Friday, February 19, 2016

சென்னையில் திரைப்பட திருவிழா - 2016

13-வது வருட  சென்னை சர்வதேச திரைவிழா, கடந்த ஜனவரி 6 முதல் 13 ந் தேதி வரை நடைபெற்றது. இதில் சுமார் 180 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

உலக சினிமா வரிசையில் 120 திரைப்படங்கள், 50 வெவ்வேறு தேசங்களின் பங்களிப்புகள், வெனின்சுலா மற்றும் சைனா வின் மீதான 'Country Focus' திரைப்படங்கள், ஜெர்மனி இயக்குநர் Fassbinder மற்றும் டென்மார்க் இயக்குநர் Nils Malmros ஆகியோர்களின் Retrospective, சார்லி சாப்ளின்-க்கு இணையாக கொண்டாடப்பட வேண்டிய பஸ்டர் கீட்டனின் 120வது வருடத்தை நினைவு கூரும் வகையில் 6 திரைப்படங்கள், இயக்குநர் பாலச்சந்தர் மற்றும் ஆச்சி மனோரமா ஆகியோர்களின் நினைவாக 8 திரைப்படங்கள். இது தவிர இந்தியன் பனோரமா வரிசையில் 10 மற்றும் தமிழ் திரைப்படங்களின் போட்டி வரிசையில் 12 திரைப்படங்களும் இடம் பெற்றன.

பல்வேறு தேசங்களிலிருந்து 'ஆஸ்கருக்காக'  நாமினேட் ஆன திரைப்படங்கள், பெர்லின் மற்றும் கான் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட மற்றும் விருது வாங்கிய திரைப்படங்கள் இந்த வரிசையில் அடங்கும். உலக சினிமா ஆர்வலர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இந்த விழா ஒரு கொண்டாட்டமாகவே விளங்கியது.

இந்த விழாவில் என்னால் காண இயன்ற திரைப்படங்களில் முக்கியமான மற்றும் சுவாரசியமான திரைப்படங்களைப் பற்றி சுருக்கமான அறிமுகமாக இந்தக் கட்டுரைகளில் பகிரப் போகிறேன். ஒவ்வொரு திரைப்படமுமே அதனதன் அளவில் முக்கியமானது; மிக விரிவாக அறிமுகம் செய்யப்பட வேண்டியது.
 
 


Taxi  | 2015 | Iran | Dir: Jafar Panahi


இந்த விழாவில் ஏறத்தாழ அனைத்து திரை ரசிகர்களினாலும் மிக ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக இதுவே இருக்க முடியும். இதற்கான பிரத்யேக காரணங்கள் உள்ளன. ஈரான் போன்ற தேசங்களில் கருத்துரிமை சார்ந்த கடுமையான கட்டுப்பாடுகளும் தணிக்கைகளும் இருப்பது நமக்குத் தெரியும். ஜாபர் பனாஹியின் திரைப்படங்கள் அந்நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் அதன் மதம் சார்ந்த கொள்கைகளின் மீது எதிர்பரப்புரை செய்யும் வகையில் அமைந்திருப்பதாகவும் கருதி அவர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. பல்வேறு சமயங்களில் அவர் கைது செய்யப்பட்டு பின்பு சக படைப்பாளிகளின் மூலமாான பல போராட்டங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் திரைப்படங்கள் உருவாக்குவதின் மீது 20 வருட தடை ஏற்படுத்தப்பட்டு 2010-ல் அவர் வீட்டுச் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இது தளர்த்தப்பட்டு ஈரானை விட்டு வெளியேறக் கூடாது என்கிற நிலையுள்ளது. அவருடைய திரைப்படங்கள் சர்வதேச விழாக்களில் பங்கேற்கப்பட்டு விருதுகள் வாங்கினாலும்  ஈரானில் திரையிடப்படாத நிலைமையே இன்னமும் உள்ளது.

என்றாலும் தடையுத்தரவுக் காலங்களிலும் அவர் திரைப்படங்களை உருவாக்கும் உத்வேகத்தை எவராலும் தடுக்க முடியவீல்லை. தன் மீதான தடையுத்தரவு அனுபவங்களை வைத்து வீட்டின் உள்ளேயே அவர் 2011-ல் உருவாக்கிய  This Is Not a Film என்கிற ஆவணப்படம் மிக ரகசியமாக ஒரு கேக்கினுள் மறைத்து வைக்கப்பட்டு கான் திரைப்பட விழாவில் பிரத்யேகமான அனுமதியுடன் திரையிடப்பட்டது.

கடுமையான அடக்குமுறைகளைத் தாண்டியும்  பனாஹியின் திரைப்படங்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. '’நான் திரைப்படங்கள் உருவாக்குவதை எவராலும் தடுக்க இயலாது; என்னை முடக்குவதற்கான ஒவ்வொரு முயற்சியின் போதும், திரைப்படங்களை உருவாக்கும் வெறி அதிகமாக எனக்குள் கிளர்ந்தெழுகிறது’ என்பது அவருடைய சமீபத்திய அறிக்கையின் ஒரு பகுதி.

இந்தச் சூழலில் 2015-ல் அவர் உருவாக்கியிருக்கும் docufiction பாணியிலான அவருடைய படைப்பே Taxi. பெர்லின் திரைப்பட விழாவில் பங்கேற்று விருது பெற்றதோடு  FIPRESC விருதையும் பெற்றுள்ளது.

இயக்குநர் பனாஹி ஓட்டும் ஒரு காரில் டெஹ்ரானின் பல்வேறு தரப்பிலான மக்கள் பயணம் செய்கின்றனர். அவர்களின் உரையாடல்களின் மூலமும் காட்சிகளின் மூலமும் அந்த  தேசத்து மக்களின் வாழ்வியல் அனுபவங்களும் அரசியல் அடக்குமுறைகளும் மதம் சார்ந்த எண்ணங்களும் வெளிப்படுகின்றன. காரின் உள்ளேயே அமைக்கப்பட்டிருக்கும் கேமராக்களின் மூலம் முழு திரைப்படமும் உருவாகியுள்ளது. மக்களின் மீதான கண்காணிப்பு அரசியலைப் பற்றியே இத்திரைப்படம் பல்வேறு குறியீட்டுக்காட்சிகளின் மூலமாக உரையாடுகிறது.

ஒரேயொரு உதாரணக் காட்சியை சொல்ல வேண்டுமென்றால், பனாஹி,  தன்னுடைய உறவினரான ஒரு பள்ளிச் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். ஒரு சிறிய ஆவணப்படத்தை எடுக்க வேண்டுமென்பது அவளுடைய ஆசிரியை தந்திருக்கும் குறிப்பு. அதை உருவாக்குவதற்கான விதிகளையும் நிபந்தனைகளையும் பனாஹிக்கு வாசித்துக் காட்டுகிறாள் சிறுமி. அது சார்ந்து அவளுக்கு பல குழப்பங்கள் உள்ளன. இந்த உரையாடலின் மூலம் படைப்பாளிகளின் மீது அந்த தேசம் வைக்கும் கருத்துரிமை சார்ந்த தடைகளில் உள்ள அபத்தங்களை இயக்குநர் மறைமுகமாக உணர்த்தி அந்த உரையாடலை அற்புதமானதொரு பகடியாக்குகிறார். உலக சினிமா தொடர்பான திருட்டு டிவிடிகளை விற்கும் ஒருவரும் பனாஹியின் வாகனத்தில் பயணிக்கிறார். இவ்வாறு பல சுவாரசியமான அனுபவங்கள் இத்திரைப்படத்தில் பதிவாகியுள்ளன. இவைகளின் ஊடே அடக்குமுறையின் அரசியலின் வலியும் மிக அழுத்தமாக வெளிப்படுகிறது.Rams  | 2015 |  Iceland | Dir: Grímur Hákonarson


பொருளாதாரக் காரணங்களையும் தாண்டி விலங்கின் மீது மனிதன் கொள்ளும் நேசத்தை நெகிழ்வான காட்சிகளுடன் உரையாடும் திரைப்படம் இது. பகைவர்களாக இருந்தாலும் நெருக்கடியான சமயத்தில் சக மனிதனின் மீதான நேசமும் அக்கறையும் பட்டுப் போகாது என்கிற செய்தியும் இணைக்கோடாக பயணிக்கிறது.

குடும்பத் தகராறு காரணமாக சுமார் 40 வருடங்களாக ஒருவரோடு ஒருவர் பேசாமல் அருகருகேயான வீட்டில் வாழ்பவர்கள் ராம்ஸ் சகோதரர்கள். ஆடு வளர்ப்பு அவர்களின் பரம்பரைத் தொழில். இதற்கான விருதுகளை மாறி மாறி வாங்குகிறார்கள். இது தொடர்பாக அவர்களுக்குள் போட்டியும் பகையும் கசப்பும் உண்டு. அண்ணனின் ஆடு ஒன்று இறந்து கிடப்பதைக் காணும் இளையவருக்கு அது அரியவகை தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்குமோ என்கிற சந்தேகம் வருகிறது. பல வருடங்களுக்கு முன்பு இருந்த அந்த நோய் ஒழிக்கப்பட்டு விட்டதாக  அரசு கருதிக் கொண்டிருக்கிறது.

அது உண்மையானால் இழப்பு அவருக்கும்தான். ஏனெனில் அந்த நோய் மேலும் பரவாமல் இருக்க அந்தப் பகுதியில் உள்ள அனைத்து ஆடுகளையும் அரசு அழித்து விடும். இதை அறிந்தும் இளையவர் தொடர்புள்ள துறைக்கு தகவல் தெரிவித்து விடுகிறார். இவர்தான் தகவல் தெரிவித்திருப்பார் என்று யூகிக்கும் மூத்தவர் இவரைக் கொல்ல துப்பாக்கியுடன் வர களேபரமாகிறது. சோதனையின் முடிவில் அந்த நோய் பரவியிருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு சகோதரர்கள் உட்பட அனைத்து ஆடு வளர்ப்பாளர்களும் சோகமாகின்றனர். அனைத்து ஆடுகளும் வலுக்கட்டாயமாக கைப்பற்றப்பட்டு அது  தொடர்பான அனைத்து சாதனங்களும் அழிக்கப்படுகின்றன. பொருளாதார நஷ்டத்தால் இந்த தொழிலையே விட்டு பலர் விலகி விடுகின்றனர்.

ஆனால் இளைய சகோதரர் யாருக்கும் தெரியாமல் தன்னுடைய வீட்டின் அடித்தளத்தில் சில ஆடுகளை ஒளித்து வைத்து ரகசியமாக வளர்க்கிறார். அவற்றை வைத்து  இனப்பெருக்கம் செய்ய திட்டமிடுகிறார். இந்த ரகசியம் ஒரு சமயத்தில் அவரது நிரந்தரப் பகையாளரான அண்ணனுக்கு தெரிய வருகிறது. பிறகு என்ன ஆகிறது என்பதை பதட்டமும் நெகிழ்வுமான காட்சிகளுடன் படம் விவரிக்கிறது. உயிர் போகும் அபாயத்தில் இரண்டு சகோதரர்களும்  பரஸ்பரம் இணைவது  ஒரு கவிதையான காட்சி. மிக  சுவாரசியமான திரைப்படம்.Embrace of the Serpent  | 2015 | Colombia | Dir: Ciro Guerraஇத்திரைப்படம் ஓர் அற்புதமான அனுபவம். கொலம்பியா நாட்டுத் திரைப்படம். ஆஸ்கர் விருதிற்காக அந்த நாட்டின் சார்பில் அனுப்பப்பட்டு இறுதிச் சுற்றிலும் இடம் பிடித்திருக்கிறது.

சமகாலத்திலிருந்து உங்களை முற்றிலும் துண்டித்து பழகிய அனுபவங்களிலிருந்து விலக்கி முற்றிலும் ஒரு புதிய உலகத்தையும் மனிதர்களையும் காட்சிகளையும் அறிமுகப்படுத்துவரை சிறந்த 'படைப்பாளர்' எனலாம். அந்த வகையில் இத்திரைப்படத்தின் இயக்குநர் Ciro Guerra -வை சிறந்த படைப்பாளி எனலாம். இரண்டு மணி நேரத்தில் அமேசான் காட்டினுள் பழங்குடியுடன் உலவிய நல்ல அனுபவம்.

அமேசான் வனத்தின் பழங்குடிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஜெர்மனிய ஆய்வாளரான தியோடரின் உடல்நிலை குன்றுகிறது. ஓர் இனக்குழுவில் மிஞ்சியிருக்கும் ஒரே நபரான Karamakate வை அணுகுகிறார்கள். அவனுடைய உதவியுடன் yakruna என்கிற அரிய தாவரத்தைக் கண்டுபிடித்தால் ஆய்வாளரைக் குணப்படுத்தி விட முடியும்.

மேற்குறிப்பிட்ட தியோடரின் ஆய்வுகளைப் படித்த அமெரிக்க ஆய்வாளரான ரிச்சாட் இவான்ஸ் ஏறத்தாழ முப்பத்தோரு ஆண்டுகள் கழித்து அந்த தாவரத்தை தேடி வருகிறார். வயதான Karamakate வை அணுகுகிறார். அவர் தேடி வந்தது தாவரத்தைத்தானா?

1909, 1940 என்று இந்த இரண்டுக் காலக்கட்டத்தின் அனுபவங்களும் துண்டு துண்டாக அடுத்தடுத்து சொல்லப்படும் திரைக்கதையின் மூலம் பழங்குடிகளின் துயரம் விரிகிறது. காலனியாதிக்க நாடுகள் இயற்கை வளங்களைச் சுரண்டும் நோக்கில் வனங்களில் புகுந்து பழங்குடிகள் மீது செலுத்தும் வன்முறை, மனிதர்கள் புக சிரமமான இடங்களில் கூட கிறிஸ்துவ மிஷினரிகள் செய்யும் மத ஆதிக்கம், வணிகம், சிறுவர்களின்உழைப்புச் சுரண்டல், நாகரிக உலகின் ஆதிக்கத்தை தார்மீக கோபத்தோடும் பகடியோடும் அணுகும் Karamakate -ன் சிறப்பான வசனங்கள் என்று இரண்டு காலக் கட்டங்களும் அபாரமான நோக்கில் விரிகின்றன.

ரப்பர் மரம் இயற்கையமைப்பின் மீது செலுத்தப்படும் வன்முறை என்பது பழங்குடிக்கு தெரிகிறது. ஆனால் பணத்தாசை பிடித்த முதலாளித்துவ உலகத்திற்கு அது தெரிவதில்லை. இயற்கையை விட்டு விலகவே விரும்பாத அதன் ஒவ்வொரு செயற்பாடுகளிலும் பொருள் பொதிந்த அர்த்தம் உள்ளது என்று மனமார நம்புகிற பழங்குடிகளின் மனநிலை இத்திரைப்படத்தில் சிறப்பாகப் பதிவாகியுள்ளது.

அமேசான் காட்டின் பின்னணி என்பதால் அற்புதமான இயற்கையை வண்ணத்தில் பதிவு செய்யும் அபத்தத்தை படம் செய்வதில்லை. மாறாக காலத்தின் குறியீட்டு அர்த்தமாக கருப்பு -வெள்ளையிலேயே முழுத் திரைப்படமும் பதிவாகியிருக்கிறது. ஆய்வாளர்களின் குறிப்புகளின் அடிப்படையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.


Heneral Luna  | 2015 | Philippines | Dir: Jerrold Tarog

பிலிப்பைன்ஸ் நாட்டு  தயாரிப்பு. சமகால வரலாற்றால் புரிந்து கொள்ளப்படாத, ஏற்றுக் கொள்ளப்படாத, பாடப்படாத ஒரு நாயகனின் சரிதம்.

ஸ்பெயினிடம் காலனி நாடாக இருக்கும் பிலிப்பைன்ஸ் அமெரிக்காவின் வருகையால் கைமாறப்போகும் தருணம். வருடம் 1898. நாட்டின் தலைவரும் அரசியல் பெருச்சாளிகளும் ஊழல் வியாபாரிகளும் தங்களின் சுயநலம் காரணமாக அமெரிக்காவிடம் சரணடைந்து உயிரையும் தொழிலையும் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று விவாதிக்கும் போது ராணுவ ஜெனரல் லூனா மாத்திரம் 'அடிமையாக இருப்பதை விட போரிட்டு உயிரை விடுவோம்' என்று ஆவேசப்படுகிறார். அவர் நாட்டுக்கு விசுவாசமானவராக இருந்தாலும் முரட்டுத்தனமானவராகவும் பிடிவாதக்காரராகவும் இருப்பதால் ஊழல்வாதிகளால் வெறுக்கப்படுகிறார்.

உயிரைப் பணயம் வைத்து இருக்கும் சொற்ப வீரர்களையும் உற்சாகப்படுத்தி அமெரிக்கப் படைகளிடம் ஆவேசமாகப் போரிடும் லூனாவிற்கு உள்நாட்டு அரசியல் காரணமாகவே தன் சொந்த நாட்டின் மூலமாகவே தடைகளும் எதிர்ப்புகளும் ஏற்படுகின்றன. சில பிரிவினர் அவருடன் ஒத்துழைக்க மறுக்கின்றனர். அவ்வாறானவர்களை தம்முடைய அதிகாரத்தின் மூலம் பணிய வைக்கிறார் லூனா. அமெரிக்கா என்கிற பொது எதிரியை ஒழிக்க இணைந்து பணிபுரிய வேண்டும் என்கிற அவருடைய நேர்மையான ஆவேசம் யாருக்கும் புரிவதில்லை. இறுதியில் தம்முடைய நாட்டு துரோகிகளாலேயே முதுகில் குத்தப்பட்டு இறக்கிறாார் லூனா. (இந்தக் காட்சி அபாரமாக பதிவாகியுள்ளது).

Antonio Luna என்கிற பிலிப்பைன்ஸின் புரட்சிப்படை தளபதியின் சுயசரிதத்தை ஒட்டியும் உண்மையான வரலாற்றுத் தகவல்களின் மீதும் இதன் திரைக்கதை (சற்று கற்பனை கலந்து) அமைக்கப்பட்டுள்ளது. லூனாவாக John Arcilla அபாரமாக நடித்துள்ளார். ஆவேசமும் பிடிவாதமும் கடினமான தருணங்களில் நகைச்சுவையுமாக அமைந்த இவரின் நடிப்பு அற்புதம். மேக்கிங் சற்று சுமார்தான் என்றாலும் பிலிப்பைன்ஸ் திரைவரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் உருவான படம் என்கிறார்கள். அதற்கேற்ப வசூலையும் பெற்றுள்ளது.
Enclave   | 2015 | Germany -Serbia | Dir: Goran Radovanović


செர்பியன் திரைப்படம். Enclave. போர் மற்றும் மதப்பகை காரணமாக பெரும்பான்மையினரின் இடையே வாழநேரும் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்வின் சிக்கல்கள் ஒரு குடும்பத்தின் மூலமாக குறிப்பாக சிறுவர்களின் மூலமாக சொல்லப்படுகிறது. அந்தப் பகை இளநெஞ்சங்களிடமும் எப்படியொரு வன்மமாக பரவி பிறகு எப்படி தெளிகிறது என்பதை நெகிழ வைக்கும் காட்சிகளால் சொல்லியிருக்கிறார்கள்.

போருக்குப் பிறகான செர்பியாவின்  ஒரு சர்சைக்குள்ள பகுதிப் பிரதேசம். அல்பேனியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வசிக்கும் ஓரிரு செர்பியக் குடும்பங்கள். சிறுவன் Nenad மூடப்பட்ட பீரங்கியின் உள்ளே அமர்ந்துதான் பள்ளிக்கு செல்ல வேண்டியிருக்கிறது.அல்பேனிய சிறுவர்கள் பீரங்கியின் மீது கல்லெறிவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தாயை  இழந்த Nenad கண்டிப்பான தந்தையிடம் வளர்கிறான். நோய்வாய்ப்பட்டிருக்கும் தாத்தாதான் அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

அங்குள்ள சில அலபேனிய சிறுவர்கள் இவனிடம் பழகத் துவங்குகிறார்கள். அவர்களில் ஒருவனுக்கு  Nenad-ன் மீது உள்ளுக்குள் பகைமையும் கசப்பும் ஊறிக்  கிடக்கிறது. அவனுடைய தந்தையின் சாவிற்கு Nenad-ன் தந்தைதான் காரணம் என நம்புகிறான். இவர்கள் விளையாடும் போது ஒரு சமயத்தில் Nenad தன்னிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்துகிறான். Nenad அதற்கு மறுத்து விட ஒரு பிரம்மாண்டமான தேவாலய மணியின் உள்ளே Nenad சிக்கிக் கொள்வதை யாருக்கும் சொல்லாமல் மறைத்து விடுகிறான். Nenad-ன் தாத்தா இறந்து விட இவனைத் தேடும் அவனது தந்தை  இவனைக் காணாமல் அங்குள்ள பகைமையை சகிக்க முடியாமல் ஊரை விட்டு விலகுகிறார். பிறகு நிகழ்கிற காட்சிகளை பதைபதைப்பும் நெகிழ்வுமாக மீதிப்படம் விவரிக்கிறது.

மதம் சார்ந்தோ இனம் சார்ந்தோ எத்தனை வரலாற்றுப் பகை இருந்தாலும் சக மனிதனின் மீதான அன்பை அதுவெல்ல முடியாது என்பதை சிறுவர்களின் பார்வையில் அற்புதமான பதிவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
 
 


Death of the Fish  | 2015 |  Iran| Dir: Rouhollah Hejazi
 
ஒரு குடும்பத்தின் தாயார் இறந்து போகிறார். அவருடன் பணிப்பெண் மாத்திரம் இருந்திருக்கிறார்.

'நான் இறந்து போனால் என்னுடைய சடலத்தை மூன்று நாட்கள் வீட்டில் வைத்திருந்து பிறகுதான் புதைக்க வேண்டும். அதுவரை உறவினர்களுக்கும் சொல்லக்கூடாது. என்பது இறந்தவரின் கடைசி விருப்பம். பணிப்பெண் சொல்லித்தான் குடும்ப உறுப்பினர்களுக்கு இது தெரிகிறது. மரபிற்கு எதிரான இந்த விருப்பம் அவர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சர்ச்சையும் விவாதமும் வெடிக்கின்றன. பணிப்பெண் மீது ஐயப்படுகிறார்கள்.

ஒவ்வொருவருமே ஒவ்வொரு விதமான பிரச்சினைகளிலும் உறவுச் சிக்கல்களிலும் இருப்பது மெல்ல மெல்ல புலனாகிறது. வீட்டின் தரைத்தளத்தில் சடலத்தை வைக்கிறார்கள். இதற்கிடையில் ஊருக்குச் செல்லும் பணிப்பெண் திரும்ப வருவதில்லை. இறந்து போனவர் பாதி சொத்தை பணிப்பெண்ணின் பெயரில் எழுதி வைத்திருக்கிறார். மீண்டும் குழப்பம், சர்ச்சை. விவாதம்.

தாய் இறக்கும் போது இத்தனை அழுது துயரப்படும் அவர்கள் உயிருடன் இருந்த போதுஅவரை மிக அரிதாகத்தான் வந்து பார்த்திருக்கிறார்கள் என்பதும் பணிப்பெண்தான் இறந்தவரின் உறுதுணையாக இருந்திருக்கிறார் என்பதும் மெல்ல புலனாகிறது.

கடைசி மூன்று நாட்களாகாவது குடும்ப உறுப்பினர்கள் தாயின் நினைவிலும் அவரின் அருகாமையிலும் இருக்க வேண்டுமென்பதற்காகத்தான் இறந்தவர் அப்படியொரு கடைசி விருப்பத்தை தெரிவித்திருக்கலாம் என யூகிக்க முடிகிறது.படம் சாவகாசமாக நகர்ந்தாலும் இறுதி வரைக்கும் பார்க்க வைக்கும் சிறிய கொக்கியை இயக்குநர் நுட்பமாக செருகி வைத்திருந்தார்.

பொதுவாக இரானிய திரைப்படங்கள் குடும்ப உறவுச்சிக்கல்களை, குடும்ப வன்முறைகளை மிக நுட்பமாகவும் நிதானமான அழகியலுடனும் காட்சிப்படுத்துகின்றன. இத்திரைப்படமும் அதிலொன்று.***

இங்கு அறிமுகப்படுத்திருக்கும் திரைப்படங்கள் இந்த விழாவின் ஒரு துளி அறிமுகமே. இதைத் தவிரவும் பல உன்னதமான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. பல்வேறு தேசங்களின் கலாச்சாரத்தையும் அவற்றின் சமீபத்திய சிறந்த திரைப்படங்களின் உள்ளடக்கத்தையும் உருவாக்கத்தையும் அறிந்து கொள்ள இந்த திரைவிழா பெரிதும் உதவியது. நம்முடைய கலை சார்ந்த ரசனையையும் கலாசார மேம்பாட்டையும் உயர்த்திக் கொள்ள இது போன்ற திரைப்படங்கள் உதவுகின்றன. கடுமையான தணிக்கையும் அடக்குமுறையும் கொண்ட ஈரான் போன்ற தேசங்களில் இருந்து கூட எளிமையான ஆனால் அழுத்தமான அரசியல் விமர்சன திரைப்படங்கள் வெளியாகும் துணிவு பிரமிக்க வைக்கிறது.

இங்குள்ள திரையுலக சூழலோடு  ஒப்பிடும் போது நாம் கடக்க வேண்டிய தூரம் பிரம்மாண்டமாக இருக்கிறது என்பதையே இந்தப் படைப்புகள் உணர்த்துகின்றன.
 
அம்ருதா - பிப்ரவரி 2016-ல் வெளியான கட்டுரை (நன்றி: அம்ருதா)


suresh kannan