Sunday, March 13, 2016

Brooklyn (2015) - பெண்களை புரிந்து கொள்வது எளிதல்ல


 
சமீபத்திய அகாதமி விருதில் சிறந்த திரைப்படம்/நடிகை/தழுவல் திரைக்கதை ஆகிய மூன்று பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்த 'ப்ரூக்லின்' என்கிற திரைப்படம் பார்த்தேன்.

வாவ்....என்னவொரு திரைப்படம் இது?

இதில் சித்தரிக்கப்படும் சில சம்பவங்கள் ஏறத்தாழ அந்தரங்கமாக என்னுடன் பொருந்தியிருந்ததால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில்தான் பார்க்க முடிந்தது. படம் பார்க்கும் தருணம் முழுவதிலும் என் கைகள் இருக்கையின் கைப்பிடியை அழுந்த பிடித்திருந்ததை அவ்வப்போது உணர்ந்து விலக்கிக் கொண்டேன்.

பொருளீட்டுவதற்காக தனிநபர்கள் அந்நிய பிரதேசத்திற்கு செல்லும் துயரம் இதில்  பதிவாகியிருக்கிறது. ஆண்களே உள்ளுற அச்சப்படும் இந்த விஷயத்தில் பெண்கள் எவ்வாறு உணர்வார்கள்? அதிலும் ஓர் இளம்பெண்?

***

வருடம் 1952. அயர்லாந்தின் ஒரு சிறிய நகரத்திலிருந்து அமெரிக்காவின் ப்ரூக்லின் நகரத்திற்கு செல்கிறாள் எல்லிஸ். புலம்பெயர்பவர்களுக்கேயுரிய ஹோம் ஸிக்னெஸ் அவளை வாட்டுகிறது. வயதான தாயும் உயிருக்கு உயிரான சகோதரியும் கடல் கடந்து நீண்ட தூரத்தில் இருக்கும் பிரிவு அவளுக்கு துயரத்தை தருகிறது. மெல்ல அங்குள்ள நடைமுறைக்கு பொருந்தி வரும் அவள் ஓர் இத்தாலிய இளைஞனை சந்திக்கிறாள். தன்னுடைய பிரிவுத் துயரத்தை அவனுடைய அன்பின் மூலம் கடக்கிறாள்.

எல்லிஸ்ஸின் சகோதரி இறந்து போகும் தகவல் கிடைக்கிறது. பிறந்த இடம் திரும்ப நினைக்கிறாள். அவள் திரும்பி வருவாளோ என்கிற அச்சம்  அவளுடைய காதலுனுக்கு. திருமணம் செய்து விட்டுப் போ என்கிறான். 'அலைபாயுதே' பாணியில் ரகசிய திருமணம்.

அயர்லாந்து திரும்பும் எல்லஸுக்கு பல நல்ல விஷயங்கள் நடக்கின்றன. அவள் சகோதரி பணிபுரிந்த இடத்தில் இவளும் பணிசெய்ய நேர்கிறது. ஒருபணக்கார ஐரிஷ் இளைஞன் எல்லிஸ் பால் கவரப்படுகிறான். இருவரையும் இணைத்து திருமண பேச்சுகள் கிளம்புகின்றன. இந்த திருமணத்தை எல்லிஸ் தாய் மிகவும் எதிர்பார்க்கிறாள். இதன் மூலம் தன்னுடைய மகளுக்கு பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும் என்பது அவளுடைய நோக்கம்.

தற்காலிகமாக அங்கு தங்கி விட்டு பின்பு ப்ரூக்லின் திரும்பி விடலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் எல்லிஸ்-ஸின் மனம் சஞ்சலமடைகிறது. இந்த அதிர்ஷ்டமான விஷயங்கள் எல்லாம் அவள் ப்ரூக்லினுக்கு போகும் முன் கிடைத்திருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்? அவளுடைய காதலனுடைய (கணவன்) கடிதங்களை வாசிக்காமல் அப்படியே வைக்கிறாள். இங்கேயே தங்கி விடலாம் என்பது அவளுடைய நோக்கமா என்ன?

பெண்கள் காதல்  போன்ற உணர்வுகளுக்கு அத்தனை எளிதில் அடிமையாவதில்லை. அதை விடவும் தங்களின் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்விற்கே அவர்கள் முன்னுரிமை தருவார்கள். இதற்காக அவர்கள் தங்களின் காதலுக்கு துரோகம் செய்கிறார்கள் என்பது பொருள் அல்ல. இதை ஒரு பெண்ணின் நோக்கில்தான் புரிந்து கொள்ள  முடியும். அவர்கள் தங்களின் காதலுக்கு உண்மையாக இருப்பதை விடவும் மற்ற உறவுகளை இணைத்த ஒட்டுமொத்த சூழலையே கணக்கில் கொள்கிறார்கள். எல்லிஸ் தன்னுடைய தாயை நன்றாக கவனித்துக் கொள்வதற்கு அந்த வசதியான வாழ்க்கை தேவை என்று ஒருவேளை அவள் முடிவெடுத்திருக்கலாம்.

என்றாலும் இந்த தருணத்தில் எனக்கு எல்லிஸ் மீது கோபமும் அதே சமயம் பரிதாபமும் வந்தது. ஓ.. எல்லிஸ்.. என்ன இருந்தாலும் நீ இதை செய்யக்கூடாது?

எல்லாம் கூடி வரும் நேரத்தில் ஒரு கலகம் நடக்கிறது. எல்லிஸ்  பணிபுரிந்த முன்னாள் நிறுவனத்தின் பெண் உரிமையாளர், ப்ரூக்லினுள் உள்ள அவரது உறவினர் மூலம் எல்லிஸ்-ஸின் திருமணத்தைப் பற்றி அறிந்திருக்கிறார். எனவே இதைப் பற்றி எல்லிஸிடம் ரகசியமாக விசாரிக்கிறார். சினமும் குற்றவுணர்வும் அடையும் எல்லஸூக்கு அந்த விசாரிப்பு திகைப்பைத் தந்தாலும் குழப்பத்திலிருந்து விலகி தெளிவான முடிவை எடுக்க ஒரு சந்தர்ப்பத்தை தருகிறது. தன் தாயிடம் உண்மையை சொல்லி விட்டு ப்ரூக்ளினுக்கு செல்கிறார்.

அவளுடைய காதலனை சந்திக்கும் அந்த இறுதிக் காட்சி.. ஓ.. என்னவொரு காட்சி அது. ஏறக்குறைய நான் அழுது விட்டேன். எல்லிஸ் இந்த முடிவை எடுத்திருக்காவிடில் அவளை நான் மன்னித்திருக்க மாட்டேன்.

***

இத்திரைப்படம் பெண்களின் மிக பிரத்யேகமான குணாதிசயங்களை மிக நுட்பமாக யதார்த்தமாக விவரிக்கிறது. பெண்கள் திருமணமாகி ஒரு புதிய சூழலானது, ஏறத்தாழ பொருளீட்டுவதற்காக இன்னொரு பிரதேசத்திற்கு செல்லும் அதே சூழல்தான். புதிய இடம். புதிய மனிதர்கள். முதலில் அச்சமும் படபடப்புமாய் இருந்தாலும்  பிறகு மெல்ல மெல்ல அந்த சூழலில் அவர்கள் தங்களை கச்சிதமாகப் பொருத்திக் கொள்கிறார்கள். அந்த இடத்தையே பிரகாசமாக ஆக்கி விடுகிறார்கள். பிறகு அவர்கள் நினைத்தால் கூட அந்த இடத்தை பிரிய முடியாத அளவிற்கான பந்தம் ஏற்படுகிறது.

எல்லிஸ்-ஸூக்கு ஏற்படும் இந்தச் சம்பவங்கள் மூலம் இதை தெளிவாக உணர முடிகிறது. Colm Tóibín என்கிற ஐரிஷ் நாவலாசிரியர் எழுதிய படைப்பிற்கு அற்புதமான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் Nick Hornby. இயக்கம்: John Crowley.

எல்லிஸாக நடித்திருக்கும் Saoirse Ronan வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வது சம்பிதாயமாக இருந்தாலும் அது மிகையல்ல. சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுமளவிற்கு தன்னுடைய பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.

***

ப்ரூக்ளின் திரும்பும் எல்லிஸ் கப்பலில் தன்னைப் போலவே புதிதாக செல்லும் ஓர் இளம் ஐரிஷ் பெண்ணுக்கு தனக்கு முன்னர் கிடைத்த உபதேசங்களை சொல்கிறார் - இறுதிக் காட்சியில்.


'அங்கு நிறைய ஐரிஷ் மக்கள் இருப்பார்கள் அல்லவா? என்னுடைய வீடு போல அந்த இடத்தை உணர முடியுமா? - புதிய பெண் கேட்கிறாள்.

"ஆம். அங்கு வீடு போல உணர முடியும்" - எல்லிஸின் பதில். கவனியுங்கள், அவள் திருமணம் செய்திருப்பது அவளுடைய கலாசாரத்திற்கு முற்றிலும் அந்நியமான ஒரு இடத்தில், முற்றிலும் அந்நியக் கலாசாரத்தை சேர்ந்த ஓர் இத்தாலிய இளைஞனை.

ஓ.. இந்தப் பெண்கள்.... :)

suresh kannan

No comments: