Friday, December 20, 2013

தீபாவளி திரைப்படங்கள் - தொலைந்து போன குதூகலம்ஒரு திரைப்படம் குறித்த நினைவுகள் பார்வையாளர்களுக்குள் தங்குவது பிரத்யேகமாக அத்திரைப்படம் குறித்து மாத்திரமல்ல. மாறாக அத்திரைப்படத்தைக் காண்பதற்கு முன்னும் பின்னும் நி்கழ்ந்த சம்பவங்கள் தொடர்பான மனப்பதிவுகளையும் இணைத்துத்தான். கடந்த காலங்களில் திரைப்படம் குறித்த அனுபவங்கள் இவ்வாறாகவே நமக்கு இருந்தன.  கற்பிதங்களாக இருந்தாலும் இயந்திர வாழ்வின் சலிப்பிலிருந்து நம்மை மீட்டெடுத்துக் கொள்ள உதவுபவைகளாக திருவிழாக்கள், பண்டிகைகள் போன்றவைகள் விளங்குவது போலவே இந்த குதூகலகங்களின் ஒரு பகுதியாக திரைப்படங்கள் இருந்தன. ஒரு திரைப்படத்தைக் காணப்போகிறோம் என்கிற நினைவே இன்பமானதாகவும் அதற்கான ஏற்பாடுகள் பரவசமும் பதட்டமும் தருபவையாகயும் இருந்தன. இடைவேளையில் சாப்பிடப்போகும் கோன் ஐஸின், கைமுறுக்கின் மணம் ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்தே நினைவில் ஊசலாடத் துவங்கி விடும். ஒரு திரைப்படத்தைப் பாாத்து வந்ததிற்கு பின்னர் ஒரு வாரத்திற்குக் கூட அதைப் பற்றிய உரையாடல்கள் நீளும். நாயகன் ஸ்டைலாக துப்பாக்கியை உயர்த்தும் காட்சி, மறந்து போகவே விரும்பாத நாயகியின் ஒரு கண்சிமிட்டல், இன்றைக்கு நினைத்தாலும் சிரி்ப்பை வரவழைக்கும் நகைச்சுவையாளனின் உடலசைவு, இருக்கையின் அசெளகரியமான கைப்பிடி, அனுமதிச் சீட்டுக்காக வரிசையில் முண்டியத்த வியர்வையின் மணம் என்று கலவையான பல நினைவுகள் அத்திரைப்படங்களோடு நீக்கமற உறைந்திருக்கும். சிறுவனொருவன் வெல்லக்கட்டியை ஒவ்வொரு பக்கமாக நிதானமாக ருசித்து சாப்பிடுவது போன்ற உன்னதமான அற்புதத்தை அக்காலததிய தமிழ்திரை காண்பனுபவங்கள் ஏற்படுத்தின.

ஆனால் இன்று, இருபத்திநான்கு மணிநேரமும் திரைப்படங்களை உமிழும் தொலைக்காட்சிகளும் ஒரே மாதிரியான வார்ப்பில் உருவாகும் மசாலா திரைப்படங்களும் மேற்கூறிய குதூகலங்களை தொலைந்து போக வைத்து விட்டன. நூற்றுக்கணக்கான நாட்களுக்கும் மேல் திரையரங்கில் ஓடிய திரைப்படச் சாதனைகள் எல்லாம் ஒரு வரலாற்றுக் கனவாகவே கடந்த காலத்தில் உறைந்து விட்டது. இன்றைய ஃபாஸ்ட்புட் கலாசாரத்திற்கு ஏற்ப இரண்டு மூன்று நாட்களிலேயே அவை நம்மை விட்டு விடைபெற்று விடுகின்றன. அவற்றைப் பற்றிய நினைவுகளும் அவ்வாறே திரையரங்கின் வாசலிலேயே கழன்று விழுகின்றன. இத்தகைய குறுகிய ஆயுளைக் கொண்டிருப்பதனாலேயே படத்தைப் பற்றிய பார்வையாளர்களின் வாய்மொழி பரவுவதற்குள் கவர்ச்சிகரமாக சந்தைப்படுத்தி அதிகமான எண்ணிக்கையில் திரையரங்குகளில் ஒளிபரப்பி, பார்வையாளன் விழித்துக் கொள்வதற்குள் முதல் இரண்டு நாட்களிலேயே அவனிடமிருந்து காசைப் பறித்துக் கொள்ளும் தந்திரத்தை திரை வணிகர்கள் தற்போது செய்து வருகிறார்கள். 'இப்ப வர்ற படங்கல்லாம் அத்தனை ஒண்ணும் நல்லாலீங்க" என்று முணுமுணுத்தாலும் ஒவ்வொரு முறையும் முதல் நாளிலேயே ஏமாறத் தயாராக இருக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மாறுவதில்லை என்பதுதான் இதிலுள்ள அபத்தமான சோகம்.

இந்தச் சூழலில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்த மூன்று தமிழ் சினிமாக்களைப் பற்றி பார்ப்போம்.

***

அஜித் நடித்து வெளிவந்த திரைப்படம் - ஆரம்பம். ஹாலிவுட்டில் 'தேறாது' என்று குப்பையில் 1980-ல் தூக்கிப் போட்ட ஜேம்ஸ்பாண்ட் பட ஸ்கிரிப்ட்டை எடுத்து வந்து பிறகு காட்சிக் கோர்வைகளின் வரிசை தவறுதலாக அடுக்கப்பட்டு விட்ட பாணியில் உருவாகியிருக்கிறது ஆரம்பம். சலித்துப் போன ஹீரோயிஸம். செயற்கையான தேசப்பற்று வசனங்கள். விஜயகாந்த்தும் அர்ஜுனும் சலித்துப் போய்  கீழே போட்டு விட்ட யூனிபார்மை அணிந்து கொண்டிருக்கிறார் அஜித். ஊழலின் ஊற்றுக்கண் எதுவென்கிற தெளிவில்லாமல், அவதாரங்கள் அரக்கர்களைக் கொன்றவுடன் மக்களுக்கு சுபிட்சம் ஏற்பட்டு விடுவதான புராண கதையாடல் மாயையைப் போன்று ஊழல் செய்யும் அரசியல்வாதியை நாயகன் உரத்த குரலில் பஞ்ச் டயலாக் பேசி முடித்து கொன்று நீதி நிலைநாட்டப்பட்டவுடன் படம் நிறைகிறது. இதன் மூலம் பார்வையாளன் ஆசுவாசமடைந்து சமகால அரசியல் குறித்தும் அரசியல்வாதிகள் குறித்தும் அவனுக்குள்ள கோபத்தின் ஆழ்மன அழுத்தத்தை தணிக்கும் அதே தந்திரத்தையே 'ஆரம்பமும்' செய்கிறது. ரிடயர்ட் ஆகும்

வயதாகியிருந்தாலும் விநோதமான செயற்கையான சிகையலங்காரங்களை கைவிடாமல் பேத்தி வயதான நடிகைகளோடு ரொமான்ஸ் செய்து கொடுமைப்படுத்தும் நாயகர்களுக்கு மத்தியில் தன்னுடைய தோற்றம் குறித்த கவலை ஏதுமில்லாமல் இயல்பான தோற்றத்தில் அஜித் நடித்திருப்பது இதிலுள்ள ஒரே ஆறுதலான விஷயம். மற்றபடி இத்திரைப்படம் குறித்துக் கூற மேலும் எதுவுமேயில்லை என்பதுதான் இதன் சிறப்பம்சம்.

***

இயக்குநர் ராஜேஷ் சராசரியான அல்லது அதற்கும் கீழான தரமற்ற நகைச்சுவைப் படங்களை உருவாக்குபவர் என்கிற கருத்தொன்று உண்டு. ஆனால் அவர் அதுவரை இயக்கிய முதல் மூன்று திரைப்படங்களையும் (சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி) ஆகியவைகளை தொலைக்காட்சி சானல்களின் புண்ணியத்தில் மீண்டும் மீண்டும் பார்க்கும் போது வணிகப் படங்களின் சாத்தியத்திற்குள், அவர் காட்சிக்கோர்வைகளை அடுக்குகிற விதத்தில் ஒரு சுவாரசியத்தையும் புத்திசாலித்தனத்தையும் பார்க்க முடிகிறது. குறிப்பாக கீழ்நடுத்தர வர்க்க இளைஞனின் இருப்பியல் மனோபாவத்தை, விழுமியங்கள் குறித்த சமகால தலைமுறையினரின் அலட்சியத்தை, அடித்தட்டு மக்களின் நகைச்சுவையை நுட்பமான கலவையுடன் தமிழ்த்திரையில் பதிவு செய்தவர் என்று ராஜேஷை சொல்லலாம். இத்தனைக்கும் அவர் உருவாக்கிய மூன்று படங்களின் திரைக்கதையும்  ஏறக்குறைய ஒரே வார்ப்புதான். பொறுப்பற்ற இளைஞன் ஒரு பெண்ணைக் காதலிக்க முயல்வதும் அதில் ஏற்படும் சிக்கல்களும் தன்னுடைய நண்பனை கவிழ்த்து கலாய்ப்பதும் என்கிற ஒரே மாதிரியான உருவாக்கம். மூன்று திரைப்படங்களிலும் நாயகனின் நண்பனாக சந்தானம் நடித்திருந்தார். என்றாலும் மூன்று திரைப்படங்களையும் பெரிய புகார்கள் ஏதுமின்றி நம்மால் சகித்துக் கொள்ள முடிந்தது என்பதே ராஜேஷின் வெற்றி. அவர் பிரத்யேகமாக உருவாக்கும் திரைக்கதையின் பாணியே இதற்கு காரணம் என்பதை மறுக்க முடியாது.

இதனாலேயே அவரின் நான்காவது திரைப்படமான 'ஆல் இன் ஆல் அழகுராஜாவிற்கு' அவரது படங்களின் ரசிகர்களுக்கிடையே பெரிய எதிர்பார்ப்பிருந்தது. கதை என்கிற வஸ்துவிற்காக பெரிதும் மெனக்கிட வேண்டாம், சுவாரசியமான திரைக்கதையின் மூலமே வெற்றி பெற்று விட முடியும் என்கிற அதீதமான தன்னம்பிக்கையினாலோ என்னவோ இத்திரைப்படம் மிகுந்த அலட்சியத்துடனும் அசுவாரசியமான திரைக்கதையுடனும் உருவாக்கப்பட்டு பார்வையாளர்களால் ரசிக்கப்படாமல் தோல்வியடைந்து ராஜேஷின் தன்னம்பிக்கையைச் சேதப்படுத்தியிருக்கிறது. இத்தனைக்கும் முந்தைய படங்களை விட காட்சிகளின் பின்னணிகளுக்கும் திரைக்கதைக்கும் இதில் அவர் மெனக்கெட்டிருக்கிறார்  என்பதை உணர முடிகிறது. ஆனால் அவரின் பிரத்யேக கலவையில் எங்கோ தவறு நிகழ்ந்ததால் முழுத்திரைப்படமும் சலிப்பான, எரிச்சலான அனுபவத்தையே தருகிறது.

குறுகிய காலத்திலேயே நகைச்சுவை நடிகராக அசுர வளர்ச்சியைப் பெற்றிருக்கும் சந்தானம் அதே வேகத்திலேயே பார்வையாளர்களிடம் சலிப்பைப் பெற்றிருக்கிறார் என்றாலும் நகைச்சுவை நடிப்புதானே என்கிற அலட்சியம் இல்லாமல் சில குறிப்பிட்ட படங்களில் தன்னுடைய பாத்திரங்களின் வடிவமைப்பிற்காக சிறிதாவது உழைக்கிறார் என்பது ஆறுதலளிக்கிறது. 'ஒரு கல் ஒரு கண்ணாடியில்' அவருடைய பாத்திரத்தின் பின்னணி பிராமண இளைஞன் என்பதால் அதற்கான உச்சரிப்பையும் உடல்மொழியையும் படம் நெடுகிலும் எங்கேயும் தவற விடாமல் பின்பற்றியிருந்தார். அதே போன்று 'ஆல்இன்அழகுராஜாவிலும்'  பழைய திரைப்பட நடிகர்கள் எம்.ஆர்.ராதாவையும் சுருளிராஜனையும் இணைக்கின்ற ஒரு விநோதமான கலவையில் நடிப்பதற்காக மெனக்கெட்டிற்கும் சந்தானத்தின் நடிப்பு, படத்தின் சுவாரசியமற்ற தன்மையால் வீணாகியிருக்கிறது. இதனாலேயே பழைய தமிழ் திரைப்படங்களை நையாண்டி செய்ய முயன்றிருக்கும் இயக்குநரின் நோக்கமும் எடுபடாமல் போயிருக்கிறது.

***

பாண்டிய நாடு - சுசீந்திரனின் ஐந்தாவது திரைப்படம்.

கே.எஸ்.ரவிகுமார், பேரரசு போன்று அப்பட்டமான வணிகநோக்குத் திரைப்படங்களை உருவாக்குபவர்கள் ஒருவகை. இவர்கள் சினிமா எனும் கலையை வணிகத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது வெளிப்படை. சுசீந்திரன் போன்றவர்களை அப்பட்டமான வணிகநோக்கு திரைப்பட இயக்குநர்கள் பட்டியலிலும் சேர்க்க முடியாது. பாார்வையாளர்களுக்காக சமரசப்படுத்திக் கொள்ளாத சிறந்த இயக்குநர்கள் பட்டியலிலும் இணைக்க முடியாது. ஆனால் நல்ல சினிமாவைத் தந்து விட வேண்டும் என்கிற ஆதார உந்துதலைக் கொண்டவர்களாகச் சொல்லலாம். சுசீந்திரன் மாத்திரமல்ல, சமகாலத்து இயக்குநர்கள் பெரும்பாலோருக்கு இந்த உந்துதல் இருப்பது பாராட்டுக்குரியது.

உலக சினிமாக்களின் அறிமுகமும் அதைப் பற்றிய உரையாடல்களும் பெருகி வரும் சூழலில் பார்வையாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் கூட ரசனையும் நுகர்வுத் தேடலி்ன் முதிர்ச்சியும் கூடியிருக்கிறது. பார்வையாளர்களின் ரசனை மாற்றம் காரணமாக தேய்வழக்குத் திரைப்படங்களையும் காட்சிகளையும் இனியும் உருவாக்கி தங்களின் இருப்பை நீட்டித்துக் கொள்ள முடியாது.  இந்தச் சூழல் தரும் நெருக்கடி காரணமாகவும் அப்பட்டமான வணிக மசாலாவை தர விரும்பாத மனச்சாட்சியின் காரணமாகவும் பெரும்பாலான வணிக அம்சங்களைத் தவிர்த்து விட்டு நல்ல சினிமாவைத் தரவேண்டும் என்கிற மெனக்கெடலும் விருப்பமும் இந்த இயக்குநர்களிடம் இருப்பதை உணர முடிகிறது. ஆனால் இம்மாதிரியான முயற்சிகள், நல்ல சினிமாக்களாக இ்ல்லாமலும் மசாலாக்களாக அல்லாமலும் இரண்டுங்கெட்டான் தன்மையுடன் இருப்பதுதான் துரதிர்ஷ்டம். எனவே குறைந்த சமரசங்களுக்காக இவற்றைப் பாராட்டுவதா அல்லது தன்னி்ச்சையாக தேய்வழக்குகளில் பயணம் செய்வதற்காக புறக்கணிப்பதா என்கிற குழப்பம் நிலவுகிறது. சுசீந்திரனின் பாண்டியநாடும் இப்படியொரு வகைமையில் சிக்கித் தவிக்கும் திரைப்படமே.

சுசீந்திரனின் முதல் திரைப்படம், 'வெண்ணிலா கபடிக்குழு'.  தமிழகத்தின் கிராமங்களில் இன்னமும் ஜீவித்திருக்கும் பாரம்பரிய விளையாட்டான கபடியையும் தமிழ் சினிமாவின் இன்றியமையாத கச்சாப்பொருளான காதலையும் இணைக்கோடாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நல்ல முயற்சி. படம் முழுவதும் இயங்கும் மெலிதான நகைச்சுவையும், நெருக்கமான நண்பர்களாகவே இருந்தாலும் சாதி குறித்த மனோபாவம் அவர்களின் ஆழ்மனதில் தன்னிச்சையாக இயங்கும் முரணையும் அதன் விளைவுகளையும் உறுத்தாத தொனியில் சொல்லிச் சென்றது அத்திரைப்படம்.  அடுத்த திரைப்படமான 'நான் மகான் அல்ல, நடுத்தரவர்க்க பின்புலத்தில் உருவாகிவரும் ஒரு சாதாரண இளைஞன், அசாதாரண சந்தர்ப்பங்களின் விளைவாக அதற்கு எதிர்திசையில் இயங்கும் மாஃபியா உலகை, ரவுடிகளின் வன்முறையை எதிர்கொள்ள வேண்டி வரும் முரணியக்கத்தில் நிகழும் சம்பவங்களால் உருவானது. இந்த வகைமையில் உருவாகும் திரைப்படங்களின் துவக்கப்புள்ளியாக ராம்கோபால் வர்மாவின் 'உதயம்' திரைப்படத்தை (தெலுங்கில் ஷிவா) சொல்லலாம். கல்லூரி மாணவனாக இருக்கும் நாயகன், ரவுடிகளின் தொந்தரவுகளை ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவனாக பொறுத்துக் கொண்டே செல்வான். கொதிநிலையின் அழுத்தம் கூடுகிற ஓர் எதிர்பாராத கணத்தில்தான் திருப்பித் தாக்கத் துவங்குவான். (நாகார்ஜூனா சைக்கிள் செயினை உருவியெடுக்கும் அந்தக் காட்சியின் பரவசத்தை பல ரசிகர்கள் இன்னமும் நினைவில் வைத்திருக்கிறார்கள்). இது வழக்கமான கதாநாயகத்தன்மைக்கு சற்று முரணானது.

ஏனெனில் முன்பெல்லாம் கதாநாயகன் என்றால் அவன இயற்கையிலேயே நிச்சயிக்கப்பட்ட நாயகத்தன்மையோடும் அனைத்திலும் பாண்டித்தியம் உள்ளவனாக, சகலகலா வல்லவனாக இருப்பான். அவனுக்கு சண்டையிடத் தெரியும், எப்பேர்ப்பட்ட எதிரியையும் சாதுர்யமாக வீழ்த்த தெரியும் என்பதையெல்லாம் பின்புலத்தோடு  நிறுவத்தேவையேயில்லை. அநீதிகளை சகித்துக் கொண்டு போகவேண்டிய பொறுமையெல்லாம் அவனுக்குத் தேவையேயில்லை. எம்.ஜி.ஆர் என்கிற பிம்பம் இதற்கு சரியான உதாரணம். கூடுவாஞ்சேரியிலுள்ள பூங்காவில் தனிமையில் அமர்ந்திருக்கும் நாயகியை தீய எண்ணத்தோடு நாலைந்து முரட்டுப் பேர்வழிகள் அணுகினால் அது இந்தோனேஷியாவிலுள்ள நாயகனுக்கு எப்படியோ தெரிந்து விடும் அல்லது நாயகன் அதற்காகவே காத்திருப்பார் என்று கூட சொல்லலாம். மேலும் நாயகியும் 'வீல்' என்று அதிக டெசிபலில் கத்துவதின் எதிர்வினையாக கூட இருக்கலாம். மரத்தைப் பிடித்துத் தொங்கியோ அல்லது விமானத்தில் புட்போர்டிலோ எப்படியோ விபரீதம் நிகழ்வதற்குள் அங்கு வந்து முரட்டுப் பேர்வழிகளை துவைத்தெடுத்து துரத்தி விடுவார். சம்பிரதாயத்திற்கு வேண்டுமானால் ஆரம்பக்கணத்தில் ஒன்றிரண்டு அடிகளை வாங்கிக் கொள்வார். இந்தப் படததில் சித்தரிக்கப்படும் பாத்திரத்தின்படி இவர் அலுவலக குமாஸ்தாவாயிற்றே,  இவர் சண்டை பயில்வது போல் கூட ஒரு காட்சி கூட முன்னர் இல்லையே...இவர் எப்படி இத்தனை ரவுடிகளுடன் சண்டையிட முடியும் என்றெல்லாம் பார்வையாளர்கள் யோசிக்க மாட்டார்கள். அப்படி அவர் சண்டையிடாமல் போனால்தான் பார்வையாளர்களுக்கு கோபமும் எரிச்சலும் வரும்.

ஆனால் இப்போதைய பெரும்பாலான பார்வையாளர்கள் இதையெல்லாம் தர்க்கத்தன்மையோடு சிந்திக்கவும் எதிர்கேள்வி கேட்கவும் ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இத்தகைய கேள்விகளை அப்பட்டமான வணிகநோக்கு இயக்குநர்கள் பொருட்படுத்துவதி்ல்லை. தொழில்நுட்பத்தைக் கொண்டு பிரமாண்ட காட்சிகளை அமைத்து பார்வையாளர்களை அப்போதைக்கு வாயடைக்கச் செய்து விடுகிறார்கள். ஆனால் நல்ல சினிமாவை உருவாக்கும் உந்துதல் கொண்ட இயக்குநர்களுக்கு  இவை ஒரு நெருக்கடியைத் தருகின்றன. பார்வையாளர்கள் யதார்த்தத்திற்கு முரணான, தேய்வழக்கு காட்சிகளைக் கண்டு சிரிக்கிறார்கள், புறக்கணிக்கிறார்கள் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். எனவே அந்தரத்திலேயே பறந்து கொண்டிருக்கும் நாயகனை அவனது அசாதாரணத் தன்மையிலிருந்து கீழே இறக்கி யதார்த்தத்திற்கு அருகிலாவது உலவ வைக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுகிறது.

சுசீந்தரனின் ' பாண்டிய நாடு' நாயகனும் அப்படித்தான் நமக்கு அறிமுகமாகிறான். நடுத்தரவர்கக பின்னணியோடு, உணர்ச்சிவயப்பட்டால் வாய் திக்குகிற குறைபாட்டோடு, 'நாற்பது பேரோடு நம்மால சண்டை போட முடியுமா?' என்கிற சாதாரண மனிதனாக, ரவுடிகளைக் கண்டு பயப்படுகிறவனாகத்தான் அறிமுகமாகிறான். ஆனால் இறுதிக் காட்சியில் நாற்பது பேரோடுதான் சண்டையிடுகிறான். யதார்த்ததிற்கு அருகில் தங்கள் நாயகர்களை கொண்டு செல்ல விரும்பும் படைப்பாளிகள், வணிகம் சார்ந்த தங்களின் சமரசங்களை எளிதில் கைவிடுவதாயில்லை. அதாவது தமிழ் சினிமாவின் தேய்வழக்கு கதாநாயகன் முழுவதுமாக இறக்கவில்லை. 'பைட் சீன் வைக்கலைன்னா, யாருங்க பார்ப்பாங்க?' என்று அவர்களாகவே முடிவு செய்து கொள்கிறார்கள். 'நான் மகான் அல்ல' திரைக்கதையை அப்படியே வேறு சட்டியில் கொதிக்க வைத்து தந்திருக்கிறார் இயக்குநர்.

பாண்டிய நாடு' வித்தியாசமான உள்ளடக்கத்தில் உருவானதான உரையாடலைக கொண்டிருந்தாலும் அதே வணிக மசாலா தான். (தமிழ் சினிமா அகராதியில் 'வித்தியாசம்' என்பதற்கான அர்த்தம் என்னவென்று பல வருடங்களாகவே புரிவதில்லை). ஆனால் இதன் திரைக்கதையில் சுவாரசியமானதொரு கோணம் இருந்தது.

நியாயமான அரசு அதிகாரியாக இருந்த தன்னுடைய சகோதரனைக் கொன்று குடும்பத்தை அமைதியையும் ஒழித்த ரவுடிக்கும்பல் தலைவனை, அந்த அநீதியை சகிக்க முடியாமல் கொல்லத் திட்டமிடுகிறான் நாயகன். அதே சமயம் அவனுடைய தந்தையும் ரவுடியைக் கொல்ல பணம் தந்து கூலிப்படையை அமர்த்துவது பற்றி இவன் அறிவதில்லை. இருவரும் இருமுனைகளில் தனித்தனியாக ரவுடியை சாகடிக்க முயல்கிறார்கள். இதில் தந்தையின் தரப்பு தோற்றுப் போக வழக்கம் போல் நாயகனே ரவுடியை உக்கிரமாக சண்டையிட்டுக் கொல்கிறான். சில துளிகளில் விலக முயன்றாலும் பெரும்பாலான தமிழ் சினிமர்ககள் தங்களின் பாரம்பரிய வார்ப்பிலிருந்து விலக விருப்பமில்லாமல் அதிலேயே சரணடைவது சலிப்பை ஏற்படுத்துகிறது.

இ்ந்த திரைக்கதையை இன்னொரு மாதிரியாக யோசித்துப் பார்க்கலாம். நாயகனின் தந்தையின் பாத்திரத்தை பிரதானப்படுத்தி நடுத்தர வர்க்க வயதான மனிதனொருவன் சூழ்நிலை காரணமாக குற்றவுலகோடு தொடர்பு கொள்ள முயல்வதையும் அந்த உலகின் வன்முறைகளை யதார்த்தத்தில் கண்டு அதிர்வதையும் அதிகாரமும் சட்டமும் அந்த எளிய மனிதனை அலைக்கழிப்பதையும் புறக்கணிப்பதையும், ஓர் உயிரைக் கொல்வது குறித்து அந்த வயதான மனிதர் கொள்கிற மனஉளைச்சலையும் பண்பாட்டு மற்றும் உளவியில் ரீதியான பிரச்சினைகளையும்  குறித்தான காட்சிகளால் இந்தப் படத்தை உருவாக்கியிருந்தால் எப்படியிருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. எனில் அதில் டூயட் இருக்காது, அதிரடி சண்டைக்காட்சிகள் இருக்காது, அது தமிழ் சினிமாவாக இல்லாமிருப்பதால் வசூலும் இருக்காது. தமிழ் இயக்குநர்களின் இருப்பியல் ரீதியான அச்சத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

இதில் நாயகனின் தந்தையாக நடித்திருப்பவர் இயக்குநர் பாரதிராஜா. முன்பு ஒரு முறை கமல்ஹாசன், இயக்குநர் பாலச்சந்தரை பற்றிக் கூறும் போது 'அவர் நடித்துக் காண்பதில் சில குறிப்பிட்ட சதவீதத்தைக் கூட நடிகர்களாகிய நாங்கள் திரையில் நிகழ்த்தி விட்டால் அதுவே சிறப்பானதாக இருக்கும். அவரெல்லாம் நடிக்க வந்து விட்டால் நாங்கள் வீட்டிற்கு போய் விட வேண்டியதுதான்' என்றார்.  கமல்ஹாசன் குருபக்தியினால் மிகையாக புகழ்ந்தார் என்று எடுத்துக் கொண்டால் கூட கூட்டிக் கழித்து பார்த்தால் கூட பாலச்சந்தரால் சுமாராகவாவது நடிக்க வரும் என்று எதிர்பார்த்திருந்தோம். அவர் நடித்த சில தொலைக்காட்சி தொடர்களையும் திரைப்படக் காட்சிகளையும் பிற்பாடு பார்க்க நேர்ந்த போது ராமராஜனையே சிறந்த நடிகராக ஒப்புக் கொள்ளலாம் போலிருந்தது. அவ்வாறே பாரதிராஜாவும். 'ஆய்த எழுத்தில்' இவரை மணிரத்னத்தினால் ஒரளவிற்கு கட்டுப்படுத்த முடிந்ததென்றாலும் 'ரெட்டச்சுழி' என்கிற திரைப்படத்தில் பாலச்சந்தருடன் இவர் இணைந்து ரிடையர்ட் ஆன பாடகர்கள் தங்களின் பழைய நினைவில் உச்சஸ்தாயியில் பாடுவதைப் போல நடித்து கொடுமைப்படுத்தினார்கள். பாரதிராஜாவின் நடிப்பு  'பாண்டிய நாட்டில்' இன்னமும் மோசம். இம்மாதிரியான மிகை நடிப்பெல்லாம் 80-களிலேயே வழக்கொழிந்து விட்டது என்பதை இயக்குநர் சசீந்திரனால் அவரிடம் சொல்ல முடியவில்லை போலிருக்கிறது. சீனியர் இயக்குநர் என்பதால் படப்பிடிப்புகளில் தனக்கு வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு  'ஷாட் ஓகே' என்றிருப்பார் போல.

***

இந்த வருட தீபாவளிக்கு வந்திருக்கும் இந்த மூன்று திரைப்படங்களில் 'பாண்டிய நாடு' சிறப்பானது என்கிற பொதுவான கருத்தொன்று இருக்கிறது. இருகோட்டு தத்துவத்தின் படி ஒரு கோட்டை பெரிதாகக் காட்டுவதற்கு  பக்கத்தில் வரையப்படும் சிறிய கோடு உதவுவது போல சாதாரண படமான 'பாண்டிய நாட்டை' சிறப்பானது என்று கருதக்கூடிய மாயையை மிகச் சாதாரணமான மற்ற இரு திரைப்படங்கள் ஏற்படுத்தியிருக்கின்றன என்பதுதான் உண்மை. 

- உயிர்மை - டிசம்பர் 2013-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)     

suresh kannan

1 comment:

கேரளாக்காரன் said...

// பாரதிராஜாவின் நடிப்பு 'பாண்டிய நாட்டில்' இன்னமும் மோசம்//

?????????????????????????