Monday, December 02, 2013

பொதுவெளியின் எளிய வாசகர்

சனிக்கிழமையன்று ஜெயமோகனின் 'வெள்ளை யானை' நூல் வெளியீட்டு விழா முடிந்து கிளம்பும் போது கடும் பசி. வழக்கமான வேலை நாட்களில் இவ்வாறு அத்தனை பசிக்காத வயிறு, வெளியே செல்லும் நாட்களில் உடலின் ஓவர்டைம் காரணமாகவாகவோ என்னவோ, விரைவில் பசிக்க ஆரம்பித்து விடுகிறது. இதனாலேயே விழா நிகழ்வுகளை ஒருமித்த மனநிலையில் கவனிக்க முடிவதில்லை. அதனாலேயே அவசரமாக எதையாவது திணித்து விட்டு ஓடுவேன். அன்று இயலவில்லை.

விழா முடிந்து நண்பர்களிடம் சிறிது உரையாடி விட்டு சென்ட்ரல் ஸ்டேஷன் அடைந்து வீட்டை அடைவதற்குள் பசி அதன் உக்கிரத்தை அடைந்திருந்தது. ஓளவையார் சொன்னது போல் இடும்பை கூர் வயிறு. கடுமையான பசியை உணர்ந்திருந்தால்தான் இந்த நாவலில் விவரிக்கப்படும் பஞ்சத்தின் விவரணைகளை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று விழாவில் கெளதம சன்னா (?) சொன்னது நினைவிற்கு வந்தது. (ஒருவேளை பசிக்கே இதெல்லாம் ஓவர்ப்பா தம்பி).

வீட்டின் அருகிலிருக்கும் ஓர் அசைவ உணவகத்திற்கு சென்று அவசரமாய் பிரியாணி ஆர்டர் செய்தேன். காத்திருக்கும் நேரத்தில் சென்ட்ரல் ஸ்டேஷனில் வாங்கிய உயிர்மையைப் புரட்டி ஷாஜியின் கட்டுரையை ஆவலாக வாசித்துக் கொண்டிருந்தேன். (தன்னடக்கத்தை கவனியுங்கள், என் கட்டுரையை வாசிக்கவில்லை). அப்போதுதான் அது நிகழ்ந்தது.

அங்கு சர்வராக பணிபுரியும் ஒருவர் என்னை அணுகி 'இந்த மாச உயிர்மை இத்தனை சீக்கிரம் வந்துடுச்சுஙகளா?" என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பேருந்து மற்றும் ரயில் பயணங்களில் தினத்தந்தி, ராணிமுத்து வகையறாக்களைத் தாண்டி இலக்கிய நூல்கள், சிற்றிதழ்கள், காலச்சுவடு, உயிர்மை போன்ற இடைநிலை இதழ்கள் ஆகியவற்றை வாசிக்கின்ற சகஹிருதயர்களை அபூர்வமாகவே கண்டிருக்கிறேன். அநாமயதேயராக இருந்தாலும் அவர் மீது இனம் புரியாத காரணமறியாத பிரியம் ஏற்பட்டு விடும். சமயங்களில் லஜ்ஜையை கைவிட்டு அவர் வாசிக்கும் நூல் என்னவென்று எட்டிப்பார்ப்பதும் உரையாட கூட முயல்வதும் கூட உண்டு.

ஹோட்டலில் சர்வராக பணிபுரியும் ஒருவர் இலக்கிய இதழைப் பற்றிக் கேட்டது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. (ஏன் ஹோட்டல் சர்வர் இலக்கியம் படிக்க்ககூடாதா, இதைத்தான் மேட்டிமை மனப்பான்மையின் ஆழ்மன விளைவு  என்று ருஷ்ய அறிஞர் மிகாச்சேவ் காபுரா சொல்லியிருக்கிறார் என்றெல்லாம் என்னை தாக்க முனையாமல் அந்த சூழ்நிலையின் யதார்த்தத்தோடு புரிந்து கொள்ளுங்கள்). அவரைப் பற்றி ஆவலாக விசாரித்தேன். பெயரையும் ஊரையும் பற்றி சொன்னார். இது போன்ற இதழ்களை தொடர்ந்து வாசிப்பதாகவும் தெரிவித்தவுடன் என் பசியும் சற்று மறைந்து அவரைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.

அவர் என்னைப் பற்றி விசாரித்தவுடன் என் பெயரைச் சொன்னேன். அவர் உடனே என் கையிலிருந்த இதழையும் பெயரையும் கச்சிதமாக இணைத்து யோசித்து 'சமீபத்தில் இதில் தொடர்ந்து எழுதுவது நீங்கள்தானே?' என்றார். 'ஆமாம்'

'கடந்த மாத  இதழில் மிஷ்கின் திரைப்படத்தைக் குறித்த கட்டுரையைப் பற்றி ' நல்லாயிருந்ததுங்க' என்று ஆரம்பித்து  'ஏன் இதைப் பற்றி எழுதவில்லை, ஏன் அதை எழுதவில்லை" என்று பல கேள்விகளால் திணறடித்து விட்டார். இதற்குள் நான் ஆர்டர் செய்த உணவும் வந்துவிட்டது. ஆனால் அதை கடும்பசியில் உண்ண இயலாமல் அவரின் கேள்விகள் தொடர்ந்து கொண்டேயிருந்தன. உள்ளே கிச்சனில் வறுபட்டுக் கொண்டிருந்த கோழி கூட அத்தனை துன்பப்பட்டிருக்காது. அந்தச் சங்கடத்தையும் மீறி சினிமா குறித்த அவரின் ஆர்வம் என்னை பிரமிப்படையச் செய்தது. மிஷ்கின் திரைப்படத்தின் பல காட்சிகளை உதாரணம் காட்டிக் கொண்டேயிருந்தார். நான் எழுதிய முந்தைய கட்டுரைகளைக் கூட அவர்  ஞாபகம் வைத்திருந்தது உண்மையில் என்னை நெகிழ வைத்தது. 'என்னுடைய பூர்வீகம் சென்னைதானா? என்பதை மறுபடி மறுபடி கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். சென்னையில் பிறந்தவர்கள் எழுத்தாளராக எப்படி ஆக முடியும் என்பதை அவர் உறுதியாக நம்பினது போலிருந்தது.

எதற்காக இத்தனை சுயபிரதாபம் என்றால், இத்தனை வருட இணையப் பொதுவாழ்க்கையில் வசைகள் உட்பட பல வாசகர் கடிதங்களை மின்னஞ்சலில் பெற்றிருக்கிறேன். (வாசகர் கடிதங்களை இணையத்தில் பிரசுரிப்பதில்லை. தன்னடக்கம்தான் காரணம்) இணையப் பரிச்சயத்தின் மூலம் பல நண்பர்களின் அன்பையும் சில நண்பர்களின் கசப்பையும்  பெற்றிருக்கிறேன். நூல் வெளியீட்டு விழாக்களில் புத்தக கண்காட்சிகளில் சில நண்பர்களின் அறிமுகத்தைப் பெற்றிருக்கிறேன்.

ஆனால் பொதுச் சமூகத்தில் என்னிடம் எவ்வித முன்தொடர்பும் கொள்ள இயன்றிருக்காத ஓர் அநாயமதேய எளிய நபரை வாசகராக சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. இவரின் அறிமுகத்தின் மூலம் அன்றைய தருணம், வயிறை விடவும் மனம் அதிகமாக நிறைந்திருந்தது.

இதை போல் நூல் வெளியீட்டு விழா இறுதியில் வெளியே கிருஷ்ணமூர்த்தி என்கிற ஆர்வமுள்ள இளைஞரை சந்தித்தேன். திருவண்ணாமலையிலிருந்து இந்த விழாவிற்காகவே வந்திருக்கிறார். இரவு தங்க இடமிருந்தால் மறுநாள் நடக்கவிருந்த வாசகர் கலந்துரையாடலிலும் கூட கலந்து கொள்ள விருப்பம் ஆனால் இரவு கிளம்பினால்தான் மறுநாள் ஊர் அடைய முடியும் என்கிற வருத்தம். கணினி ஏதுமில்லையென்றாலும் கூட கைபேசியிலேயே ஜெயமோகன் தளத்தின் அனைத்துக் கட்டுரைகளையும் வாசித்து விடுவாராம். ஜெயமோகன் படைப்பொன்றைப் பற்றி கட்டுரை கூட எழுதி வைத்திருக்கிறார். பவாவிடம் சொல்லி திருவண்ணாமலையில் நிகழும் இலக்கிய சந்திப்பில் ஜெயமோகனிடம் சேர்த்து விட வேண்டும் என்கிற ஆவலில் இருக்கிறார். அவர் உடல்மொழியிலும் கண்களிலும் தெரிந்த பரவசத்தைக் காண நெகிழ்ச்சியாக இருந்தது. கணினி ஒன்றிருந்தால் அவர் எழுத்துக்களை இணையத்திலேயே பதிப்பிக்க முடியும் என்று யோசனை சொன்னேன். ஆனால் அவரிடம் சொந்தமாக கணினி இல்லை.

இவ்வாறான எளிய வாசர்களின் மூலம்தான் இலக்கியம் எனும் வஸ்து குற்றுயிரும் குலையுறுமாக ஜீவித்துக் கொண்டிருக்கிறது. 


suresh kannan

3 comments:

manjoorraja said...

இதுபோல நிறைய பேர் இருக்கின்றனர். நம்மால் நம்பவே முடியாத இடத்திலிருந்து இப்படிப் பட்ட அதிர்ச்சித் ததும்பிய அன்புத் தாக்குதல்கள் வரும். சமீபத்தில் ஒரு உறவினரின் வீட்டிற்கு சென்றிருந்தப் போது அந்த வீட்டு அம்மையார் படிக்கும் நூல்களை கண்டு வியந்திருக்கிறேன்.

Ashok D said...

:)

வெற்றிவேல் said...

வணக்கம்...
தங்கள் தளம் எனக்கு புதிது. நானும் இப்படி சில ஆர்மானவர்களை கண்டுள்ளேன். நல்ல பதிவு...

தொடருங்கள்...