Thursday, July 28, 2011

மதிய நேர நாய் பிழைப்பு (DOG DAY AFTERNOON)இந்தச் சுமாரான படத்தைப் பற்றி எழுத ஒரே ஒரு காரணம் - அல்பசினோ.

இரண்டு அமெச்சூர் குற்றவாளிகளால் 1972-ல் ப்ரூக்ளின் நகரில் நிகழ்ந்த வங்கிக் கொள்ளை முயற்சியான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படமிது.

ஒரு மதிய நேரத்தின் சாவகாசமான காட்சிகளோடு துவங்குகிறது திரைப்படம். ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு தனது இரு நண்பர்களோடு நுழைகிறார் அல்பசினோ. (சன்னி). துவக்கத்திலேயே ஒருவன் பயந்து ஓடிவிட, அதீத பதட்டத்தோடு தனது சாகசத்தை தொடர்கிறார் அல்பசினோ. அதிலிருந்து படம் முழுவதும் அவர் ராஜ்ஜியம்தான். வங்கியில் பணமில்லாததைக் கண்டு எரிச்சலடைவதும் வங்கி ஊழியர்களை கருணையுடன் மிரட்டுவதும் (?!) அதீத ஜாக்கிரதையாய் இருந்தும் சில நிமிடங்களிலேயே காவல்துறை வங்கிக் கட்டிடத்தை சூழ்ந்து கொண்டதைக் கண்டு புரியாமல் பயப்படுவதும், எல்லாமே சொதப்பினாலும்.. ஏதோவொரு நம்பிக்கையில்அங்கிருந்து தப்பிப்பதற்கான முயற்சிகளை தனது அரைகுறை நம்பிக்கைத் தோழனுடன் முயல்வதும்...படம் முழுக்க தனது முத்திரையை அழுத்தமாக பதித்திருக்கிறார் அல்பசினோ. அவருக்கென்ற உருவாக்கப்பட்ட பாத்திரம் போல் கச்சிதமாக நிகழந்திருக்கிறது உண்மைச் சம்பவம். பிரதான பாத்திரத்தின் அக உணர்வுகளை துளிக்கூட குறையாமல் பார்வையாளர்களுக்கு கடத்த முயல்வது ஒரு சிறந்த கதைசொல்லியின் அடிப்படை தகுதி. நடிகரும் இயக்குநரும் கைகோர்த்துக் கொண்டு இதை சாதித்திருக்கிறார்கள்.

சீரியஸான பாவனையில் இயங்கும் இந்தப் படத்தை பல இடங்களில் சிரித்துக் கொண்டே பார்க்கலாம். அல்பசினோவின் பதட்டம் நமக்குச் சிரிப்பையும் பரிதாபத்தையும் ஒருசேர வழங்குகிறது. இந்த உணர்வையே வங்கி ஊழியர்களும் அடைந்திருக்கலாம். ஏனெனில் நம்பவே முடியாதபடி அந்த ஊழியர்களும் கொள்ளையர்களுடன்.. மன்னிக்க கொள்ளையடிக்க முயன்ற இந்தக் காமெடியர்களுடன் ஒத்துழைத்துச் செல்கிறார்கள். இது உண்மைச் சம்பவமாக இல்லாதிருந்தால்... 'என்னய்யா, லாஜிக்கே இல்லையே' என்று புறக்கணித்துச் சென்றிருக்கலாம். "I'm supposed to hate you guys [Wojtowicz/Naturile], but I've had more laughs tonight than I've had in weeks. We had a kind of camaraderie." என்கிறருக்கிறார் உண்மைச் சம்பவத்தை எதிர்கொண்ட வங்கியின் மேனேஜர். 12 ANGRY MEN போன்ற படத்தை இயக்கிய, Sidney Lumet இந்தப்படத்தை அதிக பட்ச நம்பகத்தன்மையுடன் உருவாக்கியிருக்கிறார். மதியத்தில் துவங்கி நள்ளிரவைக் கடந்து முடியும் இத்திரைப்படத்தின் இயங்கும் காலம் மிகச் சீராக பின்பற்றப்பட்டிருக்கிறது. ஒப்பனையும் கூட.

அலபசினோவின் ரசிகர்கள் கொண்டாடும்/கொண்டாட வேண்டிய படமிது.


தொடர்புடைய பதிவுகள்:

பெண் (நறுமண) வாசனையும் அல்பசினோவும்


ஒரே அறையில் எடுக்கப்பட்ட முழுத் திரைப்படம்

suresh kannan

Tuesday, July 19, 2011

மானசரோவர் - அசோகமித்திரன் - கசப்பின் ருசிமருத்துவக் காரணங்களுக்காகவோ, உடல் ஆரோக்கியத்திற்காகவோ வேப்பிலைக் கொழுந்து போன்ற கசப்பான வஸ்துவை சாப்பிட நேருபவர்களைக் கவனித்தால் முதலில் அந்த கசப்பை எண்ணி விகாரமாக முகஞ்சுளிப்பார்கள். நாக்கு அந்த கசப்பை அனுபவிப்பதற்கு முன்பே மனம் அனுபவித்து அதை நிராகரிக்கத் துடிக்கும். ஆனால் மிகுந்த சிரமத்திற்குப் பிறகு மென்று தின்ன ஆரம்பித்து பழகினவுடன நாளடைவில் அதே மனம் அந்த கசப்பின் ருசிக்காக ஏங்க ஆரம்பித்து விடும். உடல் மீது விழும் அடிகளினால் வலி தாங்காமல் அலறும் மனம், ஒரு கட்டத்தில் அடுத்த அடியை ஆவலுடன் எதிர்பார்க்கும் இச்சையை நோக்கி நகர்ந்து விடும். அசோகமித்திரனின் எழுத்து இம்மாதிரியான கசப்பின், வன்முறையின் ருசியைக் கொண்டிருக்கிறது. பொதுவாக அசோகமித்திரனின் எழுத்து மென்மையானதுதானே என்கிற கருத்தைக் கொண்டிருப்பவர்கள், அ.மி.யின் மானசரோவர் புதினத்தை வாசிக்க நேர்ந்தால் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள நேரலாம். அந்தளவிற்கு ஒரே அமர்வில் வாசித்து முடிக்க முடியாத மனஉளைச்சலை தந்தது மானசரோவர். அப்படி எதற்கு வாசித்து தொலைய வேண்டும் என்று கருதுபவர்கள், இந்தப் பத்தியை முதலிலிருந்து மீண்டும் வாசிக்கவும்.

அ.மியின் 'கரைந்த நிழல்கள்' சினிமா உலகின், திரைக்குப் பின் இயங்கும் உலகத்தை பருந்துப் பார்வையில் சித்தரித்தது என்றால், மானசரோவர் ஒரு நடிகன் மற்றும் ஒரு கதாசிரியரின் அக உலகை, விநோதமான உறவை மிக நெருக்கமாக முன்வைக்கிறது. வடக்கில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கும் இந்தி நடிகன் சத்யன்குமார், தமிழகத் திரையில் சொற்ப ஊதியத்திற்கு மல்லுக்கட்டும் கதாசிரியன் கோபாலனுக்கு 'கூஜா தூக்கியாவது' பணிபுரிய விரும்புகிறான். இருவரின் பார்வையில் மாறி மாறிப் பயணம் செய்யும் புதினம், சுய விசாரணைகளின் மூலம் அவரவர்களின் அந்தரங்கங்களை ஆழமாக வாசகன் முன் வைக்கிறது. முள்கீரிடம் அணிந்திருக்கும் பிரபலங்களின் இருப்பியல் பிரச்சினைகளை சத்யன்குமாரின் பாத்திரம் அசலாக சித்தரிக்கிறது. ஆயிரம் நபர்களின் நடுவிலும் தனியனாய் உணரும் அவன், காரணமேயில்லாமல் கோபாலனை பார்த்த கணத்திலிருந்தே விசித்திரமான வசீகரத்தால் ஈர்க்கப்படுகிறான். சதய்ஜித்ராய் இயக்கி உத்தம் குமார் மிக அருமையாக நடித்த 'நாயக்' திரைப்படம் அடிக்கடி நினைவில் வந்து போனது.

மறுபுறம் ஒரு கீழ்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கோபாலன், தன் வாழ்வின் அன்றாடச் சிக்கல்களோடும் தத்துவம் சார்ந்த சிந்தனைகளோடும் வாழ்கிறான். சமயங்களில் சத்யன்குமாரின் துரத்தல்கள் அவனுக்கு எரிச்சலாகவே தோன்றுகிறது. அகம் சார்ந்த விசாரணையும் ஆன்மீகம் என்கிற புள்ளியும் இருவரையும் இணைக்கிறது.

இந்தப் புதினம் இருவரின் பார்வையில் மாறி மாறி பயணித்தாலும் தொடர்ச்சியின் இழை எங்கும் அறுபடாமல் இயல்பாய் அமைக்கப்பட்டிருக்கிறது. சமயங்களில் வணிகத் தொடர்கதைகளின் 'சிறுதிடுக்கிடல்' பாணி கூட பின்பற்றப்பட்டிருக்கிறது. பின்னோக்கு சம்பவங்களில் கூட எவ்வித தருக்கப் பிழைகள் கூட அல்லாத பிரக்ஞையோடு எழுதப்பட்டிருக்கிறது. நடிகை ஜெயசந்திரிகாவின் அம்மா போன்ற சிறுபாத்திரங்களைக் கூட நுட்பமான விவரணைகளுடன் வாசகனுக்கு மிக கச்சிதமாக அறிமுகப்படுகிறார் ஆசிரியர்.

அசோகமித்திரனின் மிக முக்கியமான புதினங்களுள் ஒன்று 'மானசரோவர்'

suresh kannan