன் அவரின் பாத்திரத்தை நிஜமென்று நம்புமளவிற்கு அவரின் உடல்மொழியும் நடிப்பும் இருக்க வேண்டும். ரிக்ஷாக்காரன் பாத்திரத்திற்கு கான்வாஸ் ஷ¥ போட்டு நடிப்பதல்ல. அவ்வாறு இயல்பாக நடிப்பவர்களில் உதாரணம் சொல்ல யோசிக்கும் போது சட்டென்று ஒருவர் நினைவுக்கு வருகிறார். மம்முட்டி. தன்னுடைய மதம் காரணமாக மக்களால் புறக்கணிக்கப்பட்ட வலியும் அதைக் கடந்துவர வேண்டுமென்கிற முயற்சிகளின் வெறியும் ஷாரூக்கானின் யதார்த்தமான தோற்றத்தில், நடிப்பில் (சக்தே) மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கும். எனவேதான் பிரகாஷ்ராஜை விட சில சொற்ப புள்ளிகளில் ஷாரூக் வெல்கிறார் என்பது என் தனிப்பட்ட அனுமானம். ஆனால் சக்தே சிறந்த பொழுதுபோக்குப் பட பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. கொடுமை. சிறந்த திரைப்படமாக 'காஞ்சிவரம்' தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிதது எனக்கு மகிழ்ச்சியே.

அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு (நாலு பெண்கள்) சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது குறித்து அறிய மகிழ்ச்சி. படம் வந்த சமயத்தில் இணையத்தில் வெளிவந்த ஆரோக்கியமான பதிவுகள் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டின. ஆனால் இதை இன்னும் பார்க்கவில்லை என்பதால் இந்தத் தேர்வு குறித்து தீர்மானமாக எதையும் சொல்ல இயலில்லை. சிறந்த நடிகை விருது பெற்ற உமாஸ்ரீயின் 'குலாபி டாக்கிஸ¥ம்' (கன்னடம்) அவ்வாறே. சிறந்த பெண் துணை நடிகருக்கான விருது shefali shah-க்கு (The last lear) கிடைத்திருப்பது மிகப் பொருத்தமே. நடிகரான தன் கணவனுக்கு பணிவிடை செய்ய வேண்டிய சலிப்பும் கணவரின் கூட நடிக்கும் நடிகையான ப்ரீத்தி ஜிந்தாவிடம் தம்முடைய கோபத்தை வெளிப்படுத்த இயலாமல் பணிப்பெண்ணிடம் காண்பிக்கும் இயல்பானதொரு இந்திய குடும்பத் தலைவியாக நன்றாக நடித்திருந்தார். (இவர் கஸ்தூரிபாயாக Gandhi my father-படத்திலும் நடித்திருந்தார்).

சிறந்த திரைக்கதை விருது, சிறப்பு நடுவர் விருது, சிறந்த துணை நடிகர் விருது போன்றவைகளைக் குவித்த Gandhi my father-ம் முக்கியமான திரைப்படம். பெரும்பாலும் அறியப்படாத ஹரிலால் காந்தியின் வாழ்க்கையை சிறப்பாக வெளிக்கொணர்ந்தது அந்தத் திரைப்படம். இதில் காந்தியாக சிறப்பாக நடித்த darshan zariwala-க்கு சிறந்த துணை நடிகர் கிடைத்தும் பொருத்தமே.
()

மாநில மொழிப் பிரிவில் சிறந்த படமாக 'பெரியார்' தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு பின்னால் அரசியற் காரணங்கள் ஏதேனும் உள்ளனவா என்று அறியேன். ஏனெனில் தமிழ் மக்களிடையே மட்டுமல்லாது இந்தியா முழுக்க திரைப்படத்தின் மூலமாக சிறப்பாக அறிமுகப்படுத்தியிருக்க வேண்டிய பெரியார் என்னும் முக்கியமான ஆளுமையை மோசமானதொரு திரைப்பட உருவாக்கத்தின் மூலம் அதன் அடிப்படை நோக்கத்தை பாழ்படுத்தியதுதான் இந்தப் படத்தின் சாதனை. ஞானராஜசேகரனின் முதல் படமான 'மோகமுள்' (தி.ஜாவின் நாவல்) ஒரு சுமாரான முயற்சி. நாசர் நடிப்பில் அடுத்த படமான 'முகம்' சிறப்பானதாக இல்லை. 'பாரதி' மட்டுமே சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. அது போலவே 'பெரியாரும்' ஒரு திறமையான புதுமுகத்தையோ அல்லது தமிழர்களுக்கு அறிமுகமில்லாத சிறந்த நடிகரையோ வைத்து உருவாக்கப்பட்டிருந்தால் சிறப்பாக வந்திருக்கும் என நினைக்கிறேன். சத்யராஜ் என்னும் போது சற்று நம்பிக்கையாகத்தான் இருந்தது. ஆனால் கூடவே குஷ்பு போன்றோரெல்லாம் நடிக்கிறார் என்று செய்திவரும் போது அதுவும் அடிபட்டுப் போனது. நினைத்தது போலவே மிக மோசமான திரைக்கதையுடன் நர்சரி ஸ்கூலின் பேன்சி டிரஸ் போட்டி போல் ஆகிப் போனது அந்தப் படம். திரைப்படம் என்கிற வகையில் வரிவிலக்கெல்லாம் அளித்தும் கூட்டம் சேராத இந்த மோசமான உருவாக்கத்திற்கு 'சிறந்த திரைப்படவிருது' அளித்திருப்பது மோசமான முன்னுதாரணம். பதிலாக 'கற்றது தமிழ்' போன்ற சமகால சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசின உண்மையிலேயே தரமான படத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம். இடையில் "ஒன்பது ரூபாய் நோட்டு' படத்திற்காக சத்யராஜிற்குத்தான் சிறந்த நடிகர் விருது கிடைத்திருக்க வேண்டும் என்று காமெடி செய்திருக்கிறார் தங்கர் பச்சான்.


சிறந்த மலையாள திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 'ஒரே கடல்' மிகச் சிறப்பானதொரு தேர்வு. சில மாதங்களுக்கு முன் லோக் சபா சானலில் இதைப் பார்க்க நேர்ந்த போது திகைத்துப் போய் அமர்ந்திருந்தேன். இப்படியான matured ஆன திரைப்படங்கள் தமிழில் வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்குமோ?

தொடர்புடைய பதிவு:

காஞ்சிவரம்: உருப்படியாக ஒரு தமிழ் சினிமா

suresh kannan

Monday, September 07, 2009

உன்னைப் போல் ஒருவன் இசைப் பாடல்கள் - ஒரு பார்வை..

பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்ட கையோடு அதே கையினால் இதை எழுதுகிறேன். ஒரு இசையமைப்பாளராக ஸ்ருதிஹாசன் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது. ரகுமானின் 'ரோஜா' திரைப்படத்தின் பாடல்களை கேட்ட போது எனக்குள் எழுந்த அதே மாதிரியான ஒரு புத்துணர்ச்சியான இசையைக் கேட்கும் உணர்வு இந்த ஆல்பத்தைக் கேட்கும் போது எனக்கு்ள் எழுந்தது. இது ஒரு அதீதமான மதிப்பீடோ என்று சிலருக்குத் தோன்றலாம். தவறில்லை. எனக்குத் தோன்றியதைத் தான் எழுதியிருக்கிறேன். கமல்ஹாசன் மகள் என்பதால் எழுந்த முன்தீர்மானத்தோடு இதைப் பாராட்டி எழுதவில்லை. முன்பின் அறிமுகமில்லாத ஒரு அறிமுக இசையமைப்பாளர் என்றாலும் இதைத்தான் எழுதியிருப்பேன். நான் சுலபமாக யாரையும் உண்மையாக பாராட்டிவிட மாட்டேன். கூடவே இதையும் எழுதிவிடுகிறேன். இசை குறித்த என்னுடைய அறிவு ஒரு சராசரி பாமரனுக்குண்டானது. இசையை அதனுடைய பிரத்யேகமான அடிப்படை அறிவோடு அணுகும் எனக்கு ஞானம் எனக்கில்லையெனினும் என்னுடைய ரசனை மீது எனக்கே இருக்கும் தைரியத்தோடு இதை எழுதத் துணிகிறேன்.இந்த ஆல்பத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன.

படத்தின் தலைப்புப் பாடலாக இருக்கலாம் என்கிற யூகத்தை எழுப்பும் 'உன்னைப் போல் ஒருவன்' கீதையின் ஸ்லோகத்தோடு ராக் இசையுடன் அதிரடியாக பொங்கி வழிகிறது. ஸ்ருதிஹாசன் உட்பட பலர் இதில் குரல் பங்களிப்பு அளித்திருக்கின்றனர். 'i am the new face of terror' என்று பல்வேறு நபர்களின் குரல்களில் முடியும் இந்தப் பாடல் கேட்பதற்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.

பாம்பே ஜெயஸ்ரீயின் மயக்கும் ரகசியக் குரலில் துவங்கும் 'நிலை வருமா'வில் பாடல் துவங்கின சில கணங்களுக்குப் பிறகு கமலும் இணைந்து கொள்கிறார். கீழிருந்து மேலே பாயும் நீர்க்கற்றை போல ஒரு உச்சத்தை நோக்கி எழும்பும் இந்தப் பாடல் மீண்டும் அதே வேகத்தின் மென்மையுடன் நம் மேலே விழும் ஒரு உன்னதமான அனுபவத்தைத் தருகிறது. 'நின்றே கொல்லும் தெய்வங்களும் / இன்றே கொல்லும் மதப்பூசல்களும் / ஒன்றே செய்யும் என உணரும் / நன்றே செய்யும் நிலை வருமா..' என்கிற இன்றைய சூழலுக்கு மிகப் பொருத்தமான கேள்வியை எழுப்பும் வார்த்தைகள் இசையோடு மிக நன்றாகப் பொருந்தியிருக்கின்றன. பாடலின் இறுதியில் தனித்து ஒலிக்கும் கமலின் குரலில் உள்ள ஆதங்கம் நம்முள் வேதனையை எழுப்புகிறது.

பிளாசேவின் வழக்கமான அதிரடி ராப் இசையோடு துவங்கும் 'வானமே எல்லை' இன்றைய நவீன இசையின் அத்தனை உற்சாகங்களோடு ஷாம்பெயின் பாட்டில் போல் ஒலிப்பெருக்கியில் பீறிட்டுத் தெறிக்கிறது. பிளாசாவோடு ஸ்ருதிஹாசனும் இணைந்து பொங்கி வழிந்திருக்கிறார்.

'அல்லா ஜானே அல்லா'.... ஆலபத்தின் மிக குறிப்பிடத்தகுந்த பாடல் இது. பாடியிருப்பது 'அத்னான் சாமி'யா என்கிற மயக்கத்தை துவக்கத்தில் எழுப்பும் இடையில் சிதம்பரம் ஜெயராமன் போலவும் மயக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் பாடலை கமல் நமக்கு இதுவரை அறிமுகமாகாத வித்தியாசமான குரலில் பாடியிருக்கிறார். சூ·பி இசையின் தொனியில் பக்தி இசையின் மயக்கத்தை ஏற்படுத்தும் இந்தப் பாடலில் மனுஷ்யபுத்திரனின் வீர்யமான வார்த்தைகள் சிதையாதவாறு அற்புதமாக இசையமைத்துள்ளார் ஸ்ருதி. தமிழ்த் திரையிசைப்பாடல்களில் இந்தப்பாடல் ஒரு குறிப்பிடத்தகுந்தவொரு இடத்தைப் பிடிக்கும் என்பது என் அனுமானம்.

மேற்குறிப்பிட்ட அதே பாடல் வேகமான தாள இசையின் நவீனத்தோடு இன்னொரு வடிவத்தில் ஸ்ருதியின் குரலில் ஒலிக்கிறது.

()

ஒரிஜனல் படத்தை கெடுத்திருப்பார்களோ என்கிற எண்ணத்தினால் எனக்குள் அதிக எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தியிருக்காத காரணத்தினாலேயே மிகுந்த அசுவாரசியத்துடன் இந்த ஆல்பத்தை கேட்க ஆரம்பித்தேன். ஆனால் கேட்ட மாத்திரத்திலேயே ஒரு உற்சாகமான பதற்றம் எனக்குள் ஒட்டிக் கொண்டது. மீண்டும் மீண்டும் கேட்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவதே இந்த ஆல்பத்தின் வெற்றி என்பேன். பொதுவாக எரிச்சலூட்டும் இன்றைய திரைப்பாடல்களின் இடையே புத்துணர்ச்சியுடனான இசையுடன் நுழைந்திருக்கும் ஸ்ருதியை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். ஒரு தேர்ந்த இசையமைப்பாளரின் ஞானமும் பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைக்கும் வித்தையும் அவருக்கு கைவரப் பெற்றிருக்கிறது என்றே நம்புகிறேன். கமல் மட்டுமல்லாத மற்ற இயக்குநர்களும் இவரைச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார்களா என்பது ஒரு அவநம்பிக்கையுடனான கேள்வியே. இவ்வளவு சிறப்பான பாடல்களை இயக்குநர் எவ்வாறு சலனக் காட்சிகளுடன் பொருத்தமாக பயன்படுத்தியிருக்கப் போகிறார் என்கிற கவலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

சமீபத்தில் தாமரைக்குப் பிறகு பாடலின் வரிகள் தமிழின் வீர்யத்தோடும் உற்சாகத்தோடும் அமைந்திருப்பது இந்த ஆல்பத்தில்தான். மனுஷ்யபுத்திரனுக்கும் நல்வரவு. இவரையும் எத்தனை இயக்குநர்கள் பயன்படுத்திக் கொள்ளப்போகிறார்கள் என்கிற அவநம்பிக்கையும் ஏற்படுகிறது. இவ்வாறு யோசிக்க வைக்கும் அளவிற்கு தமிழ்த் திரைப்படச் சூழல் மாசு அடைந்திருப்பது ஆயாசத்தையே ஏற்படுத்துகிறது. இவ்வாறான புதிய முயற்சிகளே அவ்வாறான ஆயாசத்தை சிறிதளவாவது போக்குகின்றன. வேறு புதிய குரல்களை அறிமுகப்படுத்தியிருக்கலாம் / பயன்படுத்தியிருக்கலாம் என்பது போன்ற சிறிய குறைகளைத் தவிர வேறொன்றுமில்லை.

முழுமையாக இல்லாமல் அவசரத் தொனியில் இந்தப்பதிவு எழுதப்பட்டிருந்தாலும் மிகுந்த மகிழ்ச்சியோடும் நம்பிக்கையுடனும் இந்த ஆல்பத்தை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

suresh kannan