Friday, December 13, 2013

11வது சென்னை சர்வதேச திரைவிழா - இரண்டாம் நாள்அடித்துப்பிடித்து இன்றைய நாளின் கடைசி படத்திற்குத்தான் செல்ல முடிந்தது. உண்மையில் முதலில் நான் செல்லத் திட்டமிட்டிருந்தது அபிராமி திரையரங்கில்  Jeune & Jolie (2013)  என்கிற திரைப்படத்திற்குதான்.  மேட்டருக்கு மேட்டரும் ஆச்சு. நல்லபடம் என்று வேறு நண்பர்கள் சொல்லியிருந்தார்கள் ஆனால் விதி வலியது. சரியாக திட்டமிடாததாலும் அனுமதிச் சீட்டை அதுவரை வாங்காததாலும் அது என்னை வுட்லண்ட்ஸ் தியேட்டரின் முன் நிறுத்தியது. அவசரமாக ரிஜிஸ்டிரேஷனை முடித்து நேரமில்லாததால் அங்கேயே படம் பார்க்கத் தீர்மானித்தேன். நண்பர் சந்திரமோகனிடம் எந்தத் திரைப்படம் போகலாம் என்றதற்கு 'நீங்களே முடிவு செய்யுங்கள்' என்றார். 

இங்கி பிங்கி பாங்கி போட்டு வுட்லண்ட்ஸில் பார்க்கத் தீர்மானித்தோம். மிக மொக்கையான ஸ்கீரினும் இருக்கைகளும் இருக்கும் வுட்லண்ட்ஸ் சிம்பொனியை விட வுட்லண்ட்ஸ் சற்று தேவலையாக இருக்கும் எனவே இந்த முடிவு. வாழ்வோ சாவோ என்று தீர்மானித்ததில் வந்தது 'சால்வோ'தன் முதலாளியைக் கொல்ல வரும் நபர்களை தாக்கும் பாடிகார்ட் ஒருவன், அதில் தப்பியோடும் ஒருவனை துரத்திச் சென்று 'இதற்கு யார் ஏற்பாடு செய்தது?' எனக்கேட்கிறான். யார் அது எனத் தெரிந்தவுடன் அவன் வீட்டிற்குள் நுழைந்து அவனைக் கொன்று விட்டு அவனுடைய, குறைந்த பார்வையையுடைய தங்கையை தூக்கி வந்து பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் தன் பாதுகாப்பில் வைத்துக் கொள்கிறான். எதற்காக எனத் தெரியாது.

முதலில் அவனிடம் முரண்டு பிடிக்கும் அவள், மகா சோம்பேறித்தனமாக நிகழும் பல காட்சிகளுக்குப் பிறகு ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் காரணமாகவோ என்னவோ அவனுடன் பிரியம் கொள்கிறாள். நிமிர வைக்கும் ஸ்டண்ட் காட்சியுடன் சுவாரசியமாகத் துவங்கும் இத்திரைப்படம், premature ejaculation போல விரைவில் தலைசாய்ந்து பிறகு வரும் பல காட்சிகள் மிக மிக நிதானமாக நகர்வதாலேயே அசுவாரசியத்தன்மையைக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒளிப்பதிவும் காட்சிகளின் கோண்ங்களும் இருளும் வெளிச்சங்களுமான கலவையும் ஒலிப்பதிவும் கூட அபாரமாய் இருக்கின்றன.

'தி இந்துவில்' இதற்கான முன்னோட்டக் குறிப்புகளை எழுதினவர் ஒன்று குறும்புக்காரராய் இருந்திருக்க வேண்டும். அல்லது 'தாளி சாவுங்கடா' என்கிற பழிவாங்கும் தன்மையைக் கொண்டவராக இருந்திருக்க வேண்டும். இல்லையெனில்... "விறுவிறுப்பாக நகரும் இத்தாலிய மொழிப் படம்." என்று எழுதியிருக்க முடியாது.

பசியுடன் வீட்டிற்குத் திரும்பி மனைவி தந்த சரியாக வேகாத அரிசி உப்புமாவை 'விதியே' என்று தின்று கொண்டிருக்கும் போதா, அந்தக் கேள்வி விழ வேண்டும்? "இன்னிக்கு பார்த்த படம் எப்படி இருந்துச்சு?"... வாயில் சனி பகவான் சம்மணமிட்டு அமர்ந்திருந்ததால் அதன் எதிர்வினை இல்லாமலா இருக்கும்..? 'இதோ இந்த அரிசி உப்புமா மாதிரியே மொக்கையா இருந்துச்சு." என்றேன்..

'அப்படியா சேதி' என்று உக்கிரமாக பார்த்தவளைத் தணிக்கவும்... நாளைய உப்புமாவின் முன்னேற்பாட்டிற்காகவும் "ஆக்சுவலி... அந்தப் படம் நெறைய அவார்டு வாங்கியிருக்கு"

suresh kannan

1 comment:

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

கடைசி சில வரிகளை நினைத்தால் சிரிப்பை அடக்க முடியவில்லை .ஆனால் அழகான பதிவு