Saturday, December 16, 2006

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா

சென்னையின் 4வது சர்வதேச திரைப்பட விழா, எனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்தவரின் அபான வாயு சத்தத்துடன் இனிதே துவங்கியது. "துட்டு கொடுத்து டிக்கெட் வாங்கிட்டோம். "மேற்படி" சீன்லாம் இருக்குமில்ல" என்று புலம்பிக் கொண்டிருந்த ஒருவரிடம் "மச்சான் கடவுள் நம்மள அப்படியெல்லாம் சோதிக்க மாட்டாரு, கவலப்படாத" என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார் அவரது நண்பர். இந்திய சென்சார் இல்லாமல் திரையிடப்படும் இம்மாதிரியான சர்வதேச திரைப்படங்களில் கட்டற்ற பாலுறவுக் காட்சிகள் மிகுந்திருக்கும் என்கிற அற்பமான எண்ணத்துடன் வருபவர்கள், பதிலாக நீலப்பட குறுந்தகடுகளை நாடிப் போவது அவர்களது "நோக்கம்" முழுமையாக நிறைவேற ஏதுவாக இருக்கும். சுஜாதாவின் 'பிலிமோத்ஸவ்' என்கிற, சிறந்த சிறுகதைகளின் வரிசையில் சேர்க்கக்கூடிய ஒன்றுதான் என் நினைவுக்கு வருகிறது. திரைப்படவிழாவில் "பலான' நிழல் காட்சிகளுக்காக அலைபாய்ந்து ஏமாந்து திரும்பும் ஒருவன், ஒரு விடுதி வாசலில் நிஜமான பெண்கள் தொடர்புக்காக அணுகப்படும் போது பயந்து போய் விலகி ஓடுவான். மனித மனத்தின் உள்ளார்ந்த வேட்கையையும், மாறான பாசாங்கையும் பகடி செய்யும் கதை அது.

முன்னமே அல்லாமல் விழா நாளன்று அரங்க வாசலிலேயே நுழைவுச் சீட்டுகளுக்காக பதிவு செய்து கொள்ளமுடியும் என்று உட்லண்ஸ் தியேட்டருக்கு மாலை 6.30 மணிக்கு சென்றவனுக்கு, மறுநாள் காலையில்தான் பதிவு செய்ய முடியும் என்ற தகவல் அதிர்ச்சி அளித்தது. எனினும் அமைச்சர் தயாநிதிமாறன் விழாவை துவக்கி வைத்து சென்றதும், பதிவு செய்யாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்படக்கூடும் என்று விழா அமைப்பாளர் ஒருவர் சொன்னதில், அகதிகள் போல் சிலர் காத்திருந்தோம். தமிழக்த்தில் விழாவை தொடக்கி வைப்பதில் நல்லி குப்புசாமியோடு, தயாநிதிமாறன் போட்டி போடுகிறார் போலும். எனவே இவர் உளறிக் கொட்டுவதை கவனிக்க வேண்டிய துர்ப்பாக்கியத்தில் இருந்து தப்பியதை நினைத்து ஆசுவாசமாக இருந்தது. காத்திருந்த நேரத்தில், பளபளப்பான சுகாசினி உள்ளே போக, எஸ்.வி.சேகர் கொடுத்த ஒரு சாமியார் படத்தை அர்ச்சனா பயபக்தியோடு கண்ணில் ஒற்றிக் கொண்டு காரில் ஏறி கிளம்பினதை கவனிக்க முடிந்தது.

()

Photobucket - Video and Image Hosting

சமகால ஸ்பானிய இயக்குநர்களில் குறிப்பிடத்தகுந்தவரான பெட்ரோ அல்மோதோவர் இயக்கிய "VOLVER" (2006) (ஆங்கிலத்தில் Coming Back என்கிற அர்த்தம் வரும்படியான) ஸ்பெயின் நாட்டு படம் திரையிடப்பட்டது. மூன்று தலைமுறை பெண்களின் வாழ்க்கையை தொட்டுச் சென்றிருக்கும் இந்தப்படம் ஆணாதிக்க சமூகத்தின் நெருக்கடிகளை மிகுந்த மனஉறுதியுடன் தாங்குவதையும், நெருக்கடி எல்லை மீறிப் போகும் போது ஆவேசப்படுவதையும் மிகுந்த அழகியலுடனும், திறமையான திரைக்கதை உத்தியுடனும் சொல்கிறது.


Photobucket - Video and Image Hosting

சகோதரிகளான ராய்முண்டாவும் (Penelope Cruz) சோல்டாடும் (Lola Duenas), Raimunda-வின் மகளான பவுலாவும் (Yohana Cobo), தீ விபத்தில் கிராமத்தில் இறந்து போன பெற்றோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்வதில் படம் ஆரம்பிக்கிறது. பின்னர் அவர்களின் அத்தையை பார்க்கச் செல்கிறார்கள். மிகவும் வயதான நோய்வாய்ப்பட்ட அவர் யார் துணையுமின்றி தனியாக இருப்பதையும் சுவையான தின்பண்டங்கள் செய்து வைத்திருப்பதையும் வியக்கிறார்கள். ஆனால் அவரோ இறந்த போன இவர்களின் தாய்தான் அவரை கவனித்துக் கொள்வதாக சொல்கிறார். நோய் காரணமாக அவர் உளறுகிறார் என யூகித்துக் கொள்கின்றனர். ராய்முண்டா வீடு திரும்பும் போது வேலையை விட்டு வந்திருக்கிற கணவன் பீர் குடித்த படி சாக்கர் விளையாட்டை ரசித்துக் கொண்டிருக்கிறான். இருவருக்கும் வாதம் ஏற்படுகிறது. மகள் பவுலாவை தொடைகளுக்கிடையில் உற்றுப்பார்ப்பது, குளிக்கும் போது எட்டிப் பார்த்து செல்வது என்று விநோதமாக நடந்து கொள்கிறான்.

ராய்முண்டா ஒரு நாள் பணிமுடிந்து திரும்பும் போது பேருந்து நிலையத்திலேயே தன் மகள் குற்ற உணர்ச்சியோடும் கலக்கத்தோடும் காத்திருப்பதை கவனிக்கிறாள். அவளை விசாரித்துக் கொண்டே வீட்டுக்குள் நுழையும் போது தன் கணவன் கத்தியால் குத்தப்பட்டு இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைக்கிறாள். பவுலாவின் மீது பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியின் போது அவன் பவுலாவினால் குத்தப்பட்டு இறந்தான் என்பது தெரிகிறது. இந்தக் குற்றத்தை தான் சமாளித்துக் கொள்வதாக கூறும் ராய்முண்டா, பக்கத்தில் உள்ள விற்கப்படும் சூழலில் உள்ள ஒரு உணவகத்தின் குளிர்பதனப் பெட்டியில் பிணத்தை மறைத்து வைக்கிறாள். இறந்தவன் பவுலாவின் உண்மையான தந்தை அல்ல எனவும் இதைப் பற்றி பின்னர் சொல்வதாகவும் கூறுகிறாள்.

இதற்கிடையில் அவளது கிராமத்து அத்தை இறந்து போன செய்தி சகோதரி சோல்டாட் மூலமாக தெரிய வருகிறது. ராய்முண்டா தன்னால் வரமுடியாது என்று உறுதியாக தெரிவித்துவிடுவதால், பிணங்களை கண்டாலே பயப்படக்கூடிய சோல்டாட் தான் மாத்திரம் அத்தையின் சாவிற்கு செல்கிறாள். அங்கே பக்கத்து வீட்டுக்காரியான அஜிஸ்டினா, (Blanca Portillo) அவளுக்கு அனுசரணையாக இருப்பதோடு, சோல்டாடின் இறந்து போன தாய் அவ்வப்போது கிராமத்துக் காரர்களின் கண்களில் தென்படுவதாக தெரிவிக்கிறாள். வீடு திரும்பும் சோல்டாட், தன் காரின் பின்பக்கத்திலிருந்து சத்தம் வருவதை கண்டு பயந்து போகிறாள். நோய்வாய்ப்பட்டிருந்த அத்தையை, இத்தனை நாள் கவனித்துக் கொண்டிருந்ததாகச் சொல்லும் அவளது தாய்தான் (Carmen Maura) காரில் ஒளிந்து வந்தததாகச் சொல்கிறாள். தான் நடத்தும் பியூட்டி பார்லருக்குள் தன் தாயை உதவியாளராக ரகசியமாக வைத்துக் கொள்கிறாள் சோல்டாட்.

கிராமத்தில் பக்கத்து வீட்டுக்காரியாக இருந்த அஜிஸ்டினா, கான்சர் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து பார்க்கச் செல்லும் போது, அவள் தன் தாயைப் பற்றி "உயிருடன் இருக்கிறாளா, ஆவியாக அலைகிறாளா" என்கிற கேள்வியின் மூலம் குழப்பமடைகிறாள். அஜிஸ்டினாவின் தாய்க்கும் ராய்முண்டாவின் தகப்பனுக்கும் பாலுறவு தொடர்பு இருந்ததையும், ராய்முண்டாவின் பெற்றோர் தீ விபத்தில் இறந்து போன அதே நாளன்று அஜிஸ்டினாவின் தாயும் காணாமற் போன விநோததத்தைப் பற்றியும் விசாரிக்கிறாள். கணவனின் பிணத்தை ஒரு நதிக்கரையினில் புதைத்து விட்டு சகோதரியின் வீட்டிற்கு வரும் ராய்முண்டா, யாரோ அங்கே ரகசியமாக நடமாடுவதை கவனிக்கும் போது தன் தாய் அங்கே ஒளிந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறாள்.

()

பின்னர் தாயும் மகளும் பேசிக் கொள்கிற உரையாடல்கள் மூலமே பார்வையாளர்களான நமக்கு பல விளக்கங்கள் கிடைக்கின்றன. ராய்முண்டாவின் தகப்பனே அவளை கற்பழித்து அதன் மூலம் பிறக்கிற குழந்தைதான் பவுலா. ஒரு வகையில் அவளுக்கு மகளும் சகோதரியுமாக என்று விநோதமான உறவுமுறையுடன் இருக்கிறாள் பவுலா. ராய்முண்டாவின் தகப்பன், பக்கத்து வீட்டுக்காரியான அஜிஸ்டினாவின் தாயுடனும் முறையான பாலுறவு தொடர்பை வைத்திருக்கிறான். இந்த விஷயங்களை ஒருசேர அறிந்து கொள்கிற ராய்முண்டாவின் தாய், இருவரும் தனியாக இருந்த நிலையில் தீ வைத்து கொளுத்தி விடுகிறாள். ஆனால் ஊரார் அவள்தான் இறந்து விட்டதாக நம்புகின்றனர். இதை சாதமாக்கிக் கொண்டு நோயாளி சகோதரியின் வீட்டில் மறைந்து வாழ நேரிடுகிறது. தகப்பனால் கற்பழிக்கப்பட்ட ராய்முண்டா அந்த சூழ்நிலையை வெறுத்து விலகி வாழ்ந்து வந்ததால் இதைப் பற்றி அறிந்து கொள்ள முடியாமற் போகிறது. கேன்சர் நோயாளியான அஜிஸ்டினாவிற்கு உதவி செய்ய முடிவெடுத்திருப்பதாக ராய்முண்டாவின் தாய் சொல்வதோடு படம் நிறைகிறது.

()

ராய்முண்டாவின் தாய், உயிரோடுதான் இருக்கிறாளா, ஆவியாக அலைகிறாளா என்பதை பூடகமாகவே சொல்லியிருக்கிறார் இயக்குநர் அல்மோதோவர். மையக் கதாப்பாத்திரமான ராய்முண்டாவாக Penelope Cruz அருமையாக நடித்திருக்கிறார். ஒரு கொலை நிகழ்வான நெருக்கடியான நேரத்தில் அதை அற்புதமான எதிர்கொள்ளும் இவரது முகபாவங்கள் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன. பிரேதத்தை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது அழைப்பு மணியடிக்கும் பக்கத்து ரெஸ்டாரண்ட் உரிமையாளர், ராய்முண்டாவின் கழுத்துப் பகுதியில் இருக்கும் ரத்தக்கறையைப் பற்றி விசாரிக்கும் போது "Woman's Trouble" என்று சமாளிக்கிறாள். உடலுறவுக்கு அழைக்கிற கணவனை புறக்கணிக்கும் போது, அவன் கரமைதுனத்தின் மூலம் தன்னை திருப்திபடுத்திக் கொள்கிறான். பிரேததத்தை மறைக்க உதவி செய்வதற்காக தன் செக்ஸ் தொழிலாளியான தோழியை அணுகி அவளுடைய இரவு சம்பாத்தியத்தை தான் தருவதாக சொல்லும் போது "என்னுடைய யோனியின் மீது உனக்கு விருப்பமிருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்கிறாள் நகைச்சுவையாக.

இந்தப்படம் கானஸ் திரைப்பட விருது, ஐரோப்பிய திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றிருக்கிருக்கும் இந்தப்படம் எனக்கு சுஜாதாவின் சிறுகதை ஒன்றை நினைவுப்படுத்துகிறது. தாயும் மகளும் எழுதிக் கொள்ளும் கடிதங்கள் மூலம் அமைந்திருக்கும் அந்தச் சிறுகதை, கணவனால் கொடுமைப்படுத்தப்படுகிற மகளுக்கு மெல்லக் கொள்கிற வேதியியில் பொருள் ஒன்றை பரிந்துரைப்பதாக அமையும். ஏற்கெனவே தன் கணவனின் மீது அதை பிரயோகப்படுத்தியிருப்பதாக வெளிப்படும் அதிர்ச்சியான முடிவுடன் அந்தப் படைப்பு வெளியான போது பலத்த கண்டனத்திற்கு உள்ளானது.

Photobucket - Video and Image Hosting

பெட்ரோ அல்மோதோவர் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ஒரு கட்டுரை.

Monday, December 04, 2006

மக்கள் தொலைக்காட்சியில் விருதுத் திரைப்படங்கள்

மக்கள் தொலைக்காட்சயில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இரவு 8.00 மணிக்கு விருது பெற்ற சிறந்த திரைப்படங்களின் வரிசை ஒளிபரப்பாவதை உங்களில் எத்தனை பேர் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை. டி.ராஜேந்தரின் கர்ணகடூரமான குரலில் பாடின, எல்.கே.ஜி படிக்கும் போது உபயோகப்படுத்தின உடையை மறந்து போகாமல் பழைய பாசத்துடன் அதே உடையை அணிந்து கொண்டு நயனதாரா ஆடின "யம்மாடி ஆத்தாடி"-யை 108-வது தடவையாக சலிக்காமல் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் இம்மாதிரியான படங்களின் தேடல்களைக் கொண்டிருப்பவர்களுக்கு என் பாராட்டுகள்.

Antarjali Yatra (1987) - பயணத்திற்கு அப்பால்

காமல் மஜூம்தார் எழுதின வங்காள நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட கவுதம் கோஷ் என்கிற இயக்குநரால் உருவாக்கப்பட்ட இந்தப் படம், பெண்கள் உடன்கட்டை ஏறுவதைத் தடைசெய்யும் சட்டம் பிரிட்டிஷ் அரசினால் கொண்டுவரப்பட்ட காலகட்டத்தில் 1830-ல் நிகழ்வதான சூழ்நிலையின் பின்னணியுடன் இயங்குகிறது. சீத்தாராம் என்கிற பணக்கார பிராமண கிழவர் இறக்கும் தருவாயில் தொடங்கும் இந்தப்படம், அச்சமயத்தில் நிலவி வந்த (இப்போது மட்டும் என்ன வாழுதாம்!) பழமையில் ஊறிப் போன மூடநம்பிக்கைகளையும் உயர்சாதி இந்துக்கள் வேதங்களை காட்டி தந்திரமாக பிழைத்து வருவதின் குரூரத்தையும் பெண்கள் மனிதர்களாக அல்லாமல் வெறும் பொருளாக மதிக்கப்பட்ட அவலத்தையும் இயல்பாக முன்வைக்கிறது.

கங்கைக் கரையின் மயான தளத்தின் அருகில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் சீதாராம் உயிர் பிரியாமல் இழுத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரின் ஜாதகப்படி அவர் தனியாக மரணிக்கக்கூடாது, துணையுடன்தான் மரணிக்கும் படி அவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது எனவும், அப்போதுதான் அவர் மோட்சத்தை அடைவார் எனவும் ஜோசியர் ஒருவர் சீதாராமின் உறவினர்களுக்கு கூறுகிறார். இறக்கும் தருவாயில் உள்ள சீதாராமிற்கு திருமணம் செய்து வைத்து அவரின் மனைவியும் அவரோடு உடன்கட்டை ஏறினால் இவைகள் நடக்கும் எனவும் போதிக்கிறார். இந்தத் திருமணம் நடந்தால் கிடைக்கப் போகும் தட்சணைதான் அவருக்கு பிரதானமாக இருக்கிறதே ஒழிய தீயில் உயிருடன் கருகப்போகும் ஒரு உயிரைப் பற்றிய எந்தக் கவலையும் அவருக்கில்லை. திருமண வயதைத் தாண்டியும் மணம் செய்து கொடுக்க முடியாமல் வறுமையில் தவிக்கும் ஒரு பிராமணர், இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு தன் மகளுக்கு சீதாராமை திருமணம் செய்து வைக்க முன்வருகிறார். குடும்ப வைத்தியர் இதற்கு சம்மதிக்காமல் விலகிப் போனாலும், ஜோசியரின் மிரட்டலுக்கு பயந்து வாளாவிருக்கிறார்.

அந்த மயானத்தில் பிணங்களை எரிப்பவனாக இருக்கும் பைஜூ (சத்ருகன் சின்கா) இந்த அவலத்தை காணச்சகியாமல் இதைத் தடுக்க முன்வருகிறான். என்றாலும் கீழ்ஜாதியில் பிறந்த அவனின் குரலை கேட்க யாரும் அங்கே தயாராக இல்லை. மயான தளத்திலேயே திருமணம் நடைபெறுகிறது. வரப்போகும் கொடுமையான வாழ்க்கையை நினைத்து மணப்பெண் அழ, (யசோபாய்) கையாலாகாத அந்த தகப்பனோ, சீத்தாதேவி பட்ட துயரங்களை சொல்லி ஆறுதல்படுத்த முனைகிறார். வயதானவருடன் மணப்பெண்ணையும், அவரின் இருமகன்களையும் விட்டுவிட்டு ஊரார் செல்கின்றனர். தந்தையின் சொத்தின் மீதே குறியாக இருக்கும் மகன்கள், அவரின் பணப்பெட்டியின் சாவி கிடைத்தவுடன் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு காணாமற் போகின்றனர்.

தனக்கு கற்பிக்கப்பட்ட நியாயங்களைக் கொண்டு ஆறுதலையடையும் மணப்பெண், கிழவருக்கு பணிவிடை செய்கிறாள். வெட்டியான் பைஜூ இந்த அபத்தமான சூழலில் இருந்து அவளை தப்பிக்கச் சொல்லி அறிவுறுத்துகிறான். ஆனால் ஆணாதிக்க சமூகத்தின் சுயநலத்தால் "கற்பு" எனப்படும் விஷயத்தை சிறுவயது முதலே போதிக்கப்பட்டு வந்த அவள் இதை மறுத்து அவனைத் துரத்தியடிக்கிறாள். என்றாலும் அவனின் அக்கறை குறித்து அவளுக்குள்ளும் ஒரு சலனம் ஏற்படுகிறது. மணப்பெண்ணைக் குறித்து மிகுந்த வேதனைப்படும் பைஜூ அவளை காப்பாற்றுவதாக நினைத்து புத்தி பேதலித்த நிலையில் கிழவரின் உடலைத் தூக்கி கங்கையில் எறியப்போகிறான். பதறிப் போகும் மணப்பெண் அவனை கட்டையால் தாக்குகிறாள். கிழவரின் உடல் மறுபடியும் பைஜூவாலேயே அதே இடத்தில் வைக்கப்படுகிறது.

பைஜூவின் அக்கறை நிறைந்த போதனைகள், மணப்பெண்ணிடம் சலனங்களை ஏற்படுத்தும் நிலையில் இருவரிடமும் மனதளளவில் நெருக்கம் ஏற்படுகிறது. கிழவரின் உடல்நிலை தேறிவரும் நிலையில், இவர்களின் நெருக்கத்தை கண்டு பதறிப்போகும் அவர், "விபச்சாரி" எனத்திட்டித் தீர்க்கிறார். தன்னை மன்னிக்கும்படி கதறியழுகிறாள் மணப்பெண். மறுநாள் மயானக்கரையை வெள்ளம் சூழ்ந்து கொள்கிறது. காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிடும் கிழவரும், மணப்பெண்ணும் நீரில் மூழ்கி இறக்கிறார்கள். மணப்பெண்ணை காப்பாற்ற ஓடின பைஜூ கலங்கிப் போய் நிற்பதுடன் படம் நிறைகிறது.

()

1988-க்கான சிறந்த தேசியவிருது, (சிறந்த வங்காளப்படம்) தாஷ்கண்ட் சர்வதே திரைப்படவிழா விருது உட்பட பல விருதுகளைக் குவித்துள்ள இத்திரைப்படம், முழுக்க முழுக்க மயான தளத்தின் பின்னணிளை மாத்திரம் கொண்டே நகருகிறது. இயல்பான வெளிச்சத்துடன் (available light) படமாக்கப்பட்டிருந்த காட்சிகள் பார்வையாளர்களை திரைப்படம் பார்க்கிற உணர்வை ஏற்படுத்தாமல் நேரிடையாக காண்கிற உணர்வை ஏற்படுத்துகின்றன. படத்தின் ஒரே தெரிந்த முகமான சத்ருகன் சின்னா வெட்டியான் பைஜூவாக சிறப்பாக நடித்திருக்கிறார். அந்தச் சமயத்தில் இந்தித்திரைப்படத்தின் ஸ்டாராக விளங்கினாலும், இந்த திரைப்பட ஆக்கத்தில் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்ததாக இயக்குநர் கவுதம் கோஷ் இந்தியன் எக் ஸ்பிரஸ் நாளிதழக்கு அளித்த நேர்காணிலின் மூலம் தெரியவருகிறது.

சதிக் கொடுமையை தடுக்க முயல்பவராக பைஜூ சித்தரிக்கப்பட்டிருந்தாலும், அவர் ஒரு கதாநாயகராக காண்பிக்கப்படாமல், நிகழ்வை தடுக்க போதிய திராணி இல்லாதவராகத்தான் செயல்படுகிறார். வைத்தியரிடன் தடுக்கச் சொல்லி கெஞ்சும் போது அவர் தன்னால் முடியாது எனவும் ஜாதிப்பிரஷ்டம் செய்துவிடுவார்கள் எனவும், "ஏன் நீயே போய் போலீஸிடம் சொல்லேன்" என்று நழுவுகிறார். "நான் சொன்னா நம்ப மாட்டாங்க, அடிப்பாங்க. நீங்க படிச்சவங்க" என அவர் கெஞ்சுவதை வைத்தியர் காதில் வாங்காமல் செல்கிறார்.

()

பணம் என்கிற தேவராட்சசனுக்கு முன்னால் சம்பிராதயங்கள், சடங்குகள் எவ்வாறு அர்த்தமிழக்கிறது என்பது இன்னொரு காட்சியில் விளங்குகிறது. மணப்பெண்ணின் தகப்பனாரிடம் ஜோசியர் திருமணத்தின் போது இன்னும் அதிகமான தட்சணை கொடுக்க வற்புறுத்த, யாரும் முன்வராத நிலையில் வெட்டியான் பைஜூ வெள்ளிப் பணத்தை கடனாக தர முன்வருகிறான். தாழ்ந்த சாதிக்காரனிடமா கடன் வாங்குவது என்று அவர் தயங்கும் போது, ஜோசியர் "சடங்குகளை நிறைவேற்ற யாரிடமும் கடன் வாங்கலாம். தங்கம், வெள்ளி போன்ற உலோகங்ளுக்கும் ஜாதி துவேஷம் பொருந்தாது" என்று தனக்கு சாதகமான முறையில் தந்திரமாக சொல்கிறான்.

இன்னொரு காட்சியில் பைஜூ மணப்பெண்ணை தப்பித்துச் சென்றுவிடுமாறு கூறும் போது அவள் "குடிகாரனே"என்று திட்டுகிறார். "மதுவைத் திட்டாதே, அம்மா. அது ஒரு உண்மை விளம்பி" என்கிறார் பைஜூ.

கல்வியறிவு இல்லாத ஒரு வெட்டியானுக்கு இருக்கும் யதார்த்த அறிவும், சமுக அக்கறையும் படித்த பண்டிதர்களிடையே இல்லாதது குறித்த நகைமுரணை இந்தப் படம் ஆரவாரமில்லாமல் தெரிவிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. படத்தின் இடையிடையே காட்டப்படும், கரையில் கட்டப்பட்ட ஒரு படகு அந்த மணப்பெண்ணின் குறியீடாக முன்வைக்கப்படுகிறது. படகு தர்மாவேசத்துடன் தன்னை விடுவித்துக் கொண்டால் ஜலசாகரத்தில் உல்லாசமாக நீந்தி மகிழலாம் எனினும் கற்பு என்னும் கயிற்றால் கட்டி வைக்கப்பட்டிருக்கும் குறியீடாக எனக்குத் தோன்றியது. மேலும் படகின் மீது வரையப்பட்டிருக்கும் இரு கண்கள், கங்கையே மெளன சாட்சியாக இந்த நிகழ்வுகளை கண்டு கொண்டிருந்தது என்றும் தோன்றியது.

()

வணிகசினிமாவை மாத்திரம் பார்க்கிறவர்களுக்கு இத்திரைப்படம் சலிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றாலும் ரசனையுள்ள பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. மற்ற தொலைக்காட்சிகள் வணிகசினிமா என்னும் சேற்றில் உழன்று கொண்டிருக்க, கசிந்து வரும் சுதந்திரக்காற்று போல, மக்கள் தொலைக்காட்சி விருதுத் திரைப்படங்களை ஒளிபரப்ப முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. தமிழ் மொழியின் அடிக்குறிப்புகளில் ஆங்காங்கே எழுத்துப்பிழையும், கருத்துப்பிழையும் இருந்தாலும் ஆங்கில் மொழி தெரியாதவர்களும் கண்டு ரசிக்க ஏதுவாக எடுக்கப்பட்டிருக்கும் இம்முயற்சியும் பாரட்டத்தக்கதே.