Thursday, June 15, 2017

மலையாள சினிமா 2016 - புலிப்பாய்ச்சலின் வேகமும் விவேகமும்



மலையாளச் சினிமாவின் 2016-ம் ஆண்டுக்கான வளர்ச்சி அறிக்கை மிக ஆரோக்கியமானதாக இருக்கிறது. சுமார் 25 கோடி முதலீட்டில் உருவான மோகன்லாலின் 'புலி முருகன்' வசூலில் 150 கோடிகளையும் கடந்து சாதனை புரிந்திருக்கிறது. த்ரிஷ்யம் திரைப்படத்தின் மூலம் தான் உருவாக்கிய கடந்த சாதனையை மோகன்லாலே மறுபடியும் முறியடித்திருக்கிறார். மலையாள திரையுலகின் வரலாற்றில் இதுவரை அதிக வசூலைப் பெற்ற திரைப்படமாக 'புலி முருகன்' அறியப்படுகிறது. ஆனால் வெற்றிகரமான வணிகம் மட்டுமே ஒரு துறையின் வளர்ச்சியின் அளவுகோல் அல்ல. சினிமா என்பது  கலை சார்ந்த, சமூகத்தை பரவலாக பாதிக்கக்கூடிய வலிமை வாய்ந்த ஊடகம் என்பதால் வணிகத்தையும் தாண்டி அதன் உள்ளடக்கத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

சினிமா என்பது பெரும் நிதியைக் கோரக்கூடிய கலை வடிவம் என்பதால் அதன் வணிக கணக்குகளை புறக்கணித்து விட முடியாது. என்றாலும் தூயகலை சார்ந்த படைப்புகள் ஒருபுறமும் தரமான வெகுசன சினிமாக்கள் இன்னொரு புறமும் இயங்குவதுதான் கலைத்துறையின் ஆரோக்கியம் சார்ந்த அடையாளம். எழுபதுகளிலும், எண்பதுகளிலும் கேரளத்தின் சினிமா அவ்வாறுதான் இயங்கியது. உலகமயமாதல் காலக்கட்டத்திற்குப் பிறகு வணிகரீதியான வெற்றிதான் வளர்ச்சி என்கிற நோக்கில் நகர்ந்தது. தமிழ் சினிமாவின் வணிகத்தைப் பார்த்து மலையாள கதாநாயகர்களும் அந்தரத்தில் பறந்து சண்டையிட்டு அவதார நாயகர்களாக மாறினார்கள். மலையாள சினிமாவின் இயல்புத்தன்மையும் பிரத்யேக அழகியலும் மெல்ல குறையத் துவங்கியது.


தோராயமாக 2010-ல் மலையாளத் திரையுலகில் புதிய அலை தோன்றியது. உலக சினிமாவின் தாக்கமும், புதிய பரிசோதனை முயற்சிகளை நிகழ்த்தும் புதுமையும் துணிச்சலும் கொண்ட இளம் கலைஞர்கள் உள்ளே வந்தார்கள். வினித் சீனிவாசன் போன்ற அபாரமான திரைக்கதையாளர்கள், அல்போன்ஸ் புத்திரன் போன்ற புதுமை இயக்குநர்கள், ஃபகத் பாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி போன்ற உற்சாகமான நடிகர்களின் வருகை மலையாளத் திரையின் சூழலை கொண்டாட்டமாக மாற்றிற்று. மலையாள சினிமாவின் தேக்கத்தையும் பழைய மரபையும் உடைத்து புதிய வகையிலான கதையாடல்கள் மூலம் சுவாரசியமான திரைப்படங்களை உருவாக்கினார்கள்.

உலகமெங்கிலும் உள்ள மலையாளப் பார்வையாளர்களை சென்றடையும் வாய்ப்பை நுட்பம் தந்ததால் ஆரோக்கியமான வணிக சூழலும் உண்டானது. பொழுதுபோக்கு சினிமா வார்ப்பின் இடையேயும் பல புதிய  அம்சங்களை தர முடியும் என்பதை இந்த இளம் கலைஞர்கள் நிரூபித்தார்கள். கேரளம் தவிர இதர மாநிலங்களில் உள்ள பார்வையாளர்களையும் இவர்கள் திரும்பிப் பார்க்க வைத்தனர். அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய மலையாளத் திரைப்படம் தமிழகத் தலைநகரமான சென்னையில் 250 நாட்களுக்கும் மேலாக ஓடி புதிய சாதனையை படைத்தது. மோகன்லால், மம்முட்டி போன்ற சூப்பர் ஸ்டார்கள், இந்த இளைஞர்களிடையே போட்டியிட வேண்டிய நிலைமை உண்டானது.


இந்த சூழலில் 2016-ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த சில முக்கியமான சினிமாக்களைப் பற்றி பார்க்கலாம்.

***

இலக்கியத்திற்கும் மலையாள சினிமாவிற்கும் எப்போதுமே இடையறாத தொடர்புண்டு. இந்த வகையில் உண்ணி.ஆர் எழுதிய சிறுகதையை அடிப்படையாக் கொண்டு அதே பெயரில் உருவான திரைப்படம் 'லீலா'. அதுவரை பெரும்பாலான திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக இருந்த பிஜூ  மேனன், மையப் பாத்திரத்தில் நடித்து பெருமையைப் பெற்றார். குதர்க்கமும் விநோதமும் கொண்ட செல்வந்தன். யானையின் கொம்பின் மீது ஓர் இளம் பெண்ணை சாய்த்து உறவு கொள்ள வேண்டும் என்கிற விசித்திரமான ஆசையைக் கொண்டு அது சார்ந்த பயணத்தை மேற்கொள்கிறான். கதாசிரியரே திரைக்கதையையும் எழுதியிருந்ததால் சிறுகதையின் வடிவம் பெரிதும் சேதமுறாமல் சுவாரசியமான திரைப்படமாக உருமாறியிருந்தது. ரஞ்சித் இயக்கிய இத்திரைப்படத்தில் பிஜூ மேனனின் நடிப்பு பார்வையாளர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

இதே ஆண்டில் பிஜூ மேனன் நடித்த இன்னொரு திரைப்படமும் சுவாரசியமானது - அனுராக கரிக்கின் வெள்ளம். ஒரு நடுத்தர வயது ஆசாமி தன்னுடைய பழைய காதலியை சந்திக்க விரும்பும் பாத்திரத்தில் பிஜூ மேனன் அபாரமாக நடித்திருந்தார். இயல்பான நகைச்சுவைக் காட்சிகளால் இத்திரைப்படம் கவனத்தைக் கவர்ந்தது.

இந்த வருடத்தின் மிக முக்கியமான திரைப்படம்  'கம்மட்டிப்பாடம்', இந்த  வருடம் என்றல்ல, மலையாளத் திரையுலகின் வரலாற்றிலேயே கூட இது கவனத்துக்குரிய படைப்பாக பதிவு செய்யக்கூடிய தகுதியைப் பெற்றது. எந்தவொரு பிரதேசமும் நகர்மயமாகும் போது அந்த வளர்ச்சிக்கான பலியாக விளிம்புநிலை சமூகம் அமைகிறது. காலம் காலமாக தொடரும் வரலாற்றுக் கொடுமையிது. சேரி மக்களின் வாழ்விடங்களை ரியல் எஸ்டேட் மாஃபியா கைப்பற்றிக் கொள்வதன் மூலம் கொச்சின் எப்படி நவீன நகரமாக உருமாறுகிறது என்பதை எண்பதுகளின் காலக்கட்டப் பின்னணியில் விவரிக்கும் அபாரமான திரைப்படம். துல்கர் சல்மான் அற்புதமாக நடித்திருந்தார். ஆசாரி ஆர் பாலன் என்கிற அற்புதமான நடிகர் இத்திரைப்படத்தின் மூலம் கிடைத்தார். விநாயகனின் நடிப்பும் சிறப்பாக அமைந்திருந்தது. ராஜீவ் ரவியின் இயக்கம் பாராட்டத்தக்கது.

துல்கர் சல்மானின் இன்னொரு குறிப்பிடத்தகுந்த திரைப்படமாக 'கலி' அமைந்தது. பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஒரு சூறாவளியையே உண்டாக்கிய சாய் பல்லவி நாயகியாக நடித்திருந்தார். அதீதமான கோபம் வரும் ஓர் இளைஞன், அந்தக் குணாதியசத்தால் எவ்வகையான சிக்கலையெல்லாம் எதிர்கொள்கிறான் என்பது இதன் மையம். திரைப்படத்தின் பிற்பாதியின் திரைக்கதை மிக சுவாரசியமாகவும் பரபரப்பூட்டுவதாகவும் அமைந்திருந்தது.

***

மலையாள சினிமாவின் சமீபத்திய வெற்றிகரமான கண்டுபிடிப்பு என 'நிவின் பாலி'யைச் சொல்லலாம்.  குறுகிய காலத்திலேயே கேரள இளம் பெண்களின் கனவுக் கண்ணனாக மாறி விட்டார். மிக கவனமாக அவர் தேர்ந்தெடுக்கும் திரைக்கதைகள் அவரது வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்திருக்கின்றன. 2016-ல் வெளியான நிவின் பாலியின் இரண்டு திரைப்படங்களுமே சூப்பர் ஹிட்.

ஒன்று, 'ஆக்ஷன் ஹீரோ பிஜ்ஜூ'. தமிழில் வெளிவந்த, விக்ரம் நடித்த 'சாமி'யைப் போலொரு திரைக்கதை. ஆனால் 'சாமி'யில் இருந்த மிகையான ஆவேசம் இதில் இல்லை. ஒரு நல்ல காவல்துறை அதிகாரியின் பணியில் நடக்கும் சம்பவங்களின் இயல்பான தொகுப்பு. காவல் நிலையத்தில்  பிஜ்ஜூ எதிர்கொள்ளும் பல்வேறு விதமான புகார்கள், நபர்கள் என்று இந்தச் சம்பவங்கள் தொடர்ந்து வந்தாலும் சிறிது கூட சலிக்காமல் ஆக்கியிருப்பது திரைக்கதையின் சிறப்பு. 'பிரேமம்'  திரைப்படத்தில் பார்த்த அசட்டு இளைஞனா இவர்?' என்று வியக்க வைத்திருக்கிறார். காவல்துறையினரின் கோணத்தில் நின்று, பணி  நிமித்தம் அவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களை விவரிக்கும் திரைக்கதை. இதைப் பார்த்த பிறகு காவல்துறையினரின் மீது பொதுச்சமூகத்தினரின் மனதில் மரியாதையும் பிரியமும் கூடுதலாக  உருவாகும்.

நிவின் பாலியின் இன்னொரு திரைப்படம் 'ஜேக்கப்பின்டே ஸ்வர்க்கராஜ்யம்'. இதில் மிக அடக்கமாகவும் இயல்பாகவும் நடித்திருந்தார். துபாயில் வசிக்கும் ஒரு மலையாளக் குடும்பம். குடும்பத்தின் தந்தை, தன் பிள்ளைகளை மிக உற்சாகமாகவும் உத்வேகம் ஊட்டியும் வளர்க்கிறார். உயரப் பறந்து கொண்டிருந்த தொழிலில் ஒரு துரோகம் காரணமாக வீழ்ச்சியுண்டாகிறது. இது அந்தக் குடும்பத்தை மிகவும் பாதிக்கிறது. தந்தையில்லாத சூழலில் மகனான 'நிவின்பாலி' தன் தாயுடன் இணைந்து எவ்வாறு அந்தச் சிக்கல்களை எதிர்கொள்கிறான் என்பதை இயல்பான, நெகிழ்வான காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.

பொருளாதாரத்திற்காக பல்வேறு நாடுகளில் இடம்பெயர்ந்து வாழும் மலையாளிகளின் உழைப்பு  இத்திரைப்படத்தில் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.. கூடவே துபாயின் புகழையும் பாடுகிறார்கள். வணிகம் சார்ந்த சிக்கல்களை, நாயகன் தனியாக நின்று ஜெயிக்கும் சூரத்தனமெல்லாம் இல்லாமல் அவனுடைய தாயின் விவேகமும் கூட உதவுவதாக திரைக்கதை அமைத்திருப்பது பெண்மையைப் போற்றும் விதமாக அமைந்திருக்கிறது.  வினித் சீனிவாசனின் இயல்பான திரைக்கதையும் இயக்கமும். தந்தையாக ரெஞ்சி பணிக்கரின் அருமையான நடிப்பு.  உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம்.

***

2016-ல் வெளியான மலையாளத் திரைப்படங்களில் ஃபகத் பாசிலின் ''மகேஷிண்டே பிரதிகாரம்' கவனத்துக்குரிய படைப்பாக அமைந்தது. மிக இயல்பான காட்சிகளுடன் நகரும் இந்த திரைப்படம் வணிகரீதியாகவும் வெற்றிபெற்றது. தற்செயலாக ஒரு தெருச்சண்டையில் ஈடுபட நேரும் இளைஞன் ஊராரின் மத்தியில் அவமானப்படுகிறான். தன்னை அடித்தவனை வெற்றி கொள்ளாமல் இனி காலில் செருப்பு அணிவதில்லை என சபதம் ஏற்கிறான். ஏதோ கேட்பதற்கு ஹீரோவின் பழிவாங்குதல் தொடர்பான திரைப்படம் என்பது போல் தோன்றினாலும் சினிமாவின் வழக்கமான ஹீரோத்தனம் ஏதும் இதில் இல்லை. அவல நகைச்சுவையுடன் அமைந்திருக்கும் காட்சிகள்  படம் பூராவும் வந்து சுவாரசியப்படுத்துகின்றன. ஃபகத்தின் நடிப்பு அபாரமாக அமைந்திருந்தது. திலீஷ் போத்தனின் சிறப்பான இயக்கம். இந்த திரைப்படமும் உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படமே.

நிவின் பாலி நடித்த 'ஆக்ஷன் ஹீரோ பிஜ்ஜூ' காவல்துறையினரின் நேர்மறையான பக்கத்தை சித்தரித்தது என்றால், 'கிஸ்மத்' அதன் எதிர்பக்கத்தை சித்தரித்தது. தமிழின் 'விசாரணை' திரைப்படத்தை நினைவுப்படுத்துவது போல இத்திரைப்படமும் காவல் நிலையத்தில் நிகழும் சம்பவங்களை பெரும்பாலும் கொண்ட திரைக்கதையாக அமைந்தது. இசுலாமிய  இளைஞன் ஒருவனும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இந்து மதப் பெண்ணும் காதல் கொள்கிறார்கள். குடும்பத்தினரின் பலத்த எதிர்ப்பிற்கு அஞ்சி தங்களின் பாதுகாப்பிற்காக காவல்நிலையத்திற்கு வருகிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்க வேண்டிய காவல்துறை, பிற்போக்கு மனோபாவத்தோடு பஞ்சாயத்து செய்கிறது. இறுதிக்காட்சி எதிர்பாராத திருப்பத்துடன் அமைந்திருந்தது.

மோசமான காவல்துறை அதிகாரியாக, வினய் ஃபோாட் பிரமாதப்படுத்தியிருந்தார். வடகிழக்கு மாநிலங்களிலிருந்து தென்னிந்திய நகரங்களில் பணிபுரியும் இளைஞர்கள், காவல்துறையினரால் எவ்வாறு முன்தீர்மானமான குற்றவாளிகளாக பார்க்கப்படுகிறார்கள், வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பது தொடர்பான காட்சிகளும் இடையில் வருகின்றன. அறிமுக இயக்குநரான சனவாஸ் கே பவக்குட்டிக்கு நல்வரவு.

***

நாடகத்தனமான காட்சிகளால் நிறைந்திருந்தாலும் 'கொச்சுவா பவுலோ அய்யப்ப கோய்லோ' ஒரு நெகிழ்வான 'ஃபீல் குட்' திரைப்படம். சிறார்களுக்கான உத்வேகத்தை அளிப்பது. 'தன்னுடைய மிக ஆதாரமான விருப்பத்தை நோக்கி ஒருவன் உறுதியாக பயணப்படுவான் எனில்,  இந்த பிரபஞ்சமே அவனுக்காக துணைபுரியும்'.   'பவுலோ கோய்லோ' எழுதிய ''The Alchemist' நாவலில் வரும் ஒரு பிரபலமான கருத்து இது. இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம்.

இடுக்கி என்கிற ஊரில் வாழும் சிறுவனான அப்புவிற்கு விமானங்கள் என்றால் மிகவும் பிரியம். ஒருமுறையாவது விமானத்தில் பறந்து விட வேண்டும் என்பது அவனுடைய வாழ்நாள் லட்சியம். ஆனால் அசந்தர்ப்பமான சூழல் காரணமாக  அந்த தங்க வாய்ப்பு இரண்டு முறை தவறி விடுகிறது. நீச்சல் கற்றுக் கொண்டால் அது தொடர்பான போட்டியில் கலந்து கொள்ள விமானத்தில் செல்ல முடியும் என்பதற்காக பயங்கர ஆர்வத்துடன் நீச்சல் பயிற்சி கொள்கிறான். அதே ஊரைச் சார்ந்த இளைஞனான கொச்சுவா அவனுக்கு உதவுகிறான். சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்ற பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறான். ஒரு கட்டத்தில், விமானத்தில் பறப்பதல்ல, நீச்சலே அவனது எதிர்காலம் என்கிற 'கண்டுபிடிப்பு' அந்தப் பயணத்தின் மூலமாக நிகழ்கிறது. குஞ்சாக்கோ கோபன் இந்தப் படத்தை தயாரித்து முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தாலும் சிறுவனை மையப்படுத்தியே பெரும்பாலான காட்சிகள் அமைந்திருக்கின்றன. சித்தார்த்தா சிவாவின் அற்புதமான இயக்கம்.

ஏறத்தாழ எட்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த 'பின்னேயும்' கலைத் திரைப்பட ரசிகர்களால் மிக ஆவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரும்பாலோனோர் தங்களின் ஏமாற்றத்தையே தெரிவித்தார்கள். 'ஒழிவுதிவசத்தே களி' இந்த வருடத்தின் முக்கியமான திரைப்படங்களுள் ஒன்று.  இடைத்தேர்தல் மூலம் கிடைக்கும் ஒரு விடுமுறை நாளை குடியுடன் கொண்டாட சில இளைஞர்கள் திட்டமிடுகிறார்கள். அந்தக் கொண்டாட்டத்தின் மூலம் சமூகத்தின் வர்க்க முரண்கள், அதன் அரசியல், சாதியப் பெருமிதங்கள், பாகுபாடுகள், தனிநபர்களிடம் உறைந்திருக்கும் வக்கிரம் குடியின் மூலமாக வெளிப்படும் தருணங்கள் போன்றவற்றின் மீது இத்திரைப்படம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இங்கு குறிப்பிட்டிருப்பவை தவிர, மம்மூக்காவின் 'புதிய நியமம்'  ''கசாபா', லாலேட்டனின் 'ஒப்பம்' 'Guppy', ஜீத்து ஜோசப்பின் இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்த 'Oozham' போன்ற பல குறிப்பிடத்தகுந்த திரைப்படங்கள் 2016-ம் வருடத்தை சுவாரசியமாக்கின.

***

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த படி வணிகநோக்கு திரைப்படங்களின் வார்ப்பிலும் கூட ஆரோக்கியமான, தரமான முயற்சிகளை தர முடியும் என்பதை மலையாள திரையுலகம் நிரூபித்திருக்கிறது. 'ஒரே பாடலில் பணக்காராகும்' அதிநாடகத்தனங்கள் பெரும்பாலான திரைப்படங்களில் இல்லை. அவ்வாறான மாற்றங்கள், வளர்ச்சிகளை இயல்பாகவும் நம்பகத்தன்மையுடன் காட்சிப்படுத்த திரைக்கதையில் அதிக  சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். மலினமானதாக அல்லாமல், தரமான, இயல்பான நகைச்சுவைகள் மிளிர்கின்றன.

கேரள  நிலவெளியின் அழகியல் பெரும்பாலான படங்களில் அற்புதமாக பதிவாகியிருக்கிறது. உதாரணமாக 'மகேஷிண்டே பிரதிகாரம்' திரைப்படத்தின் துவக்க காட்சிகள் 'இடுக்கி' பிரதேசத்தின் அழகியலையும் கலாசாரத்தையும் ஓர் அற்புதமான பாடலின் பின்னணியில் விவரிக்கிறது. 'ஜேக்கப்பின்டே ஸ்வர்க்கராஜ்யம்' திரைப்படத்தில் நாயகன் 'நிவின்பாலிக்கு' எதிராகவே அவரது தந்தையை ஒருவன் வசைபாடுகிறான். தமிழ்ப்படங்களை பார்த்து வளர்ந்திருந்த நான், அந்த இடத்தில் நிச்சயம் ஒரு சண்டைக்காட்சி இருக்கும் என உறுதியாக நம்பினேன். அவ்வாறான வசையது. ஆனால் உள்ளுக்குள் அடக்கப்பட்ட கோபத்துடன் நாயகன் நகர்ந்து விடுவதாக காட்சி அமைந்திருந்தது ஆச்சரியம். இறுதியில் கூட தனது விவேகத்தின் மூலமும் நல்லியல்பின் மூலமும்தான் நாயகன் பழிவாங்குகிறான்.


வணிகப் படங்களாக இருந்தாலும் கூட கேரள மண்ணின் ஆன்மா வெளிப்படும் வகையில் திரைக்கதைகளை அமைக்கும் இயக்குநர்களின் நுண்ணுணர்வும் திறமையும் வியக்க வைக்கின்றன. இயல்பான திரைக்கதை, மிகையல்லாத உணர்ச்சிகள்,  சுவாரசியமான காட்சிகள் போன்றவை இத்திரைப்படங்களை அதிகம் வியக்க வைக்கின்றன. 2017-ம் வருடத்தின் மலையாளத்தின் திரைப்படங்கள் கடந்த ஆண்டை விடவும் அதிக பாய்ச்சலை நிகழ்த்தும் என்கிற உத்தரவாதத்தை இந்த திரைப்படங்கள் தருகின்றன. 

(புதிய தலைமுறை ஆண்டுமலர் -2016 -ல் பிரசுரமானது)

suresh kannan