Showing posts with label நாடோடிகள். Show all posts
Showing posts with label நாடோடிகள். Show all posts

Tuesday, July 28, 2009

நாடோடிகள் - சில குறிப்புகள்


* திரைப்படம் துவங்கின பல நிமிடத்திற்கு 'இந்தப்படத்தையா தமிழ் கூறும் நல்லுலகம் இப்படிக் கொண்டாடியது' என்ற எண்ணம் எழுந்து கொண்டேயிருந்தது. ஒரளவிற்கு சுவாரசியமான திரைக்கதையும் நடிகர்களின் திறமையான யதார்த்த நடிப்பும் இல்லாதிருந்தால் இது ஒரு தோல்விப் படமாய் அமைந்திருக்கும் ஆபத்து இருந்தது. (தோல்வி என்பதை வணிக நோக்கில் சொல்லவில்லை).

* இளம் காதலர்கள் சிலபல தடைகளுக்குப் பிறகு ஓடிப்போய் இணைவதை சில்அவுட்டில் காண்பித்ததோடு முடித்துக் கொண்ட புரட்சி இயக்குநர்களின் திரைப்படங்களுக்கு மத்தியில் அப்படி ஓடின பிறகு அவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதான சமாச்சாரத்தை 'காதல்' திரைப்படம் உரையாடியது. அதைப் போலவே நாயகனின் கூடவே 'ஜோக்கடித்து' சுற்றித் திரியும் 'நாலு' நண்பர்கள் அவனை 'காதலியோடு' இணைத்து வைத்த பிறகு அவர்களின் கதி என்னவாகிறது என்பதைப் பற்றி எந்தவொரு திரைப்படமும் பேசாததை 'நாடோடிகள்' பேசுகிறது. ஆனால்...

* பதின்ம வயதுகளுக்கேயுரிய உணர்ச்சிப் பெருக்கிலும் துணிச்சலிலும் 'காதலிக்கிற' நண்பரையும் அவரது இணையையும் அவர்களின் காதலின் பின்புலத்தையும் உண்மையையும் ஆராயாமல் உயிரையும் பணயம் வைத்து இணைத்து வைத்துவிட்டு பின்னர் அவர்கள் கருத்து வேறுபாடினாலோ உடல்கவர்ச்சி தீர்ந்து போன பிறகோ பிரிய நினைக்கும் போது 'தங்களால்தான் அவர்கள் திருமணம் நிகழ்ந்தது' என்கிற ஒரே காரணத்திற்காக அவர்கள் இணைந்துதான் வாழ வேண்டும் என்று நினைப்பது அவர்களின் அந்தரங்கத்திலோ சுதந்திரத்திலோ தலையிடுகிற விஷயமாகிறது என்பதையும் இயக்குநர் யோசித்துப் பார்த்திருக்கலாம். இதற்காக அவர்களை சாகடிப்பதற்காக புறப்படுவதெல்லாம் ரொம்பவே ஓவர்.

* 'உன்னுடைய நண்பனின் நண்பன் உனக்கும் நண்பனே' என்பது மேலோட்டமாகப் பார்க்கும் போது சரியென்று தோன்றினாலும் ஆழமாக யோசித்துப் பார்க்கும் போது அபத்தமானது என்பது புரியும். முட்டுச் சந்தில் நின்று பேசித்தீர்ப்பதும் ஒன்றாக தண்ணியடிப்பதும்தான் நட்பு என்கிற புரிதல் இருப்பவர்கள் இதை மறுக்கக்கூடும். ஆனால் 'நட்பு' என்பதின் உண்மையான அர்த்தம் புரிந்தவர்களுக்கு இது நடைமுறையில் ஒவ்வாதது என்பதை உணர முடியும். நண்பனின் அறிமுகத்தினால் நேர்வதினாலேயே அவர் நமக்கும் உடனே நண்பராகி விட முடியாது. சிலபல இனிமையான, கசப்பான அனுபவங்களுக்குப் பிறகும் ஒத்த அலைவரிசை சிந்தனைகளினாலுமே அவர் நமக்கு நண்பராகக்கூடும்.

* இயக்குநர் சசிகுமார் ஏறக்குறைய 'சுப்ரமணியபுரம்' நடிப்பையே இதிலும் தந்திருக்கிறார். இதிலிருந்து அவர் உடனே வெளிவருவது நல்லது. ஆனால் இவரின் நடிப்பு உண்மையாக இருக்கிறது. இதுவே மற்ற அபத்த நடிகர்களிலிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது. 'கல்லூரி' பரணியின் நடிப்பு அதீதமாக இருந்தாலும் பல காட்சிகளில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். சசியின் மாமன் மகளாக வரும் அநன்யா துள்ளலான நடிப்பின் மூலமும் சட்டென்று மாறும் முகபாவங்களின் மூலமும் பார்வையாளர்களை உடனே கவர்கிறார். காது கேட்காதவராக இருந்தாலும் சிறப்பாக நடித்தார்' என்று சினிமா செய்திகளில் குறிப்பிடப்பட்ட அபிநயாவிற்கு (சசியின் தங்கை) இன்னும் அதிக வாய்ப்பளித்திருக்கலாம்.

* சமுத்திரக்கனி பாலசந்தரின் சீடர் என்பதாலேயோ என்னவோ, சிறிய கதாபாத்திரங்களைக் கூட அவர்களுக்கேயுரிய தனித்தன்மைகளுடன் உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக விஜய்யின் தந்தையாக வருபவரின் பாத்திரம் சிறப்பாக இருக்கிறது. அரசாங்க வேலையை கடவுளுக்கும் மேலாக நினைக்கும் சசியின் மாமா, இரண்டாவது மனைவியை திருப்தி செய்யும் பொருட்டு மகனை திட்டும் வயதான தந்தை, ஒரு வார்த்தை வசனம் கூட பேசாத அவர் மனைவி, "நீங்க சொன்னா சரி மாமா" எனும் அடிமை மருமகன்..போன்றவை காட்சிகளை சுவாரசியப்படுத்துகின்றன.

* எம்.பியின் மகன், தங்களின் காதல் பெண்ணின் அப்பாவால் பிரிக்கப்பட்டது என்பதை ஒரே ஒரு காட்சியின் மூலம் மிக சுருக்கமாக விளக்கியதற்கு இயக்குநரை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஆனால் பேரிளம் பெண்ணின் அயிட்டம் நம்பர் பாட்டு, காவல் நிலையத்தில் இருக்கும் சீரியஸான நிலையில் கூட நகைச்சுவையை புகுத்தி அதன் தீவிரத்தை நீர்க்கச் செய்தது, போன்றவைகளை அடுத்த படத்திலாவது தவிர்ப்பது நல்லது.

* நண்பனின் காதலியை கடத்துகிற பரப்பரப்பான காட்சிகளை (ஏன் கடத்த வேண்டும், அவளிடமே சொன்னால் பின்னால் வந்துவிட்டுப் போகிறாள்) இசையமைப்பாளரும் ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் கூட்டணி அமைத்து மிரட்டியிருக்கின்றனர்.

* படத்தின் தலைப்பு உள்ளடக்கத்திற்கு எவ்வாறு பொருந்துகிறது என்ற அற்ப கேள்வி எழுந்தாலும் கூட படத்தின் சுவாரசியமான உருவாக்கத்திற்காக பார்க்கலாம்.

* திரையரங்கில் கூட்டம் குறைவாகவே இருந்தாலும் சில சக பார்வையாளர்கள் வழக்கம் போல ஏற்படுத்திய அசெளகரியங்களை குறிப்பிடலாமென்று நினைத்தாலும் அது இணையத்தில் சிலருக்கு ஏற்படுத்தும் அலர்ஜியை கருத்தில் கொண்டு குறிப்பிடாமல் தவிர்க்கிறேன். :-)

suresh kannan