Friday, June 26, 2009

சாரு, wikipedia, imdb, திரைவிமர்சனம்


இந்தப் பக்கத்தில் தன்னுடைய ஒரு சினிமா விமர்சனத்தில் குறை கண்டுபிடித்தவர்களின் மீது பாய்ந்து பிடுங்கிவிட்டார் சாருநிவேதிதா. சற்று அதீதம்தான். ஆனால் என்னால் இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு சினிமாவை எப்படி நாம் உள்வாங்கிக் கொள்கிறோம் அல்லது எப்படி அனுபவிக்கிறோம் என்பதுதான் முக்கியமே ஒழிய அந்த அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் போது அதில் ஏற்படும் கருத்துப் பிழைகளையோ, எழுத்துப் பிழைகளையோ பொருட்படுத்த தேவையில்லை என்பதுதான் முதிர்ச்சியடைந்த பார்வை.

என்னுடைய பதின்ம வயதுகளில் ரஜினி vs கமல் ரசிகர்களிடையே ஏற்படும் விவாதங்களில் சம்பந்தப்பட்ட நடிகர் எத்தனை படங்களில் நடித்திருக்கிறார், அதில் எத்தனை 100 நாட்கள் ஓடின, வெள்ளிவிழா கண்டன, அப்பாவாக எத்தனை படங்களில் நடித்திருக்கிறார், யார் யார் கதாநாயகிகளாக நடித்தார்கள்... போன்ற 'அதிமுக்கிய' புள்ளிவிபரங்களைத் தெரிந்து வைத்திருப்பவர்களும் அதைத் திணறாமல் கடகடவென்று சொல்லத் தெரிந்தவர்கள்தான் 'உண்மையான' ரசிகர்களாக மதிக்கப்படுவதைக் கண்டிருக்கிறேன். நானும் அந்த அபத்தத்தை முயன்றிருக்கிறேன். பதின்ம வயதுகளில் இவ்வாறான அறியாமையுடன் இருப்பதைக் கூட மன்னித்துவிடலாம். ஆனால் வளர்ந்து ஒரு புரிதலை அடைந்து உலக சினிமாவைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது இவ்வாறான விடலைத் தனத்தை கைவிடுவது நல்லது. 'குறை கண்டுபிடித்து விட்டோம் பாத்தியா' என்று சிறுமைத்தனமாக மகிழ்பவர்களே இவ்வாறான குறைகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பார்கள். '

'The Hurricane' திரைப்படத்தை பற்றிய என்னுடைய பதிவிலும் ஒரு அனானி நண்பர் 'wikipedia' என்றொரு ஒற்றை வார்த்தை பின்னூட்டத்தில் தன்னுடைய மேதமையைக் காட்டி விட்டுச் சென்றிருந்தார். அதாவது இந்தப் படத்தைப் பற்றிய சில மேல் தகவல்களை நான் விக்கிபீடியாவிலிருந்து அப்படியே எடுத்து எழுதிவிட்டேனாம். என்ன அநியாயம் பாருங்கள். எனக்கு ஒன்று மாத்திரம் புரியவில்லை. அய்யா! இந்த மாதிரியான கலைக்களஞ்சியங்கள் எல்லாம் அப்படியாக தகவலை எடுத்து உபயோகப்படுத்தத்தானே இருக்கிறது. இன்னும் கற்கால வழக்கத்தின் படி நூலகம் நூலகமாக அலைந்து கனமான புத்தகங்களை தூசுதட்டி புட்டிக் கண்ணாடி போட்டு அதிலிருந்து குறிப்புகள் எடுத்து எழுதுபவர்களைத்தான் இவர்கள் அறிவாளிகள் என்று ஒப்புக் கொள்வார்களா என்று தெரியவில்லை. நுட்பம் வளர்ந்துவிட்டது. ஒரு மவுஸ் சொடுக்கில் உலகமெங்கிலும் உள்ள தகவல்கள் கணினி வழியாக வந்து கொட்டுகின்றன. இவற்றைப் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு?. கண்ணதாசன் சம்பந்தப்பட்டதொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அவர் எழுதிய திரைப்பாடலொன்றில் வரும் வரி அல்லது கருத்து, சங்கப்பாடலில் உள்ளதை அப்படியே பிரதிபலிக்கிறதே, யாராவது ஆட்சேபிக்க மாட்டார்களா' என்று அவரின் உதவியாளர் கேட்டதற்கு 'அடப்போய்யா, என்னுடைய தாத்தாவின் பாக்கெட்டில் கைவிடுவதற்கு யாருடைய அனுமதியைக் கேட்க வேண்டும்?' என்று ஒரே கேள்வியைக் கொண்டு அந்த ஆட்சேபத்தை தூக்கி எறிந்தாராம்.

எங்கே தவறு என்றால், இணையத்தில் இருக்கும் ஒரு வேறொரு கட்டுரையை அப்படியே எடுத்துப் போட்டோ அல்லது வரிக்கு வரி அப்படியே மொழிபெயர்த்துப் போட்டு 'தகவல்கள் எங்கிருந்து பெறப்பட்டன' என்கிற விஷயத்தை அப்படியே மூடி மறைத்து சம்பந்தப்பட்ட கட்டுரை தன்னால்தான் எழுதப்பட்டது' என்று நிறுவ முயல்வதுதான் அதிபயங்கர குற்றம். 'அறிவுசார் திருட்டு' என்று இதற்குப் பெயர்.

என்னுடைய பதிவில் பின்னூட்டமிட்ட நண்பர் இன்னொரு குற்றச்சாட்டையும் வைக்க முயன்றிருக்கிறார். அதாவது 'இந்தப் படத்தை நான் பார்க்கவேயில்லை அல்லது பார்த்தும் என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. விக்கிபீடியாவிலிருந்த தகவல்களை அப்படியே நான் காப்பியடித்திருக்கிறேன்' என்பதுதான் அவர் கூற முயல்வது. சினிமாவை பொழுது போக்காக மட்டும் கருதாமல் அதை உன்னதமானதொரு கலைவடிவமாக வழிபடுபவர்கள், ஒரு மதமாக பின்பற்றுபவர்கள், சுவாசமாக நினைப்பவர்கள்... போன்ற சினிமா ஆர்வலர்களுக்கு இந்த அற்பமான குற்றச்சாட்டு மிக்க எரிச்சலையே ஏற்படுத்தும். இதுவேதான் சாருவிற்கும் ஏற்பட்டு அவரை அதீதமாக எதிர்வினையாற்ற வைத்திருக்கிறது. தகவல்களை தரும் தளங்களிலிருந்து சம்பந்தப்பட்ட சினிமாவைப் பற்றின மேல் விவரங்களை மாத்திரமே பெற முடியும். அனுபவங்களைத் தர முடியாது.

சரி ஒரு வாதத்துக்கே வைத்துக் கொள்வோம். விக்கிபீடியா போன்ற தகவல்களை தரும் தளங்களை வைத்து ஒரு சினிமா விமர்சனத்தை எழுதி விட முடியுமா? என்னுடைய பதில் 'முடியும்'. எழுதுவதில் அடிப்படையான திறமை கொண்டவனால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியும். ஆனால் அது பிளாஸ்டிக் மல்லிகைப்பூ மாதிரி இருக்கும். எழுதினவனின் ஆன்மா அதில் இருக்காது. ஒரு தேர்ந்த, நுட்பமான வாசகனால் இதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். 'அந்த சினிமாவின் இயக்குநனும் நடிகனும் பார்வையாளனும் எங்காவது ஒரே புள்ளியில் இணையும் அந்த உன்னதமான அனுபவம்' செயற்கை விமர்சனங்களில் இருக்காது. சினிமாவை தன்னுடைய உயிர் போல நேசிக்கிறவன் இந்த மாதிரியான அற்பத்தனமான காரியங்களை செய்ய மாட்டான். வணிகப் பத்திரிகைகளில் கூலிக்காக மாரடிக்கும் சினிமா விமர்சனம் எழுதப் பணிக்கப்படுபவர்களே பெரும்பாலும் இவ்வாறு செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கவர் வாங்கிக் கொண்டோ அல்லது தயாரிப்பாளரின் நிர்ப்பந்தத்தாலோ, விளம்பர வருமானத்தை கணக்கிக் கொண்டோ ஒரு குப்பைப்படத்தை 'ஆஹா ஓஹோ'வென்று என்று புகழ்ந்து தள்ளுவது ஒரு முறை. அல்லது சம்பந்தப்பட்ட படத்தைப் பார்க்காமலேயே அதுவரை வந்த விமர்சனங்களையும் ஏற்கெனவே வந்திருக்கும் தகவல்களை வைத்தும் 'கதைவிடுவது' இன்னொரு முறை. அவற்றையெல்லாம் 'விமர்சனம்' என்ற கணக்கிலேயே கொள்ளக்கூடாது.

இணையத்திற்கு வந்த புதிதில் நான் கூட ஏதாவது சினிமாவைப்பற்றி எழுதும் போது 'விமர்சனம்' என்கிற வார்த்தையை அதனுடைய முக்கியத்துவம் அறியாமல் விடலைத்தனமாக பயன்படுத்திக் கொண்டிருந்தேன். எழுத்தாளர் க.நா.சுப்பிரமணியம் ஒருமுறை 'விமர்சகனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் எவை?' என்று எழுதின கட்டுரையை படித்த போது எனக்கு தூக்கி வாரிப் போட்டது. ஒரு விமர்சகனுக்கு சம்பந்தப்பட்ட துறையில் ஆழமான ஞானமும், சமகால நிகழ்வுகளைப் பற்றின அறிவும், நடைமுறை சிரமங்களையும் அனுபவங்களைப் பற்றியும், அதனுடைய எதிர்காலம் பற்றியும் அ முதல் ஃ வரை தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று எழுதாமல் தான் எழுதுகிற ஒவ்வொரு வார்த்தையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அறிந்து வைத்திருக்க வேண்டும். அந்தக் கட்டுரையைப் படித்ததிலிருந்து 'விமர்சனம்' என்கிற பதத்தை நான் பயன்படுத்துவதில்லை. 'இந்த சினிமாவைப் பற்றிய என் பார்வை' என்கிற மாதிரிதான் மழுப்புகிறேன்.

மேலும் ஒரு நல்ல சினிமாவை ஒரே ஒரு முறை பார்த்துவிட்டு நிச்சயம் உள்வாங்கிக் கொள்ளவே முடியாது. ஒரு அடிப்படை பார்வையாளனாக எல்லா முன்முடிவுகளையும் களைந்துவிட்டு வெற்றான மனநிலையில் அந்தப்படத்தை அணுக வேண்டும். பின்பு இன்னொரு முறை அதிலிருந்து முற்றிலும் விலகி அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பங்கள், கேமரா கோணம் பார்வையாளனுக்கு சொல்ல முயலும் செய்தி, இயக்குநர் பார்வையாளனை மிகவும் நெருங்கி பேசும் அந்த கலாபூர்வமான மொழி ஆகியவற்றை நுட்பமாகவும் கூர்மையாகவும் அவதானிப்பதே ஒரு உண்மையான சினிமா ரசிகனின் அடிப்படையாக இருக்க முடியும். காத்திரமானதொரு சினிமா என்றால் மூன்று,நான்கு முறை பார்த்தால் கூட முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாது.

ஆனால் இன்று இணையத்தில் எந்தவொரு குப்பைப் படத்தையும் முதல் நாளே அடித்துப்பிடித்து பார்த்துவிட்டு அதைப் பற்றி நான்கு பத்திகள் எழுதிவிட்டு 'விமர்சனம்' என்று தலைப்பு போட்டுக் கொள்பவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. ஆனால் இந்த அபத்தமான பரவசம் ஒருநிலையில் வடிந்து, இந்தப் புள்ளியிலிருந்து முன்னகரும் வாய்ப்பு இருக்கிறது ; அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடும்' என்கிற எதிர்பார்ப்புதான் இப்போதிருக்கும் ஒரே ஆறுதல்.

உலக சினிமாவை பற்றி குறைந்த அளவே ஞானம் கொண்டிருந்த (சத்யஜித்ரேவின் சில படங்களை அரசுத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்) ஆனால் அதிலிருந்து முன்னகராமல் ஒரு சராசரி மசாலா சினிமா பார்வையாளனாகவே தொடர்ந்த என்னை மாற்றியமைத்தது தமிழ்ச் சிற்றிதழ்களின் அறிமுகம். குறிப்பாக எஸ்.ராமகிருஷ்ணன் எழுதி தீராநதியில் வந்து கொண்டிருந்த சினிமா தொடரான 'அயல் சினிமா'-வை சொல்ல வேண்டும். ஒரு சினிமாவை எப்படி அணுகுவது, எப்படி அதை புரிந்து கொள்வது, ஒரு குறிப்பிட்ட இயக்குநரின் அனைத்துப் படங்களையும் பார்த்து எப்படி அவரை மற்ற இயக்குநர்களுடன் வேறுபடுத்திக் காட்டுவது... என்று பல புரிதல்களை ஏற்படுத்தியது அந்தப் புத்தகம். அந்த ஆரம்பப் புள்ளியிலிருந்துதான் இன்னும் தீவிரமானதொரு இடத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை சினிமா பற்றி நான் எழுதும் பதிவுகள் என்னுடைய மேதமையைக் காட்டுவதற்காக அல்ல. என்னுடைய அனுபவத்தை சக மனிதருக்கும் கடத்தி அவரையும் அந்தச் சினிமாவை காணச் செய்ய வேண்டும் என்பதுதான் நான் எழுதுவதின் அடிப்படை நோக்கம். சிலருக்கு 'உலக சினிமா' என்றவுடனே எள்ளலான சில முன்முடிவுகளுடன் அணுகுவதுதான் வழக்கமாக இருக்கிறது. 'உலகத்தரம்' குறித்த கிண்டலான கேள்விகள் வேறு. இதற்கு சர்வதேச தரக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டும் என்கிற கவனத்துடன் உருவாக்கப்படும் ஏற்றுமதிப் பொருட்களை ஒரு அவசர உதாரணமாக கொள்ளலாம். உலகமெங்கிலும் உள்ள மனிதர்களின் சில உணர்வுகள் பொதுவானது. அதற்கு மொழியோ,கலாசார அறிவோ,மிகையான தொழில்நுட்பமோ,நட்சத்திர நடிகர்களோ, கவர்ச்சியோ தேவையில்லை. அந்தப் புள்ளியை நோக்கி தன்னுடைய படத்தை நகர்த்திச் செல்கிறவனின் படங்கள் உலக சினிமா ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.

உலக சினிமா என்பது இந்தியாவிற்கு வெளியிலிருந்து தயாரிக்கப்படுவதா என்ற மாதிரியான கேள்விகளையும் எதிர்கொண்டிருக்கிறேன். இங்கும் பல அற்புதமான சினிமா இயக்குநர்கள் இருந்திருக்கிறார்கள்/இருக்கிறார்கள். தமிழில் என்றால் மகேந்திரன், பாலுமகேந்திரா, ருத்ரைய்யா, ஜான் ஆபிரகாம் என்று சில பெயர்களை உடனே நினைவு கூர முடிகிறது. ஆனால் இங்கு காட்சி ஊடகத்தைப் பற்றின அறிவு மிகக் குறைவாக இருக்கிறது. ஒரு காட்சியைப் பயன்படுத்தி சொல்லக்கூடிய இடங்களில் கூட வசனத்தைப் பயன்படுத்துகிறார்கள். ரசிகர்களுக்குப் புரிய வேண்டும் என்பது இவர்களின் மேதாவித்தனமான வாதம். ரசிகர்கள் எப்போதோ முன்னால் வந்துவிட்டார்கள் என்பதை யாராவது இவர்களுக்குச் சொன்னால் நன்றாக இருக்கும்.

தொடர்புடைய பதிவு: நாங்க பிலிம் காட்றம்ல

(மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது, உலகின் மிக முக்கியமான படங்களாக நான் கருதும் 10 படங்களின் வரிசையில் உள்ள சத்யஜித்ரே இயக்கிய 'சாருலதா'வின் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி)

suresh kannan

30 comments:

Anonymous said...

தல, பின்னிப் பெடலெடுத்திட்டீங்க. நானும் காமா சோமாவென்று திரைவிமர்சனம் எழுதுகிறவன்தான். இப்போது குற்ற உணர்வாக இரு்க்கிறது. நாங்களும் மேலே வருவோம். வெயிட் பண்ணுங்க. :-)

ஷங்கி said...

என்னுடைய கருத்து சொல்லணும்னு குறுகுறுங்குது, கை பரபரங்குது. ஆனா பின்னூட்டம் பதிவை விட பெரியதாகிவிடும்னு பயமாயிருக்கு! ஒரு பதிவு போட ஐடியா குடுத்திருக்கீங்க. போட்டுருவோம். ஒரே வரில சொல்லணும்னா, அவரே கேட்டு அல்லது (இடுகைகள்) போட்டு வாங்கறாரு. நான், நீங்க சொல்லும் உங்களின் அந்தப் பதிவைப் படித்ததில்லையென்றாலும் பொதுவாக, உங்க எழுத்துகளை நான் படித்தவரையில் உங்களுக்கு அந்த மாதிரி எதிர்வினை வந்திருக்கக் கூடாதுதான். :( ஆனா எழுத்தாளன் எல்லாத்தையும் கடந்துதான் வரணும் இல்லையா?

Anonymous said...

Rotten Tomatoes. :-)))

அப்பத்தானே இன்னொரு நீளமான பதிவு எழுதுவீங்க. :-))

geethappriyan said...

:)

குப்பன்.யாஹூ said...

சிலருடைய பார்வை அந்த மாதிரி,

அடுத்தவர் எழுதயுள்ளதில் குறை கண்டு பிடித்து விட்டேன் பாரடா என்ற மனப்போக்கு.

உங்களின் பாடல்கள் இல்லாத திரைப்படம் பற்றிய பதிவில் கூட ,பின்னூட்டம் முத்லில் அந்த படங்களின் பட்டியல் தவறை பற்றியே இருந்தது, பின்பு தடம் மாறியது.

ஆனால் இப்போது இத்தனை டிவி அலைவரிசைகள் உள்ள காலத்தில் இன்னமும் திரை விமர்சனம் எழுதி பதிவு உலகை நாம் வீனடிக்கிரோமோ என்று எனக்கு கவலையாக உள்ளது.

வருண் said...

I dont think all these are necessary. If you have taken from the wiki, you need to just admit that. If not, justt ell him you DID NOT.

You and charu are showing your EGO here and you BOTH look like real clowns by justifying your mistakes! Is it necessary??

****ஆனால் இன்று இணையத்தில் எந்தவொரு குப்பைப் படத்தையும் முதல் நாளே அடித்துப்பிடித்து பார்த்துவிட்டு அதைப் பற்றி நான்கு பத்திகள் எழுதிவிட்டு 'விமர்சனம்' என்று தலைப்பு போட்டுக் கொள்பவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.****

Really?!!

So, if a person watches a movie ONLY once he/she does not qualify for writing a review on it?!

How do you and charu come up with these kinds of nonsense???

Charu makes lots of mistakes when he is writing a review. He gives credits for a singer who did not doplay back for the song. When someone points out the mistakes, he needs to just ADMIT it like a gentleman, PERIOD!

Instead of that, he is trying to justify by calling himself as an idiot (as if he is a genius) and putting down the guy who corrects him!

So if you are qualified reviewer- according to your definition- a layman should not correct your mistakes or what???

Let it be you or the other genius Charu, whenever whatever you said orclaimed is not correct, JUST ADMIT it. If the point brought up by the "reader" is indeed wrong and you were not wrong, JUST correct him.

Would you stop lecturing about how many times one should watch a movie and, who qualifies for writing a review and all that sort of crap, PULESE!!!!

Anonymous said...

இதுதான் இப்போ புது பேஷன் ...

தங்களுக்கு வந்த விமர்சனத்தை தாங்களே விமர்சிப்பது.

விளம்பரம் தேட இப்ப இதுதான் சிறந்த வழி
அதிலேயும் நீங்க ரொம்ப வித்தியாசம் பாருங்கோ சாருவோட உங்கள ஒப்பிட்டு பேசுரீங்கோ...

அதுக்கு வக்காலத்து வாங்கவே ஒரு கூட்டம்.

உங்களுக்கு எழுத கரு இல்லா விட்டல் சும்மா இருக்க வேண்டியதுதானே! அதுக்கு என் உங்களைப் பற்றி புகழ்ந்து எங்களைக் கொல்லுறீங்கோ.

Anonymous said...

நல்லது.

பிச்சைப்பாத்திரம் said...

சங்கர், கார்த்திகேயன்,குப்பன்_யாஹூ (உங்கள் பெயர்க் காரணத்தை அறிய சிறிய ஆவல் :-), வருண்,pukalini, மற்றும் அனானிஸ் நன்றி.

//என்னுடைய கருத்து சொல்லணும்னு குறுகுறுங்குது//

சங்கர்: நிச்சயம் எழுதுங்க.

//திரை விமர்சனம் எழுதி பதிவு உலகை நாம் வீனடிக்கிரோமோ//

இல்லை நண்பரே. தேவைதான்.

வருண், என்னுடைய பதிவை முற்றிலும் எதிர்மறையாக புரிந்து கொண்டுள்ளீர்களோ என்று சந்தேகமாக உள்ளது. ஒருவர் தன்னுடைய கலையனுபவத்தை சொல்லும் போது அதிலுள்ள சிறிய பிழைகளை பொருட்படுத்தாதீர்கள் என்பதுதான் நான் ஆதாரமாக சொல்ல வந்தது. மாறாக அதைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று கொண்டாடாதீர்கள் என்பதும்தான்.

ஒரு வார்த்தைக்கு பொருள் தெரிய அகராதியைப் புரட்டுவது போல்தான் கலைக்களஞ்சியங்களைப் பயன்படுத்துவதும். ஒவ்வொன்றிற்கும் source கொடுக்க வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட லிங்க்குகளை மாத்திரம் வரிசைப்படுத்தி தந்து விட்டு நாம் ஒதுங்கிக் கொள்ள வேண்டியதுதான். அப்புறம் 'என்னுடைய' அனுபவம் எங்கிருந்து அந்தப் பதிவில் இருக்கும்?

சினிமா பற்றி எழுதும் எல்லா பதிவர்களையும் நான் குறிப்பிடவில்லை என்பதை நீங்களே உணர்ந்திருப்பீர்கள். பல நல்ல முயற்சிகள் இணையத்தில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நான் சுட்டிக் காட்ட விரும்புவது 'எதையோ எழுதி' நானும் ஒரு பதிவு போட்டேன் என்று மகிழ்கிறவர்களைப் பற்றி. இணையம் ஏற்படுத்தியிருக்கிற பிரம்மாண்டமான கருத்துச் சுதந்திர மேடையில் எல்லேர்ருக்குமே தங்களை வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்பை அற்பமாக பயன்படுத்தாதீர்கள் என்பதும் நான் சொல்ல விரும்பினது.

மற்றபடி உபதேசம் செய்யும் ஆசையும் நோக்கமும் எனக்கில்லை. எனக்கும் கூட அது பிடிக்காது. இதை பலமுறை தெளிவுப்படுத்தியுள்ளேன். எரிச்சலையடைமாலும் முன்முடிவுகளை கைவிட்டும் என்னுடைய பதிவுகளை படித்தால் ஒருவேளை இதை நீங்கள் உணரலாம் என்று கருதுகிறேன். திரும்பத் திரும்ப இதைப் பேசிக் கொண்டிருக்க முடியாது.

Sridhar V said...

மிகச் சரி! விமர்சனம் என்பது மிகவும் அதீதமாகவும் அபத்தமாகவும் புரிந்து கொண்டுதான் நிறைய பேர் கிழிக்கிறேன் பேர்வழி என்று கிளம்பிவிடுகிறார்கள்.

எனக்கும திரைப்படம் பார்க்கும் அளவிற்கு அதை விமர்சனம் என்று பிரித்துப் போட்டு மேய வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதில்லை. ஆனால் பார்த்த படங்களின் பட்டியலை பதிய வேண்டும் என்ற எண்ணம் இன்னமும் இருக்கிறது. கதையைப் பற்றி விக்கிபீடியா / IMDB போன்ற தளங்கள் விரிவாகவே விளக்கிவிடுவதால் அந்த தளங்களுக்கு தொடுப்பு கொடுத்து ஓரிரணடு வரிகளில் முடித்துக் கொள்ளத்தான் தோன்றுகிறது. இதுவும் கூட சீக்கிரம் அற்றுப் போய்விடும் என்று நினைக்கிறேன் :))

Anonymous said...

'ஒரு விமர்சகனுக்கு சம்பந்தப்பட்ட துறையில் ஆழமான ஞானமும், சமகால நிகழ்வுகளைப் பற்றின அறிவும், நடைமுறை சிரமங்களையும் அனுபவங்களைப் பற்றியும், அதனுடைய எதிர்காலம் பற்றியும் அ முதல் ஃ வரை தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று எழுதாமல் தான் எழுதுகிற ஒவ்வொரு வார்த்தையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அறிந்து வைத்திருக்க வேண்டும்'

இந்த அடிப்படையில் பார்த்தால் சாருவின் விமர்சனங்கள், ஜெயமோகன் எழுதுவது உட்பட தமிழில் எழுதப்படும் 99.9999% விமர்சனங்கள் நிராகரிக்கப்படவேண்டும்.

லக்கிலுக் said...

பொதுவாக வெகுஜன, மசாலா படங்கள் மற்றும் அவற்றின் ரசிகர்கள் மீதான உங்கள் பார்வையும் எழுத்தும் என்னை நிறையவே எரிச்சல்படுத்துகிறது. அவற்றை வாசிக்கும்போது நீங்கள் மட்டுமே அறிவுஜீவி, மற்றவர்கள் முட்டாளென்ற தொனி நிச்சயமாக தொக்கி நிற்கிறது. நான் மட்டும் அப்படி உணரவில்லை. சில நண்பர்களோடு பேசும்போது அவர்களும் இதை உணர்ந்திருக்கிறார்கள். இப்பதிவிலும் அத்தொனியை சில பத்திகளில் பார்க்க முடிகிறது. மசால் தோசை விமர்சனத்தை சுவையாக எழுதுவதும் உலகப்பட விமர்சனம் எழுதுவது மாதிரி சவால்தான். குமுதத்தின் அந்நாளைய மசாலா விமர்சனங்களின் தரத்தை, சுவையை நீங்கள் இன்று நினைத்தாலும் எழுதமுடியாது என்று என்னால் சவாலே விடமுடியும்.

ஆனால் அதற்காக ஒரு அனானி நீங்கள் படம் பார்த்து எழுதும் விமர்சனங்களை காமாசோமோவென்று விக்கிபீடியா என்று போட்டுவிட்டு செல்வது மோசமான வன்முறை. உங்கள் உழைப்பை கொச்சைப்படுத்தும் செயல். சாருவின் அந்த எதிர்வினைக்கான சூழலை மிகச்சரியாக இப்பதிவில் படம் பிடித்திருக்கிறீர்கள்.

பிச்சைப்பாத்திரம் said...

Sridhar Narayanan, லக்கிலுக், அனானி நன்றி.

//ஓரிரணடு வரிகளில் முடித்துக் கொள்ளத்தான் தோன்றுகிறது. //

Sridhar, படத்தின் கதை, மற்றும் இன்னபிற தகவல்களை விட்டுவிடுங்கள். அவற்றை ஆர்வமுள்ளவர்கள் தேடி அறிந்து கொள்வார்கள். ஆனால் பல திரைப்படங்களைப் பார்க்கும் நீங்கள் அவற்றில் உங்களை மிகவும் கவர்ந்த படமொன்றை இன்னொருவருக்கு அறிமுகப்படுத்தும் அவற்றைப் பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் எழுதுவதை நான் முக்கியமாக கருதுகிறேன். எனவே இது தேவையானதுதான் என்பது என் பார்வை.

திரைப்படங்கள் இருக்கின்ற வரை திரை விமர்சனங்களும்,அவற்றைப் பற்றின தனிநபர் பார்வைகளும் இருந்து கொண்டேதானிருக்கும்.

(அது சரி, ஏன் யாரும் தான் ரசித்த ஷகிலா வகையறாக்கள் நடித்த படத்தைப் பற்றியோ, porn வகைப் படங்களைப் பற்றியோ விமர்சனம் எழுதுவதில்லை?) :-))

பிச்சைப்பாத்திரம் said...

//தமிழில் எழுதப்படும் 99.9999% விமர்சனங்கள் நிராகரிக்கப்படவேண்டும்.//

அனானி நண்பரே. :-))

நான் 'விமர்சனம்' என்கிற வார்த்தையைப் பயன்படுத்துவதைப் பற்றிதான் எழுதியிருந்தேன். அதுவும் கூட என்னுடைய தனிப்பட்ட கருத்துதான். அதுதான் பொதுவிதி என்று நிறுவ முற்படவில்லை.

விமர்சகர்களைப் பற்றிய நகைச்சுவை ஒன்றிருக்கிறது.

"அவர்களுக்கு வழி சொல்லத் தெரியும். ஆனால் வண்டி ஓட்டத் தெரியாது"

பிச்சைப்பாத்திரம் said...

லக்கி,

உங்கள் பின்னூட்டத்திற்கே தனி்ப்பதிவு போட வேண்டும் போல உள்ளதே. :-) (ஆரம்பிச்சுட்டான்யா)


//உங்கள் பார்வையும் எழுத்தும் என்னை நிறையவே எரிச்சல்படுத்துகிறது.//

இது இயற்கைதான். நானும் இதை மற்றவர்களின் எழுத்துக்களில் உணர்ந்திருக்கிறேன்.

மேலும் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்தால் என்ன பயன்? ஆனால் இவ்வாறாக வாசிப்பவர்களை எரிச்சலடைய வைக்க வேண்டும் என்பதையே பிரதான அஜெண்டாவாக வைத்திருப்பவர்களை புறக்கணித்து விடுவோம். ஆனால் என்னுடைய நோக்கம் நிச்சயம் மற்றவர்களை எரிச்சல் மூட்டுவது அல்ல. ஒருவரை வெறுக்க வைப்பதன் மூலம் என்ன லாபத்தை அடைய முடியும்? எதிரிகளை சம்பாதிப்பதை தவிர.
ஆனால் ஏன் இவ்வாறான தொனி ஒருவேளை தென்படுகிறது என்று யோசித்துப் பார்க்கிறேன்.

()

நான் உயர் குடியில் பிறந்தவன் அல்ல. சுமாரான ஆங்கில அறிவை பெருமுயற்சிக்குப் பிறகு பெற்றவன். பெரும்பாலானோரைப் போலவே மட்டமான வணிக சினிமாவை விசிலடித்து கொண்டாடி மகிழ்ந்தவன்தான் நானும். 'என் தலைவன் மாதிரி வருமாடா.. டபுக்கு' என்று விவாதங்கள் புரிந்தவன்.

Jean-Luc Godard, Krzysztof Kieslowski என்று யாராவது பேசும் போது ".. தோடா வன்ட்டாரு பிலிம் காட்ட" எனறு எரிச்சலுடன் எள்ளி நகையாடியிருக்கிறேன்.

பின்னர் நிதானமாக யோசித்துப் பார்க்கும் போது அவர்கள் சொல்லும் இயக்குநர்களையும் படங்களையும் நான் இன்னும் அறியாமல் இருப்பதும் அவற்றை நம்மால் புரிந்து கொள்ள முடியுமா என்கிற தாழ்வு மனப்பான்மையும்தான் அந்த கிண்டலையும் எரி்ச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர முடிந்தது. பின்னர் மெல்ல நகர்ந்ததில் இன்று நான் வணிக சினிமா ரசிகர்களின் எதிர் முனையில் நிற்பதை உணர முடிகிறது.

இன்று என்னால் எந்தவொரு வணிக சினிமாவையும் அவற்றை புளகாங்கிதத்துடன் பேசுபவர்களையும் சகித்துக் கொள்ளவே முடிவதில்லை. [இது ஒரு பலவீனமாகவும் இருக்கலாம்.] எனவே அவர்களை கிண்டலடித்தாவது என் பக்கம் இழுக்க முடியுமா என்று முயல்கிறேன். அம்மாதிரியான முயற்சிகள் சில சமயம் அதீதமாகவும் வாசிப்பவரை எரிச்சலையடையவும் வைத்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் என் உயரம் எனக்குத் தெரியும். எப்போதுமே மேதமைத்தனத்துடன் எழுத முயன்றதில்லை. மீறி நிகழ்ந்தால் அது என்னுடைய இயல்பின் ஒரு பகுதி என்று எடுத்துக் கொள்ளலாம்.

//மசால் தோசை விமர்சனத்தை சுவையாக எழுதுவதும்//

point taken. :-)

//சாருவின் அந்த எதிர்வினைக்கான சூழலை மிகச்சரியாக இப்பதிவில் படம் பிடித்திருக்கிறீர்கள்.//

சாருவிற்கு ஆதரவாக எழுதியதால் இந்தச் சலுகையா? :-)))) (சும்மா தமாசு).

லக்கிலுக் said...

சு.க!

//இன்று என்னால் எந்தவொரு வணிக சினிமாவையும் அவற்றை புளகாங்கிதத்துடன் பேசுபவர்களையும் சகித்துக் கொள்ளவே முடிவதில்லை. [இது ஒரு பலவீனமாகவும் இருக்கலாம்.] எனவே அவர்களை கிண்டலடித்தாவது என் பக்கம் இழுக்க முடியுமா என்று முயல்கிறேன். அம்மாதிரியான முயற்சிகள் சில சமயம் அதீதமாகவும் வாசிப்பவரை எரிச்சலையடையவும் வைத்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் என் உயரம் எனக்குத் தெரியும். எப்போதுமே மேதமைத்தனத்துடன் எழுத முயன்றதில்லை. மீறி நிகழ்ந்தால் அது என்னுடைய இயல்பின் ஒரு பகுதி என்று எடுத்துக் கொள்ளலாம்.//

உங்கள் சூழலை புரிந்துகொள்ள முடிகிறது.

பள்ளியில் படிக்கும் போது கூடப்படிக்கும் மாணவன் நம்மை விட ஒரு அங்குலம் உயரம் குறைவாக இருப்பான். ஆனாலும் ‘நான் தாண்டா உன்னைவிட உயரம்’ என்று சொல்லும்போது நமக்கு எரிச்சல் வருவது இயல்பானதே.

அதேநேரம் அவன் தான் உயரம் என்று அவன் தீவிரமாக நம்பும்போது அதை நாம் மறுத்தோமென்றால் நம்மீது அவனுக்கு எரிச்சல் வருவதும் இயல்பானதே.

நான் பயன்படுத்த வந்த உவமானம் எனக்கே சரியாக புரியவில்லை :-( உங்களுக்குப் புரிந்தால் சரி.

கொஞ்ச நாட்களாக மற்றவர்களின் சூழலையும் புரிந்துகொள்ளும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறேன். “எந்த வாசலையும் மூடிவைக்காதே” என்று ஒரு சூஃபி ஞானி அறிவுரை சொல்லி இருப்பதால்.


//சாருவிற்கு ஆதரவாக எழுதியதால் இந்தச் சலுகையா? :-)))) (சும்மா தமாசு).//

சாரு மறுபடியும் சாய்பாபா அதுஇதுவென்று எழுதி கொல்கிறார். அவரை இதற்காக நீங்கள் திட்டினாலும் மகிழ்வேன் :-)

இருந்தாலும் அவ்வப்போது குஷிப்படுத்தி விடுகிறார். பவாசெல்லத்துரை பற்றி எழுதும்போது, “உத்தமத் தமிழ் எழுத்தாளனை கூட நல்லவரென்று சொல்பவரென்றால் பவா எவ்வளவு நல்லவரென்று பார்த்துக் கொள்ளுங்களேன்” மாதிரியான அவரது கமெண்டுகள்தான் அவரது ரசிகர்களுக்கு கரும்புக்கட்டு!

லக்கிலுக் said...

// குமுதத்தின் அந்நாளைய மசாலா விமர்சனங்களின் தரத்தை, சுவையை நீங்கள் இன்று நினைத்தாலும் எழுதமுடியாது என்று என்னால் சவாலே விடமுடியும்.//

இந்த கருத்துக்கு ஒரு உதாரணமும் கொடுத்தால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்.

ரசிகன் படத்துக்கு குமுதம் எழுதிய விமர்சனம். அந்த விமர்சனத்தை சுஜாதா எழுதினார் என்றும் சொல்வார்கள்.

ரவி said...

//ஆனால் ஏன் இவ்வாறான தொனி ஒருவேளை தென்படுகிறது என்று யோசித்துப் பார்க்கிறேன்.///

முதலில் அதை செய்யவும். அப்படி செய்யும்போது தன்னை தவிர மற்ற எல்லோரும் முட்டாள்கள் என்று நினைக்காமல் இருந்தால் எதாவது பிடிபடலாம்....

...எரிச்சலடைந்தவன்...

குப்பன்.யாஹூ said...

lakky- ரசிகன் படத்திற்ற்கு சுஜாதா தான் விமர்சனம் எழுதினார், அப்போதுதான் அவர் குமுதம் ஆசிரியர் பொறுப்பு ஏற்ற காலம்.

படம் மிக பெரிய குப்பை, விஜய்க்கு எதிர்காலம் இல்லை என்று எல்லாம் எழுதினார்.

என் போன்ற சங்கவி ரசிகர்கள்ளுக்கு அப்போது சுஜாதா மீது மிகுந்த கோபம்.

சுஜாதா எழுதி இருந்தார். குடும்ப படம் என்று பெயர், ஆம் அப்பா இயக்குனர், அமா தயாரிப்பாளர், இந்த பய்யனை வேறு எந்த தயாரிப்பாளரும் நடிக்க வைக்க மாட்டார்கள் என்று.

(படம் சங்கவிக்காகத்தான் ஓடியது என்பது ஊர் அறிந்த ரகசியம்)

கிரி said...

//நான் சுட்டிக் காட்ட விரும்புவது 'எதையோ எழுதி' நானும் ஒரு பதிவு போட்டேன் என்று மகிழ்கிறவர்களைப் பற்றி. இணையம் ஏற்படுத்தியிருக்கிற பிரம்மாண்டமான கருத்துச் சுதந்திர மேடையில் எல்லேர்ருக்குமே தங்களை வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்பை அற்பமாக பயன்படுத்தாதீர்கள் என்பதும் நான் சொல்ல விரும்பினது. //

வழிமொழிகிறேன்.. நல்லா கூறி இருக்கீங்க சுரேஷ் கண்ணன்

//ஒரு விமர்சகனுக்கு சம்பந்தப்பட்ட துறையில் ஆழமான ஞானமும், சமகால நிகழ்வுகளைப் பற்றின அறிவும், நடைமுறை சிரமங்களையும் அனுபவங்களைப் பற்றியும், அதனுடைய எதிர்காலம் பற்றியும் அ முதல் ஃ வரை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.//

இது எல்லாம் நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று, இவ்வாறு பார்த்தால் ஒரு சில இயக்குனாராலையே எழுத முடியாது.

ஆனால் இங்கு விமர்சனம் எழுதும் பலரும் தங்கள் சுய விருப்பு வெறுப்புகளை மனதில் வைத்தே எழுதுகின்றனர். தங்களுக்கு பிடிக்காத நடிகர், இயக்குனர் என்றால் அந்த படத்தை கிண்டலடித்து எதோ பேருக்கு கொஞ்சம் நல்லபடியாக கூறி விட்டு செல்கிறார்கள்.

எனக்கும் விமர்சனம்!!! எழுதும் போதும் குற்ற உணர்ச்சியாகவே இருக்கும், நாம் சரியாக எழுதுகிறோமா என்று, ஒவ்வொரு முறையும் இதைவிட நன்றாக எழுத வேண்டும் என்றே முயற்சி செய்கிறேன். எனவே இந்த விமர்சனம் தான் சரியான விமர்சனம் என்று யாராலும் சான்றிதல் அளிக்க முடியாது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் பார்வையை பொறுத்தது.

சுருக்கமாக கூற வேண்டும் என்றால் சுய விருப்பு வெறுப்புகளை விட்டு எழுதும் விமர்சனம் மட்டுமே சரியான விமர்சனமாக வர முடியும் (நீங்கள் கூறியபடி இல்லை என்றாலும் கொஞ்சமாவது அது பற்றி அறிந்து இருந்தது வைத்து எழுதுவது நல்லது)

நீங்கள் கூறிய விதம் பலருக்கு பிடிக்காமல் போய் இருக்கலாம், ஆனால் உங்கள் எண்ணம் அல்லது நீங்கள் சொல்ல வந்த விஷயம் சரியானது தான் என்பது என் தனிப்பட்ட கருத்து.

Anonymous said...

There is something called "Disclosure" or Courtesy statement.Everyone does it honestly in the western world. Indian and Tamil media, film directors,writers and offlate bloggers like you dont even think about mentioning it.Biggest culprit is "Ulaganayagan Kamal" I agree about the way we should use the online encylos. at this internet era but there is also something called "giving credits" to the person who really collected those information and made it available to you& the community.

What the layman readers like " your-super-sruesh-kannan" fan club think ? They will think "Suresh Kannan" is great " arivu kolunthu"; there is no one like surresh to write about movies.

Kannan

பிச்சைப்பாத்திரம் said...

சில பின்னூட்டங்கள் வேறு வழியில்லாமல் நீக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நண்பர் தமிழும் அல்லாமல் ஆங்கிலமும் அல்லாமல் தமிழையே ஆங்கிலத்தில் அனுப்பியிருக்கிறார். பொதுவாக இவ்வகையாக எழுதப்பட்ட வாக்கியங்களை படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் எனக்கு மிகச் சிரமமாய் இருக்கிறது. எனவே அந்த நண்பரை நான் கேட்டுக் கொள்வது:

முடிந்தால் தமிழில் எழுதுங்கள். அல்லது நேரடியாக ஆங்கிலத்தில் எழுதி விடுங்கள். இந்த இரண்டாங்கெட்டான் மொழியை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. :-)

என்னுடைய பார்வைக்கு முற்றிலும் எதிர்மறையான கருத்துக்களை - அதி்ல் ஆபாச வசைகள் கலந்திருக்காத பட்சத்தில் - பிரசுரிக்க எந்த தயக்கமும் காட்டுவதில்லை.

Beski said...

ஓக்கே ஒக்கே...

அடுத்தவங்களப் பத்திலாம் கவலப்படாதீங்க...
இன்னும் பல நல்ல படங்களைப் பார்க்கனும்னு ஆசயா இருக்குற என்ன மாதிரி ஆளுங்களுக்கு உங்க உலக சினிமா யூஸ் ஆகும்.

Madhan said...

Nice Article Suresh. Conveyed your thoughts well in a coherent Manner. A true Vasagan can easily found out the Plagiarism from Wiki or IMDB. If we see a film we got a experience that we wish to share, if someone got someother view that too also welcome.

Madhan said...

Btw, Charulatha is a classic, totally agreeing with you. What a movie?. I loved the Subtle feelings that Ray expresses between those two characters and Finishing the Film with "Nishranthi" adds a new dimension. Glad to c u too liked that movie. Do u have any Spl Post on Ray?

பிச்சைப்பாத்திரம் said...

எவனோ ஒருவன், மதன் நன்றி.

//Do u have any Spl Post on Ray?//

மதன், ரேவை என்கிற தனிமனித ஆளுமையைப் பற்றி தனியாய் பதிவு எழுதியதில்லை. ஆனால் தேவைப்படும் இடங்களில் எல்லாம் அவரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். அவரின் சில படங்களை (nayak, pather pachali) போன்றவற்றைப் பற்றி இந்த வலைப்பதிவில் எழுதியிருக்கிறேன். மேலே உள்ள search ஆப்ஷனில் சத்யஜித்ரே என்று போட்டுப் பார்த்தால் அவை கிடைக்கும். நன்றி.

ரா.கிரிதரன் said...

உங்களை 32 கேள்விகள் மீம் பதிவுக்கு அழைக்கிறேன். மறக்காம வந்துவிடுங்கள்.நன்றி.

http://beyondwords.typepad.com/beyond-words/2009/07/vital-statistics-32-trivial-questions.html

Karthik S said...

I'm used to read your post daily in the morning. No post for five days...are u ok???

பிச்சைப்பாத்திரம் said...

கார்த்திக், விசாரிப்பிற்கு நன்றி. நலமாகவே இருக்கிறேன். வேலைப்பளு அதிகமென்பதாலும் பொதுவாழ்க்கைப் பணியில் சற்று கவனம் செலுத்தியதாலும் எழுத முடியவில்லை. :-)

பதிவுகள் தொடரும். நன்றி.

பிச்சைப்பாத்திரம் said...

கிரிதரன், அழைப்பிற்கு நன்றி. ஏற்கெனவே இந்த சடங்கை செய்து முடித்து விட்டேன். விருப்பமிருந்தால் அதை இங்கு பார்க்கலாம். உங்கள் பதில்களும் சுவாரசியமாய் இருந்தன.