Sunday, December 01, 2013

வெள்ளை யானை - நூல் வெளியீட்டு விழா


ஜெயமோகனின் 'வெள்ளை யானை (வெள்ளையானை?) நூல் வெளியீட்டு விழா. அரங்கு நிறைந்த கூட்டம்.

நான் இன்னும் இந்த நாவலை வாசிக்கவில்லை என்பதே இந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள முக்கிய தகுதியுடன் கூடிய அடையாளம். ஏனெனனில் சமகால நூல்வெளியீட்டு விழாக்களில் முக்கிய பேச்சாளர்கள் 'நான் இன்னும் இந்த நூலை வாசிக்கவிலலை' என்றுதான்  வெட்கமேயின்றி தன் உரையைத் துவங்குவார்கள். அதை விடவும் முக்கியமான பணிகள் கொண்டவர் அவர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நூலுக்கு சிறிதும் தொடர்புமின்றி மைக்கை விட்டுத்தர மனமின்றி பின்னர் அந்த உரை சுயபிரதாபங்களுடன் நீளும். கூட்டத்தின் வாயிலிருந்து சிரிப்பைப் பிடுங்கும்  நோக்கத்துடன் அசட்டுத்தனமான நகைச்சுவைகளும் கைத்தட்டலை பெற்று விடும் நோக்கத்துடன் ஆவேசக் கூவல்களும்தான் பொதுவெளி மேடை உரையாடல்களின் அடையாளங்கள் என்றாகி நீண்ட வருடங்களாகி விட்டன.

மாறாக இந்த நூல் வெளியீட்டு விழா பெரும்பாலும் நூலுக்குத் தொடர்புடைய உரையுடனும் தன்மையுடனும் காணப்பட்டது ஆசுவாசமாக இருந்தது. 'அம்பேத்கர்' பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் பலத்த கைததட்டல்களும்,  இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் என்று முன்னுரையில் இடப்பட்டிருக்கும் பெயர் வரிசையை மாற்ற வேண்டும் என்கிற வேண்டுகோள் போன்றவையாக இந்தக் கூட்டத்தின் உரையாடல்களும் மனோநிலையும் தலித் ஆதரவுத்தன்மையுடன் அமைந்திருந்தது இயல்பான ஒன்று. ஏனெனில் 'வெள்ளை யானை' பிரதியின் மையம் அப்படியானது. 'இந்துவத்துவத்தின் குரல்' என்கிற அபத்தமான புரிதலுடன் அறியப்படும் ஜெயமோகன் எழுதிய இந்த சமீபத்திய  படைப்பை தலித் ஆதரவாளர்கள் நெருங்கி வரக்கூடிய, மனவெழுச்சியை ஏற்படுத்தக்கூடிய நுட்பமான வித்தியாசத்துடன் கூடிய தருணம்.

எழுத்தாளர் இமையம், அவர் ஏற்கெனவே எழுதிய 'தி இந்து'வில் வெளியான மதிப்புரையின் சுருக்கப்படாத வடிவத்தை வாசித்தார். பேராசிரியை சரஸ்வதி, ஒரு கல்வியாளருக்கேயுரிய கறாரான தன்மையுடனும் பாடப்புத்தகங்கள் ஏற்படுத்தும் வறட்சியான சலிப்புடனும் நூலைப் பற்றி குறிப்புகளுடன் பேசினார். 'பழைய வரலாற்றை பற்றி அறிந்தால்தான் புதிய வரலாற்றைப் படைக்க முடியும்' என்கிற அம்பேத்கரின் மேற்கோளுடன் பேசிய சட்டமன்ற உறுப்பினர் செ.கு.தமி்ழரசன், தலித் மக்களே தங்களின் வரலாற்று அறியாமையுடன் இருப்பது  குறித்த ஆதங்கத்தைப் பதிவு செய்தார். ஆதிநந்தன் லெமூரியர், வரலாற்றில் மறைக்கப்பட்ட, புதைக்கப்பட்ட இவ்வாறான பல வரலாற்று உண்மைகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தலித் எழுத்தாளர்களினால் எழுதப்பட்டால் அது சுயசார்புத்தன்மையுடன் எழுதப்பட்டது என பொதுவாக கருதப்படக்கூடிய அபாயம் இருப்பதால் பொதுவானவர்களும் ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றின ஆய்வு நூல்களை எழுத வேண்டும் என்கிற வேண்டுகோளை வைத்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தியல் பரப்பு மைய மாநிலச் செயலாளர், கெளதம சன்னா சென்னையின் வரலாற்றுப் பின்புலத்தோடு இந்த நூலை ஆய்வு நோக்கில் பல அரிய தகவல்களுடன் கூடிய ஒரு நீண்ட உரையை நிகழ்த்தினார். சென்னையைச் சேர்ந்தவனாக இருந்தாலும் 'லோன் ஸ்கொயர்' என்று அழைக்கப்படும் பகுதியின் பெயர்க்காரணம் உள்ளி்ட்ட பல புதிய தகவல்களை அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை இவரது உரை நிகழ்த்தியது. வெள்ளை யானையில் விவரிக்கப்படும் 1870-களில் நிகழ்ந்த ஐஸ்அவுஸ் போராட்டம், தமிழகத்தில் நிகழ்ந்த முதல் தலித் போராட்டம் என்று கருதப்பட்டாலும் 1777-ல் நிகழ்ந்த ஒரு கொலையைத் தொடர்ந்த நிகழ்வுகளே தலித்திய மக்களின் போராட்டத்தின் துவக்கம் என்பதும் இது குறித்த சில வரிகள் அயோத்திதாச பண்டிதரின் நூலில் காணப்படுகிறது என்பதும் கெளதன சன்னாவின் உரையிலியிருந்து அறிய முடிந்தது.

ஜெயமோகனின் ஏற்புரையின் மூலம் நம்முடைய வரலாற்றை ஆவணப்படுத்துதலில் எத்தனை அறியாமையுடனும் பின்தங்கியும் இருந்தி்ருக்கிறோம், இருக்கிறோம் என்கிற அதிர்ச்சிகரமான அவமானத்தை மீண்டும்  மீண்டும் அறிய முடிந்தது. கடந்த சமீபத்திய நூற்றாண்டுகளில் நிகழ்ந்த லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக மடிந்த இந்த மிகப் பெரிய  பஞ்சத்தைப் பற்றி, செயற்கையாக நிகழ்த்தப்பட்ட பஞ்சத்தின் மூலம் நிகழ்ந்த படுகொலைகளைப் பற்றி நம்மிடையே எவ்வித ஆவணமுமில்லை. நிழலாக சில தடயங்கள் மாத்திரமே. மாறாக மேறகத்திய உலகில் வரலாற்று ஆவணங்களை பதிவதிலும் பாதுகாப்பதிலும் எத்தனை கவனத்துடனும் அக்கறையுடனும் இருக்கிறார்கள் எ்னகிற நிதர்சனம் அவமானமானதொரு வடுவாக நம் முன் நிற்கிறது.

90-களிலேயே இதை எழுத திட்டமிட்டிருந்தாலும் இந்த நாவலை யாருடைய நோக்கில் எந்த மொழியில் எழுதுவது என்பது குறித்து இந்த நூலாசிரியருக்கு தயக்கமிருந்திருக்கிறது. ஏனெனில் சென்னையைப் பற்றியோ அப்போதைய பேசுமொழியைப் பற்றியோ அறிந்திருக்காத நிலையில் இத்தயக்கம். 'தென்தமிழ்நாட்டில் நிகழ்ந்த சம்பவமென்றால் தன்னம்பிக்கையுடன் எழுதி முடித்திருப்பேன்' என்கிறார். எனவேதான் மூன்றாவது முயற்சியில் இறுதி வடிவத்தை எட்டிய இந்த நாவலில் இந்தப் பிரதேசத்தைப் பற்றி அறிந்திராத எய்டனின் பார்வையில் இந்த நாவல் விரிகிறது. ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி என்கிற புதினம், சந்தனக்கடத்தல் வீரப்பனை தேடுகிற வேட்டையில் வனக்காவல் அதிகாரிகள், பழங்குடி மக்களை எப்படியெல்லாம் பலவகைகளில் துன்புறுத்தியிருக்கிறார்கள் என்பதை உணர்ச்சிகரமாக விவரித்துச் சென்றாலும் பாத்திரங்கள் உரையாடும் செயற்கைத்தனம் காரணமாகவே அதன் இலக்கிய மதிப்பை இழக்கிறது. தரவுகள் எளிதில் கிடைக்க்ககூடிய சமகாலத்திய பிரச்சினையைப் பற்றி உரையாடும் பிரதியே இத்தனை அலட்சியமாக உருவாக்கப்பட்டிருக்கும் சூழலில் ஒரு பிரதியின் நம்பகத்தன்மைக்காக ஜெயமோகன் முன்வைக்கும் உழைப்பு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

நாவலை விரைவில் வாசிக்க வேண்டும் என்கிற உந்துதலையும் அதற்கும் மேலாக முந்தைய வரலாற்று ஆய்வு நூல்களை (குறிப்பான சென்னையின்) வாசித்தறிய வேண்டும் என்கிற மிகப் பெரிய ஆர்வத்தையும்  இதுவரையிலான வாசிப்பின் போதாமையையும் இந்த நூல் வெளியீட்டு விழா ஏற்படுத்தியிருக்கிறது.

3 comments:

ஷாஜஹான் said...

முந்தாநாள்தான் வெட்டுப்புலி என்ற நாவலைப் படித்து முடித்தேன். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளின் வரலாறோடு இழைந்த நாவல். பதிவு எழுத விருப்பம். நேரமிருக்குமா தெரியவில்லை.

Unknown said...

niyaamaana santhekam....

Anonymous said...

வெள்ளை யானை ஜெயமோகனின் படைப்புகளில் தலைசிறந்ததாக உலக இலக்கியமாகக் கூடிய வாய்ப்புள்ள படைப்பு.மனிதநேயத்தின் குரல் என்பதைக்காட்டிலும் சிறப்பாக கூறவேண்டுமானால் உண்மையான ஆன்மாவின் குரல் என்று கூறக் கூடிய உன்னதமான உண்மையின் யதார்த்த உணர்வுகளைக் கொண்ட அற்புதமான படைப்பு.