Monday, February 23, 2009

81வது வருட ஆஸ்கர் விருதில் இந்தியர்கள்

இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய தருணமிது. தங்களின் சமீபத்திய எதிர்பார்ப்பு நிறைவேறிய மகிழ்ச்சியில் பலர் ஆனந்தப் பெருமூச்சினை விட்டிருப்பார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளும் (Original music score & Original Song) மற்றும் ராசுல் பூக்குட்டி ஒரு ஆஸ்கர் விருதும் (Sound Mixing) இந்தியச் சிறுமியை வைத்து உருவாக்கப்பட்ட smile pinky விவரணப்படத்திற்கு ஒரு ஆஸ்கர் விருதும் கிடைத்துள்ளது. கடந்த வருடங்களை விட இந்த வருட விருதுகள் அதிக பரபரப்பை ஏற்படுத்தியதற்கு முக்கிய காரணம் ஏ.ஆர். ரஹ்மான். நாமினேஷன் பட்டியலில் மூன்று இடங்களில் ரஹ்மானின் பெயர் இருந்ததால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அது பொய்க்கவில்லை. ஏற்கேனவே ரஹ்மான் மீடியாக்களின் செல்லக்குழந்தை. இப்போது கேட்கவே வேண்டாம். இந்த சந்தோஷங்களின் மகிழ்ச்சியில் ஒரு சிறிய நெருடலும் இருக்கிறது. விருது பெற்ற இந்தியர்கள் பிறநாட்டு இயக்குநர்களின் ஆங்கிலத் திரைப்படங்களில் பணிபுரிந்தவர்கள்தான். நேரடியான ஒரு இந்திய திரைப்படத்திற்கு Best Foreign Language film பிரிவில் இந்த விருது கிடைத்திருந்தால் கூடுதல் சந்தோஷம் கிடைத்திருக்கும். ஸ்லம்டாக் மில்லியனர் ஒரு பிரிட்டிஷ்காரர் உருவாக்கினது; Smile pinky-யை உருவாக்கின Megan Mylan ஒர் அமெரிக்கப் பெண்மணி.

ஏதோ இதுதான் இந்தியர்கள் ஆஸ்கர் பெறும் முதல் தருணம் என்கிற மாதிரியான மாயை நம்மிடையே இருக்கிறது. அது உண்மையல்ல. இதற்கு முன்னால் இரண்டு இந்தியர்கள் இதை சாதித்திருக்கிறார்கள். காந்தி திரைப்படத்தின் சிறந்த ஆடை வடிவமைப்பிற்காக பானு அதைய்யாவும், திரைப்படங்களுக்கு ஆற்றிய சாதனைகளுக்காக சத்யஜித்ரேவும் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். ராசுல் பூக்குட்டி மூன்றாவது இந்தியர்.

ஸ்லம்டாக் மில்லியனர் படம் குறித்தான என்னுடைய பதிவில்
"விகாஸ் ஸ்வரூப் எழுதிய நாவலின் மையத்தை ஒரு நூல் அளவு எடுத்துக் கொண்டு Simon Beaufoy எழுதியிருக்கும் மிகத் திறமையான திரைக்கதை இந்தப்படத்தின் மிகப் பெரிய பலம். (திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது இந்தப்படத்திற்கு கிடைக்கலாமென எதிர்பார்க்கிறேன்)."
என்று எழுதியிருந்தேன். அதன்படியே Best Adapted Screenplay பிரிவில் Simon Beaufoy விற்கு விருது கிடைத்திருப்பது குறித்து சந்தோஷம்.

()

ரஹ்மானின் கடும் உழைப்புதான் இந்த உச்சத்திற்கு அவரைக் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது. விளம்பரங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த ஓர் இளைஞன் 'மணிரத்னம்' மூலம் வெளிப்பட்ட போது தமிழ்த் திரைப்பட இசையுலகில் ஏதோ ஓரு புதிய காற்று உள்ளே நுழைந்தது போலிருந்தது. இப்பவும் எனக்கு ஞாபகமிருக்கிறது. அப்போதெல்லாம் புதிய திரைப்பாடல்களை ஒலி நாடாக்களில் பதிவு செய்து கொடுப்பதெற்கென்றே பல சிறு நிலையங்கள் இருந்தன. நான் ஏற்கெனவே கொடுத்திருந்த பட்டியல் போக இன்னும் இடமிருந்த போது கடைக்காரர் சொன்னார். ''ரோஜான்னு ஒரு படம். புதுசா ஒருத்தன் ம்யூசிக் போட்டிருக்கான். ருக்குமணின்னு ஒரு பாட்டு. என்னமா அடிச்சிருக்கான் தெரியுமா? ரெக்கார்ட் செய்யவா?" என்றார் பரவசத்துடன். ஆனால் எனக்கு மற்ற பாடல்களை விட எஸ்.பி.பியின் குரலில் இருந்த 'காதல் ரோஜாவே' பாட்டுதான் மிகவும் பிடித்திருந்தது. ஒரு பாட்டிற்குள் இவ்வளவு காதல் பிரிவையும் தனிமையையும் சோகத்தையும் பிழிந்து ஊற்ற முடியுமா? என்று ஆச்சரியமாயிருந்தது. பிறகு நான் ரஹ்மானின் தீவிர விசிறியாகிவிட்டேன். ஒரிஜனல் கேசட்டுக்களில் கேட்கிற ஒலித்துல்லியமும் கேட்பனுபவமும் மோசமாக பிரதியெடுக்கப்பட்ட நகல்களில் இல்லாதிருப்பதை கவனித்தேன். எனவே ரஹ்மானின் திரைப்பாடல்கள் வெளியானவுடன் முதல் நாளே ஒரிஜினல் கேசட்டுக்களை வாங்குவது வழக்கமாயிற்று. பெரும்பாலான நேரங்களில் ரஹ்மான் என்னை ஏமாற்றவில்லை. தந்தையின் மூலமாக இசை என்பது ஊறிப்போயிருந்தாலும் அவர் இசையமைப்பாளாரான பிறகு இசைத்துறை சார்ந்த நவீன நுட்பங்களை திறமையாக பயன்படுத்திக் கொண்டதுதான் ரஹ்மானின் மிகப் பெரிய பலம் என்று கருதுகிறேன். எனவேதான் நாகார்ஜூனன் பற்றிய சினிமா பதிவில்
"உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?"
என்ற கேள்விக்கு
"ஏ.ஆர். ரகுமானின் வருகையைச் சொல்லாம். மேம்படுத்தப்பட்ட நுட்பங்களின் மூலம் பாடல்களின் கேட்பனுபவத்தை இன்னும் உன்னதமாக்கியது."
என்று கூறியிருந்தேன்.


()

ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக Best Sound Mixing-க்கான ஆஸ்கர் விருது பெற்ற ராசுல் பூக்குட்டியின் நேர்காணலை சில நாட்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் படித்த போது "ஒரு திரைப்படம் என்பது பல்வேறு நுட்பக் கலைஞர்களின் கூட்டால் உருவாக்கப்படுகிறது. ஆனால் திரைக்குப் பின்னால் உள்ள பல கலைஞர்களின் உழைப்பிற்கு வெளிச்சமும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை" என்று வருத்தப்பட்டார். "ஸ்லம்டாக் மில்லியனரை விட நான் அதிகம் உழைத்தது 'Gandhi My Father' திரைப்படத்திற்கு. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசவில்லை"

ஆக.. ரஹ்மான் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு நிகழாமல் போயிருப்பின் ராசுல் ஆஸ்கர் விருது பெற்றிருந்தால் கூட அது பரலவான கவனத்தைப் பெற்றிருக்காது என்றே தோன்றுகிறது.

()

ஏதோ ஆஸ்கர் விருதுதான் திரைப்பட அங்கீகாரத்திற்கான உச்சம் என்பதான மாயை பொதுவாக இருக்கிறது. உலகத்தின் பல்வேறு நாடுகளின் அமைப்புகள் பல்வேறு சர்வதேச விருதுகளை Cannes, BAFTA, FIAFF, Toronto .... என்று வழங்கிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் ரஹ்மான் பெற்ற golden globe award கூட அதிகளவில் பேசப்படவில்லை. அமீரின் 'பருத்தி வீரன்' Berlin award பெற்றதற்கு கூட இங்கே ஏதும் பெரிதான வரவேற்பில்லை.

என்றாலும் இந்தியத் திரைப்படைப்பாளிகள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணமிது. இந்தியர்களது நீண்ட நாள் கனவான ஆஸ்கரை தமது அசாத்திய திறமை காரணமாக பெற்றதன் மூலம் சர்வதேச விருதுகள் பெறுவதற்கான வாசலை அகலமாக திறந்து வைத்திருக்கிறார். ரஹ்மான். கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டு திரைப்படத் துறையின் மீது சற்றும் மரியாதையில்லாமல் வெறும் குப்பைத் திரைப்படங்களாக மாத்திரமே உருவாக்கும் நடிகர்களின் பின்னால் மாத்திரம் ரேஸ் குதிரைகளின் மீது பணம் கட்டும் ஆர்வத்துடன் தயாரிப்பாளர்கள் ஓடாமல் ஆர்வமுள்ள திறமையான இளைஞர்களை சுதந்திரமாக இயங்க அனுமதித்து சர்வதேச தரத்தில் திரைப்படங்களையும் தயாரிப்பதின் மூலம் இந்தியத் திரைப்படங்களின் மீதான சர்வதேச பார்வையாளர்களின் கவனத்தை அதிகளவில் பெறச் செய்ய முடியும்.

மதர் இந்தியா (1957), சலாம் பாம்பே (1988), லகான் (2001) ஆகிய இந்தியத் திரைப்படங்கள் மாத்திரமே இதுவரை ஆஸ்கர் விருதுகளின் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன. இதிலுள்ள அரசியல் களையப்பட்டு நிஜமாகவே தகுதி உள்ள திரைப்படங்கள் மாத்திரமே தேர்வு செய்யப்பட வேண்டும். ஆஸ்கருக்காக இந்தியா சார்பில் ஷங்கரின் 'ஜீன்ஸ்' தேர்வு செய்யப்பட்ட கொடுமையெல்லாம் நிகழ்ந்திருக்கிறது.

தமிழத் திரைப்படங்களைப் பொறுத்தவரை சர்வதேச தரத்தில் திரைப்படம் எடுக்கக்கூடியவர்களாக நான் கருதுவது (அவர்களின் வணிகத் திரைப்படங்களை தவிர்த்து) மகேந்திரன் மற்றும் பாலுமகேந்திரா ஆகியோர்களை மாத்திரமே. ஆனால் அவர்கள் ரிடையர் ஆகிற நிலையில் இருப்பதால் அமீரை அந்தப் பட்டியலில் சேர்க்கலாமா என்று யோசிக்கிறேன்.

suresh kannan

8 comments:

நட்புடன் ஜமால் said...

\\அமீரை அந்தப் பட்டியலில் சேர்க்கலாமா என்று யோசிக்கிறேன். \\

நல்லா யோசிங்க ...

manjoorraja said...

ரோஜா படம் கூட ஆஸ்கருக்கு போனது என்று நினைக்கிறேன்.


ரகுமானின் இசை வேறு பல படங்களில் இந்தப் படத்தைவிட மிகச் சிறப்பாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த வருடத்திற்காக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றப் படங்களின் இசையை விட இந்தப் படத்தின் இசை சிறந்ததாக இருந்ததாலேயே இந்த படத்திற்கு இசைக்கான விருது கிடைத்திருக்கிறது.

இந்தப் படம் ஆங்கிலேயர்களால் எடுக்கப்பட்ட படம் என்றாலும் இது ஒரு இந்திய படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சிறந்த இயக்குனர் விருது பெற்ற இயக்குனர் தனது உரையின் போது படத்தின் இறுதியில் வரும் நடன இயக்குனரை நினைவு படுத்தி பேசியது குறிப்பிடத்தக்க அம்சம்.

ரகுமான்

எல்லா புகழும் இறைவனுக்கே
என்று தமிழில் பேசி தமிழர்கள் அனைவரது மனதிலும் நீங்கா இடத்தைப்பெற்றுவிட்டார்.

வணங்காமுடி...! said...

\\அமீரை அந்தப் பட்டியலில் சேர்க்கலாமா என்று யோசிக்கிறேன். \\

நந்தலாலா வரட்டும். மிஷ்கினும் சேர்ந்து விடுவார் அந்தப் பட்டியலில். அமீர், இன்னும் நீங்கள் யோசிக்கும் நிலையில் இல்லை என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.

YouTube புண்ணியத்தில் ரஹ்மானுடைய உரையை உடனே பார்க்க முடிந்தது. இறுதியில், அவர் தமிழில் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று சொன்னதும், மளுக்கென்று என் கண்களில் கண்ணீர்.

A.R.R, you really deserved it. you will still go heights. Congrats....

ராஜ நடராஜன் said...

ரகுமான் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

butterfly Surya said...

தெளிவான அலசல்.

அமீரின் இன்னும் இரண்டு படங்கள் வரட்டும்.

சாக்கடை டூயட் பாடல்கள் இருக்கும் வரை தமிழ் சினிமா உருப்படாது.

மற்றும் ஒரு காதலன் said...

இது உண்மையாகவே ஒரு சந்தோஷ தருணம்.

Please visit my blog: http://valibarsangam.wordpress.com

Anonymous said...

Vairamuthu on Rahman

"As a lyricist, who has been associated with Rahman for the past two decades, I say that it is a prize for his sincerity, dedication towards work and simplicity," Vairamuthu said.

He also recalled a recent incident when he called up Rahman to congratulate him for his 'Golden Globe' win.

"I asked him what time I can come and greet him. He didn't say anything and kept the phone. In the next ten minutes he was at my home. That is Rahman," Vairamuthu said.

மண்குதிரை said...

இது வரவேற்கத்தக்கது

இந்த படத்திற்கு கொடுக்கவேண்டுதில்லை அதைவிடவும் சிறந்த பாடக்களை இசையமைத்துள்ளார் என்பதையெல்லாம் விட்டு விட்டு விருதுக் உண்டான அத்தனை தகுதிகளும் உள்ளவர் அவரை வாழ்த்துவேம்.

அமீர்கானின் லகான் எனக்கென்னவோ அவ்வளவு ஏற்புடையதாக தெரியவில்லை.

ஜீன்ஸ் போனதெல்லாம் கொடுமையிலும் கொடுமை. (காரணம் அப்போது ஆஸ்கார் தேர்வுக் குழுவில் அசோக் அமிர்தராஜ் இருந்தார்)

முந்தைய தலைமுறை இயக்குனர்களில், பாலு மகேந்திரா, மகேந்திரான் சரி...

கோமல் சுவமிநாதனின் தண்ணீர் தண்ணீர் எடுத்த வகையில் கே பி யைக்கூட பரீசீலனை செய்யலாம்.

இன்றைய இயக்குனார்களில்.........?????????????
முடிந்தால் வரிசை படுத்துங்கள்....