Tuesday, October 30, 2012

தாண்டவம் - தமிழ் சினிமா - தொடரும் அவநம்பிக்கைகள்...

சமீபத்தில் இயக்குநர் விஜய் இயக்கிய 'தாண்டவம்' பார்த்துத் தொலைத்தேன். ஓசியில்தான். அதற்கே எனக்கு கடுப்பாக இருந்தது. அம்புலிமாமா என்றொரு சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் நீதிக்கதை இதழ் ஒன்று முன்பு வந்து கொண்டிருந்தது. இப்போது வருகிறதா என்று தெரியவில்லை. குழந்தைகளுக்காக எழுதப்படும் அந்தக் கதைகளில் கூட ஒரு தர்க்க ஒழுங்கு இருக்கும். சுவாரசியம் இருக்கும். ஆனால் நம் தமிழ்ப்பட இயக்குநர்கள் தங்களின் பார்வையாளர்களை குழந்தைகளுக்கும் கீழான அறிவுள்ளவர்களாக, விபரமறியாதவர்களாக நடத்தி அவர்களை தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டிருக்கும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை என்று மாறுமோ என்று தெரியவில்லை.

சர்வதே தரத்தையெல்லாம் கூட விட்டுத்தள்ளி விடுவோம். திரைமொழி, கலை, நுட்பம், தர்க்க ஒழுங்கு, கலையமைதி  போன்ற புண்ணாக்குகளெல்லாம் நமக்கு வேண்டாம். தமிழ் சினிமாவை ஒரு வணிகமாகவே அணுகுவோம். ஐந்து ரூபாய்க்கு விற்கப்படும் சிப்ஸ் பாக்கெட்டை சந்தைப்படுத்தவே எத்தனை முயற்சிகள்? சுவாரசியமான காப்பி ரைட்டிங், கவனத்தை ஈர்க்கும் கேப்ஷன்கள், எளிதில் ஞாபகப்படுத்திக் கொள்ள சுருக்கமான, வாயில் எளிதில் நுழையும் பிராண்ட் பெயர்கள், லேஅவுட்கள்... என்று எத்தனை யத்தனங்கள்.. ஒரு பிராண்ட் நன்றாக இல்லையெனில் அதை தூக்கிப் போட்டு விட்டு இன்னொரு பிராண்டை நோக்கி போகக் கூடிய அளவிற்கான வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறது நுகர்வுக் கலாச்சாரம்.

ஆனால் கோடிகளைப்  போட்டு இன்னும் பல கோடிகளை வாரிக் குவிக்க நினைக்கும் தமிழ்த் திரையுலக தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும், இதைச் சார்ந்தவர்களும் கேவலமான குப்பைகளை தயார் செய்து விட்டு எத்தனை அலட்சியமாக இருக்கிறார்கள்? கதை, திரைக்கதை என்கிற பெயரில் அழுகிய குப்பைகளை 'நாயக பிம்பம், தொழில்நுட்பம் போன்ற வண்ணக் காகிதங்களில் சுற்றி தந்து விட்டால் பார்வையாளர்களிடம் சாமர்த்தியாக காசு பிடுங்கி விடலாம் என்கிற தன்னம்பிக்கையை என்னவென்பது? இதில் 'இது ரொம்ப டிஃப்ரண்டான சப்ஜெக்ட்' என்று பிரமோக்களில் திரும்பத் திரும்ப அலட்டிக் கொள்ளும் ஜம்பம் வேறு. எத்தனை நாட்களுக்கு பார்வையாளனை இப்படி தொடர்ந்து ஏமாற்றி விட முடியும்?. (அப்படியும் தமிழ்த் திரையுலகின் பார்வையாளர்களின் பெரும்பான்மையான சதவீதத்தினர் தொடர்ந்து அப்பாவி்த்தனமாகவோ அல்லது சொரணயற்றோ கிடக்கிறார்கள் என்பது வேறு விஷயம்).

ஏற்கெனவே குறிப்பிட்டபடி சர்வேதேச அளவில் அல்லாமல் தமிழ்ச் சினிமா எனும் எல்லைக்குள் வைத்துப் பார்த்தால் ஒரு காலகட்டத்தில், கதை சொல்லும் முறையில், நுட்பத்தில் மணிரத்னம் ஒரு குறிப்பிட்ட அளவு பாதிப்பை ஏற்படுத்தினார். குறிப்பான அடையாளம் 'நாயகன்'. அவ்வகையில் சில வருடங்களுக்குப் பிறகு குறிப்பிட்டுச் சொல்பவராக பாலா தோன்றினார். அவரைத் தொடர்ந்து செல்வராகவன், அமீர், சேரன், வெற்றிமாறன், ராம், மிஷ்கின் என்று குறிப்பிட்ட சிலர் தங்களின் மனச்சாட்சியும் பட்ஜெட்டும் அனுமதித்த எல்லைக்குள் சில பல நல்ல முயற்சிகளைத் தந்தார்கள். ஆனால் ஒருவரிடமும் தொடர்ந்து நல்ல படங்களைத் தருவதற்கான consistency இல்லை. இதனாலேயே தங்களின் முதல் படத்தில் திறமையையெல்லாம் கொட்டிவிட்டு பின்வரும் படங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் விருதுப்பட டிவிடிகளையும் நம்பி வருகிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.

பருத்தி வீரனை பார்த்து பிரமித்துப் போய் அமீரையெல்லாம் நான் ஒரு கட்டத்தில் பாலுமகேந்திரா, மகேந்திரனுக்குப் பிறகு வரக்கூடிய ஒரு நல்ல அடையாளமாக குறித்து வைத்திருந்தேன். ஆனால் அவரோ யோகி எனும் குப்பையில் பங்கேற்கிறார். 'கன்னீத் தீவு பொண்ணா' என்று ஐட்டம் டான்ஸ் ஆடுகிறார். அவரின் அடுத்த படமான 'ஆதி பகவன் படம் குறித்தான முன்னோட்டங்கள் அத்தனை சிலாக்கியமாக இல்லை. 'வெண்ணிலா கபடிக்குழு' என்று குறி்ப்பிடத்தக்க படத்தை உருவாக்கிய சுசீந்தரன் 'அழகர்சாமியின் குதிரையில்' ஒரளவிற்கு தேறினாலும் 'ராஜபாட்டை' எனும் வணிகச் சகதியில் வழுக்கி விழுந்தார். மிஷ்கினின் முகமூடியைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. சேரன் இன்று என்னவானார் என்கிற தகவலே இல்லை. வெற்றிமாறன் தன்னுடைய முந்தைய படத்தின் சரக்கையே இன்னொரு வடிவில் ஆடுகளமாக்குகிறார்.

மேற்குறிப்பிட்ட இயக்குநர்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்காவது தம்முடைய உருவாக்கங்களில் இயன்ற அளவிற்கான தரத்தை பேணுகிறார்கள். ஆனால் இயக்குநர் விஜய் எப்போதும் பெரிதும் நம்பிக் கொண்டிருப்பது வெளிநாட்டு டிவிடிக்களை. 'டைட்டானிக்'கை மென்று தின்று துப்பி..'மதராசபட்டினமாக' உருவாக்கினார். 'ஐயம் சாமை' கொத்து பரோட்டா போட்டு தெய்வத் திருமகளாக்கினார். 'தாண்டவம்' எதிலிருந்து உருவப்பட்டது என்று தெரியாவிட்டாலும் (Dare Devil என்று சொல்கிறார்கள்) ஒரு மோசமான திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் லண்டனில் நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ் டிஸ்கவரி சானலை பார்த்துக் கொண்டிருப்பது போலவே ஓர் உணர்வு. டாக்சி டிரைவர் சந்தானம் தமிழ் பேசுகிறார். காவல்துறை அதிகாரி நாசரும் (இலங்கை) தமிழ் பேசுகிறார். போதாக்குறைக்கு நாயகியும் தமிழருக்குப் பிறந்தவர் (தாய் பிரிட்டிஷ்) என்பதால் தமிழ் பேசுகிறார். விக்ரம் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. தூக்கத்தில் நடக்கும் வியாதியுள்ளவர் போல் படம் பூராவும் உலாவுகிறார். கேட்டால் echolocation என்று ஆங்கிலத்தில் மிரட்டுகிறார்கள். கணவர் என்ன பணிபுரிகிறார் என்பது கூட கண் மருத்துவராக உள்ள மனைவிக்கு தெரியவில்லை. தமிழ் சினிமா நாயகிகள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு லூசுகளாகவே உலவப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கேட்டால் காமெடியாம். நம்பிக்கைக்கு உரியவராக வருகிற நண்பர்தான் வில்லனாம். இதுதான் சஸ்பென்ஸாம். இதை எல்கேஜி படிக்கிற குழந்தை கூட முதலிலேயே சொல்லிவிடும். இப்படியாக புளித்து அழுகிப் போன மாவிலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா. இவர்கள்தான் உலகின் பல பெயர் தெரியாத நாடுகளில் என்னென்ன விருதோ வாங்கி வந்து மீடியாக்களில் அலட்டுகிறார்கள்.

இந்தப்படத்தின் கதை தொடர்பாக நிகழ்ந்த வழக்குகளும் சர்ச்சைகளும் இன்னொரு காமெடி. இல்லாத ஒரு விஷயத்திற்கு அடித்துக் கொண்டதற்காக நீதிமன்றமே முன்வந்து இவர்கள் மீது வழக்கு தொடரலாம்.

வெளிநாட்டுத் திரைப்படங்களிலிருந்து முழுப்படத்தையோ, அல்லது பல டிவிடிகளிக்களில் இருந்து காட்சிகளை உருவும் பிரச்சினைக்கு வருவோம். ஒருவகையில் இதைக்கூட சகித்துக் கொள்ளலாம். அப்படியாவது தமிழிற்கு சில நல்ல படங்கள் வரட்டுமே என்று. ஆனால் அது உருவப்பட்டதில் இருந்து இன்னும் மேம்பட்டதாக, சிறப்பானதாக, தரத்தின் அடிப்படையில் அசல் படைப்பை தாண்டுவதாக இருக்க வேண்டும். ராஜ்மவுலி இயக்கிய 'நான் ஈ', காக்ரோச் என்கிற குறும்படத்தின் ஐடியா என்று கூறப்படுகிறது. பரவாயில்லை. ராஜ்மவுலி அந்த ஐடியாவை வைத்துக் கொண்டு நுட்ப உதவியோடு பல மடங்கு தாண்டியிருக்கிறார். இரண்டு மணி நேரத்திற்கு ஈயும் பார்வையாளனும் ஒன்றோடு ஒருவராக பின்னிக் கொள்கிறார்கள். அந்த அளவிற்கு அதை ஒரு சுவாரசியமான அனுபவமாக்கியிருக்கிறார்.

ஆனால் கதை, காட்சிகள் திருடும் பெரும்பாலான இயக்குநர்கள் என்ன செய்கிறார்கள்? அசல் படைப்பிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அடிப்படை விஷயங்களை, காட்சிகளை எடுத்துக் கொள்கிறார்கள். பின்பு காலம் காலமாக தமிழ் சினிமாவிற்கென்று இருக்கும் சில வணிக மசாலாக்களை அதில் சோக்கிறார்கள். இயக்குநருக்கு ஸ்பாட்டில் தோன்றிய ஐடியாக்கள்..தயாரிப்பாளர்களின் மச்சான்கள் சொல்லும் பரிந்துரைகள், ஹீரோயின்களின் ஜலதோஷம் காரணமாக மாற்றப்பட்ட காட்சிகள், ஹீரோக்கள் தங்களின் புஜபலபராக்கிரமத்தை நிருபிப்பதற்காக திணிக்கப்பட்ட ஆக்சன் காட்சிகள், பஞ்ச் டயலாக்குகள்.. என்று எல்லாம் சேர்ந்து கொத்து பரோட்டா போட்டு 'தமிழ் மூளைக்கு' இது போதும் அல்லது இதுதான் வேண்டும் என்கிற முன்தீர்மானத்தோடு ஜரிகைப் பேப்பரில் சுற்றி சூடு ஆறுவதற்குள் முதல் நாளிலேயே கூவி கூவி விற்று விடுகிறார்கள்.

இவர்களையே குற்றஞ் சொல்லிக் கொண்டிருப்பதிலும் உபயோகமில்லை. தமிழ் சினிமா பார்வையாளன் எனும் ஆடு மந்தையிலிருந்து விலகும் வரைக்கும் இம்மாதிரியான கசாப்புக் கடைக்காரர்களின் வணிகம் சிறப்புற தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.
suresh kannan

Wednesday, October 17, 2012

http://www.imdb.com/title/tt1922689/Plan C  - நெதர்லாந்து திரைப்படம்.

சிறிய மிக கச்சிதமான, நேரான திரைக்கதை. எளிமையாகச் சொன்னாலும் அசத்தியிருக்கிறார்கள். கதையைப் பற்றி சொன்னால்தான் ஆர்வம் ஏற்படும் என்பதால் சற்று சுருக்கமாக...

ரொனால்டு காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஓர் ஊழியன். ஒரு நடுத்தர வர்க்க பொறுப்பில்லா மனிதனுக்கு உள்ள அனைத்து பிரச்சினைகளும் இவனுக்கு. Poker எனும் விளையாட்டில் பெருமளவு பணத்தை இழப்பதால் ஊரைச் சுற்றி கடன். கடன் கொடுத்த மாஃபியா கும்பலொன்று பணத்தை வட்டியுடன் திரும்பத் தரச் சொல்லி இவனின் சிறுவயது மகனை மிரட்டுகிறது. இவனது முன்னாள் மனைவியும் இந்தப் பிரச்சினையை தீர்க்காவிடில் காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாக நெருக்கடி தருகிறாள்.

ஆக.. ரொனால்டுக்கு உடனடியாக பத்தாயிரம் டாலர் பணம் உடனடியாகத் தேவை. வேறு வழியில்லாமல் ஒரு திட்டம் தீட்டுகிறான். சுலபத் தவணை மாதிரி எளிமையான திட்டம்.

இவன் சீட்டு விளையாடுமிடத்தில் புதன் கிழமை அன்று பெருமளவு பணம் புழங்கும். விளையாட்டு அரங்கின் பின்புறமுள்ள அறையில்தான் இரண்டு அப்பிராணிகள் பணத்தை எண்ணிக் கொண்டிருப்பார்கள். எவ்வித காவலும் கிடையாது.

திட்டம் என்னவெனில்... ரொனால்டின் கூட்டாளி, இருட்டியவுடன் பணமிருக்கும் அறைக்குச் சென்று அங்கிருக்கும் அப்பிராணிகளை மிரட்டி எல்லா பணத்தையும் பிடுங்கிக் கொள்வது.. மறுநாள் பணத்தை பங்கிட்டுக் கொள்வது. கள்ளத்தனமாக நடைபெறும் சூதாட்டம் என்பதால் அவர்கள் காவல்துறைக்கும் செல்ல முடியாது.

சிம்பிள். ரொனால்டின் நிதிப் பிரச்சினையோடு குடும்பப் பிரச்சினையும் தீர்ந்து விடும்.

ஆனால் அது எத்தனை எளிதாக இல்லை.

ரொனால்டு கூட்டாளித் தேவைக்காக ஒரு கோயிஞ்சாமியிடம் இந்தத் திட்டத்தை பற்றி சொல்கிறான். அவன் மறுநாள் எம்.என்.நம்பியார் கூட்டத்தைச் சோந்த கபாலியை அழைத்து வருகிறான்.

"ஏண்டா.. நம்ம ரெண்டு பேர் திட்டத்துல இன்னொருத்தனை கூட்டிட்டு வந்தே?"

"இல்ல வாத்யாரே... அவன் நம்மள மாதிரி இல்ல...கொஞ்சம் விவரமானவன்.. சாமான்லாம் சோக்கா யூஸ் பண்ணுவான். நம்மளுக்கும் சேஃப்டி தல"

சரி ஒழிந்து போகிறது என்று கபாலிக்கும் தன் திட்டத்தை விளக்குகிறான். கூடவே முக்கியமான ஒரு நிபந்தனையை சொல்கிறான். இந்த அறுவைச் சிகிச்சையில் .. அதான்.. ஆப்பரேஷனில் யாரும் ரத்தம் சிந்தக்கூடாது. அதாவது வன்முறை என்பது கூடவே கூடாது. வெறுமனே மிரட்ட வேண்டும். அவ்வளவுதான். காந்திக்குப் பிறகு ரொனால்டிடம்தான் அகிம்சை முறையைப் பற்றி கோயிஞ்சாமியும் கபாலியும் கேட்டிருப்பார்கள்.

ஆச்சா...

புதன்கிழமை. தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ரொனால்டும் சூதாட்ட அரங்கிற்கு சென்று விளையாடுகிறான். அவ்வப்போது பரபரப்பாக கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

கோயிஞ்சாமியும் கபாலியும் வழியில் மிக சாவகாசமாக KFC சிக்கனாக தேடி... தேடி... உப்பு உறைப்பு எல்லாம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு வருகிறார்கள். ரொனால்டு அவர்களுக்கு ரகசியமாக போன் செய்து.. "பேமானிங்களா... என்னடா பண்றீங்க?" என்று கேட்க "இதோ வந்துகினே இருக்கோம் வாத்யாரே" என்கிறார்கள்.

அதற்குப் பிறகு  ரெனால்டிற்கு ஓர் இனிய அதிர்ச்சி ஏற்படுகிறது. சூதாட்டத்தில் எப்போமே அவனுக்கு தோல்விதான் ஏற்படும்  இருக்கும் பணத்தையெல்லாம் இழந்து பஸ் டிக்கெட்டிற்கு கடன் வாங்கிப் போகும் ரொனால்டு, எந்நாளும் இல்லாத திருநாளாக... இன்று பார்த்து கெலித்துக் கொண்டே போகிறான். கூட இருக்கும் விளையாட்டாளர்களும்... என்னடா இது Poker-க்கு வந்த சோதனை? என்று மூக்கின் மேல் விரல் வைத்து அவனை ஆச்சரியமாய்ப் பார்க்கிறார்கள்....

இப்படியே தொடர்ந்து கிட்டத்தட்ட 15000 டாலர் வரை கெலித்து விடுகிறான். வியப்பில் அவனுக்கே வியர்த்துப் போகிறது. அதாவது கொள்ளையடித்து பிற்பாடு வரப் போகிற பங்கை விட அதிக பணம். அவசரம் அவசரமாக கூட்டாளிகளுக்கு தொலைபேசி... 'பாருங்க. கண்ணுங்களா.. பிளான்லாம் ஃபணால்..நீங்க ஒண்ணியும் கிளிக்க வேணாம்...உங்க ரெண்டு பேருக்கும் ஒரு கட்டிங்கும் சிக்கன் லெக்பீஸ் பிரியாணியும் வாங்கித் தந்து தொலைக்கிறேன். அப்படியே திரும்பி ஓடிப் போயிடுங்கோ" என்கிறான்.

அவர்களோ சமர்த்தாக திரும்பிச் சென்று பரங்கி மலை ஜோதியில் படம் ஏதும் பார்க்கப் போகாமல் "பாரு வாத்யாரே.. ராகுகாலம் கழிச்சு நல்ல நேரம் பார்த்து பூஜையெல்லாம் போட்டுட்டு கிளம்பியிருக்கோம். அதெல்லாம் அப்படியே போட்டுட்டு மின்னே வெச்ச காலை பின்னே வெக்கற பழக்கம் எங்க வம்சத்துலயே கிடையாது" என்கிறார்கள் கறாராக.

()

பிறகு என்ன ஆச்சு?

ரொனால்டிற்கு அவர் ஜெயித்த பணம் கிடைத்தா? அல்லது பணம் கொள்ளையடிக்கப்பட்டதா? பாகப் பிரிவினை ஒழுங்காக நடந்தா...? அகிம்சை திட்டம் என்னவாயிற்று?

என்பதையெல்லாம் அறிய திரைப்படத்தைப் பாருங்கள்...

இத்திரைப்படத்தின் இயக்குநர் quentin tarantino வின் மஹா ரசிகர் போலிருக்கிறது. மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் காட்சிக் கோர்வைகளின் அடியாழத்தில் நகைச்சுவை கொப்பளித்துக் கொண்டு போகிறது. உதாரணத்திற்கு: ரொனால்டு தன்னுடைய கூட்டாளி கோயிஞ்சாமியை ஒரு இடத்திற்கு வரச் சொல்கிறான். கோயிஞ்சாமி வரத் தாமதமாகிறது. ரொனால்டு எரிச்சலுடன் காத்திருந்த நேரத்தில் என்னவெல்லாம் செய்தேன் என்று பட்டியலிடுகிறான். அது போல் கோயிஞ்சாமியும் கபாலியும் KFC சிக்கனைப் பற்றி விவாதிப்பது.

ரொனால்டாக Ruben van der Meer நடித்திருக்கிறார். அண்டர் பிளேவாக நடிப்பதென்றால் எப்படி, என்பதை இந்தப் பாத்திரத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். மனிதர் அப்படி நடித்திருக்கிறார். இவரது வழுக்கைத் தலையைப் பற்றி யாராவது சொன்னால் ரோஷம் பொத்துக் கொண்டு வருகிறது. ஏற்கெனவே இன்னொரு ரொனால்டு இருப்பதினால் சூதாட்ட அரங்கில் இவரது பெயரை ஒரு அடையாளத்திற்காக 'வழுக்கை ரொனால்டு' என்று குறித்து வைத்திருக்கிறார்கள். . 'ஏன் மீசை ரொனால்டு' என்று போடக்கூடாதா என்று ஆவேசமாக கேட்கிறார்.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி எளிமையான கதையென்றாலும் நேர்மையான திரைக்கதையின் மூலம் படத்தை சுவாரசியப்படுத்தியிருக்கிறார்கள். நம்மாட்கள் இதை படமாக எடுத்தால் சூதாட்ட அரங்கில் நிச்சயம் ஒரு ஐட்டம் பாடலைச் செருகியிருப்பார்கள். என்ன செய்ய, நாம் வாங்கி வந்த வரம் அப்படி...

suresh kannan

Monday, October 15, 2012

மாற்றான் - திரைக்கதையில் தோற்றான்


இப்போது உள்ளதா என தெரியவில்லை. முன்பெல்லாம் பொருட்காட்சிகளில் தலை பெண்ணாகவும் உடல் முழுக்க மீனாகவும் உள்ள ஒரு ஸ்டால் இருக்கும். ‘கடல் கன்னி’ என்ற பெயரில் மக்களை ஏமாற்றி கல்லா கட்டி விடுவார்கள். இதை அப்பாவித்தனமாக உண்மை என்று இன்றும் நம்புபவர்கள் உண்டு. இது பொய் என்று தெரிந்தும் கிளர்ச்சியால் எழும் ஆர்வத்தில் காசு செலுத்தி விட்டு பார்த்து விட்டு வருபவர்களும் உண்டு.

சமீபகாலமாக நம் தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் மக்களிடமிருந்து காசைப் பிடுங்குவதற்காக இந்த உத்தியை திறம்பட பயன்படுத்துகிறார்களோ என்று தோன்றுகிறது. வலுவானதொரு கதையில் அதற்கு மிகப் பொருத்தமாக உடற்குறையுள்ள பாத்திரம் இருப்பது என்பது வேறு. ஆனால் இம்மாதிரியான பாத்திரத்தை பிரதானமாக வைத்து விட்டு பின்பு அதற்கேற்றவாறு  கதையை யோசிப்பது என்பது வேறு.  இதில் அந்த பாத்திரம் பார்வையாளர்களின் ‘வேடிக்கைப் பொருளாகி’ விடும் அபாயமும் அபத்தமும் மாத்திரமே நிகழும். இயக்குநர்கள் முன்வைக்கும் வணிகத் தந்திரமும் அதுதான். இரட்டைத் தலை மனிதன்,  நான்கு தலை பாம்பு,  மூன்று மார்பகங்கள் உள்ள பெண் என்ற ஏதாவதொன்றை வேடிக்கை காட்டி காசு பிடுங்கும் தந்திரம்.

தமிழ்த் திரையில் இதை பிரதானமாக துவக்கி வைத்தவர் என கமலைச் சொல்லலாம். ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா,  கல்யாண்குமார் கூனனாக நடித்த ஒரு திரைப்படம் (பெயர் நினைவில் இல்லை) பாகப் பிரிவினை 'சிவாஜி' என்று சில நல்ல முன் உதாரணங்கள் இருந்தாலும்,  இதை ஒரு கிம்மிக்ஸ் ஆக ‘வித்தியாசமாக காட்டுகிறேன் பார்’ என்ற பாவனையில் உருவாக்குபவராக ஒரு பாணியாக்கினவர் கமல். ராஜபார்வை,  அபூர்வ சகோதரர்கள், குணா,  அன்பே சிவம், என்று உடற்குறையுள்ளவர்களை வெற்றிகரமான வணிகப் பொருட்களாக்க முடியும் என்ற தந்திரத்தை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லலாம். இதில் சற்று உருப்படியான முயற்சிகளும் உண்டு என்பதை மறுக்கவில்லை. ஆனால் இந்த நோய்க்கூறு மனோநிலையின் உச்சமாக ‘தசாவதாரத்தை’ சொல்லலாம்.

 ‘வடை திருடின காகம்  vs ஏமாற்றிய நரி’ என்கிற நீதிக்கதையை கமல் திரைப்படமாக உருவாக்கினால் அதில் காகம், நரி, வடைசுடும் பாட்டி என அனைத்து வேடங்களையும்  ஏற்க கமல் விரும்புவார். ஏன் அந்த வடையாகக் கூட கமலே நடித்தால் கூட நாம் ஆச்சரியப்படக்கூடாது. கதையைப் பின்னுக்குத் தள்ளி விட்டு தன்னையும் தன் ‘வித்தியாசங்களையும்’ முன்னிலைப்படுத்திக் கொள்வதாலேயே அவரின் படங்கள் சில நல்ல விஷயங்களை உள்ளடக்கியிருந்தாலும் சர்வதேச திரைப்படங்களின் அருகில் வைத்து ஒப்பிடக் கூடிய தகுதியை இழக்கும் அபத்தத்திற்கு உள்ளாகிறது.

இம்மாதிரியான வித்தியாசமான வேடங்களை ஏற்பதில் கமலுக்கு வாரிசாக விக்ரமைச் சொல்லலாம். உடல் எடையை பெருமளவிற்கு குறைத்து ‘சேது’வில் காட்டின வித்தியாசம் நிச்சயம் நல்ல விஷயம்தான். கதையின் சூழலுக்கு முற்றிலும் பொருத்தமானது. ஒரு இயக்குநராக பாலா பிரகாசித்த விஷயமும் கூட. (ஆனால் இதே பாலாவே ‘அவன் இவனில்’ விஷாலைப் படுத்தி எடுத்து வேலை வாங்கி ஆனால் மோசமான கதை மற்றும் திரைக்கதையினால் அந்தப் பாத்திரத்தை கேலிக்கூத்தாக்கியது வேதனையான விஷயம்.) ஆனால் விக்ரமிற்கு ‘சேதுவின்’ வெற்றியும் முன்உதாரண கமலும் இணைந்து அவரை பைத்தியக்காரனாக்கி விட்டது போலும். சமீபத்திய 'தாண்டவம்' சிறந்த உதாரணம்.

இப்போதெல்லாம் நடிகர்களுக்கு ‘சூப்பர் ஸ்டார்’ இமேஜூக்கு பொருந்துவதான ஆக்-ஷன் திரைப்படங்களைக் காட்டிலும் அதனோடு இணைந்து இந்த மாதிரியான 'வித்தியாச தோற்ற' விஷயங்களையும் இணைத்துக் கொள்வது உத்தரவாதமாக கால்ஷீட் வாங்குவதற்கு உபயோகமாகும் போலிருக்கிறது. ‘சார்,  இந்தப் படத்துல உங்களுக்கு வித்தியாசமான ரோல் சார். எல்லாருக்கும் மூக்குல ரெண்டு ஓட்டை இருக்குமில்லையா? உங்களுக்கு ஒரு ஓட்டைதான் இருக்கும். அதை வெச்சுதான் கிளைமாக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் வெச்சிருக்கோம்’. இன்னும் இரட்டை குறிகள், நான்கு புட்டங்கள், ஐந்து கிட்னிகள் உள்ள தமிழ் நாயகர்களையெல்லாம் பார்க்கப் போகிறோமோ என்கிற கற்பனையே திகிலாக இருக்கிறது.

இப்போது 'மாற்றானுக்கு' வருவோம்.

கமல், விக்ரமின் தொடர்ச்சியாக 'வித்தியாசமான' பாத்திரத்தை 'பேரழகனில்' ஏற்கெனவே சாதித்துக் காட்டியவர் சூர்யா. அதுவும் போதாமல் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக 'மாற்றானில்' தோன்றியிருக்கிறார். இயக்குநர் கேவி ஆனந்த் எடுத்துக் கொண்ட கதைக்கு 'இரட்டையர்கள்' பாத்திரம் எந்த அளவிற்கு அவசியமானது? ஒன்றுமேயில்லை. பாதி படம் முடிந்த பிறகு இரட்டையர்களும் பிரிந்து விடுகிறார்கள். ஒரு மசாலா பட நாயகன் செய்யும் அதே வேலையைத்தான் இந்தப் பட நாயகனும் செய்கிறான். பின் எதற்கு இரட்டைப் பாத்திர கிம்மிக்ஸ்? ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த படி எதையோ வித்தியாசமாக காட்டி பார்வையாளனமிடமிருந்து பணம் பறிக்கும் அதே தந்திரம்தான் இரட்டைப் பாத்திரத்தின் நோக்கம்.

கதையை விடுத்து கே.வி.ஆனந்தின் இத்திரைப்படத்தை ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு பிரதியாகக் கூட அணுக முடியவில்லை. அவரின் முந்தைய படங்களில் (கனா கண்டேன், அயன், கோ) உள்ள அடிப்படையான சுவாரசியம் கூட 'மாற்றானில்' இல்லை. துவங்கும் போது மிகச்சிறப்பாகவே துவங்குகிறது. இரட்டைக் குழந்தைகளில் வளர்ந்து பெரியவர்களாவது வழக்கம் போல ஒரு பாடலின் பின்னணியில் சொல்லப்படுகிறது. பல சின்ன சின்ன சுவாரசியங்கள் இதில் வெளிப்படுகின்றன. இதற்காக உழைத்திருப்பதற்கு நிச்சயம் பாராட்ட வேண்டும். வளர்ந்த சூர்யாக்களும் வெவ்வேறு குணாதியங்களுடன் இருப்பதுவும் கூட சுவாரசியம்தான். ஆனால் இரட்டைப் பிறவிகளின் வேலை இங்கேயே முடிந்து விடுகிறது. கதையின் அவர்களுக்கான தேவை இல்லவே இல்லை. இடைவேளை வரை சற்றாவது சுவாரசியமாகச் செலகிற திரைப்படம் அதன் பிறகு ஒரு காட்டமான மசாலா நெடியுடனும் பல தர்க்கப் பிழைகளுடன் நொண்டியத்து எரிச்சலூட்டுகிறது. பில்லா - 2 திரைப்படத்தைத் தான் மறுபடியும் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்று ரஷ்ய நில்ப்பின்னணியில் தனிமனிதன் ஒரு நாட்டின் ராணுவத்தையே நாயகன் சண்டையிட்டு முறியடிக்கும் அதிசாகச காமெடிகள் நிறைந்த பின்னணியில் பயணிக்கிறது. இதற்கு நடுவிலும் ஒரு கிளுகிளுப்பு பாட்டு வேண்டும்? என்ன செய்யலாம்? தான் தேடி வந்த ரஷ்ய பெண் பாலே டான்சராக இருப்பதாக காட்டலாம். அப்போதுதான் கொலைவெறிக்கு நடுவிலும் கிளுகிளுப்பாக நாயகன் 'கால் முளைத்த பூவே' என்று நடனமாட முடியும்.

ஒரு கச்சிதமான திரைக்கதையை அதன் இயல்பிற்கு நேர்மையாக பயணிக்க விடாமல் வணிகச் சினிமாவின் சூத்திரங்களை இடையில் இட்டு நிரப்பினால் எத்தனை ஆண்டுகளானாலும் தமிழ்ச் சினிமா இதே ஆபாச சகதியினுள்தான் சிக்கிக் கொண்டிருக்கும்.

சிதறுண்ட நாடுகளும் பின் தங்கிய நாடுகளும் தங்களின் சுற்றுலாத்தளங்களை பிரபலப்படுத்திக் கொள்ள இந்தியத் திரைப்படங்களை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் போலிருக்கிறது. படப்பிடிப்பிற்கான இடத்தை இலவசமாகவும் வெண்ணையால் செய்த 'திமுசுக்கட்டைகளை' சலுகை விலையில் வழங்குகிறார்கள் போலும். எனவேதான் கிராமத் வறட்டி தட்டும் நாயகன் தன்னுடைய டூயட்டை வெளிநாட்டு பின்னணியில் பாடுகிறான்.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை வைத்துக் கொண்டு எத்தனை அழகான டிராமாவை உருவாக்கியிருக்கலாம்? இரண்டு பேரும் ஒரே பெண்ணை காதலித்தால்?.... இதற்கான சந்தர்ப்பமும் ஆனந்தின் திரைக்கதையில் இருந்தது. ஆனால் அதில் ஆழமாக போகாமல் சில நொடிக் காட்சிகளிலேயே விட்டு விட்டார் இயக்குநர். இதில் இவர்களின் தகப்பன்தான் வில்லனாக வருகிறார். ஒருவன் அப்பனை எதிர்ப்பனாகவும் இன்னொருவன் அவரை காப்பாற்றுவனாகவும் ஒருவரின் முயற்சியை மற்றொருவர் முறியடித்துக் கெர்ண்டே வந்தால் எத்தனை அற்புதமான திரைக்கதையாகியிருக்கும். (இங்கு மகாதேவன் வாசனை வருவதாக நானே உணர்வதால் நிறுத்தி்க் கொள்கிறேன்).

எஸஜே சூர்யா இயக்கிய 'வாலி' நினைவுக்கு வருகிறது. இதே போல் இரட்டையர்கள்தான். ஒரே பெண்ணை அடைய விரும்புகிறார்கள். இந்த புள்ளியை வைத்துக் கொண்டு எத்தனை சிறப்பான திரைக்கதையை உருவாக்கியிருந்தார் அவர்? பாவம். ப்ளேபாய், செக்ஸ் காமெடி என்கிற சகதியில் அவரை அமிழ்த்தி அழித்து விட்டார்கள். அவரும் அதற்கு உடந்தையாய் இருந்து மறைந்து போனார்.

இருவேறு குணாதிசய பாத்திரங்களை அற்புதமாக வெளிப்படுத்திய சூர்யாவின் உழைப்பும், இரண்டு பாத்திரங்களை கச்சிதமான ஒளியில் பொருத்திக் காட்டிய ஒளிப்பதிவாளர் மற்றும் கணினி நுட்பக் குழுவின் உழைப்பும் எடிட்டர் ஆன்டனியின் உழைப்பும் (பாவம் சட்டியில் இருந்தால்தானே அவரும் அகப்பையில் கொண்டு வர முடியும். 'கோ'வில் வரும் 'அக நக' பாட்டையும் மாற்றானில் வரும் 'தீயே தீயே' பாடலையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.) கே.வி.ஆனந்த் என்கிற இயக்குநரின் வணிக நோக்கத்தினாலும் மோசமான திரைக்கதையினாலும்  பாழானதுதான் மிச்சம். 'இரட்டையர்களான' சுபா அடுத்த திரைப்படத்திலாவது 'கெமிக்கல்' வாசனையில்லாத ஒரு கதையை முயற்சித்துப் பார்க்கலாம்.
suresh kannan

Thursday, October 11, 2012

டைம்பாஸ் - விகடனின் 'ஆல்டர் ஈகோ'சமீபத்தில் விகடன் குழுமத்திலிருந்து புதிதாய் வெளிவந்திருக்கும் 'டைம்பாஸ்' வார இதழை 'முதல் இதழ்' என்பதால் சோதனை முயற்சிக்காக வாங்கிப் பார்த்தேன். 'அச்சு விபச்சாரம்' என்று பேஸ்புக்கில் பத்திரிகையாளர் ஞாநி குறிப்பிட்டிருப்பதில் மிகையேதும் இல்லையோ என்று தோன்றுகிறது.

தமிழ் வெகுஜன இதழ்களில் விகடனுக்கென்று ஒரு பாரம்பரியம் உண்டு. கேலிச்சித்திர அட்டைகள், மதனின் சிரிப்புத் திருடன் சிங்காரவேலு வகையறா நகைச்சுவை, முத்திரை எழுத்தாளர்களின் சிறுகதைகள் (ஜெயகாந்தன்), மதிப்பெண் சினிமா விமர்சனங்கள், ஆபாசமில்லாத, உறுத்தாத நகைச்சுவைக் கட்டுரைகள்..என்று விகடனுக்கென்று ஒரு நல்ல முகமும் அடையாளமும் இருந்தது. பிரகாஷ்ராஜ், சேரன், வடிவேலு போன்றவர்களின் கட்டுரைத் தொடர்கள் வந்து கொண்டிருந்த சமயத்தில் பல வருடங்களாக விகடனை வாங்கிக் கொண்டிருந்தேன். ஆசிரியர் குழு மாற்றமடைந்து விகடன் அதன் புற வடிவத்தில் மாறி நடிகைகளின் பளபள இடுப்புப் பிரதேசத்தில் தஞ்சம் புகுந்தவுடன் வாங்குவதை நிறுத்தி விட்டேன். பின்பு சமீபத்தில் இரண்டொரு இதழ்கள் வாங்கி (அசோகமித்திரன் பேட்டி காரணமாக) சரிப்படாமல் விட்டு விட்டேன்.

உலகமயமாக்க காலகட்டத்தில் பெரும்பான்மையாக எல்லாமே வணிக நோக்குச் சிந்தனைகளாகி 'லட்சியவாதம்' என்பதே செல்லாக்காசாகி விட்டதால், கடுமையான சந்தைப் போட்டியை எதிர்கொள்ள விகடன் தொடர்ந்து செய்து வரும் சமரசங்களைக் கூட ஒரளவிற்கு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அந்தக் குழுமத்திலிருந்து வெளிவந்திருக்கும் 'டைம்பாஸ்' முன்வைக்கும் ஆபாசத்தை இதழியலின் மோசமான அடையாளம் எனக் கூறலாம்.

எல்லா புனிதமான பாவனைகளுக்கு மறுபுறம் இன்னொரு மோசமான, குரூரமான, வக்கிரமான முகமிருக்கும். பெரும்பாலும் எல்லா மனிதர்களுக்கும் இது பொருந்தும். விகடன், எஞ்சியிருக்கும் தன்னுடைய பாரம்பரியப் பெருமையைக் காப்பாற்றிக் கொள்ள தன்னுடைய ஆல்டர் ஈகோ'வாக இந்த இதழைத் துவங்கியிருக்கிறதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

'மக்களால் அங்கீகரிக்கப்பட்ட xx போர்னோ பத்திரிகை' என்ற அடையாளத்தை பன்னெடுங்காலமாக 'குமுதம்' என்கிற வார இதழ் காப்பாற்றிக் கொண்டு வருகிறது. ஆனால் அந்தப் பத்திரிகையே வெட்கப்படுமளவிற்கான ஆபாசமும் வக்கிரமும் 'டைம்பாஸில்' நிறைந்திருக்கிறது. நடிகைகளின் அந்தரங்கத்தை எட்டிப்பார்க்கும் கிசுகிசுக்கள், வம்புச் செய்திகள், மாடல்களின் முக்கால்நிர்வாண புகைப்படங்கள் என்று பக்கத்திற்கு பக்கம் தனிமனிதனின் வக்கிரங்களுக்கு தீனி போட்டிருக்கும் பணியைச் சிறப்பாக செய்திருக்கிறது டைம்பாஸ். இவைதான் நடுத்தரக் குடும்பங்களின் வரவேற்பறைகளில் கிடக்கப் போகும், பாலியல் பற்றி முறையான அறிமுகமில்லாத இளைய தலைமுறையினர்களின் கண்களில் படப்போகும் பத்திரிகை என்பதால் திகிலாக இருக்கிறது.

இந்தப் புகாரை ஒரு கலாச்சார காவலனாக, ஆபாசப் பத்திரிகைகளை, காணொளிகளை பார்க்காதிருப்பதாக பாவனை செய்யும் பாசாங்குக்காரனாக சொல்லவில்லை. முன்பு மருதம், திரைச்சித்ரா (?1) போன்ற மென்பாலியல் இதழ்கள் செய்து கொண்டிருந்த சேவையை (இப்போது சினிக்கூத்து என்றொன்று இருக்கிறது என்றறிகிறேன்) பாரம்பரியப் பெருமையை இன்னும் வைத்திருக்கும் விகடனும் செய்ய வேண்டுமா என்று அதன் முன்னாள் வாசகனாக எனக்குச் சங்கடமாக இருக்கிறது.

காந்தியை நினைவுப்படுத்தும் பொக்கை வாய்ச்சிரிப்புடனும் தலையில் கொம்புடனும் இருக்கும் விகடன் தாத்தாவின் உருவத்தை ரசிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஆனால் கேலிச்சித்திரங்களில் உருவம் சிறிது சிறிதாக மாறி விபரீதமான அர்த்தத்தை தருவதைப் போன்று தாத்தாவின் தலையிருக்கும் கொம்பு நீண்டு 'டைம்பாஸ்' வடிவில் ஒரு சாத்தான் உருவமாகிக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.

ஏற்கெனவே சீர்கெட்டுப் போயிருக்கும் தமிழ்ச் சூழலின் தரத்தை மாற்றுவதற்காக பாடுபடக்கூட வேண்டாம். அதை இன்னும் கீழிறக்கும் பணியில் ஈடுபடாமலிருந்தாலாவது புண்ணியமாய்ப் போகும். தமிழ் வாசகனுக்கு வேண்டுமானால் டைம் 'பாஸ்' ஆகலாம். ஆனால் வருங்கால தமிழ்ச் சமுதாயம் இன்னமும் மோசமாகி 'ஃபெயிலாகி'ப் போகும்.

suresh kannan

Tuesday, October 09, 2012

சட்டம் எனும் விலங்கு - Présumé coupablePrésumé coupable  ஒரு பிரெஞ்சுத் திரைப்படம்.

அப்பாவியான ஒரு மனிதன் சட்டத்தின் கருணையில்லாத கண்களில் சிக்கி சின்னா பின்னாமாகிறான். பார்வையாளர்களில் நம்மில் எவருக்கும் இது நேரலாம் என்கிற திகிலான செய்தியை மிக ஆழமாக வாழைப்பழ ஊசியாக உள்ளிறக்குகிறது திரைப்படம். ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.Alain Marécaux  ஒரு நள்ளிரவில் காவல் துறையினரால் முரட்டுத்தனமாக கைது செய்யப்படுகிறார். கூடவே அவரது மனைவியும். அவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுதான் கொடுமையானது. குழந்தைகள் மீதான வன்புணர்ச்சி. Alain சினமுறுகிறார், கத்துகிறார், கதறுகிறார், கண்ணீர் விடுகிறார். எந்தவொரு பயனுமில்லை. அடிப்படையான ஆதாரம் ஏதுமில்லாத பல யூகமான ஆதாரங்களை, குற்றச்சாட்டுக்களை காவல்துறை வைக்கிறது. "அப்பா என்னிடம் 'என்னமோ' செய்தார்' என்று அவருடைய சொந்த மகனையே சொல்ல வைக்கிறது. எந்தவொரு தகப்பனுக்கும் ஏற்படக்கூடாத நிலை. 'வேலை வேலை' என்று குழந்தைகள் மீது போதுமான அளவு அன்பு செலுத்தாமலிருக்கிறோமோ என்று ஏற்கெனவே குற்றவுணர்வில் இருக்கும் அவருக்கு இந்தக் குற்றச்சாட்டு தலையில் இடியை இறக்குகிறது. பல முறை தற்கொலைக்கு முயல்கிறார். கடுமையாயிருக்கும் இளம் நீதிபதி மனிதாபிமானம் சற்றுமில்லாமல் சட்டத்தின் விதிகளை இறுகப்பிடித்து தொங்குகிறார். இறுதியில் என்னவாயிற்று என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Alain Marécaux ஆக Philippe Torreton உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார். மிகையாகச் சொல்லவில்லை. உண்மையாகவே. இதற்காக சுமார் 50 பவுண்டு எடையை இழந்திருக்கிறார். படத்தைப் பாருங்கள். உங்களுக்கே மிக அதிர்ச்சியாயிருக்கும். நமது சிக்ஸ் பேக் நாயகர்கள் செய்யும் கிம்மிக்ஸ் இல்லை.

படம் முழுக்க முழுக்க Alain பின்னாலேயே அலைகிறது. காவல்துறை மிரட்டல்கள், விசாணைக்கான அலைக்கழித்தல்கள், சிறைத்தனிமை, தற்கொலை முயற்சிகள், செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்கும் சுயபச்சாதாபம், என்றாவது விடுதலை ஆகி விடுவோம் என்கிற சிறு நம்பிக்கை... இவைதான் படம் முழுக்கவே. பெரும்பான்மையாக வேறு எந்தக் காட்சிகளும் இல்லை. ஒரு கணத்தில் நாமே Alain ஆக உணர்கிறோம். அவர் தற்கொலைக்கு தொடர்ந்து முயலும் போது ஒரு கணத்தில் அது சரிதான் என்று நமக்குத் தோன்றி விடுகிறது.

மனிதர்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவைதான் சட்டங்கள். ஆனால் அவை பூமராங் போல கண்மூடித்தனமாக ஒரு தனிமனிதனை குரூரமாக தாக்கும் போது, தவறு சட்டங்களின் மீதா அல்லது அவற்றை முறையாக கையாளத் தெரியாத அமைப்புகள், மனிதர்கள் மீதா என்கிற ஆதாரமான சந்தேகக் கேள்வியை அழுத்தமாக ஏற்படுத்துகிறது திரைப்படம். நிச்சயம் காணத் தவற விடக் கூடாதது.


suresh kannan

பக்கிராம் ஸ்பீக்கிங்.....


மேற்கண்ட வசனத்தை கேட்டவுடன் உங்கள் மூளைக்குள் உடனே மணியடித்தால் உங்களின் நினைவுத் திறன் நன்றாக இருக்கிறதென்று பொருள். :)

இயக்குநர் ஃபாசில் இயக்கிய 'அரங்கேற்ற வேளை' திரைப்படத்தில்தான் இந்த வசனம் வரும். ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் என்கிற மலையாளத் திரைப்படத்தின் மறுஉருவாக்கமிது. மலையாளத்தில் சித்திக்-லால் இயக்கம். கதையை அப்படியே வைத்துக் கொண்டு பாத்திரங்களை மாற்றி வைத்து தமிழில் உருவாக்கியிருந்தார் ஃபாசில்.

இந்தப்படம் வெளியான புதிதில் (1990) ஏனென்று சொல்ல முடியாத காரணத்திற்காக, அந்த சந்தோஷத்திற்காக, நான்கைந்து முறை பார்த்தேன். திரையரங்கமே உருண்டு புரண்டு சிரித்து சற்று கலங்கி நிறைவடையும் ஃபீல் குட் திரைப்படம். தமிழில் அதுவரை பெரும்பாலும் முயற்சி செய்யப்படாத மென் நகைச்சுவையை முதன் முதலில் இத்திரைப்படத்தில் கண்டிருந்ததால் மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றியதோ என்று இப்போது தோன்றுகிறது. 
 
பிறகு பல முறை இத்திரைப்படத்தை நினைத்துக் கொள்வேன். ஆனால் பார்க்க வாய்க்கவில்லை. இணையத்திலும் டிவிடி கடைகளிலும் பல வருடங்களாக இத்திரைப்படத்தை தேடிக் கொண்டேயிருந்தேன். சமீபத்தில் மின்னணு சாதனங்களின் மெக்காவான, அண்ணாசாலை ரிச்சி தெருவிற்கு சென்றிருந்த போது இதன் குறுந்தகடைக் கண்டேன். 'கண்டேன் சீதையை' என்கிற பரவசத்தோடு நெருங்கினால் கூடவே சிறிய நெருடலும் இருந்தது. இதன் கூடவே 'தாலாட்டு கேட்குதம்மா, என் தங்கச்சி படிச்சவ' போன்ற மொக்கைகளும் ஒட்டிக் கொண்டிருந்தன. தனிப்படமாக கிடைக்கவில்லை. இவ்வாறான காம்பினேஷன் தகடுகளில் வீடியோ கம்ப்ரஸ்ஸன் காரணமாக படத்தின் தரம் குறைவாகவே இருக்கும். வேறு வழியில்லை.

மூன்று வெவ்வேறு நபர்கள். அவர்களின் தனித்தனியான அறிமுகம். நகைச்சுவையான ஆரம்பம். செல்லச் சண்டைகள். அவர்களின் இன்னொரு சோகமான பக்கம். நிதித் தேவைகள். சிக்கல்களாக விரிகிறது. போன் மாறாட்டக் குழப்பம் காரணமாக பணத் தேவைகள் பூர்த்தியாககக்கூடிய சந்தர்ப்பம். தொடரும் நகைச்சுவையான சாகசங்கள், குழப்பம், மீண்டும் சிக்கல். பிறகு வழக்கம் போல் சுபம். ஒரு வணிகத் திரைப்படத்திற்கு தேவையான கச்சிதமான திரைக்கதை. ஃபாசில் இதை மிகச் சிறப்பாக கையாண்டிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாக ஃபாசிலின் படங்களில் அகம் சார்ந்த உணர்வுகள் சிறப்பாக கையாளப்பட்டிருக்கும். அவரின் 'பொம்முக்குட்டி அம்மாவிற்கு' எனக்கு பிடித்த ஒன்று. மலையாளத்தில் முகேஷின் பாத்திரத்தை தமிழில் ரேவதிக்கு பொருத்தமாக மாற்றியமைத்ததில் அவரின் திரைக்கதை மேதமை பளிச்சிடுகிறது.

பிரபுவிற்கு மிகப் பொருத்தமான பாத்திரம். அப்பாவியான ஆனால் செயற்கையான வீராப்பை காட்டும் 'சிவராக கிருஷ்ணணை' நன்றாக வெளிப்படுத்தியிருந்தார். ரேவதிக்கு இம்மாதிரியான குறும்புத்தனமான பாத்திரமெல்லாம் 'மெளனராகம்' சமயத்திலிருந்தே அத்துப்படியென்பதால் அனாயசமாக நடித்திரு்நதார். 
 
தமிழ் நகைச்சுவையின் மீது ஜெ வைத்திருக்கும் புகாருக்கு சிறந்த உதாரணம் விகே ராமசாமி. எதையும் வாயை நன்றாக திறந்து உரத்த குரலி்ல் உரத்த சிரிப்பில் நடிப்பது இவரது பாணி. சமயங்களில் முகஞ்சுளிக்கும் ஆபாசங்களை நகைச்சுவையில் ஒளித்துக் காட்டுவதும். 'இன்று என் மனைவியுடன் சந்தோஷமாக இருந்தேன்' என்பதைக் கூட நாலு தெருவிற்கு கேட்கும்படிதான் இவர்களால் வசனம் பேச முடியும்.  நாடகத்திலிருந்து திரைக்கு வந்தவர்கள் பெரும்பாலும் இவ்வகையான புகாரிலிருந்து தப்பிக்க முடியாது. கவுண்டமணி, சந்தானம் போன்றவர்கள் விகே ராசாமியின் ஒரு வகையான நீட்சி எனலாம். தமிழ் ரசிகர்களுக்கு இவ்வாறான உரத்த நகைச்சுவை பழக்கப்பட்டு விட்டதால் இதிலிருந்து மீள்வது கடினம். 
 
என்றாலும் ஒரு காட்சியில் விகே ராமசாமியின் சிறந்த நடிப்பைக் கண்டேன். போன் மாறாட்டக் குழப்பங்கள், சண்டைகளெல்லாம் முடிந்து பிரபுவும் ராமசாமியும் வீட்டிற்கு வருவார்கள். ராமசாமி இன்னும் அதே பயத்தோடே இருப்பார். 'நம்பினார், இனி பயமில்லை.பணம் கைக்கு வந்தாச்சு. நாம லட்சாதிபதிகளாயிட்டோம்' என்று பிரபு சந்தோஷமாக சொல்லும் போது கூட அதை முழுவதும் ஏற்றுக் கொள்ள முடியாத பயத்தோடேயே அசட்டுத்தனமாக சிரிப்பார். ஜெய்கணேஷின் மகளாக நடித்திருப்பவர் முன்னர் பேபி அஞ்சு'வாக இருந்தவர் என்பதை சில பல முறைக்குப் பிறகுதான் கண்டுகொள்ள முடிந்தது.

படத்தின் இசை இளையராஜா. 'ஆகாய வெண்ணிலாவே' என்கிற பாடல் எப்போதுமே எனக்குப் பிடித்தமானது. இந்தப்பாடலில் இறுதியாக வரும் பல்லவியில் பிரபுவின் நடன உடலசைவு விநோதமாகவும் பிடித்தமானதாகவும் இருக்கும். 'தாயறியாத தாமரையோ' என்கிற இன்னொரு பாடலும் சிறப்பானது. ராஜாவின் சோதனை முயற்சியின் அடையாளங்களுள் ஒன்று. இதைப் பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். மனோவின் குரலில் ஆரம்பிக்கும் 'மெலடியான' பல்லவிக்கு முரணாக சரணம் வேகமான தாள அசைவில் இருக்கும். பல்லவியும் சரணங்களும் வேறு வேறு பாணியில் இருக்கும் பிரத்யேகமான பாடலிது. ஃபாசில் இந்தப் பாடலை சூழலுக்கேற்றவாறு சிறப்பாக பயன்படுத்தியிருப்பார்.

சில பல வருடங்கள் கழித்து இத்திரைப்படத்தை சமீபத்தில் காணும் போதும் ஏறத்தாழ பதின்மங்களில் அடைந்த அதே மனஉற்சாகத்தை அடைந்தேன்.

suresh kannan