Wednesday, April 28, 2021

Irakal (1985) - பாவத்தின் சம்பளம்


 
 
சமீபத்தில் ஜோஜி என்கிற மலையாளத் திரைப்படம் பார்த்தேன். மகேஷிண்டே பிரதிகாரம், தொண்டிமுதலும் திரிக்ஷாட்சியும் போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கிய திலீஷ் போத்தனின் சமீபத்திய திரைப்படம்.

ஒரு முதியவரின் மரணத்திற்காக அவரது வீட்டிலுள்ள உறவினர்கள் வெவ்வேறு வெறுப்புகளுடன் காத்திருக்கும் மனத்தத்தளிப்புகளையும் உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் அவர்களின் மனவிகாரங்களையும் நுட்பமான முறையில் காட்சிப்படுத்தியிருந்தது ‘ஜோஜி. ஒளிப்பதிவு, பின்னணி இசை, குறிப்பாக ஃபகத் பாசிலின் நடிப்பு போன்ற விஷயங்கள் சிறப்பாக அமைந்திருந்தன.

இந்தச் சமயத்தில்தான் கே.ஜி.ஜார்ஜ் இயக்கிய ‘இரகள்’ படத்தை சில நண்பர்கள் கவனப்படுத்தினார்கள். பார்த்தேன். (யூட்யூபில் ஆங்கில சப்டைட்டிலுடன் கிடைக்கிறது) ஜோஜியை விடவும் பல மடங்கு உயர்ந்த படம் என்று ‘இரகள்’ திரைப்படத்தைச் சொல்லலாம். ஜார்ஜ் இதை எண்பத்தைந்தாம் வருடத்திலேயே இயக்கியிருக்கிறார் என்பது ஆச்சரியம் தருகிறது.

ஜோஜியைப் போலவே ‘இரகளும்’ ஜெயமோகன் எழுதிய ‘ரப்பர்’ என்கிற குறுநாவலை மெலிதாக நினைவுப்படுத்துகிறது.  பணக்கார முதியவர், அவரை உள்ளூற வெறுக்கும் இளைய மகன்கள், ரப்பர் தோட்டம் போன்ற சில பின்னணிகள் மட்டும் பொருந்திப் போகின்றன.

*

‘இரகள்’ திரைப்படத்தை மலையாளத்தின் முதல் ‘டார்க் மூவி’ என்கிறார்கள் இருக்கலாம். மனதின் இருண்மைகளை, அதன் சிக்கலான பக்கங்களை,  அகவிகாரங்களை அதிகம் மெனக்கிடாமல் இயல்பான காட்சியமைப்புகளைக் கொண்டு அதே சமயத்தில் மிக ஆழமாக பார்வையாளனுக்கு கடத்திய விதத்தை ஜார்ஜின் மேதைமையாக பார்க்கலாம்.

மாத்யூஸ் என்கிற ரப்பர் தோட்ட முதலாளிக்கு மூன்று மகன்கள். மூத்தவன் முரடன். தகப்பனைப் போலவே சட்ட விரோதமான வழிகளில் பணம் சம்பாதிக்கும் வெறியில் இருப்பவன். தகப்பன் எட்டடி பாய்ந்தால் இவன் பதினாறு அடி பாய்கிறான். தந்தைக்கு இதைக் கண்டு உள்ளூற பெருமை.

அடுத்த மகன் குடிகாரன். அவனுக்கு ரப்பர் தோட்ட சூழலில் வாழவே பிடிக்கவில்லை. மனைவியின் உபதேசப்படி அங்கிருந்து இடம் பெயர்ந்து நகரத்தில் வாழ நினைக்கிறான். ஆனால் முரட்டுத் தந்தை அதற்கு இடம் தருவதில்லை. ‘வெளியே போனா சல்லிக்காசு கிடையாது’ என்று மிரட்டுகிறார். வேறு வழியில்லாமல் அதற்குப் பணிந்திருக்கிறான்.

மூன்றாவது மகன்தான் இந்தத் திரைப்படத்தின் உத்தேசமான ஆன்டி ஹீரோ எனலாம். கல்லூரி மாணவன். ஆனால் படிப்பதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்கிறான். கொலைகள் உட்பட. ஆம். கொலைகள்.

கல்லூரி ராகிங்கில் சக மாணவனை கடுமையாக காயப்படுத்தி விட்டு அதைப் பற்றி வீட்டில் எதையுமே பேசாமல் முடங்கிக் கிடக்கிறான். காவல்துறை வந்து விசாரிக்கும் போது கூட அலட்சியமாக பதில் சொல்கிறான். வழக்கம் போல் காசையும் தன் செல்வாக்கையும் விசிறியடித்து வழக்கை மூடி மறைக்கிறார் தந்தை. (திலகன்).

சொல்ல மறந்து போனேன். மாத்யூஸிற்கு ஒரு மகளும் உண்டு. (ஸ்ரீவித்யா) Spoiled child-க்கிற்கு சரியான உதாரணம். வீட்டிற்குள் நுழையும் போதே ‘யப்பா..’ என்கிற ஒப்பாரியுடன் வரும் இவள், தன் கணவனைப் பற்றி கண்டபடி பொய் சொல்லி புலம்புவது வழக்கம்.

தன்னுடைய பிள்ளைகளின் கீழ்மைகளை கண்டிக்காமல் அதை ஊக்கப்படுத்துவது போலவே செயல்படுகிறார் மாத்யூஸ். தன்னிடமுள்ள பணம், செல்வாக்கு, அதிகாரம் போன்றவற்றைக் கொண்டு எதையும் கீழே போட்டு மிதிக்க முடியும் என்கிற அகங்காரத்தைக் கொண்டிருக்கிறார்.

மாத்யூஸின் மனைவி ஓர் அப்பிராணி. கடவுள் பக்தி மிக்கவர். ‘நீங்க செய்யறது ஒண்ணும் நல்லால்ல’ என்று கணவருக்கு எதிராக சற்று முனகி பிறகு அவருக்கு அஞ்சி அடங்கிப் போவதோடு அவரது இருப்பு முடங்கிப் போகிறது. இந்த நல்ல பெண்மணியின் சகோதரர் சர்ச்சில் பாதிரியாராக இருக்கிறார். (பரத் கோபி) மிதமிஞ்சிய செல்வமும் அதிகாரமும் இருக்கும் மிதப்பில் இந்தக் குடும்பம் உள்ளூற புரையோடுவதைக் கண்டு மனம் வருந்துகிறார் பாதிரியார். சிக்கலான நேரங்களில் வந்து மாத்யூஸிற்கு புத்தி சொல்கிறார். ஆனால் எவையும் இவர்கள் செவி மடுப்பதில்லை.

*

‘இரகள்’ என்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பொருள். பணம், அதிகாரம், புகழ் போன்வற்றைக் கொண்டிருந்தாலும் அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவரையொருவர் மனதார வெறுக்கிறார்கள். குறிப்பாக அதன் தலைமையின் மீது. ஆனால் அதை வெளிப்படுத்த அஞ்சுகிறார்கள். தன்னுடைய ஆளுமையின் கீழேதான் ஒட்டுமொத்த குடும்பமும் அடங்கியிருக்க வேண்டும் என்கிற கண்டிப்பை ஒவ்வொரு காட்சியிலும் நிலைநிறுத்துகிறார் மாத்யூஸ். (இந்தத் திரைப்படத்தை இந்திரா காந்தி – சஞ்சய் காந்தி என்கிற நோக்கிலும் சில விமர்சகர்கள் காண்கிறார்கள்).

மூன்றாம் மகனான பேபி மாத்யூஸ் மட்டுமே அங்கு கலகக்காரனாக இருக்கிறான். தனது எதிர்ப்புணர்ச்சியை துணிச்சலுடன் வெளிப்படுத்துகிறான். தனது தந்தை லாப வெறி கொண்டு பல்வேறு வணிக கீழ்மைகளில் ஈடுபதை அவன் மனதார வெறுக்கிறான். அந்தக் குடும்பத்தில் உள்ள போலித்தனமும் பாசாங்கும் அவனை பித்துப் பிடிக்க வைக்கிறது.

தன் கழுத்தில் தானே கயிற்றை மாட்டிக் கொண்டு தற்கொலை பாவனைகளை மேற்கொள்ளும் அவன் ஊசியால் விரலில் காயம் ஏற்படுத்திக் கொள்வது உள்ளிட்ட சுயவதைகளையும் மேற்கொள்கிறான். ஒரு கட்டத்தில் இவனது மனப்பித்து பெருகி இவனை ஒரு சீரியல் கில்லர் ஆக்குகிறது.

கணவனிடம் சண்டையிட்டுக் கொண்டு அடிக்கடி பிறந்து வீட்டிற்கு வரும் இவனது சகோதரி, வேலைக்காரனுடன் கள்ள உறவு கொள்வதை ரகசியமாகப் பார்க்கும் பேபி, முதலில் வேலைக்காரனைக் கொல்கிறான். பிறகு தன்னுடைய காதலிக்கு நிச்சயம் செய்யப்படும் மாப்பிள்ளை, நெருங்கிய நண்பன் என்று இவனது மரண வேட்டை தொடர்ந்தபடியே இருக்கிறது. 
 
 

 
‘குடும்பம்தான் இருப்பதிலேயே ஆகப்பெரிய வன்முறை நிறுவனம்’ என்கிற நிர்வாண உண்மையை பல காட்சிகளில் நமக்கு உணர்த்தியபடியே இருக்கிறார் இயக்குநர் ஜார்ஜ். சமூகம் கூட பிறகுதான். முதலில் குடும்பம்தான் குற்றவாளிகளை உற்பத்தி செய்கிறது. குற்றத்தின் ஊற்றுக்கண்களாக இருக்கிறது. இதன் சிறந்த உதாரணம் பேபி.

பேபி எதிர்கொள்ளும் மனச்சிக்கல்களும், மனவிகாரங்களும், சுயஅவஸ்தைகளும், உயிர்களை வேட்டையாடும் வேட்கையும் மிக நுட்பமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

பல்வேறு பாவங்களின் மூலம் அந்தக் குடும்பம் சேர்க்கும் செல்வம்தான் பேபியின் தலையில் வந்து விடிகிறது எனலாம். அவன் கொலைகளைச் செய்யும் ஆபத்தான பேர்வழியாக இருந்தாலும் இன்னொரு நோக்கில் அனுதாபத்துக்குரியவனாகவே தெரிகிறான்.

தனது தந்தை மேத்யூஸ் அதிகாரச் செருக்கில் முழங்கும் போதெல்லாம் பேபிக்கு மனம் கூசுகிறது. மற்ற எல்லோரையும் விட அதிகமாக அவரை உள்ளூற வெறுக்கிறான். அந்த அலைக்கழிப்பே அவனை கொலைகாரனாக்குகிறது. இதர சமயங்களில் தனது தாத்தாவை பாசத்துடன் போஷிக்கும் நல்ல பேரனாகவே இருக்கிறான். இது சார்ந்த காட்சிகளும் வருகின்றன.

அந்தக் குடும்பம் செய்யும் பாவமானது எப்படி அடுத்தடுத்த பரிணாமங்களில் வளர்கிறது என்பது ஒரு காட்சியில் நுட்பமாக சொல்லப்படுகிறது. அந்த வீட்டின் மூலையில் மரணப்படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் மாத்யூஸின் தந்தை ‘மாதாவே.. மாதாவே’ என்று பெரும்பாலான நேரங்களில் முனகியபடியே இருக்கிறார்.

அவர் ஒருமுறை பேபியை அழைத்து பேசும் போது சொல்கிறார். “நான் இங்க இருக்க காட்டை அழிச்சிருக்கேன். ஆனா மிருகங்களை கொன்னதில்லை. ஆனா உங்கப்பன் எல்லா மிருகத்தையும் சாகடிச்சிருக்கான்”

அடிப்படை உணவு உற்பத்திக்கான விவசாயம் என்பது மெல்ல மெல்ல குறைந்து மிகையான லாபம் சம்பாதிக்க உதவும் ரப்பர் போன்ற பணப்பயிர்கள் பெருகி நம் மண்ணையும் விவசாயத்தையும் எப்படி சூறையாடுகிறது என்பது நேரடியாக அல்லாமல் பல காட்சிகளில் உணர்த்தப்படுகிறது. 



இந்தக் குடும்பத்தின் ஆணவ மிக்க தலைவராக திலகன் அற்புதமாக நடித்திருக்கிறார். சந்தனக்கலர் வேட்டி ஜிப்பாவும், தங்க பிரேம் கண்ணாடியும் கையில் ஒரு சூட்கேஸூமாக பெரும்பாலான காட்சிகளில் தோன்றும் திலகன், உலகத்திலுள்ள எதையும் வாங்கி விடும் தன்னம்பிக்கையுடன் பேசும் காட்சிகள் சிறப்பாக பதிவாகியுள்ளன.

கல்லூரி மாணவன் பேபியாக கே.பி.கணேஷ்குமார் நடித்துள்ளார். இவருக்கு இதுதான் முதல் படம். ஆனால் அதன் சுவடே தெரியாமல் இவரின் பங்களிப்பு நிறைவாக அமைந்துள்ளது. உறைந்து போன மென்சோக முகபாவத்துடன் இவர் செய்யும் காரியங்களை திகிலைக் கிளப்புகின்றன.

மாத்யூஸின் கணக்குப் பிள்ளையாக வரும் இன்னொசென்ட், ஒரு விசுவாசமான வேலைக்காரனை துல்லியமாக பிரதிபலித்துள்ளார். தொழிலாளர்கள் பிரச்சினை உள்பட பலவற்றை எப்படி அணுக வேண்டும் என்பதை அறிந்தவராக உள்ளார் இன்னொசென்ட்.  ஆனால் ஒரு நல்ல முதலாளியின் லட்சணமாக, கணக்குப்பிள்ளையை எங்கே நிறுத்த வேண்டும் என்பது திலகனுக்குத் தெரிந்திருக்கிறது.

பணக்காரக் குடும்பத்தின் செல்லத்தால் சீரழிந்த ஒரு பெண்ணை தத்ரூபமாக சித்தரித்துள்ளார் ஸ்ரீவித்யா. தமிழ்த் திரைப்படங்களில் நாம் காணக்கூடிய ‘குடும்ப குத்துவிளக்கு’ வித்யா இல்லை. இவர் வேறு. சற்று வில்லங்கமான பாத்திரத்தை துணிச்சலாக ஏற்றுள்ளார். வீட்டுக்குள் நுழையும் போது ‘யப்பே’ என்று புலம்பியபடி கணவரைப் பற்றிய புகார்களை அடுக்கும் காட்சி துவங்கி வீட்டிற்குள் நுழைந்து உணவுப் பதார்த்தங்களை தின்று தீர்ப்பது வரை பல காட்சிகளில் இவரது நடிப்பு சுவாரசியமாக அமைந்துள்ளது.

ஸ்ரீவித்யாவின் கணவராக நெடுமுடிவேணு சில காட்சிகளில் வந்து போகிறார். சொற்ப காட்சிகளில் வந்தாலும் ஓர் அடங்காப்பிடாரியை மனைவியாக கட்டிக் கொண்ட துயரத்தை சிறப்பாக காட்டி விடுகிறார். மாமனரால் அடித்து விரட்டப்பட்டு இவர் கலங்கியபடி வீட்டை விட்டு வெளியே வரும் பரிதாப காட்சியானது நெடுநாள் மனதில் நிற்கும். (தங்கர் பச்சான் இயக்கத்தில் சேரன் நடித்து வெளியான ‘சொல்ல மறந்த கதை’ திரைப்படத்தின் காட்சியும் கூடவே நினைவிற்கு வந்து போனது).

இரண்டாவது மகனாக சுகுமாரன் நடித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளரும் இவரே. பேபி மாத்யூஸை காதலிக்கும் பெண்ணாக ராதா சில காட்சிகளில் வந்து போகிறார். சிறு சிறு பாத்திரங்களையும் எப்படி அவசியத்திற்கேற்ப உபயோகிக்க வேண்டும் என்பது இயக்குநர் ஜார்ஜிற்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.

சிதறிக் கொண்டிருக்கும் மனதின் சிறுசிறு துண்டுகளை மிக கவனமாகப் பொறுக்கி காட்சியாக்குகிறார் ஜார்ஜ்.

திலகனின் குடும்பம் செல்வத்திலும் செல்வாக்கிலும் மிதமிஞ்சிய அளவைக் கொண்டிருந்தாலும் அந்தக் குடும்பத்தில் ஒருவருமே நிம்மதியாக இல்லை. பணத்தை ஈட்டுவதே வாழ்க்கையின் வெற்றி என்கிற மிதப்பிலும் ஆவணத்திலும் இறுமாந்திருக்கும் திலகனும் கடைசியில் ஓய்ந்து விடுகிறார். ‘பாதிக்கப்பட்டவர்கள்’ என்கிற வார்த்தையுடன் படம் நிறைகிறது.

‘வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி.. பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேருமடி’ என்கிற பாடல் வரிதான் இந்தத் திரைப்படம் முழுக்க எனக்குள் ஓடிக் கொண்டேயிருந்தது. பல பேர்களின் வாழ்க்கையை அழித்து கட்டப்படும் மாளிகையானது வெளியில் இருந்து பார்க்க பளபளப்பாகவும் பிரம்மாண்டாகவும் இருந்தாலும் அது உள்ளுக்குள் மெல்ல மெல்ல அழுகி புரையோடிக் கொண்டிருக்கும் யதார்த்தத்தை ஜார்ஜ் மிக திறமையாகச் சித்தரித்திருக்கிறார்.

அதுதான் இந்தத் திரைப்படம் சொல்ல வரும் நீதியா என்பது எனக்குத் தெரியாது. நான் அப்படித்தான் எடுத்துக் கொண்டேன்.

தனது சகோதரனான சர்ச் பாதிரியாரிடம், திலகனின் மனைவி துயரத்துடன் புலம்புகிறார். ‘தெய்வம் ஏன் எங்களுக்கு இத்தனை சோதனைகளைத் தருகிறது?”

அதற்கு பாதிரியார் சொல்லும் பதில்: “தெய்வம் எந்தச் சோதனையையும் தருவதில்லை. அனைத்துமே மனிதர்கள் உருவாக்கிக் கொள்வதுதான்”.

suresh kannan


No comments: