Monday, December 04, 2006

மக்கள் தொலைக்காட்சியில் விருதுத் திரைப்படங்கள்

மக்கள் தொலைக்காட்சயில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இரவு 8.00 மணிக்கு விருது பெற்ற சிறந்த திரைப்படங்களின் வரிசை ஒளிபரப்பாவதை உங்களில் எத்தனை பேர் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை. டி.ராஜேந்தரின் கர்ணகடூரமான குரலில் பாடின, எல்.கே.ஜி படிக்கும் போது உபயோகப்படுத்தின உடையை மறந்து போகாமல் பழைய பாசத்துடன் அதே உடையை அணிந்து கொண்டு நயனதாரா ஆடின "யம்மாடி ஆத்தாடி"-யை 108-வது தடவையாக சலிக்காமல் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் இம்மாதிரியான படங்களின் தேடல்களைக் கொண்டிருப்பவர்களுக்கு என் பாராட்டுகள்.

Antarjali Yatra (1987) - பயணத்திற்கு அப்பால்

காமல் மஜூம்தார் எழுதின வங்காள நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட கவுதம் கோஷ் என்கிற இயக்குநரால் உருவாக்கப்பட்ட இந்தப் படம், பெண்கள் உடன்கட்டை ஏறுவதைத் தடைசெய்யும் சட்டம் பிரிட்டிஷ் அரசினால் கொண்டுவரப்பட்ட காலகட்டத்தில் 1830-ல் நிகழ்வதான சூழ்நிலையின் பின்னணியுடன் இயங்குகிறது. சீத்தாராம் என்கிற பணக்கார பிராமண கிழவர் இறக்கும் தருவாயில் தொடங்கும் இந்தப்படம், அச்சமயத்தில் நிலவி வந்த (இப்போது மட்டும் என்ன வாழுதாம்!) பழமையில் ஊறிப் போன மூடநம்பிக்கைகளையும் உயர்சாதி இந்துக்கள் வேதங்களை காட்டி தந்திரமாக பிழைத்து வருவதின் குரூரத்தையும் பெண்கள் மனிதர்களாக அல்லாமல் வெறும் பொருளாக மதிக்கப்பட்ட அவலத்தையும் இயல்பாக முன்வைக்கிறது.

கங்கைக் கரையின் மயான தளத்தின் அருகில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் சீதாராம் உயிர் பிரியாமல் இழுத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரின் ஜாதகப்படி அவர் தனியாக மரணிக்கக்கூடாது, துணையுடன்தான் மரணிக்கும் படி அவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது எனவும், அப்போதுதான் அவர் மோட்சத்தை அடைவார் எனவும் ஜோசியர் ஒருவர் சீதாராமின் உறவினர்களுக்கு கூறுகிறார். இறக்கும் தருவாயில் உள்ள சீதாராமிற்கு திருமணம் செய்து வைத்து அவரின் மனைவியும் அவரோடு உடன்கட்டை ஏறினால் இவைகள் நடக்கும் எனவும் போதிக்கிறார். இந்தத் திருமணம் நடந்தால் கிடைக்கப் போகும் தட்சணைதான் அவருக்கு பிரதானமாக இருக்கிறதே ஒழிய தீயில் உயிருடன் கருகப்போகும் ஒரு உயிரைப் பற்றிய எந்தக் கவலையும் அவருக்கில்லை. திருமண வயதைத் தாண்டியும் மணம் செய்து கொடுக்க முடியாமல் வறுமையில் தவிக்கும் ஒரு பிராமணர், இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு தன் மகளுக்கு சீதாராமை திருமணம் செய்து வைக்க முன்வருகிறார். குடும்ப வைத்தியர் இதற்கு சம்மதிக்காமல் விலகிப் போனாலும், ஜோசியரின் மிரட்டலுக்கு பயந்து வாளாவிருக்கிறார்.

அந்த மயானத்தில் பிணங்களை எரிப்பவனாக இருக்கும் பைஜூ (சத்ருகன் சின்கா) இந்த அவலத்தை காணச்சகியாமல் இதைத் தடுக்க முன்வருகிறான். என்றாலும் கீழ்ஜாதியில் பிறந்த அவனின் குரலை கேட்க யாரும் அங்கே தயாராக இல்லை. மயான தளத்திலேயே திருமணம் நடைபெறுகிறது. வரப்போகும் கொடுமையான வாழ்க்கையை நினைத்து மணப்பெண் அழ, (யசோபாய்) கையாலாகாத அந்த தகப்பனோ, சீத்தாதேவி பட்ட துயரங்களை சொல்லி ஆறுதல்படுத்த முனைகிறார். வயதானவருடன் மணப்பெண்ணையும், அவரின் இருமகன்களையும் விட்டுவிட்டு ஊரார் செல்கின்றனர். தந்தையின் சொத்தின் மீதே குறியாக இருக்கும் மகன்கள், அவரின் பணப்பெட்டியின் சாவி கிடைத்தவுடன் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு காணாமற் போகின்றனர்.

தனக்கு கற்பிக்கப்பட்ட நியாயங்களைக் கொண்டு ஆறுதலையடையும் மணப்பெண், கிழவருக்கு பணிவிடை செய்கிறாள். வெட்டியான் பைஜூ இந்த அபத்தமான சூழலில் இருந்து அவளை தப்பிக்கச் சொல்லி அறிவுறுத்துகிறான். ஆனால் ஆணாதிக்க சமூகத்தின் சுயநலத்தால் "கற்பு" எனப்படும் விஷயத்தை சிறுவயது முதலே போதிக்கப்பட்டு வந்த அவள் இதை மறுத்து அவனைத் துரத்தியடிக்கிறாள். என்றாலும் அவனின் அக்கறை குறித்து அவளுக்குள்ளும் ஒரு சலனம் ஏற்படுகிறது. மணப்பெண்ணைக் குறித்து மிகுந்த வேதனைப்படும் பைஜூ அவளை காப்பாற்றுவதாக நினைத்து புத்தி பேதலித்த நிலையில் கிழவரின் உடலைத் தூக்கி கங்கையில் எறியப்போகிறான். பதறிப் போகும் மணப்பெண் அவனை கட்டையால் தாக்குகிறாள். கிழவரின் உடல் மறுபடியும் பைஜூவாலேயே அதே இடத்தில் வைக்கப்படுகிறது.

பைஜூவின் அக்கறை நிறைந்த போதனைகள், மணப்பெண்ணிடம் சலனங்களை ஏற்படுத்தும் நிலையில் இருவரிடமும் மனதளளவில் நெருக்கம் ஏற்படுகிறது. கிழவரின் உடல்நிலை தேறிவரும் நிலையில், இவர்களின் நெருக்கத்தை கண்டு பதறிப்போகும் அவர், "விபச்சாரி" எனத்திட்டித் தீர்க்கிறார். தன்னை மன்னிக்கும்படி கதறியழுகிறாள் மணப்பெண். மறுநாள் மயானக்கரையை வெள்ளம் சூழ்ந்து கொள்கிறது. காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிடும் கிழவரும், மணப்பெண்ணும் நீரில் மூழ்கி இறக்கிறார்கள். மணப்பெண்ணை காப்பாற்ற ஓடின பைஜூ கலங்கிப் போய் நிற்பதுடன் படம் நிறைகிறது.

()

1988-க்கான சிறந்த தேசியவிருது, (சிறந்த வங்காளப்படம்) தாஷ்கண்ட் சர்வதே திரைப்படவிழா விருது உட்பட பல விருதுகளைக் குவித்துள்ள இத்திரைப்படம், முழுக்க முழுக்க மயான தளத்தின் பின்னணிளை மாத்திரம் கொண்டே நகருகிறது. இயல்பான வெளிச்சத்துடன் (available light) படமாக்கப்பட்டிருந்த காட்சிகள் பார்வையாளர்களை திரைப்படம் பார்க்கிற உணர்வை ஏற்படுத்தாமல் நேரிடையாக காண்கிற உணர்வை ஏற்படுத்துகின்றன. படத்தின் ஒரே தெரிந்த முகமான சத்ருகன் சின்னா வெட்டியான் பைஜூவாக சிறப்பாக நடித்திருக்கிறார். அந்தச் சமயத்தில் இந்தித்திரைப்படத்தின் ஸ்டாராக விளங்கினாலும், இந்த திரைப்பட ஆக்கத்தில் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்ததாக இயக்குநர் கவுதம் கோஷ் இந்தியன் எக் ஸ்பிரஸ் நாளிதழக்கு அளித்த நேர்காணிலின் மூலம் தெரியவருகிறது.

சதிக் கொடுமையை தடுக்க முயல்பவராக பைஜூ சித்தரிக்கப்பட்டிருந்தாலும், அவர் ஒரு கதாநாயகராக காண்பிக்கப்படாமல், நிகழ்வை தடுக்க போதிய திராணி இல்லாதவராகத்தான் செயல்படுகிறார். வைத்தியரிடன் தடுக்கச் சொல்லி கெஞ்சும் போது அவர் தன்னால் முடியாது எனவும் ஜாதிப்பிரஷ்டம் செய்துவிடுவார்கள் எனவும், "ஏன் நீயே போய் போலீஸிடம் சொல்லேன்" என்று நழுவுகிறார். "நான் சொன்னா நம்ப மாட்டாங்க, அடிப்பாங்க. நீங்க படிச்சவங்க" என அவர் கெஞ்சுவதை வைத்தியர் காதில் வாங்காமல் செல்கிறார்.

()

பணம் என்கிற தேவராட்சசனுக்கு முன்னால் சம்பிராதயங்கள், சடங்குகள் எவ்வாறு அர்த்தமிழக்கிறது என்பது இன்னொரு காட்சியில் விளங்குகிறது. மணப்பெண்ணின் தகப்பனாரிடம் ஜோசியர் திருமணத்தின் போது இன்னும் அதிகமான தட்சணை கொடுக்க வற்புறுத்த, யாரும் முன்வராத நிலையில் வெட்டியான் பைஜூ வெள்ளிப் பணத்தை கடனாக தர முன்வருகிறான். தாழ்ந்த சாதிக்காரனிடமா கடன் வாங்குவது என்று அவர் தயங்கும் போது, ஜோசியர் "சடங்குகளை நிறைவேற்ற யாரிடமும் கடன் வாங்கலாம். தங்கம், வெள்ளி போன்ற உலோகங்ளுக்கும் ஜாதி துவேஷம் பொருந்தாது" என்று தனக்கு சாதகமான முறையில் தந்திரமாக சொல்கிறான்.

இன்னொரு காட்சியில் பைஜூ மணப்பெண்ணை தப்பித்துச் சென்றுவிடுமாறு கூறும் போது அவள் "குடிகாரனே"என்று திட்டுகிறார். "மதுவைத் திட்டாதே, அம்மா. அது ஒரு உண்மை விளம்பி" என்கிறார் பைஜூ.

கல்வியறிவு இல்லாத ஒரு வெட்டியானுக்கு இருக்கும் யதார்த்த அறிவும், சமுக அக்கறையும் படித்த பண்டிதர்களிடையே இல்லாதது குறித்த நகைமுரணை இந்தப் படம் ஆரவாரமில்லாமல் தெரிவிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. படத்தின் இடையிடையே காட்டப்படும், கரையில் கட்டப்பட்ட ஒரு படகு அந்த மணப்பெண்ணின் குறியீடாக முன்வைக்கப்படுகிறது. படகு தர்மாவேசத்துடன் தன்னை விடுவித்துக் கொண்டால் ஜலசாகரத்தில் உல்லாசமாக நீந்தி மகிழலாம் எனினும் கற்பு என்னும் கயிற்றால் கட்டி வைக்கப்பட்டிருக்கும் குறியீடாக எனக்குத் தோன்றியது. மேலும் படகின் மீது வரையப்பட்டிருக்கும் இரு கண்கள், கங்கையே மெளன சாட்சியாக இந்த நிகழ்வுகளை கண்டு கொண்டிருந்தது என்றும் தோன்றியது.

()

வணிகசினிமாவை மாத்திரம் பார்க்கிறவர்களுக்கு இத்திரைப்படம் சலிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றாலும் ரசனையுள்ள பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. மற்ற தொலைக்காட்சிகள் வணிகசினிமா என்னும் சேற்றில் உழன்று கொண்டிருக்க, கசிந்து வரும் சுதந்திரக்காற்று போல, மக்கள் தொலைக்காட்சி விருதுத் திரைப்படங்களை ஒளிபரப்ப முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. தமிழ் மொழியின் அடிக்குறிப்புகளில் ஆங்காங்கே எழுத்துப்பிழையும், கருத்துப்பிழையும் இருந்தாலும் ஆங்கில் மொழி தெரியாதவர்களும் கண்டு ரசிக்க ஏதுவாக எடுக்கப்பட்டிருக்கும் இம்முயற்சியும் பாரட்டத்தக்கதே.

12 comments:

வன்னியன் said...

மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
மக்கள் தொலைக்காட்சியின் இச்சேவையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

வன்னியன் said...

வன்னியன் என்ற பேரில் முதற்பின்னூட்டம் வந்துவிட்டது.
சில அரைகுறைகள் இது 'ராமதாசின் வன்னியன்' என்று விளங்கிக்கொண்டு ஏதும் சொல்லவிடப்போகிறார்கள். (எற்கனவே சிலமுறை நடந்ததுதான்.)
அதனால்தான் ஒரு தெளிவுக்காக இந்தப்பின்னூட்டம்.

இது வேற வன்னியன்.
;-)

Anonymous said...

இத் தொலைக்காட்சிச் சேவை பற்றி துக்ளக்கில் ;சிறப்பாகக் கூறியிருந்தது. செய்மதி மூலம் இங்கெல்லாம் பரவுமென நிலைக்கவில்லை.
மசாலாச் சினிமா இல்லா தொலைக்காட்டியாமே!!!!நன்மக்கள் பார்க்க வேணுமே!!
யோகன் பாரிஸ்

Haranprasanna said...

படத்தின் ஆரம்பக் காட்சிகள் வெகு சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. படத்தோடு இயைந்து ஒலிக்கும் பின்னணி இசை படத்தின் பரிமாணத்தைப் பலமடங்கு கூட்டிவிட்டது. ஆனால் சத்ருகன் சின்ஹாவின் தேர்வை நான் ஏற்கவில்லை. வேறு நடிகர் யாரையாவது போட்டிருக்கலாம். அவர் சிறப்பாக நடித்திருந்தார் என்பதில் ஐயமில்லை. "கருவேலம்பூக்கள்" படத்தில் ராதிகா போல இப்படத்தில் சத்ருகன் சின்ஹாவின் உடல் நிறம் ஒத்துழைக்கவில்லை. அந்தக் கிழவர் ஏன் கங்கை நதிக்கரையில் தனித்து விடப்படுகிறார் என்பது விளக்கப்படவில்லை. ஆரம்பக் காட்சிகளில், அவர் உயிரிழக்கக்கூடும் என்று அவசரப்பட்டு அங்கு அழைத்துவரப்படுகிறார் என்று ஜோதிடரும் மருத்துவரும் சொல்லிக்கொள்கிறார்கள். பின் அவர் உடல்நிலை தேறத் தொடங்கியதும் அவரும் மணப்பெண்ணும் ஏன் அங்கேயே தனித்துவிடப்படுகிறார்கள் என்பதில் தெளிவில்லை. வெட்டியான் ஒருவன் இத்தனை கேள்விகளுடனும் தர்க்கங்களுடன் படைக்கப்பட்டிருப்பதே ஒரு யதார்த்தம் மீறிய புனைவுதான். அதுவும் கதை நடப்பதாகச் சொல்லப்படும் காலகட்டத்தில். ஆனால் அந்த சுதந்திரம் இயக்குநருக்கு இருப்பதை ஒத்துக்கொள்ளவேண்டும்.

வெட்டியானுக்கும் அந்த மணப்பெண்ணும் இருக்கும் நெருக்கம் மனதளவில் மட்டுமா இல்லை உடலளவிலுமா என்பது பூடகமாக விடப்பட்ட விஷயம். நான் உடலளவிலும் இருந்தது என்றே எடுத்துக்கொள்கிறேன். அவர்கள் இருவரும் தனித்துக்கிடக்கும் இரவுக்கு மறுநாள் காலை அந்த மணமகள் கங்கையில் தலைமுழுகக் குளிக்கிறாள். அந்தக் கிழவரைப் பார்க்கும்போது அவளுக்கு ஒரு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. மேலும் வெட்டியான் அவளைப் பார்க்கும் அடுத்த காட்சியில் அவளை "காம சொரூபிணி" என்கிறான். அப்போது அந்த மணப்பெண் வெட்டியானை நோக்கி, "இன்று ஒருநாள் இரவு காத்திரு" என்கிறாள். கடைசியில் அவளை வேசி என்றும் விபசாரி என்றும் கிழவர் திட்டும்போது அவள் மன்னியுங்கள் என்று அழுகிறாள். இவற்றையெல்லாம் பார்க்கும்போது அவள் அவனிடம் உடலளவில் தன்னை இழந்திருக்கவேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

பல விஷயங்களைப் பூடகமாக விட்டிக்கும் இயக்குநர், முடிவை ஒரு கங்கையின் வெள்ளத்தில் கரைத்திருப்பது ஏற்கமுடியாததாக உள்ளது. பல பிரச்சினைகளைக் காட்டிவிட்டு யதார்த்தம் என்கிற போர்வையில் ஒரு வெள்ளத்தில் படத்தை முடிப்பதை எப்படி ஏற்கமுடியும்?

உயர்ஜாதி ஹிந்துக்களின் ஜாதி வேஷத்தைக் காட்டும் காட்சி நாடகத்தனையுடன் கூடியது. அதற்கு முன்னரே பல காட்சிகள் உயர்ஜாதி ஹிந்துக்களின் ஜாதி வேஷத்தையும் பணத்தின் மீதான மோகத்தையும் தன் காரியத்தை நிறைவேற்றிக்கொள்ள கடவுளின் பெயரைத் துணைக்குத் தேடுவதையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகின்றன. குறிப்பாக, அந்தக் கிழவரை மணம் செய்துகொள்ள தன் மகளைத் தேர்வு செய்யும் பிராமணர், ஜோதிடரைத் தனக்கு உதவுமாறு நிர்ப்பந்திக்கிறார். வெட்டியான் பின்னொரு காட்சியில் அந்தப் பெண்ணின் தந்தைக்குப் பல வெள்ளியும் பொன்னும் கிடைக்குமெனக் காரணம் கூறுகிறான். மணம் செய்விக்கும் பிராமணர்களுக்கும் பொன்னும் வெள்ளியும் கிடைக்குமெனச் சொல்லப்படுகிறது. இப்படிப் பல காட்சிகளில் வேதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் ஏமாற்றிப் பிழைக்கும் உயர்சாதி ஹிந்துக்களின் தோற்றங்கள் இயல்பாகக் காண்பிக்கப்பட்டுவிட, வெட்டியானிடமே காசு கேட்பதாகக் காட்டப்படும் காட்சி நாடகத்தன்மையைத் தன்னுள் கொண்டுவிடுகிறது. அதிலும் அந்த வெட்டியான் காசை வீசி எறிந்துவிட்டுச் சென்றுவிட, அத்தகப்பனார் காசைக் குனிந்து எடுக்கிறார். கேமரா அந்தக் காசையும் அதை எடுக்க முயலும் அத்தகப்பனின் கையையும் காட்டுகிறது. இது நாடகக் காட்சியின் உச்சகட்ட சட்டம் (fரமெ.) அதாவது இக்காட்சி யதார்த்தமும் நாடகத்தன்மையும் கலந்தே வெளிப்படுகிறது. இக்காட்சியில் பின்னாலிருக்கும் இயக்குநர் முன்னால் வந்துவிடுகிறார். இதனால் இக்காட்சியின் யதார்த்த நம்பகத்தன்மை சற்றே குறைந்துவிடுகிறது. இதையே வெட்டியான் கதாபாத்திர வடிவமைப்புக்கும் பொருத்தலாம். அங்கே இயக்குநரின் (அல்லது நாவலாசிரியரின்) முகமே முன்னுக்கு வருகிறது, யதார்த்தத்தைப் பின்னுக்குத் தள்ளி. அதேபோல் அந்தப் பெண் கிழவரிடமிருந்து சாவியைப் பிடுங்கி எறிய, அவர்கள் அதை எடுக்க அடித்துக்கொள்ளும் காட்சி. இதை இன்னும் சிறப்பாக, இத்தனை காட்சிகளின்றி படமாக்கியிருக்கலாம். பின்னர் அப்பெண் தன் தந்தையிடம் கேட்கிறாள், "மகன்கள் என்ன ஆனார்கள் என்று." அவர் "அவர்கள் திரும்பவே இல்லை" என்கிறார். இந்த இரண்டு வசனங்களே போதுமானது. அவர்கள் அடித்துக்கொண்டு ஓடுவதும் ஒருவரை ஒருவர் பின் துரத்துவதும் அதை லாங் ஷாட்டில் காண்பித்துக்கொண்டே இருப்பதும் பழமையான காட்சிமுறைகள். (படம் வந்தது 1988-இல்.) இதேபோல் தான் சதியில் எரிவதாக அவளாக நினைத்துப் பார்த்து அழும் காட்சி. எல்லாவற்றையும் காட்சிமூலம் காட்டித்தான் பார்வையாளரை உணரச்செய்யவேண்டும் என்பதில்லை. அவளின் மன உணர்வுகள், எனக்கு பயமாயிருக்கு போன்ற வசனங்கள் இதை ஏற்கனவே பார்வையாளருக்கு அளித்துவிட்டிருக்க, அவள் சதியில் எரிவதாக நினைப்பதை காட்சிப்படுத்தியிருக்க வேண்டியதில்லை.

மிக முக்கியமான காட்சிகள் படத்தில் ரசிக்கத்தக்கவையாக உள்ளன. அந்த மணப்பெண்ணின் தந்தையும் ஜோதிடரும் பேசிக்கொள்ளும் காட்சிகள். கிழவர் தனது புது மனைவியை முத்தமிட (அல்லது முகத்தை நெருங்கி நோக்க) முயலும் காட்சியில் அப்பெண் அழுவது. தன் முகத்தை நீரில் பார்த்துவிட்டு அந்தக் கிழவர் தன்னை அழகந்தானே என்று அந்தப் பெண்ணிடம் கேட்பது. பின்னணி இசையை ஒலித்துக்கொண்டு அந்தக் கிழவரைச் சுற்றி ஆடும் ஒரு கூட்டம். இப்படிப் பல காட்சிகள்.

சதி என்னும் வழக்கத்தைப் பற்றிய இப்படம் அதை எதிர்நோக்கும் ஒரு பெண்ணின் மன உணர்வுகளை மிகச்சிறப்பாக பிரதிபலித்தது. அவள் "எனக்கு பயமா இருக்கு" என்று சொல்லுமிடங்கள் சதியை எதிர்நோக்கும் பெண்ணின் உணர்வை ஒருசேரக் கொண்டு வந்துவிடுகின்றன.

கௌதம் கோஷின் இத்திரைப்படம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சில விருதுகளை வென்றிருக்கிறது. நிச்சயம் தகுதியான திரைப்படமே.

மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றியும் பாராட்டுகளும்.

ரவி said...

அழுத்தமாக எழுதக்கூடிய நீங்கள் இன்னும் தரமான கருத்துக்களை முன்வைத்து எழுதவேண்டும் என்று கேட்கிறேன்...!!!

Anonymous said...

மிக்க நன்றி சுரேஷ் கண்ணன்

மக்கள் தொலைகாட்சியை பற்றி ஒர் தனி பதிவாக போடுங்களேன்.

மயிலாடுதுறை சிவா...

கோபிநாத் said...

வணக்கம் சுரேஷ் கண்ணன்,

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்,
வணிகசினிமாவை பற்றி நிறைய நண்பர்கள் எழுதுகிறர்கள் ஆனால் இது போன்று விருது படங்களை பற்றி யாரும் எழுதி பார்த்து இல்லை.ஒவ்வொரு வராமும் தவறமால் எழுதுங்கள்.

ROSAVASANTH said...

இந்த பதிவை (மற்றும் பின்னூட்டத்தை) படிக்கும் போது வரும் பெரிய எரிச்சல், பல இடங்களில் 'கீழ்சாதி' 'தாழ்ந்த ஜாதி' 'உயர்ஜாதி' என்று எழுதியிருப்பது. இன்று இவ்வாறு எழுதுவது அரசியல் ரீதியாக தவறானது என்பதை பல பழமைவாதிகளும் (சொல்லப்போனால் பல இந்துத்வவாதிகளும்) கூட ஒப்புகொள்ளும் நேரத்தில், இது ஏதோ வேண்டுமென்றே எழுதியதாக படுகிறது. 'ஒடுக்கப்பட்ட ஜாதி' ஆதிக்க ஜாதி என்றெல்லாம் எழுதுவது ஒருவேளை போலித்தனமாகவும், அவ்வாறு எழுதுவதற்கான தேவையில்லாமலும் உங்களுக்கு தோன்றலாம். அப்படி தோன்றுவதை நேர்மை என்று கூட நினைக்கலாம். தமிழ் சூழலில் இலக்கியத்தையும் கலையையும் தேடுகிறேன் என்ற பெயரில் நடக்கும் அமைச்சூர் முயற்சிகள் எந்த அளவு அரசியல்ரீதியாய் சுரணையில்லாமல் இருக்கிறது என்று நான் புரிந்து வைத்திருப்பதற்கு உதாரணமாய் இதை எடுத்துக்கொள்கிறேன்.

(சில ஆண்டுகளுக்கு முன்னால் என்றால், இதையெல்லாம் மென்மையாக சுட்டிக்காட்டி பேசலாம்; அசிரத்தை என்று எடுத்துக் கொண்டு சுட்டலாம். இப்போது இந்த பிரச்சனைகள் பல இடங்களில் பேசப்பட்டு, எல்லோரும் அறிந்த ஒன்றாகவும், பலரால் ஒப்புகொள்ளப்பட்டதாக இருக்கும் நேரத்தில் மென்மையாக சொல்ல அவசியம் இருப்பதாக தெரியவில்லை.)

Anonymous said...

சுரேஷ் நல்லா எழுதியிருக்கீங்க...

வாழ்த்துக்கள்...

தொடரட்டும் இந்தச் செயல்...

Anonymous said...

http://sifymax.com/bbhome/makkaltv/

Pandian

பிச்சைப்பாத்திரம் said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

பிரசன்னா:

உங்களின் பின்னூட்டத்திற்கு பதிலளிக்க வேண்டுமெனில் அது இன்னொரு பதிவாக நீளக்கூடும். நேரமிருப்பின் எழுதுகிறேன்.

சிவா:

மக்கள் தொலைக்காட்சி குறித்து ஒரு தனிப்பதிவு எழுத முன்பு நினைத்திருந்தேன். பிரபஞ்சனின் நூல் விமர்சனங்களும், பல்வேறு தலைப்புகளில் விவாதங்களும், பாலுமகேந்திராவின் "கதை நேரமும்" சுப்புஆறுமுகத்தின் வில்லுப்பாட்டும், தோழர் தியாகுவின் கலந்துரையாடல்களும் நான் கவனித்த அளவில் முக்கியமான நிகழ்ச்சிகள்.

ரோசாவசந்த்:

உயர்சாதி, தாழ்ந்த சாதி என்கிற வார்த்தைகளில் உள்ள அரசியல் ரீதியான தவறுகள் குறித்து நீங்கள் குறிப்பிட்டது மிகச்சரி. பதிவை அவசரமாக எழுதிக் கொண்டிருக்கும் போது சம்பந்தப்பட்ட வார்த்தைகளை தட்டச்சிக் கொண்டிருந்த கணத்தில் உள்ளே ஏதோ பொறிதட்டியதை பொருட்படுத்தாமலே இருந்ததன் விளைவு. மறுபடியும் படித்துப்பார்க்கக்கூட அவகாசமில்லாத சூழலில் அப்படியே அனுப்பிவிட்டேன். தவறுதான். ஒப்புக் கொள்கிறேன். அதற்காக வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். திருத்தியமைக்கு நன்றி.

ஆனால் இது "வேண்டுமென்றே எழுதியதாக" எப்படி உங்களுக்குப் பட்டது என்று தெரியவில்லை. பதிவை முழுதாகப் படித்து அதன் ஆதார தொனியை உணர்ந்தவர்களுக்கு, மேற்குறிப்பிட்ட வார்த்தைகள் தவறாக எழுதப்பட்டிருப்பினும், அவை வேண்டுமென்றே எழுதப்படவில்லை என்பதை ஒரு கடிகார மூளை உள்ள நபரால் கூட புரிந்து கொள்ள முடியும்.

()

மிக மிக தற்செயலாக, கறுப்பு - எதிர்க்கதையாடல்கள் (சுகனும் ஷோபாசக்தியும் தொகுத்தது) என்கிற புத்தகத்தை இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் "எச்சரிக்கை: குஜராத் ஒரு தொடக்கம் மட்டுமே" என்கிற ஒரு கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது. எழுதியவர் பெயராக 'ரோஸா வஸந்த்' என்றிருக்கிறது. (அது நீங்கள்தான் என்று நம்புகிறேன்). அந்த கட்டுரையின் ஒரிடத்தில் (பக்26) குஜராத்தில் உள்ள ஜாதி அமைப்புகளை குறிப்பிடும் போது, ........ குஜராத்தில் அதிகார வர்க்கத்தின் எல்லாத் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ்., வி.இ.ப. போன்றவற்றின் ஆதிக்கம் ஊடுருவிப் பல காலம் ஆகி விட்டது. 'உயர்' சாதியினரின் சதவிகிதமும் மற்ற மாநிலங்களை விட அதிகமாகக் கொண்டது. ........ என்றிருக்கிறது. (இதில் உயர் என்கிற வார்த்தை வேற்றுமைக்குறியோடு அழுத்தமாகவே பிரசுரமாகியிருக்கிறது). (நீ மாத்திரம் யோக்கியமா என்கிற தொனியுடன் இங்கு இது குறிப்பிடப்படவில்லை. அது என் நோக்கமும் கிடையாது)

இந்த ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டு ஒருவரை அமெச்சூர் என்றோ, அரசியல் சுரணை இல்லாதவர் என்றோ காழ்ப்புணர்ச்சியோடும், அதீதமாகவும் வார்த்தைகளை அள்ளி வீச மாட்டேன். ஏனெனில் கட்டுரையின் ஆதார தொனி, குஜராத்தில் சிறுபான்மையினரின் மீது ஏவப்பட்ட வன்முறையின் மீதான எதிர்ப்பை மிகத் தெளிவாக கொண்டிருக்கிறது. (கட்டுரையின் பல பகுதிகள் அபத்தமாகவும், சார்புடையதாகவும் இருக்கிறது என்பது வேறு விஷயம். அதைப் பற்றியெல்லாம் எழுதி நேரத்தை வீணடிக்க என்னால் ஆகாது). மேற்குறிப்பிட்ட கட்டுரைத் தொகுதியில் குமரன்தாஸ் என்கிற தலித் எழுத்தாளர் எழுதின கட்டுரையில் "பிற்பட்ட சாதியினர்" என்றே குறிப்பிடுகிறார். இந்த ஒரு காரணத்திற்காகவே அவரை சிலுவையில் ஏற்றி விட முடியாது. ஏனெனில் கட்டுரை முழுக்க ஆதிக்க சாதியினர் சாடப்பட்டிருக்கின்றனர்.

()

உயர்வகுப்பினர் என்று சமூகத்தால் கருதப்பட்டு வந்தவர்களையோ அல்லது உயர்பொறுப்பில் இருப்பவர்களையோ பாத்திரங்களாக புனைவிலோ அல்லது கட்டுரைகளிலோ எழுதும் போது "வந்தார், போனார்" என்று "ர்" விகுதியுடனும், தாழ்த்தப்பட்டவர்களையோ அல்லது கடைநிலை தொழிலாளியின் பாத்திரங்களைப் பற்றி எழுதும் போது "ன்" விகுதியோடு "வந்தான், போனான்" என்று எழுதுவதே பெரும்பாலான எழுத்தாளர்களின் வழக்கம். முற்போக்காக எழுதுகிறேன் என்று சொல்லிக் கொள்ளும் எழுத்தாளர்களும் இதில் அடக்கம்.

ஆனால் என்னுடைய பதிவு முழுக்க பைஜூ என்கிற வெட்டியான் (இங்கே வெட்டியார் என்று எழுத முடியாது) பாத்திரத்தைப் பற்றி எழுதும் போது "ர்" விகுதி போட்டே பிரக்ஞையோடு எழுதியிருக்கிறேன். பெருமை அடித்துக் கொள்ளவதற்காக குறிப்பிடவில்லை, ஜாதி குறித்து வேண்டுமென்றே எழுதப்பட்டிருப்பதாக நினைக்கிற உங்கள் குற்றச்சாட்டை மறுக்கவே இதை குறிப்பிடுகிறேன். குற்றம் கண்டுபிடிக்கிற பார்வையை சற்றே விலக்கி வைத்து பார்த்திருந்தால் இவையும் உங்களின் கண்ணில் பட்டிருக்கும்.

கார்த்திக் பிரபு said...

நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க நானும் பார்க்கிறேன்..சுஜாதா கதைகளை கூட நாடங்களாக போடுகிறார்கள் போல?????????