Friday, April 30, 2021

அலங்கார சமையலின் ஆபத்து

 

சில இல்லத்தரசிகள் ‘கேட்டரிங்’ வகுப்பு போன்ற அலங்கார கற்றல்களுக்கு செல்வதில் அனுகூலங்களை விடவும் ஆபத்துக்கள்தான் அதிகம் உண்டு.

என் நண்பரின் அனுபவம் இது.  (இப்படி அநாமதேயமாக எழுதுவது ஒரு சம்பிரதாயம்) அவருடைய  வீட்டம்மணி இது போன்ற சமையல் வகுப்புகளுக்கு செல்வதில் இருந்து அடிப்படையான உணவுகளைச் செய்வதை பெரிதும் விட்டு விட்டாராம்.

ஆரஞ்சு பழத்தின் தோலில் இருந்து பொரியல், வெங்காயத் தோல் ரசம் என்று நாம் வழக்கமாக குப்பையில் எறியும் அனைத்துப் பொருட்களையும் வைத்து ‘ரீசைக்கிள் மெனு’ தயாரித்து தொடர்ந்து கொடுமைப் படுத்தியதில் மனிதர், ‘ஆபிஸ் டூர்’ என்று ஒரு வாரம் எஸ்கேப். 

*

அதே ஆசாமியின் இன்னொரு பரிதாப கதை.

அந்த ஆசாமி அன்றைய காலையில் கம்பெனியின் முக்கியமான மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. கிளம்பத் தாமதம் ஆகி விட்டதால் பரபரத்துக் கொண்டிருந்தார். ‘டிபன் ஏதாவது இருக்கா?” என்று மனைவியிடம் அவசரமாக கேட்க, ‘ஓ.. இட்லி செஞ்சிருக்கேன்” என்று உடனே பதில் வந்தது.

ஆனால் பதில் வந்து அரை மணி நேரம் ஆகியும் மேஜைக்கு அந்த வஸ்து  வந்து சேரவில்லை. மனிதர் டென்ஷன் ஆகி விட்டார். செல்லும் வழியில் அவசரத்திற்கு எதையும் சாப்பிட வழியில்லை. மேலும் வெளியுணவு அவருக்கு ஒத்துக் கொள்ளாது.

பொறுமையை இழந்து சமையல் அறைக்குள்ளேயே பாய்ந்து விட்டார் மனிதருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

ஓர் அழகான வெள்ளை நிற தட்டின் மையத்தில் இரண்டு இட்டிலிகள் மிக நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தன. வைக்கப்பட்டு அரைமணி நேரம் ஆகியிருக்கும் போல. அதன் மீது அழகான டிசைனில் கேரட் துண்டுகள் பதிக்கப்பட்டிருந்தன.

மனைவி இன்னமும் எதையோ தேடிக் கொண்டிருக்க “என்னதான் தேடுறே?”  என்று கேட்டு அந்த அழகியல் சூழலில் கல்லைத் தூக்கிப் போட்டிருக்கிறார், இந்த அவசரக் குடுக்கை.  

“கொஞ்சம் இருங்க.. தட்டு ரெண்டு பக்கமும் கொத்தமல்லி இலையை வெச்சா பார்க்க ரொம்ப அழகா இருக்கும். நேத்து கிளாஸ்ல சொல்லிக் கொடுத்தாங்க” என்றார் மனைவி சாவசாசமாக.

“மண்ணாங்கட்டி.. மனுஷன் இங்க அவசரத்துல பறந்துட்டு இருக்கான்.. நீ வேற…நேரம் காலம் தெரியாம. சரி.. தொட்டுக்க ஏதாவது சட்னி இருக்கா? டைம் ஆச்சு” என்று கேட்டிருக்கிறார் இந்த அப்பாவி.“

“அச்சச்சோ.. அதை மறந்துட்டனே” என்று நிதானமாக பதில் வந்தது.

‘சரி.. சரி… அந்த இட்லியையாவது கொடு. பிட்டுப் போட்டுக்கிட்டு கெளம்பறேன்” என்று பரபரத்த கணவனை நோக்கி கையமர்த்திய மனைவி சொன்னதாவது:


“என்ன அவசரம்?! ஒரே நிமிஷம் பொறுங்க.. தட்டோட  என்னையும் சேர்த்து ஒரு செல்ஃபி எடுத்துட்டு தர்றேன். இன்ஸ்டால போடணும். எவ்ள அழகா இருக்குல்ல?”

 

suresh kannan

அஞ்சலி: கே.வி.ஆனந்த்


 
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கே.வி,ஆனந்த் மாரடைப்பால் இறந்து விட்டதாக அறிகிறேன். நமக்குப் பிடித்தமான பிரபலங்களின் மரணங்களை அறிய நேர்கிற அந்தக் கணங்களில் நாமும் உள்ளே ஒரு துளி இறந்து போகிறோம் என்று தோன்றுகிறது. சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

தொன்னூறுகளில் வெளிவந்த க்ரைம் நாவல்களை வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தவர்களுக்கு கே.வி. ஆனந்த் என்பவர் முன்பே பரிச்சயம் ஆனவர். ஆம். ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற எழுத்தாளர்கள் எழுதும் கிரைம் நாவல்களின் அட்டைப்படங்களுக்காக பிரத்யேகமான புகைப்படங்களை எடுத்தவர் ஆனந்த்.

முன்பெல்லாம் கிரைம் நாவல் என்றால் காமா சோமாவென்று ஏதோ ஒரு புகைப்படத்தை முகப்பில் அச்சிடுவதே வழக்கம். ஆனால் நாவலின் உள்ளடகத்திற்கென்று பிரத்யேக புகைப்படங்களை எடுத்து அச்சிடுவது என்பது ஆனந்தின் வருகைக்கு பிறகுதான் என்று நினைக்கிறேன். இதற்காக நிஜ மாடல்களை உபயோகித்து அவர்களின் முதுகில் கத்திக்குத்து இருப்பது போல் ஒப்பனை செய்து.. அதை வசீகரமான கோணத்தில் புகைப்படம் எடுத்து.. இதற்காக நிறைய மெனக்கெடுவார் ஆனந்த். இவரது அட்டைப்படங்களுக்காகவே நாவல்களை வாங்கியவர்கள் அதிகம். சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களும் ஆனந்த்தை விதம் விதமாக உற்சாகப்படுத்துவார்கள்.

இது தவிர முன்னணி வார இதழ்களிலும் பிரபலமான புகைப்படக்கலைஞராக ஆனந்த் இருந்தார்.

*

புகைப்படமும் சினிமாவிற்கான ஒளிப்பதிவும் மிக நெருக்கமான தொடர்புடையது. ஒளியின் ரகசியத்தை அறிந்து கொண்டால் போதும். எனவே சிறந்த புகைப்படக்காரராக இருந்த ஆனந்திற்கு சினிமாவிற்கான ஒளிப்பதிவாளராக முன்னகர்வது என்பது எளிதாகவே இருந்திருக்கும்.

இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவரான பி. சி. ஸ்ரீராமிடம் உதவியாளராகச் சேர்ந்த ஆனந்த், அங்கு மிகச்சிறந்த மாணாக்கனாக விளங்கினார். அதற்கு முன்பு ஜீவாவிடமும் சிறிது காலம் உதவியாளராக இருந்திருக்கிறார். தான் பிஸியாக இருந்த காரணத்தினால் தனக்கு வந்த வாய்ப்பை தனது முதன்மைச் சீடனுக்கு அளித்து மகிழ்ந்தார், பி. சி. ஸ்ரீராம்

ஆம். 1994-ல் வெளியான ‘தென்மாவின் கொம்பத்து’ என்கிற மலையாளத் திரைப்படம்தான் ஆனந்த் ஒளிப்பதிவு செய்த முதல் திரைப்படம்.

பின்னர் முதல்வன், பாய்ஸ் போன்ற திரைப்படங்களில் பணிபுரிந்து மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர் என்கிற தகுதியை அடைந்து விட்டாலும் அங்கேயே தேங்கி விடாமல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார்.

*

கே.வி.ஆனந்த் முதலில் இயக்கிய திரைப்படமான ‘கனா கண்டேன்’ 2005-ல் வெளியாகியது. இன்றைக்குப் பார்த்தாலும் வசீகரிக்கக்கூடிய புத்திசாலித்தனமான திரைக்கதை. இன்றைக்கு மலையாளத்தில் பிரபல நாயகனாக இருக்கக்கூடிய பிருத்விராஜை ஒரு சுவாரசியமான வில்லனாக ‘கனா கண்டேனில்’ உபயோகித்திருப்பார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ‘காப்பான்’ தவிர, கே.வி. ஆனந்தின் அனைத்துத் திரைப்படங்களும் சுபா என்கிற எழுத்தாளர்களோடு கூட்டணி சேர்ந்திருந்தது. சுபாவின் எழுத்தும் ஆனந்தின் இயக்கமும் இணைந்து ஒரு வசீகரமான கலவையாக அமைந்தது. போலவே இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், எடிட்டர் ஆன்டனி போன்ற திறமைசாலிகளோடு தொடர்ந்து கூட்டணி அமைத்துக் கொண்டார்.

கே.வி.ஆனந்தின் அனைத்துத் திரைப்படங்களுமே வெகுசனத் திரைப்படங்கள்தான். ஆனால் வழக்கமான மசாலாவில் மாட்டிக் கொள்ளாமல் தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் பல புதிய விஷயங்களை தொடர்ந்து முயன்று கொண்டேயிருப்பார். ‘அநேகன்’ இதற்கொரு நல்ல உதாரணம்.

ஆனந்த் தனது திரைப்படங்களுக்கு தலைப்பைத் தேர்ந்தெடுப்பதே அத்தனை அழகாக இருக்கும். ‘அயன்’, ‘கோ’ ‘மாற்றான்’ என்று புழக்கத்தில் இல்லாத தமிழ்ப்பெயர்களை சூட்டுவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

தானே சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்தும் தான் இயக்கிய திரைப்படங்களுக்கு இதர ஒளிப்பதிவாளர்களை அமர்த்தி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

தமிழ் சினிமாவின் சிறந்த வெகுசன இயக்குநர்களில் ஒருவராக இருந்த கே.வி.ஆனந்தின் மறைவிற்கு என் மனமார்ந்த அஞ்சலி.

suresh kannan

Thursday, April 29, 2021

ஓர் உன்னதமான சிறுகதை - பா.திருச்செந்தாழை


 

சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றாக இதைச் சொல்வேன்.

(கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கி வாசிக்கவும்)

விலாஸம்

 

ஜெயமோகனின் தளத்தின் வழியாகவே இந்தச் சிறுகதையை வந்து அடைந்தேன். இனி பா.திருச்செந்தாழையின் இதர சிறுகதைகளையும் தேடி வாசித்தேயாக வேண்டும் என்கிற உத்வேகத்தைத் தந்து விட்டது.

*

இனி கதையைப் பற்றிய என் கருத்துக்கள்:



கால மாற்றங்களில் பேரரசுகளே கவிழ்ந்து வேறு புதிய அரசுகள் அதிலிருந்து முளைக்கும் போது தனி மனிதர்களும் அவர்களின் சிறிய சாம்ராஜ்யங்களும் எம்மாத்திரம்?

ஒரு புதிய முதலாளி, நொடிந்து கொண்டிருக்கும் தன் பழைய முதலாளியைச் சந்திக்கச் செல்வதுதான் இந்தக் கதையின் மையம். இது ஒருவகையான சீண்டல். தன்னுடைய மகத்தான வளர்ச்சியை பழைய முதலாளிக்கு மீண்டும் நினைவுப்படுத்தும் ஒரு விளையாட்டு. ஏனெனில் புதிய முதலாளி அத்தகைய அவமதிப்புகளையும் சவால்களையும் கடந்துதான் இந்த உயரத்திற்கு வந்திருக்கிறார். எனவே இதுவொரு மெல்லிய பழிவாங்கல். தன்னுடைய விழுப்புண்களை தன்னிச்சையாக தடவிப் பார்க்கும் மீறவியலாத உணர்வு.


ஆனால் இதை அவரால் மனநிறைவுடன் செய்ய முடிந்ததா என்பதில்தான் இந்தச் சிறுகதை உச்சம் பெறுகிறது.

*

பொதுவாகவே திறமையான வேலைக்காரர்களை நுண்ணுணர்வு கொண்ட முதலாளிகள் உள்ளுக்குள் அஞ்சுவார்கள். இன்னொரு பக்கம் அவனது திறமையை உள்ளே வியந்து கொண்டே இருப்பார்கள்.


‘இவன் ஒரு நாள் இங்கிருந்து வெளியேறி தனக்குப் போட்டியாகவோ அல்லது தன்னை மீறியோ செல்வான்’ என்கிற உணர்வும் அச்சமும் அவர்களுக்கு இருந்தபடியே இருக்கும். எனவே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மட்டம் தட்டியபடியே இருப்பார்கள்.  அவனது தன்னம்பிக்கையை குலைத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அவனது ‘வளமான’ வருங்காலம் குறித்த ஆசையையும் கூடவே காட்டியபடி இருப்பார்கள். குதிரைக்கு முன்னால் காரட் கட்டி தொங்க விட்டு வேகமாக ஓட வைக்கும் உத்தியைப் போல.

போலவே திறமையான தொழிலாளியும் ஒரு நல்ல முதலாளியை சரியாக அடையாளங்கண்டு கொள்வான். அவரது திறமையை உள்ளுக்குள் பிரமிப்பான். போலிப் பணிவுகளைக் கூட்டுவான். அங்கிருந்து பலவற்றைக் கற்றுக் கொள்ள முயல்வான். ஆனால் இன்னொரு பக்கம் தன்னுடைய உழைப்பின் பலனெல்லாம் முதலாளிக்குச் செல்கிறதே என்கிற மனஉளைச்சலும் ஏக்கமும் அவனுக்குள் இருந்தபடியே இருக்கும். இதுவே அவனது வருங்காலத் திட்டங்களுக்கு அடித்தளமாக இருக்கும்.

ஆக.. முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இருப்பது ஒருவகையான love & hate உறவு. எத்தனை காலம் ஆனாலும் இடம் மாறினாலும் இந்த விளையாட்டை அவர்கள் ஆடியபடியேதான் இருப்பார்கள்.

*

ஒரு திறமையான தொழிலாளியை தந்திரம் மிக்க முதலாளிகள் மட்டம் தட்டி தொடர்ந்து அடிமையாக்குவது என்பது எல்லா இடத்திலும் இல்லை. சில சமூகங்களில் – குறிப்பாக நாடார்.. மார்வாரி போன்வற்றில் – திறமையான தொழிலாளிகளைத் தட்டிக் கொடுத்து வளர்த்து ஒரு கட்டத்தில் அவன் சொந்தமாக இயங்குவதற்கான பாதையையும் அமைத்துத் தருவார்கள். ஆனால் அந்த தொழிலாளி சொந்த சாதியைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான தகுதியாக இருக்கும்.

*

கரைந்து கொண்டிருக்கும் பழைய முதலாளியின் பெருமிதங்கள், உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் புது முதலாளியின் உளவியல் ஆட்டம் என்று இந்தச் சிறுகதை பல்வேறு நுட்பமான விவரணைகளைக் கொண்டுள்ளது.

… யாவாரம்னா போர்தான. காலென்ன தலை என்ன? பள்ளத்துக்குப் பக்கத்துலதான மேடுன்னு ஒன்னு உருவாகுது” என்றார். குழந்தையான சிரிப்பின் வெளிச்சம் சின்னச் சின்னச் சுடர்களாய் குறைந்துகொண்டிருக்க, “நல்ல தொழிலாளிக்கு திறமை எவ்வளவு முக்கியமோ அதை அவனோட மூளைக்குச் செல்லவிடாம தடுக்கிற சூட்சுமம் முதலாளிக்கு முக்கியம்னு அப்பா சொல்வாரு.”…

என்பது போன்ற அபாரமான வரிகள் இந்தச் சிறுகதையின் வாசிப்பனுபவத்தை உன்னதமாக்குகின்றன. சிறுகதை முடியும் இடம் அற்புதமானது. புதிய முதலாளி எத்தனைதான் உயர்ந்தாலும் அவனுக்குள் இருக்கும் ஆதாரமான தொழிலாளி சாகவே மாட்டான் என்பது கச்சிதமாக உணர்த்தப்படுகிறது.

இதைப் போலவே பழைய முதலாளியின் முன் தன் செல்வாக்கைக் காட்டி சீண்டலைச் செய்து முடித்து விட்டாலும் அவரின் வீழ்ச்சி புதிய முதலாளிக்குள் ஒரு நெருடலையும் இனம் புரியாத சோகத்தையும் எழுப்பிக் கொண்டேயிருக்கிறது. ஏனெனில் இந்த வட்டமும் என்றேனும் திரும்பலாம்.

மிக அபாரமான சிறுகதை. கட்டாயம் வாசித்துப் பாருங்கள். 


ஜெயமோகனின் பதிவு

 


suresh kannan

Wednesday, April 28, 2021

Irakal (1985) - பாவத்தின் சம்பளம்


 
 
சமீபத்தில் ஜோஜி என்கிற மலையாளத் திரைப்படம் பார்த்தேன். மகேஷிண்டே பிரதிகாரம், தொண்டிமுதலும் திரிக்ஷாட்சியும் போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கிய திலீஷ் போத்தனின் சமீபத்திய திரைப்படம்.

ஒரு முதியவரின் மரணத்திற்காக அவரது வீட்டிலுள்ள உறவினர்கள் வெவ்வேறு வெறுப்புகளுடன் காத்திருக்கும் மனத்தத்தளிப்புகளையும் உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் அவர்களின் மனவிகாரங்களையும் நுட்பமான முறையில் காட்சிப்படுத்தியிருந்தது ‘ஜோஜி. ஒளிப்பதிவு, பின்னணி இசை, குறிப்பாக ஃபகத் பாசிலின் நடிப்பு போன்ற விஷயங்கள் சிறப்பாக அமைந்திருந்தன.

இந்தச் சமயத்தில்தான் கே.ஜி.ஜார்ஜ் இயக்கிய ‘இரகள்’ படத்தை சில நண்பர்கள் கவனப்படுத்தினார்கள். பார்த்தேன். (யூட்யூபில் ஆங்கில சப்டைட்டிலுடன் கிடைக்கிறது) ஜோஜியை விடவும் பல மடங்கு உயர்ந்த படம் என்று ‘இரகள்’ திரைப்படத்தைச் சொல்லலாம். ஜார்ஜ் இதை எண்பத்தைந்தாம் வருடத்திலேயே இயக்கியிருக்கிறார் என்பது ஆச்சரியம் தருகிறது.

ஜோஜியைப் போலவே ‘இரகளும்’ ஜெயமோகன் எழுதிய ‘ரப்பர்’ என்கிற குறுநாவலை மெலிதாக நினைவுப்படுத்துகிறது.  பணக்கார முதியவர், அவரை உள்ளூற வெறுக்கும் இளைய மகன்கள், ரப்பர் தோட்டம் போன்ற சில பின்னணிகள் மட்டும் பொருந்திப் போகின்றன.

*

‘இரகள்’ திரைப்படத்தை மலையாளத்தின் முதல் ‘டார்க் மூவி’ என்கிறார்கள் இருக்கலாம். மனதின் இருண்மைகளை, அதன் சிக்கலான பக்கங்களை,  அகவிகாரங்களை அதிகம் மெனக்கிடாமல் இயல்பான காட்சியமைப்புகளைக் கொண்டு அதே சமயத்தில் மிக ஆழமாக பார்வையாளனுக்கு கடத்திய விதத்தை ஜார்ஜின் மேதைமையாக பார்க்கலாம்.

மாத்யூஸ் என்கிற ரப்பர் தோட்ட முதலாளிக்கு மூன்று மகன்கள். மூத்தவன் முரடன். தகப்பனைப் போலவே சட்ட விரோதமான வழிகளில் பணம் சம்பாதிக்கும் வெறியில் இருப்பவன். தகப்பன் எட்டடி பாய்ந்தால் இவன் பதினாறு அடி பாய்கிறான். தந்தைக்கு இதைக் கண்டு உள்ளூற பெருமை.

அடுத்த மகன் குடிகாரன். அவனுக்கு ரப்பர் தோட்ட சூழலில் வாழவே பிடிக்கவில்லை. மனைவியின் உபதேசப்படி அங்கிருந்து இடம் பெயர்ந்து நகரத்தில் வாழ நினைக்கிறான். ஆனால் முரட்டுத் தந்தை அதற்கு இடம் தருவதில்லை. ‘வெளியே போனா சல்லிக்காசு கிடையாது’ என்று மிரட்டுகிறார். வேறு வழியில்லாமல் அதற்குப் பணிந்திருக்கிறான்.

மூன்றாவது மகன்தான் இந்தத் திரைப்படத்தின் உத்தேசமான ஆன்டி ஹீரோ எனலாம். கல்லூரி மாணவன். ஆனால் படிப்பதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்கிறான். கொலைகள் உட்பட. ஆம். கொலைகள்.

கல்லூரி ராகிங்கில் சக மாணவனை கடுமையாக காயப்படுத்தி விட்டு அதைப் பற்றி வீட்டில் எதையுமே பேசாமல் முடங்கிக் கிடக்கிறான். காவல்துறை வந்து விசாரிக்கும் போது கூட அலட்சியமாக பதில் சொல்கிறான். வழக்கம் போல் காசையும் தன் செல்வாக்கையும் விசிறியடித்து வழக்கை மூடி மறைக்கிறார் தந்தை. (திலகன்).

சொல்ல மறந்து போனேன். மாத்யூஸிற்கு ஒரு மகளும் உண்டு. (ஸ்ரீவித்யா) Spoiled child-க்கிற்கு சரியான உதாரணம். வீட்டிற்குள் நுழையும் போதே ‘யப்பா..’ என்கிற ஒப்பாரியுடன் வரும் இவள், தன் கணவனைப் பற்றி கண்டபடி பொய் சொல்லி புலம்புவது வழக்கம்.

தன்னுடைய பிள்ளைகளின் கீழ்மைகளை கண்டிக்காமல் அதை ஊக்கப்படுத்துவது போலவே செயல்படுகிறார் மாத்யூஸ். தன்னிடமுள்ள பணம், செல்வாக்கு, அதிகாரம் போன்றவற்றைக் கொண்டு எதையும் கீழே போட்டு மிதிக்க முடியும் என்கிற அகங்காரத்தைக் கொண்டிருக்கிறார்.

மாத்யூஸின் மனைவி ஓர் அப்பிராணி. கடவுள் பக்தி மிக்கவர். ‘நீங்க செய்யறது ஒண்ணும் நல்லால்ல’ என்று கணவருக்கு எதிராக சற்று முனகி பிறகு அவருக்கு அஞ்சி அடங்கிப் போவதோடு அவரது இருப்பு முடங்கிப் போகிறது. இந்த நல்ல பெண்மணியின் சகோதரர் சர்ச்சில் பாதிரியாராக இருக்கிறார். (பரத் கோபி) மிதமிஞ்சிய செல்வமும் அதிகாரமும் இருக்கும் மிதப்பில் இந்தக் குடும்பம் உள்ளூற புரையோடுவதைக் கண்டு மனம் வருந்துகிறார் பாதிரியார். சிக்கலான நேரங்களில் வந்து மாத்யூஸிற்கு புத்தி சொல்கிறார். ஆனால் எவையும் இவர்கள் செவி மடுப்பதில்லை.

*

‘இரகள்’ என்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பொருள். பணம், அதிகாரம், புகழ் போன்வற்றைக் கொண்டிருந்தாலும் அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவரையொருவர் மனதார வெறுக்கிறார்கள். குறிப்பாக அதன் தலைமையின் மீது. ஆனால் அதை வெளிப்படுத்த அஞ்சுகிறார்கள். தன்னுடைய ஆளுமையின் கீழேதான் ஒட்டுமொத்த குடும்பமும் அடங்கியிருக்க வேண்டும் என்கிற கண்டிப்பை ஒவ்வொரு காட்சியிலும் நிலைநிறுத்துகிறார் மாத்யூஸ். (இந்தத் திரைப்படத்தை இந்திரா காந்தி – சஞ்சய் காந்தி என்கிற நோக்கிலும் சில விமர்சகர்கள் காண்கிறார்கள்).

மூன்றாம் மகனான பேபி மாத்யூஸ் மட்டுமே அங்கு கலகக்காரனாக இருக்கிறான். தனது எதிர்ப்புணர்ச்சியை துணிச்சலுடன் வெளிப்படுத்துகிறான். தனது தந்தை லாப வெறி கொண்டு பல்வேறு வணிக கீழ்மைகளில் ஈடுபதை அவன் மனதார வெறுக்கிறான். அந்தக் குடும்பத்தில் உள்ள போலித்தனமும் பாசாங்கும் அவனை பித்துப் பிடிக்க வைக்கிறது.

தன் கழுத்தில் தானே கயிற்றை மாட்டிக் கொண்டு தற்கொலை பாவனைகளை மேற்கொள்ளும் அவன் ஊசியால் விரலில் காயம் ஏற்படுத்திக் கொள்வது உள்ளிட்ட சுயவதைகளையும் மேற்கொள்கிறான். ஒரு கட்டத்தில் இவனது மனப்பித்து பெருகி இவனை ஒரு சீரியல் கில்லர் ஆக்குகிறது.

கணவனிடம் சண்டையிட்டுக் கொண்டு அடிக்கடி பிறந்து வீட்டிற்கு வரும் இவனது சகோதரி, வேலைக்காரனுடன் கள்ள உறவு கொள்வதை ரகசியமாகப் பார்க்கும் பேபி, முதலில் வேலைக்காரனைக் கொல்கிறான். பிறகு தன்னுடைய காதலிக்கு நிச்சயம் செய்யப்படும் மாப்பிள்ளை, நெருங்கிய நண்பன் என்று இவனது மரண வேட்டை தொடர்ந்தபடியே இருக்கிறது. 
 
 

 
‘குடும்பம்தான் இருப்பதிலேயே ஆகப்பெரிய வன்முறை நிறுவனம்’ என்கிற நிர்வாண உண்மையை பல காட்சிகளில் நமக்கு உணர்த்தியபடியே இருக்கிறார் இயக்குநர் ஜார்ஜ். சமூகம் கூட பிறகுதான். முதலில் குடும்பம்தான் குற்றவாளிகளை உற்பத்தி செய்கிறது. குற்றத்தின் ஊற்றுக்கண்களாக இருக்கிறது. இதன் சிறந்த உதாரணம் பேபி.

பேபி எதிர்கொள்ளும் மனச்சிக்கல்களும், மனவிகாரங்களும், சுயஅவஸ்தைகளும், உயிர்களை வேட்டையாடும் வேட்கையும் மிக நுட்பமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

பல்வேறு பாவங்களின் மூலம் அந்தக் குடும்பம் சேர்க்கும் செல்வம்தான் பேபியின் தலையில் வந்து விடிகிறது எனலாம். அவன் கொலைகளைச் செய்யும் ஆபத்தான பேர்வழியாக இருந்தாலும் இன்னொரு நோக்கில் அனுதாபத்துக்குரியவனாகவே தெரிகிறான்.

தனது தந்தை மேத்யூஸ் அதிகாரச் செருக்கில் முழங்கும் போதெல்லாம் பேபிக்கு மனம் கூசுகிறது. மற்ற எல்லோரையும் விட அதிகமாக அவரை உள்ளூற வெறுக்கிறான். அந்த அலைக்கழிப்பே அவனை கொலைகாரனாக்குகிறது. இதர சமயங்களில் தனது தாத்தாவை பாசத்துடன் போஷிக்கும் நல்ல பேரனாகவே இருக்கிறான். இது சார்ந்த காட்சிகளும் வருகின்றன.

அந்தக் குடும்பம் செய்யும் பாவமானது எப்படி அடுத்தடுத்த பரிணாமங்களில் வளர்கிறது என்பது ஒரு காட்சியில் நுட்பமாக சொல்லப்படுகிறது. அந்த வீட்டின் மூலையில் மரணப்படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் மாத்யூஸின் தந்தை ‘மாதாவே.. மாதாவே’ என்று பெரும்பாலான நேரங்களில் முனகியபடியே இருக்கிறார்.

அவர் ஒருமுறை பேபியை அழைத்து பேசும் போது சொல்கிறார். “நான் இங்க இருக்க காட்டை அழிச்சிருக்கேன். ஆனா மிருகங்களை கொன்னதில்லை. ஆனா உங்கப்பன் எல்லா மிருகத்தையும் சாகடிச்சிருக்கான்”

அடிப்படை உணவு உற்பத்திக்கான விவசாயம் என்பது மெல்ல மெல்ல குறைந்து மிகையான லாபம் சம்பாதிக்க உதவும் ரப்பர் போன்ற பணப்பயிர்கள் பெருகி நம் மண்ணையும் விவசாயத்தையும் எப்படி சூறையாடுகிறது என்பது நேரடியாக அல்லாமல் பல காட்சிகளில் உணர்த்தப்படுகிறது. 



இந்தக் குடும்பத்தின் ஆணவ மிக்க தலைவராக திலகன் அற்புதமாக நடித்திருக்கிறார். சந்தனக்கலர் வேட்டி ஜிப்பாவும், தங்க பிரேம் கண்ணாடியும் கையில் ஒரு சூட்கேஸூமாக பெரும்பாலான காட்சிகளில் தோன்றும் திலகன், உலகத்திலுள்ள எதையும் வாங்கி விடும் தன்னம்பிக்கையுடன் பேசும் காட்சிகள் சிறப்பாக பதிவாகியுள்ளன.

கல்லூரி மாணவன் பேபியாக கே.பி.கணேஷ்குமார் நடித்துள்ளார். இவருக்கு இதுதான் முதல் படம். ஆனால் அதன் சுவடே தெரியாமல் இவரின் பங்களிப்பு நிறைவாக அமைந்துள்ளது. உறைந்து போன மென்சோக முகபாவத்துடன் இவர் செய்யும் காரியங்களை திகிலைக் கிளப்புகின்றன.

மாத்யூஸின் கணக்குப் பிள்ளையாக வரும் இன்னொசென்ட், ஒரு விசுவாசமான வேலைக்காரனை துல்லியமாக பிரதிபலித்துள்ளார். தொழிலாளர்கள் பிரச்சினை உள்பட பலவற்றை எப்படி அணுக வேண்டும் என்பதை அறிந்தவராக உள்ளார் இன்னொசென்ட்.  ஆனால் ஒரு நல்ல முதலாளியின் லட்சணமாக, கணக்குப்பிள்ளையை எங்கே நிறுத்த வேண்டும் என்பது திலகனுக்குத் தெரிந்திருக்கிறது.

பணக்காரக் குடும்பத்தின் செல்லத்தால் சீரழிந்த ஒரு பெண்ணை தத்ரூபமாக சித்தரித்துள்ளார் ஸ்ரீவித்யா. தமிழ்த் திரைப்படங்களில் நாம் காணக்கூடிய ‘குடும்ப குத்துவிளக்கு’ வித்யா இல்லை. இவர் வேறு. சற்று வில்லங்கமான பாத்திரத்தை துணிச்சலாக ஏற்றுள்ளார். வீட்டுக்குள் நுழையும் போது ‘யப்பே’ என்று புலம்பியபடி கணவரைப் பற்றிய புகார்களை அடுக்கும் காட்சி துவங்கி வீட்டிற்குள் நுழைந்து உணவுப் பதார்த்தங்களை தின்று தீர்ப்பது வரை பல காட்சிகளில் இவரது நடிப்பு சுவாரசியமாக அமைந்துள்ளது.

ஸ்ரீவித்யாவின் கணவராக நெடுமுடிவேணு சில காட்சிகளில் வந்து போகிறார். சொற்ப காட்சிகளில் வந்தாலும் ஓர் அடங்காப்பிடாரியை மனைவியாக கட்டிக் கொண்ட துயரத்தை சிறப்பாக காட்டி விடுகிறார். மாமனரால் அடித்து விரட்டப்பட்டு இவர் கலங்கியபடி வீட்டை விட்டு வெளியே வரும் பரிதாப காட்சியானது நெடுநாள் மனதில் நிற்கும். (தங்கர் பச்சான் இயக்கத்தில் சேரன் நடித்து வெளியான ‘சொல்ல மறந்த கதை’ திரைப்படத்தின் காட்சியும் கூடவே நினைவிற்கு வந்து போனது).

இரண்டாவது மகனாக சுகுமாரன் நடித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளரும் இவரே. பேபி மாத்யூஸை காதலிக்கும் பெண்ணாக ராதா சில காட்சிகளில் வந்து போகிறார். சிறு சிறு பாத்திரங்களையும் எப்படி அவசியத்திற்கேற்ப உபயோகிக்க வேண்டும் என்பது இயக்குநர் ஜார்ஜிற்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.

சிதறிக் கொண்டிருக்கும் மனதின் சிறுசிறு துண்டுகளை மிக கவனமாகப் பொறுக்கி காட்சியாக்குகிறார் ஜார்ஜ்.

திலகனின் குடும்பம் செல்வத்திலும் செல்வாக்கிலும் மிதமிஞ்சிய அளவைக் கொண்டிருந்தாலும் அந்தக் குடும்பத்தில் ஒருவருமே நிம்மதியாக இல்லை. பணத்தை ஈட்டுவதே வாழ்க்கையின் வெற்றி என்கிற மிதப்பிலும் ஆவணத்திலும் இறுமாந்திருக்கும் திலகனும் கடைசியில் ஓய்ந்து விடுகிறார். ‘பாதிக்கப்பட்டவர்கள்’ என்கிற வார்த்தையுடன் படம் நிறைகிறது.

‘வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி.. பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேருமடி’ என்கிற பாடல் வரிதான் இந்தத் திரைப்படம் முழுக்க எனக்குள் ஓடிக் கொண்டேயிருந்தது. பல பேர்களின் வாழ்க்கையை அழித்து கட்டப்படும் மாளிகையானது வெளியில் இருந்து பார்க்க பளபளப்பாகவும் பிரம்மாண்டாகவும் இருந்தாலும் அது உள்ளுக்குள் மெல்ல மெல்ல அழுகி புரையோடிக் கொண்டிருக்கும் யதார்த்தத்தை ஜார்ஜ் மிக திறமையாகச் சித்தரித்திருக்கிறார்.

அதுதான் இந்தத் திரைப்படம் சொல்ல வரும் நீதியா என்பது எனக்குத் தெரியாது. நான் அப்படித்தான் எடுத்துக் கொண்டேன்.

தனது சகோதரனான சர்ச் பாதிரியாரிடம், திலகனின் மனைவி துயரத்துடன் புலம்புகிறார். ‘தெய்வம் ஏன் எங்களுக்கு இத்தனை சோதனைகளைத் தருகிறது?”

அதற்கு பாதிரியார் சொல்லும் பதில்: “தெய்வம் எந்தச் சோதனையையும் தருவதில்லை. அனைத்துமே மனிதர்கள் உருவாக்கிக் கொள்வதுதான்”.

suresh kannan


ஓடும் ரயிலில் ஒரு நிற்காத வம்பு

 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மூன்றாவது நிறுத்தத்திற்கு முன்பாக ஏறினேன். ஓர் இருக்கை காலியாக இருந்தது. பக்கத்தில் ஒரு சிறுவன். எதிர் இருக்கையிலிருந்த சிறுமி அந்தக் காலி இருக்கையின் மேல் கால் வைத்திருந்தது. வெயில் தந்த எரிச்சலில் 'எடும்மா' என்றேன் மென்அதட்டலாக. என்னை ஒரு மைக்ரோ செகண்ட் வெறுப்புடன் பார்த்தது.

என்ன இருந்தாலும் சிறுமிதானே? ரயிலில் வரும் காண்டாமிருகங்களே ஷூக்காலை தூக்கி இருக்கையில் பந்தாவாக வைத்துக் கொண்டு வரும் போது சிறுமிக்கு என்ன தெரியும் என்று நினைத்துக் கொண்டு ஒரு வலுக்கட்டாயமான புன்னகையுடன் மூலம் சிறுமியைச் சமாதானப்டுத்த முயன்றேன். இருந்தாலும் அம்மணிக்கு கோபம் போகவில்லை. என்னைக் குறுகுறுவென்று பார்த்தவாறிருந்தது. 
 
என்னுடைய மகளின் நினைவு வந்து போயிற்று. அவளும் அப்படித்தான். வழியில் இப்படி அவளிடம் யாராவது குறும்பு செய்தால் அங்கு அடக்கி வாசித்து வீட்டிற்கு வந்து சம்பந்தப்பட்டவர்களைப் பற்றி புலம்பித் திட்டி தீர்த்து விடுவாள். எனவே எனக்கு உள்ளுற சிரிப்பு வந்தது.

எழுத வந்தது இதுவல்ல. சிறுமியின் பக்கத்திலிருந்த அவர்களின் தாய். யாரிடமோ கைபேசியில் பேசிக் கொண்டே...... இருந்தார். நிச்சயம் குடும்ப அரசியல். அது சார்ந்த வம்பு. தொலைக்காட்சி சீரியல்களில் கேட்டுப்பழகிய தொனியில் யாரிடமோ சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தார்.

என் பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுவன் அவரின் மகன் போலும். சற்று எரிச்சலுடன் தாயின் நீண்ட தொலைபேசி உரையாடலை பார்த்துக் கொண்டேயிருந்தான். பின்பு மெல்ல "பேசின் பிரிட்ஜ் வரப் போகுதும்மா" என்றான். தாயின் கவனத்தைக் கலைப்பதே அவனுடைய நோக்கம் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. பேசின் பிரிட்ஜ் நிறுத்தம் வர குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்பது தினமும் போகும் அனுபவஸ்தர்களுக்கு தெரியும்.
 
சிறுவனின் எச்சரிக்கையைக் கேட்டதும் தாயும் சற்று பதட்டத்துடன் 'பையை எடுத்து வெச்சுக்கோ' என்பது போல் சைகை காட்டினார். அப்போதும் உரையாடலை நிறுத்தவில்லை. 

ஒருவழியாக பேசின்பிரிட்ஜ் வந்தது. பையன் பையை எல்லாம் தூக்கப் போக தாயாரோ 'இரு. இரு.. ' என்று சைகை காட்டி உரையாடலைத் தொடர்ந்தார்.
 
"ஒண்ணு வூட்டை எழுதி வை.. இல்லைன்னா.. 20 லட்சம் கொடுன்னு சொல்றாங்களாம்.. அவங்க நாத்திதான் சொன்னா.... என்ன அநியாயம் பாரேன்.."

இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு சற்று பதைபதைப்பு எழுந்தது. ஒருவேளை பேசின் பிரிட்ஜில் இறங்க வேண்டிய அவர்கள், அம்மணியின் உரையாடல் சுவாரசியத்தில் தவற விட்டார்களோ என்று தோன்றியது.  எச்சரிக்கலாமா என்று நினைத்தேன். ஆனால் அப்படியில்லை. அவர்கள் சென்ட்ரலில்தான் இறங்க வேண்டும் போல. தாயாரின் சாவகாசமான உடல்மொழியில் இருந்து அப்படி தெரிந்தது. எனக்கும் சற்று நிம்மதி.

தாயார் எப்போது  உரையாடலை முடிப்பாரோ என்று சிறுவன் பொறுமையிழந்து பார்த்துக் கொண்டேயிருந்தான். பொறுப்புள்ள சிறுவன்தான் போல. பைகளை தயாராக கையில் வைத்திருந்தான். அவனின் பொறுமையின்மை எனக்குள்ளும் பரவி விட்டதுதான் ஆச்சரியம். அம்மணியின்  உரையாடல் அந்த லட்சணத்திற்கு நீண்டது.

சிறுமிக்கு இந்தப் பிரச்சினை எதுவுமில்லை. அது பாட்டுக்கு ஜன்னலின் வெளியே பராக்கு பார்த்தபடி அவளின் பிரத்யேக உலகத்தில் ஆழ்ந்திருந்தது. சமயத்தில் என்னை நோக்கி ஒரு குறுகுறு. நான் புன்னகையை மறைத்து அவளைக் கவனிக்காமலிருக்க சிரமப்பட்டேன்.

சிறுவனின் பொறுமையின்மையையும் தாயின் நீண்ட வம்பு உரையாடலையும் மாற்றி மாற்றி பார்க்க எனக்கே சுவாரசியமாகத்தான் இருந்தது. சமயங்களில் அந்த தாயாரின் முகத்தையும் சற்று குறும்போடு பார்த்தேன். அப்பவாவது உரையாடலை முடிப்பாரோ என்கிற நப்பாசையோடு. எனக்கு தொடர்பில்லாததுதான். இருந்தாலும் சிறுவனுக்காக இதைச் செய்ய வேண்டும் என்று தோன்றிற்று. ம்..ஹூம்.. அவர் பாட்டுக்கு கைபேசி உரையாடலில் சுவாரசியமாக இருந்தார்.

ஒருவழியாக சென்ட்ரல் நிறுத்தம் நெருங்கியது. சிறுவனும் சிறுமியும் ஏறக்குறைய எழுந்து நின்று விட்டார்கள். அப்போதும் உரையாடலைத் துண்டிக்க மனமின்றி விடைபெற்றுக் கொண்டு அந்த அம்மணி சொன்ன கடைசி வாக்கியம்தான் என் வாயிலிருந்து புன்னகையை வெடிக்க வைத்து விட்டது.  

"சென்ட்ரல் வந்துடுச்சுக்கா.. எறங்கப் போறேன். சரியா பேச முடில. கீழ இறங்கிட்டு திரும்பவும் போன் போடறேன்”

எதே!

suresh kannan

Monday, April 05, 2021

ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது- பொருத்தமா அல்லது வருத்தமா?!

 

 

இந்தியச் சினிமாவின் வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்தவர்களுக்கு வழங்கப்படுவது ‘தாதாசாகேப் பால்கே விருது’, இந்தியச் சினிமாவின் மிக உயரிய விருதான இது, 2019-ம் ஆண்டிற்காக ரஜினிகாந்த்திற்கு இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலிருந்து இதற்கு முன் இந்த விருதைப் பெற்றவர்கள் சிவாஜி கணேசன் மற்றும் கே.பாலச்சந்தர். ஒருவகையில் எல்.வி.பிரசாத்தையும் இந்த வரிசையில் இணைத்துக் கொள்ளலாம்.


முதலில் ரஜினிகாந்த்திற்கு நமது வாழ்த்துகளைத் தெரிவித்து விடுவோம்.

ரஜினிகாந்த்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த உயரிய விருது குறித்து சராசரியான சினிமா ரசிகர்கள், குறிப்பாக ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியை அடைவார்கள் என்பது எதிர்பார்க்கக்கூடியதே. ஆனால் சினிமா மீது ஆர்வமும் அக்கறையும் உடையவர்கள் அத்தனை மகிழ்ச்சி கொள்வார்களா என்பது சந்தேகமே. மகிழ்ச்சியோடு நெருடல்களையும் இந்த அறிவிப்பு சினிமா ஆர்வலர்களுக்கிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

*

முதலில் நல்ல விஷயங்களைப் பார்த்து விடலாம். ஒருவகையில் ரஜினிகாந்த் அடைந்திருக்கும் இந்த அங்கீகாரம் வரவேற்கத்தக்கது. முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடியது.

ஒரு காலக்கட்டத்தில் சிவப்பாகவும் அழகாகவும் இருப்பவர்கள்தான் சினிமாவில் நாயகர்களாக ஜொலிக்க முடியும் என்கிற எழுதப்படாத விதி இருந்தது. தியாகராஜ பாகவதர் முதல் கமல்ஹாசன் இதுதான் வழக்கம். அல்லது சிவாஜி கணேசனைப் போல அசாதாரணமான நடிப்புத் திறமையுள்ளவர்கள்தான் இந்தத் தடையை தாண்டி வர முடியும்.

இந்த நெடுங்கால மரபையும் தடையையும் உடைத்துக் கொண்டு வந்தவர் ரஜினி. கருப்பு நிறம், எளிமையான சராசரி தோற்றம், பிழையான தமிழ் உச்சரிப்பு, சுமாரான நடிப்பு போன்றவைதான் ரஜினியின் துவக்க கால அடையாளங்களாக இருந்தன. ஆனால் இவைகளைத் தன்னுடைய தனித்தன்மையான உடல்மொழியால், ஸ்டைலால் தாண்டி வந்தார் ரஜினி. ஏதோ பாலச்சந்தரின் கண்ணில் பட்ட அதிர்ஷ்டம் என்று அவரது வளர்ச்சியை சுருக்கிப் பார்க்க முடியாத அளவிற்கு ஒரு காலக்கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்தார்.

பிழையான உச்சரிப்பு, வேகமான நடை, அசைவு… என்று எவையெல்லாம் துவக்க காலத்தில் அவரது பலவீனங்களாகவும் கேலியாகவும் பார்க்கப்பட்டதோ அதுவே பிற்காலத்தில் அவரது பலமாகவும் பிரத்யேகமான அடையாளமாகவும் மாறிப் போனது. அவரது ஸ்டைல் பாணியை அவர் செய்தால் மட்டுமே அது எடுபடும். வேறு எவராலும் நகல் எடுக்க முடியாத பாணி அது.

தன்னுடைய கடுமையான உழைப்பாலும், வித்தியாசமான உடல்மொழி அசைவுகளாலும் துள்ளலான நடிப்பாலும் பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்து ‘சூப்பர் ஸ்டார்’ என்னும் உயரிய சிம்மாசனத்தில் நெடுங்காலமாக அமர்ந்திருக்கிறார் ரஜினி. ‘அவருக்குப் பின் நான்தான்’ என்று வேறு சில நடிகர்கள் குரல் கொடுத்தாலும் அல்லது அந்த அந்தஸ்திற்கு உள்ளூற ஆசைப்பட்டாலும் இன்னமும் கூட அந்த நாற்காலி அவருடையதுதான். ‘சூப்பர் ஸ்டார்’ என்றால் அது ரஜினியை மட்டுமே குறிக்கக்கூடியது என்பது இன்றைய சின்னக்குழந்தைக்கு கூட தெரியும். (ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன். அதற்காக வீட்டில் இருக்கும் கைக்குழந்தை கிட்ட போய் கேட்டு இம்சை பண்ணாதீங்க).

*

‘ஒரு புலி வளப்பமாக இருந்தால் அது இருக்கும் ஒட்டுமொத்த காடே வளமாக இருக்கிறது என்று பொருள்’ என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். புலி புஷ்டியாக இருக்கிறது என்றால் அது நிறைய மான்களை வேட்டையாடி உண்டு கொழுத்திருக்கிறது என்று பொருள். அங்கு நிறைய மான்கள் இருக்கிறது என்றால் அவை மேய்வதற்கான புற்களின் வளர்ச்சி அந்த இடத்தில் நன்றாக இருக்கிறதென்று பொருள். எனில் அங்கு நிலவளம் அபரிதமாக இருக்கிறதென்று பொருள்.

இதையே எந்தவொரு துறைக்கும் பொருத்திப் பார்க்கலாம். முன்னணி நடிகர்களின் மசாலா திரைப்படங்கள் ஒரே மாதிரியான பாணியில் அமைந்து சலிப்பூட்டுகிறது என்கிற விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் முன்னணி நடிகர்களின் வணிக மதிப்பு உச்சத்தில் பறக்க பறக்கத்தான் கூடவே சினிமாத் துறை சார்ந்த அனைத்துப் பிரிவுகளும் வளர்ச்சி பெற முடியும். உயிர்வாழ முடியும்.

ஓர் உதாரணத்திற்கு சொன்னால், ஒரு திரையரங்கில் குறிப்பிட்ட காட்சியில் ஒரு முன்னணி நடிகரின் திரைப்படம் ஹவுஸ்புல் ஆகிறது என்றால் அங்கு கேன்டீன் வைத்திருப்பவர், டீக்கடைக்காரர் உள்பட பலர் மகிழ்ச்சியடைவார்கள். அந்த லாபம் அவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக அமையும். இது ஒரு சிறிய உதாரணம்தான். இப்படி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் சினிமாத்துறையை நம்பியிருக்கின்றன.

இந்த விஷயத்தை ரஜினி நன்கு புரிந்து வைத்திருந்தார் என்று தோன்றுகிறது. தான் நடிக்கின்ற திரைப்படத்தினால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் மிகுந்த லாபம் அடைய வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்திருக்கிறார். ஏனெனில் அப்போதுதான் அந்தத் தயாரிப்பாளரால் தொடர்ந்து இயங்க முடியும்; மேலும் பல திரைப்படங்களைத் தயாரிக்க முடியும் என்பது ரஜினியின் எண்ணமாக இருந்திருக்கும். இதன் மூலம் சினிமாத்துறை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க ரஜினியும் ஒருவகையில் காரணமாக இருந்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.

‘நீ நடித்த திரைப்படத்திலேயே உனக்குப் பிடித்த படம் எது?” – இப்படியொரு கேள்வியை ரஜினியிடம் ஒரு மேடையில் கேட்டார் கே.பாலச்சந்தர். சில நொடிகள் கூட தயங்காமல் ‘முள்ளும் மலரும்’ என்று பளிச்சென்று பதில் சொன்னார் ரஜினி. ‘கேள்வி கேட்பவர் தன் குருநாதர் ஆயிற்றே.. அவருடைய படத்திலிருந்தே ஒன்றைச் சொல்லி விடலாம்..’என்று ரஜினி மழுப்பவில்லை. தன் மனதில் படுவதை ஒளிக்காமல் அப்படியே சொல்லி விடும் நேர்மைதான் ரஜினியின் பலங்களுள் ஒன்று. பல சமயங்களில் இதுவே பலவீனமாகவும் ஆகியிருக்கிறது.

‘முள்ளும் மலரும்’ ‘அவள் அப்படித்தான்’ ‘ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற சிறந்த திரைப்படங்களில் நடிப்பதைத்தான் ரஜினியின் மனம் விரும்பியிருக்கும். ஆன்மீக விஷயங்களில் மீதுள்ள நாட்டம் வேறு கூடவே இருந்தது.  ஆனால் அவர் அமர்ந்திருக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ என்னும் நாற்காலி மிக அரிதானது. அதற்காக அவர் கடந்து வந்த பாதை என்பது அத்தனை எளிதான விஷயமல்ல.

எனவே, சினிமாவின் இருப்பிற்காக தனக்குப் பிடிக்காத பல விஷயங்கள் இருந்தாலும் அரைமனதுடன் வெகுசன மசாலாத் திரைப்படங்களில் நடித்திருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.

பிற்காலத்தில் தன்னுடைய வயதுக்கேற்ற பாத்திரங்களில் ‘கபாலி’ ‘காலா’ போன்ற திரைப்படங்களில் நடித்து ‘இளம் நடிகைகளுடன் டூயட் பாடுபவர்’ என்று தம் மீதிருந்த நெடுங்கால விமர்சனத்தை ஓரளவிற்கு துடைக்க முயன்றார் ரஜினி.

சட்டென்று இறங்காத தன்னுடைய வணிக மதிப்பின் மூலம் சினிமாத் துறையின் வளர்ச்சிக்கு நெடுங்காலமாக உறுதுணையாக இருந்தவர் என்கிற வகையில் இந்த விருது அவருக்கு கிடைத்திருப்பதை ஒரு நோக்கில் ஏற்றுக் கொள்ளலாம்; வாழ்த்தி வரவேற்கலாம். ஆனால்….

*

இப்போது இதன் எதிர்திசையில் உள்ள விஷயங்களைப் பார்ப்போம். சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்து நல்ல திரைப்படங்களை உருவாக்குபவர் என்கிற மதிப்பு கமல்ஹாசனின் மீது இருக்கிறது. இயக்குநர் ஷங்கர் போன்றவர்கள் ஒருபுறம் வெகுசன இயக்குநர்களாக இருந்தாலும் நல்ல சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் உருவாவதற்கு இன்னொரு புறம் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

ஆனால் அவ்வகையான முயற்சி ஒன்றையாவது ரஜினி செய்திருக்கிறாரா? யோசித்துப் பார்த்தால் இல்லையென்றே தோன்றுகிறது. தனக்குப் புகழையும் செல்வத்தையும் மக்கள் அபிமானத்தயும்  வாரி வழங்கிய சினிமாத்துறைக்கு சில நல்ல திரைப்படங்களை தயாரித்து வழங்குவதின் மூலம் அதன் ரசனை மாற்றத்திற்கு சிறுதுளியாகவாவது ரஜினி காரணமாக இருந்திருக்கலாம். ம்ஹூம் அது எப்போதும் நடக்கவில்லை.

நடிக்கும் காட்சிகளில் சிகரெட்டை விதம் விதமாக தூக்கிப் போட்டு இளைஞர்களிடம் புகைப்பிடிக்கும் வழக்கத்தை ஊக்குவித்தது. ‘பொம்பளைன்னா ஆடக்கூடாது.. அடங்கிப் போகணும்..’ என்கிற பிற்போக்குத்தனமான வசனங்களைப் பேசி நடித்தது.. என்பது உள்ளிட்ட பல காரணங்களை யோசிக்கும் போது ‘ரஜினி இந்த விருதிற்கு பொருத்தமானவர்தானா?’ என்று எழுகிற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

‘வரும்.. ஆனா வராது’ என்கிற காமெடி வசனத்தைப் போல தனது அரசியல் வருகையை ஒரு குரூரமான நகைச்சுவை ஆட்டமாக ஆடித்தீர்த்தவர் ரஜினி. இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக நடந்து கொண்டிருந்த இந்த டிராமா, ரஜினியின் உடல்நலத்தையொட்டி சமீபத்தில் ஒரு வழியாக முடிவிற்கு வந்தது. மக்கள் தன் மீது வைத்திருந்த எதிர்பார்ப்பிற்கு தெளிவாகவும் அழுத்தமாகவும் ஒரு விடையைக் காண முடியாமல் குழப்பங்களின் கூடாரமாக இருந்த ரஜினி, இந்த விஷயத்தையும் தனது படங்களின் கச்சாப்பொருட்களில் ஒன்றாக மாற்றிக் கொண்டது ஏற்றுக் கொள்ளவே முடியாத விஷயம்.

மத்திய, மாநில அரசுகளுடன் எப்போதும் இணங்கிச் செல்வது, சமரசங்களுக்கு ஆட்படுவது, அடங்கிப் போவது உள்ளிட்ட பல காரணங்கள் இந்த விருது ரஜினிக்கு கிடைத்ததற்குப் பின்னால் உள்ள காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

ரஜினியை விடவும் அதிக தகுதி வாய்ந்த ஒரு சினிமா ஆளுமைக்கு இந்த விருது கிடைத்திருந்தால் சினிமா மீது ஆர்வமுடைய அதன் நலம்விரும்பிகள் உண்மையாகவே மகிழ்ச்சியடைந்திருக்கக்கூடும். எப்படியோ தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நடிகர் இந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு நாம் மகிழ்ச்சியும் ஆறுதலும் கொள்ளலாம்.

மீண்டும் வாழ்த்துகள் ரஜினி!


விகடன் இணையத்தளத்தில் வெளியானது – நன்றி விகடன்

suresh kannan