Wednesday, December 11, 2013

காட்சிப் பிழை கருத்தரங்கம் - தமிழ் சினிமா 100
தமிழின் முதல் மெளன சினிமாவான கீசகவதம் 1916-ல் நடராஜ முதலியாரால் உருவாக்கப்பட்டது. முதல் பேசும் படமான காளிதாஸ் 1931-ல் வெளியானது. எனில் எப்படி இந்தக் கருத்தரங்கிற்கு தமிழ் சினிமா 100 என தலைப்பிட முடியும் என்று என்னுள் எழுந்த அதே கேள்வியையே யுடிவி தனஞ்செயன் மேடையில் எதிரொலித்தார். 'இந்த விஷயம் அத்தனை முக்கியமல்ல, இந்திய சினிமா 100 என்று சமீபத்தில் கொண்டாடப்பட்டதற்கு எதிர் கருத்தாக்கமாக இதைக் கொள்ளலாம்' என்கிறார் MSS  பாண்டியன். ஜவஹர்லால் பல்கலைக்கழகம், புதுடெல்லியில் தற்கால வரலாற்றுத் துறையில், துறைத் தலைவராக இருக்கும் இவர் முக்கியமான திரைப்பட ஆய்வாளர்களுள் ஒருவர். 'இந்திய சினிமா என்ற ஒன்று இருக்கிறதா?' என்று இவர் எழுப்பிய அடிப்படையான கேள்வி அன்றைய தினத்தை எனக்கு முக்கியமாக்கியது.

()


காட்சிப் பிழை இதழும் லயோலா கல்லூரியின் காட்சித் தகவலியல் துறையும் இணைந்து நிகழ்த்தும் இந்தக் கருத்தரங்கம் 11.12.2013 மற்றும் 12.12.2013 ஆகிய இரண்டு நாட்களில் நிகழ்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதன் முதலில் இந்தக் கல்லூரியின் மிகப் பெரிய வளாகத்திற்குள் நுழைகிறேன். கல்வியலும் ஒழுக்கத்திலும் சிறந்த கல்விநிலையம் என்று நான் கல்வி கற்ற காலங்களில் அறியப்பட்ட கல்லூரி. உற்சாகமான நவீன இளம் முகங்கள். தொலைதூர கல்வித்திட்டத்தில் என் பட்டப்படிப்பை முடித்ததினால் கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்க இயன்றியராத ஏக்கம் இந்த வளாகத்தையும் மாணவர்களையும் பார்க்கும் போது என்னுள் எழுகிறது.

விஸகாம் சார்ந்த கல்லூரியின் துறைத்தலைவர்கள், கல்வியாளர்களுக்கேயுரிய ஒழுங்குணர்ச்சியின் எல்லைக்குள் ' சினிமா என்பது சமூகத்தில் நல்ல, ஆரோக்கியமான சிந்தனைகளைப் பரப்புவதாக அமைய வேண்டும்' சமூகத்தில் நிகழும் குற்றங்களுக்கு காரணிகளாக அமையக்கூடாது' என்கிற உபதேசங்களை வரவேற்புரை மற்றும் வாழ்த்துரையில் தெரிவித்து விட்டு அமர்கிறார்கள். வெகுஜன சினிமா, யதார்த்த சினிமா, அழகியல் சினிமா, புதியதலைமுறை சினிமா என்று தமிழ் சினிமாவை நான்கு வகைமைகளாக காண்கிறார் தனஞ்செயன் (யுடிவி). மாணவர்களிடம் நேரடியாக கேள்வி கேட்டு உரையாடும் இவரின் பாணி அவர்களை உற்சாகமாக்குகிறது. 'காட்சிப்பிழை' இதழை எத்தனை பேர் வாசிக்கிறீர்கள் என்கிற அவரின் கேள்விக்கு சில கைகளே உயர்கின்றன. 'சமூகத்தின் நிகழும் குற்றங்களுக்கு சினிமாவை பொறுப்பாக்க முடியாது, சமூக வலைத்தளங்களின் பங்கையும் கவனிக்க வேண்டும்' என்கிறார், சினிமாத்துறையை சார்ந்தவர் என்பதால்.

()

எம்.எஸ்.எஸ் பாண்டியனின் சிறப்புரை. சில தவிர்க்க முடியாத காரணங்களால் நேரமின்மை காரணமாக சுருக்கமாக தயாரித்து வந்திருந்த உரையும் அவர் வெளியிட்ட கருத்துக்களும் அபாரமாக இருந்தன. முன்பே குறிப்பிட்டபடி 'இந்திய சினிமா என்கிற ஒன்று இருக்கிறதா?' என்பதே அவர் உரையின் மையம். 1950-களில் தமிழில் எழுதப்பட்ட சில கட்டுரைகளையும் (குண்டூசி, கல்கி) ஆய்வுக் கட்டுரைகளையும் மேற்கோளிட்டு பேசினார்.

பல்வேறு பிரதேசங்களால், கலாசாரங்களால், மொழிகளால் பிரிந்திருந்தாலும் ஜனநாயகம் என்கிற கயிற்றினால் கட்டப்பட்டிருக்கும் இந்தியாவில் 'இந்திய சினிமா' என்கிற பதமே ஒரு மாயை என்கிற வகையில் பாண்டியனின் கருத்தை புரிந்து கொள்ளலாம். அந்தந்த பிரதேசத்து மக்களுக்காகவே அந்தந்த பிரதேசங்களின் சினிமாக்கள் உருவாகின்றன. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் கலாசாரத்தை, மொழியை அறியாமல் அந்த சினிமாவை முழுவதுமாக நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியாது. இப்படி தடையாக, இது உள்ளிட்ட பல காரணிகள் இருக்கும் போது இந்திய சினிமா என எப்படி அழைக்க முடியும் என்பதும் அதன் நூற்றாண்டை கொண்டாட முடியும் என்பதும் புறந்தள்ள முடியாத கேள்வி. மேலும் இங்கு இந்திய சினிமா என்பதே ஹிந்தி சினிமா என்பதாக முன்வைக்கப்படும் அபத்தத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

பாண்டியன் மேலும் உரையாடும் போது இன்னமும் நுட்பமாக சென்று  'தமிழ் சினிமா அல்லது தமிழர் சினிமா என்ற ஒன்றும் இருக்கிறதா?' என்கிற கேள்வியை முன்வைக்கிறார். இந்து புராணப் படங்களை இசுலாமியர்கள் பார்ப்பதில்லை. தேவர் மகன் திரைப்படத்தை ஒரு தலித் எப்படி கவனிப்பார், விஸ்வரூபம் திரைப்படத்தை ஒரு இசுலாமியர் எவ்வாறு புரிந்து கொள்வார் என்பது போன்ற கேள்விகளின் இதைப் புரிந்து கொள்ள முடியும். 'இந்திய சினிமா என்பது தேசியக் கட்டமைப்பை அமைக்க முயன்று தோற்றுப் போனதொரு முயற்சி' என்பதாக அவர் சிறப்புரையின் நிறைவுப்பகுதி அமைந்திருந்தது.  நேரமின்மை காரணமாக சமயோசிதமாக அமைந்த சுபகுணராஜனின் சுருக்கமான நன்றியோடு கருத்தரங்கின் இந்த துவக்கப்பகுதி நிறைந்தது.

()

பின்பு தொடர்ந்த அமர்வுகளில் வெங்கடேஷ் சக்கரவர்த்தி அவர்களின் சிறப்புரை இல்லாமல் போனது ஏமாற்றம்.

முதல் அமர்வில், பேராசிரியர் பாவேந்தன் மெளன சினிமாக் காலத்தைப் பற்றி உரையாடினார்.

தமிழ் சினிமாவின் துவக்க கால, கவனிக்கப்படாத 'காட்சியாளர்கள்' (exhibitors) பற்றி இவரின் உரை அமைந்திருந்தது. சென்னையில் முதலில் நிகழ்த்தப்பட்ட திரையிடல்களைப் பற்றி 'தியோடர் பாஸ்கரன்' நூலில் வெளியிட்டிருக்கும் தகவல்களில் வரலாற்றுப் பிழைகள் உள்ளன. சுட்டிக் காட்டப்பட்ட பிறகும் ஏன் அவர் அதை மாற்றிக் கொள்ளவில்லை என்பது இவரது புகாராக இருந்தது. மேலும் 'வரலாற்று ஆய்வாளர்களும் திரைப்பட ஆய்வாளர்களும் சாதிய மனங்களோடு இயங்குகிறார்கள். இதனால் பல முன்னோடிகளைப் பற்றின பதிவுகள் ஆவணப்படுத்தப்படுவதில்லை அல்லது கவனமாக புறக்கணிக்கப்படுகின்றன' என்பது இவரின் குற்றச்சாட்டு. ஜே.சி. டேனியல் என்கிற மலையாள சினிமாவின் முன்னோடியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட செல்லூலாயிட் திரைப்படத்தின் பிரதியையும் அதன் பின்னணியையும் உதாரணமாக எடுத்துக் கொண்டு தன் உரையை விரிவுபடுத்துகிறார். விகாதகுமாரன் திரைப்படம் தொடர்பான சில காணொளிகளின் பகுதிகளும் திரையிடப்பட்டன. 'சினிமா என்பது அதன் சமகால சமூகத்தை புறக்கணிப்பதாக, மறைப்பதாக அமையக்கூடாது' என்கிற இவரின் வேண்டுகோளை இளம் மாணவர்களின் முன் வைக்கிறார். 'ஈழப்பிரச்சினையைத் தவிர்த்து, இளவரசன்-திவ்யா விவகாரத்தின் பின்னணி தவிர்த்து எப்படி சமகால திரைப்படங்களை உருவாக்க முடியும் என்பது இவரின் கேள்வி.

'முப்பதுகளின் தமிழ் சினிமர்' குறித்து சுந்தர் காளி. எம்.கே. தியாகராஜ பாகதவரின் 'சிந்தாமணி' திரைப்படத்தையொட்டி இவரின் உரை அமைந்திருந்தது. தமிழ் சினிமாவின் துவக்க காலத்தில் உருவாக்கப்பட்ட சுமார் 200 பிரதிகளில் இப்போது சுமார் 20 பிரதிகளே மீட்டெடுக்க முடிந்திருப்பதையும் ஆவணப்படுத்தலில் நமக்கிருக்கும் அக்கறையின்மையையும் பற்றி பேசிய இவர், தமிழ் சினிமாவைப் போல உலகின் வேறெந்த சினிமாவிலும் புராணம், மதம் சார்ந்த திரைப்படங்கள் அதிகம் உருவாகவில்லை' என்கிற ஓர் ஆய்வுக்குறிப்பை முன்வைக்கிறார். தமி்ழ் சமூகத்தின் முக்கியமான பகுதியாக மையத்தில் இருந்த தேவதாசிகள் என்கிற சமூகம், நடுத்தர ஒழுங்கியல் உருவாக்கப்பட்டபின் எப்படி விளிம்பிற்குத் தள்ளப்பட்டு பின்பு ஒழிந்து போனது என்பதாக இவரின் உரை தொடர்ந்தது.

()

மதியத்திற்கு மேல் நடைபெற்ற நிகழ்வுகளில் என்னால் கலந்து கொள்ள இயலாமல் போனதால் அவற்றைப் பற்றி எழுத இயலவில்லை. பொதுவாக நான் கவனித்த வரை பேச்சாளர்களுக்கு மாணவர்களின் பொறுமையை எதிர்கொள்தே சவாலாகவும் பதட்டமாகவும் இருந்தது. அவர்களுக்கேற்றபடி தங்களின் உரைகளை எளிமையாகவும் சுவாரசியமானதாகவும் தோழமையாகவும் அமைத்துக் கொள்ளக்கூடிய கட்டாயத்திற்கு உள்ளானர்கள் எனலாம்.

நீண்ட உரைகளின் இறுதியில் தங்களின் பொறுமையின்மையை மாணவர்கள் பலத்த கைத்தட்டல்களின் மூலம் தெரிவித்தது சற்று நெருடலாக இருந்தது. உரைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும் பல மாணவர்கள் அது பற்றிய அக்கறையின்றி தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததைக் காணவும் கவலையாக இருந்தது. இளமையின் உற்சாகமான செயல்பாட்டில் அது இயல்பான எதிர்வினைதான் என்றாலும் தங்களின் கல்வி சார்ந்த நிகழ்வு என்கிற காரணத்தின் அடிப்படையிலாவது அதை அக்கறையுடன் கவனிப்பதற்கான பொறுமையையும் ஆர்வத்தையும் அவர்கள், சிரமப்பட்டாவது வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

சத்யஜித்ரே என்கிற பெயரை அறிவதற்குள் எனக்கு 18 வயது முடிந்து விட்டிருந்தது. அவரின் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்குள் இன்னும் மூன்றாண்டுகள் கடந்து விட்டன. ஆனால் நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று ஏற்பட்டிருக்கும் மாற்றத்தில் தகவல்கள் வெள்ளமென பாய்கின்ற ஓர் அதிர்ஷ்டமான சூழலில் மாணவர்கள் இருக்கிறார்கள். ஆய்வாளர்கள் தங்களின் பல்லாண்டுக்கணக்கான உழைப்பின் வெளிப்பாடுகளை சில நிமிடங்களில் வெளிப்படுத்துவதை அறிவதென்பது அதிர்ஷ்டமென்றே சொல்லலாம். இந்த வாய்ப்பை மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
 
suresh kannan

1 comment:

Anonymous said...

தாங்கள் அங்கே எடுத்துரைக்கப்பட்ட கருத்துகளில் சிலவற்றைப் பதிந்துள்ளீர்கள்,நன்றி
மாணவர்களின் பொறுமையின்மைக்கு
காரணம் சில நிகழ்வுகள் மிகவும் புரிந்து கொள்ள முடியாத சுத்த தமிழ் வார்த்தைகளில் இருந்தன.
அங்கே வழங்கப்பட்ட சிலரின் கருத்துகளில் ஒரு ஏற்றம் இறக்கத்தை கூட காண முடியவில்லை.குரல் ஒரே தொனியில் இருந்தது.தான் தயாரித்து வந்ததை சொல்லி முடிக்க வேண்டும் என்ற தொனியில் இருந்தது. ஆனால் இரண்டாம் நாள் அமர்வில் பலருடைய கருத்துகள் நன்றாக இருந்தது.... இது என்னுடைய கருத்து. உங்கள் கருத்துகளுக்கு நன்றி நன்றி...