Showing posts with label ஆஸ்கர் விருது. Show all posts
Showing posts with label ஆஸ்கர் விருது. Show all posts

Thursday, October 05, 2017

ஆஸ்கர் விருது 2017 - மாற்றத்தின் அடையாளம்




எந்தவொரு விருதும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதில்லை. பொதுவாக எல்லா  விருதுகளிலும் ஏதோவொரு அரசியல் உள்ளுறையாக பதுங்கியிருக்கும். ஆஸ்கர்  விருதும் அப்படியே. உலகளாவிய வணிகச்சந்தையை கைப்பற்றிக் கொண்டிருக்கிற ஹாலிவுட் தேசத்திலிருந்து இந்த விருது தரப்படுவதால் பரவலான கவனத்திற்கு  உள்ளாகிறது. இந்த விருது தொடர்பாக பல சர்ச்சைகள், புகார்கள் ஏற்கெனவே நிறைய உள்ளன. அவற்றில் இரண்டு பிரதானமானது. ஒன்று, வெள்ளையினத்தவரின் ஆதிக்கம். இவர்களுக்கே பெரும்பாலான விருதுகளும் அங்கீகாரங்களும் வழங்கப்படும். காரணம், இனம் மற்றும் நிறவெறி அரசியல். குறிப்பாக கருப்பினத்தவர்கள் அப்பட்டமான வெறுப்புடனோ அல்லது நாசூக்கான தந்திரத்துடனோா ஒதுக்கப்படுவார்கள்.

இன்னொன்று, அமெரிக்க தேசத்தின் இறையாண்மையை விதந்தோதும் திரைப்படங்களுக்கு உறுதியான அங்கீகாரம். பரிந்துரைப் பட்டியலில் இதர சிறந்த திரைப்படங்கள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி விட்டு அமெரிக்க ஆதரவை அடிநாதமாக கொண்டிருருக்கும் திரைப்படங்களுக்கு விருதுகள் அளிக்கப்படும் தந்திரம். உலகளாவிய அளவில் கவனிக்கப்படும் விருதாக இருந்தாலும் அடிப்படையில் இது அமெரிக்காவில் உருவான ஆங்கில திரைப்படங்களுக்குத் தரப்படுவது என்பதால் இரண்டாவதிலுள்ள அப்பட்டமான சுயநல அரசியலை சற்று ஒதுக்கி வைக்கலாம். ஆனால் முதலாவதாக உள்ள இன அரசியல் சகிக்க முடியாதது மட்டுமல்ல, மனித சமத்துவத்திற்கு எதிரானதும் கூட.

ஆஸ்கர் விருதிற்கான தேர்வுக் குழுவில் இருப்பவர்களில் பெரும்பான்மையான சதவீதத்தினர் வெள்ளையினத்தவர்களே.  88 வருடங்களைக் கடக்கும் ஆஸ்கரின் நீண்ட வரலாற்றில், கறுப்பினக் கலைஞர்கள் இதுவரை  14 விருதுகளை மட்டுமே வென்றுள்ளனர். அதுவும் பெரும்பாலும் துணை நடிகர்களுக்கான விருதாகவே அது இருக்கும். வெள்ளையினத்தவர்களால் கேலி செய்யப்படும், இழிவு படுத்தப்படும் பாத்திரங்களாக அவை இருக்கும். பிரதான பாத்திரத்திற்கு தரப்பட்ட விருதுகள் என்பது அரிதான விதிவிலக்குகளே.

1939ல் " கான் வித் தி விண்ட் " படத்தில் நடித்த Hattie McDaniel  என்கிற கறுப்பின நடிகை  சிறந்த துணை நடிகைக்கான விருதை முதன்முதலாக பெற்றார். 1964-ல் Sidney Poitier என்கிற கறுப்பின நடிகர், சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றார். டென்சல் வாஷிங்டன்  - 2002-ம் ஆண்டிலும்  ஜேம்மி ஃபாக்ஸ் 2005--ம் ஆண்டிலும் ஃபாரஸ்ட் விட்டேகர் 2006--ம் ஆண்டிலும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினைப் பெற்ற  கருப்பின நடிகர்கள். 2002-ல் Monster's Ball படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை வென்றார் Halle Berry.  இதுவரையான வரலாற்றில்  சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் வென்ற ஒரே கறுப்பின பெண் ஹாலேபெர்ரி மட்டும் தான்.


இந்த விருதிற்குப் பின்னால் வணிகம் சார்ந்த நடவடிக்கைகளும் நிழலான செயற்பாடுகளும் நிறைய உள்ளன. இதனால் கலை சார்ந்த அர்ப்பணிப்புகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு வணிக நோக்கு முயற்சிகள் முன்னிலை பெறும் அநீதிகள் நிகழ்கின்றன.  இந்த விருதைப் பெறுவதற்காக அடித்துப் பிடித்து நடைபெறும்  தள்ளுமுள்ளு பிரமோஷன்கள், லாபிகள் நடந்து கொண்டிருக்கும் அதே சமயத்தில் பல்வேறு காரணங்களுக்காக  மனச்சாட்சியுள்ள சில கலைஞர்கள் ஆஸ்கர் விருதை நிராகரித்த, விருது நிகழ்ச்சியைப் புறக்கணித்த சம்பவங்கள் இதற்கு முன் நிகழ்ந்துள்ளன. 45-வது அகாதமி விருதில் 'காட்ஃபாதர்' திரைப்படத்திற்காக 'சிறந்த நடிகராக' தேர்வு செய்யப்பட்ட மார்லன் பிராண்டோ விருதைப் பெற மறுத்து விட்டார். இனவெறி காரணமாக திரைத்துறையில் செவ்விந்தியர்கள் மோசமாக நடத்தப்படுவதைக் கண்டித்து தமக்கு அளிக்கப்பட்ட விருதை நிராகரித்தார். அவருடைய பிரதிநிதி ஒருவர் விழா மேடையில் பிராண்டோவின் கடிதத்தை வாசித்தார். இது போல் பல கண்டனங்களும் சர்ச்சைகளும் இந்த விருது குறித்து  ஏற்கெனவே உள்ளன.

***

ஆனால் சமீபத்தில் நிகழ்ந்து முடிந்த,  2017-ம் ஆண்டிற்கான 89வது அகாதமி விருது வழங்கும் நிகழ்ச்சியில் இதற்கான மாற்றம் மெல்ல உருவாகி வருவதை கவனிக்க முடிகிறது. அரங்கத்தில் எழுந்த  கரவொலிகளும் கூக்குரல்களும் இனவாத ஆதிக்க அரசியலுக்கு எதிரானவையாக இருந்ததைக் காண மகிழ்ச்சி ஏற்பட்டது. 'வந்தேறிகளை வெளியேற்றுவோம், உள்ளே அனுமதிக்க மாட்டோம்' என்றெல்லாம் அப்பட்டமான இனவெறி அரசியலை முன்வைக்கும் டிரம்ப் அமெரிக்க அதிபராக ஆகியிருக்கும் சூழலில், இது தொடர்பான வன்முறைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையில் கலைஞர்களின் எதிர்ப்புக்குரலில் உள்ள இந்த அரசியல் சமிக்ஞைகள் முக்கியமானதாக அமைகின்றன. மதம், இனம், நிறம் போன்ற கற்பிதங்களின் மீதான பாகுபாட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள் என்பது நிரூபணமாகிறது.

'சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட' பிரிவில் இரானின் 'தி சேல்ஸ்மேன்' விருதை வென்றது. இந்த திரைப்படத்தின் இயக்குநர் அஸ்ஹார் ஃபர்ஹாடி விருது நிகழ்ச்சியைப் புறக்கணித்தார். இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வர டிரம்ப் ஏற்படுத்தியிருக்கும் தடைகளை கண்டிக்கும் வகையில் அவரது புறக்கணிப்பை ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சரமாரியாக கிண்டலடித்துக் கொண்டே இருந்தார். விருது ஒன்றை வழங்க வந்த மெக்ஸிகோவைச் சேர்ந்த நடிகரான கார்ஸியா பெர்னால் 'நம்மை பிரித்தாள எண்ணும் எல்லா சுவர்களையும் எதிர்க்கிறேன்' என்று குறிப்பிட்டது பார்வையாளர்களிடமிருந்து  பலத்த வரவேற்பைப் பெற்றது.

இனவாத அரசியலுக்கு எதிரான கலைஞர்களின் சமிக்ஞைகள், இது சார்ந்த விமர்சனங்களுக்கு பார்வையாளர்களிமிருந்து கிடைத்த ஆதரவு தவிர, இந்த வருட விருதுப்பட்டியலில் கருப்பினக் கலைஞர்கள் பங்கெடுத்த படைப்புகள் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் இடம் பெற்றிருந்தது வரவேற்கத்தக்கது. தேர்வுப் பட்டியல்களிலும் விருது விழா  நிகழ்வு பங்களிப்புகளிலும் கறுப்பினத்தவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது குறித்து கடந்த சில வருடங்களில் எழுந்த கண்டனங்களும் விமர்சனங்களும் கூட ஆஸ்கர் கமிட்டியின் இந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.

சிறந்த திரைப்படமாக 'மூன்லைட்' தேர்ந்தெடுக்கப்பட்டதையே இதற்கு சான்றாக சொல்லலாம்.  முழுக்க முழுக்க கருப்பினக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட திரைப்படம் ஆஸ்கர் விருது வெல்வது இதுவே முதன்முறை. என்றாலும் இது தொடர்பான அறிவிப்பில் நிகழ்ந்த குளறுபடி தற்செயலானதுதானா என்பதை கவனிக்க வேண்டும். சிறந்த படம் என்று 'லா லா லேண்ட்' முதலில் அறிவிக்கப்பட்டு பிறகு திருத்தப்பட்டது. ஆஸ்கர் வரலாற்றிலேயே இது போன்ற தவறு இதற்கு முன் நிகழ்ந்ததில்லை.  'மூன்லைட்' திரைப்படத்தின் இயக்குநர் அடலே ரொமன்ஸ்கியால் இந்த இனிய அதிர்ச்சியை நம்பவே முடியவில்லை. மிகுந்த நெகிழ்வுடன் விருதைப் பெற்றுக் கொண்டார். இதே திரைப்படத்தில் நடித்த மஹெர்சலா அலி 'சிறந்த துணை நடிகருக்கான' விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. கறுப்பினத்தைச் சார்ந்த இஸ்லாமியர் ஒருவர் ஆஸ்கர் விருது பெறுவது இதுவே முதல் முறை என்பதையும் கவனிக்க வேண்டும். 'சிறந்த தழுவல் திரைக்கதை'க்கான விருதையும் இத்திரைப்படம் பெற்றது.

அதுவரை பெரும்பாலான ஹாலிவுட் திரைப்படங்களில் கருப்பினத்தவர்களை சமூகவிரோதிகளாகவும் முரட்டுத்தனமானவர்களாகவும் சித்தரித்த போக்கிலிருந்து விலகி அவர்களின் வாழ்வியலில் உள்ள துயரத்தின் பக்கத்தை பதிவு செய்தது 'மூன்லைட்' ஒரு கருப்பின இளைஞனின் வாழ்க்கையை மூன்று வெவ்வேறு வளர்ச்சி படிநிலைகளில் விவரிக்கின்ற திரைப்படம் இது. சிரோன் என்பவனின் உளவியல் சிக்கல்களையும் பாலியல் சார்ந்த அடையாளக் குழப்பங்களையும் எளிமையான திரைமொழியில் உரையாடியது. இந்த திரைப்படம் எட்டு பிரிவுகளில் நாமினேஷன் செய்யப்பட்டிருந்தது. சிறுவனின் தாயாகவும் போதைப் பழக்கத்தில் சிக்கியிருந்த பெண்ணாகவும் நடித்திருந்த Naomie Harris-ன் பங்களிப்பு அபாரமானதாக இருந்தது. சிறந்த துணை நடிகைக்கான நாமினேஷன் பட்டியலில் இவர் இடம் பெற்றிருந்தாலும் விருதை வெல்லவில்லை.

***

1950-ல் வெளிவந்த All About Eve மற்றும் 1997-ல் வெளியான 'டைட்டானிக்' ஆகிய திரைப்படங்களுக்கு ஈடாக, 14 பிரிவுகளில் நாமினேஷன் ஆன வரலாற்று சாதனையைப்  படைத்திருந்தது லா லா லேண்ட். சிறந்த இயக்குநர். சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகை  உள்ளிட்டு ஆறு பிரிவுகளில் வெற்றி பெற்றது.

அடிப்படையில் இதுவோர் எளிய காதல் கதை. அபாரமான இசையும் பாடல்களும் காதலுணர்வு பொங்கி வழியும் திரைக்கதையும் இந்தப் படத்தின் காண்பனுபவத்தை உற்சாமாக்குகிறது. குறிப்பாக இதன் உச்சகக்காட்சி உருவாக்கப்பட்ட விதம் அபாரமானது. இதன் நாயகன் வெள்ளையினத்தவனாக இருந்தாலும் ஜாஸ் இசையை விதந்தோடியபடியே இருக்கிறான். ஜாஸ் இசை ஆப்ரிக்க அமெரிக்கர்கள் உருவாக்கிய விளிம்பு நிலைச் சமூகத்தின் முக்கியமான கலை அடையாளம் என்பதையும் கவனிக்கலாம். இந்த திரைப்படத்திற்காக 'சிறந்த இயக்குநர்' விருதைப் பெற்ற, 32 வயதான Damien Chazelle, இந்தப் பிரிவில் விருது பெற்றவர்களிடையே குறைந்த வயதுள்ளவராவார்.

சிறந்த திரைப்படத்திற்கான விருது மெல் கிப்சன் இயக்கிய Hacksaw Ridge-க்கு கிடைக்கலாம் என்று நான் அனுமானித்திருந்தேன். போர் திரைப்படமான இது, ஹாலிவுட் திரைப்படங்களின் வழக்கமான போக்கைப் போல  அமெரிக்க ஆதரவை அடிநாதமாக கொண்டிருந்தது.  இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவிற்கும் ஜப்பானிற்கும் நிகழும் போர் ஒன்றில் ஜப்பானியர்களை மூர்க்கமானவர்களாகவும் தந்திரக்காரர்களாகவும் இத்திரைப்படம் சித்தரித்திருந்தது.

இதற்கு மாறாக அமெரிக்க தரப்பில் போருக்குச் செல்லும் நாயகன் அமைதியின் அடையாளமாகத் திகழ்கிறான். இந்த அரசியலைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இதுவொரு சிறந்த திரைப்படமே.. தன்னுடைய சிறுவயது கசப்பான அனுபவங்களால் இனி தன் வாழ்நாளில் எந்நாளும் வன்முறையைக் கைக்கொள்ள மாட்டேன் என்கிற உறுதியை போர்க்களத்திலும் கடைப்பிடிக்கும் ஒருவரைப் பற்றிய திரைப்படம். Desmond Doss என்கிற நபரின் வாழ்க்கைச் சம்பவங்களையொட்டி உருவானது. போர்க்களத்தில் காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடிய வீரர்கள் பலரை தனியொருவராக இவர் காப்பாற்றினார்.

சிறந்த அனிமேஷன் திரைப்படமாக 'ஜூடோபியா' தேர்வானது. இனப்பாகுபாடுகளும் வன்முறையும் அல்லாத ஒரு கற்பனை உலகம் சாத்தியமானால் அது எத்தனை இனிமையானதாக இருக்கும் என்பதை சுவாரஸ்மாக விவரிக்கிறது. ஆனால் இதை விடவும் 'மோனா' திரைப்படம் எனக்கு முக்கியமானதாகப் படுகிறது. கருப்பினச் சிறுமியின் கடல் தாண்டும் சாகசங்களின் மூலம் விரியும் இந்த திரைப்படம், இயற்கையின் மிக ஆதாரமான இதயமாக விளங்கும் பசுமையை மனித குலம் மெல்ல சுரண்டிக் கொண்டு எத்தனை அட்டூழியங்களை நிகழ்த்துகிறது என்பதை மறைமுகமான பொருளில் இடித்துரைக்கிறது.

***

சிறந்த துணை நடிகைக்கான விருதை கருப்பினப் பெண்ணான  'வயோலா டேவிஸ்' பெற்றார். 'பென்சஸ்' திரைப்படத்தில் அபாரமாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு கிடைத்தது. மூன்றாவது முறையாக நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் அவர் விருதை இதுவே முதல் முறை. மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் தனது ஏற்புரையை வழங்கினார். " மிகப்பெரும் கனவு கண்டு, அந்தக் கனவுகள் நனவாவதற்கு முன்னரே மரித்துப்போன மக்களின் உடல்களில் மிச்சம் இருக்கும் அந்தக் கதைகளையே நான் சொல்ல விரும்புகிறேன். மக்களின் கதைகளைத் தோண்டி எடுங்கள்" என்கிற வேண்டுகோளை படைப்பாளிகள் முன் வைத்தார்.
 
'Loving' திரைப்படத்தில் அபாரமாக நடித்திருந்த Ruth Negga-விற்கு 'சிறந்த துணை நடிகை' விருது கிடைக்கக்கூடும் என்கிற என் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. போலவே சிறந்த நடிருக்கான விருது 'பென்சஸ்' திரைப்படத்திற்காக டென்ஷல் வாஷிங்டனுக்கு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால் 'மான்செஸ்டர் பை த சீ ' திரைப்படத்திற்காக கேஸே அப்லெக் அந்த விருதை தட்டிச்சென்றது நியாயமான தேர்வே.

Garth Davis இயக்கிய 'lion' திரைப்படம் ஏறத்தாழ இந்திய திரைப்படம் என்று சொல்லி விடலாம். அந்த அளவிற்கு படத்தின் முதற்பகுதி காட்சிகள் பெரும்பாலும் இந்திய நிலப்பகுதியில் படமாக்கப்பட்டிருந்தன. 'ஸ்லம்டாக் மில்லியனர்' பாணியில் ஆஸ்கர் விருதை குறிவைத்து எடுக்கப்பட்டதோ என்கிற சந்தேகம் எழுந்தாலும் (தேவ் பட்டேல்தான் இதிலும் பிரதான பாத்திரத்தை ஏற்றிருந்தார்) இது அபாரமாக உருவாக்கப்பட்ட நெகிழ்வான திரைப்படம்.

வெளிநாட்டவரால் தத்தெடுக்கப்பட்ட ஓர் இளைஞன், தன் குடும்பத்தை பிரிந்த துயர் தாங்க முடியாமல் பல மாதங்களாக தேடி பின்பு அவர்களை கண்டடையும் உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைக்கதை. மிகையுணர்வுகளால் அல்லாமல் இயல்பான தொனியில் உருவாக்கப்பட்டது பாராட்டத்தக்கது. ஆறு பிரிவுகளில் நாமினேஷன் ஆகியிருந்தாலும் எந்தப் பிரிவிலும் விருதை வெல்லவில்லை. 'சிறந்த துணை நடிகருக்கான' விருதை தேவ் பட்டேல் வெல்லக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு  இந்திய ரசிகர்களிடையே இருந்தது. வளர்ப்புத் தாயாக நடித்திருந்த நிகோல் கிட்மன் தனது அபாரமான நடிப்பைத் தந்திருந்தார்.  இதில் நடித்த சிறுவனான சன்னி பவார், விருது விழாவில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தான்.


இதர பிரிவுகளில் இன்னமும் பல விருதுகள் வழங்கப்பட்டிருந்தாலும் இந்த வருட தேர்வுகளில் கருப்பினத்தவர்களின் அங்கீகாரம் சில விருதுகளால்  நியாயமான முறையில் சாத்தியமாகத் துவங்கியவதை குறிப்பிடத்தகுந்த மாற்றமாகவும் நல்ல அடையாளமாகவும் கருத வேண்டியிருக்கிறது. இனவெறி பாகுபாட்டு அரசியலும்  அது சார்ந்த வன்முறைகளும் பெருகுவதை கலை சார்ந்த மனங்களாலும் நுகர்வுகளாலும்தான் மட்டுப்படுத்த முடியும். இதுவொரு மிகையான நம்பிக்கையாக இருந்தாலும் இருள் மட்டுமே நிறைந்திருக்கும் வெற்றிடத்தில் ஒரு துளி வெளிச்சம் ஏற்பட்டாலும் அது மகிழ்ச்சிதானே?

suresh kannan

Tuesday, March 15, 2016

ஆஸ்கர் விருது 2016 - குமுதம் கட்டுரை - Uncut version



கேனஸ்,  பாஃப்டா, வெனிஸ் போன்று உலகெங்கிலும் வழங்கப்படும் பல சர்வதேச சினிமா விருதுகள் இருந்தாலும் கொட்டாம்பட்டியில் உள்ள ஆசாமி கூட  வாட்ஸ்-அப்பில் ஆவலாக கவனிக்கும் அளவிற்கு புகழ்பெற்றது ஆஸ்கர் விருது.

 'மாப்ள.. இந்த வருஷம் நிச்சயம்டா"  என்று சில பல சமயங்களில்  எதிர்பார்க்கப்பட்டு 'ஆஸ்கர் நாயகன்' என்கிற பட்டத்தோடு மட்டும் திருப்தியடைய வேண்டிய கமல் ரசிகனின்  நிலைமையைப் போலவே ஹாலிவுட்டில் உள்ள டிகாப்ரியோவின் ரசிகனுக்கும் ஆகியிருந்திருக்கும். 'இனிமே வயசுக்கு வந்தா என்ன.. வராட்டி என்ன?' என்கிற அளவிற்கு சோர்ந்திருந்தார்கள் அவரது ரசிகர்கள். இந்த வருடமாவது   டிகாப்ரியோவிற்கு ஆஸ்கர் கிடைக்குமா என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

கடந்த வருடங்களில் சிறந்த நடிகருக்கான பிரிவில் இதுவரை நான்கு முறை நாமினேட் ஆகியும் அது கிடைக்காத வெறுப்பில் விருதுக் கமிட்டியை 'F***k you' என்று அவர் கெட்ட வார்த்தையால் திட்டிய ராசியோ என்னவோ இந்த ஐந்தாவது முறையில் விருதை வென்றே விட்டார் டிகாப்ரியோ. தி ரெவனெண்ட் திரைப்படத்திற்காக 'சிறந்த நடிகர்' பிரிவில் கிடைத்த விருது அது. அவருடைய தொடர்ந்த ஆர்வத்திற்கும் அர்ப்பணிப்பிற்குமான சரியான பரிசு என்றும் சொல்லலாம்.

தி ரெவனெண்ட் - 19-ம் நூற்றாண்டின் காலக்கட்டத்தில் நிகழும் கதை. மிருகங்களின் தோலுக்காக வேட்டையாடும் வெள்ளையர்களுக்கும் செவ்விந்திய பழங்குடி  இனத்தவருக்கும்  இடையிலான சண்டையின் பின்னணியில் ஒரு தனிமனிதனின் உயிர்வாழும் வேட்கையையும் துரோகத்திற்காக பழிவாங்கும் அவனின் இடைவிடாத துரத்துதலையும் கொண்ட உக்கிரமான பாத்திரத்தில் அசத்தியிருந்தார் டிகாப்ரியோ.

'அப்பாடா! இப்பவாவது கொடுத்தீங்களேடா... என்று விருதை வாங்கிக் கொண்டு நகர்ந்து விடாமல் சமகாலத்தின்  அரசியல் பிரச்சினை குறித்து ஏற்புரையில் டிகாப்ரியோ பேசியதுதான் முக்கியமான விஷயமே.

 'புவி வெப்பமயமாதல் குறித்து உண்மையை பேசும் தலைவர்களை.  சூழலை  மாசுப்படுத்தும் மனிதர்கள் மற்றும் பெரும் நிறுவனங்களை ஆதரித்து பேசாத தலைவர்களை,  புவி வெப்பமயமாதலால் பாதிக்கப்படும்,  உலகம் முழுவதும் உள்ள பழங்குடி மக்களுக்காகவும்,  கோடான கோடி  ஏழைகளுக்காகவும் பேசும் தலைவர்களை, நாம் ஆதரித்து ஆக வேண்டும்.”

***

தி ரெவனெண்ட் திரைப்படம் 'சிறந்த இயக்குநர்' மற்றும் 'சிறந்த ஒளிப்பதிவு' ஆகிய பிரிவுகளிலான விருதையும்  வென்றது. இதன் இயக்குநரான அலெஹாந்த்ரோ கான்சலஸ் கடந்த ஆண்டும் ''The Birdman' என்கிற திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த திரைப்படத்திற்கான விருதை 'Spot Light' வென்றது. கிறிஸ்துவ பாதிரிமார்கள் சிறார்களின் மீது நிகழ்த்தும் பாலியல் குற்றங்கள் நீண்ட காலமாக மறைத்து வைக்கப்பட்டிருக்க, புலனாய்வு பத்திரிகையின் குழு ஒன்று அந்தக் குற்றங்களை தோண்டி எடுக்கிறது. உண்மைச் சம்பவங்களையொட்டி உருவான  இத்திரைப்படம் ஆறு பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்தாலும் 'சிறந்த திரைப்படம்' மற்றும் 'சிறந்த அசல் திரைக்கதை' ஆகியவற்றில் விருது பெற்றது.

டிகாப்ரியோவைத் தவிர இந்த வருடத்தில் விருது பெற்ற இன்னொரு மிக மிக முக்கியமான நபர் என்று இத்தாலிய இசையமைப்பாளர்  என்னியோ மாரிக்கோனைச் சொல்ல வேண்டும். 'A Fistful of Dollars' போன்ற வெஸ்டர்ன் திரைப்படங்களில் கேட்ட, புல்லாங்குழலின் உன்னதத்திற்கு இணையான மெல்லிய விசில் சப்தமும்  தூரத்தில் ஒலிக்கும் தேவாலய  மணியோசையும் உங்கள் நினைவுக்கு வருகிறதா? உலகத்திலுள்ள மிக முக்கியமான பின்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இவரைக் கொண்டாடுகிறார்கள்.  கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இவர் புகழ்பெற்ற இசையமைப்பாளராாக விளங்கினாலும், கடந்த வருடங்களில் ஐந்து முறை நாமினேட் செய்யப்பட்டிருந்தாலும் திரைப்படத்திற்காக  இவர் வாங்கிய முதல் ஆஸ்கர் விருது இதுதான் எனும் போது ஆச்சரியமாக இருக்கிறது. இவருக்கு 2007-ல் கெளவர விருது வழங்கப்பட்டிருந்தது.

டோரண்ட்டினோவின் 'The Hateful Eight' திரைப்படத்தின் அபாரமான பின்னணி இசைக்காக மாரிக்கோன் இந்த விருதைப் பெற்றார். இத்திரைப்படம் மூன்று பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்தாலும் பின்னணி இசைப் பிரிவில் மட்டுமே விருது வென்றது உலகமெங்கிலும் உள்ள டோரண்ட்டினோ ரசிகர்களுக்கு ஏமாற்றமாயிருந்திருக்கலாம். என்றாலும் மாரிக்கோன் பெற்ற விருது முழுமையான மகிழ்ச்சியை அளித்திருக்கும்.

***

இந்த வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான விருதுகளை தட்டிச் சென்றது Mad Max: Fury Road. ஆறு விருதுகள். அனைத்துமே நுட்பம் சார்ந்த துறையிலானது. ஆண் நாயகர்களே ஆதிக்கம் செலுத்தும் ஹாலிவுட்டில் ஒரு பெண் நாயகியாக நிகழ்த்தும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட திரைப்படம். பெண்ணிய அடையாளத்தை பிரதானமாகக் கொண்ட சாகச திரைப்படம் எனலாம். வருங்காலத்தில் நீர் ஆதாரங்களை கைப்பற்றுபவரே  வல்லரசாக இருக்க முடியும் என்கிற அரசியலை பரபரப்பான சாகசக் காட்சிகளோடு விவரிக்கிறது. பத்து பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்தது.

சிறந்த நடிகைக்கான விருது பிரி லார்சனுக்கு 'தி ரூம்' என்கிற திரைப்படத்திற்காக கிடைத்தது. ஆணாதிக்க விளைவினால் உருவாகும் குடும்ப வன்முறையில் குழந்தைகள் பாதிக்கப்படும் துயரத்தை பதிவு செய்த திரைப்படம். தன்னுடைய இளம் வயது மகனுடன் சுமார் ஏழு ஆண்டுகள் ஓர் அறையில் அடைத்து வைக்கப்படுகிறார் ஜாய். அவளுடைய கணவன்தான் அந்தக் கொடுமையை செய்கிறார். அந்த துயரம் மகனை பாதித்து விடக்கூடாதே என்பதற்காக ''அந்த அறை'தான் உலகம் என்று அவனை நம்ப வைக்கிறார் ஜாய். பிறகு வெளியுலகைக் காண நேரும் அந்தச் சிறுவனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களோடு படம் தொடர்கிறது.

சிறந்த துணை நடிகருக்கான விருதை மார்க் ரைலான்ஸ் பெற்றார். ஸ்பீல்பெர்க் இயக்கிய 'பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்' என்கிற திரைப்படத்தில் அமெரிக்காவில் சிக்கிக் கொள்ளும்  ரஷ்ய உளவாளியாக இவர் நடித்திருந்தார். உயிர்  பறிக்கப்படவிருக்கும் நெருக்கடியான நேரத்திலும் அந்தச் சூழலை தத்துவார்த்தமாக வெளிப்படுத்தும் பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார். சிறந்த துணை நடிகைக்கான விருது 'தி டானிஷ் கேர்ள்' படத்தில் நடித்த அலிசியா விக்காண்டருக்கு சென்றது. சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது  ‘தி பிக் ஷார்ட்’ படத்திற்கு வழங்கப்பட்டது.

***

பலரும் எதிர்பார்த்தபடி சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை டிஸ்னியின்  'இன்சைட் அவுட்' தட்டிப் பறித்தது. கோபம், பயம், சந்தோஷம் போன்ற உணர்வுகளுக்கு உருவம் தந்து அவை சிறுமி ரைலியின் தலைக்குள் எப்படியெல்லாம் செயலாற்றுகின்றன என்பதை வேடிக்கையாகவும் அதே சமயத்தில் பொருள் பொதிந்ததாகவும் உருவாக்கியதற்காகவே இப்படத்தை வரவேற்கலாம். பெரியவர்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.

சிறந்த அயல் நாட்டு திரைப்படமாக ஹங்கேரியின் ‘சன் ஆஃப் சால்’ விருது பெற்றது. சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருது ‘எக்ஸ் மெஷினா’ படத்துக்கு கிடைத்தது.

நிகழ்ச்சி தொகுப்பாளர்களுள் ஒருவராக நம்மூர் பாலிவுட்டின் தங்கத் தாரகையான பிரியங்கா சோப்ரா இருந்தார் என்கிற அளவோடு நாம் திருப்தியடைய வேண்டியதுதான்.

***


ஆஸ்கர் விருதுகளின் தேர்வில் நீண்டகாலமாக வெளிப்படும் நிறவெறி அரசியல் பற்றிய கண்டனங்கள் இந்த வருடமும் எழுந்தன. நடிகர் வில் ஸ்மித், சில்வஸ்டர் ஸ்டோலோன் நடித்த ''கிரீட்' திரைப்படத்தின் இயக்குநர் ரியான் கூக்ளர் போன்ற கறுப்பினக் கலைஞர்கள் இந்த வருட விழாவை புறக்கணித்தது நெருப்பில்லாமல் புகையாது என்பதை சுட்டிக் காட்டியது.

ஆஸ்கர் விருதிற்காக இந்தியாவின் சார்பில் தேர்வு செய்து அனுப்பப்பட்ட மராத்திய திரைப்படமான 'கோர்ட்' , சிறந்த படமாக இருந்தாலும் நாமினேஷன் பட்டியலைக் கூட எட்டவில்லை. அடுத்த வருடமாவது நமக்கு ஆஸ்கர் வடை கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

(குமுதம் 06.03.2016 தேதியிட்ட இதழில் வெளியானது - நன்றி: குமுதம்)

suresh kannan

Sunday, March 13, 2016

Brooklyn (2015) - பெண்களை புரிந்து கொள்வது எளிதல்ல


 
சமீபத்திய அகாதமி விருதில் சிறந்த திரைப்படம்/நடிகை/தழுவல் திரைக்கதை ஆகிய மூன்று பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்த 'ப்ரூக்லின்' என்கிற திரைப்படம் பார்த்தேன்.

வாவ்....என்னவொரு திரைப்படம் இது?

இதில் சித்தரிக்கப்படும் சில சம்பவங்கள் ஏறத்தாழ அந்தரங்கமாக என்னுடன் பொருந்தியிருந்ததால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில்தான் பார்க்க முடிந்தது. படம் பார்க்கும் தருணம் முழுவதிலும் என் கைகள் இருக்கையின் கைப்பிடியை அழுந்த பிடித்திருந்ததை அவ்வப்போது உணர்ந்து விலக்கிக் கொண்டேன்.

பொருளீட்டுவதற்காக தனிநபர்கள் அந்நிய பிரதேசத்திற்கு செல்லும் துயரம் இதில்  பதிவாகியிருக்கிறது. ஆண்களே உள்ளுற அச்சப்படும் இந்த விஷயத்தில் பெண்கள் எவ்வாறு உணர்வார்கள்? அதிலும் ஓர் இளம்பெண்?

***

வருடம் 1952. அயர்லாந்தின் ஒரு சிறிய நகரத்திலிருந்து அமெரிக்காவின் ப்ரூக்லின் நகரத்திற்கு செல்கிறாள் எல்லிஸ். புலம்பெயர்பவர்களுக்கேயுரிய ஹோம் ஸிக்னெஸ் அவளை வாட்டுகிறது. வயதான தாயும் உயிருக்கு உயிரான சகோதரியும் கடல் கடந்து நீண்ட தூரத்தில் இருக்கும் பிரிவு அவளுக்கு துயரத்தை தருகிறது. மெல்ல அங்குள்ள நடைமுறைக்கு பொருந்தி வரும் அவள் ஓர் இத்தாலிய இளைஞனை சந்திக்கிறாள். தன்னுடைய பிரிவுத் துயரத்தை அவனுடைய அன்பின் மூலம் கடக்கிறாள்.

எல்லிஸ்ஸின் சகோதரி இறந்து போகும் தகவல் கிடைக்கிறது. பிறந்த இடம் திரும்ப நினைக்கிறாள். அவள் திரும்பி வருவாளோ என்கிற அச்சம்  அவளுடைய காதலுனுக்கு. திருமணம் செய்து விட்டுப் போ என்கிறான். 'அலைபாயுதே' பாணியில் ரகசிய திருமணம்.

அயர்லாந்து திரும்பும் எல்லஸுக்கு பல நல்ல விஷயங்கள் நடக்கின்றன. அவள் சகோதரி பணிபுரிந்த இடத்தில் இவளும் பணிசெய்ய நேர்கிறது. ஒருபணக்கார ஐரிஷ் இளைஞன் எல்லிஸ் பால் கவரப்படுகிறான். இருவரையும் இணைத்து திருமண பேச்சுகள் கிளம்புகின்றன. இந்த திருமணத்தை எல்லிஸ் தாய் மிகவும் எதிர்பார்க்கிறாள். இதன் மூலம் தன்னுடைய மகளுக்கு பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும் என்பது அவளுடைய நோக்கம்.

தற்காலிகமாக அங்கு தங்கி விட்டு பின்பு ப்ரூக்லின் திரும்பி விடலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் எல்லிஸ்-ஸின் மனம் சஞ்சலமடைகிறது. இந்த அதிர்ஷ்டமான விஷயங்கள் எல்லாம் அவள் ப்ரூக்லினுக்கு போகும் முன் கிடைத்திருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்? அவளுடைய காதலனுடைய (கணவன்) கடிதங்களை வாசிக்காமல் அப்படியே வைக்கிறாள். இங்கேயே தங்கி விடலாம் என்பது அவளுடைய நோக்கமா என்ன?

பெண்கள் காதல்  போன்ற உணர்வுகளுக்கு அத்தனை எளிதில் அடிமையாவதில்லை. அதை விடவும் தங்களின் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்விற்கே அவர்கள் முன்னுரிமை தருவார்கள். இதற்காக அவர்கள் தங்களின் காதலுக்கு துரோகம் செய்கிறார்கள் என்பது பொருள் அல்ல. இதை ஒரு பெண்ணின் நோக்கில்தான் புரிந்து கொள்ள  முடியும். அவர்கள் தங்களின் காதலுக்கு உண்மையாக இருப்பதை விடவும் மற்ற உறவுகளை இணைத்த ஒட்டுமொத்த சூழலையே கணக்கில் கொள்கிறார்கள். எல்லிஸ் தன்னுடைய தாயை நன்றாக கவனித்துக் கொள்வதற்கு அந்த வசதியான வாழ்க்கை தேவை என்று ஒருவேளை அவள் முடிவெடுத்திருக்கலாம்.

என்றாலும் இந்த தருணத்தில் எனக்கு எல்லிஸ் மீது கோபமும் அதே சமயம் பரிதாபமும் வந்தது. ஓ.. எல்லிஸ்.. என்ன இருந்தாலும் நீ இதை செய்யக்கூடாது?

எல்லாம் கூடி வரும் நேரத்தில் ஒரு கலகம் நடக்கிறது. எல்லிஸ்  பணிபுரிந்த முன்னாள் நிறுவனத்தின் பெண் உரிமையாளர், ப்ரூக்லினுள் உள்ள அவரது உறவினர் மூலம் எல்லிஸ்-ஸின் திருமணத்தைப் பற்றி அறிந்திருக்கிறார். எனவே இதைப் பற்றி எல்லிஸிடம் ரகசியமாக விசாரிக்கிறார். சினமும் குற்றவுணர்வும் அடையும் எல்லஸூக்கு அந்த விசாரிப்பு திகைப்பைத் தந்தாலும் குழப்பத்திலிருந்து விலகி தெளிவான முடிவை எடுக்க ஒரு சந்தர்ப்பத்தை தருகிறது. தன் தாயிடம் உண்மையை சொல்லி விட்டு ப்ரூக்ளினுக்கு செல்கிறார்.

அவளுடைய காதலனை சந்திக்கும் அந்த இறுதிக் காட்சி.. ஓ.. என்னவொரு காட்சி அது. ஏறக்குறைய நான் அழுது விட்டேன். எல்லிஸ் இந்த முடிவை எடுத்திருக்காவிடில் அவளை நான் மன்னித்திருக்க மாட்டேன்.

***

இத்திரைப்படம் பெண்களின் மிக பிரத்யேகமான குணாதிசயங்களை மிக நுட்பமாக யதார்த்தமாக விவரிக்கிறது. பெண்கள் திருமணமாகி ஒரு புதிய சூழலானது, ஏறத்தாழ பொருளீட்டுவதற்காக இன்னொரு பிரதேசத்திற்கு செல்லும் அதே சூழல்தான். புதிய இடம். புதிய மனிதர்கள். முதலில் அச்சமும் படபடப்புமாய் இருந்தாலும்  பிறகு மெல்ல மெல்ல அந்த சூழலில் அவர்கள் தங்களை கச்சிதமாகப் பொருத்திக் கொள்கிறார்கள். அந்த இடத்தையே பிரகாசமாக ஆக்கி விடுகிறார்கள். பிறகு அவர்கள் நினைத்தால் கூட அந்த இடத்தை பிரிய முடியாத அளவிற்கான பந்தம் ஏற்படுகிறது.

எல்லிஸ்-ஸூக்கு ஏற்படும் இந்தச் சம்பவங்கள் மூலம் இதை தெளிவாக உணர முடிகிறது. Colm Tóibín என்கிற ஐரிஷ் நாவலாசிரியர் எழுதிய படைப்பிற்கு அற்புதமான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் Nick Hornby. இயக்கம்: John Crowley.

எல்லிஸாக நடித்திருக்கும் Saoirse Ronan வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வது சம்பிதாயமாக இருந்தாலும் அது மிகையல்ல. சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுமளவிற்கு தன்னுடைய பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.

***

ப்ரூக்ளின் திரும்பும் எல்லிஸ் கப்பலில் தன்னைப் போலவே புதிதாக செல்லும் ஓர் இளம் ஐரிஷ் பெண்ணுக்கு தனக்கு முன்னர் கிடைத்த உபதேசங்களை சொல்கிறார் - இறுதிக் காட்சியில்.


'அங்கு நிறைய ஐரிஷ் மக்கள் இருப்பார்கள் அல்லவா? என்னுடைய வீடு போல அந்த இடத்தை உணர முடியுமா? - புதிய பெண் கேட்கிறாள்.

"ஆம். அங்கு வீடு போல உணர முடியும்" - எல்லிஸின் பதில். கவனியுங்கள், அவள் திருமணம் செய்திருப்பது அவளுடைய கலாசாரத்திற்கு முற்றிலும் அந்நியமான ஒரு இடத்தில், முற்றிலும் அந்நியக் கலாசாரத்தை சேர்ந்த ஓர் இத்தாலிய இளைஞனை.

ஓ.. இந்தப் பெண்கள்.... :)

suresh kannan

Tuesday, March 17, 2015

ஆஸ்கர் - நிறைவேறாத இந்தியக் கனவு





87வது வருட ஆஸ்கர் விருதின் முடிவுகள், உயிர்மையின் இந்த இதழ் வெளியாவதற்குள், அதாவது 23.02.2015 அன்றே அறிவிக்கப்பட்டிருக்கும் என்பதால் அவற்றைப் பற்றிய யூகங்களின் நிச்சயமின்மைகளோடு, விருதிற்காக பல்வேறு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்த, பொதுவாக விமர்சகர்களால் அதிகமாக உரையாடப்படாத திரைப்படங்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தினை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ‘புளிக்கும் பழம்’ என்கிற நரிக்கதை போல ‘அமெரிக்கத் தரம்’ என ஆஸ்கர் விருதை வேறு வழியில்லாமல் தமிழ்திரை சூழலில் கமல்ஹாசன் உள்ளிட்ட சிலர் புறக்கணிப்பது போல் பாவனை செய்தாலும் உலகம் முழுவதிலும் அதிகம் கவனிக்கப்படும் திரைப்பட விருது என்பதின் அடிப்படையில் இதன் முக்கியத்துவம் அமைகிறது.

அமெரிக்கத் திரைப்படங்கள்தான் இந்த விருதுகளில் பிரதானமாக கலந்து கொள்ள முடியும் என்கிறதொரு மாயை உலவுகிறது. அப்படியல்ல.  ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்கிற பிரிவில் உலகின் அனைத்து நாடுகளும் தங்களின் சிறந்த படைப்புகளில் ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்தலாம் என்பது தவிர, 40 நிமிடங்களுக்கு மேல் நீளமுள்ளதாக இருக்க வேண்டும், (குறும்பட பிரிவு வேறு) லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் குறிப்பிட்ட காலத்திற்கு திரையிடப்பட்டிருக்க வேண்டும் என்பது போன்றவை உள்ளிட்டவை தவிர சில தொழில்நுட்ப விதிகளுக்கும் இணங்க உருவாக்கப்படும் எந்தவொரு திரைப்படமும் இந்த விருதுப் போட்டியில் பங்கேற்க முடியும். அகாதமியில் உறுப்பினர்களாக உள்ள 6000 நபர்கள் இறுதி தேர்வினை முடிவு செய்வார்கள்.

இந்த வருட விருதுகளில் BIRDMAN, THE GRAND BUDAPEST HOTEL ஆகிய இரண்டு திரைப்படங்களும் அதிகபட்சமாக தலா 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் கறாரான கட்டுப்பாடுகளுடன் கூடிய விதிகளுடன், அறிவிக்கப்படும்  வரை ரகசியம் காக்கப்படும் விருதாக ஆஸ்கர் அறியப்பட்டாலும் எல்லா விருதுகளையும் போலவே இதிலும் சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. கடந்த வருட விருதுகளில் ‘The Wolf of Wall Street’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட, அதுவரை அகாதமி விருதே பெற்றிராத நடிகரான லியோனார்டோ டிகாப்ரியோ அந்த வருடமும் விருதைப் பெற முடியாமல் போன போது ‘F**k the Oscars’ என்று தனது எரிச்சலை டிவிட்டரில் வெளிப்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தினார். அமெரிக்கப் பெருமையை பறைசாற்றும், அதன் இறையாண்மைக்கு சார்பாக இயங்கும் திரைப்படங்களுக்கு நிச்சயம் விருது உண்டு என்பது திரை ஆர்வலர்கள் நமட்டுச் சிரிப்புடன் சொல்லும் ஒரு பொதுவான குற்றச்சாட்டு.

இந்த வருடத்திற்காக ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்தின்’ பிரிவில் இந்தியாவின் சார்பில் நடிகை கீது மோகன்தாஸ் இயக்கிய ‘லயர்ஸ் டைஸ்’ அனுப்பப்பட்டிருந்தாலும் இறுதிப்பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லை.



BOYHOOD – Richard Linklater

ஒரு திரைப்படத்தை எத்தனை அர்ப்பணிப்புடனும் தொலைநோக்கு திட்டத்துடனும் உருவாக்க முடியும் என்பதற்கான அரிய உதாரணம் இந்த திரைப்படம்.

ஆறு வயது சிறுவனின் வளர்ச்சி நிலையோடு துவங்கும் இத்திரைப்படம் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு அவனையும் அவனது குடும்ப உறுப்பினர்களையும்  அந்தக் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்களையும் அதன் தொடர்ச்சியான காலகட்டத்தோடு பதிவு செய்திருக்கிறது. இதற்காக அந்தச்சிறுவன் முதற்கொண்டு பிரதான நடிகர்கள் அனைவருமே 12 வருடங்களின் வெவ்வேறு காலகட்டங்களில் நடித்திருக்கிறார்கள். துணிச்சலான முயற்சி. இடைக்காலத்தில் இதில் ஏதாவது இடையூறு ஏற்பட்டிருந்தால் படத்தின் தொடர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும்.  இதே போன்று நீண்ட வருடங்களுக்கு திட்டமிடப்பட்ட ஒரு டிரையாலஜி திரைப்படங்களையும் இதற்கு முன்பு இயக்குநர்  ரிச்சர்ட் லிங்க்லேட்டர் உருவாக்கியிருக்கிறார்.

இந்த ஒரு காரணத்திற்காக மட்டுமல்லாது திரைப்படத்தின் உள்ளடக்கத்திற்காகவும் இத்திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. குடும்பம் என்கிற அமைப்பு, அதில் ஏற்படும் சிக்கல்கள், சச்சரவுகள், பிரிவுகள், அவை இளைய மனதுகளில் ஏற்படும் உளவியல் பாதிப்புகள் என்று ஒரு சராசரி மேற்குலக குடும்பத்தின்  சித்திரத்தை இத்திரைப்படம் உன்னதமாக பதிவாக்கியிருக்கிறது.  விடலைச் சிறுவன் நிலையிலிருந்து கனிந்து முதிர்ச்சியுற்று இளைஞனின் உலகில் காலடி எடுத்து வைக்கும் பாத்திரத்தில் Ellar Coltrane அற்புதமாக நடித்துள்ளார். சிறந்த திரைப்படம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் பரிந்துரைப் பட்டியலில் இருக்கிறது.


WHIPLASH  - Damien Chazelle

J. K. Simmons –ன் அற்புதமான நடிப்பிற்காகவே இத்திரைப்படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும். குரு – சிஷ்ய உறவு முறையில் அதன் உன்னதம், முரண், துரோகம், பணிவு என பல கோணங்களில் பல திரைப்படங்கள் இதுவரை உருவாகியுள்ளன. ஆனால் இத்திரைப்படம் வேறு வகை.

தன்னிடம் இசை கற்கும் மாணவர்கள், கலையை அதன் அடிப்படை திறமையோடு மாத்திரம் கற்றுக் கொள்ளாமல் அதன் அதிஉச்சப் புள்ளியை அடைந்தே ஆக வேண்டும் என்கிற கறாரான எதிர்பார்ப்போடு தமது மாணவர்களை மிக கடுமையாக வேலை வாங்கும் இசை நடத்துனர் ப்ளெச்சராக,  சிம்மன்ஸ் நடித்திருக்கிறார். இதற்காக அதீதமாக உணர்ச்சிவசப்படுபவராகவும் ஆபாச வசைகளை இறைப்பவராகவும் தமது மாணவர்களின் முன்னால் ஒரு மூர்க்கமான மிருகத்தைப் போலவே நடந்து கொள்கிறார் இந்த ஆசிரியர்.

இவரிடம் ஜாஸ் இசை பயில விரும்பும் ஆண்ட்ரூ என்கிற மாணவனுக்கு டிரம்ஸ் வாசிப்பதில் பிரபல அமெரிக்க இசைக்கலைஞர் Buddy Rich போன்று பாண்டித்தியம் உள்ளவனாக வரவேண்டுமென்கிற பெரிய விருப்பமிருக்கிறது. அதற்காக கடுமையாக உழைக்கிறான். ஆனால் எத்தனை கடுமையாக உழைத்தாலும் இசை நடத்துனரிடமிருந்து ஒரு நல்ல பாராட்டைக் கூட பெற முடிவதில்லை. மாறாக வசைகளும், அவமதிப்புகளே கிடைக்கின்றன. ஒரு கட்டத்தில் தனது கடும் உழைப்பு தொடர்ந்து  உதாசீனப்படுத்துவதை கண்டு சகிக்க முடியாமல் ஒரு சிக்கலான சந்தர்ப்பத்தில் ஆசிரியரை தாக்கி விடுகிறான் ஆண்ட்ரூ. அதன் பின்னர் இன்னமும் மேலதிக உழைப்பின்  மூலம் நிகழும் ஆவேசமானதொரு இசை நிகழ்ச்சியில் தன்னுடைய ஆசிரியரின் அங்கீகாரத்தைப் பெறும் ஓர் அதியுச்ச தருணத்துடன் இத்திரைப்படம் முடிகிறது. அதுவரை பூடகமானதொரு துரோகியாக சித்தரிக்கப்படும் ஆசிரியரின் பாத்திரம்  அப்படியல்லாமல் கலைத்தூய்மையின் வெறி கொண்டிருக்கும் ஓர் அதிசய கலைஞனின் பிம்பமாக நம்முள் உறையும் அற்புதத்துடன் படம்  நிறைகிறது. சிறந்த திரைப்படம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் பரிந்துரைப் பட்டியலில் இருந்தது. Best Supporting Actor பிரிவில் J. K. Simmons பெயர் இருக்கிறது. விருது பெறுவார் என நம்புவோம்.


TWO DAYS, ONE NIGHT  - Dardenne brothers

பிரெஞ்சு திரைப்படம்.

தனது அபாரமான நடிப்பிற்காக Marion Cotillard 'சிறந்த நடிகை' க்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.  நிச்சயம் விருதை வெல்வார் என நம்பலாம். குடும்பம் என்கிற அமைப்பினுள் சிக்கிக் கொண்டிருக்கும் தனிநபர்கள் தங்களின் இருத்தலை தக்கவைத்துக் கொள்ள எவ்வித கடுமையான போராட்டங்களை நிகழ்த்த வேண்டியிருக்கிறது என்பதை உருக்கமாக விவரிக்கும் திரைப்படம் இது.

தனது பணியை இழக்கும் அதிர்ச்சியான செய்தியுடன் சாண்ட்ராவிற்கு அன்றைய பொழுது விடிகிறது. அவளது உடல்நலக்குறைவு காரணமாக பணியிலிருந்து நிறுத்துகிறது நிர்வாகம். பணியாளர்களுக்கிடையே நிகழும் ஓட்டெடுப்பின் மூலம் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. நீக்கப்படும் சாண்ட்ராவின் பணியை மற்ற பணியாளர்கள் சற்று கூடுதல் நேரத்துடன் உழைப்பதின் மூலம் ஈடுகட்ட முடியும். இதற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ஈரோக்கள் போனஸாக தரப்படும் என்கிறது நிர்வாகம்.

நிறுவனத்திலுள்ள ஒருவரின் மிரட்டல் காரணமாக பணியாளர்கள் தமக்கு எதிராக வாக்களித்திருக்கலாம் என்பதால் மறுவாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று நிர்வாகத்தை வலியுறுத்துகிறார் சாண்ட்ரா. வாரஇறுதி நாளன்று முன்வைக்கப்படும் இந்த வேண்டுகோளை நிர்வாகம் ஒப்புக் கொள்கிறது. திங்கட்கிழமை வாக்கெடுப்பு. இடையில் இரண்டு நாட்கள். அதற்குள் தன்னுடைய 16 சக பணியாளர்களை தமக்கு ஆதரவாக வாக்களிக்கும் படி ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டும். ஆனால் இதில் என்னவொரு பிரச்சினை என்றால் சாண்ட்ராவிற்கு ஆதரவாக வாக்களிக்கும் பணியாளர் தனது போனஸ் பணத்தை இழப்பார்.

இந்த இரண்டு நாட்களில் தனது சக பணியாளர்களை சாண்ட்ரா தன்னுடைய உருக்கமான வேண்டுகோளுடன் சந்திக்கச் செல்லும் சம்பவங்களே இத்திரைப்படத்தின் பயணம். பெரும்பாலான பணியாளர்களுக்கு சாண்ட்ராவிற்கு உதவும் உள்ளம் இருந்தாலும் தனது போனஸ் பணத்தை இழந்து விடுவோமே என்பதே பிரதானமாக தோன்றுகிறது. நண்பர்களாக அறியப்பட்டிருந்தாலும் நிதிச்சுமை காரணமாக அவர்களின் வேறு நிஜ முகங்களை சாண்ட்ரா எதிர்கொள்ள நேர்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள். இதை சாண்ட்ராவாலும் உணர முடிகிறது. தனது பதட்டத்தை தணித்துக் கொள்வதற்காக அவ்வப்போது மருந்து எடுத்துக் கொள்பவராகவும், தன்னுடைய பணியை காப்பாற்றிக் கொள்ள இப்படி ஒவ்வொருவரையும் சிரமப்படுத்தி அவர்கள் முன் கூனிக்குறுகி நின்று வேண்டுகோள் வைக்க வேண்டியிருக்கிறதே என்கிற அவமான உணர்வுகளையும் சாண்ட்ராவாக நடித்திருக்கும் மரியோன் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். உலகமெங்கும் தாராளமயமாக்கம் விரிவடைந்துக் கொண்டிருக்கிற போதிலும் 'பைசைக்கிள் தீவ்ஸ்' திரைப்பட காலக்கட்டத்தைப் போலவே பணியிழப்பு என்பது ஒரு தனிநபருக்கு இன்றும் எத்தனை அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் தருகிறது என்பதை உணர்த்துகிறது இத்திரைப்படம்.


THE IMITATION GAME - Morten Tyldum

இன்று உலகம் முழுக்க பரவலாக உபயோகப்படுத்தப்படும் முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்புகளுள் ஒன்றான கணினியின் துவக்க நிலை உருவாக்கத்திற்கு காரணகர்த்தாவாக அறியப்படும் Alan Turing -ன் வாழ்க்கைச் சம்பவங்களையொட்டி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கணிதவியலாளர், தர்க்கவியலாளர், சங்கேத மொழி பகுப்பாய்வாளர் ஆகிய துறைகளில் மேதைமைத்தன்மையைக் கொண்டிருந்தவர் ஆலன்.

இரண்டாம் உலகப் போர் நிகழும் சமயத்தில் 1939-ல்  பிரிட்டனுக்கும் ஜெர்மனிக்கும் போர் மூள்கிறது.  ஜெர்மன் பொறியாளரான Arthur Scherbius கண்டுபிடித்திருக்கும் எனிக்மா என்கிற இயந்திரத்தின் மூலம் தனது படை வீரர்களுக்கான செய்திகளையும் ஆணைகளையும் சங்கேத முறையில் பரிமாறிக் கொள்கிறது ஜெர்மனி. இந்த சங்கேத செய்திகளை உடைத்து இடைநுழைந்து அறிந்து கொண்டால் அந்தப் போரில் வெல்வதும் தனது வீரர்களின் உயிரிழப்புகளை தவிர்ப்பதும் பிரிட்டனுக்கு எளிதாக இருக்கும். ஆனால் அந்த இயந்திரத்தின் இயங்குமுறையையும் செய்திகளின் பூடகத்தையும் உடைத்து அறிவதென்பது அத்தனை எளிதான செயல் அல்ல. அத்தனை கச்சிதமான இறுக்கத்துடன் அதனை உருவாக்கியிருக்கிறது ஜெர்மனி.

பிரிட்டனைச் சார்ந்த ஆலன் இதனை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு அந்தப் பணிக்காக பிரிட்டன் ராணுவ அலுவலகத்திற்கு செல்கிறார். ஆனால் அவரது முயற்சி ஊக்குவிக்கப்படுவதில்லை. எனவே சர்ச்சிலுக்கே கடிதமொன்றை எழுதி தனது பணியை உறுதிப்படுத்திக் கொள்கிறார். அவருடன் பணிபுரியும் சக நுட்பர்களும் அவருக்கு உறுதுணையாக இருப்பதில்லை. எனவே குறுக்கெழுத்தில் சிறந்தவராக இருக்கும் ஒரு பெண்ணின் துணையுடன் தனது கண்டுபிடிப்பை தொடர்கிறார். மிகுந்த நிதிச் செலவைக் கோரும் இந்தப் பணியை  குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காவிட்டால் நிறுத்தி விடப்போவதாக மிரட்டுகிறார் ராணுவ அதிகாரி. சிக்கலான இந்த தருணத்தை ஆலன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை மீதமுள்ள சம்பவங்கள் விவரிக்கின்றன.

சமூகத்தின் ஆதார நலன்களுக்காக தொலைநோக்குச் சிந்தனைகளுடன் இயங்கும் விஞ்ஞானிகளை, அவர்களின் சமகால சமூகம் எத்தனை உதாசீனப்படுத்துகிறது என்கிற கசப்பான நிரந்தர உண்மையை இத்திரைப்படம் முன்வைக்கிறது. ஆலன் ஓரினச் சேர்க்கை பழக்கம் உள்ளவர் என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு, அது பிரிட்டனில் சட்டவிரோதமானது என்பதால் கைது செய்யப்படுகிறார். பிறகு அரசு முன்வைக்கும் வலுக்கட்டாயமான தீர்வின் படி ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் ஆலன் தன்னுடைய 41 வயதில் தற்கொலை செய்து கொள்கிறார். மனித உரிமையை மீறும் இந்த பிரிட்டிஷ் சட்டத்தால் 1885-க்கும் 1967-க்கும் இடையே சுமார் 49000 ஓரினச் சேர்க்கை பழக்கம் உள்ள ஆண்கள் தண்டிக்கப்பட்டதாக படத்தின் இறுதிக்குறிப்புகளுள் ஒன்று தெரிவிக்கிறது.

ஆலன் டர்னிங்  பாத்திரத்தில் Benedict Cumberbatch மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.  இளமையில் இறந்து போன தன் இளம்பருவத்து நண்பனின் நினைவாக எழும் பாலியல் உணர்விற்கும் தன்னுடைய ஆராய்ச்சியில் உதவிகரமாக இருந்து தன்னைக் காதலிக்கும் பெண்ணிற்குமான உணர்விற்கும் இடையில் இவர் தத்தளிக்கும் காட்சிகள் நெகிழ்வை ஏற்படுத்துகின்றன. படத்தின் நாயகனாக சித்தரிக்கப்படும் இவருடைய நோக்கில் எனிக்மா இயந்திரத்தின் ரகசியத்தை நிறைய மெனக்கெடல்களுக்குப் பிறகுதான் இவரால் அறிய முடிகிறது எனும் போது இதை உருவாக்கிய ஜெர்மானிய அறிஞர், இதனினும் உயர்நாயகனாக, திறமைசாலியாக இருப்பார் அல்லவா என்று தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை.


NIGHTCRAWLER - Dan Gilroy


சில திரைப்படங்களில் திரைக்கதையாசிரியராக பணியாற்றிய Dan இயக்குநராக அறிமுகமாகிய திரைப்படம் இது. இதன் அபாரமான திரைக்கதைக்காக 'Best Original Screenplay' பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

செய்தி ஊடகங்கள் அதன் தீராத பசிக்காக அவை தேடியடையும் செய்திகளின் பின்னேயுள்ள துயரங்களைப் பற்றிய கருணை ஏதுமின்றி அவற்றை தங்களின் வணிக ஆதாயத்திற்காகவும், யார் முதலில் செய்தியை தருவது என்கிற போட்டியில் உள்ள நாய் சண்டை தன்மையையும் பற்றி இத்திரைப்படம் உரையாடுகிறது. வணிகப் போட்டியில் உயரவும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் ஒரு அமைப்பில் உள்ள தனிநபர்கள் எவ்வாறு சுயநலமிகளாக மாறிக் கொண்டே போகின்றனர் என்பதையும் இத்திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது.

சில்லறைத் திருடனாக இருக்கும் லூயிஸ், சாலையில் நிகழும் விபத்தை ஒருவன் வீடியோவில் பதிவு செய்வதை கவனிக்கிறான். இவ்வாறான செய்திகளை சம்பவ இடத்தில் உடனுக்குடன் பதிவு செய்து  செய்தி நிறுவனங்களுக்கு விற்று பணமாக்க முடியும் என்பதை அதன் மூலம் கண்டுகொள்கிறான். ஒரு செய்தியின் பின்னுள்ள வன்முறை, பரபரப்பு ஆகியவற்றைப் பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதிக ரத்தம் வழியும் செய்தி என்றால் அதிகப் பணம். செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் இவனைப் பாராட்டி ஊக்கப்படுத்துகிறாள். எதையும் உடனடியாக கிரகித்துக் கொள்ளும் லூயிஸ் இந்த தொழிலின் குறுக்கு வழிகளை எளிதில் கற்று இந்த வணிகத்தில் மெல்ல மெல்ல முன்னேறுகிறான்.

தான் விற்கும் காட்சித் துணுக்குகளினால்தான் அந்த செய்தி நிறுவனத்தின் ரேட்டிங் உயர்கிறது என்பதை உணரும் லூயிஸ்,  தான் பதிவு செய்யும் ஒரு முக்கியமான படுகொலைக் காட்சிகளை அதிக விலைக்கு பேரம் பேசுகிறான். ஒரு நிலையில் தன்னுடைய சக போட்டியாளன், மற்றும் தன்னுடைய உதவியாளன் ஆகியோர் விபத்தில் சிக்கி மரணமடையும் தருணங்களைக் கூட சற்றும் மனச்சாட்சியின்றி பதிவு செய்யுமளவிற்கு அவனுடைய குரூரத்தனம் உயர்ந்து கொண்டே போகிறது.

அவனே இம்மாதிரியான ஒரு விபத்தில் இறந்து போகும் இறுதி முடிவுடன் ஒரு நீதிக்கதையாக இத்திரைப்படம் முடியும் என்று நாம் எதிர்பார்த்தால் அது தவறு. தானே சுயமாக ஒரு செய்தி நிறுவனக்குழுவை அவன் வெற்றிகரமாகத் துவங்குவதுடன் படம் நிறைகிறது. நாம் அன்றாடம் பார்க்கும் செய்திகளின் பின்னே இத்தனை போட்டி நிறைந்த குரூர உலகம் இயங்குகிறது என்பதையும் வன்முறையும் தீமையும் சார்ந்த செய்திகளையே மிகைப்படுத்தி பரபரப்பாக்குவதன் மூலம் செய்தி நிறுவனங்கள் இயங்கும்  பின்னணியிலுள்ள ஊடக அதர்மத்தையும் இத்திரைப்படம் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது. லூயிஸாக Jake Gyllenhaal மிக அருமையாக நடித்திருந்தார். அசல் திரைக்கதைக்கான பிரிவில் இத்திரைப்படம் விருது வெல்லக்கூடும்.


WILD TALES - Damián Szifrón


ஸ்பானிய திரைப்படம். பிரபல ஸ்பானிய திரைப்பட இயக்குநர் பெட்ரோ அல்மோடோவர் இதன் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதிலிருந்து இத்திரைப்படத்தின் சிறப்பை உணர முடியும். இருண்மை நகைச்சுவை அடங்கிய ஆறு குறும்படங்களின் இணைப்புதான் இத்திரைப்படம். வன்முறையும் பழிவாங்குதலும்தான் இந்த குறும்படங்களின் மையம்.

பேருந்தில் வேண்டுமென்றே சில்லறை தராத நடத்துநர் மீது கொள்கிற சிறுகோபம் முதல் அதிகாரத்தின் பல்வேறு உதிரி பாகங்களின் மூலம் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகிற ஒரு தனி நபர் அந்த அமைப்பு மீது கொள்கிற பெருங்கோபம் வரை நம்முள் எத்தனையோ சமயங்களில் பழிவாங்கும் உணர்ச்சி அதற்குரிய வன்முறையுணர்வுடன் பல சமயங்களில் தோன்றுகிறது. ஆனால் கையாலாகாத கோழைத்தனத்துடன் அந்த வன்முறைச் சம்பவங்களை மனதால் நிகழ்த்திவிட்டு மெளனமாக நகர்ந்து செல்கிறோம். ஆனால் அவைகளை நாம் உண்மையிலேயே செயலாக்கினால் என்ன நிகழும்? கேட்பதற்கு சற்று நெருடலாக இருக்கிறதல்லவா? ஆனால் இந்த உணர்வுகள் அடங்கிய பாத்திரங்களின் சம்பவங்களையும் எதிர்வினைகளையும் இத்திரைப்படத்தில் சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படமும் ஒவ்வொரு வகை. El más fuerte  (The strongest) என்கிற மூன்றாவது குறும்படம்தான் இருப்பதிலேயே ரொம்பவும் ரகளையானது. இதை யோசித்து திரைக்கதையாக எழுதி விடுவது கூட ஒரளவிற்கு சாத்தியம். ஆனால் காட்சியாக எடுக்கும் விதத்தில் அப்படி அசத்தியிருக்கிறார்கள்.

'சிறந்த வெளிநாட்டு திரைப்படத்தின்' பிரிவில் நாமினேஷன் பட்டியலில் இருக்கிறது.

***

இவை தவிர AMERICAN SNIPER, INTERSTELLAR, THE THEORY OF EVERYTHING, SELMA, FOXCATCHER, MR. TURNER, IDA, LEVIATHAN ஆகிய திரைப்படங்களும் விருதுகளை கைப்பற்றுவதில் முன்னிலை வகிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற அயல் சினிமாக்களை பார்க்கும் போது நம்முடைய தமிழ் திரைப்படங்கள் ஏன் இவைகளுக்குத் தொடர்பேயின்றி தங்களின் பிரத்யேக வணிக சகதியில் உழன்று கொண்டிருக்கின்றன என்கிறதொரு ஒப்பீடு தன்னிச்சையாக தோன்றுவதை தவிர்க்க முடிவதில்லை. ஆஸ்கரை 'அமெரிக்கத் தரம்' என்கிற பாவனையுடன் நாம் ஒதுக்கி வைத்து விட்டாலும் கேனஸ் போன்ற மற்ற முக்கியமான சர்வதேச திரைவிழாக்களில் நம்முடைய பங்களிப்பு என்ன, அவற்றை ஐரோப்பிய தரம் என்று ஒதுக்கி வைத்து விடலாமா என்கிற கேள்வி எழுகிறது. சத்யஜித்ரே பெற்ற ஆஸ்கர் விருது திரைப்படத்துறைக்காக அவர் ஆற்றிய சேவை குறித்தது. இந்தியர்கள் பெற்ற மற்ற ஆஸ்கர் விருதுகள் ஆங்கில திரைப்படங்களுடன் தொடர்புள்ளவை.

ஆங்கிலத்திரைப்படங்கள் அதிக பொருட்செலவில் உருவாக்கப்படுபவை, எனவே அவை சிறப்பாக அமைகின்றன என்கிற இன்னொரு மாயையும் உண்டு. உலகமெங்கும் வணிக வாய்ப்புகளையும் சாத்தியங்களையும் கொண்டிருக்கிற ஹாலிவுட்டில் அது போன்ற ஹை-பட்ஜெட் திரைப்படங்களும் உருவாக்கப்படுகின்றன என்றாலும் அவற்றின் ஊடாக அந்தளவிற்கான பொருட்செலவைக் கோராத ஆனால் சிறந்த கதை அமைப்புடைய திரைப்படங்களும் இம்மாதிரியான விழாக்களில் சாதிக்கத் தவறுவதில்லை. உதாரணத்திற்கு NIGHTCRAWLER திரைப்படத்தை குறிப்பிடலாம். தமிழகத்தில் உருவாக்கப்படும் சில பிரம்மாண்ட திரைப்படங்களின் பட்ஜெட்டில் அது போன்று இரண்டு மூன்று திரைப்படங்களையாவது எடுத்து விட முடியும்.

கடுமையான அடக்குமுறை கொண்ட இரான் போன்ற சிறிய தேசங்கள் எல்லாம் சர்வதேச அரங்குகளில் சாதித்துக் கொண்டிருக்கும் போது உலகிலேயே அதிக திரைப்படங்களை உருவாக்கும் தேசங்களில் ஒன்றான இந்தியாவால் 'சிறந்த வெளிநாட்டு திரைப்பட விருது' பிரிவில் ஒருமுறை கூட வெல்ல முடியவில்லை. அவையெல்லாம் அமெரிக்க தரம், ஐரோப்பிய தரம் என்று இன்னமும் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறோமா என்ன?

- உயிர்மை - மார்ச் 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)
 
suresh kannan

Tuesday, November 12, 2013

ஆஸ்கர் விருதுக்கான 'நல்ல பாதை'


உலகத்திலேயே அதிக திரைப்படங்களை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவால், உலகத்திலேயே அதிக கவனத்தைப் பெற்றிருக்கும் திரைப்பட விருதான ஆஸ்கரை ஒரு முறை கூட பெற முடியவில்லை என்பது ஒரு முரண்நகை. ஆஸ்கர் என்பது அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்டு அமெரிக்கத் திரைப்படங்களுக்கு தரப்படுவதுதான் என்றாலும் 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்' என்கிற பிரிவில் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான 'ஈரான்' கூட ஒரு விருதைப் பெற்றிருக்கும் நிலையில் இந்தியாவால் மூன்றே முறைதான் இறுதிப்பட்டியலிலேயே வர முடிந்திருக்கிறது. (மதர் இந்தியா -1957, சலாம் பாம்பே - 1988, லகான் 2001).

கடந்த பல வருடங்களாகவே இந்தியாவின் ஆஸ்கர் கனவு நீடித்துக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு முறையும் அது தவறிப் போய் விடும் வருத்தத்தால் 'சீச்சி இந்தப் பழம் புளிக்கும்' என்பதன் மூலம் ஆறுதல் பெற்றுக் கொள்கிறது. ஆஸ்கர் நாயகன் என்ற அடைமொழியில் அழைக்கப்படும் கமல்ஹாசன், இந்த விருதைப் பெற்றுத்தருவார் என்று சில முறை எதிர்பார்க்கப்பட்டு சோர்ந்த நிலையில், ஹாலிவுட் படமொன்றிற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு விருதுகளைப் பெற்ற போது அந்த இரவல் பெருமையை  கொண்டாடியதின் மூலம் நமக்கு சிறிய ஆறுதல் கிடைத்தது.

இந்த நிலையில் 86வது வருட அகாதமி விருதிற்காக, இந்தியாவின் சார்பில் அனுப்ப தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குஜராத்தி திரைப்படமான 'The Good Road'. கடந்த வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த தேர்வு குறித்து நிறைய சர்ச்சைகளும் முணுமுணுப்புகளும் இந்த வருடத்தில் எழுந்துள்ளன. The Lunchbox , Bhaag Milkha Bhaag, English Vinglish, Celluloid, Vishwaroopam உள்ளிட்ட இருபது திரைப்படங்கள் தேர்விற்கான பட்டியலின் வரிசையில் இருந்த போது, சுமாரான  படமாக கருதப்படும்  'The Good Road' தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது திரை ஆர்வலர்கள், விமா்சகர்களிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்கருக்காக அனுப்பப்பட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்று இவர்களில் பெரும்பான்மையோர் சுட்டிக்காட்டுவது 'The Lunch Box' திரைப்படத்தையே. தேர்வுக்குழுவின் தலைவராக இருக்கும் இயக்குநர் கெளதம் கோஷ், 'தன்னுடைய தனிப்பட்ட விருப்பமும் 'The Lunch Box' தான் என்றாலும் தேர்வுக்குழுவின் பெரும்பான்மையான முடிவின்படிதான் 'The Good Road' தேர்ந்தெடுக்கப்பட்டது' என்கிறார். இத்திரைப்படத்தின் விநியோகஸ்தராக Sony Pictures இருப்பதால் சர்வதேச அரங்கில் இதை முன்வைப்பது எளிதாக இருக்கும் என்கிற நடைமுறை காரணமும் கூறப்படுகிறது. இத்திரைப்படம் Cannes மற்றும் Toronto திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருப்பதும் கூடுதல் தகுதியாக முன்வைக்கப்படுகிறது. Ship of Theseus -ம் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்று ஒரு சிலர் கருதுகின்றனர்.

விருதுகளில் உள்ள அரசியல்களைத் தாண்டி, அரசியல் அல்லாமல் விருது சர்ச்சைகள் நிறைவுறாதல்லவா? சிறந்த திரைப்படங்களாக கருதப்பட்டவைகளைத் தாண்டி இந்த குஜராத்தி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அரசியல் காரணங்களால் என கூறப்படுகிறது. குஜராத்தின் முதல்வர் நரேந்திர மோதி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் தற்போதைய மத்திய அரசான காங்கிரஸ், பாஜகவிற்கு பொதுத் தேர்தலில்  பின்னடைவை ஏற்படுத்தும் முயற்சிகளுள் ஒன்றாக இது கருதப்படுகிறது. 'பெண் குழந்தைகள்' பாலியல் தொழிலில் ஈடுபட வைக்கப்பட்டிருப்பது, குஜராத்தின் வறட்சி தொடர்பான காட்சிகள் 'The Good Road'-ல் இருப்பதே காரணம். இதன் மூலம் குஜராத்தைப் பற்றிய எதிர்மறையான சித்திரத்தை உருவாக்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாக சொல்கிறார்கள்.

ஜீன்ஸ், இந்தியன், குரு போன்ற திரைப்படங்கள் கடந்த வருடங்களில் தேர்வு செய்து அனுப்பப்பட்டதான விபத்துக்கள் நேர்ந்திருக்கும் நிலையில் 'The Good Road' இந்தியாவின் ஆஸ்கர் கனவை பூர்த்தி செய்யுமா?

***

Gyan Correa இயக்கியிருக்கும் முதல் திரைப்படமே ஆஸ்கரின் கதவைத் தட்ட போயிருப்பது, அவருக்கு நிச்சயம் மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். மாநில அளவிலான 2013-ன் தேசிய விருதையும் இது பெற்றிருப்பது கூடுதல் தகுதி. சுமார் 2 கோடி ரூபாயில், குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தை NFDC தயாரித்துள்ளது.

இது ஒரு Road Movie.  பப்பு என்கிற லாரி டிரைவர் சட்டவிரோத நிழலான ஒரு பணிக்காக அமர்த்தப்பட்டு தனது உதவியாளருடன் குஜராத்தின் சிறுநகரான கட்ச் எனும் பகுதியின் நெடுஞ்சாலையில் பயணிக்கிறார். ஒரு நடுத்தரவர்க்க தம்பதியினர் தங்களது 7 வயது மகனுடன் விடுமுறைக் கொண்டாட்டத்திற்காக பயணிக்கிறார்கள். பூனம் என்கிற சிறுமி தன்னுடைய பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக மும்பையிலிருந்து தனியாக பயணிக்கிறாள். இந்த மூன்று பயண இழைகளில் நேரும் சம்பவங்களையும் சங்கடங்களையும் ஆபத்துக்களையும் அடுத்தடுத்த காட்சிகளால் நேர்த்தியாக அடுக்கியிருக்கிறார் இயக்குநர்.

நிழலான காரியங்களைச் செய்யும் நபர்களை 'வில்லன்களாக' மட்டுமே சித்தரிக்கும் திரைப்படங்களிடையே அவர்களிடையேயும்  உள்ளுறையாக அன்பும் மனிதநேயமும் உண்டு என்பதை உறுதிப்படுத்தும் விதமாக காட்சிகள் நகர்கின்றன. தம்பதியினரிடமிருந்து தொலைந்து போகும் சிறுவனை தன்னுடைய பாதுகாப்பில் கவனமாக அழைத்துச் செல்கிறார், லாரி டிரைவர் பப்பு. சிறுவனைப் பிடிக்காத அவருடைய உதவியாளர் இதை எதிர்த்துக் கொண்டே வந்து இறுதியில் அச்சிறுவனுடன் இணக்கமாகிறார். கணவன்,மனைவி போன்று டிரைவருக்கும் க்ளீனருக்கும் இருக்கும் உறவும் புரிதலும், க்ளீனருக்கு உள்ள குருபக்தியும் இந்தப் பாத்திரங்களிடையே சிறப்பாக வெளிப்படுகிறது.

லாரி டிரைவாக நடித்திருக்கும் ஷாம்ஜி, உண்மையிலேயே ஒரு லாரி டிரைவர். ஏறக்குறைய ஒரே மாதிரியான சிக்கனமான முகபாவங்களை பெரும்பாலான காட்சிகளில் இவர் காட்டியிருந்தாலும்  அது காட்சிகளின் பின்னணிகளுக்கு மிகப் பொருத்தமானதாக இயக்குநரால் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. நவரசங்களையும் ஒரே பிரேமில் காட்டத்துடிக்கும் மிகையான நடிப்புகளுக்கு சவால் விடுவது போலிருக்கிறது இவரின் எளிமையான நடிப்பு. வீட்டைப் பிரிந்து  ஒரே மாதிரியான பணியை வருடம் பூராவும் செய்ய வேண்டியிருக்கும் லாரி டிரைவர்களின் உலகத்தின் சலிப்பான ஒரு சிறுபகுதி இவரின் மூலமாக வெளிப்படுகிறது. தனக்கு ஏற்படக்கூடிய சிக்கல்களையும் மீறி சிறுவனை அழைத்துச் செல்வதும் அவனின் மீது அன்பு செலுத்துவதற்குமான காரணங்கள் முதலிலேயே நிறுவப்பட்டு விடுகின்றன.

பாட்டி வீட்டிற்குச் செல்ல திட்டமிட்டிருக்கும் சிறுமி வழியில் இறக்கி விடப்பட்டு பசியுடன் தற்செயலாக அவள் செல்லுமிடம், சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்யுமிடமாக இருக்கிறது. அதை நடத்துபவர் சிறுமியின் மீது பரிதாபப்பட்டு 'இது விவகாரமான இடம். உடனே நீ வெளியேற வேண்டும்' என்கிறார். அங்குள்ள சிறுமிகளில் ஒருவர், பூனத்திற்கு ஆதரவாக இருக்கிறார். அங்குள்ள சிறுமிகளுக்கு தாங்கள் ஈடுபடுத்தப்படும் தொழில் குறித்த வருத்தம் இல்லாமலிருப்பதிற்கு காரணமாக  அதன் பின்னணியில் உறைந்திருக்கும் வறுமையும் அறியாமையும்  பார்வையாளனைச் சங்கடத்திற்குள்ளாக்கிறது. இந்தச் சிறுமியின் மீது பரிவும் பரிதாபமும் காட்டும் தொழில் நடத்துபவர், அதே பரிவை மற்ற சிறுமிகளிடம் ஏன் காட்டுவதில்லை எ்ன்கிற முரண் எழுகிறது. ஜெயமோகனின் நாவலான 'ஏழாம் உலகத்தில்' உடற்குறையுள்ள மனிதர்களை பிச்சையெடுக்க வைத்து பொருளீட்டும் போத்தி, தன்னுடைய மகள் தொடர்பான துன்பம் நேரும் போது தன்னிச்சையாக 'நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்' என்று புலம்புவது நினைவிற்கு வருகிறது.

தொலைந்து போகும் சிறுவனாக நடித்திருக்கும் கேவல் கட்ரோடியாவின் பங்களிப்பு முக்கியமானது. சிறு அசெளகரியத்தைக் கூட ஏற்றுக்கொள்ளாத சலிப்புடன் நடுத்தர வர்க்க சிறுவர்களின் பிரதிநிதியாக முதலில் காட்டப்படும் சிறுவன், பயணத்தின் அனுபவங்கள் தரும் முதிர்ச்சியிலும் லாரி டிரைவர் தரும் அன்பிலும் சிக்கலானதொரு சமயத்தில் சமயோசிதமாக நடந்து கொள்கிறான். இதன் மூலம் தன்னிடம் வெறுப்பைக் காட்டிக் கொண்டேயிருக்கும் க்ளீனரின் அன்பையும் சம்பாதித்து விடுகிறான். ஒரு விடலைச் சிறுவன், பெரிய மனிதர்களின் உலகில் நுழைவதற்கான மாயம் எந்த நுண்ணிய இடைவெளியில் நிகழ்கிறது என்கிற கேள்வியின் அடிப்படையில் எழுத்தாளர் சுஜாதா, நிலா நிழல் என்கிற புதினத்தை எழுதியிருப்பார். வெளியுலக அனுபவங்களும் பயணங்களும் ஒருவனை எத்தனை முதிர்ச்சியும் பரந்த மனப்பான்மையுள்ளவனாகவும் உருமாற்றுகின்றன என்பதை சிறுவனின் மூலமாக நாமும் உணர முடிகிறது . படத்தின் இறுதியில் சிறுவனை திரும்பப் பெறும் போது அவனின் தந்தையும் 'கவனித்தாயா? நம் மகன் வளர்ந்து விட்டது போல் தோன்றுகிறான்? என்று தன் மனைவியுடன் சொல்கிறார். 'மூன்றாம்பிறை' யின் ...ச்சுப்பிரமணி .. போலவே இதிலும் ஒரு துறுதுறு நாயக்குட்டி அற்புதமாக நடித்திருக்கிறது.

படத்தில் பிரதானமாக கவர்வது அதன் ஒளிப்பதிவு. நிதானமாக நகரும் கச்சிதமான சட்டகங்கள். அந்த சிறுநகரத்தின் நிலப்பிரதேச வெளியை அற்புதமாக உள்வாங்கியிருக்கிறது ஒளிப்பதிவு. ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டி இதற்கு ஒலிப்பதிவு செய்திருக்கிறார். மிக மிக அவசியமான இடங்களில் மாத்திரமே பி்ன்னணி இசை ஒலிக்கிறது. (ரஜத் தோலாக்கியா). தமிழ்த் திரைப்படங்களில் இசை வாத்தியங்களை ஓய்வெடுக்க விடாமல் இடையூறு செய்யும் இசைமன்னர்கள் கவனிக்க வேண்டிய சமாச்சாரம் இது.

சத்யஜித்ராயின் 'பதேர் பாஞ்சாலி', மீரா நாயரின் 'சலாம் பாம்பே' போன்ற திரைப்படங்கள் சர்வதேச திரைவிழாக்களில் பரவலான கவனத்தைப் பெற்ற போது, 'அவை இந்தியாவின் வறுமையை கண்காட்சியாக்கி வியாபாரமாக்குவதன் மூலம் இந்தியாவைப் பற்றின மோசமான சித்திரத்தை சர்வதேச நாடுகளின் முன் காட்டுகிறது' என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு சமூகத்தின் பிரச்சினையை மிகை உணர்வின்றி அதனுடைய அசலான நிறத்துடன் காட்டுவதுதான் ஒரு கலைஞனின் கடமை' என்கிற ரீதியில் இந்தக் குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்தாலும், 'இந்தியா என்றால் பாம்பாட்டிகளும் பழங்குடிகளும்' என்று இன்னமு்ம கூட மேற்கத்திய உலகில் நிலவும் கற்பனைகளையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. 'The Good Road' -ம் இத்தகைய குற்றச்சாட்டிற்கு உட்படலாம்.

சமூகத்தின் எல்லாவிதமான இருளுக்குள்ளும் அன்பும் மனிதநேயமும் ஒரு தூய வெளிச்சமாக படர்ந்திருக்கிறது என்கிற நம்பிக்கையான செய்தியை முன்வைக்கும் இத்திரைப்படம், 'ஆஸ்கர் விருது' வெல்லும் என்று அதே நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

(காட்சிப் பிழை, நவம்பர் 2013-ல் வெளியான கட்டுரை - நன்றி: காட்சிப் பிழை)

suresh kannan

Monday, February 23, 2009

81வது வருட ஆஸ்கர் விருதில் இந்தியர்கள்

இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய தருணமிது. தங்களின் சமீபத்திய எதிர்பார்ப்பு நிறைவேறிய மகிழ்ச்சியில் பலர் ஆனந்தப் பெருமூச்சினை விட்டிருப்பார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளும் (Original music score & Original Song) மற்றும் ராசுல் பூக்குட்டி ஒரு ஆஸ்கர் விருதும் (Sound Mixing) இந்தியச் சிறுமியை வைத்து உருவாக்கப்பட்ட smile pinky விவரணப்படத்திற்கு ஒரு ஆஸ்கர் விருதும் கிடைத்துள்ளது. கடந்த வருடங்களை விட இந்த வருட விருதுகள் அதிக பரபரப்பை ஏற்படுத்தியதற்கு முக்கிய காரணம் ஏ.ஆர். ரஹ்மான். நாமினேஷன் பட்டியலில் மூன்று இடங்களில் ரஹ்மானின் பெயர் இருந்ததால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அது பொய்க்கவில்லை. ஏற்கேனவே ரஹ்மான் மீடியாக்களின் செல்லக்குழந்தை. இப்போது கேட்கவே வேண்டாம். இந்த சந்தோஷங்களின் மகிழ்ச்சியில் ஒரு சிறிய நெருடலும் இருக்கிறது. விருது பெற்ற இந்தியர்கள் பிறநாட்டு இயக்குநர்களின் ஆங்கிலத் திரைப்படங்களில் பணிபுரிந்தவர்கள்தான். நேரடியான ஒரு இந்திய திரைப்படத்திற்கு Best Foreign Language film பிரிவில் இந்த விருது கிடைத்திருந்தால் கூடுதல் சந்தோஷம் கிடைத்திருக்கும். ஸ்லம்டாக் மில்லியனர் ஒரு பிரிட்டிஷ்காரர் உருவாக்கினது; Smile pinky-யை உருவாக்கின Megan Mylan ஒர் அமெரிக்கப் பெண்மணி.

ஏதோ இதுதான் இந்தியர்கள் ஆஸ்கர் பெறும் முதல் தருணம் என்கிற மாதிரியான மாயை நம்மிடையே இருக்கிறது. அது உண்மையல்ல. இதற்கு முன்னால் இரண்டு இந்தியர்கள் இதை சாதித்திருக்கிறார்கள். காந்தி திரைப்படத்தின் சிறந்த ஆடை வடிவமைப்பிற்காக பானு அதைய்யாவும், திரைப்படங்களுக்கு ஆற்றிய சாதனைகளுக்காக சத்யஜித்ரேவும் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். ராசுல் பூக்குட்டி மூன்றாவது இந்தியர்.

ஸ்லம்டாக் மில்லியனர் படம் குறித்தான என்னுடைய பதிவில்
"விகாஸ் ஸ்வரூப் எழுதிய நாவலின் மையத்தை ஒரு நூல் அளவு எடுத்துக் கொண்டு Simon Beaufoy எழுதியிருக்கும் மிகத் திறமையான திரைக்கதை இந்தப்படத்தின் மிகப் பெரிய பலம். (திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது இந்தப்படத்திற்கு கிடைக்கலாமென எதிர்பார்க்கிறேன்)."
என்று எழுதியிருந்தேன். அதன்படியே Best Adapted Screenplay பிரிவில் Simon Beaufoy விற்கு விருது கிடைத்திருப்பது குறித்து சந்தோஷம்.

()

ரஹ்மானின் கடும் உழைப்புதான் இந்த உச்சத்திற்கு அவரைக் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது. விளம்பரங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த ஓர் இளைஞன் 'மணிரத்னம்' மூலம் வெளிப்பட்ட போது தமிழ்த் திரைப்பட இசையுலகில் ஏதோ ஓரு புதிய காற்று உள்ளே நுழைந்தது போலிருந்தது. இப்பவும் எனக்கு ஞாபகமிருக்கிறது. அப்போதெல்லாம் புதிய திரைப்பாடல்களை ஒலி நாடாக்களில் பதிவு செய்து கொடுப்பதெற்கென்றே பல சிறு நிலையங்கள் இருந்தன. நான் ஏற்கெனவே கொடுத்திருந்த பட்டியல் போக இன்னும் இடமிருந்த போது கடைக்காரர் சொன்னார். ''ரோஜான்னு ஒரு படம். புதுசா ஒருத்தன் ம்யூசிக் போட்டிருக்கான். ருக்குமணின்னு ஒரு பாட்டு. என்னமா அடிச்சிருக்கான் தெரியுமா? ரெக்கார்ட் செய்யவா?" என்றார் பரவசத்துடன். ஆனால் எனக்கு மற்ற பாடல்களை விட எஸ்.பி.பியின் குரலில் இருந்த 'காதல் ரோஜாவே' பாட்டுதான் மிகவும் பிடித்திருந்தது. ஒரு பாட்டிற்குள் இவ்வளவு காதல் பிரிவையும் தனிமையையும் சோகத்தையும் பிழிந்து ஊற்ற முடியுமா? என்று ஆச்சரியமாயிருந்தது. பிறகு நான் ரஹ்மானின் தீவிர விசிறியாகிவிட்டேன். ஒரிஜனல் கேசட்டுக்களில் கேட்கிற ஒலித்துல்லியமும் கேட்பனுபவமும் மோசமாக பிரதியெடுக்கப்பட்ட நகல்களில் இல்லாதிருப்பதை கவனித்தேன். எனவே ரஹ்மானின் திரைப்பாடல்கள் வெளியானவுடன் முதல் நாளே ஒரிஜினல் கேசட்டுக்களை வாங்குவது வழக்கமாயிற்று. பெரும்பாலான நேரங்களில் ரஹ்மான் என்னை ஏமாற்றவில்லை. தந்தையின் மூலமாக இசை என்பது ஊறிப்போயிருந்தாலும் அவர் இசையமைப்பாளாரான பிறகு இசைத்துறை சார்ந்த நவீன நுட்பங்களை திறமையாக பயன்படுத்திக் கொண்டதுதான் ரஹ்மானின் மிகப் பெரிய பலம் என்று கருதுகிறேன். எனவேதான் நாகார்ஜூனன் பற்றிய சினிமா பதிவில்
"உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?"
என்ற கேள்விக்கு
"ஏ.ஆர். ரகுமானின் வருகையைச் சொல்லாம். மேம்படுத்தப்பட்ட நுட்பங்களின் மூலம் பாடல்களின் கேட்பனுபவத்தை இன்னும் உன்னதமாக்கியது."
என்று கூறியிருந்தேன்.


()

ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக Best Sound Mixing-க்கான ஆஸ்கர் விருது பெற்ற ராசுல் பூக்குட்டியின் நேர்காணலை சில நாட்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் படித்த போது "ஒரு திரைப்படம் என்பது பல்வேறு நுட்பக் கலைஞர்களின் கூட்டால் உருவாக்கப்படுகிறது. ஆனால் திரைக்குப் பின்னால் உள்ள பல கலைஞர்களின் உழைப்பிற்கு வெளிச்சமும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை" என்று வருத்தப்பட்டார். "ஸ்லம்டாக் மில்லியனரை விட நான் அதிகம் உழைத்தது 'Gandhi My Father' திரைப்படத்திற்கு. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசவில்லை"

ஆக.. ரஹ்மான் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு நிகழாமல் போயிருப்பின் ராசுல் ஆஸ்கர் விருது பெற்றிருந்தால் கூட அது பரலவான கவனத்தைப் பெற்றிருக்காது என்றே தோன்றுகிறது.

()

ஏதோ ஆஸ்கர் விருதுதான் திரைப்பட அங்கீகாரத்திற்கான உச்சம் என்பதான மாயை பொதுவாக இருக்கிறது. உலகத்தின் பல்வேறு நாடுகளின் அமைப்புகள் பல்வேறு சர்வதேச விருதுகளை Cannes, BAFTA, FIAFF, Toronto .... என்று வழங்கிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் ரஹ்மான் பெற்ற golden globe award கூட அதிகளவில் பேசப்படவில்லை. அமீரின் 'பருத்தி வீரன்' Berlin award பெற்றதற்கு கூட இங்கே ஏதும் பெரிதான வரவேற்பில்லை.

என்றாலும் இந்தியத் திரைப்படைப்பாளிகள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணமிது. இந்தியர்களது நீண்ட நாள் கனவான ஆஸ்கரை தமது அசாத்திய திறமை காரணமாக பெற்றதன் மூலம் சர்வதேச விருதுகள் பெறுவதற்கான வாசலை அகலமாக திறந்து வைத்திருக்கிறார். ரஹ்மான். கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டு திரைப்படத் துறையின் மீது சற்றும் மரியாதையில்லாமல் வெறும் குப்பைத் திரைப்படங்களாக மாத்திரமே உருவாக்கும் நடிகர்களின் பின்னால் மாத்திரம் ரேஸ் குதிரைகளின் மீது பணம் கட்டும் ஆர்வத்துடன் தயாரிப்பாளர்கள் ஓடாமல் ஆர்வமுள்ள திறமையான இளைஞர்களை சுதந்திரமாக இயங்க அனுமதித்து சர்வதேச தரத்தில் திரைப்படங்களையும் தயாரிப்பதின் மூலம் இந்தியத் திரைப்படங்களின் மீதான சர்வதேச பார்வையாளர்களின் கவனத்தை அதிகளவில் பெறச் செய்ய முடியும்.

மதர் இந்தியா (1957), சலாம் பாம்பே (1988), லகான் (2001) ஆகிய இந்தியத் திரைப்படங்கள் மாத்திரமே இதுவரை ஆஸ்கர் விருதுகளின் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன. இதிலுள்ள அரசியல் களையப்பட்டு நிஜமாகவே தகுதி உள்ள திரைப்படங்கள் மாத்திரமே தேர்வு செய்யப்பட வேண்டும். ஆஸ்கருக்காக இந்தியா சார்பில் ஷங்கரின் 'ஜீன்ஸ்' தேர்வு செய்யப்பட்ட கொடுமையெல்லாம் நிகழ்ந்திருக்கிறது.

தமிழத் திரைப்படங்களைப் பொறுத்தவரை சர்வதேச தரத்தில் திரைப்படம் எடுக்கக்கூடியவர்களாக நான் கருதுவது (அவர்களின் வணிகத் திரைப்படங்களை தவிர்த்து) மகேந்திரன் மற்றும் பாலுமகேந்திரா ஆகியோர்களை மாத்திரமே. ஆனால் அவர்கள் ரிடையர் ஆகிற நிலையில் இருப்பதால் அமீரை அந்தப் பட்டியலில் சேர்க்கலாமா என்று யோசிக்கிறேன்.

suresh kannan