Friday, June 12, 2009

சரோஜாதேவி புத்தகமாவது வேண்டும்...


இன்றைக்கு இணையத்தில் எத்தனையோ வலைத்தளங்களில் எத்தனையோ இலக்கியப் படைப்புகள் வாசிக்க கிடைத்தாலும் அச்சான புத்தகங்களைப் படிப்பது போன்ற சுகம் எதிலும் கிடைக்கவில்லை. சுவற்றில் சாய்ந்து கொண்டு, கட்டிலில் குப்புறப்படுத்துக் கொண்டு, பால்கனியில் அமர்ந்து கொண்டு, மொட்டைமாடியில் சேர் போட்டுக் கொண்டு, ஏன் கழிவறையில் கூட படிக்கும் வசதி புத்தகங்களின் மூலமே சாத்தியம். (மடிக் கணினியை இதில் சேர்க்க வேண்டாம்) மனையாள் சுகம் போல (நன்றி பாலகுமாரன்) இதுவே இயல்பானதாக எனக்குத் தோன்றுகிறது.

oOo

சிறுவயதில் எல்லாச் சிறுவர்களையும் போல அம்புலிமாமாவில் என் வாசிப்பு அனுபவம் தொடங்கினாலும், தோராயமாக ஒரு 18 வயதில் அது வெறியாகவே மாறியதின் அர்த்தம் இன்றும் எனக்கு விளங்கவில்லை. இத்தனைக்கும் எங்கள் குடும்பத்தில் யாருக்கும் இந்தளவு புத்தகப் பைத்தியமாக இருந்ததில்லை.

நேற்றுத்தான் பார்த்திருப்பேன் என்றாலும் இன்றைக்கும் பிளாட்பார புத்தகக் கடைகளை பார்த்ததும் தாமாகவே என் கால்கள் நின்றுவிடும், ஏதாவது புதிதாக இன்று வந்திருக்கிறதா என்று. அண்ணா சாலை பக்கம் போகும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் லேண்ட்மார்க்கிலும், ஹிக்கின்பாதம்ஸிலும், புக்பாயிண்டிலும் போய் எந்தெந்த புதுப் புத்தகங்கள் வந்திருக்கிறது என்று வேடிக்கை பார்த்துவிட்டு வருவது வழக்கம். சில புத்தகங்களை வாங்க ஆசையிருந்தாலும் விலையைப் பார்த்து மிரண்டு போய் பெருமூச்சுடன் வைத்து விட்டு வருவேன். சில சமயம் அந்தக் குளிர்பதனம் செய்யப்பட்ட கடையில் நீண்ட நேரம் இருந்து விட்டு எதுவும் வாங்காமல் வர வேண்டிய குற்ற உணர்ச்சியில் ஏதாவது ஒரு புத்தகத்தை வாங்கிவருவதும் வழக்கம்.

எநதப் புத்தகத்தை வாங்கினாலும் அது 16 வயது ஐஸ்வர்யா போல் புது மெருகுடன் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பேன். அட்டை சிறிது சேமடைந்திருந்தாலோ, ஏதாவது பக்கங்கள் சற்று கிழிந்திருந்தாலோ, அது நான் ரொம்ப நாட்களாக தேடிய புத்தகமாகவோ இருந்தாலும், வாங்க மாட்டேன். (ஒரு முறை ஹிக்கின் பாதம்ஸில் வாங்கிய சுஜாதாவின் 'பதவிக்காக' நாவலில் பல இடங்களில் மடித்து வைத்த அடையாளமிருந்தது. வாங்கி வந்தபின்புதான் இதைக் கவனித்தேன். இந்தப் புத்தகத்தை வாங்க வசதியில்லாத அல்லது விருப்பமில்லாத யாரோ இதை தவணை முறையில் கடையிலேயே நின்று படித்திருக்க வேண்டும். மறுநாளே அதை எடுத்துக் கொண்டு போய் வேறு புத்தகம் கேட்டேன். மன்னிப்பு கேட்டுக் கொண்டு மாற்றி கொடுத்தார்கள்)

அதே போல் என்னுடைய சொந்த புத்தகமாகவே இருந்தாலும் விருப்பமான வா¢களை அடிக்கோடிடுவதோ, ஏதாவது குறிப்பு எழுதுவதோ எனக்கு அறவே பிடிக்காத ஒன்று. வாங்கின அன்று இருந்த மாதிரியே புதுசாக வைத்திருக்க நிறைய பிரயத்தனப்படுவேன். நூல் நிலைய புத்தகங்களில் இது மாதிரி பல அபத்தங்களை பார்த்திருக்கிறேன். ஒரு சிறுகதைத் தொகுதியில், ஒவ்வொரு சிறுகதைக்கும் ஒருவர் அவருடைய பொன்னான கருத்தை எழுதி வைத்திருந்தார் ஒரு பிரகஸ்பதி. சில சமயம் சுவாரசியமான குறிப்புகளும் காணக்கிடைக்கும். ('இந்தப் புத்தகத்தை எழுதிய இருகூரானை இருகூறாக பிளக்க வேண்டும்' - 'இந்தப் புத்தகத்தை படிக்கும் நேரத்தில் சவரக்கடையில் வேலை செய்து சம்பாதிக்கலாம்' என்பது மாதிரி)

oOo

ஒரு சமயத்தில் சென்னையில் உள்ள எல்லா பெரிய நூல்நிலையங்களிலும் நான் உறுப்பினராக இருந்திருக்கிறேன்.

அமெரிக்கன் நூல்நிலையம்

இதில் உறுப்பினராக எந்த கட்டணமும் தேவையில்லை. இந்த விலாசத்தில்தான் தங்கியிருக்கிறேன் என்று ஒரு அத்தாட்சியும், பணிபுரிகின்ற நிறுவனத்திலிருந்து ஒரு கடிதமும் கொடுத்தால் உறுப்பினராக சேர்த்துக் கொள்வார்கள். துப்பாக்கி ஏந்திய செக்யூரிட்டி காவலர்களைத் தாண்டி போகும் போது பெருமையாகவே இருக்கும். அமெரிக்க எழுத்தாளர்கள் எழுதின புத்தகங்கள் மட்டுமே இருப்பதால் ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிக்கின மாதிரி எனக்கு ஒரு பிரமை.

எர்னஸ்ட் ஹெமிங்வே, வில்லியம் பாக்னர் ஆகியோ¡¢ன் புத்தகங்களை இங்குதான் படிக்க முடிந்தது. நூல்நிலையம் ஏ.சியெல்லாம் போட்டு டாம்பீகமாக இருக்கும். டைம் போன்ற நிறைய வெளிநாட்டுப் பத்திரிகைகள் கிடைக்கும். ஹெட்போன் போட்டு சிலர் மெளன வீடியோப்படம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நான் போகும் போதெல்லாம் யாராவது அமர்ந்து கொண்டு, எனக்கு சந்தர்ப்பமே வாய்த்ததில்லை. தொலைபேசியிலேயே புத்தக டியூவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

பிரிட்டிஷ் கவுன்சில்

பணக்கார நூல்நிலையம். கட்டணம் சாமான்யர்களுக்கு அதிகம். இங்கு ஒராண்டு உறுப்பினராக இருந்தேன். அங்கு வைத்திருக்கும் புத்தகங்களோடு ஒப்பிடுகையில் கட்டணம் குறைவுதான். அமெரிக்க நூலகத்தை விட வசதிகள் அதிகம். போகும் போதெல்லாம் அங்கிருக்கும் அழகான பெண் பணியாளர்களிடம் ஏதாவது கேட்டு கடலை போடுவது என் வழக்கம். எல்லாத் தலைப்புகளிலும் புத்தகங்களும் வீடியோக்களும் கிடைப்பது வசதியான விஷயம்.

கன்னிமரா நூல்நிலையம்

சென்னையின் ரொம்பவும் பழமையான நூல்நிலையம் என்பது இங்கிருக்கும் கழிவறையை உபயோகிக்கும் போது நினைவுக்கு வரும். (யாரோ, சிறுநீரை வீணாக்காதீர்கள் என்று பென்சிலால் சுவற்றில் எழுதி வைத்திருப்பார்கள்) மலையாள, கன்னட, உருது புத்தகங்களை பார்க்கும் போது இந்த மொழிகளையும் கற்றிருந்தால் இந்தப் புத்தகங்களையும் படிக்கலாமே என்று தோன்றும், என்னமோ தமிழில் அதிகம் கிழித்துவிட்ட மாதிரி. இணையத்திலேயே புத்தகங்களை renewal செய்துக் கொள்ளலாம் என்பது ஒரு வசதி.தேவநேயப் பாவாணர் நூல்நிலையம்

இந்த நூல்நிலையக் கட்டிடத்தில் பல இலக்கியக் கூட்டங்கள் நடந்திருக்கின்றன என்பதை அறிகிறேன். இப்பவும் நடக்கிறது. நூல் நிலையத்திற்குள் பல பேர் நிம்மதியாக மேஜையில் தலை வைத்து தூங்கிக் கொண்டிருப்பார்கள். நூலக பணியாளர்களும் இதைக் கேட்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கும். (தூங்குபவர்கள்தான் பணியாளர்களோ என்று எனக்கு சந்தேகம் வந்ததுண்டு) இங்கு நுழைந்தவுடன் 'அறிவியல்' என்கிற தலைப்பில் உள்ள அடுக்குக்கு செல்வது வழக்கம். அறிவியலில் எனக்கு ஆர்வம் அதிகம் போல என்று தப்புக்கணக்கெல்லாம் போட்டுவிடாதீர்கள். அங்குதான் நிறைய சிறுகதைத் தொகுப்புகளும், நாவல்களும் கிடைக்கும். பணியாளர்கள் தவறாக அடுக்கியது போக, சிலர் தனக்கு வேண்டிய புத்தகங்களை அங்கு ஒளித்து வைத்திருப்பர்.

oOo


இப்பவும் எந்தப் புத்தகக் கடையிலாவது ஆவென்று வாயைப் பிளந்து கொண்டு புத்தகங்களை வேடிக்கை பார்க்கும் ஒருவரை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் விசாரித்துப் பாருங்கள். அது நானாக இருக்கக்கூடும்.

புத்தகங்கள் இல்லாத உலகை என்னால் கற்பனை செய்துக்கூட பார்க்க முடியவில்லை. குறைந்த பட்சம் சரோஜாதேவி எழுதின புத்தகமாகவது இருந்தால்தான் என்னால் உயிர்வாழ முடியும்.

(இது ஒரு மீள்பதிவு. மரத்தடி மடற்குழுமத்தில் செப்,30,2004 அன்று எழுதியது).

suresh kannan

14 comments:

Anonymous said...

//யாரோ, சிறுநீரை வீணாக்காதீர்கள் //

:-)) மூர் மார்க்கெட்டெல்லாம் போனதில்லையா?

Anonymous said...

என்ன பாஸ்.. பழைய பதிவையெல்லாம் இப்படி தூசுதட்டி போட ஆரம்பிச்சுட்டிங்க. உங்க பதிவ ரெகுலரா படிக்கறேன். புதுசா எழதுங்கள

சரவணகுமரன் said...

:-))

thamizhparavai said...

உங்க தளத்தையும் யாராவது ஹேக் பண்ணிட்டாங்களான்னு சந்தேகமா இருக்கு...
இப்படில்லாம் தலைப்பு தேவையில்லை பாஸூ...
உங்க பேரைப் பார்த்தாலே பதிவுக்கு வருவோம் நாங்கள்...

மயிலாடுதுறை சிவா said...

பழைய பதிவை நான் படிக்கவில்லை! ஆனால் இந்த பதிவு புதியது போலதான் உள்ளது!!!

நீங்கள் சொல்வது போல நானும் புத்தகப் ப்ரியன், ஒவ்வோரு முறை புத்தக விழாவில் நண்பர்கள் மூலம் புத்தகம் வாங்குவது வழக்கம்...

ஆனால் நிறைய புத்தகங்களை முழுக்க படிக்கவில்லை!!!

மயிலாடுதுறை சிவா...

குப்பன்.யாஹூ said...

yes reading is a good habit.

now it is proved that reading reduces the stress level.

Sridhar V said...

32 கேள்விகள் - தொடரில் பங்குபெற உங்களையும் அழைத்துள்ளேன். உங்கள் சிறப்பான பதில்களோடு உங்கள் நண்பர்களையும் பங்குகொள்ள செய்யவும். நன்றி!

Dr.Rudhran said...

madras literary society is there in college road. one of the treasure troves of rare books. why dont you join there.

சென்ஷி said...

;)))

மணிப்பக்கம் said...

:):):)

anujanya said...

மீள் பதிவா? கடைசியில் தான் கவனித்தேன்.

நல்லா இருக்கு. உங்கள் ஹாஸ்ய உணர்ச்சி அப்போது அதிகம் இருந்தது போலத் தெரிவது என் பிரமையாக இருக்கக் கூடும் :)

அனுஜன்யா

பிச்சைப்பாத்திரம் said...

சரவணகுமரன்,சிவா,குப்பன்_யாஹூ,
சென்ஷி,மணிப்பக்கம்,
.. நன்றி. நன்றி,

//இப்படில்லாம் தலைப்பு தேவையில்லை//

தமிழ்ப்பறவை: என்ன செய்வது,இணையத்தில் இம்மாதிரியான
gimmicks எல்லாம் செய்ய வேண்டியிருக்கிறதே. நீங்கள் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி.

Sridar,

அழைப்பிற்கு நன்றி. நிச்சயம் எழுதுகிறேன்.

//madras literary society is there in college road.//

டாக்டர் ருத்ரன்: கேள்விப்பட்டிருக்கிறேன். போக முயற்சிக்கிறேன். தகவலுக்கு நன்றி.

//உங்கள் ஹாஸ்ய உணர்ச்சி அப்போது அதிகம் இருந்தது//

அனுஜன்யா: அப்போது எனக்கு திருமணம் ஆகாமலிருந்தது ஒரு காரணமாகக் கூட இருக்கலாம். :-)

ஷண்முகப்ரியன் said...

எநதப் புத்தகத்தை வாங்கினாலும் அது 16 வயது ஐஸ்வர்யா போல் புது மெருகுடன் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பேன். அட்டை சிறிது சேமடைந்திருந்தாலோ, ஏதாவது பக்கங்கள் சற்று கிழிந்திருந்தாலோ, அது நான் ரொம்ப நாட்களாக தேடிய புத்தகமாகவோ இருந்தாலும், வாங்க மாட்டேன். //

இதே கருத்தினை ஓஷோ ‘எனக்குப் பிடித்த புத்தகங்கள்’ என்ற உரையில் சொல்லி இருக்கிறார்,சுரேஷ் கண்ணன்.

Beski said...

அருமை.

மீள்பதிவைத் தொடருங்கள்....