(எச்சரிக்கை: இதயபலகீனமுள்ள மற்றும் வன்முறையில் தீவிர நம்பிக்கை உள்ள ரஜினி ரசிகர்கள் இந்த விமர்சனத்தை படிக்காமலிருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்) :-)
ஐன்ஸ்டீனின் mc=2 விதியை விட, அதிமுக்கியமான 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரணும்' என்கிற இணையத்தின் ஆதார விதியை மீறிய செயலான 'சந்திரமுகியை' தாமதமாக விமர்சனம் எழுதும் செயலை பொறுத்தருள வேண்டுகிறேன்.
()
திருப்பதி, பழனி போகும் வேண்டுதல்களைப் போல ரஜினி படம் வந்தால் பார்த்தே தீருவது என்கிற பெரும்பான்மையான தமிழ்க்குடும்பங்களின் வேண்டுதல்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மகளுக்கு மறுநாள் பள்ளித்திறப்பு என்கிற காலக்கெடுவினால், இத்தனை நாள் பார்க்கத்துடித்து பார்க்க முடியாமல் போன சந்திரமுகி திரைப்படத்தை இன்று எப்படியாவது பார்க்க அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற அன்பு கட்டளை, மிரட்டலோடு என் மகளிடமிருந்து என் முன்வைக்கப்பட்டதால் மனதை திடப்படுத்திக் கொண்டு அருகிலிருந்த திரைப்பட அரங்கிற்கு சென்றோம். 'மின்சார தடங்கல் காரணமாக இன்று மாலை காட்சிக்கு மட்டும் ஏ.சி. இயங்காது' என்று திரையரங்கத்தினரால் வெளியே வைக்கப்பட்டிருந்த அறிவிப்பின் மூலம் இறைவன் எங்களுக்களித்த எச்சரிக்கை சமிக்ஞையை அலட்சியப்படுத்தி உள்ளே சென்றதற்கு தண்டனை பி.வாசு வடிவில் காத்திருந்தது.
ஒரு அரசியல் தெலுங்கு மசாலாப்பட வாடையோடு ஆரம்பிக்கிற இந்தப்படத்தில் ரஜினி, தான் தோன்றுகிற முதல் காட்சியிலேயே 'ஷீ'வை பார்வையாளர்களின் முகத்திற்கு நேரே நிலை நிறுத்தி காண்பித்து பூர்ணகும்ப மரியாதையோடு நம்மை வரவேற்கிறார். அதுசரி. திருப்பதி ஏழுமலையானையே தேவுடா, சூடுடா என்று மரியாதையில்லாமல் விளிப்பவருக்கு நாம் எம்மாத்திரம்?
பொதுவாக சமீபத்திய ரஜினி படங்களில் கால, தேச, வர்த்தமானங்கள் மிகச்சரியாக தெளிவாக குழப்பப்பட்டிருக்கும். முத்து படத்தில் பங்களா, சாரட், குதிரை, நாட்டிய நாடகம் எல்லாம் வர ஜமீன்தார் காலப் படம் போலிருக்கிறது நாம் எண்ணிக்கொண்டிருந்தால் ஒரு பாடல்காட்சியில் சுற்றுலா செல்லும் நவநாகர £க உடையணிந்த யுவ, யுவதிகளோடு நாயகன் ஆடிப்பாட நமக்கு தலைசுற்றுகிறது. பாபா படத்திலோ கேட்கவே வேண்டாம். காளிகாம்பாள் கோவில் அமைந்திருக்கிற தம்புச் செட்டி தெருவிலிருந்து பொடிநடையாக இமயமலைக்கு செல்கிற குறுக்குச் சந்து என்னவென்று அந்த ஏரியாவில் 35 இருக்கிற எனக்குத் தெரியவில்லை.
இந்தப்படத்திலும் இதே கலாட்டாதான். 40 வருடங்களாக பூட்டப்பட்டிருக்கிற, ஆனால் தோட்டக்காரர் தன் அழகான பெண்ணுடன் இருக்கிற, பயங்கர ஆவி உலாவுவதாக கிராம மக்களால் நம்பப்படுகிற ஒரு பங்களாவை பிரபு பிடிவாதமாக வாங்கி குடியேற அங்கு நடக்கும் குழப்பங்களை அவரின் மனோதத்துவ டாக்டரான ரஜினி தன் உயிரையும் தியாகம் செய்ய முன்வந்து (?!) தீர்ப்பதுதான் இந்த பாடாவதி படமான 'சந்திரமுகி'.
()
ரஜினி + வடிவேலுவின் (சில அபத்த) நகைச்சுவைக்காட்சிகளோடும், அந்தக்கால ஜெய்சங்கர் பட அசட்டுத் திகிலான பில்டப் காட்சிகளோடும் வளவளவென்று நகருகின்ற இந்த சீட்டுக்கட்டு மாளிகை, படத்தின் கடைசி அரைமணிநேர வலுவான காட்சிகளால் தாக்குப்பிடித்து நிற்கிறது. அந்தக் காட்சிகளும் மெனக்கெடாமல் எடுக்கப்பட்டிருந்தால் சந்திரமுகியும் பாபா சென்ற பாதையை நோக்கி பயணித்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
வழக்கமாக ரஜினி படங்களுக்கேயுரிய கதையையும் காட்சிகளும் என்று இல்லாமல், ஒரு கதையில் ரஜினியை பொருத்தியிருக்கும் விஷயமே நம்மை சற்று ஆசுவாசப்படுத்துகிறது.
ஆனால் இதில் split personality என்கிற பிளவாளுமையை வைத்துக் கொண்டு இவர்கள் அடித்திருக்கும் கூத்துதான் பயங்கர எரிச்சலை மூட்டியிருக்கிறது. பிளவாளுமை நோய் என்பது ஒருவர் தன்னை மற்றொருவராக தீவிரமாக நம்புவது. அவ்வாறு நம்பும் நேரங்களில் அவர் மற்றொருவராகவே ஆகி செயல்படுவதும் அப்போது தன்னைப்பற்றின நிலையை தற்காலிகமாக முழுவதுமாக மறப்பதுமாகும்.
இதைக் குணப்படுத்த ஒரு சிறந்த மனநோய் மருத்துவரின் கவனிக்குப்பிற்குட்படுத்தப்பட்ட மருத்துவ நடவடிக்கைகளும், இதமான கவுன்சிலிங்கும் தேவைப்படுமே ஒழிய, மருத்துவர் தம் உயிரை பயணம் வைத்து நோயாளியைக் குணப்படுத்துவது மாதிரியான அதி தீவிர நகைச்சுவைகள் எல்லாம் சினிமாக்களில் மட்டுமே சாத்தியம்.
இந்தப்படத்தில் முக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது வித்யாசாகரின் அற்புத இசையமைப்பையும், (90-களில் இளையராஜா கழற்றிப் போட்ட சட்டையை தூசி தட்டி உபயோகித்தாலும்) தோட்டா தரணியின் (?) திறமையான கலை இயக்கத்தையும் (அந்த ஜமீன்தார் மாளிகையின் பிரம்மாண்டம் இன்னும் கண்ணில் நிற்கிறது) கடைசி அரை மணி நேரத்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்ட ஜோதிகாவையும். வேட்டைக்கார ராஜாவாக வில்ல வேடத்தையும் துணிந்து நடித்து பழைய ரஜினியை நினைவுப்படுத்தியதையும் குறிப்பிட வேண்டும். சந்திரமுகி ஒவியத்தை வரைந்த அந்த கலைஞனுக்கும் ஒரு ஸ்பெஷல் பாராட்டு.
()
படம் பார்த்து எனக்குத் தோன்றிய சில 'ஏன்'கள்?
(1) சங்கீதத்தில் மிகுந்த திறமை கொண்டு 'அத்திந்தோம் திந்திந்தோம்' பாடுகிற ரஜினி, நயனதாரா குழந்தைகளுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுப்பதை அவ்வளவு தீவிரமாக எதிர்ப்பது ஏன்? மற்ற நேரங்களில் கொத்தும் குலையுமாக எந்தப் பிரச்சினையுமில்லாமல் உலவுகிற நயனதாரா, ரஜினியால் கண்டிக்கப்படுகிற காட்சியில் நாக்கை இழுத்துக் கொண்டு ஒரு மாதிரியாக பேசுவது ஏன்?
(2) கதைப்படி தன்னையே சந்திரமுகியே தீவிரமாக நினைத்துக் கொள்கிற ஜோதிகா, எதிர்வீட்டில் குடியிருக்கிறவனை தன் காதலனாகவும் நம்புகிறாள். ஆனால் சிகிச்சையின் (?!) முடிவில் வேட்டைக்கார ராஜாவைக் கொன்றதாக நினைத்துக் கொண்டவுடன் குணமாவது எப்படி? அவள் இப்பவும் தீவிரமாக காதலிக்கிறவனுக்கும் ஒரு தீர்வு கிடைத்திருந்தால்தானே அவள் குணமாவது முழுமையாகியிருக்கும்?
(3) அமெரிக்காவில் கோல்டுமெடல் வாங்கிய மனோதத்துவ மருத்துவர் என்று சொல்லிக் கொண்டு, அதற்குரிய முதிர்ச்சியே இல்லாமல் எப்பவும் ஜெர்கினும், கூலிங்கிளாசுமாய் ஒரு இளைஞனை ஒத்த உடைகளை அணிந்து உலா வரும் ரஜினி, ஜோதிகாவிற்கு ஏற்பட்டிருப்பது மனநோய் என்று தெரிந்தும் பேய் ஒட்டுகிறவரை ஆதரிப்பதும் சிகிச்¨சியின் போது அவர் ஒத்துழைப்பையும் கோருவது உச்சக்கட்ட அபத்தம். நிஜவாழ்வில் தாம் நம்புகிற இந்து ஆன்மிகத்தையும் சம்பந்தப்பட்ட சடங்குகளையும், நிழலிலும் கைவிட விரும்பவில்லையா ரஜினி?
()
'பன்னீர் புஷ்பங்கள்' என்கிற பதின்ம வயதில் ஏற்படும் காதல் குழப்பங்களைப் பற்றி தெளிவாக படம் எடுத்த (பாரதி) வாசுவின் திறமைகள் எந்த நேரத்தில், காரணத்தில் திசைமாறின என்று ஆயாசமாய் இருக்கிறது. வண்டி வண்டியாய் தமிழ் இலக்கியங்களை வைத்துக் கொண்டு 'கதை கிடைக்கவில்லை' என்று இந்த சினிமாக்காரர்கள் செய்கிற கேலிக்கூத்துகளும் புரியவில்லை.
12 comments:
//கொத்தும் குலையுமாக எந்தப் பிரச்சினையுமில்லாமல் உலவுகிற நயனதாரா//
வன்மையாக கண்டிக்கின்றேன்...
பன்னீர் புஷ்பங்கள் எடுத்தது பாரதி(எ) வாசுவா? நம்பவே முடியவில்லை
இன்றளவிலும் பி.வாசுவின் படத்தில் அதிக பட்சம் வெறுப்பது உடன்பிறப்பு என்றொரு படம்... முதல்நாளே காசு கொடுத்து வயிறெறிந்துவிட்டு வந்த படம் தான் அது...
ஐன்ஸ்டீனின் mc=2 விதியை
????????????
சுரேஷ்கண்ணன்,
அது E=Mc^2
Excellent Review. Good post.
- Balaji
//வன்முறையில் தீவிர நம்பிக்கை உள்ள ரஜினி ரசிகர்கள்//
சுரேஷ் கண்ணா! இது என்ன புதுசா இருக்கு? நீங்க ஊர்லயே இருக்கிற பார்ட்டி. அதனாலே உண்மைன்னு தெரிஞ்சுதான் எழுதியிருப்பீங்க என்று நம்புகிறேன். ரஜினி ரசிகர்கள் ஏதும் வன்முறை செய்து இருக்காங்களா இதுக்கு முன்னாடி? எனக்குக் கொஞ்சம் சொல்லுங்க. "நூல் விட்டுப் பார்க்க" இதை எழுதல. நிஜமாவே தெரிஞ்சுக்கத்தான் கேட்கறேன்.
அன்புடன், பி.கே. சிவகுமார்
//இமயமலைக்கு செல்கிற குறுக்குச் சந்து என்னவென்று அந்த ஏரியாவி//
ஹஹஹஹ் ... இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்..
//'லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரணும்'//
லேட்டா வந்தாலும் ரொம்ப "ஹாட்"டா வந்திருக்கீங்க :)
பாத்து... சுரேஷ்கண்ணன் சார், ரசிகருங்க ஆட்டோ ல உங்களை தேடுறதா கேள்வி.. !!
//கொத்தும் குலையுமாக எந்தப் பிரச்சினையுமில்லாமல் உலவுகிற நயனதாரா//
வன்மையாக கண்டிக்கின்றேன்... நயண்தாராவின் படத்தை போடாமல் விட்டதற்கு
அய்யா.. எல்லாரும் எப்படியோ சந்திரமுகி பார்த்துட்டாங்க... 'யாம் பெற்ற'இன்பம்(?)'... :-)
///வன்மையாக கண்டிக்கின்றேன்... ///
அவங்கள கண்டிச்சு என்னங்க பண்றது? இயற்கை அவங்களுக்கு கொடுத்திருக்கிற பரிசு அது. :-) (சும்மா தமாசுக்கு. உங்க உணர்வு புரியுது.)
///பன்னீர் புஷ்பங்கள் எடுத்தது பாரதி(எ) வாசுவா? நம்பவே முடியவில்லை///
இன்றைக்கு இயக்குநர்களாகவும் நடிகர்களாகவும் இருக்கிற சந்தான பாரதியும், பி.வாசுவும் இணைந்து முதன்முதலில் இயக்கிய படம்தான் பன்னீர் புஷ்பங்கள். அந்த படம் கொடுத்த வணிக ரீதியான தோல்வியில் பயந்து போய் இருவரும் பாதையை மாற்றிக் கொண்டனர் என்று யூகிக்கிறேன்.
///அது E=Mc^2 ///
நன்றி. ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிடுச்சு. :-)
///Excellent Review. Good post.///
நன்றி பாலாஜி.
///ரஜினி ரசிகர்கள் ஏதும் வன்முறை செய்து இருக்காங்களா இதுக்கு முன்னாடி? எனக்குக் கொஞ்சம் சொல்லுங்க////
ரஜினியைப் பற்றியோ அவரது படங்களைப் பற்றியோ தவறாய்ப் பேசினால் கொலை வெறியுடன் பாய்ந்து அடிக்கிற வருகிற நண்பர்களை முன்னர் சந்தித்திருக்கிறேன். ஆனால் ரஜினி ரசிகர்களின் மீது நான் வைத்திருந்த ஒட்டுமொத்தமான பிம்பம், நண்பர் ரஜினி ராம்கியை சந்தித்தற்கு பின்பு மாறிப் போனது.
///ஹஹஹஹ் ... இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.. ///
நன்றி வீ.எம்.
இப்பத்தான் படிச்சேன். ரஜினி படத்துக்கு இந்தமாதிரியெலலம் ரெவ்யு எழுதறது தப்பு. ரொம்பத்தப்பு. ரஜினி என்ன திரைக்காவியமா படைக்க நினைக்கிறார்? ஒரு ரூவா செலவு பண்ணமா, பத்து ரூவா வந்துதா, அதுல பத்து பைசா செலவு பண்ணி ஹிமாலயாஸுக்கு ஒரு ஜாலி டிரிப் அடிச்சமா, திரும்பி வந்து டெய்லி ஒரு பத்திரிகைய கூப்டு பேட்டி குடுத்தமான்னு ஒருமாதிரி கர்மயோகி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்.அவரப்போயி.. சேச்சேச்சேச்சேச்சே.. என்ன சுரேஷ் நீங்க? சின்ன வயசுல அம்புலிமாமா படிச்சி ரசிக்கலியா? அந்தமாதிரி எடுத்துக்கிட்டுப் போஒவிங்களா..
suresh.... when u go to saravanabhavan go with the expectation of sambar and chatni....
anjappar pona think about chiken kurma....
do get confused. ok.
kurai than solla vendum endral annianilum aayiram kurai sollalaam
ithu rajini padam.... satyajit ray padam illa....
u told u went for ur child.... so ask ur child how it was and write her comments...
kannan
ரஜனியிடம் பக்தி இருந்தால் அதைப்பக்குவமாக வைத்துக்கொள்ளட்டும், ஆனால் அறிவியலுடன்கூடிய சிந்தனைகள் கூர்மையான சமூகப்பார்வைகள் அறவே இல்லை என்பது மீண்டும் மீண்டும் ஊர்ஜிதமகிறது..அதோட அரசியலுக்கு வந்து தேவுடா…….. தேவுடா!!
Post a Comment