நவீன தமிழ் இலக்கியத்தின் துவக்கியப் புள்ளியாக பாரதியை பெரும்பாலான விமர்சகர்கள் குறிப்பிடுவது போல நவீன தமிழ் சினிமாவின் துவக்கப் புள்ளியாக மணிரத்னத்தை குறிப்பிடலாம் என்பது என் அனுமானம். கதை சொல்லும் முறையிலும் காட்சிப்படுத்தும் முறையிலும் புதுமைப்பித்தனின் தவளைப் பாய்ச்சல் நடையை அவர் திரையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். மணிரத்னத்தின் முந்தைய உருவாக்கங்களைத் தவிர்த்து 'நாயகனை' நவீன தமிழ் சினிமாவின் முதல் அடையாளம்' என்று கூட சுட்டிக் காட்டலாம். (இது காட்பாதரை தழுவி எடுக்கப்பட்டது என்னும் புகாரில் உண்மையிருக்கிறது என்றாலும் இதையே எஸ்.பி. முத்துராமன், ராஜசேகர் போன்ற வணிகநோக்குப்பட இயக்குநர்கள் கையாண்டிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்பதையும் சினிமா ஆர்வலர்கள் யோசித்துப் பார்க்கலாம்). மணிரத்னம் என்னும் நவீனப் புள்ளியின் தொடர் கண்ணிகளாக விளங்கும் தமிழ் சினிமா இயக்குநர்கள் யார் யார் என்று பார்த்தால் பாலா (சேது), அமீர் (பருத்திவீரன்), கெளதம் மேனன் (காக்க காக்க), மிஷ்கின் (அஞ்சாதே) என்று ஒரு சில பெயர்களே காணக் கிடைக்கின்றன.
இந்த வரிசையில் செல்வராகனையும் நிச்சயம் இணைத்துக் கொள்ளலாம். அவரது முந்தைய உருவாக்கங்களில் துள்ளுவதோ இளமை, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய திரைப்படங்களை சில குறிப்பிட்ட முன்மாதிரியான அம்சங்களுக்காக மாத்திரம் பாராட்டலாமே ஒழிய அவற்றை முழுமையான திரைப்படங்களாக என்னால் கருத இயலவில்லை. ஆனால் 'காதல் கொண்டேன்' திரைப்படத்தை ஒரு முழுமையான கலைஉணர்வு சார்ந்த படைப்பாக என்னால் சுட்டிக் காட்ட இயலும். விளிம்பு நிலையிலிருந்து மைய நீரோட்டத்தில் கலக்க வரும் ஒருவன் எதிர் கொள்ள வேண்டிய சிக்கல்களையும் பால்விழைவு சார்ந்த மனப்போராட்டத்தையும் அதன்காரணமாக ஏற்படும் உளச்சிதைவையும் அத்திரைப்படம் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கும். இந்நிலையில் செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்' ஆரம்பத்திலிருந்தே மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் ஆவலையும் பார்வையாளர்களிடையே கொண்டிருந்தது. ஒருவகையில் அதிக எதிர்பார்ப்பே படத்தின் வெற்றிக்கும் முன்தீர்மானத்தோடு அணுகும் ரசிகமனோநிலைக்கும் ஆபத்தாய் அமைந்துவிடும். எனவேதான் மணிரத்னம், ஷங்கர் போன்றவர்கள் தங்களின் உருவாக்கங்களைப் பற்றின எந்தவொரு விஷயத்தையும் கசியவிடாதவாறு பார்த்துக் கொண்டனர். அதையும் மீறி கசியும் அல்லது தயாரிப்பாளர்கள் வேண்டுமென்றே கசிய விடும் செய்திகளைக் கொண்டு பார்வையாளர்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொள்ளும் முன்தீர்மான பிம்பங்கள் திரையில் நொறுங்குவதைக் காணும் போது அந்த ஏமாற்றத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
இது ஒருபுறமிருக்க தமிழ்ச்சினிமாவை பாதிப்பிற்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கும் இன்னொரு நோய்க் குறியீடு 'பிரம்மாண்டம்' என்னும் கருத்தாக்கம். சந்திரலேகா, ராஜராஜசோழன் போன்ற புராதன உருவாக்கங்களை தவிர்த்து இதையும் நவீன சினிமாவில் இருந்து துவங்க வேண்டுமென்றால் அதன் புள்ளியாக கே.டி.குஞ்சுமோன் + பவித்ரன் கூட்டணியைச் சொல்லலாம் என்று கருதுகிறேன். ஒரே ஒரு கதைத் துளியை வைத்துக் கொண்டோ சமயங்களில் அதுவுமில்லாமலோ, அதை பிரம்மாண்டமான வெற்றுச் சாகசங்களால் நிரப்ப முயல்வது. ஜீப்களை அந்தரத்தில் பறப்பது, பாடலில் நூற்றுக் கணக்கானவர்கள் பாடல் காட்சிகளின் பின்னணியில் ஆடுவது போன்ற அபத்தங்களால் இத்திரைப்படங்கள் நிரம்பியிருக்கும். பவித்ரனிடம் உதவி இயக்குநராக இருந்த ஷங்கர் இந்த முறையை ஒரு வணிக வெற்றியின் அடையாளமாகவே மாற்றிவிட்டிருக்கிறார். அர்த்தமில்லாத சடங்காகவே நீடிக்கும் இத்திரைப்படங்களின் செலவுத் தொகைகள் வணிக நோக்கத்திற்காக பெரும்பாலும் ஏற்றியே சொல்லப்படுகிறது. பார்வையாளனுக்குச் சம்பந்தமேயில்லையெனினும் அவனும் கூட 'எத்தனை கோடிகளில் உருவாக்கப்பட்டது; எத்தனை கோடிகளில் வியாபாரமானது' என்கிற விவாதத்தை தம்முடைய அரட்டையில் இணைத்துக் கொள்கிறான். 'ஆயிரத்தில் ஒருவனும்' இதே போன்தொரு நோக்கிலதான் பார்க்கப்படுகிறது. ஏறத்தாழ முப்படி கோடி ரூபாய்க்கும் மேலாக செலவு, மூன்று வருடங்களுக்கும் மேலான படப்பிடிப்பு, இயக்குநரின் நேர்காணலில் தெரியும் அலட்டல்கள்.. பார்வையாளனிடம் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டிருக்கிறது.
இணையத்திலும் பத்திரிகைகளிலும் 'ஆயிரத்தில் ஒருவனுக்கு' எழுதப்பட்ட விமர்சனங்களில் பொதுவாக இருவகைகளைக் காண முடிந்தது. ஒன்று, தமிழ்ச்சினிமாவில் புதிய களம், முயற்சி, அற்புதம், ஆகா, ஒகோ என்று கண்மூடித்தனமாக பாராட்டப்பட்ட வகை. இன்னொன்று, திரைக்கதை குழப்பம், சில ஆங்கிலப்படங்களின் பாதிப்பு, தேவையில்லாத கவர்ச்சி, வரலாற்றுத் தரவுகளின் பிழை.. என்று இயக்குநரை போட்டுச் சாத்தியிருந்த வகை. இரண்டு வகைகளின் நடுவில்தான் உண்மை ஒளிந்து கொண்டிருந்ததாக எனக்குத் தோன்றியது. சினிமா குறித்தான அடிப்படை ஆர்வமும் அறிவும் கொண்ட என்னுடைய நண்பரொருவர் இத்திரைப்படத்தைப் பார்த்துவிட்டு முழுமையாக திரும்பியிருந்தார். அவரிடம் இத்திரைப்படம் குறித்து கேட்ட போது ... Shit.. என்று ஒரே வார்த்தையில் புறக்கணித்தார். (இடுகையின் தலைப்பை கவனிக்கவும்). நல்ல வேளையாக fucking shit .. என்று சொல்லவில்லை.
இந்தப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு 'ஆயிரத்தில் ஒருவனை' அணுக முயல்வோம்.
()
பொதுவாக தமிழ்ச் சினிமாவின் தரம் குறித்து சலிக்காமல் நாம் தொடர்ந்து புகார் செய்து கொண்டேயிருக்கிறோம். என்னுடைய வலைப்பூவே அதற்கொரு சிறந்த உதாரணம். ஆனால் வழக்கமான வார்ப்புகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு ஒரு புதிய முயற்சி படைக்கப்படும் போது அதிலுள்ள குறைகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு அதற்கான அடிப்படை பாராட்டை நாம் வழங்குகின்றோமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. நம்முடைய மேதமைகளைக் காட்ட இதுதான் சமயமென்று சிறிய பிழைகளைக் கூட பூதாகரமாக சுட்டிக் காட்டி மொத்த படைப்பையுமே நிராகரிக்கிறோம். இது ஒரு தவறான போக்காக எனக்குப் படுகிறது. ஆ.ஒ.வின் இயக்குநர் அப்படி என்னதான் தவறிழைத்துவிட்டார் என்று பார்க்கலாம்.
இது ஒரு புனைவு சார்ந்த திரைப்படமென்று ஆரம்பத்திலேயே பார்வையாளர்களுக்கு தெளிவாக்கப்பட்டு விடுகிறது. புனைவு என்று வரும்போது ஒரு படைப்பாளி அதிகபட்ச சுதந்திரத்தை எடுத்துக் கொள்ள இயலும். அவனே ஒரு மாய உலகத்தை அத்தனை நுணுக்கங்களுடன் சிருஷ்டிக்க முடியும். ஒரு கலைஞன் கடவுளுக்கு இணையாக அமரும் தருணமது. விஞ்ஞானிகள் கூட இயற்கையில் ஒளிந்திருக்கும் உண்மைகளின் மீது வெளிச்சம் பாய்வதைத் தான் செய்ய முடிகிறது. ஆனால் கலைஞன் விஞ்ஞானிகளுக்கும் ஒருபடி மேலே சென்று இயற்கையையே படைக்கிறான். 'அவதார்' ஒரு சிறந்த சமீபத்திய உதாரணம். செல்வராகவன் அதைத்தான் செய்ய முயற்சித்திருக்கிறார். ஏழு தடைகளுக்குப் பின்பாக இறுதிக் கட்டத்தை அடைவது போன்ற திரைக்கதையிலுள்ள தடயங்கள் நம்முடைய புராதன கதை மரபை நினைவுப்படுத்துகின்றன.
இத்திரைப்பட உருவாக்கத்தின் ஆரம்பக் கட்டத்தில் இயக்குநரும் தயாரிப்பாளரும் யதார்தத்தில் நிகழ்த்தியிருக்கக்கூடிய விவாதங்களை யூகிக்க முயல்வோம். 'வரலாற்றுத் தொடர்ச்சியுடன் கூடிய முன்னோர்களின் பகையை சமகாலத்தின் பின்னணியில் சொல்கிறோம்' என்று இயக்குநர் தம்முடைய விவரிப்பைத் தொடங்கிய கணமே கேட்டிருப்பவர்கள் தங்களின் பின்புறத்தால் சிரித்திருக்கக்கூடும். ஏனெனில், காதலை அல்லது வன்முறையை அடிப்படையாகக் கொண்ட படம் வெற்றி பெற்றால் உடனேயே அதே போன்று புற்றீசல்கள் போல் வெளிவந்துக் கொண்டிருக்கும் தமிழ்ச்சினிமா சூழலில் இப்படியான அதீத கற்பனைக்கு உடனேயே அங்கீகாரம் கிடைத்திருக்காது; மாறாக அது சாத்திமற்ற ஒன்றாகவோ நகைச்சுவையாகவோத்தான் அணுகப்பட்டிருக்கும். ஒரு புதுமுக இயக்குநரால் இவ்வாறான ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கவே முடியாது என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். செல்வராகன் முந்தைய படைப்புகளால் தம்மை ஒரளவு நிருபித்துக் கொண்டிருப்பவர் என்பதால் பெரு முயற்சிக்குப் பின் இதற்கான ஒப்புதலைப் பெற்றிருப்பார். 'எதையாவது செய்து' பொருளீட்டிவிடும் வணிகமதிப்புக் கனவுகளில் மிதக்கும் தயாரிப்பாளர்கள் அரைமனதுடன் இதற்கு சம்மதித்திருப்பார்கள். ஆக.. இப்படியொரு தமிழ்ச்சினிமாவில் இப்படியொரு புனைவை யோசிப்பதே பெரிய விஷயம் எனும் போது அதை படைப்பாகவும் சாதித்துக் காட்டிய செல்வராகவனை நிச்சயம் நாம் முதலில் பாராட்டியாக வேண்டும்.
தமிழ்சினிமா இப்போதும் கூட தவழும் நிலையில்தான் உள்ளது என்று முன்னொரு பதிவில் கூறியிருக்கிறேன். இவ்வாறான முயற்சிகளின் மூலம்தான் அது எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறது என்று கூறலாம். எனவே தத்தித் தத்தி வரும் ஒரு குழந்தையை "ஏன் உன் நடை கோணலாக இருக்கிறது, ஏன் வாயில் ஜொள் வடிகிறது, ஏன் தலைமுடி கலைந்திருக்கிறது' என்று விமர்சகர்கள் கேட்பதெல்லாம் சற்று அராஜகமாகவே தோன்றுகிறது.
()
புராதன வரலாற்றையும் சமகாலத்தையும் இணைக்கும் படியான இவ்வாறான கதையமைப்பு தமிழ்த் திரையுலகிற்கு புதியதா என்றால் இல்லை. சட்டென்று நினைவுக்கு வரும் முன்உதாரணத்தை சுட்டிக் காட்டலாம். நாசர் இயக்கத்தில் வெளிவந்த தேவதை. அதுவரைக்கும் வரலாற்று மன்னர்களின் தோற்றம் குறித்து பொதுப்புத்தியில் உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பிம்பங்களை உடைத்துவிட்டு 'இப்படித்தான் அவர்கள் இருந்திருப்பார்களாக இருக்கும்' என்கிற உணர்வை ஏற்படுத்துமளவிற்கு அதில் சித்தரிக்கப்பட்டிருந்த மன்னரும் சூழலும் இயல்பாக அமைந்திருக்கும். இதன் பின்னணியில் டிராஸ்ட்கி மருதுவின் பங்களிப்பு இருந்தது என்பதாக ஞாபகம். ஆனால் தேவதை திரைப்படம் முற்பாதியில் வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையிலும் பிற்பாதியில் சமகாலத்தில் அதன் தொடர்ச்சி நிகழ்வதைப் போலவும் இருபிரிவாக பிரிந்திருக்கும். ஆனால் ஆ.ஒ. இரண்டுமே சமகாலத்தில் ஒரே சமயத்தில் நிகழ்வதைப் போல கற்பனை செய்திருப்பதுதான் புதுமை.
பொதுவாக இவ்வாறான வரலாற்றுப் புனைவு ரீதியான திரைப்படங்களை, பார்வையாளன் இயக்குநரிடம் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொள்வதின் மூலம்தான் படைப்பை முழுமையாக ரசிக்க முடியும். மறுபடியும் அவதாரையே உதாரணமாக சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவ்வாறின்றி இது ஏன், அது எப்படி என்கிற கேள்விகளுடன் அமர்ந்திருந்தால் அதிருப்தியோடுதான் அரங்கிலிருந்து வெளியேற வேண்டியிருக்கும். குழந்தைகளுக்கு கதை சொல்லும் போது அவர்கள் தொணதொணத்துக் கொண்டிருந்தால் 'கதைக்கு கை கால் கிடையாது. அதனால சொல்றதக் கேளு' என்று அவர்களின் வாயை அடைக்கிற நம்முடைய நடைமுறை அனுபவத்தையே இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். எனவே இவ்வாறான புனைவு ரீதியான திரைப்படங்களில் தர்க்க ரீதியான சமாச்சாரங்களை அதிகம் எதிர்பார்க்க முடியாது; கூடாது. எனவே பார்வையாளன் சோழ, பாண்டியர் தொடர்பான வரலாற்றுப் பிழைகளை காண விழையாமல் இயக்குநர் காண்பித்த படியே இத்திரைப்படத்தை அணுகுவது இடையூறில்லாத காண்பனுபவத்திற்கு உதவி செய்யும்.
திரைக்கதை ஏன் சோழ, பாண்டிய பின்னணியில் சொல்லப்பட்டிருக்கிறது, அதை முழுமையானதொரு கற்பனை தேசமாக, மனிதர்களாக வடிவமைத்திருக்கலாமே என்ற கேள்வியை சில விமர்சனங்களில் வாசித்தேன். ஏற்கெனவே சொல்லியபடி இதையும் இயக்குநரின் சுதந்திரத்திற்காக அங்கீகாரமான நோக்கில் பார்க்க வேண்டும். முழுக்க முழுக்க கற்பனை தேசம் எனும் போது தமிழ் சினிமா பார்வையாளன் அதை அந்நியமாக உணர்ந்து காண்பனுபவத்திலிருந்து விலகிச் செல்ல நேரிடலாம். எனவே அதற்கான நம்பகத்தன்மையைத் தர, புனைவில் உண்மையான வரலாற்றின் தடங்களை இயக்குநர் பிணைக்க முயற்சித்திருக்கலாம்.
அய்யோ! கார்த்தி வீணடிக்கப்பட்டு விட்டாரே! இதற்காகவா அவரின் இத்தனை வருட உழைப்பு பயன்பட்டது! இந்த நேரத்தை இரண்டு மூன்று படங்களுக்கு அவர் உபயோகித்திருப்பாரே என்றொரு அங்கலாய்ப்பை ஆங்கில தேசிய நாளிதழ் விமர்சனமொன்றில் கண்டேன். ஒரு படைப்பின் பாத்திரத்தை நாயக பிம்பமாகவே பார்க்கும் வழக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் அபாயமிது. பொதுவாக மிகைப்படுத்தப்படும் நாயக பிம்பங்கள் மீது நமக்கொரு அசூயை இருக்கிறது. அதிலிருந்து நடிகர்கள் வெளிவர வேண்டும் என்று சொல்லி வருகிறோம். இவ்வாறான அங்கலாய்ப்புகள் மீண்டும் நடிகர்களை வழக்கமான சுழற்சிக்கே இட்டுச் செல்கின்றன.
தனுஷ் ஒரு நேர்காணலில், இத்திரைப்படத்தின் உருவாக்கத்தை ஆரம்பத்திலிருந்தே கவனித்துக் கொண்டிருப்பதாகவும், பங்கெடுத்திருப்பதாகவும், பார்த்திபனின் பாத்திரத்தில் தாம் நடிக்க விரும்பிதாகவும் கூறிய ஞாபகம். சோழ மன்னனாக உருவகிக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் தனுஷை கற்பனை செய்து பா¡க்கவே விபரீதமாயிருக்கிறது. ஒருவேளை சோழ மன்னர்களில் எவராவது தனுஷைப் போலவே கூட இருந்திருக்கலாம். ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் மாத்திரமல்ல, வெகுஜன மக்களே அந்த உருவத்தை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இம்சை அரசனாகிப் போயிருக்கும். ஏனேனில் நமக்கு 'வரலாறு முக்கியம் அமைச்சரே' என்ற வசனத்தில் உள்ள உண்மை தெரியும்.
()
இப்போது இந்தப்படத்தின் எதிர்மறையான விமர்சனங்களில் உள்ள அம்சங்களைக் கவனிப்போம்.
முழுக்க முழுக்க புனைவுச் சார்ந்த திரைப்படங்களில் பார்வையாளன் இயக்குநரிடம் தம்மை ஒப்படைத்து விட வேண்டும் என்று கூறியிருந்தேன் அல்லவா? ஆனால் செல்வராகவன் அதற்கான முழு நியாயத்தைச் செய்யவில்லை என்பதை நிச்சயம் ஒப்புக் கொள்ள வேண்டும். திரைக்கதையில் பல தொடர்ச்சியான பிழைகள் உள்ளன. என்னதான் புனைவு என்றாலும் புனைவிற்கான பிரத்யேக தர்க்கங்களின் அமைப்போடு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதில் அவ்வாறில்லை. தொல் பொருள் ஆராய்ச்சியில் ஏன் ஒரு அமைச்சருக்கு ஆர்வம், அதற்கான தனியார் படைக்கும் ஆயுதங்களுக்கும் எவ்வாறு அரசு அனுமதிக்கும், பழங்குடிகளைக் கொல்ல யார் அவர்களுக்கு அதிகாரம் தந்தது?, எப்படி அந்த பழங்குடிக்குழு செயற்கைக்கோள்களின் பார்வையிலிருந்து தப்பியது.. போன்ற அடிப்படையான பார்வையாளனின் இயல்பான சந்தேகங்களுக்கு போதுமான விளக்கம் படத்தில் சொல்லப்படவோ சித்தரிக்கப்படவோ இல்லை. பல விமர்சனங்களில் இவ்வாறான குறைகளை அலசி ஆராய்ந்து விட்டதால் மற்றவற்றைத் தவிர்க்கிறேன். சாதாரண திரைப்படங்களுக்கே முழுத் திரைக்கதையும் தெளிவாக திட்டமிடப்பட வேண்டும் எனும் போது இது போன்று fantasy திரைப்படங்களில் bounded script இல்லாமல் இறங்கவே கூடாது. எவ்வளவு தலையில் அடித்துக் கொண்டாலும் தமிழ்சினிமா இயக்குநர்களுக்கு இது புரிவதில்லை.
தயாரிப்பாளர் கட்டாயப்படுத்துகிறாரா, சரி ஒரு ஐட்டம் பாட்டை சொருகு..
திடீரென்று ஆண்ட்ரியாவும் ரீமாசென்னும் ஒருவரையொருவர் fucking. chick..fucking என்று திட்டிக் கொள்ளும் காட்சி படு செயற்கை. செல்வராகவன் தம்முடைய திரைப்படத்தில் Quentin Tarantino படத்தைப் போன்று எப்படியாவது ஒரு காட்சியை வைத்துவிட வேண்டும் என்று விரும்பியதின் விளைவாக இது நிகழ்ந்திருக்கலாம். கார்த்தி அந்த இரண்டு பெண்களுடன் அடிக்கும் லூட்டி, இன்றைக்கு திரையரங்கிற்கு பெரும்பான்மையாக வரும் இளைஞர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கிலேயே அமைக்கப்பட்டிருப்பதால் படத்தின் போக்கிற்கு இடையூறாக இருப்பது மட்டுமின்றி எரிச்சலையும் ஏற்படுத்துகின்றது. அதே போல் பாடல் காட்சிகள்... தமிழ் சினிமா திருந்தவே திருந்தாத இன்னொரு சமாச்சாரம். உயிர் போகக்கூடிய திகிலான சூழ்நிலையிலும் 'உன் மேல ஆசைதான்...' என்று எம்டிவி காட்சிப்பின்னணியில் பாடுவது தமிழ் சினிமாவில்தான் சாத்தியம். இந்த மாதிரியான புள்ளிகளிலிருந்து ஆங்கிலத் திரைப்படங்கள் விலகி நிற்பதால்தான் அவற்றின் நம்பகத்தன்மை அதிகமாக இருக்கிறது.
நான் சுருக்கமாகச் சொல்வது என்னவென்றால் (?!) தமிழ்ச்சினிமாவின் புத்தம் புதியதான முயற்சிகளை பார்வையாளர்கள் வரவேற்பதான மனநிலையை வளர்த்துக் கொள்வதோடு திறந்த மனத்தோடு அவற்றை அணுகும் வழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவைதான் தமிழ் சினிமாவை அடுத்தக் கட்ட தரத்திற்கு நகர்த்திச் செல்லும் என்று நான் தீர்மானமாகவே நம்புகிறேன்.
()
இப்போது இந்த இடுகையின் மிக முக்கியமான பகுதிக்கு வருகிறேன்.
ஒரு திரைப்படத்தைப் பார்க்காமலேயே அதன் மீதான விமர்சனங்களை மாத்திரம் வாசித்து அந்தத் திரைப்படத்தைப் பற்றி எழுத முடியுமா (அதாவது ஜல்லியடிக்க முடியுமா) என்றொரு விபரீதமான யோசனை எழுந்தது. அதன் விளைவே இந்தப் பதிவு. இனிமேல்தான் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். எனவே இதற்கான உண்மையான விமர்சனக் கட்டுரைக்காக காத்திருப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.:-)
இன்னொரு உப காரணமும் உண்டு. வலையுலகில் நான் விரும்பி வாசிக்கும் ஒரு பதிவரை 'இந்தப் படத்திற்கான விமர்சனத்தை எழுதுங்கள்' என்று வற்புறுத்தினேன். அவரோ
'உங்கள் சினிமா விமர்சனங்களில் என்னை தாக்கிய உணர்வின் வெளிப்பாடுகளுக்கான வார்த்தைகளை பார்க்கிறேன். ஒரே வார்த்தைகளை இருவர் பயன்படுத்தினால் அந்த வார்த்தைகளுக்கு ஏது மதிப்பு'என்று நழுவி விட்டார். எனவே அவரை பழிவாங்குவதற்கான நடவடிக்கையாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். :-)
செல்வராகவனைப் போன்று என்னுடைய இந்தமாதிரியான 'புதிய' முயற்சிகளுக்கும் தொடர்ந்து ஆதரவளிப்பீர்கள் என்கிற நம்பிக்கையோடு இப்போதைக்கு விடைபெறுகிறேன்.
suresh kannan