Monday, September 07, 2009

உன்னைப் போல் ஒருவன் இசைப் பாடல்கள் - ஒரு பார்வை..

பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்ட கையோடு அதே கையினால் இதை எழுதுகிறேன். ஒரு இசையமைப்பாளராக ஸ்ருதிஹாசன் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது. ரகுமானின் 'ரோஜா' திரைப்படத்தின் பாடல்களை கேட்ட போது எனக்குள் எழுந்த அதே மாதிரியான ஒரு புத்துணர்ச்சியான இசையைக் கேட்கும் உணர்வு இந்த ஆல்பத்தைக் கேட்கும் போது எனக்கு்ள் எழுந்தது. இது ஒரு அதீதமான மதிப்பீடோ என்று சிலருக்குத் தோன்றலாம். தவறில்லை. எனக்குத் தோன்றியதைத் தான் எழுதியிருக்கிறேன். கமல்ஹாசன் மகள் என்பதால் எழுந்த முன்தீர்மானத்தோடு இதைப் பாராட்டி எழுதவில்லை. முன்பின் அறிமுகமில்லாத ஒரு அறிமுக இசையமைப்பாளர் என்றாலும் இதைத்தான் எழுதியிருப்பேன். நான் சுலபமாக யாரையும் உண்மையாக பாராட்டிவிட மாட்டேன். கூடவே இதையும் எழுதிவிடுகிறேன். இசை குறித்த என்னுடைய அறிவு ஒரு சராசரி பாமரனுக்குண்டானது. இசையை அதனுடைய பிரத்யேகமான அடிப்படை அறிவோடு அணுகும் எனக்கு ஞானம் எனக்கில்லையெனினும் என்னுடைய ரசனை மீது எனக்கே இருக்கும் தைரியத்தோடு இதை எழுதத் துணிகிறேன்.இந்த ஆல்பத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன.

படத்தின் தலைப்புப் பாடலாக இருக்கலாம் என்கிற யூகத்தை எழுப்பும் 'உன்னைப் போல் ஒருவன்' கீதையின் ஸ்லோகத்தோடு ராக் இசையுடன் அதிரடியாக பொங்கி வழிகிறது. ஸ்ருதிஹாசன் உட்பட பலர் இதில் குரல் பங்களிப்பு அளித்திருக்கின்றனர். 'i am the new face of terror' என்று பல்வேறு நபர்களின் குரல்களில் முடியும் இந்தப் பாடல் கேட்பதற்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.

பாம்பே ஜெயஸ்ரீயின் மயக்கும் ரகசியக் குரலில் துவங்கும் 'நிலை வருமா'வில் பாடல் துவங்கின சில கணங்களுக்குப் பிறகு கமலும் இணைந்து கொள்கிறார். கீழிருந்து மேலே பாயும் நீர்க்கற்றை போல ஒரு உச்சத்தை நோக்கி எழும்பும் இந்தப் பாடல் மீண்டும் அதே வேகத்தின் மென்மையுடன் நம் மேலே விழும் ஒரு உன்னதமான அனுபவத்தைத் தருகிறது. 'நின்றே கொல்லும் தெய்வங்களும் / இன்றே கொல்லும் மதப்பூசல்களும் / ஒன்றே செய்யும் என உணரும் / நன்றே செய்யும் நிலை வருமா..' என்கிற இன்றைய சூழலுக்கு மிகப் பொருத்தமான கேள்வியை எழுப்பும் வார்த்தைகள் இசையோடு மிக நன்றாகப் பொருந்தியிருக்கின்றன. பாடலின் இறுதியில் தனித்து ஒலிக்கும் கமலின் குரலில் உள்ள ஆதங்கம் நம்முள் வேதனையை எழுப்புகிறது.

பிளாசேவின் வழக்கமான அதிரடி ராப் இசையோடு துவங்கும் 'வானமே எல்லை' இன்றைய நவீன இசையின் அத்தனை உற்சாகங்களோடு ஷாம்பெயின் பாட்டில் போல் ஒலிப்பெருக்கியில் பீறிட்டுத் தெறிக்கிறது. பிளாசாவோடு ஸ்ருதிஹாசனும் இணைந்து பொங்கி வழிந்திருக்கிறார்.

'அல்லா ஜானே அல்லா'.... ஆலபத்தின் மிக குறிப்பிடத்தகுந்த பாடல் இது. பாடியிருப்பது 'அத்னான் சாமி'யா என்கிற மயக்கத்தை துவக்கத்தில் எழுப்பும் இடையில் சிதம்பரம் ஜெயராமன் போலவும் மயக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் பாடலை கமல் நமக்கு இதுவரை அறிமுகமாகாத வித்தியாசமான குரலில் பாடியிருக்கிறார். சூ·பி இசையின் தொனியில் பக்தி இசையின் மயக்கத்தை ஏற்படுத்தும் இந்தப் பாடலில் மனுஷ்யபுத்திரனின் வீர்யமான வார்த்தைகள் சிதையாதவாறு அற்புதமாக இசையமைத்துள்ளார் ஸ்ருதி. தமிழ்த் திரையிசைப்பாடல்களில் இந்தப்பாடல் ஒரு குறிப்பிடத்தகுந்தவொரு இடத்தைப் பிடிக்கும் என்பது என் அனுமானம்.

மேற்குறிப்பிட்ட அதே பாடல் வேகமான தாள இசையின் நவீனத்தோடு இன்னொரு வடிவத்தில் ஸ்ருதியின் குரலில் ஒலிக்கிறது.

()

ஒரிஜனல் படத்தை கெடுத்திருப்பார்களோ என்கிற எண்ணத்தினால் எனக்குள் அதிக எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தியிருக்காத காரணத்தினாலேயே மிகுந்த அசுவாரசியத்துடன் இந்த ஆல்பத்தை கேட்க ஆரம்பித்தேன். ஆனால் கேட்ட மாத்திரத்திலேயே ஒரு உற்சாகமான பதற்றம் எனக்குள் ஒட்டிக் கொண்டது. மீண்டும் மீண்டும் கேட்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவதே இந்த ஆல்பத்தின் வெற்றி என்பேன். பொதுவாக எரிச்சலூட்டும் இன்றைய திரைப்பாடல்களின் இடையே புத்துணர்ச்சியுடனான இசையுடன் நுழைந்திருக்கும் ஸ்ருதியை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். ஒரு தேர்ந்த இசையமைப்பாளரின் ஞானமும் பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைக்கும் வித்தையும் அவருக்கு கைவரப் பெற்றிருக்கிறது என்றே நம்புகிறேன். கமல் மட்டுமல்லாத மற்ற இயக்குநர்களும் இவரைச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார்களா என்பது ஒரு அவநம்பிக்கையுடனான கேள்வியே. இவ்வளவு சிறப்பான பாடல்களை இயக்குநர் எவ்வாறு சலனக் காட்சிகளுடன் பொருத்தமாக பயன்படுத்தியிருக்கப் போகிறார் என்கிற கவலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

சமீபத்தில் தாமரைக்குப் பிறகு பாடலின் வரிகள் தமிழின் வீர்யத்தோடும் உற்சாகத்தோடும் அமைந்திருப்பது இந்த ஆல்பத்தில்தான். மனுஷ்யபுத்திரனுக்கும் நல்வரவு. இவரையும் எத்தனை இயக்குநர்கள் பயன்படுத்திக் கொள்ளப்போகிறார்கள் என்கிற அவநம்பிக்கையும் ஏற்படுகிறது. இவ்வாறு யோசிக்க வைக்கும் அளவிற்கு தமிழ்த் திரைப்படச் சூழல் மாசு அடைந்திருப்பது ஆயாசத்தையே ஏற்படுத்துகிறது. இவ்வாறான புதிய முயற்சிகளே அவ்வாறான ஆயாசத்தை சிறிதளவாவது போக்குகின்றன. வேறு புதிய குரல்களை அறிமுகப்படுத்தியிருக்கலாம் / பயன்படுத்தியிருக்கலாம் என்பது போன்ற சிறிய குறைகளைத் தவிர வேறொன்றுமில்லை.

முழுமையாக இல்லாமல் அவசரத் தொனியில் இந்தப்பதிவு எழுதப்பட்டிருந்தாலும் மிகுந்த மகிழ்ச்சியோடும் நம்பிக்கையுடனும் இந்த ஆல்பத்தை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

suresh kannan

17 comments:

மணிஜி said...

நானும் பாடல்களை கேட்டேன்..நம் இருவரின் ரசனையும் 90% ஒத்திருக்கிறது.மகிழ்ச்சி..உண்மையில் ஸ்ருதி ஒரு ஆனந்த வரவு..

கதிர் said...

ஒன்றை கவனித்தீர்களா... கவுதமியை தவிர அனைவரும் பாடியிருக்கிறார்கள். அனைத்துப் பாடல்களிலும் ஸ்ருதியின் குரலும் கமலின் குரலும் பிரதானமாகவே ஒலிக்கின்றன.
இத்தனை இரைச்சல்களுக்கு நடுவே வரிகள் புரிவதுதான் புதிதானது. ப்ளாஸே குரலைத் தவிர. அல்லா ஜானே அல்லா, நிலை வருமா பாடலும் கேட்டவுடன் பிடிக்கிறது.

ஜோ/Joe said...

மகிழ்ச்சி!

Unknown said...

பகிர்வு ஆர்வத்தைத் தூண்டுகிறது.இதன்
பாடல்களை எங்கு தரவிறக்கம் செய்யலாம்.

நிறைய சைட்டுகள் இலவச
தரவிறக்கம் என்று சொல்கிறது.ஆனால்
ஒன்றும் ஆக மாட்டேன் என்கிறது.

குப்பன்.யாஹூ said...

உங்கள் விமர்சனம் அருமை, உண்மையாகவும் தோன்றுகிறது.

புலிக்கு பிறந்தது பூனை யாகுமா என்பது போல கமல் இசையிலும் சிறந்த ஞானி தான். சிறந்த பாடகர், இசை ஆர்வம் அனுபவம் உள்ளவர். (சுந்தரி நீயும் சுந்தரி நானும் பாடலை வேற எட்ன்த பாடகரும் சிறப்பாக பாடி இருக்க முடியுமா என்பது சந்தேகமே).

ஆனால் இளையராஜாவின் வாரிசுகள் அந்த அளவு ஜெயிக்காமல் இருப்படர்க்கும் காரணம் புரிய வில்லை.

வந்தியத்தேவன் said...

அல்லா ஜானே பாடல் இதுவரை பலதடவை கேட்டுவிட்டேன் நேற்றிரவு பாடல்கள் கேட்டமாத்திரத்திலையே விமர்சனமும் எழுதுவிட்டேன். கமலின் குரலும் மனுஷ்யபுத்திரனின் வரிகளும் குறிப்பாக "வீடுகள் எங்கும் வேதனை நிழல்கள், வீடுகள் எங்கும் விம்மிடும் குரல்கள், வீட்டுக்கு போகும் பாதைகள் எங்கே?" ஈழத்தமிழர்களுக்கு பெரிதும் பொருந்தும் வரிகள், கண்ணில் நீர் வரவழைக்கும் வரிகள். அந்தபாடலின் வரிகளைச் சிதைக்காமல் ஸ்ருதியின் இசை கலக்கல்.

புலிக்கு பிறந்தது புலிதான்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

Abi said...

"கமலால் உருவாக்கப்படும் சமீபத்திய படமான 'என்னைப் போல் ஒருவன்', 'A Wednesday' என்கிற இந்திப்படத்தின் மறுஉருவாக்கம் என்பது தெரிந்த செய்தி. ஆனால் இந்தப் படத்தில் பாடல்கள் இருக்கின்றன என்ற செய்தி வெளியாகும் போது, எப்படி அப்படியொரு படத்தில் பாடல்களை நுழைக்க முடியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்திப்படத்தை பார்த்திருந்தவர்களுக்கு நான் சொல்வது புரியும். நஸ்ரூதின்ஷா நடுரோட்டில் பின்னால் நூற்றுக் கணக்கானவர்கள் வர "ஹே.. என் பாரத தேசமே' என்றதொரு பாடலுடன் வந்தால் எப்படி அபத்தமாக இருக்கும்? "

இது யார் எழுதினது என்று தெரிகிறதா?

manjoorraja said...

விரைவில் பாடல்களை கேட்கவேண்டும் என எதிர்ப்பார்க்கவைக்கும் பதிவு.

இந்திப்படத்தில் பாடல்களே இல்லை என நினைக்கிறேன். இந்த படத்தில் இத்தனை பாடல்களை எப்படி பொருத்தியிருக்கின்றனர் என்பதையும் பார்க்க ஆவல்.

பிச்சைப்பாத்திரம் said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

//நம் இருவரின் ரசனையும் 90% ஒத்திருக்கிறது.மகிழ்ச்சி..//

தண்டோரா... உண்மைதான். நாம் யோசிக்கும் புள்ளியில் இன்னொருவரும் ஒன்றாக இணைந்து நிற்கும் போது ஏற்படும் ஆச்சரியத்திற்கும் மகிழ்ச்சியும் பிரத்யேகமானதுதான்.

//கவுதமியை தவிர அனைவரும் பாடியிருக்கிறார்கள். //

கதிர், இதை நானும் கவனித்தேன். எனவேதான் புதிய குரல்களை அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்று எழுதியிருந்தேன். கமல் பாடித்தான் சாதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை. சிறந்த புதிய பாடகர்களுக்கு வழிவிடலாம்.

ஜோ: நன்றி.

//எங்கு தரவிறக்கம் செய்யலாம். //

ரவீஷங்கர்: இவ்வளவு அப்பாவியா நீங்கள்? இணையங்கமெங்கும் வழிந்து கிடக்கிறது இசை. தேடுங்கள் கிடைக்கும். இதற்கு மேல் என்னால் சொல்ல இயலாது.

ராம்ஜி, மஞ்ஞர் ராசா,நன்றி.
வந்தியத் தேவன்: உங்கள் பதிவு சிறப்பு.

Abi: உங்களுக்கு பிரத்யேக நன்றி. உங்கள் பின்னூட்டம் எனக்கு அதிக மகிழச்சியை அளித்தது. என்னதான் கெத்தாக எழுதி பில்டப் கொடுத்துக் கொண்டாலும் நான் எழுதுவதை யாராவது வாசிக்கிறார்களா என்கிற சந்தேகமும் குமைச்சலும் எனக்கு நிறையவே உண்டு. அதிலும் பழைய பதிவின் வரிகளை யாராவது நினைவு கூர்ந்தால் இன்னும் அதிக மகிழ்ச்சியேற்படுகிறது.

சரி. நீங்கள் குறிப்பிட்டவைக்கு வருவோம். இந்தப் பதிவை எழுதும் போதே நான் எழுதிய 'சினிமாவில் பாடல்கள் தேவையா?' என்கிற பழைய பதிவின் நீங்கள் குறிப்பிட்ட வரிகள் நினைவுக்கு வந்தன. அதையும் இந்தப் பதிவில் குறிப்பிட்டு எழுத வேண்டும் என்றிருந்தேன். அவசரத்தில் விடுபட்டு விட்டது.

இப்பவும் கூட நான் அதே நிலையில்தான் இருக்கிறேன். சினிமாவில் பாடல்கள் தேவையில்லை. அதுவும் A Wednesday மாதிரியான படத்தில் பாடல்களை திணிப்பது மாதிரியான அபத்தம் எதுவுமே இருக்க முடியாது. எனவேதான் 'உன்னைப் போல் ஒருவனில்' பாடல்கள் இடம்பெறும் செய்தியைக் கேட்டவுடன் படஉருவாக்கம் குறித்து எனக்கு பெருத்த அவநம்பிக்கை தோன்றிற்று. அதையும் இந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

என்னுடைய விருப்பமெல்லாம் நடைமுறையில் சாத்தியமாகும் என கனவு காண முடியாது. எனவேதான் என்னுடைய விருப்பத்திற்கு மாறானததாக இருந்தாலும் உன்னைப் போல் ஒருவனின் இசைப் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்ததால் அதைப் பாராட்டத் தோன்றிற்று. இது திரைப்படத்தில் இடம்பெறாமல் தனித் தொகுதியாக வந்திருந்தாலும் இதே மாதிரிதான் ரசித்திருப்பேன். ஆனால் அது இவ்வளவு பரவலான கவனத்தைப் பெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான். நாம் இன்னும் தனி ஆல்பங்களை வரவேற்கும் மனப்பபாங்கிற்கு மாறவில்லை.

Anonymous said...

hype- your blog post on the songs and music.The lyrics lack the handiwork of a professional song writer and are mediocre.You can in no way compare ARR's Roja and this album. ARR's work was unique. He did not try gimmick in Roja.Sruti may end up a blunder in bollywood and one film wonder in kollywood.

Anonymous said...

'ஆனால் இளையராஜாவின் வாரிசுகள் அந்த அளவு ஜெயிக்காமல் இருப்படர்க்கும் காரணம் புரிய வில்லை'
Sekar did not succeed where as his son ARR succeeded. Does it mean that Sekar is anyway not talented?. Anyday YSR is much better than most of his contemporaries. These days there are too many music directors, too many singers unlike the late 70s when IR emerged as a force in tamil film music.

Sridhar V said...

பாடல்கள் ஏமாற்றமளிக்கவில்லை என்பது உண்மைதான்.

'Ameer' படத்தில் அருமையான சூஃபி பாடல்கள் பின்ணணியில் இணைந்திருக்கும். பாடல்களே படத்திற்கு தேவையில்லை என்று எதற்கு தீர்மானமாக இருக்க வேண்டும். Eyes Wide Shutல் யோகேஸ்வரனின் கர்நாடக பாடல் பின்ணணியில் ஒலிக்க ரகசிய குழுக்களின் சடங்குகள் நடக்கும். அதுபோல பாடல்களை பொருத்தமாக உபயோகிக்கலாம்.

குசும்பன் said...

ஆர்வத்தை கிளப்பி விட்டு விட்டீர்கள்!!! கேட்டுவிட்டு வந்து வெச்சுக்கிறேன்:)))

குசும்பன் said...

//நமக்கு இதுவரை அறிமுகமாகாத வித்தியாசமான குரலில் பாடியிருக்கிறார்.//

வித்தியாசமான குரலில் படுத்தியிருக்கிறார், வேறு யாராவது பாடி இருந்தாலோ, அல்லது கமல் அவரோட ஒரிஜினல் வாய்சில் பாடி இருந்தாலோ இன்னும் நன்றாக வந்திருக்கும் என்று நினைக்கிறேன். குரலை மாற்றி பாடுகிறேன் என்று போட்டு படுத்தியிருக்கிறார் :((

மற்ற பாடலகள் ஓக்கே, என்னால் ஆஹா ஓஹோ என்று சொல்லமுடியவில்லை.

ers said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

Unknown said...

//ரவீஷங்கர்: இவ்வளவு அப்பாவியா நீங்கள்?//

தேடிவிட்டுதான் உங்களிடம் வந்தேன்.
நிறைய(நான் தேடிய) தளங்கள் உள்ளே போனால ”பிலிம்” அல்லது “மேட்ரிமோனி டாட் காம்” காட்டுகிறார்கள் இந்த மாதிரி சுடச்சுட நேரங்களில்.

தரவிறக்கம் செய்து கேட்டு விட்டு பதிவும் போட்டுவிட்டேன்.

நன்றி.