Saturday, February 07, 2009

நான் கடவுள் (அல்ல)

ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' புதினத்தை படித்து முடிக்கும் போது பின்னிரவு இரண்டு மணியிருக்கும். சற்று நேரம் மூச்சு பேச்சற்று தொட்டால் உடைந்துவிடக்கூடிய நிலையிலிருந்தேன். நவீன இலக்கியத்தில் விளிம்பு நிலை மனிதர்களின் உலகத்தை ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன் போன்றவர்கள் ஏற்கெனவே தொட்டிருந்தாலும் அதை மிக உக்கிரமாக அறிமுகப்படுத்திய அந்தப் புதினத்தின் தாக்கத்திலிருந்து வெளிவர சற்று நேரம் பிடித்தது. அப்போது ஒரு சதவீதம் கூட நான் நினைக்கவில்லை, இதை யாராவது ஒரு திரைப்படமாக்க யோசிப்பார்கள் என்று. அதுவும் தமிழ் சினிமாவில்.

ஆனால் இயக்குநர் பாலா இதை யோசித்திருக்கிறார். அவருக்கு பிடித்தமான சப்ஜெக்ட் என்பதால் இருக்கலாம். பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்கள் சந்தோஷமான தருணங்களோடு ஆரம்பித்து இடையில் நிறைய பிரச்சினைகளை சந்தித்து பின்பு அதிலிருந்து மீண்டு திரும்பவும் எல்லோரும் சந்தோஷமாக புன்னகைக்கிறதோடு நிறையும். வாழ்வின் இருண்மையான பகுதிகளை யதார்த்தத்தோடு காட்ட எந்தவொரு படைப்பாளியும் முன்வருவதில்லை. பொதுவாக பார்வையாளர்களும் அதைக் காண விரும்புவதில்லை. தினவாழ்வில் பார்த்துக் கொண்டிருக்கும் நிகழ்வுகளைப் போய் 'பகற்கனவுகளை' உருவாக்கித்தரும் சினிமாவில் அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. சினிமாவை தேங்க விடாமல் நகர்த்திச் செல்கிற சில இயக்குநர்களே இந்த மாயையை கலைக்க விரும்புகிறார்கள். இந்த வரிசையில் பாலாவையும் நிச்சயமாக சேர்த்துக் கொள்ளலாம். ஆனால்...

பாலா தனது திரைப்படங்களை தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பில் அடைத்துக் கொள்ள விரும்புகிறார். ஒருவன் இருப்பான். மிக வலிமையானவன்; முர்க்கன். பஞ்ச பூதங்களைத் தவிர யாராலும் அவனைக் கட்டுப்படுத்த இயலாது. சட்டமும் நீதியும் கூட அவனை ஒன்றும் செய்ய முடியாது. சமூகத்தின் தீயசக்தியை வன்முறையின் உக்கிரத்தோடு அழித்து விடுவான். அமைதியாக இருக்கும் அவனை அதற்கு யாராவது உசுப்பிவிட வேண்டும். மிகக் கொடூரமான பூடகமான சூழலில் உருவாக்கப்படும் அவன் சமூகத்தின் நீரோட்டத்தில் கலக்க முற்படும் போது அதற்கான மோதல்கள் நிகழும்.

பாலாவின் நாயகர்கள் தொடர்ந்து இப்படித்தான் இருக்கிறார்கள். இப்போது ருத்ரனாக ஆர்யா. அருவாளை தூக்கிக் கொண்டு எதிர்நாயகனை நோக்கி வீர வசனம் பேசும் வழக்கமான வெகுஜனப்பட நாயகர்களின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகத்தான் பாலாவின் நாயகர்களைப் பார்க்க முடிகிறது. இதுவே பார்வையாளனுக்கு ஒரு சலிப்பைத் தரக்கூடும்.

சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு குருதி வழிய பிச்சை கேட்பவனை நாம் பயங்கலந்த விசித்திரத்தோடு பார்ப்போம் அல்லவா? அதே மாதிரியான உணர்வை தமது பார்வையாளர்களுக்கும் தர விரும்புகிறார் பாலா. காசியில் 15 வருடங்கள் வளரும் ருத்ரன் ஒரு பிச்சைக்காரனாக வளரலாம்; பிணங்களை எரிக்கும் தொழிலை மேற்கொண்டிருக்கலாம்; போலிப் புரோகிதராகி தெவச மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கலாம். அவ்வாறெல்லாம் ஆகியிருந்தால் அவன் பாலாவின் வழக்கமான 'நாயகனாகி' இருக்கமாட்டான். எனவே அவன் ஒரு 'அசாதாரண' அகோரியாக பாலாவால் 'உருவாக்கப்பட்டிருக்கிறார்'. சுடுகாட்டில் வளரும் ஒரு சிறுவன் ஏன் அப்படி ஒரு விசித்திர டார்ஜான் மாதிரியாக வெளிவருகிறான் என்று 'பிதாமகனில்' விக்ரம் பாத்திரம் குறித்து நாம் யோசித்தோமே, அவ்வாறே இதற்கும் யோசிக்க வேண்டியிருக்கிறது. பாத்திரங்கள் எந்தவித நெருடலுமின்றி மிக அழுத்தமாக வடிவமைக்கப்படும் போதுதான் பார்வையாளன் அந்தச் சித்திரத்தோடு ஒன்ற முடிகிறது.

Photobucket

பிச்சைக்காரர்களை தினமும் சாலையில் சந்தித்துக் கொண்டிருந்தாலும் அவர்களின் இன்னொரு உலகத்தைப் பற்றி அறியாத நான் எப்படி ஜெயமோகனின் நாவலைப் படித்தவுடன் அதிர்ந்து போனேனோ அவ்வாறே வெகுஜனப் படங்களின் நச்சுப் புகையில் மூச்சு முட்டிக் கொண்டிருக்கும் தமிழ்த்திரைப்பட பார்வையாளர்களுக்கு இந்தப்படம் நிச்சயம் ஒரு புதிய விசித்திரமான அனுபவமாக அமையக்கூடும். ஆனால் அவ்வாறு அடையவிடாமல் பாலாவே சில தடைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். பிச்சைக்காரச் சிறுவர்களின் உலகத்தை நாடகத்தனமாக செயற்கையான உருவாக்காமல் அவர்களுக்கிடையே பரிமாறப்படும் நகைச்சுவையையும் கொண்டாட்டத்தையும் காட்டியிருப்பது ரசிக்கத்தக்கதுதான் என்றாலும் அதுவே சற்று அதீதமாகவும் காவல்நிலையத்தில் நடிகர்களின் பாவனையுடன் கூடிய நடனங்கள், அம்சவல்லி (பூஜா) பின்னணி இசையுடன் பாடும் திரைப்படப் பாடல்கள்.... போன்ற காட்சிகள் படம் ஏற்படுத்த வேண்டிய அழுத்தத்தை நீர்த்துப் போகச் செய்திருக்கின்றன. (பிதாமகனில் தேவையற்ற இடைச்செருகலாக வரும் சிம்ரனின் நடனத்தை நினைவுப்படுத்திக் கொள்ளவும்).

()

ஆர்யா பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் காட்சிகள் எந்தவொரு வெகுஜனப்பட நாயகனின் அறிமுகத்திற்கும் குறைவில்லாமல் செயற்கையான ஆக்ரோஷத்துடனும் பார்வையாளன் வாயைப் பிளக்க வேண்டும் என்கிற முன்தீர்மானத்துடனும் அமைக்கப்பட்டிருக்கிறது.

'உனக்கென்று யாரும் கிடையாது. எல்லா உறவுகளையும் அறுத்துவிட்டு வா' என்று வழியனுப்பி வைக்கிறார் ருத்ரனின் குருஜி. அப்படியானால் அவருக்கும் ருத்ரனுக்கும் உள்ள உறவு என்ன? ஏன் அவன் திரும்பி வர வேண்டும்?

'வாழ இயலாதவர்களுக்கு நீ தரும் வரம் மரணம்' என்று குரு உபதேசித்திருப்பதனால் படத்தின் இறுதியில் அந்தக் குரூரத்தை நிகழத்துகிறான் ருத்ரன். ஆனால் அதே வரத்தை மனச்சாட்சியற்ற வியாபாரக் கொடூரர்களுக்கும் அளிக்கிறான். அப்படியானால் இரண்டு வரங்களுக்கும் என்ன வித்தியாசம்? மறுபிறவியற்ற மோட்ச நிலை ஒன்றுதானா? மற்ற பிச்சைக்காரக் குழந்தைகளும் வாழ இயலாத சூழல் ஏற்பட்டால் அதற்கு தீர்வு ருத்ரனின் தரும் 'வரம்'தானா?

கேள்விகள்... கேள்விகள்...

பல வருடங்களுக்கு முன்பு ஒரு க்ரைம் நாவல் படித்தேன். அந்த ஊரில் உள்ள ஆதரவற்ற வயதான சாலையிலிருக்கும் பிச்சைக்காரர்கள் தொடர்ந்து கொல்லப்படுவார்கள். இறுதியில் பிடிபடும் கொலையாளி கூறும் காரணம் "இவர்களால் சமூகத்திற்கு எந்தப்பயனுமில்லை. இவர்களால் மிச்சப்படும் உணவு மற்றவர்களுக்காவது உதவும். எனவே இவர்களை கொல்வதில் எந்த தயக்கமும் ஏற்படவில்லை. சமூகத்தின் நலனுக்குக்காகத்தான் இதைச் செய்தேன்". அந்த மனநோயாளிக்கும் ருத்ரனுக்கும் அதிக வித்தியாசமில்லை என்றுதான் தோன்றுகிறது.

()

ராஜாவின் பின்னணி இசை மிகைப்படாமல் படத்தின் நிகழ்வுகளோடு இயைந்துப் போகிறது. . 'முதலாளி' தோன்றும் ஆரம்பக்காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் விசித்திரமான ஒலியை குறிப்பிட்டுச் சொல்லலாம்.. 'ஓம் சிவ ஓம்' என்கிற ஆக்ரோஷமான பாடல் மாத்திரமே இந்தப்படத்தின் சூழலுடன் மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

படத்தின் இறுதிப்பகுதியில் அம்சவல்லி பேசுவது, காவல் நிலையத்தில் நடிகர்களின் காமெடிக் காட்சிகள் தவிர ஜெயமோகனின் வசனம் மற்ற இடங்களில் எந்த வித நெருடல்களுமின்றி யதார்த்தமாக அமைந்திருக்கிறது. (அம்பானி). முழுப்படத்தையும் காசியில் எடுத்திருக்கலாமோ என்னுமளவிற்கு காசி நகரத்தை அத்தனை அழகாக காட்டியிருக்கும் ஆர்தர் வில்சனின் காமிராவில் சுடுகாட்டு நெருப்பு கூட ஒரு சர்ரியலிச ஓவியம் போல் ஜொலிக்கிறது.

'அண்ணாச்சி' கவிஞர் விக்கிரமாதித்யன் ஒரு வயதான பிச்சைக்காரராக நடித்திருக்கிறார். அவருக்கு பொருத்தமான வேடம். நன்றாகவே செய்திருக்கிறார். பார்வையற்ற பெண்ணாக பூஜா சிறப்பாகவே தன் பங்களிப்பை அளித்திருக்கிறார். வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் வரும் நடிகரொருவரும் அவர் கூடவே வரும் திருநங்கையும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முன்னமே சொன்ன மாதிரிஉடற்குறையுள்ள குழந்தைகளை உருக்கத்துடன் சித்தரிக்காமல் அவர்களின் குழந்தைமையோடே காட்டியிருப்பது ரசிக்கத்தக்கதாயிருக்கிறது. விக்ரமாதித்யனின் மடியிலேயே எப்போதும் அமர்ந்திருக்கும் குழந்தை, தங்களின் சோகத்தையெல்லாம் இயல்பான நகைச்சுவையோடு எதிர்கொள்ளும் இரண்டு "பார்ட்னர்கள்", சிவன், பார்வதி, சாமியார் வேடமிட்டவர்கள், குள்ளச்சாமியார், ருத்ரனின் குருவின் கனிந்த முகம், ஆசிர்வாதம் வாங்கும் கான்ஸ்டபிள்.. என்று அத்தனை முகங்களும் நம் மனதில் ஆழமாகப் பதியுமளிவிற்கு அவர்களைச் சுற்றியே காட்சிகளை அமைத்திருக்கிறார் பாலா. ஹீரோயினின் தொப்புளுக்கு குளோசப் வைக்கும் பெரும்பாலான இயக்குநர்கள் மத்தியில் சாலைகளில் நாம் கவனிக்க விரும்பாத முகங்களுக்கு 'குளோசப்' வைக்கும் இப்படியொரு 'பிழைக்கத் தெரியாத' இயக்குநர்.

படத்தில் வரும் பெரும்பாலான இந்துச் சாமியார்கள் பித்தலாட்டக்காரர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். இந்துக்கடவுள்களிடமிருந்து அம்சவல்லிக்கு கிடைக்காத ஆறுதல் 'தேவலாயத்திலும் விவிலிய வார்த்தைகளிலும்தான் கிடைக்கிறது. இயக்குநர் என்ன சொல்ல வருகிறாரோ?

காவல் துறையினரால் அன்றாட வாழ்வில் நாம் தொடர்ந்து கட்டு்ப்படுத்தப்படும் போது அவர்களின் மீது ஏற்படும் ஆழ்மன வெறுப்பு, திரையில் அவர்கள் பழிவாங்கப்படும் போது உற்சாகமாக உருமாறுகிறது. இந்த உணர்ச்சியை பெரும்பாலான காட்சிகளில் பாலா பயன்படுத்திக் கொள்கிறார்.

பிறவிலேயே ஊனமாக பிறப்பவர்களையும், அவ்வாறு அல்லாதவர்களை சிதைத்து ஊனமாக்கியும் பிச்சையெடுக்க வைத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் மனச்சாட்சியற்ற சமூக விரோதிகளை தண்டிக்க வேண்டிய காவல் துறை மாறாக அவர்களுக்கே கைகட்டி சேவகம் புரிகிறது. அந்த அப்பாவிகளை காப்பாற்ற யதார்த்த வாழ்வில் எந்த 'அகோரியும்' வரமாட்டார் என்பதுதான் உச்சபட்ச சோகம்.

ஆர்யாவைப் பற்றி என்ன சொல்வது? அவரை உசுப்பேற்றி உசுப்பேற்றி உடம்பை ரணகளமாக்கியிருக்கிறார்கள். இந்தப்படம் வந்தவுடன் விக்ரம், சூர்யாவின் வரிசையில் நிற்கும் கனவில் இருக்கும் அவரின் விருப்பம் நிறைவேற நமச்சிவாயம் அருள் புரியட்டும். சிவ ஓம்.

()

இந்தப்படத்தை எந்த வகையில் சேர்ப்பது என்று எனக்கு குழப்பமாக இருக்கிறது. தீர்மானமாக சொல்ல நான் ஒன்றும் கடவுள் அல்ல. (அப்பாடி!). எழுத்தாளர் சுஜாதாவை வெகுஜன எழுத்தாளராகவோ இலக்கியவாதியாகவோ தீர்மானமாக வகைப்படுத்த முடியாத குழப்பம். ஒன்று மட்டும் தீர்மானமாகச் சொல்ல முடியும்.

பெரும்பாலான தமிழ்த்திரைப்பட இயக்குநர்களால் தொடர்ந்து கொட்டப்பட்டிருக்கும் குப்பையான திரைப்படங்களிலிருந்து விலகி பார்வையாளர்களுக்கு வித்தியாசமானதொரு அனுபவத்தை தரவேண்டுமென்று பாலா மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். அதற்கு மரியாதை செலுத்தும் விதமாகவாவது இந்தத் திரைப்படத்தை ஒருமுறை பார்த்துவிடுதல் நலம்.

அடுத்த படைப்பிலாவது பாலா தனது 'பிரத்யேக' உலகிலிருந்து வெளிவந்து இன்னொரு வகை மாதிரியை முயற்சிக்க, உருவாக்க வேண்டுமென்பது என் விருப்பம். இதுவே ஒரு கிளிஷேவாக மாறி அதிலேயே சிறைப்படக்கூடாது.

இதையும் சொல்ல வேண்டும். ஆர்யாவின் தாடி, காசியின் பின்னணி, அகோரிகளின் பூச்சாண்டி, ராஜாவின் இசை, நான்கு வருட இழுபறி, பொருட்செலவு போன்ற சமாச்சாரங்களை வைத்துக் கொண்டு பாலா தந்த தாக்கத்தை விடவும் இது எதுவும் இல்லாமல் வெறும் காகிதங்களிலேயே இதை விட வலிமையான தாக்கத்தை தனது புதினத்தின் மூலம் ஏற்கெனவே உருவாக்கி விட்டதின் மூலம் பாலாவை கடந்து நிற்கிறார் ஜெயமோகன்.

suresh kannan

24 comments:

ஷண்முகப்ரியன் said...

'நான் கடவுள்'பட விமர்சனங்களிலேயே என்னைப் பொறுத்தவரை மிக,மிக அருமையான விமர்சனம் இதுவே.மனமார்ந்த பாரட்டுக்கள.ஏழாம் உலகம் நாவலை நான் படிக்காததினால்,உங்களகடைசி வரி பற்றி மட்டும் எனக்கு எந்த அனுமானமும் இல்லை.

Anonymous said...

பாலாவை கடந்து நிற்கிறார் ஜெயமோகன்.


இந்த சிண்டு முடிதல் தேவைதானா?.
ஜெயமோகனே இப்போது இதை ஒப்புக்கொள்ளமாட்டார்?.ஏன் என்று
எல்லோருக்கும் தெரியும்.
காசேதான் கடவுளடா :).

சரண் said...

அருமையான விமர்சனம்..

குறைகளையும் நிறைகளயும் அட்டகாசமாக விவரித்துள்ளது மிக அருமை..

சாணக்கியன் said...

/* பாலாவை கடந்து நிற்கிறார் ஜெயமோகன் */

உண்மையாக இருக்கலாம். ஆனால தமிழ் வாரப்பத்திரிக்கை கூட படிக்காதவர்கள் எல்லாம் இப்படத்திற்கு முன்பதிவு செய்து பார்க்கிறார்கள். அவ்வகையில் பரவலாக சென்றடைய செய்வதற்கு சினிமாவையே நம்பியிருக்க வேண்டிய சூழல்.

பாலாவிடமிருந்து வேறு வகையான படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்!

இன்னும் படம் பார்க்கவில்லை. ஷ்ரேயா கோசல் பாடும் ‘கண்ணில் பார்வை’ பாட்டு கேட்க அற்புதமாக இருந்ததே? படத்தில் எடுபடவில்லையா?

Anonymous said...

//ஷ்ரேயா கோசல் பாடும் ‘கண்ணில் பார்வை’ பாட்டு கேட்க அற்புதமாக இருந்ததே?//

அருமையான பாடலது.

ஆனால் ஒம் சிவோிம், பிச்சைப்பாத்திரம் ஆகிய இரு பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள் படத்தில் உபயோகப்படுத்தப் படவில்லை.

ரமேஷ் வைத்யா said...

ஒவ்வொரு வரிக்கும்

ஆமாஞ்சாமி. நான் 'இதை முடித்தே தீருவது' என்கிற ஒருவகை வக்கிரத்தோடுதான் ஏழாம் உலகத்தைப் படித்தேன். ஆனாலும் முடியவில்லை. நள்ளிரவில் ஜெயமோகனுக்கு இதைச் சொன்னபோது, 'என்ன பண்ண... இதைவிடக் கொடுமையெல்லாம் இருக்கே...' என்று பலவீனமான தன் குரலில் சொன்னார் ஜெயமோகன். அன்றிரவு தூக்கம் போச்சு. ஆனால், இரண்டு வெவ்வேறு ஊடகங்களை எப்படி ஒப்பிட முடியும். நம் மனதில் எழும் சித்திரங்களைத் திரையில் கொண்டுவர எவராலும் முடியாது, நம்மாலேயே கூட!

Krishnan said...

இன்னும் படம் பார்க்கவில்லை. சில வலைப்பதிவர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள். உங்கள் விமரிசனம் sounds balanced. கண்டிப்பாக ஏழாம் உலகம் படிக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். ரொம்ப நன்றி சுரேஷ்.

பிச்சைப்பாத்திரம் said...

நன்றி.

முதலில் இந்தப்படத்தைப் பற்றின என் பார்வையை பாலாவிற்கும் ஜெயமோகனுக்கு நடக்கிறதோர் கற்பனை உரையாடலாக அமைக்க எண்ணி ஆரம்பித்தேன்.

()

இயக்குநர் பாலா அலுவலகம். ஜெயமோகன் உள்ளே நுழைகிறார்.

"வாங்க. எழுத்தாளரே. படம் தியேட்டர்ல பாத்தீங்களா, மக்கள் என்ன சொல்றாங்க?"

"சொல்றேன். பாய் ஏன் இப்படி இன்னும் தலை கீழா நிக்கறாரு?"

(பாலா கடகடவென சிரித்தபடி)

"நாலு வருஷமா இப்படியே பழக்கிட்டமா... அதே ஞாபகத்துல இப்படி வந்து நிக்கறாப்ல. சொன்னாவும் கேக்க மாட்டேங்கறான். முறைச்சுப் பாக்கறான். என்ன சாப்புறீங்க... டேய் மொட்டை..."

()

இப்படிப் போகிற அந்த உரையாடல் சற்று அதீதமாக இருந்ததால் நிறுத்தி விட்டேன்.

விஜய் said...

Suresh, your review is balanced. No religion gives any solace to the forlorn seems to be the conclusion, as revealed by the soliloquy by the bliind heroine. But surely the noone can come without any impact.

Umesh said...

Ur review is neutral and well balanced.Check out my review at www.theumeshblog.blogspot.com

Anonymous said...

// 'உனக்கென்று யாரும் கிடையாது. எல்லா உறவுகளையும் அறுத்துவிட்டு வா' என்று வழியனுப்பி வைக்கிறார் ருத்ரனின் குருஜி. அப்படியானால் அவருக்கும் ருத்ரனுக்கும் உள்ள உறவு என்ன?//

அய்யா சாமி, குருவுக்கும் சீடனுக்கும் என்ன அய்யா உறவு இருக்கும், குரு-சீடன் உறவைத் தவிர?....

//ஏன் அவன் திரும்பி வர வேண்டும்? //

சரிதான்...குருவைத் தேடி சீடன் மீண்டும் சென்று தானே ஆக வேண்டும், தானும் ஒரு குரு ஆவதற்கு.... அதனால் தான் போகிறான்.

நீர் ஜெயமோகனின் நித்ய சைதன்ய யதி பற்றிய கட்டுரைகளை எல்லாம் படித்திருக்கிறீர் தானே, அப்புறம் என்ன குரு-சீடன் பற்றி இதுமாதிரியான சந்தேகம் எல்லாம்..??

அழகிய சிறியவன்

பிச்சைப்பாத்திரம் said...

//அய்யா சாமி, குருவுக்கும் சீடனுக்கும் என்ன அய்யா உறவு இருக்கும், குரு-சீடன் உறவைத் தவிர?....///

எல்லா உறவுகளும் எனப்படும் போது அதில் குரூ-சீடன் உறவும் அடங்குமோ என நினைத்தேன். மேலும் ருத்ரன் 'நானே கடவுள்' என அடிக்கடி முழங்குவதால் கடவுளுக்கு எதற்கு குரு? என்ற சந்தேகமும் ஏற்பட்டது.

தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள். ருத்ரனைப் போல் ஏதும் 'வரம்' கொடுத்து விடாதீர்கள். :-)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

"வாழத் தகுதி இல்லாதவர்களுக்கு நான் தரும் மரணம் தண்டனை. வாழச் சிரமப்படுபவர்களுக்கு நான் தரும் மரணம் வரம்" என்று தான் ருத்ரன் சொல்கிறார். எனவே, மலையாளத் தரகருக்குத் தந்த மரணம் வரம் அல்ல.

Sridhar Narayanan said...

சுரேஷ்,

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

பாலாவின் படங்களில் ஒட்டாமல் எனக்குத் தெரிவது கதாநாயகர்களின் அதீத ஹீரோயிசம்தான். அவர் விளிம்புநிலை மனிதர்களை (சிறுவயதில் சிறைக்குப் போனவன், பேருந்தில் பொருட்களை ஏலம் விடுபவன், சுடுகாட்டில் வளர்ந்தவன்) முதன்மைப் படுத்தினாலும் அவர்களை அசாதாரண பலம் பொருந்தியவர்களாக காட்ட முயற்சிக்கிறார்.

ஆனால் அதற்குத்தான் அவருக்கு இவ்வளவு பெரிய இரசிக கூட்டமும் இருக்கிறது. மாறுபட்ட முறையில் அவர் ஒரு பயந்தாங்கொள்ளியை பிரதானபடுத்தி படம் எடுத்தால் அவர் இரசிகர்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும்.

வெட்டிப்பயல் said...

//சுரேஷ் கண்ணன் said...
நன்றி.

முதலில் இந்தப்படத்தைப் பற்றின என் பார்வையை பாலாவிற்கும் ஜெயமோகனுக்கு நடக்கிறதோர் கற்பனை உரையாடலாக அமைக்க எண்ணி ஆரம்பித்தேன்.

()

இயக்குநர் பாலா அலுவலகம். ஜெயமோகன் உள்ளே நுழைகிறார்.

"வாங்க. எழுத்தாளரே. படம் தியேட்டர்ல பாத்தீங்களா, மக்கள் என்ன சொல்றாங்க?"

"சொல்றேன். பாய் ஏன் இப்படி இன்னும் தலை கீழா நிக்கறாரு?"

(பாலா கடகடவென சிரித்தபடி)

"நாலு வருஷமா இப்படியே பழக்கிட்டமா... அதே ஞாபகத்துல இப்படி வந்து நிக்கறாப்ல. சொன்னாவும் கேக்க மாட்டேங்கறான். முறைச்சுப் பாக்கறான். என்ன சாப்புறீங்க... டேய் மொட்டை..."

()

இப்படிப் போகிற அந்த உரையாடல் சற்று அதீதமாக இருந்ததால் நிறுத்தி விட்டேன்.//

ஆஹா... அதையும் அடுத்த பதிவா போடலாமே...

கதிர் said...

//பிறவிலேயே ஊனமாக பிறப்பவர்களையும், அவ்வாறு அல்லாதவர்களை சிதைத்து ஊனமாக்கியும் பிச்சையெடுக்க வைத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் //

அது என்னங்க கொள்ளை லாபம்? அப்போ ஓரளவுக்கு லாபம் வெச்சா அது நியாயமான காரியமா...

இத்தனை வருட எதிர்பார்ப்புகளை 25 சதம் கூட பூர்த்தி செய்யவில்லை என்பது 100 சதம் உண்மை.

Senthil Subramaniam said...

my thots at http://ssklogs.blogspot.com/2009/02/naan-kadavul-review.html

ஜோ/Joe said...

இந்த படத்துல ஒரு பிரேமுக்கு பாலா உழைத்த உழைப்பு கூட தேவையில்லாத 'இங்க பாருங்க..எப்படி நொள்ளை கண்டுபிடுக்கிறேன் பாருங்க' விமரிசனத்துக்கு எத்தனை பாராட்டு. ஹைய்யோ.

Anonymous said...

விமரிசன்ம் நன்றாக இருந்தது. யானை நடந்தால் செய்தி இல்லை. விழுந்தால்தான் செய்தி எனபதற்கு ஈடாக, சாதாரண பாத்திரங்களும் சாதாரண சம்பவங்களும் “கதை” ஆக்குவதைவிட அகோரியான அசாதாரணமான ருதரன் கதையாக்குவது பாலாவுக்கு சுலபமாக தோன்றியிருக்கலாம்.

கதை எழுதிய ஜெ.மோ படமாக எடுத்த பாலாவை தாண்டக் காரணம் வாசகனுடைய கற்பனை பாலவினதை விட வித்தியாசமாய் இருந்ததினால் இருக்கலாம். இலக்கியத்துக்கும் சினிமாவுக்குமான முக்கியமான வித்தியாசம் அல்லவா..? எவ்வளவு பெரிய டைரடக்கர் வந்தாலும், படித்த வாசகனின் மனவெளியில் அவன் சொந்தமாக உருவாகிகிய “படத்தை” தாண்ட முடியாது. :-)


- மூக்கு

Anonymous said...

சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு,

ஒரு விஷயத்தில் எனக்கு என் மேலே எதாவது சந்தேகம் இருந்தால்...முதலில் பிட்சை பத்திரத்துக்கு வந்து பார்பேன். எல்லா முறையும் எனக்கு பதில் கிடைக்கும். இம்முறையும் சேர்த்து... "ஏழாம் உலகம்" படிக்காது தவிர என் மன ஓட்டங்களை நீங்கள் பதிவாக வைத்திருக்கிறீகள்.

கோடான கோடி நன்றிகள்

BALA said...

சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு,

ஒரு விஷயத்தில் எனக்கு என் மேலே எதாவது சந்தேகம் இருந்தால்...முதலில் பிட்சை பத்திரத்துக்கு வந்து பார்பேன். எல்லா முறையும் எனக்கு பதில் கிடைக்கும். இம்முறையும் சேர்த்து... "ஏழாம் உலகம்" படிக்காது தவிர என் மன ஓட்டங்களை நீங்கள் பதிவாக வைத்திருக்கிறீகள்.

கோடான கோடி நன்றிகள்

Anonymous said...

I have seen your Naan kadavul Comments.good .But some parts of comments in that i disagree with you .

For exa . You have mentioned songs are all not good other than Om siva.But have you heared that Pichai pathiram Song well and full.

plz listen that song in audio cassete alone you wil melt in that lyrics.

For your information that song have already came for rajavin Ramanamalai.in that album all songs are dedicated for Ramana maharishi.if you have time plz listen that album.

வணங்காமுடி...! said...

எவ்வளவு தான் குறைகள் இந்தப் படத்தில் இருந்தாலும், அவல நிலை விளிம்பு மனிதர்களை யாரும் காட்டாத விஷயங்களை கதையாகச் செய்ததன் மூலம் உயர்ந்து நிற்கிறார் பாலா.
இருந்தாலும், உங்கள் விமர்சனம் தெளிவான நடையுடன் இருந்தது, நன்றி.

Madesh said...

please read my comments on the questions raised in the movie

A discussion on Who is God in Nan kadavul movie.

http://matrixjourney.com/nan-kadavul.htm