Monday, September 28, 2009

புதன்கிழமையன்று பார்த்த உ.போ.ஒ.


கடந்த புதன்கிழமை, 'வெட்னெஸ்டே'வின் (ஆகா! என்ன பொருத்தம்) தமிழ் வடிவமான உ.போ.ஓ.வை பார்க்க நேர்ந்தது. வழக்கமாக கமல் படங்களின் மீது ஏற்படும் ஆர்வம் ஏனோ இந்த முறை முதலிலிருந்தே ஏற்படவில்லை. எனவேதான் நண்பர் ராஜ்குமார் விமர்சனம் குறித்து பின்னூட்டத்தில் கேட்ட போது இவ்வாறு எழுதியிருந்தேன்.

ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை இந்தப்படம் குறித்து இணையத்தில் வந்து விழும் விமர்சனங்களைக் கண்டாலே தலையைச் சுற்றுகிறது. இதில் என்னையும் கோதாவில் குதிக்கச் சொல்கிறீர்கள்.btw மூலத்தை ஏற்கெனவே பார்த்துவிட்டதால் இதைப் பார்க்கும் ஆவல் தோன்றவில்லை. ஒருவேளை பின்னர் இதைப் பார்த்தாலும் எழுதத் தோன்றுமா எனவும் தெரியவில்லை.


என்றாலும் பிறகு இந்தப் படத்தை பார்க்கும் ஆவலை என்னுள் ஏற்படுத்தினவர்கள் மூவர். மோகன்லால், இரா.முருகன், ஸ்ருதிஹாசன்.

நண்பரொருவர் வற்புறுத்தி அழைத்ததின் பேரில் சென்றேன். (மகளுக்காக செல்ல வேண்டியிருந்தது என்று எழுதினால் அடிப்பதற்கென்றே நாலு பேர் இருக்கிறார்கள்). அன்றிரவே ஒரு வார்ம்-அப்பிற்காக மூலவடிவ இந்திப்படத்தை மீண்டும் பார்த்தேன். இப்போது இந்தப் படத்தின் மையத்தை வேறொரு பரிமாணத்தில் உணர முடிந்தது.

()

வைரத்தை வைரத்தால் அறுப்பது போன்று தீவிரவாதத்தை ஒழிக்க தீவிரவாதத்தையே கையில் எடுக்கும் சாமானியனைப் பற்றிப் பேசும் இத்திரைப்படம் 'கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்' என்கிற கற்கால (அ)நீதியையொட்டிய ஆபத்தானதொரு கருத்தாக்கத்தை முன்வைக்கிறது. 'வன்முறைக்கு வன்முறை' என்பது வேறு வழியில்லாத நிலையில் தற்காலிக தீர்வாக இருந்தாலும் நிரந்தரத் தீர்வாகாது என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிருபித்துக் கொண்டேதான் இருக்கிறது. 'எப்படி, ஏன் தீவிரவாதிகள் உருவாகிறார்கள், வன்முறையின் மூலம் சமூக மையத்தின் கவனத்தைக் கவர முயல்கிற அவர்களின் பிரச்சினை என்ன?' ஆகிய கேள்விகளை முன்வைத்து அவர்களின் சமூக மற்றும் உளவியல் காரணங்களை ஒருவேளை இந்தப்படம் ஆராய்ந்திருந்தால் பாராட்டியிருக்கலாம். (குருதிப்புனலில் இதற்கான தடயங்கள் இருந்தது). அவ்வாறில்லாமல் தீவிரவாதம் குறித்து பொதுப்புத்தி கொண்டிருக்கிற வெறுப்பிற்கும் ஆனால் யதார்த்தத்தில் எதுவும் செய்ய இயலாத கையாலாகத்தனத்தினால் அதை ஏதோ ஒரு 'சூப்பர்மேன்-கம்-பொதுஜனம்' திரையில் செய்கிற போது அதை தாம் செய்து பார்ப்பதாக நினைத்து மகிழும் பார்வையாளனின் மன அரிப்பிற்கும் இந்தப் படம் தீனி போடுகிறது.

இது ஒரு பகற்கனவுப் (Fantasy) படம். 'ஒரு வேளை இப்படி நடந்தால்' என்னும் உத்தியைக் கொண்டிருக்கிறது. ஆனால் இதை முழுவதும் பகற்கனவு என்று ஒதுக்கிவிடவும் முடியாது. தீவிரவாதத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கிற அரசியல்வாதிகளின் மீதும், பயிரையை மேய்கிற அதிகார மையங்களின் மீதும் கண்ணுக்குத் தெரியாத மதம் மீதுள்ள வெறி காரணமாக முகம் தெரியாத அந்நியனைக் கூட கொல்லத் துணியும் மதஅடிப்படைவாதிகளின் கூட்டங்களின் மீதும் பொதுப்புத்தியில் பொறியாக படிந்திருக்கும் மெளனகோபம் நெருப்பாக கிளர்ந்து ஒரு வெடிகுண்டின் திரியில் போய் முடியலாம். அவ்வாறான நிலைக்கு முற்றிப் போக விடாமல் இருக்க அதிகார மையங்கள் தம் மீதுள்ள கறைகளைத் துடைத்துக் கொள்ள வேண்டிய ஒரு எச்சரிக்கை மணியை பலத்த ஒலியுடன் எழுப்புகிறது இத்திரைப்படம்.

()

தாடி வளர்ந்ததும் த்ரிஷாவிற்கு சற்று தமிழ் கற்றுத் தந்ததும் மாத்திரமே மிச்சம் என்று முடிந்த மர்மயோகி ப்ராஜக்டின் சலிப்பிலிருந்து விடுபட குறுகிய கால தயாரிப்பாக உ.போ.ஒ.வை உருவாக்க கமல் முடிவு செய்திருக்கலாம். எனவே தமிழ் உருமாற்றம் செய்ய சொற்ப மாற்றங்களைத் தவிர பெரிதாக எந்தவொரு பிரயத்தனமும் செய்யவில்லை. திரைக்கதை, காட்சிக்கோணங்கள், உரையாடல், எடிட்டிங் என்று எல்லாவற்றையும் மூலப்படத்திலிருந்தே நகல் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்திப்படம் பார்வையாளனுக்கு தந்த தாக்கத்தை இது தந்ததா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரிஜினல் ஒரிஜினல்தான். ஆனால் எந்தவித வணிக சம்பிரதாயங்களுமில்லாத இப்படியொரு படத்தை தமிழில் உருவாக்க முன்வந்ததற்காகவே கமலைப் பாராட்டலாம். ஒரு நல்ல சிறுகதை போன்று எங்கும் அலைபாயாத இறுக்கமான ஆங்கில பாணி திரைக்கதையுடன் தமிழில் வந்திருப்பது ஒரு இனிய ஆச்சரியம்.

ஆர்.கே. லக்ஷ்மணின் 'மிஸ்டர் பொதுஜனம்' கார்ட்டூன் கேரக்டர் போல நரைத்த தலையுடன் நஸ்ருதின் ஷா பார்வையாளனுக்கு இயல்பாக அளித்த 'பொது ஜனத்' தன்மையை பிரயத்தனப்பட்டும் கூட ஏனோ கமலால் தர இயலாமல் போனது துரதிர்ஷ்டம்தான். 'நான் குப்பனோ சுப்பனோ இல்லன்னு இப்பவாவது புரிஞ்சுக்கிட்டீங்களா?' என்று அலட்டும் போது 'மிஸ்டர் பொதுஜனம்' காணாமற் போய் விடுகிறார். ஆனால் சுமார் 1000 சதுரஅடி மொட்டைச் சுவற்றின் மீதே பெரும்பாலான காட்சிகளில் இயங்க வேண்டிய சவாலான சூழ்நிலையை தன்னுடைய தீவிரமான முகபாவங்களால் திறமையாக சமாளித்திருக்கிறார் கமல். தொடர்ச்சியான பெரும்பான்மையான அண்மைக் கோணக் காட்சிகளை (close-up shots) கமல் போன்ற ஒரு திறமையான கலைஞனால் மாத்திரமே எதிர்கொள்ள இயலும்.

ஆரம்பத்தில் தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவனைப் போல பார்வையாளனுக்கு தோன்றி இறுதியில் அதற்கொரு திருப்பம் தருவதுதான் இந்தப் பாத்திரத்தின் அடிப்படையான உருவம். ஆனால் பெரும்பான்மையான படங்களில் ஹீரோவாக நடித்து ஒரு 'சூப்பர்மேன்' பிம்பத்தை பொதுவான தமிழ் ரசிக மனங்களில் ஏற்படுத்தி வைத்திருக்கும் கமல் இந்தப் பாத்திரத்தில் நடிக்கும் போது 'எப்படியிருந்தாலும் நாயகன் கெடுதல் செய்ய மாட்டான்' என்கிற முன்தீர்மானத்தோடு பார்வையாளன் காட்சிகளைத் தொடரும் ஒரு அபாயத்தை அவரே ஏற்படுத்தியிருக்கிறார். 'எப்போதும் நல்லவனாகவும் வல்லவனாகவும் நடிக்கும் ஹீரோ நிஜ வாழ்க்கையிலும் அதே மாதிரித்தான் இருப்பான்' என்று அப்பாவியாக நம்பும், அவனிடம் தம்மை ஆளும் தலைமைப் பொறுப்பைக்கூட தரத்தயாராக இருக்கும் ரசிக மனம் இப்படித்தான் இயங்கும். எனவே கமல் தம்முடைய பாத்திரத்தை 'பிரகாஷ் ராஜ், அடுல் குல்கர்னி' போன்ற திறமையான, பிம்பமேதுமில்லாத நடிகர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கியிருக்கலாம். நடிகனை அவனின் தனிப்பட்ட பராக்கிரமங்களை ஒதுக்கிவிட்டு படைப்பின் ஒரு பாத்திரமாக மாத்திரமே அணுகும் முதிர்ச்சியை அந்த ரசிக மனம் பெற இன்னும் பல ஆண்டுகளாகலாம்.

'ஆறுச்சாமி' ரேஞ்சில் நிஜ போலீஸ் வெறியுடன் உலவியிருக்கும் மோகன்லால் பல காட்சிகளில் மிக அனாயசமாய் கமலை ஓவர்டேக் செய்கிறார். இந்தியாவில் உள்ள இயல்பாக நடிக்கும் மிகச் சிறந்த நடிகர்களில் தான் ஒருவன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் லால். தலைமைச் செயலாளரான லட்சுமியுடன் அதிகாரப் போட்டி காரணமாக இவர் நடத்தும் காரசாரமான உரையாடலின் ஊடே அற்புதமான நடிப்பை சிதறவிட்டிருக்கிறார். 'துப்பாக்கிய தூக்கிட்டு வெறியோட அண்ணாசாலைல ஓடச் சொல்றீங்களா?' என்று ஆத்திரமாக கேட்கும் போதும் 'என் தலை உருளட்டும். i'll take the responsibilty' எனும் போதும் கைகள் கட்டிப் போடப்பட்டிருக்கும் ஆதங்கமும் அரசியல்வாதிகளால் பலிகடாக்களாக ஆக்கப்படும் காவல்துறையினரின் சோகமும் தெரிகிறது. ஐ.பி.எஸ்-ஸ¥க்கும் ஐ.ஏ.எஸ்-ஸீக்கும் வழக்கமாக நிகழும் அதிகார போட்டியின் அரசியல் இந்த காட்சிகளில் மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. இந்திப்படத்தில் இது இவ்வளவு அழுத்தமாக வெளிப்படவில்லை. 'சேது'வாக நடித்திருக்கும் அந்த காவல்துறை அதிகாரி (பரத் ரெட்டி) தமிழிற்கு நல்லதொரு வரவு.

மூலப்படத்தின் பெரும்பாலான உரையாடல்களையே தமிழ்ப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு இரா.முருகன் ஆளாகியிருந்தாலும் சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டி தன்னுடைய தனித்தன்மையை நிருபித்திருக்கிறார். 'கியாரண்டி வாரண்டி எல்லாம் கொடுக்கறதுக்கு நான் என்ன குக்கரா விக்கறேன்' என்கிற நக்கலில் சுஜாதாவின் நிழல் தெரிகிறது. சமீபத்திய தேர்தலில் கமல் தேர்தலில் ஓட்டளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை படத்தில் சாமர்த்தியமாக இணைத்திருப்பது (இன்விசிபிள் மேன்) ரசிக்க வைக்கிறது. ஆனால் 'அதான் இன்னும் ரெண்டு இருக்கறதப்பா. அட்ஜஸ்ட் பண்ணிக்க' என்று இசுலாமியர்களின் கலாச்சாரத்தை கிண்டலடித்திருப்பது குரூர நகைச்சுவை. தமிழில் பிரத்யேகமாக உருவாக்கப்படுகிற திரைப்படத்தில் பணியாற்றினால்தான் முருகனின் முழு பரிமாணத்தை நம்மால் உணர முடியும். (படத்தின் விளம்பரங்களில் வசனகர்த்தா உட்பட பிரதான கலைஞர்களின் பெயர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. நான் பார்த்த திரையரங்கில் படத்தின் இறுதிக்காட்சி முடிந்தவுடனே புரொஜக்டரை அணைத்து விட்டார்கள்).

எப்போது மெளனத்தை பின்னணி இசையாய் தரவேண்டும் என்று ஸ்ருதிஹாசனுக்குத் தெரிந்திருக்கிறது. நான் முன்னர் பயந்த மாதிரி எந்தப் பாடலும் படத்தில் உபயோகப்படுத்தப்படவில்லை. புத்திசாலித்தனமான முடிவு. ஆனால் இதனால் சம்பந்தப்பட்ட பாடல்களுக்கு உழைத்தவர்களுக்கு எவ்விதமான அங்கீகாரமும் போகவில்லை எனும் போது எதற்காக பாடல்களை உருவாக்கியிருக்க வேண்டும் என்கிற கேள்வியும் கூடவே எழுகிறது. படத்தின் promotion-க்கு மாத்திரம் இவை கருவேப்பிலையாக பயன்பட்டிருக்கக்கூடும்.

இந்தப் படத்தின் புதிய தொழில்நுட்பமாக ரெட்ஒன் கேமராவை சொல்கிறார்கள். (இது பயன்படுத்தப்பட்ட முதல் திரைப்படம் அருண் வைத்யநாதனின் 'அச்சமுண்டு அச்சமுண்டு). ஆனால் ஒரு பார்வையாளனாக என்னால் எந்த வித்தியாசத்தையும் காண இயலவில்லை. நான் பார்த்த பாடாவதி தியேட்டரில் இது சிறப்பாக வெளிப்படவில்லையா என்பது குறித்து தெரியவில்லை.


()

இப்போது இந்தி -தமிழ் என்று இரு படங்களுக்குமுள்ள ஆறு வித்தியாசங்களை மாத்திரம் (சும்மா ஜாலிக்காக) கண்டுபிடிக்க முயற்சிக்கலாம்.

அளவில் சிறியது என்றாலும் 'லாஜிக்கான பிழைகள்' காட்சிகளின் நம்பகத்தன்மையைக் குறைத்துவிடும். உதாரணத்திற்கு தமிழப்படத்தின் ஒரு காட்சியை விவரிக்கிறேன். காவல் நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டிருக்கிற விவரம் தெரியவந்த பிறகு பாம் ஸ்குவாட்டும் மோப்ப நாய்களும் வரவழைக்கப்படுகின்றன. ஒளித்து வைக்கப்பட்டிருக்கிற பையை நாய் கண்டுபிடித்து சமிக்ஞை செய்தவுடன் பாம் ஸ்குவாட் குழுவில் ஒருவர் அந்தப் பையை ஏதோ காய்கறி முட்டை போல் இழுக்கிறார். ஆனால் இந்திப்படத்தில் இது சரியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒருவர் பையை முதலில் ஸ்கேன் செய்து பார்க்கிறார். பிறகு பையை நகர்த்தாமல் திறந்து பார்க்கிறார்கள்.

பொதுஜனத்தில் ஒருவனை இவ்வளவு தீவிரமான முடிவை நோக்கி நகர்த்தும் புள்ளியை இந்திப்படத்தில் ஒரு மென்மையான சிறிய பிளாஷ்பேக் காட்சிகளின் மூலம் விவரித்திருப்பார்கள். நஸ்ரூதின் ஷாவை தினமும் ரயிலில் சந்தித்து புன்னகைப்பான் ஒரு இளைஞன். இருவருக்குள் பேச்சு வார்த்தை கூட கிடையாது. தினமும் புன்னகை, ஹலோ... அவ்வளவுதான். தனக்கு திருமணம் நிச்சயமாகியிருப்பதை சமிக்ஞையின் மூலம் சொல்வான் அந்த இளைஞன். ஷா போக முடியாத ஒரு ரயில் தினத்தில் வண்டியில் குண்டு வைக்கப்பட்டு அவர் தினமும் சந்திக்கும் முகங்களெல்லாம் பிணமாக கிடப்பதை பார்த்து பதைபதைத்துப் போவதை பின்பு உரையாடலின் மூலம் சொல்வார். ஆனால் இது உ.போ.ஒ.வில் அழுத்தமாக வெளிப்படவில்லை.

தலைபோகிற பிரச்சினை ஒன்று வந்தால் எப்படி அரசு இயந்திரம் ஜகா வாங்குகிறது என்பதை உ.போ.ஒ. நிதர்சனமாக காட்டுகிறது. இதில் கருணாநிதி குரலிலேயே "தேர்தல்ல பாதிப்பு வராதில்ல' என்று கேட்பது தைரியமான நக்கல். 'மத்திய அரசின் உதவி தேவைப்படுமா?' என்றும் ஒரு கேள்வி முதல்வரால் எழுப்பப்படுகிறது. ஆனால் கமிஷனர் மோகன்லால் இதை மறுத்துவிடுகிறார். ஆனால் இந்திப்படத்தில் "இது நம் மாநிலப் பிரச்சினை. நாமே தீர்ப்போம்' என்று சொல்வதோடு ஸ்பாட்டுக்கு நேரடியாகவும் வந்துவிடுகிறார் முதல்வர். ம்.. வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது.

செய்தி ஊடகங்கள் செய்திகளை 'உருவாக்குவதற்காக' நிகழ்த்தும் மாய்மாலங்களை இந்திப்படம் மிகுந்த எள்ளலுடன் வெளிப்படுத்தியிருக்கும். குடிபோதையில் சாலையில் விழுந்த ஒருத்தவரை வலுக்காட்டாயமாக கேமரா முன் இழுத்து வந்து மின்கம்பம் விழுந்து அடிபட்டதாக அவரை தயார்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக பேச வைப்பார்கள். அவரும் கேமரா முன் நிற்கும் உற்சாகத்துடன் அள்ளிவிடுவார். இந்தக் காட்சிக் கோர்வை தமிழில் அறவே நீக்கப்பட்டிருக்கிறது.

தமிழில் நான் மிகவும் எதிர்பார்த்திருந்த ஒரு காட்சி, computer hacker வரும் காட்சி. தொடர்ச்சியான சப்தத்துடன் சரவெடி வெடித்துக் கொண்டிருக்கும் போது இடையில் ஒரு மத்தாப்பு பிரகாசமாக எரிந்தால் எப்படியிருக்குமோ அப்படியாக பரபரப்பான காட்சிகளின் இடையில் அந்த இளைஞனின் குறும்பு இந்திப்படத்தில் மிகப்பிரமாதமாக வெளிப்பட்டு பார்வையாளர்களை சிரிப்பால் அதிர வைத்திருக்கும். ஆனால் இந்த மேஜிக் தமிழ்படத்தில் அத்தனை சுவாரசியமாக வெளிப்படவில்லை.

தமிழ்ப்படத்தில் + ஆக ஏதும் இல்லையா என்றால் இருக்கிறது. முன்னமே குறிப்பிட்ட IAS vs IPS முரண்களின் காட்சிகளைத் தவிர ரயிலில் ஊருக்குப் போகும் காவல் அதிகாரியின் மனைவி அமர்ந்திருக்கும் இருக்கையின் அருகிலும் வெடிகுண்டு பை வைக்கப்பட்டு இடையிடையில் பார்வையாளர்களுக்கு சிறிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை திருத்தப்பட்டிருக்கும். இந்தியில் இது கிடையாது.

()

இவையெல்லாம் சிறிய உதாரணங்கள்தான். ஆனால் இரண்டு படங்களின் அடிப்படையான காட்சிகளிலுமே நிறைய லாஜிக் பிழைகளை காண முடிந்தது.

காவல் துறைக்கு சவால் விடுகிற ரகசியமான வேலையை ஏன் அந்த பொதுஜனம் ஏதோ மாஞ்சா காத்தாடி விடுவது போல் மொட்டை மாடியில் நின்று செய்கிறார், பக்கத்திலுள்ள கட்டிடங்களில் இவரைக் கவனிப்பவர்கள் விநோதமாக உணர்ந்து காவல்துறைக்கு சொல்ல மாட்டார்களா?

பொதுஜன தீவிரவாதி (?!) செய்தியாளரையும் தொடர்பு கொள்கிறான் என்று தெரிந்து கொள்கிற காவல்துறை ஏன் செய்தியாளரைப் பின்தொடரவோ அவரது தொலைபேசியை கண்காணிப்பதையோ செய்யவில்லை? இவ்வளவு பரபரப்பான செய்தி ஒரு சானலில் வந்தவுடனேயே மற்ற சானல்காரர்களும் இந்தச் செய்திக்கு படையெடுக்க மாட்டார்களா? அப்படியே ஒரு செய்தியாளர்தான் இதை 'கவர்' செய்கிறார் என்று வைத்துக் கொண்டாலும் அந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது மட்டும்தான் தீவிரவாதிக்கு 'செய்தி' எனும் போது ஏன் அதை காவல்துறை தீவிரவாதியை திசை திருப்ப அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை? இவ்வளவு பயங்கரமான தீவிரவாதிகளை உடனேயே இடமாற்றம் செய்யவோ, மிரட்டல்வாதியிடம் ஒப்படைக்கவோ எப்படி சில மணிநேரங்களிலேயே நத்தை வேகத்தில் இயங்கும் அரசு இயந்திரத்தின் அனுமதி கிடைக்கிறது?

இப்படியான பல சங்கடமான நடைமுறை கேள்விகள் படத்தினுள் முழுமையாக மூழ்கிப் போவதற்கு பார்வையாளனுக்கு இடைஞ்சலாக உள்ளதாக எனக்குப் படுகிறது. தமிழ் வடிவத்தை உருவாக்கும் போதும் கூட இந்தப் பிழைகள் ஏன் கவனிக்கப்படவில்லை என்றும் தெரியவில்லை.

படத்தின் இயக்குநர் சக்ரி டோலட்டி. 'சலங்கை ஒலி'யில் நடித்த சிறுவன் என்பதைத் தவிர இவரைப் பற்றின மேலதிக விவரங்கள் தெரியவில்லை. கமலின் பெரும்பான்மையான இயக்குநர்கள் இவ்வாறாக பூடகமாகவே இயங்குகிறார்கள். படஉருவாக்கத்தின் பெரும்பான்மையில் கமலே பின்னணியில் இயங்குவதாக கூறப்படுகிறது. ஏன் கமல் இவ்வாறு பினாமி படைப்பாளிகளின் நிழலில் இயங்க வேண்டும் என்பது புரியவில்லை. அந்த இயக்குநர்களுக்கு உண்மையாகவே திறமையிருக்கலாமே, ஏன் இவ்வாறு சந்தேகப்பட வேண்டும் என்றொரு கேள்வி எழலாம். 'அன்பே சிவம்' இயக்கின சுந்தர்.சியை எடுத்துக் கொள்வோம். 'அன்பே சிவம்' காட்சிகளை உருவாக்கின திறமையின் தடயங்கள் அவரது மற்ற திரைப்படங்களில் துளிக்கூட இல்லை என்பதைக் கவனிக்கலாம்.

இந்திப் படத்தில் பூடகமாக வெளிப்பட்டிருந்த இசுலாமிய வெறுப்பு தமிழ்ப்படத்தின் சில காட்சிகளில் அப்பட்டமாகவே வெளிப்பட்டிருந்தது. கைதிகளுக்கும் இசுலாமிய காவல்துறை அதிகாரிக்கும் நடக்கும் உரையாடலில் இது வெளிப்படையாகவே தெரிந்தது. முன்னரே குறிப்பிட்டிருந்தது போல் எந்த மதஅடையாளமுமில்லாமல் படம் முழுக்க வெளிப்பட்டிருந்த நஸ்ருதின் ஷாவிடம் கமல் தோற்றுப் போயிருந்தார். 'இன்ஷா அல்லா'ன்னு சொல்றீங்களா..? என்பது போன்ற பார்வையாளனை சீண்டும் வசனங்களை தவிர்த்திருக்கலாம். 'அப்ப ஆப்கானிஸ்தானுக்கு போக வேண்டியதுதானே?' என்பது இன்னொன்று. என்றாலும் இந்தக்குறையை சமன் செய்ய கமல் பல இடங்களில் முயன்றிருக்கிறார். "இந்த இந்து-முஸ்லிம் விளையாட்டை எத்தனை நாளைக்கு விளையாடப் போறீங்களோ?" என்பது ஒரு உதாரணம். "ஏன் நானொரு கிறிஸ்டியனாகவோ, பெளத்தனாகவோ, நாத்திகவாதியாகவோ, கம்யூனிஸ்டாகவோ இருக்கக்கூடாதா? அவங்களுக்கு கோவமே வராதா?" என்பது இன்னொன்று.

ஒட்டுமொத்தமான படத்தின் முழுவடிவம் என்ற வகையில் நீங்கள் ஒருவேளை மூலப்படத்தை பார்த்திருந்தீர்கள் என்றால் இதை பார்க்காமலிருப்பதே உத்தமம். இல்லை என்றால் நேரடியாக இந்திப் படத்தையே பார்த்துவிடலாம்.

()

இந்தப் படம் குறித்து இணையத்தில் வந்த சில அபத்தமான விமர்சனங்களையும் படிக்க நேர்ந்தது. பொதுப்புத்தியிலிருந்து விலகி நின்று தம்முடைய பார்வையை காத்திரமான மொழியில் வெளிப்படுத்துவது தேவையானதொன்றுதான். ஆனால் அது ...த்திரமான மொழியில் வெளிப்படும் போது பதிவின் ஆதார மையம் வாசிப்பவனிடமிருந்து இந்த காரணத்தினாலேயே விலகிப் போகிறது என்பதை இவர்கள் உணர்வதில்லை. மேலும் எந்தவொரு சமூக அநீதியென்றாலும் திரைப்படமென்றாலும் அதை பார்ப்பனக்குடுவையில் போட்டு குலுக்கியெடுத்து தம்முடைய மன அரிப்பை தீர்த்துக் கொள்ளும் போக்கை தொடர்ந்து காணும் போது பிறப்பால் பார்ப்பனன் அல்லாத (ஒரு தகவலுக்காக வேறு வழியில்லாமல் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது) எனக்கே எரிச்சலாக இருக்கிறது. இந்து தீவிரவாதம் வெறுமனே பார்ப்பனர்களால் மாத்திரமா நிகழ்த்தப்படுகிறது? இந்து மதத்தின் மற்ற அடுக்குகளில் உள்ளவர்கள் மதக்கலவரங்களிலும் அதற்கான பின்னணியிலும் ஈடுபடுவதே இல்லையா? அப்போது மாத்திரம் இவர்கள் ஏன் ஊமையாகிப் போகிறார்கள் என்று தெரியவில்லை. 'இசுலாமியர்கள் தீவிரவாதிகள்' என்று பொதுப்புத்தியில் படியுமாறு படைப்புகள் உருவாக்கப்படுவதால் எதிர்க்கிறோம் என்பது இவர்களின் வாதம். நானும் இவர்களால் தாக்கப்படுவேன் என்று தெரிந்தே கேட்கிறேன். யதார்த்தத்தில் இந்தச் செய்தியில் உண்மையே இல்லையா? உலகம் முழுவதும் நிகழும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களைப் பற்றின விசாரணை முடிவுகள் வரும் போது அவர்கள் பெரும்பாலும் இசுலாமியர்களாக இருப்பது உண்மையா அல்லது திட்டமிட்டு பரப்பப்படுவதா? இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது குறித்து கவலைப்படும் இவர்கள் ஏன் ஒரு பிரிவை தொடர்ந்து வன்மத்துடன் 'கொடூரர்களாக' சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்? இப்படி கேட்பதின் மூலம் இந்துத் தீவிரவாதத்தையோ மற்ற எந்தவொரு அமைப்பின் வன்முறையையோ எந்த வகையிலும் நான் நியாயப்படுத்த முனையவில்லை என்பதையும் குறிப்பிட்டு விடுகிறேன். வன்முறை எந்த வகையிலும் யாரிடமிருந்து வெளிப்பட்டாலும் அது கண்டிக்கத் தக்கது.

தங்களைத்தானே அறிவுஜீவிகளாக பாவித்துக் கொள்ளும் இவர்கள் கவலைப்படுவதைப் போல எந்தவொரு இனக்குழுவைச் சேர்ந்த 'பொதுஜனத்திற்கும்'வன்முறையில் ஈடுபடும் தீவிரவாதிகள் யார் என்றும் தம்மைப் போலவே இயங்கும் அப்பாவிகள் யார் என்றும் தெளிவாக தெரிந்திருக்கிறது. எனவேதான் விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டையும் ரம்ஜானிற்கு பிரியாணியும் அவர்களுக்குள் பரிமாறிக் கொள்ளப்படுகிறது. எந்தவொரு மதக்கலவரத்தின் போதும் இன்னொரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரகசியமாக அடைக்கலம் தருவதும் பாதுகாப்பு தருவதும் இவர்களே. சக மனிதனை அவனுடைய மத அடையாளத்தைத் தாண்டி வெறும் மனிதனாகவே பார்ப்பதும் இம்மாதிரியான பொதுஜனங்களே. இத்திரைப்படம் மாதிரியான படைப்புகள் அவர்களுக்குள் எந்தவித எதிர்மறையான சலனத்தையும் பெரிதாக ஏற்படுத்துவதில்லை. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என்னுடைய எந்தவொரு இசுலாமிய நண்பனையும் 'இவன் தீவிரவாதியாக இருப்பானோ' என்கிற சந்தேகத்தோடேயே நான் பழகுவதில்லை. அவனும் அப்படியே. எந்தவொரு கலவரத்தின் போதும் அவன் வயிற்றில் நான் கத்தியைப் பாய்ச்ச மாட்டேன் என்பதை அவனும் உறுதியாகவே நம்புகிறான். பெரும்பாலோரின் தனிப்பட்ட எண்ணமும் இதுவாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்.

எனவே போலி அறிவுஜீவிகள் தங்களின் அசட்டு வாதங்களை பரண் மீது போட்டுவிட்டு உருப்படியான வேலை ஏதுமிருந்தால் அதை பார்க்கப் போகலாம். 'நடாஷா-கரிகாலன்' என்பது போன்ற நுண்ணிய விவரங்களை வைத்துக் கொண்டு இவர்கள் செய்யும் கட்டுடைப்புகள்தான் மதஅடிப்படைவாதத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இவர்களின் மொழியில் வெளிப்படும் வன்மம் எந்தவொரு ஆதிக்கச் சாதியின் குரலில் வெளிப்படும் வன்மத்திற்கும் நிகராக இருப்பதால் இவர்களின் முற்போக்கான இயக்கம் நிஜமா அல்லது அந்தப் போர்வையில் வெளிப்படும் அடிப்படைவாதமா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தச் செய்கிறது.

கமல் ஒரு 'பார்ப்பனன்' என்கிற அடிப்படையில் வழக்கம் போல் எழுந்த வன்மம்மிக்க விமர்சனங்களையும் படிக்க நேர்ந்தது. கமல் சப்பாணியாக கோவணம் கட்டிக் கொண்டு நடித்தால் அதிலிருந்து கூட தமக்கான பூணூல்களை உருவி விடும் இந்த இணைய வித்தகர்கள் இருக்கும் வரை பரபரப்பிற்கும் சுவாரசியத்திற்கும் இணையத்தில் பஞ்சமிருக்காது. இவர்களின் அரசியல்களை பொதுஜனமாகிய நாம் நன்றாகவே அறிந்து வைத்திருப்பதால் இவர்களைப் புறக்கணிப்பதே நம்முடைய ஆரோக்கியமான மனநலத்திற்கு உகந்ததாக இருக்கும்.

தொடர்புடைய பதிவு: மிஸ்டர் பொதுஜனமும் புதன்கிழமையும்

suresh kannan

24 comments:

மாதவராஜ் said...

உங்களிடமிருந்து உன்னைப் போல் ஒருவனுக்கான விமர்சனத்தை எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன். பல இடங்களில் ஒத்துப் போக முடிந்தது. பகிர்வுக்கு நன்றி சுரேஷ் கண்ணன்!

சென்ஷி said...

:)

Venkat said...

Suresh,

Brilliant review of UPO. It was interesting to read. It has certainly created interest to see the movie for Lal's performance. Good to see you have to also written the 6 vidhyaasam between the 2. It put things in its perspective.

Completely agree with you on certain bloggers mud slinging purely based on caste. These were the same people who wrote in similar tone when Sujatha passed away too...

I remember seeing posters in the streets of Pondy when Roja was released ridiculing/condemning "Sujatha, Manirathnam and KB" for the same reasons.

Thanks for the review Suresh

Thanks

Venkat

ச.மனோகர் said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சுரேஷ்!

ராஜ நடராஜன் said...

நீண்ட பார்வை!

enRenRum-anbudan.BALA said...

சுரேஷ்,

Excellent Review.

உங்களை பாராட்டி அலுத்து விட்டது.

நல்ல அப்சர்வேஷன், அனாலிஸிஸ், அதைச் சாதுர்யமாய் தெளிவுடன் முன் வைக்கும் ஸ்டைல்.

முதலில் வெட்னெஸ்டே பார்க்கணும். நேற்று UTV movies சேனலில் ஒளிபரப்பியதை பார்க்க முடியவில்லை. ஆபிஸ் வேலை.

நன்றி.

Sridhar V said...

//'சலங்கை ஒலி'யில் நடித்த சிறுவன் என்பதைத் தவிர இவரைப் பற்றின மேலதிக விவரங்கள் தெரியவில்லை//

தகவலுக்காக - இவர் தசாவதாரத்தில் கோவிந்தின் நண்பர் ராமாக வருவார். கூரியல் vial-ஐ சிதம்பரத்திற்கு அனுப்பும் பாத்திரம் இவர்தான். தற்சமயம் ஃப்ளோரிடாவில் ஒரு தனிக் கம்பெனி வைத்து நடத்திக் கொண்டிருந்தவர் அதனை வேறு ஒரு பெரிய கம்பெணியோடு விற்றுவிட்டு பொழுதுபோக்கு ப்ராஜெக்ட்களை செய்து வருகிறார்.

நீங்கள் சொல்லும் லாஜிக் பிழைகள் பலவற்றுக்கும் யோசித்தால் உங்களுக்கே பதில் கிடைக்கும்.

மொட்டைமாடி ஒரு நல்ல தேர்வு. பாதி கட்டிய நிலையில் நிறுத்தப்பட்ட உயரமான கட்டிடம் மிகவும் பாதுகாப்பானதே. பக்கத்திலிருந்து பார்க்கும் வகையில் அங்கே வேறு கட்டிடம் தெரியவில்லையே.

இது போல் கதையில் பல சரடுகள் நேர்த்தியாக பின்னப்பட்டிருக்கும். ஒரு கதையாக இது மிகச் சிறப்பான கதை. ஆனால் சென்னையில் நடக்க வேண்டிய கதையே இல்லை. மும்பைக்கு மாத்திரம் பிரத்யேகமாக எழுதப்பட்டது. நஸீரின் கோபத்தை பொதுஜனத்தின் கோபமாக அடையாளப் படுத்த முடிந்தது. கமல் செய்வது ‘தேவையில்லாத’ வேலையாகத்தான் பெரிதும் தெரிந்தது.

நீங்கள் சொல்லும் பிரஷர் குக்கர் வசனம் இந்தியில் உண்டே. கேரண்டி, வாரண்டி கொடுக்க ஃபேனா விக்கிறேன் என்பார் நசீர்.

ஜோ/Joe said...

சகல கோணங்களிலும் அலசியிருக்கிறீர்கள் .அழுத்தமான பார்வை .( ஆரம்பத்தில் அந்த சுய பில்டப்-ஐ தவித்திருக்கலாம்)

Jazeela said...

படத்தை விட உங்க அலசல் நீண்டுவிட்டது :-)

//உலகம் முழுவதும் நிகழும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களைப் பற்றின விசாரணை முடிவுகள் வரும் போது அவர்கள் பெரும்பாலும் இசுலாமியர்களாக இருப்பது உண்மையா அல்லது திட்டமிட்டு பரப்பப்படுவதா?// பயங்கரவாதிகள் இஸ்லாமியர்களாக இருப்பது துரதிஷ்டமே. தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் பிறப்பால் மட்டுமே இஸ்லாமியர்கள் என்பதை எப்போது உணர்வீர்கள்?

வணங்காமுடி...! said...

சுரேஷ்,

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் "போலி அறிவு ஜீவிகளின்" பதிவுகளைப் படித்ததும் எரிச்சல் மண்டியதுடன், நீங்கள் எழுப்பியது போலவே "இவர்களின் முற்போக்கான இயக்கம் நிஜமா அல்லது அந்தப் போர்வையில் வெளிப்படும் அடிப்படைவாதமா" என்று கேள்வியும் எழுந்தது. அதை அப்படியே உங்கள் பதிவில் கண்டதும் ஒரு வித நிம்மதி.

நுண்ணரசியல், புண்ணரசியல் என்று இவர்கள் செய்யும் கூத்துக்களுக்கு அளவில்லாமல் போய் விட்டது.

\\தங்களைத்தானே அறிவுஜீவிகளாக பாவித்துக் கொள்ளும் இவர்கள் கவலைப்படுவதைப் போல எந்தவொரு இனக்குழுவைச் சேர்ந்த 'பொதுஜனத்திற்கும்'வன்முறையில் ஈடுபடும் தீவிரவாதிகள் யார் என்றும் தம்மைப் போலவே இயங்கும் அப்பாவிகள் யார் என்றும் தெளிவாக தெரிந்திருக்கிறது\\

அப்படியே உடன்படுகிறேன். ஆனால் இந்த வாதத்திற்கும் இவர்கள் ஒரு எதிர்வாதத்தை வைக்கிறார்கள். இந்தத் தெளிவு எல்லாம் படித்த பொதுஜனத்திற்கு மட்டும்தானாம். படிக்காத பொதுஜனம், இப்படிப் பட்ட பார்ப்பனீய படங்களைப் பார்த்து கெட்டுப் போகிறார்களாம். எங்கு, எப்படி இவர்கள் ஆராய்ச்சி செய்தார்களோ. யாம் அறியோம்.

\\பிறப்பால் பார்ப்பனன் அல்லாத (ஒரு தகவலுக்காக வேறு வழியில்லாமல் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது)\\

அடக்கவே முடியாமல் சிரித்து விட்டேன். உங்களுடைய இந்தப் பதிவைக் கண்டதும் அவர்களின் தாக்குதல், நீங்கள் ஒரு பார்ப்பனர் என்பதாகத் தான் அமையும். அதற்கு இடம் அளிக்காத வகையில் தெளிவாக அறிவித்து விட்டதை ரொம்பவே ரசித்தேன்.

நன்றி.

சுந்தர்
ருவாண்டா (East Africa)

கதிர் said...

போர்... உங்க பதிவும் உ.போ.ஒருவனும்.

Anonymous said...

//தலைபோகிற பிரச்சினை ஒன்று வந்தால் எப்படி அரசு இயந்திரம் ஜகா வாங்குகிறது என்பதை உ.போ.ஒ. நிதர்சனமாக காட்டுகிறது. இதில் கருணாநிதி குரலிலேயே "தேர்தல்ல பாதிப்பு வராதில்ல' என்று கேட்பது தைரியமான நக்கல். 'மத்திய அரசின் உதவி தேவைப்படுமா?' என்றும் ஒரு கேள்வி முதல்வரால் எழுப்பப்படுகிறது. ஆனால் கமிஷனர் மோகன்லால் இதை மறுத்துவிடுகிறார். ஆனால் இந்திப்படத்தில் "இது நம் மாநிலப் பிரச்சினை. நாமே தீர்ப்போம்' என்று சொல்வதோடு ஸ்பாட்டுக்கு நேரடியாகவும் வந்துவிடுகிறார் முதல்வர். ம்.. வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது. //

ரொம்ப புத்திசாலித்தனமான ஒப்பீடு.

1. கருணாநிதியை எந்த நோக்கத்தில் நக்கல் செய்திருந்தாலும் அவர்களை அறியாமலேயே யதார்த்தத்தை தொட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் நடந்த இரண்டு பரபரப்பான குண்டுவெடிப்புகள் ராஜிவ் காந்தி கொலை, கோவை குண்டுவெடிப்பு. இவ்விரு தருணங்களிலும் பாதிக்கப்பட்டது கருணாநிதி. ஆக அப்படியொரு குண்டுவெடிப்பு இன்னொரு முறை நிகழ்ந்தாலும் பாதிக்கப்படப்போவது கருணாநிதியாகவும், பயன்பெறப்போவது ஜெயலலிதாகவும் இருக்கும்போது கருணாநிதி (குரல்) "தேர்தல்ல பாதிப்பு வராதில்ல' என்று கேட்பது யதார்த்தம். நக்கல் இல்லை (இரா முருகனின் நோக்கம் அதுவாக இருப்பினும்). ஆனால் பம்பாயிலும், டெல்லியிலும், எத்தனை முறை குண்டுகள் வெடித்தாலும் அங்குள்ள ஆளும் கட்சிகள் பாதிக்கப்படுவதில்லை. மீண்டும் வெற்றி கூட பெற்றுவிடும் (உ-ம் மோடி).

2. அதே மாதிரி "'மத்திய அரசின் உதவி தேவைப்படுமா?" என்று கேட்பது யதார்த்தத்தை உணர்த்துவது. தமிழ்நாட்டில், அதுவும் கருணாநிதி பதவியில் இருக்கும்போது நடந்தால் அது சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக்கப்பட்டு ஆட்சி கலைக்கப்படும் அல்லது அப்படி கோரிக்கைகைகள் வைக்கப்படும். அப்படியான சோதனைகள் பிற கட்சிகள் எதிர்கொண்டதில்லை.

3. //இந்திப்படத்தில் "இது நம் மாநிலப் பிரச்சினை. நாமே தீர்ப்போம்' என்று சொல்வதோடு ஸ்பாட்டுக்கு நேரடியாகவும் வந்துவிடுகிறார் முதல்வர்//
இருக்கலாம். ஸ்பாட்டுக்கு நேரடியாக வந்து என்ன கிழிக்கிறார்கள் என்பது முக்கியம். பம்பாயில் பால் தாக்கரேவும், அஹமதாபாதில் மோடியும் கலவர இடங்களில் பிரசன்னமானால் அங்கே நடக்கும் ருத்ரதாண்டத்தின் விளைவுகளை அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

பொதுமக்களுக்கு பொதுப்புத்தி இருப்பது போல "நடுநிலை" அறிவுஜீவிகளுக்கும் "நடுநிலை அறிவுஜீவி" புத்தி இருக்கிறது. அதுதான் இரா. முருகனின் வசனத்திலும், உங்கள் விமர்சனத்திலும் வெளிப்பட்டிருக்கிறது. நடுநிலை வாழ்க! அறிவுஜீவி புத்தி வளர்க!!.

பி.கு.
பம்பாய் மேற்கில் இருக்கிறதென்று நினைத்தேன். வடக்கு என்று சுட்டிக்காடியதற்கு நன்றி.

சரவணகுமரன் said...

சூப்பர்

Anonymous said...

நல்ல அலசல்.

//ஏதோ மாஞ்சா காத்தாடி விடுவது போல் மொட்டை மாடியில் நின்று செய்கிறார், //

வாய்விட்டு சிரித்தேன்.

சுரேஷ்குமார் said...

நல்ல நெத்தியடி பதிவு

- யெஸ்.பாலபாரதி said...

//அடுல் குல்கர்னி//

தல.. இதை அதுல்குல்கர்ணி என்றுதான் வடநாட்டவர்கள் சொல்கிறார்கள். தமிழில் மட்டும் ஏன் இப்படி..? :(

மராட்டி- என்பதை மராத்தி என்று சொல்கிறோம். விளங்கவில்லை. :(

பின்னோக்கி said...

மிக ஆழமான விமர்சனம் (வழக்கம் போல). எதற்கு மற்றவர்கள் செய்த விமர்சனத்திற்கு பதில் எழுதவேண்டும் ? உங்களுக்கு 2 பத்தி அதிகமாகி விட்டது. திருந்தாத கூட்டம் திருந்தாது.

PRABHU RAJADURAI said...

"இசுலாமியர்களின் கலாச்சாரத்தை"

:-(

Beski said...

ரொம்ப நீளம் தலைவா. படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் பாதி ஞாபகத்துல இல்ல, ஆனா நல்லா இருந்தது.
---
இந்தியில் மூன்று முறை பார்த்தேன், நன்றாக இருந்தது, ஒன்றுமே தோன்றவில்லை. தமிழில் வந்த பிறகு, சில பதிவுகள் படித்தபின் பார்த்தேன். சுத்தாமாகப் பிடிக்கவில்லை. உண்மையிலேயே படம் நன்றாக இல்லையா, அல்லது பதிவுகளின் தாக்கமா என்றே தெரியவில்லை.

கல்வெட்டு said...

//பி.கு.
பம்பாய் மேற்கில் இருக்கிறதென்று நினைத்தேன். வடக்கு என்று சுட்டிக்காடியதற்கு நன்றி. //

பம்பாய்தாண்டி அரபிக்கடலில் மீன்படிப்பவனுக்கு(அல்லது ஓமனில் இருந்து எட்டிப்பார்ப்பனுக்கு) பம்பாய் கிழக்கில் இருக்கும் இடம் என்பது அடையாளம்.

எங்கே இருந்து எதைப் பார்க்கிறோம் என்பதில் திசைகள் மாறுபடும். சுரேஸ்ஹ் இதை எழுதும்போது இரத்னகிரியில் இருந்திருப்பார்.

நீங்கள் புவனேஸ்வரில் இருந்து எழுதினீர்களா?

சென்னையில் இருந்து சொல்வதானால் வடமேற்கு.

:-))))

sam said...

why you are so angry over to muslim. by reading fisrt two paragrah we came to know you dont like the concept of the movie. as kamal said in the film think a girl in the market withoout dress and her sisu ruled out by hand dont you know she is an muslim sorry indian girl

Anonymous said...

இங்கு எல்லோரும் பாராட்டும் விஷயத்தை ஒருவர் மறுத்து பேசினால் எல்லோர் கவனமும் அவர் பக்கம் திரும்பும் உங்களின் பதிப்பும் அதுவே

-வினோத்

sundar said...

You have definitely analysed in an impartial manner without getting carried away by the popularity of the actors

Jackiesekar said...

பார்த்துடுவோம்