Thursday, December 26, 2013

பொன்மாலைப் பொழுது - காதல் என்கிற மாயமான்
கேமரா இல்லாமல் கூட ஒரு திரைப்படத்தை உருவாக்கி விடலாம். ஆனால் காதல் என்கிற சமாச்சாரம் அல்லாமல்  ஒரு தமிழ் சினிமாவை உருவாக்குவது ஆகக் கடினமான காரியம்.  அந்தளவிற்கு தமிழின் பெரும்பான்மையான திரைப்படங்கள் காதல் எனும் இன்றியமையாத கச்சாப்பொருளைக் கொண்டு உருவாவது என்றாலும் இயற்கையான அந்த உணர்வை செயற்கைத்தனமான பூச்சுகளும் ஊதிப் பெருக்கிய பம்மாத்துகளும் அல்லாமல் யோக்கியமான யதார்த்தத்துடன் ஒரு தமிழ் திரைப்படமாவது அணுகியிருக்கிறதா என்றால் யோசிக்க வேண்டியிருக்கிறது. பதின்ம வயதுகளில் ஏற்படும் காதல் என்றழைக்கப்படும் அந்த உணர்வைப் பற்றியும் அதை குடும்பம், சமூகம் போன்ற நிறுவனங்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பதையும் பதின்ம வயதினருக்கு ஏற்படும் கலாசார, உளவியல் பிரச்சினைகளைப் பற்றியும்  உரையாடும் தமிழ்த் திரைப்படங்கள் மிகக் குறைவு. சமீபத்தில் வெளிவந்து பரவலான கவனத்திற்கு உள்ளாகாமல் மறைந்து போன 'பொன்மாலைப் பொழுது'  இந்த வகைமையிலான உரையாடலை அதன் வணிக எல்லைக்குள் சாத்தியப்படுத்தியிருக்கிறது என்பதாலேயே இது கவனத்திற்கு உள்ளாக வேண்டிய படமாக அமைகிறது.

சூரிய அஸ்மனத்தில் அல்லது விடியலின் பின்னணயில் சில்ஹவுட் காட்சியில் ஊர்மக்கள் தீப்பந்தத்துடன் துரத்த காதலர்கள் கைப்பற்றி ஓடுவதுடன் இறுதிக்காட்சிகள் உறைந்து போய் நிற்பது  வரையிலான எல்லை வரையே 80-களின் தமிழ் சினிமாக்கள் உரையாடின.  'விடிவெள்ளியை நோக்கி விரையும் இந்தக் காதல் எந்நாளும் ஜீவித்திருக்கும். காதலுக்கு அழிவில்லை. அழிந்தால் அது காதலில்லை' என்று  அசட்டுத்தனமான வாக்கியங்களுடன் இயக்குநர் குரலில் படத்தின் நீதி ஒலிக்க படம் நிறைவடையும். விடிவெள்ளிக்கு அந்தப்புறமாக ஓடின காதலர்கள் என்னவானார்கள் என்கிற கவலை ஏதும் பார்வையாளர்களுக்கோ இயக்குநர்களுக்கோ ஏற்படாது. காதலர்களை இணைத்து வைத்து விட்ட சந்தோஷத்தில் இயக்குநர்களும் சுயவாழ்க்கையில் நிறைவுறாத  அல்லது அனுமதிக்காத காதல் திரையில் நிறைவுற்றவுடன் திருப்தியடைந்து பார்வையாளர்களும் தத்தம் வேலைகளைப் பாாக்கப் போய் விடுவார்கள்.

இனக்கவர்ச்சியின் கனவுகள் தந்த மயக்கத்தில் ஓடிப்போன காதலர்கள் நடைமுறையில் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சினைகளைப் பற்றி கவலையுடன் ஒலித்த முதல் குரல் 'பன்னீர் புஷ்பங்கள்' திரைப்படத்தில்தான் இருந்தது. "உன்னை அடிச்சுப் போட்டுட்டு இந்தப் பொண்ணை நாலைஞ்சு பேர் தூக்கிட்டுப் போனாங்கன்னா என்ன செய்வே?" என்று ஆசிரியர் பாத்திரமான பிரதாப் போத்தன், ஓடிப்போகும் இளம் காதலர்களை நோக்கி கேட்கும் அந்தக் கேள்வியே, இளம் தலைமுறையினரின் காதல் மயக்கங்களை தெளியவைத்து தரையில் கால்பதிக்க வைக்கும் நோக்கத்துடன் கேட்கப்பட்ட நவீன கால தமிழ்த்திரையின் முதல் வசனம் என்பதாகத் தோன்றுகிறது. அதற்குப் பிறகு நீண்ட ஆண்டுகள் கழித்து வந்த பாலாஜி சக்திவேலின் 'காதல்' திரைப்படம் ஓடிப்போகும் காதலர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகளை - நடுரோட்டில் நின்று தவிக்கும் காதலிக்கு நாப்கின் வாங்கித்தரவேண்டிய அவசியம் வரை- உரையாடியது. மிக எளிமையாக உருவாகி விடும் காதலுக்குப் பின்னால் சாதிய படிநிலைகள், சமூக அந்தஸ்தின் ஏற்றத் தாழ்வுகள் உள்ளிட்ட பல கோரமான முகங்கள் உறைந்துள்ளன என்பதை முகத்தில் அறையும் உண்மையுடனும் அதிர்ச்சியுடனும் பதிவு செய்தது. இவ்வாறான சில விதிவிலக்குகளை தமிழ்த் திரையில் காண முடிகிறது.

இந்த வரிசையில் சமீபத்திய வரவு 'பொன்மாலைப் பொழுது'. இளமையின் துள்ளலுடன் ஆரம்பக் காட்சிகள் நகர்கின்றன. உலகமயமாக்கத்தின் விளைவாக முன்பிருந்தததை விட மோசமாக நாகரிக சமுதாயத்தின் சில ஆதாரமான விழுமியங்களும் கலாசார மதிப்பீடுகளும் மறைந்து போய் எல்லாமே பொருளாதாரம் எனும் அளவுகோலில் அளக்கப்படும் யதார்தத்தை புரிந்து கொண்ட சமகால இளைய தலைமுறையின் கொண்டாட்டங்களுடனும் அலட்சியங்களுடனும் துவக்கக் காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சக மாணவியிடம் ஒரு வார்த்தை பேசி விடுவதையே சாதனையாக கொண்டாடின தலைமுறை மறைந்து பாலியல் சார்ந்த நகைச்சுவையை மிக இயல்பாக பகிர்ந்து கொள்ளும் ஆண்-பெண் நட்பு, கலாச்சார காவலர்களின் காதுகளில் புகை வரவழைக்குமளவிற்கு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மாணவியின் ஆடைகளை அவிழத்து சக மாணவிகள் ரசிக்கும் காட்சிகள் உட்பட.  இவைகளைத் தாண்டிவுடன்தான் படம் தன்னுடைய மையத்தில் நிலைகொள்ளத் துவங்குகிறது.

படத்தின் நாயகனும் நாயகியும் நட்பாகத்தான் பழகிக் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்குள் காதல் இருந்ததா? தெரியாது. ஆனால் அவர்களுக்குள் காதலை உருவாக்கும் காரியத்தை, அவர்கள் அதை நி்ச்சயித்துக் கொள்வதை பெண்ணின் தந்தையே செய்கிறார். தன்னுடைய மகள் சக மாணவனுடன் சைக்கிளில் பயணிப்பதை கவனிக்கும் அந்த முரட்டுத்தனமான தந்தை, அவர்களை விரட்டிச் சென்று பள்ளிக்குள் நுழைந்து அந்த மாணவனை பல பேரின் முன்னிலையில் செருப்பால் அடித்து தண்டனை அளிக்கிறார். அதுவரை நட்புடன் பழகிய மாணவன் மீது இந்தச் சம்பவத்தின் மூலம் ஏற்படும் அனுதாபமே அந்தப் பெண்ணுக்கு காதலாக மலர்கிறது. ஒரு காதல் உருவாவதற்கு தொடர்புள்ளவர்கள் மட்டுமல்லாமல், சுற்றியுள்ளவர்கள் அதீதமான எதிர்வினைகளின் மூலம் மறைமுக காரணிகளாகிறார்கள் என்பதை அவர்களே அறிவதில்லை என்பதுதான் கொடுமையாக இருக்கிறது.  பெண்ணின் தரப்பில் இந்த எதிர்ப்பு வலுக்க வலுக்க நியூட்டனின் இயற்பியல் கோட்பாடு போல அதன் எதிர்வினையாக காதலின் உறுதியும் கூடிக் கொண்டே போகிறது.

அதிர்ஷ்டவசமாக பையனின் தந்தை பதின்ம வயதின் குழப்பங்களின், தத்தளிப்புகளின் இயல்பை உணர்ந்து முதிர்ச்சியாக நடந்து கொள்கிறார். அவருடைய இளம் வயதில் அவருடைய தந்தை ஆற்றிய கடுமையான எதிர்வினைகளே இவருடைய முதிர்ச்சிக்கு காரணமாய் அமைகிறது. ஒவ்வொரு பெற்றோருமே தங்களின் பதின்ம வயதுகளின் குழப்பங்களையும் தேடல்களையும் உணர்ச்சிகளையும் தாங்கள் எதிர்கொண்ட  அனுபவங்களையும் கடந்துதான் பெற்றோர்களாக உருமாறுகிறார்கள். ஆனால் தங்களுடைய அடுத்த தலைமுறை அதே மாதிரியான உணர்வுகளினால் தடுமாறும் போது தங்களின் அனுபவங்களின் மூலம் அவர்களை முதிர்ச்சியுடன் வழிநடத்திச் செல்லாமல் தங்களுடைய பெற்றோர்களைப் போலவே கண்டிப்புடன் நடந்து கொள்ளும் விசித்திரமான முரணை இத்திரைப்படத்தின் மையமாகச் சொல்லலாம்.

வீட்டுக்காவலில் வைக்கப்படும் தன்னுடைய காதலியைப் பார்க்க முடியாமல் நாயகன் மனஉளைச்சலுக்குள்ளாகி பாதிப்பை அடைகிறான். இன்னொரு புறம் நாயகியின் கல்வியும் தடைக்குள்ளாகிறது. சூழலின் அழுத்தம் தாங்காமல் நாயகனின் தந்தை ஊரை விட்டுப் போக முடிவு செய்கிறார். தன் மகனை பார்க்க துடித்து ஓடிவரும் நாயகியை தடுத்துச் சொல்லும் அந்த வசனத்தின் மீதுதான் மொதத திரைப்படமு்ம் நிற்கிறது. "இது காதலிக்கும் வயது அல்ல. திருமணம் செய்து கொள்ளும் முதிர்ச்சியான வயதும் அல்ல. இருவருமே அவரவர்களின் கல்வியில் கவனம் செலுத்துங்கள். இதற்கான காலத்திற்குப் பின்னும் இருவரின் காதலும் நீர்த்துப் போகாமல் நீடித்தது என்றால் அது உண்மையானது என்றால் நானே உங்களை இணைத்து வைக்கிறேன்" என்கிறார்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் வாரிசுகளின் காதல்களை இது போன்று முதி்ர்ச்சியாக அணுகினால் எத்தனை தற்கொலைகளும் சாதிய மோதல்களும் பழிவாங்குதல் சம்பவங்களும் தவிர்க்கப்படலாம் என்று யோசிக்கவே ஆறுதலாக இருக்கிறது.

நாயகனின் தந்தையாக நடிகர் கிஷோர் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். தன்னுடைய மகன் செய்யும் தவறுகளை கண்டும் காணாமலும் ஆனால் அதற்கான தீர்வுகளை மெளனமாக யோசித்து செயலாற்றும் காட்சிகளில் இவரது முகபாவங்கள் அற்புதமாக பதிவாகியுள்ளன. நாயகனாக கவிஞர் கண்ணதாசனின் வாரிசு ஆதவ் கண்ணதாசன் நடித்திருக்கிறார். ராஜவேலின் அழகியல் சார்ந்த ஒளிப்பதிவின் மூலம் 'இது சென்னையின் பகுதிகள்தானா'? என சில காட்சிகள் வியக்க வைக்கின்றன. இதே சமகாலத்தில் வந்த 'ஆதலால் காதல் செய்வீர்' புதிய தலைமுறை இளைஞர்களின் உடற்சார்ந்த கவர்ச்சியையும் அதன்பின்விளைவுகளையும் பற்றி உரையாடியது என்றால் பொன்மாலைப் பொழுது காதலின் புறம் சார்ந்த பிரச்சினைகளையும் அதில் பெற்றோர்களுக்கு இருக்க வேண்டிய  அத்தியாவசிய பங்கினையும் பற்றிப் பேசுகிறது. அறிமுக இயக்குநரான ஏ.சி. துரையிடமிருந்து இன்னும் நல்ல உருவாக்கங்களை எதிர்பார்க்கலாம் என்கிற நம்பிக்கையை 'பொன்மாலைப் பொழுது' ஏற்படுத்தியிருக்கிறது.

(காட்சிப் பிழை, டிசம்பர்  2013-ல் வெளியான கட்டுரை - நன்றி: காட்சிப் பிழை) 

suresh kannan

2 comments:

ezhil said...

இப்படி பெயர் தெரியாமல் போன படத்துள் அருமையான கதை ஒளிந்திருப்பது உங்கள் பார்வையால் தெரிந்தது.

Anonymous said...

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பட பின்னணி இசை ஆங்காங்கே துருத்தி கொண்டிருந்தது என்று எழுதி இருந்தீர்கள்.எந்தெந்த இடத்தில் அப்படி இருந்தன?காரணம் என்ன?மிகச்சிறந்த பின்னணி இசை கொண்ட படம் ஏதேனும் உள்ளதா?அல்லது விமர்சகர்கள் கூடி அதை கொடுக்க போகிறார்களா என்பதெல்லாம் தெரிந்தால் நன்று