Monday, May 11, 2020

Eye in the Sky (2015) - 'ஆகாயத்தின் கண்கள்'

பேசாமல் இந்த பிரிட்டிஷ் திரைப்படத்திற்கு 'டென்ஷன், டென்ஷன்' என்று பெயர் வைத்திருக்கலாம். அத்தனை பரபரப்பான காட்சிகளுடன் நகரும் படம்.

ஒரு சிறுமி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவள்தான் பிற்பாடு இத்திரைப்படத்தின் முக்கிய மையமாக, பிரச்சினையாக இருக்கப் போகிறாள் என்பது அவளுக்குத் தெரியாது, நமக்கும்.

சிறுமியாக இருந்தாலும் அவள்  படிப்பதை, விளையாடுவதைக் கூட ஒழுக்க மீறலாக கண்காணிக்கும் இசுலாமிய நகரம் அது. நைரோபி. சிறுமியுடையது வறுமையான குடும்பம் . தாய் தரும் ரொட்டிகளை  விற்பது சிறுமியின் வழக்கம். அதன்படி அன்றும் கிளம்புகிறாள். ஆனால் அவளைச் சுற்றி ஒரு பெரும் ஆபத்து சூழ்ந்திருப்பதை, பாவம் அந்த அப்பாவிப் பெண் அறிந்திருக்க மாட்டாள்.

***

சில ரகசிய காமிராக்கள் ஒரு கட்டிடத்தை கண்காணித்துக் கொண்டேயிருக்கின்றன். அந்தக் காட்சிகளை சில நாடுகளைச் சேர்ந்த ராணுவக் குழுவும் உள்துறை அதிகாரிகளும் வேறு இடத்தில் பார்த்தபடி இருக்கிறார்கள்.

கட்டிடத்தின் உள்ளே இருக்கும் இரு நபர்கள் பயங்கரமான தீவிரவாதிகள். அவர்கள் உடனே அழிக்கப்பட்டாக வேண்டும்.  இல்லையென்றால் அவர்களை மீண்டும் கண்டுபிடித்து பிடிப்பது சிக்கலான காரியமாகி விடும்.

மூடப்பட்ட கட்டிடத்தின் உள்ளே பறக்கும் காமிரா ஒன்று சாமர்த்தியமாக செல்லும் போது அதில் தென்படும் காட்சிகள்  பயங்கரமாக இருக்கின்றன. உள்ளே நிறைய வெடிமருந்து ஆயுதங்கள். போதாக்குறைக்கு மனித வெடிகுண்டாக ஒரு நபரை தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் காட்சியும் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

அந்த தற்கொலைப் போராளி வெளியில் கிளம்புவதற்குள் அவர்களை அழிக்க வேண்டும். இன்னமும் சில நிமிடங்கள்தான் இருக்கின்றன. ஏவுகணை வெடிகுண்டின் மூலம் குறிபார்த்து சுட்டு அந்த கட்டிடத்தை அழிக்கும் ராணுவ விமானம் மேலே தயாராக உள்ளது. உடனே அவர்களை அழித்து விடலாம்தான். ஆனால் அது எத்தனை எளிதானதல்ல.

***

அது ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த  ராணுவ வல்லுநர்களை இணைத்து செயல்படுத்தப்படும் திட்டம் என்பதால் ஒவ்வொரு நாட்டு அதிகாரியின் ஒப்புதல் வேண்டும். அரசியல் ரீதியிலான பிரச்சினை வேறு வந்து விடக்கூடாது. மட்டுமல்ல குண்டு போடப்படும் போது அங்குள்ள பொதுமக்களின் சேதம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் தேவையற்ற அரசியல் சிக்கல் வரும்.

ராணுவத்தின் தரப்பில் இருந்து ஒருங்கிணைக்கும் பெண் அதிகாரி பதட்டத்துடன் மேலதிகாரியிடம் சூழ்நிலையின் அவரத்தை சொல்கிறார். 'குண்டு போட உத்தரவு வேண்டும்' ராணுவ கமாண்டர் உள்துறை அதிகாரிகளிடம் பேசுகிறார். அவர்கள் அதற்கும் மேலேயுள்ள உத்தரவிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நிமிடங்கள் விரைந்து கொண்டேயிருக்கின்றன. பெண் அதிகாரி நகத்தை கடித்துக் கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார். பொறுப்பில் உள்ள ஒவ்வொருவரும் வேறு வேறு காரணங்களால் முடிவெடுக்காமல் தவிர்க்கிறார்கள்; தவிக்கிறார்கள். குழப்பமான நிலைமை.

சங்கிலித் தொடர் போல இந்த உரையாடல் தொடர்கிறது. இதற்கிடையில் தற்கொலைப் போராளி வேறு தயாராகிக் கொண்டிருக்கிறான். தீவிரவாதிகளும் தப்பித்து விடுவார்கள். பெண் அதிகாரிக்கு டென்ஷன் ஏறுகிறது.

***

ஒரு வழியாக உத்தரவு வந்து விடுகிறது. மளமளவென்று உத்தரவுகள் பறக்கின்றன. கட்டிடத்தின் மேலே விமானத்தில் உள்ள நபருக்கு உத்தரவு செல்கிறது ... 'தம்பி.. பட்டாசை வெடிடா"

பட்டாசு வெடிக்கும் தம்பி கீழேயுள்ள ஒரு காட்சியைக் கண்டு திகைத்துப் போகிறான். குண்டு போடப் போகும் இடத்திற்கு பக்கத்தில் அந்தச் சிறுமி ரொட்டி விற்றுக் கொண்டிருக்கிறாள். குண்டு போட்டால் நிச்சயம் அவள் சாவாள். இவனுக்கு மனச்சாட்சி உறுத்துகிறது. சற்றுமுன்தான் அந்தச் சிறுமி மகிழ்வுடன் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சியை காமிராவின் மூலம் அவன் பார்த்திருக்கிறான்.

எனவே அவன் சொல்கிறான். "இல்லை. குண்டு போட முடியாது. மறுபடியும் நான் செக் செய்யணும். எனக்கு அதற்கு அதிகாரம் உள்ளது"

'அடியைப் பிடிடா பாரத பட்டா' என்று மறுபடியும் ஆரம்பிக்கிறது டென்ஷன்.

***

ரொட்டி விற்கும் சிறுமி அங்கிருப்பதுதானே பிரச்சினை.. அவளிடமிருந்து எல்லா ரொட்டிகளையும் வாங்கி விட்டால் அவள் போய் விடுவாள் அல்லவா? உள்ளுர் உளவு நபர் ஒருவரை அனுப்பி எல்லா ரொட்டியையும் வாங்கச் சொல்கிறார்கள். அவன் வாங்கி விட்டு திரும்பும் போது அவனை அடையாளம் கண்டுகொள்ளப்படுவதால் அவன் ரொட்டிகளை வீசி விட்டு ஓடுகிறான். சில துரத்தல்கள்.

சரி,  அந்தச் சிறுமி கிளம்பி  விட்டாளே என்று பார்த்தால், அவள் கீழே கொட்டப்பட்ட ரொட்டிகளை எடுத்து மறுபடி அடுக்கி விற்க ஆரம்பிக்கிறாள். அடக் கடவுளே!

சரி.. கட்டிடத்தின் எந்தப் பகுதியின் மீது குண்டு போட்டால் சிறுமி குறைந்த காயத்துடன் உயிர் தப்புவதற்கான சாத்தியமுண்டு என்று மறுபடியும் ஆலோசிக்கிறார்கள். மறுபடியும் விவாதம், குழப்பம்..

இந்தக் குழப்பத்தில் தீவிரவாதிகள்  வேறு தப்பிச் சென்று விடக்கூடாதே என்றிருக்கிறது. அவர்கள் வெளியே கிளம்பினால் தீவிரவாத செயலால் பல அப்பாவி உயிர்கள் போகும்.  என்ன செய்யலாம் பல உயிர்களா, ஒரு சிறுமியா?

எப்படியோ குத்துமதிப்பாக ஒரு கணக்கு போட்டு சிறுமி சாகாதவாறான வகையில் குண்டைப் போடுகிறார்கள். சிறுமி படுகாயங்களுடன் போய் விழுகிறாள்.  அப்போது பார்த்தால் கட்டிட இடுபாடுகளில் ஒரு தீவிரவாதி உயிரோடு தள்ளாடி வெளியே நகர்வது தெரிகிறது. உடனே போடு, இன்னொரு குண்டு.

சிறுமியின் பிணத்தின் மீது பெற்றோர்கள் கதறுவதோடு படம் முடிகிறது.


****

இத்திரைப்படம் அதிக பரபரப்புடன் அமைந்திருந்தாலும் படத்தில் உணர்ந்த இரண்டு நெருடல்களை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

1) பெரும்பாலான ஹாலிவுட் திரைப்படங்களைப் போலவே இதிலும் இஸ்லாமியர்கள்தான் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

2)  வல்லரசு நாடுகள் நிகழ்த்தும் போர்கள், தீவிரவாத தடுப்பு ஆப்ரேஷன்களில்  பெண்கள், குழந்தைகள் உட்பட எத்தனையோ அப்பாவி பொதுமக்களும் வன்முறைக்கு பலியாகிறார்கள். ஆனால் இதில் வரும் ராணுவ நபர்கள் ஒரு சிறுமிக்காக கண்ணீர் விடுகிறார்கள். அம்பூட்டு நல்லவங்களாய்யா நீங்க?


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: