Friday, June 24, 2005

சிறந்த படமோ என்று (கனா கண்டேன்)

'கனா கண்டேன்' இயக்குநர் கே.வி. ஆனந்தை எனக்கு 15 வருடங்களாக தெரியும். ஆனால் அவருக்கு என்னை தெரியுமா என்றால் தெரியாது. என் இலக்கிய வாசிப்பனுபவத்தில் 'வயதுக்கு வருவதற்கு' முன்னால் படித்துக் கொண்டிருந்த சுபா, பட்டுக்கோட்டை பிரபாகரின் போன்றவர்களின் கிரைம் மாத நாவல்களின் அட்டைக்கு, நாவலின் சம்பவங்களுக்கேற்ப புகைப்படம் எடுப்பவர் இந்த கே.வி. ஆனந்த். இந்த சின்ன ஏரியாவிலேயே பல வித்தைகளை அப்போதே செய்வார். ஒரு புகைப்படக் கலைஞராகத்தான் தன் வாழ்க்கையை துவங்கியவர். சில பல வருடங்கள் இவரை மறந்து போய் முதல்வன் படத்தில் இவர் ஒளிப்பதிவாளர் என்று கேள்விப்பட்ட போது ஆச்சரியமாக இருந்தது.

பி.சி.ஸ்ரீராம், (மீரா) ராஜீவ் மேனன், (கண்டு கொண்டேன் x 2) ஜீவா (12B) என்று ஒளிப்பதிவாளர்கள் இயக்குநர்களாக பரிணாம வளர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருக்கிறார். கே.வி. ஆனந்த். கனா கண்டேன் இவரது இயக்கத்தில் வெளிவந்த சமீபத்திய படம்.

()

ஆனந்த் இயக்குநராக வெற்றி பெற்றிருக்கிறார் என்றே கூற வேண்டும். சுவாரசியமாக கதை சொல்லும் திறன் இவருக்கு கைவரப் பெற்றிருக்கிறது. எழுத்தாளர்களை அவ்வளவாக பயன்படுத்திக் கொள்ளவே கொள்ளாத தமிழ் சினிமாவில், இரட்டை எழுத்தாளர்களான சு (ரேஷ்) பா (லகிருஷ்ணன்) ஆகியோரின் கதை-வசனத்தை பயன்படுத்திக் கொண்டு படமாக்கியதை ஒரு நல்ல ஆரம்பம் என்றே சொல்ல வேண்டும்.

கதையும் களமும் சற்று வித்தியாசமானது. தண்ணீர் விற்றுப் பிழைக்கும் தாய்க்கு பிறந்த ஒருவன் தன் தாய் படும் கஷ்டத்தை சிறுவயதிலேயே பார்த்ததின் விளைவாக, அறிவியலில் ஆர்வம் கொண்டு தீராத ஆராய்ச்சியில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தில் வெற்றி பெறுகிறான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரசாங்கம் இதை கண்டு கொள்ளாமல் இருக்க, யதேச்சையாக அறிமுகமாகிற மனைவியின் கல்லூரி நண்பரிடம் கடன் வாங்கி தன் திட்டத்தை துவங்குகிறான். ஆனால் கடன் கொடுக்கிற அந்த நண்பனோ ஒரு மோசமான கந்துவட்டி வசூலிக்கிறவனின் முகத்தை காட்டி இவர்களை மனரீதியாக கொடுமைப்படுத்த அதிலிருந்து நாயகன் புத்திசாலித்தனமாக வெளிவருவதுதான் கதை.

Image hosted by Photobucket.com



நாயகனாக ஸ்ரீகாந்த்.

வளர்த்தியாகவும் அழகாகவும் இருக்கிற இவர் படம் ஆரம்பித்ததிலிருந்தே பற்ற வைத்தே ராக்கெட் போல் சுறுசுறுப்பாக இயங்குகிறார். பட ஆரம்பமே கோபிகாவின் திருமணத்திற்கு ஸ்ரீகாந்த் செல்வதாக அதிரடியாக ஆரம்பிக்கிறது. கல்யாண சத்திரத்தில் மாப்பிள்ளை ஒரு பெண்பொறுக்கி என்பதை தெரிந்து கொண்ட கோபிகா திருமணத்தை புறக்கணித்து நண்பர் ஸ்ரீகாந்த்துடன் சென்னைக்கு பயணமாகிறார்.

கோபிகாவும் இவரும் காதல் டூயட்களில் பெவிகால் விளம்பரம் போல் ஒட்டிக் கொண்டு மிகவும் அன்னியனாக ... சட்... அன்னியோன்யமாக இருக்கின்றனர். நாயகனின் வழக்கமான நேர்மைப்படி, தன் குடிநீர் திட்டம் அரசாங்கத்தின் மூலம் பொதுமக்களுக்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார், தனியாருக்கு விற்பதின் மூலம் கோடிக்கணக்கில் பணம் கிடைக்குமென்றாலும். கடன் கொடுத்த அந்த ·பிராடு நண்பன் தம்மை ஏமாற்றி மிரட்டுவதன் மூலம் தம் திட்டத்தை அபகரிக்க முயல்கிறான் என்று அறியும் போது அவரிடம் பொங்கும் கோபம் மிக இயல்பாக இருக்கிறது.

நாயகியாக கோபிகா

போட்டோஜெனிக் முகம். நேரில் பார்க்கும் போது அவ்வளவு அழகாக தோன்றாத இந்த மாதிரி முகமுள்ளவர்கள், காமிரா வழியாக பார்க்கும் போது பிரமித்துப் போகும் அளவிற்கு மிகவும் live-ஆக தெரிவார்கள். சரிதா, அர்ச்சனா, ஷோபா என்று இந்தப்பட்டியல் நீளமானது. முன்னரே சொன்ன மாதிரி, காதல் காட்சிகளில் நாம் ஸ்ரீகாந்த் மீது பொறாமைப்படும் அளவிற்கு நெருக்கமாக இருக்கிறார். வழக்கமான தமிழ்ப்பட நாயகிகள் மாதிரி தொப்புள் மூலம் நடிக்காமல், சில காட்சிகளில் இவருக்கு உணர்ச்சிகரமாக நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

எதிர்நாயகன் பிருத்விராஜ்

மலையாளத்தில் நாயகனாக சில வெற்றி படங்கள் செய்திருக்கும் இவர், இப்போது தமிழில் நாயகனாக இருப்பவர்களை விடவும் அழகாக இருக்கிறார். ஆனால் வில்லன் பாத்திரத்திற்கு எப்படி ஒத்துக் கொண்டார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. very cool minded வில்லன். சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கிற வேலையை நன்றாகவே செய்கிறார். இந்தப்படத்தின் ஹீரோவாக இவரையே சொல்லுமளவிற்கு இவர் கதாபாத்திரம் மிகவும் வலுவாகவும், சுவாரசியமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. கருவுற்றிருந்த கோபிகாவை அபார்ஷன் செய்து கொள்ளுமளவிற்கு மனஅழுத்தம் கொடுத்த இவர், "உங்க ரெண்டு பேருக்கும் ஆரோக்கியமான இளமை இருக்குது. இன்னிக்கு இரவே மனசு வெச்சீங்கன்னா, அடுத்த பத்து மாசத்துல குழந்தை பொறந்துட்டுப் போகுது" என்று அலட்சியமாக சொல்லும் போது நமக்கும் கோபம் வருகிறது.

இசையமைப்பாளர் வித்யாசாகர்

கன்னடத்தில் வெற்றி பெற்றாலும், ரொம்ப வருடங்களாக தமிழ்ச்சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள (மலரே, மெளனமா? ...) முயன்றவருக்கு இப்போது வசந்த காலம். சின்னச் சின்ன சிகரங்கள்... என்ற பாடலும், காலை அரும்பி.. என்ற பாடலும் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையும் இப்போதைக்கு முன்னேறி இருக்கிறது.

பாடலாசிரியர் வைரமுத்து

மனிதருக்கு எப்படி கற்பனை வறண்டு போகாமல், நயாகரா போல் பிரவாகிக்கின்றதோ தெரியவில்லை. இதற்குத்தான் சங்கப் பாடல்களையும், செவ்விலக்கியங்களையும் நிறைய உள்வாங்கிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. இந்தப்படத்தில் ஒரு மினி 'காமத்துப் பாலையே' எழுதியிருக்கிறார்.

'காலை அரும்பி பகலெல்லாம் போதாகி' என்று ஆரம்பிக்கும் பாடலில் காமம் என்கிற நோயின் அடையாளங்களாக ,

'மூளை திருகும்
மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
இடப்பக்கம், வலப்பக்கம் இதயம் பெண்டுலமாடும்'

என்கிறவர்

'வாய் மட்டும் பேசாது, உடம்பெல்லாம் பேசும்'

என்று உச்சத்திற்கு போகிறார். மேலும் ஆங்கிலத்திற்கும், தமிழிற்கும் பொதுவாக ஒலிக்கும் வார்த்தையையும் வைத்து விளையாடி இருக்கிறார்.

'இது ஆண் நோயா, பெண் நோயா
காமன் நோய்தானே... 'என்கிற இடத்தை கவனியுங்கள். இதில் காமன் என்பதை மன்மதனை குறிப்பிடுவதாகவும், common என்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

'சின்னச் சின்ன சிகரங்கள்' என்கிற பாடலில்

'இளநீர் விளையும் மரம் நான்தானே
இளநீர் பருக மரமே திருடும் பயல் நீதானே'

என்று பெண் பாடும் போது குறும்பும் காமமும் கொப்பளிக்கிறது.

ஒளிப்பதிவாளர் செளந்தரராஜன்

இயக்குநரே ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்தாலும் தன்னிடம் உதவியாளராக இருந்தவரை ஒளிப்பதிவு செய்யச் சொன்னது சிறப்பு. ஸ்ரீகாந்த்தும் கோபிகாவும் (திருமணத்திற்கு முன்னால்) முதன் முதலாக சங்கமமாகும் காட்சியை, காற்றடித்து சாமி காலண்டர் திரும்பிக் கொள்வது, எலுமிச்சம் பழத்தை லாரி சக்கரம் சிதறடிப்பது, ஒரு சிறுவன் தண்ணீர் அடங்கிய பிளாஸ்டிக் பையை கடித்து துப்புவது என்று வேறு வேறு சிறு காட்சிகளை இணைத்து 'கொலாஜ்' சித்திர முறையில் மிகவும் அழகுணர்ச்சியோடு சொல்லியிருப்பது சிறப்பு.

()

முன்னரே கூறியது போல் ஆனந்திற்கு சுவாரசியமாக கதை சொல்லும் திறமை இருந்தாலும் 'காட்சிகளின் நம்பகத்தன்மை' என்னும் விஷயத்தில் கோட்டை விடுகிறார்.

(1) சிறுவயது ஸ்ரீகாந்த்திற்கு அம்மாவாக வருபவர் பல படங்களில் நாயகிகளுக்கு தோழியாக வரும் இளவயது துணைநடிகை. அவருக்கு வயதானவராக கஷ்டப்பட்டு மேக்கப் போட்டு படுத்தியிருப்பதை விட (ஒரு காட்சியில் தொப்புள் தெரிய சேலை கட்டியிருக்கும் காட்சி தெரிகிறது) வயதான ஒருவரையே அந்தப்பாத்திரத்திற்கு போட்டிருக்கலாம்.
(2) கடல் நீரை குடிநீர் திட்டமாக மாற்றுவதையெல்லாம் நாம் நிறைய தடவை அரசியல் மேடைகளிலும் தேர்தல் வாக்குறுதிகளிலும் கேட்டுவிட்டதால் அதையே நாயகனும் சொல்லும் போது பயமாக இருக்கிறது. மேலும் மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்த (?!) ராமர் பிள்ளை வேறு நினைவிற்கு வந்து பயமுறுத்துகிறார்.
(3) கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும், கந்துவட்டி வசூலிக்கும் ஒருவன் இப்படியா எந்தப்பாதுகாப்புமில்லாமல், கோயில் திண்ணையில் தூங்குகிற மாதிரி தீவட்டி தடியனை மாத்திரம் வைத்துக் கொண்டு தொழில் செய்வார்?
இந்தக் குறைபாடுகளைத் தவிர, அரசியல்வாதியிடம் குடிநீர் திட்டம் பற்றி கொடுக்கப்படும் பேப்பர்கள் அவர்கள் கொடுத்த சில நிமிடங்களிலேயே வெளியே வந்து டீக்கடையில் சாப்பிடும் மசால்வடைக்கு பேப்பராக இருப்பது, சினிமா தயாரிப்பாளர் வீட்டிற்கு பணம் வசூலிக்க போகும் வில்லனின் உதவியாளன் அவர்கள் வீட்டு வரவேற்பறை பூந்தொட்டியில் சிறுநீர் கழிப்பது, கிளைமேக்ஸ் சண்டையில் நாயகன் கண்டுபிடிக்கும் குடிநீரிலேயே வில்லன் மரணமடைவது போன்ற காட்சிகளில் இயக்குநர் + கதாசிரியரின் புத்திசாலித்தனம் கைகோத்து நிற்கிறது.

சந்திரமுகி, சச்சின் வகையறாக்களோடு ஒப்பிடும் போது இது சிறந்தபடம்தான் என்றாலும், பத்திரிகைகளின் ஆஹா ஓஹோ விமர்சனங்களைப் பார்த்து, இது இன்னும் சிறந்த படமாக இருந்திருக்குமோ என்று....

கனா கண்டேன்.

Wednesday, June 15, 2005

சந்திரமுகியும் சாகடிக்கப்பட்ட யதார்த்தங்களும்

(எச்சரிக்கை: இதயபலகீனமுள்ள மற்றும் வன்முறையில் தீவிர நம்பிக்கை உள்ள ரஜினி ரசிகர்கள் இந்த விமர்சனத்தை படிக்காமலிருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்) :-)

ஐன்ஸ்டீனின் mc=2 விதியை விட, அதிமுக்கியமான 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரணும்' என்கிற இணையத்தின் ஆதார விதியை மீறிய செயலான 'சந்திரமுகியை' தாமதமாக விமர்சனம் எழுதும் செயலை பொறுத்தருள வேண்டுகிறேன்.

()

திருப்பதி, பழனி போகும் வேண்டுதல்களைப் போல ரஜினி படம் வந்தால் பார்த்தே தீருவது என்கிற பெரும்பான்மையான தமிழ்க்குடும்பங்களின் வேண்டுதல்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மகளுக்கு மறுநாள் பள்ளித்திறப்பு என்கிற காலக்கெடுவினால், இத்தனை நாள் பார்க்கத்துடித்து பார்க்க முடியாமல் போன சந்திரமுகி திரைப்படத்தை இன்று எப்படியாவது பார்க்க அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற அன்பு கட்டளை, மிரட்டலோடு என் மகளிடமிருந்து என் முன்வைக்கப்பட்டதால் மனதை திடப்படுத்திக் கொண்டு அருகிலிருந்த திரைப்பட அரங்கிற்கு சென்றோம். 'மின்சார தடங்கல் காரணமாக இன்று மாலை காட்சிக்கு மட்டும் ஏ.சி. இயங்காது' என்று திரையரங்கத்தினரால் வெளியே வைக்கப்பட்டிருந்த அறிவிப்பின் மூலம் இறைவன் எங்களுக்களித்த எச்சரிக்கை சமிக்ஞையை அலட்சியப்படுத்தி உள்ளே சென்றதற்கு தண்டனை பி.வாசு வடிவில் காத்திருந்தது.

ஒரு அரசியல் தெலுங்கு மசாலாப்பட வாடையோடு ஆரம்பிக்கிற இந்தப்படத்தில் ரஜினி, தான் தோன்றுகிற முதல் காட்சியிலேயே 'ஷீ'வை பார்வையாளர்களின் முகத்திற்கு நேரே நிலை நிறுத்தி காண்பித்து பூர்ணகும்ப மரியாதையோடு நம்மை வரவேற்கிறார். அதுசரி. திருப்பதி ஏழுமலையானையே தேவுடா, சூடுடா என்று மரியாதையில்லாமல் விளிப்பவருக்கு நாம் எம்மாத்திரம்?

பொதுவாக சமீபத்திய ரஜினி படங்களில் கால, தேச, வர்த்தமானங்கள் மிகச்சரியாக தெளிவாக குழப்பப்பட்டிருக்கும். முத்து படத்தில் பங்களா, சாரட், குதிரை, நாட்டிய நாடகம் எல்லாம் வர ஜமீன்தார் காலப் படம் போலிருக்கிறது நாம் எண்ணிக்கொண்டிருந்தால் ஒரு பாடல்காட்சியில் சுற்றுலா செல்லும் நவநாகர £க உடையணிந்த யுவ, யுவதிகளோடு நாயகன் ஆடிப்பாட நமக்கு தலைசுற்றுகிறது. பாபா படத்திலோ கேட்கவே வேண்டாம். காளிகாம்பாள் கோவில் அமைந்திருக்கிற தம்புச் செட்டி தெருவிலிருந்து பொடிநடையாக இமயமலைக்கு செல்கிற குறுக்குச் சந்து என்னவென்று அந்த ஏரியாவில் 35 இருக்கிற எனக்குத் தெரியவில்லை.

இந்தப்படத்திலும் இதே கலாட்டாதான். 40 வருடங்களாக பூட்டப்பட்டிருக்கிற, ஆனால் தோட்டக்காரர் தன் அழகான பெண்ணுடன் இருக்கிற, பயங்கர ஆவி உலாவுவதாக கிராம மக்களால் நம்பப்படுகிற ஒரு பங்களாவை பிரபு பிடிவாதமாக வாங்கி குடியேற அங்கு நடக்கும் குழப்பங்களை அவரின் மனோதத்துவ டாக்டரான ரஜினி தன் உயிரையும் தியாகம் செய்ய முன்வந்து (?!) தீர்ப்பதுதான் இந்த பாடாவதி படமான 'சந்திரமுகி'.

()

ரஜினி + வடிவேலுவின் (சில அபத்த) நகைச்சுவைக்காட்சிகளோடும், அந்தக்கால ஜெய்சங்கர் பட அசட்டுத் திகிலான பில்டப் காட்சிகளோடும் வளவளவென்று நகருகின்ற இந்த சீட்டுக்கட்டு மாளிகை, படத்தின் கடைசி அரைமணிநேர வலுவான காட்சிகளால் தாக்குப்பிடித்து நிற்கிறது. அந்தக் காட்சிகளும் மெனக்கெடாமல் எடுக்கப்பட்டிருந்தால் சந்திரமுகியும் பாபா சென்ற பாதையை நோக்கி பயணித்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

வழக்கமாக ரஜினி படங்களுக்கேயுரிய கதையையும் காட்சிகளும் என்று இல்லாமல், ஒரு கதையில் ரஜினியை பொருத்தியிருக்கும் விஷயமே நம்மை சற்று ஆசுவாசப்படுத்துகிறது.

ஆனால் இதில் split personality என்கிற பிளவாளுமையை வைத்துக் கொண்டு இவர்கள் அடித்திருக்கும் கூத்துதான் பயங்கர எரிச்சலை மூட்டியிருக்கிறது. பிளவாளுமை நோய் என்பது ஒருவர் தன்னை மற்றொருவராக தீவிரமாக நம்புவது. அவ்வாறு நம்பும் நேரங்களில் அவர் மற்றொருவராகவே ஆகி செயல்படுவதும் அப்போது தன்னைப்பற்றின நிலையை தற்காலிகமாக முழுவதுமாக மறப்பதுமாகும்.

இதைக் குணப்படுத்த ஒரு சிறந்த மனநோய் மருத்துவரின் கவனிக்குப்பிற்குட்படுத்தப்பட்ட மருத்துவ நடவடிக்கைகளும், இதமான கவுன்சிலிங்கும் தேவைப்படுமே ஒழிய, மருத்துவர் தம் உயிரை பயணம் வைத்து நோயாளியைக் குணப்படுத்துவது மாதிரியான அதி தீவிர நகைச்சுவைகள் எல்லாம் சினிமாக்களில் மட்டுமே சாத்தியம்.

இந்தப்படத்தில் முக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது வித்யாசாகரின் அற்புத இசையமைப்பையும், (90-களில் இளையராஜா கழற்றிப் போட்ட சட்டையை தூசி தட்டி உபயோகித்தாலும்) தோட்டா தரணியின் (?) திறமையான கலை இயக்கத்தையும் (அந்த ஜமீன்தார் மாளிகையின் பிரம்மாண்டம் இன்னும் கண்ணில் நிற்கிறது) கடைசி அரை மணி நேரத்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்ட ஜோதிகாவையும். வேட்டைக்கார ராஜாவாக வில்ல வேடத்தையும் துணிந்து நடித்து பழைய ரஜினியை நினைவுப்படுத்தியதையும் குறிப்பிட வேண்டும். சந்திரமுகி ஒவியத்தை வரைந்த அந்த கலைஞனுக்கும் ஒரு ஸ்பெஷல் பாராட்டு.

()

படம் பார்த்து எனக்குத் தோன்றிய சில 'ஏன்'கள்?

(1) சங்கீதத்தில் மிகுந்த திறமை கொண்டு 'அத்திந்தோம் திந்திந்தோம்' பாடுகிற ரஜினி, நயனதாரா குழந்தைகளுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுப்பதை அவ்வளவு தீவிரமாக எதிர்ப்பது ஏன்? மற்ற நேரங்களில் கொத்தும் குலையுமாக எந்தப் பிரச்சினையுமில்லாமல் உலவுகிற நயனதாரா, ரஜினியால் கண்டிக்கப்படுகிற காட்சியில் நாக்கை இழுத்துக் கொண்டு ஒரு மாதிரியாக பேசுவது ஏன்?

(2) கதைப்படி தன்னையே சந்திரமுகியே தீவிரமாக நினைத்துக் கொள்கிற ஜோதிகா, எதிர்வீட்டில் குடியிருக்கிறவனை தன் காதலனாகவும் நம்புகிறாள். ஆனால் சிகிச்சையின் (?!) முடிவில் வேட்டைக்கார ராஜாவைக் கொன்றதாக நினைத்துக் கொண்டவுடன் குணமாவது எப்படி? அவள் இப்பவும் தீவிரமாக காதலிக்கிறவனுக்கும் ஒரு தீர்வு கிடைத்திருந்தால்தானே அவள் குணமாவது முழுமையாகியிருக்கும்?

(3) அமெரிக்காவில் கோல்டுமெடல் வாங்கிய மனோதத்துவ மருத்துவர் என்று சொல்லிக் கொண்டு, அதற்குரிய முதிர்ச்சியே இல்லாமல் எப்பவும் ஜெர்கினும், கூலிங்கிளாசுமாய் ஒரு இளைஞனை ஒத்த உடைகளை அணிந்து உலா வரும் ரஜினி, ஜோதிகாவிற்கு ஏற்பட்டிருப்பது மனநோய் என்று தெரிந்தும் பேய் ஒட்டுகிறவரை ஆதரிப்பதும் சிகிச்¨சியின் போது அவர் ஒத்துழைப்பையும் கோருவது உச்சக்கட்ட அபத்தம். நிஜவாழ்வில் தாம் நம்புகிற இந்து ஆன்மிகத்தையும் சம்பந்தப்பட்ட சடங்குகளையும், நிழலிலும் கைவிட விரும்பவில்லையா ரஜினி?

()

'பன்னீர் புஷ்பங்கள்' என்கிற பதின்ம வயதில் ஏற்படும் காதல் குழப்பங்களைப் பற்றி தெளிவாக படம் எடுத்த (பாரதி) வாசுவின் திறமைகள் எந்த நேரத்தில், காரணத்தில் திசைமாறின என்று ஆயாசமாய் இருக்கிறது. வண்டி வண்டியாய் தமிழ் இலக்கியங்களை வைத்துக் கொண்டு 'கதை கிடைக்கவில்லை' என்று இந்த சினிமாக்காரர்கள் செய்கிற கேலிக்கூத்துகளும் புரியவில்லை.

Saturday, June 11, 2005

அழுவதின் ஆனந்தம்...

நான் பொதுவாகவே எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவன். என்னை கோபப்படுத்துவதோ புன்னகைக்க வைப்பதோ மிக எளிது. வாழ்க்கையின் அடிப்படையான பாசாங்குகளை மிகவும் வெறுப்பவன் நான். ஆனால் வாய்விட்டு அழுவதென்பது எனக்கு சொற்பான சமயங்களில் மட்டுமே நிகழக்கூடியது. உணர்ச்சிகரமான சூழ்நிலைகளில் கூட சிரமப்பட்டு கண்ணீரை எனக்குள் விழுங்கிக் கொள்வேன். எனக்கு விவரம் தெரிந்து நான் வாய்விட்டு அழுத சம்பவங்கள் மிக சொற்ப எண்ணிக்கையில் அடங்கிவிடும். இப்படியான நான் சமீபத்தில் வாய்விட்டு அழக்கூடிய சம்பவமொன்று நடைபெற்றது.

பொதுவாகவே நம் தமிழ்க் கலாச்சாரத்தில் ஆண்கள் வாய்விட்டு அழுவது ஆண்மைக்கு இழுக்கான செயலாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்தால் கூட பெண்கள் கூடி வாய்விட்டு சம்பிரமாக அழும் சுதந்திரம் இருக்கும் போது, ஆண் மட்டும் மிகவும் இறுக்கத்துடன் துக்கத்தை மனதில் புதைத்துக் கொண்டு அடுத்து ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்க வேண்டி வரும். என்னைப் பொறுத்த வரை மரணம் என்பது கொண்டாடப்படக்கூடியதே ஒழிய அழ வேண்டியது இல்லை. அது ஒரு விடுதலை.

மேற்கத்திய கலாச்சாரத்தில் இவ்வாறான அசட்டுத்தனமான கட்டுப்பாடுகள் இல்லை. விளையாட்டுப் போட்டியில் தோற்ற ஒருவர், ஒண்ணுவிட்ட சித்தப்பா செத்துவிட்டதைப் போன்று 'ஓ' வென்று எந்தவித வெட்கமுமில்லாமல் அழுதுவிடுகிறார். இது நல்லது. நம் துக்க உணர்வுகளை உள்ளுக்குள் அழுத்திக் கொண்டு மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுவதைவிட, அந்த துக்கங்களை கண்ணீரின் மூலம் அப்போதைக்கப்பது கழுவிக்கொள்வது உசிதமான செயல்.

()

என் தந்தையாருக்கு தலையில் அடிபட்டு சரியாக கவனிக்காமல் போய் மூளைக்குள் செல்லும் நரம்பொன்றில் ரத்தம் கட்டிக் கொண்டு மெல்ல மெல்ல சுயநினைவை இழந்துக் கொண்டிருக்கிறார். துக்ககரமான அந்த ஒரு இரவில் எல்லோரும் அரைத்தூக்கத்தில் ஆழந்து கொண்டிருக்க குழந்தை போல் தவழந்து தவழந்து படுக்கையறைச் சுவரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறவரை கவனித்து பதட்டத்துடன் எழுந்து என்ன வேண்டுமென்று கேட்டதற்கு குழறலான மொழியில் பதில் வந்தது "பாத்ரூமுக்கு போயிட்டு இருக்§ன்". மூளையில் ஏற்படும் ஒரு சிறுபாதிப்பு ஒருவரை இவ்வளவு அப்நார்மலாக மாற்றுமா என்று எனக்கு அப்போது ஆச்சரியமாக இருந்தது. பிறகு அவரை ஒரு தனியார் மருத்துவமனையிலும், பிறகு அரசு மருத்துவமனையிலுமாக ஒரு வாரம் பார்த்துக் கொண்டிருந்தோம்.

அவரை மருத்துவமனையில் பார்த்துக் கொண்டிருக்கிற 'டூட்டியை' என் மூத்த சகோதரனுக்கு மாற்றிவிட்டு வீட்டில் வந்து படுத்துக் கொண்டிருக்கிறேன். சில நிமிடங்கள் பின்னாலேயே என் சகோதரனும் வந்துவிட்டான். அவன் வந்து நின்ற நிலையே எனக்கு சூழ்நிலையை விளக்கிவிட்டது. இருந்தாலும் மெல்ல, "என்ன ஆச்சு?" என்றேன். அவன் வார்த்தைகளில் அடக்கவியலாத ஒரு உணர்வுடன் தலையை அசைத்தான். நான் பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி விட்டு, சினிமா போல சட்டென்று அழாமல் என்னுடைய சட்டையை பேண்டில் இன் செய்துக் கொள்வதையும், கண்ணாடியைப் பார்த்து தலையை சீராக வாரிக் கொள்வதையும் அவன் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். "போலாம்". பிறகு சிலபல வருடங்கள் கழித்து தந்தையின் நினைவில் சில மெளனமான இரவுகளை கண்ணீரில் நனைந்த தலையணைகளோடு கழித்தது நிஜம்.

()

இப்போது, வாய்விட்டு அழுத சமீபத்திய சம்பவத்திற்கு வருகிறேன்.

ஒரு காலை வேளையில், அலுவலகத்திற்கு கிளம்ப வேண்டி, என் சட்டையும் பேண்ட்டையும் அயர்ன் செய்து கொண்டிருந்தேன். உற்சாகமான காலைப் பொழுது. எந்தவித துக்கமான மனநிலையும் சமீப காலங்களில் இல்லை. ரேடியோ மிர்ச்சியில் சுசித்ராவின் அசட்டுத்தனமான காம்ப்பியரங்கை சகித்துக் கொள்ள இயலாமல், ஆடியோ சிடியை போடலாமென்று முடிவு செய்தேன். என்னுடைய சேகரிப்பில் இருந்து துழாவி கையில் கிடைத்த சிடியை செருகினேன். 'சிப்பிக்குள் முத்து' என்கிற விஸ்வநாத்தின் இயக்கத்தில் வெளிவந்த கமல்ஹாசன் படமது. ராஜாவின் மிக அற்புதமான மென்மையான பாடல்களை ரசித்துக் கொண்டே துணிகளை அயர்ன் செய்து கொண்டிருந்த போதுதான் அது நிகழ்ந்தது.

ஒரு பாடல் முடிந்து அடுத்த பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

"லாலி லாலி லாலி லாலி..
வரம் தந்த சாமிக்கு
பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு
இதமான லாலி
குறும்பான கண்ணனுக்கு.........
சுகமான லாலி
ஜகம் போற்றும் தேவனுக்கு
வகையான லாலி"

சுசிலாவின் சுகமான குரலில் ஒலித்த அந்த தாலாட்டுப் பாட்டு என்னுள்ளே எந்தவிதமான ரசவித்தை செய்ததோ அறியேன். எந்த காரணமுமில்லாமல், என்னையுமறியாமல் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தேன். என் மனஅடுக்குகளில் பல்வேறு கால வரிசையில் அடுக்கப்பட்டிருக்கிற துக்கமான நினைவுகளில் ஏதோ ஒன்றை அந்தப்பாட்டு பலமாக அசைத்துப் பார்த்திருக்க வேண்டும் என்று யூகிக்கத் தோன்றுகிறது. ஒரளவு உளவியல் படித்திருந்தும் இந்த சம்பவத்தை என்னால் எந்தவகையாலும் வகைப்படுத்த இயலவில்லை. இது புதுவிதமான முதல் அனுபவம்.

நான் அழுகிற சத்தம் கேட்டு மனைவி பதட்டத்துடன் ஒடிவந்தாள். "என்னங்க ஆச்சு.."? விஷயத்தை கேள்விப்பட்டதும் சிரிக்க ஆரம்பித்து விட்டாள். " நான்தான் உங்களை அடிச்சிட்டு அழறீங்கன்னு பக்கத்து வீடுகள்ல நெனச்சிக்கப் போறாங்க" என்று கிண்டல் செய்யவும் ஆரம்பித்துவிட்டாள். விளையாடப் போயிருந்த என் மகள் வந்தவுடன் இருவரும் சேர்ந்து என்னை பயங்கரமாக ஓட்ட ஆரம்பித்து விட்டனர். எனக்கு வெட்கமாகப் போய்விட்டது, காரணமே இல்லாமல் அழுததற்காக. ஆனால் அழுது முடித்தவுடன் ஏற்பட்ட ஆசுவாச, உற்சாக உணர்ச்சியை எந்த காம்ப்ளானும், பூஸ்ட்டும் கொடுக்க முடியாது.

()

அப்போதெல்லாம் சன் டி.வியில் புதன் இரவுகளில் 8.30 மணிக்கு பாலுமகேந்திராவின் 'கதை நேரம்' என்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. (இந்தமாதிரியான அற்புதமான முயற்சிகள் தொடராமல் போவது துரதிர்ஷ்டம்) இந்த நிகழ்ச்சியின் டைட்டில் கார்டு ஓடும் போது பின்னணியில் சோகத்தைப் பிழிந்தெடுக்கிறாற் போலவும், ஆவி வருவதாக நம் சினிமாக்களில் ஒரு இசையை போடுவார்களே, இரண்டும் கலந்தாற் போன்றதொரு உணர்ச்சியில் திகிலாக ஒரு ஹம்மிங் வரும். அப்போது ஒரு வயதாகியிருந்த என் மகள், இந்த பின்னணி இசையை கேட்டவுடன் சுவிட்ச் போட்டாற் போல் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்து விடுவாள் (ஒரு வேளை பரம்பரை வியாதியாயிருக்குமோ?:-)) என்ன காரணமென்றே தெரியாது. இதற்காகவே அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போதெல்லாம் அவள் தூங்கிக் கொண்டிருந்தால் கூட எழுப்பி உட்கார வைத்து, அவளையே உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருப்போம்.

இந்த மாதிரி குறிப்பிட்ட சில ஒலிகள் நம் மனதில் விசித்திரமானதொரு பிம்பங்களை ஏற்படுத்துகிறது. என் நண்பர் ஒருவருக்கு நடுநிசியில் நாய் அழுகிறாற் போல் ஒலிஎழுப்பினால் யாருக்கோ மரணம் நிகழப் போகிறது என்பார்.

சுஜாதாவின் 'நில்லுங்கள் ராஜாவே' நாவல் நினைவுக்கு வருகிறது. அயல்நாட்டு தூதுவர் ஒருவரை கொல்வதற்காக, அவர் கலந்து கொள்ளப் போகும் தொழிற்சாலை நிகழ்ச்சியன்றை பயன்படுத்திக் கொண்டு, அங்கு பணிபுரியும் தொழிலாளி ஒருவரின் மூளையில் மற்றொருவரின் நினைவுகளை விதைத்து சோதனை செய்து விட்டு, குறிப்பிட்ட நிகழ்ச்சியில் அயல்நாட்டு தேசிய கீதம் பாடப்பட்டவுடன் தொழிலாளி வெறிகொண்டு தூதுவரை கொலை செய்து விடுமாறு அவருடைய எண்ணங்களில் பதித்துவிடுவர். அதுவரை நார்மலாயிருக்கிற அந்த தொழிலாளி, தேசியகீதம் பாடப்பட்டவுடன் அவருக்குள் விதைத்து வைக்கப்பட்டிருக்கிற கொலை உணர்ச்சி விழித்துக் கொள்ளும். மிக அற்புதமான நாவல் அது.

()

இதை பதிவதால் சிலரின் கிண்டலுக்கு ஆளாவேன் என்று உள்மனது சொன்னாலும், ஏதோ ஒரு உள்ளுணர்வு இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது. வெளியே நாம் பலவிதமான முகமூடிகளுடன் வீறாப்பாய்த் திரிந்தாலும் சில அடிப்படை மென்மையான அந்தரங்க உணர்வுகள் நம் எல்லோருக்கும் பொதுதானே?

உங்களுக்கு இந்த மாதிரி காரணமின்றி வாய்விட்டு அழுத சம்பவங்கள் ஏற்பட்டிருக்கிறதா?

எனக்குப் பிடித்த சமீப கவிதை (மனுஷ்யபுத்திரன்)

வந்துவிட்டது நீ போக
வேண்டிய ரயில்

தண்டவாளங்களில் படபடக்கின்றன
கிழிக்கப்பட்ட பாலிதீன் உறைகள்

யாரோ ஒரு பயணி
சிமெண்ட் பெஞ்சில் விட்டுச் சென்ற
பத்திரிகை
காற்றில்
தன்னைத் தானே வசிக்கிறது

நான் உனக்காகக் கையசைக்கையில்
ஒரு குழந்தை வேறொரு பெட்டியிலிருந்து
என்னை நோக்கிக் கையசைக்கிறது.

(நன்றி: உயிர்மை ஜீன் 2005)

()

ரயில் நிலையத்தில் நான் அன்றாடம் காணக்கூடிய காட்சிகளை சொற்ப வரிகளைக் கொண்டு ஒரு snapshot போல் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய மனுஷ்யபுத்திரனை வியக்கிறேன்.

Friday, June 10, 2005

இகாரஸ் பிரகாஷீம் சுஜாதாவும்

சமீபத்தில் எழுத்தாளர் சுஜாதா அவர்களுடன் இணைய நண்பர்கள் நடத்திய கலந்துரையாடலைப் பற்றி, சுஜாதா தனது ஆனந்த விகடன் கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டுள்ளார். சுஜாதா படைப்புகளின் தீவிர ரசிகரான இகாரஸ் பிரகாஷை ஸ்பெஷலாக குறிப்பிட்டுள்ள அவர் (அடப்பாவி! லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டியேய்யா) அவர் படைப்புகளின் மீதான ஆய்வுகளை அவ்வளவாக விரும்பவில்லை என்று தெரிகிறது. என்றாலும் அவரே மறந்து போன அவரின் படைப்புகளை வாசகர்கள் பரவசத்துடன் நினைவுகூர்வது குறித்து அவருக்கு மகிழ்ச்சியே என்று தோன்றுகிறது.

அவரின் சமீபத்திய கட்டுரை வெளியீட்டான 'கடவுள்களின் பள்ளத்தாக்கை' படித்துக் கொண்டிருக்கிறேன். என்ன ஒரு எழுத்து நடை ...... சான்ஸே இல்லை.

என்றாலும் சம்பந்தப்பட்ட பத்தியின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள "எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் குறைந்த பட்ச தூரமாவது தேவை என்பதுதான் அன்றைய பாடம்" என்னும் வரிகளைத்தான் ஜீரணிக்க இயலவில்லை.

suresh kannan

Thursday, June 09, 2005

Books.. Books.... and Books...

நானும் எனது புத்தகங்களும்

இணையத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த விளையாட்டு பெரும்பாலும் 'என்னென்ன படிக்கிறேன் பார்' என்று ஜம்பமடிப்பதற்குத்தான் உதவும் என்றாலும், வாசகர்களால் பரவலாக படிக்கப்படும் நல்ல புத்தகங்களைப் பற்றின அறிமுகமும், இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் தனி மனித ஆளுமைகளைப் பற்றியும் அறிய உதவும் என்பதால் இந்த தலைப்பினுள் நானும் நுழைகிறேன். பங்குபெற அழைத்த நண்பர்களான கே.வி.ராஜா மற்றும் ராஜ்குமார் ஆகியோர்களுக்கு நன்றி.

()

'உன் நண்பர்களைப் பற்றிச் சொல், உன்னைப் பற்றிச் சொல்கிறேன்' என்கிற பழமொழியை மாற்றி 'நீ படிக்கிற புத்தகங்களைப் பற்றிச் சொல், உன்னைப் பற்றிச் சொல்கிறேன்' என்று மாற்றியமைக்க விரும்புகிறேன். புத்தகங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு ஜென்மம் ஜென்மமாக தொடர்வதோ என்று மிகையாக எண்ணத் தோன்றுமளவிற்கு புத்தகங்களின் மீது பிரேமை கொண்டவன் நான். ஒரு நூலகனாகவோ, புத்தக விற்பனையானகவோ இருந்திருந்தால் (இலவசமாக) நிறைய புத்தகங்கள் படிக்கிற சந்தர்ப்பம் கிடைக்குமே என்று முன்பெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக எண்ணுவதுண்டு.

எல்லோரையும் போல சிறுவயதில் அம்புலிமாமா, ராணி காமிக்ஸ் என்றுதான் என் வாசிப்பனுபவம் ஆரம்பித்தது. ஆனால் இது ஆவேசமாக மாற ஆரம்பித்தது, ராஜேஷ்குமாரின் ஒரு கிரைம் நாவலில் இருந்து. பதின்ம வயதில் இது இயல்பாக சரோஜாதேவி புத்தகங்களின் பக்கம் பிற்பாடு திரும்பினாலும், சுஜாதா தனது கட்டுரைகளின் மூலம் நல்ல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி வைக்க படகு சரியான திசையை நோக்கித் திரும்பியது.

புத்தகங்களைப் படித்து முடிப்பது மட்டும் முக்கியமல்ல, அவைகளை நாம் சரியாக உள்வாங்கிக் கொள்கிறோமா என்பதும் அந்த உணர்வுகளை நம் சிந்தனையின் மூலம் ஜீரணித்து அதன்படி நடக்க முயல்கிறோமா என்பதும் மிக முக்கியமானது. நீதி என்று பார்த்தால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறளிலேயே அத்தனை நீதிகளும் சொல்லப்பட்டு விட்டன. என்றாலும் அவை பல்வேறு விதமாக இலக்கிய வடிவங்களில் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டாலும் நமக்கு இன்னும் அலுக்கவில்லை.

என்னிடம் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை:

முன்பொரு காலத்தில் தேடி தேடிச் சேகரித்த பாலகுமாரனின் பாக்கெட் சைஸ் நாவல்களும், கணையாழி, காலச்சுவடு போன்ற பொக்கிஷமாக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிற சிற்றிதழ்களும் புத்தகங்கள் என்ற அளவுகோலில் நிராகரிக்கப்படுமாயின் எண்ணிக்கை 230-250.

சமீபத்தில் வாங்கிய புத்தகங்கள்:

சதுரங்கச் சிப்பாய்கள் - முத்துராமன்
கோபுரம் தாங்கி - சுதேச மித்திரன்
காடு - ஜெயமோகன்
ஆனந்தாயி - சிவகாமி
கடவுள்களின் பள்ளத்தாக்கு - சுஜாதா
ரதிப் பெண்கள் திரியும் அங்காடித் தெரு - எழில்வரதன்

தற்போது படித்துக் கொண்டிருக்கிற (நூலக) புத்தகங்கள்:

நாவல் - ஜெயமோகன்
பொட்டல் - எஸ். கணேசராஜ்
·பிடல் காஸ்ட்ரோ - தா.பாண்டியன்
அகிரா குரோசாவா வாழ்க்கை சரிதம் - இளையபாரதி
கடலோர வீடு - பாவண்ணன்
காதுகள் - எஸ்.வெங்கட்ராம்
உடைபடும் மெளனங்கள் - அ.மார்க்ஸ்
சித்தன் போக்கு - பிரபஞ்சனின் சிறந்த சிறுகதைகள் - தொகுப்பு பெருமாள்முருகன்
பெரியாரியல் - மா.நன்னன்
போர் தொடர்கிறது - ஸ்பானிய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு

ரொம்ப நாட்களாக படிக்க நினைத்து ஷெல்ப்பில் இளைப்பாறுகிற நூல்கள்:

குள்ளச் சித்தன் சரித்திரம் - யுவன் சந்திரசேகர்
ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
ஜீரோ டிகிரி - சாருநிவேதிதா
The God of Small Things - Aruntati Roy

........ இன்னும் பல

எப்போதும் பிடித்தமானமானதாக இருக்கிற நூல்கள்:

சத்திய சோதனை - மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
ரத்த உறவு - யூமா வாசுகி
நிலா நிழல் - சுஜாதா
சம்ஸ்காரா- அனந்தமூர்த்தி
The Fountain Head - Any Rand
ஜி.நாகராஜனின் படைப்புகளின் தொகுப்பு
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
The oldman and sea - Ernest Emmingway
பாரதியார் கவிதைகள்

........ இன்னும் பல

வாங்கிப்படிக்க விரும்புகிற நூல்கள்:

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் - புஷ்பராஜா
ஆழிசூழ்உலகு - ஜோ.டி.குரூஸ்
பசித்த மானிடம் - கரிச்சான் குஞ்சு
சோளகர் தொட்டி - ச.பாலமுருகன்
கலகக்காரர் தோழர் பெரியார் - மு.இராமசுவாமி
நாகம்மாள், அறுவடை - ஆர்.சண்முகசுந்தரம்
ஆட்சித்தமிழ் வரலாற்றுப் பார்வை - சு.வெங்கடேசன்
விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
சினிமாவும் நானும் - மகேந்திரன்
உலக சினிமா - எஸ்.ராமகிருஷ்ணன்
One Hundred Years of Solitude - Gabriel Garcia Marquez

........ இன்னும் பல

நான் அழைக்க விரும்பும் நபர்கள்.

சுந்தரராமசுவாமி
சாருநிவேதிதா
குஷ்வந்த் சிங்
கோவை ஞானி
ப.சிதம்பரம்

இது நடைமுறையில் எளிதில் சாத்தியமில்லை என்பதால் இணைய நண்பர்களில்,

இரா.முருகன்
ஹரிகிருஷ்ணன்
அருள்
வெங்கடேஷ்
வே.சபாநாயகம்

...தம்பட்டம் முடிஞ்சாச்சு.

suresh kannan

Wednesday, June 08, 2005

3 Indian films are listed in Time's All Time Top 100 Movies

சமீபத்தில் டைம் பத்திரிகை, உலக அளவில் சிறந்த 100 படங்களை தேர்ந்தெடுத்திருந்த பட்டியலில் மூன்று இந்தியப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதில் ஒரு தமிழ்ப் படமும் இடம் பெற்றிருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவை:

(1) சத்யஜித்ரேயின் APU - A TRILOGY
(2) மணிரத்னத்தின் - நாயகன்
(3) குருதத்தின் - பியாசா

()

APU - A TRILOGY

Image hosted by Photobucket.com

அபு என்கிறவனின் மூன்று வளர்ச்சி நிலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, ரேவின் முக்கிய திரைப்படங்கள்.

1) பதேர் பாஞ்சாலி (1955)

இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு இந்தப்படம்.
இந்தியக் கிராமத்தின் ஒரு வறுமைக்குடும்பம். அபு என்கிற சிறுவனின் குடும்பம் வறுமையில் வாடுவது விஸ்தாரத்தோடும் எந்த வித பிரச்சார தொனியின்றியும் இயல்பாக சொல்லப்படுகிறது. (இந்தியாவின் வறுமையை வெளிநாட்டிற்கு விற்று பணம் சம்பாதித்து விட்டார் என்று சிலரால் ரே மீது குற்ற்ச்சாட்டு வீசப்பட்டது). அபுவின் சகோதா¢ சா¢யான மருத்துவ உதவி கிடைக்காமல் இறந்த சோகத்துடன் அந்தக் குடும்பம் ஒரு சிறு நகரத்திற்கு இடம் பெயர்கிறது.

2) அபராஜிதோ (1956)

அபு என்கிற அந்த வாலிபன் படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டு நன்றாக படிக்கிறான். இதனால் கல்கத்தாவில் மேல்படிப்பு படிக்க உதவித் தொகை கிடைக்கிறது. கணவனை இழந்த அந்த தாய்க்கோ மகனை பி¡¢ய விருப்பமில்லையென்றாலும் அவனுடைய ஆர்வத்தினால் கல்கத்தாவிற்கு அனுப்ப சம்மதிக்கிறாள். பகுதி நேர வேலை செய்து கொண்டே கல்லூ¡¢யில் படிக்கிறான் அபு. தனிமை மற்றும் மகனின் மீது உள்ள பாசம் ஆகிய உணர்ச்சிகளால் தவிக்கிறாள் தாய். அந்த உணர்ச்சி மிகுதியில் இறந்தும் போகிறாள். வேதனைப்படும் அபு எந்த வித தளையுமின்றி கட்டற்ற மனிதராகிறான்.

3) அபு சன்சார் (1959)

கல்லூ¡¢ படிப்பை முடிக்க முடியாத இளைஞன் அபு (செளமித்ர சட்டர்ஜி) வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் தனக்கேற்ற வேலையை தேடிக் கொண்டிருக்கிறான். அவன் எழுதுகிற சில சிறுகதைகளும் பிரசுரமாகிறது. அவனைத் தேடி வரும் அவன் கல்லூ¡¢ நண்பன், அவனுடைய கிராமத்தில் நடக்கவிருக்கும் ஒரு திருமணத்திற்கு அழைத்துச் செல்கிறான். அங்கு சந்தர்ப்ப சூழ்நிலையில் அபுவே மணமகனாக மாறி அபர்ணாவை (ஷர்மிளா தாகூர் - அறிமுகம்) திருமணம் செய்ய நோ¢டுகிறது. இன்பமாக கழியும் சில மாதங்களுக்குப் பிறகு பிரசவத்தில் ஒரு மகனை பெற்றெடுத்து இறந்து போகிறாள் அபர்ணா. அந்த துக்கத்தை ஜீரணிக்க முடியாமல், தன்னுடைய முற்றுப் பெறாத நாவலை தூக்கியெறிந்து விட்டு, மகனைப் பற்றிய எந்த உணர்வும் இல்லாமல் வேறு எங்கோ சென்று விடுகிறான். தன் மனைவி சாக அந்த சிசுவே காரணம் என்று அழுத்தமாக நம்புகிறான்.

பிறகு அவனின் நண்பனின் முயற்சியால் மனம் மாறி 5 வருடங்களுக்கு பிறகு திரும்ப மகனை சந்தித்து அவனுடைய பாசத்தைப் பெற முயன்று தன்னுடனே அழைத்துச் செல்கிறான்.

('பதேர் பாஞ்சாலியை பார்க்காதவர்கள், தங்கள் வாழ்வில் முழுமை பெறாதவர்கள்' என்று சுஜாதா ஒரு கட்டுரையில் கூறியிருப்பதை இங்கு நினைவு கூர்கிறேன்.

நாயகன்

Image hosted by Photobucket.com

கமல் ஏற்கெனவே 'ராஜபார்வை' போன்ற சில மாற்றுப்படங்களை நடுநடுவே முயன்றிருந்தாலும், இந்தப் படத்திற்கு பிறகு அவருடைய பயணம் வேறுதிசையில் திரும்பியது என்று நினைக்கிறேன். வணிகப்படங்களின் நாயகன் என்ற பட்டத்தையும் வசூலையும் இழக்க விரும்பாமல் அதே சமயம் வித்தியாசமான படங்களையும் முயன்று கொண்டு தமிழ்ச்சினிமாவின் தரத்தை அங்குலம் அங்குலமாக உயர்த்திக் கொண்டு சென்றதில் கமலுக்கு முக்கிய பங்குண்டு.
அப்போது எனக்கு 20 வயதிருக்கலாம். நான் வசிக்கின்ற வடசென்னையின் மின்ட் என்று குறிப்பிடப்படுகிற தங்கசாலை மணிக்கூண்டு அருகில் கிரெளன், கிருஷ்ணா (கிருஷ்ணா இப்போது மூடப்பட்டுவிட்டது) என்று இரண்டு தியேட்டர்கள் அருகருகே இருக்கும். சென்னையில் இதுமாதிரி அருகருகே இருக்கும் தியேட்டர்களுக்கு பல உதாரணங்கள் சொல்லலாம். பிரபாத், பிராட்வே - சாந்தி - தேவி என்று. இதில் எம்.ஜி.ஆர் படம் வெளியானது என்றால் மற்றொன்றில் சிவாஜி படம். இதில் கமலென்றால் அதில் ரஜினி.

இதில் கிரெளன் தியேட்டரில் 'நாயகன்' வெளியானது. ஒரு காலகட்டம் வரைக்கும் சிகரெட்டை தூக்கிப்பிடித்த ரஜினி என்னைக் கவர்ந்தாரென்றாலும், இந்த gimmicks-ஐ எல்லாம் தவிர்த்து இயல்பாக ('அவர்கள்' படத்தில் ஆய் போன குழந்தையை முகம் சுளிக்காமல் தூக்கி வைத்திருப்பாரே) நடித்துக் கொண்டிருந்த கமல்ஹாசனின் நடிப்பை இயல்பாக விரும்ப ஆரம்பித்தேன்.

இந்தப்படம் என்னுள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். ஒரு மழைநேர மாலைக்காட்சியில் இந்தப்படத்தை பார்த்துவிட்டு திரும்பும் போது என்னையே வேலு நாயக்கராக உருவகித்துக் கொண்டு விறைப்பாக வீடு திரும்பியது நினைவில் இருக்கிறது. என் வழக்கத்திற்கு மாறாக, அப்போதே கிட்டத்தட்ட 20 முறையாவது இந்தப்படத்தை பார்த்திருப்பேன். பிறகு Sun Movies சானலில் இந்தப்படத்தை தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்த போதும், குறுந்தகடாக வெளிவந்த போது வாங்கி வைத்துக் கொண்டு சமயம் கிடைக்கும் போதெல்லாம் பார்த்து ரசிப்பதுண்டு.

Mario Puzo-வின் God Father ஸ்கிரிப்டை அடிப்படையாக வைத்துக் கொண்டு பம்பாயில் வாழ்ந்த தமிழரான வரதராஜ நாயக்கர் (தாதா) என்கிறவரின் வாழ்க்கையை சொன்ன படம். தமிழ்த்திரைப்படத்தில் ஒரு Trend setter-ஆன இந்தப்படம் மணிரத்னம், இளையராஜா, P.C. Sriram, கமல்ஹாசன், லெனின்-விஜயன் ஆகியோரின் திறமைகளைக் கூட்டுக்கலவையாகக் கொண்டு மிகத்திறமையாகவும் வித்தியாசமாகவும் உருவாக்கப்பட்டபடம்.

இன்ஸ்பெக்டரிடம் மரணஅடி வாங்குகிற, ஒரு விபச்சாரியை திருமணம் செய்து கொள்கிற, ரவுடித்தனம் செய்கிற ஒரு கதாநாயகனை தன் திறமையான திரைக்கதை மூலம் மக்களை ஏற்றுக் கொள்ள வைத்த பெருமை மணிரத்னத்தைச் சாரும்.

பியாசா

Image hosted by Photobucket.com

இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்காததால் இதைப் பற்றிய விவரங்களை தர இயலவில்லை. இந்தப் படத்தை பார்த்த நண்பர்கள் இதைப் பற்றிய விவரங்களை இங்கு பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.