Tuesday, June 02, 2009

"பசங்க" - இன்னுமா பார்க்கலை?


'Boys' திரைப்படம் பார்த்தேன். அதாவது "பசங்க". முதலில் தயாரிப்பாளர் சசிகுமாருக்கும் இயக்குநர் பாண்டிராஜ்-க்கும் ஒரு பூச்செண்டு, வித்தியாசமானதொரு திரைப்படத்தை தந்ததற்காக. குழந்தைகளுக்கான தமிழ்த் திரைப்படங்கள் இதுவரை என்ன வந்திருக்கிறது என்று வாயில் விரலை சூப்பிக் கொண்டு யோசித்தால், நடிகை லட்சுமி இயக்கிய மழலைப்பட்டாளம், மணிரத்னத்தின் அஞ்சலி, மைடியர் குட்டிச்சாத்தான், போன்றவைகளே சட்டென்று நினைவுக்கு வருகின்றன. "பசங்க" முழுமையானதொரு குழந்தைகள் திரைப்படமாஎன்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தப்படத்திலும் தமிழ்ச்சினிமாவின் மிக முக்கிய கச்சாப்பொருளை காதலை இயக்குநரால் கைவிட முடியவில்லை, அது மிக சுவாரசியமாய் சொல்லப்பட்டிருந்தாலும். ஆனால் பதின்மத்திற்குள் நுழையும் சிறுவர்களை பிரதானமாக வைத்து அவர்களின் உலகத்தை மிகச்சிறப்பாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர்.

()

பதின்மத்திற்குள் நுழையும் சிறுவர்களைப் பற்றி நவீன தமிழ் இலக்கியமும் அவ்வளவாய் கண்டுகொண்டதாய் தெரியவில்லை. சுஜாதா மாத்திரம் 'நிலா நிழல்' என்றொரு அற்புதமான நாவலை எழுதியிருக்கிறார். ஒரு சிறுவன் எந்தக் கணத்தில் இளைஞனாகிறான் என்பதே அதன் ஆதார தொனி.

கணையாழியில் தி.ஜா. நினைவு குறுநாவல் போட்டியில் பங்கேற்ற 'கர்னல் தோட்டக் கணக்கு' என்றொரு குறுநாவலை உங்களில் எத்தனை பேர் படித்திருக்கக்கூடும் என்று தெரியவில்லை. அதை நான் திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என்னுடைய பதின்மத்தின் வகுப்பு நினைவுகள் சாக்பீஸ் வாசனையுடன் மலரும். அந்தக் குறுநாவலை அவ்வளவு அற்புதமாக எழுதி, பத்தாவது வகுப்பு படிக்கும் சிறுவர்களின் உலகத்தை கண்முன் நிறுத்தியிருப்பார் சுப்ரமணியன் ரவிச்சந்திரன்.

வழக்கமாக எதிரெதிர் வீட்டிலிருக்கும் பெரியவர்கள் அடித்துக் கொள்வார்கள்; குழந்தைகள் இணக்கமாக இருப்பார்கள். இந்தத் திரைப்படத்தில் மாறுதலாக இரண்டு சிறுவர்கள் பிரதான பாத்திரங்களில் படத்தின் இறுதிக் காட்சிக்கு முன்புவரை மோதிக் கொண்டேயிருக்கிறார்கள். சிறுவர்களின் மோதலை சொல்லும் இயக்குநர் ஜாடையாக இப்போதைய வணிகக் கதாநாயகர்களையும் சகட்டுமேனிக்கு கிண்டலடிக்கிறார்.

'பகோடா' என்றழைக்கப்படும் ஒரு சிறுவன், மிகையான உணர்ச்சி காட்டும் 'வில்ல' சிறுவனை 'நாயக' சிறுவனுக்கு எதிராக .தொடர்ந்து உசுப்பேற்றிக் கொண்டேயிருக்கிறான். [தமிழ் வலைப்பதிவிலும் இவ்வாறான சுவாரசியமான 'பசங்களை' காண முடிகிறது. மிகை உணர்ச்சியுடன் தாராளமான பில்டப்களோடு ஒருவர் பதிவெழுத, 'நச்;, 'சூப்பர், கலக்கிட்டீங்க" "போட்டுத்தாக்கு" என்று பின்னூட்டங்களில் உசுப்பேற்றும் 'பகோடாக்கள்" இங்கும் இருக்கிறார்கள்.] இவ்வாறான அனுபவங்களையெல்லாம் எல்லோருமே கடந்து வந்திருப்பதால் உற்சாகமாகவும் சுவாரசியமாகவும் மலரும் நினைவலைகளுடனும் திரைப்படத்தை ரசித்துப் பார்க்க முடிகிறது. ஆனால் தொடர்ந்து இவற்றையே காண்பித்தால் போரடித்துவிடும் என்று உஷாராக இருக்கும் இயக்குநர் கூடவே அந்த சிறுவர்களின் மற்ற குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும் காண்பிக்கிறார். எல்.ஐ.சி.யில் ஏஜெண்டாக இருக்கும் வாலிபனும் 'பால்வாடி' டீச்சராக இருக்கும் பெண்ணும் காதல் புரிகிறார்கள். அந்தக் குடும்பத்தின் 'தம்பதிகளுக்கு' இடையே ஏற்படும் பிணக்கை எதிர்வீட்டு ஆசிரியர் தன்னுடைய அனுபவங்களின் ஊடாக (சற்று நீளமாக) புத்திசொல்லி திருத்துகிறார்.

()

சுவாரசியமான திரைக்கதையோடு 'புதுக்கோட்டை' வட்டார வழக்கை வசனங்களில் கலந்திருக்கிறார் பாண்டிராஜ். பகோடா சொல்லும் 'திங்க கேக்குது', பால்வாடி டீச்சரின் 'சும்மா... சாம்பிராணி போடாத', காவல் அதிகாரியின் '... சாரிச்சேன்...(விசாரிச்சேன்), பள்ளிக்கூடஆசிரியரின் "வீட்டுப்பாடம் செய்யாத கிழவி புருஷன்களும் கிழவன் பொண்டாட்டிகளும் எழுந்திருங்க'.. போன்றவை கேட்கவே சுகமாக இருக்கின்றன. இந்தப் படத்தின் முக்கியமான பலம் சினிமா வாசனையே இல்லாத முகங்கள். பிரதான பாத்திரங்களாக நடித்திருக்கும் ஜீவா, அன்புக்கரசு உட்பட பகோடா, மணி, அப்பத்தா என்று அலறும் கண்ணாடி போட்ட சிறுவன், அன்புவின் அம்மா உட்பட, அன்புவின் அப்பாவி தங்கையும், அதிரடி தம்பியும்.. என்று பல பாத்திரங்கள் யதார்த்தமான முகங்களாக திரையில் உலவுகிறார்கள். போட்டி போட்டு ஒண்ணுக்கடிப்பது, நாணயத்தை வைத்து காகிதத்தில் டிரேஸ் செய்வது, சத்தமாக வீட்டுப்பாடம் படிப்பது, யார் வகுப்பு தலைவனாக இருப்பது என்ற போட்டி...பள்ளிக்கூடச் சிறுவர்களின் குணாதிசயங்களை திரையில் பிரதிபலிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாக 'சொக்கலிங்கம்' என்ற ஆசிரியர் பாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ் மிகச்சிறப்பாக underplay செய்து நடித்திருக்கிறார். ஜீவாவின் அத்தைப் பெண்ணாக மனோன்மணி என்கிற பாத்திரத்தில் ஒரு சிறுமி சிறிது நேரமே வந்தாலும் தன்னுடைய சுவாரசியமான முக பாவனைகளால் அசத்தியிருக்கிறார்.

[இந்தச் சிறுமியை பார்த்த போது எனக்குள் ஒரு பிளாஷ்பேக் விரிந்தது. அப்போது நான் மூன்றாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஞாபகம். டியூஷன் முடித்து வநந் கொண்டிருந்தோம். அமாவாசையின் மேல் தாரை ஊற்றின நிறத்தில் இருக்கும் 'தமிழ்ச்செல்வி' என்கிற சிறுமி என்னிடம் வந்து "உன் நோட்ட கொஞ்சம் தார்றியா. எழுதீட்டு தரோம்" என்றாள். அப்போதும் பெண்களிடம் உரையாட கூச்சப்படும் நான், 'ம்' என்றேன். இவ்வளவுதான் நான் பேசினது. எதிரே வந்து கொண்டிருந்த எனது அண்ணனும் அவனது நண்பர்களும் இதைப்பார்த்துவிட்டு பிறகு என்னை 'தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வி..' என்று ஓட்டிக் கொண்டிருந்தனர். "..ம்மா.. உன் பையன் இப்பவே உன் மருமகளை தேடிட்டான்".]

"இங்குட்டு மீனாட்சி. அங்குட்டு"... என்று அசடுவழியும் அந்த இளைஞரும் (விமல்) புருவங்களை டான்ஸ் ஆட வைக்கும் வேகாவும் நன்றாக நடித்திருக்கிறார்கள். இருவருக்குமிடையான காதல் யதார்த்தமான நகைச்சுவையுடன் சுவராசியமாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஜேம்ஸ் வசந்தனின் இசையில் இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கின்றன. 'அன்பாலே அழகாகும் வீடு' பாடலை மிக அரிதாகவே திரைப்பாடல்கள் பாடும் இன்னும் இளமையாக இருக்கும் குரலில் பாலமுரளிகிருஷ்ணா பாடியிருகிறார். 'ஒருவெட்கம் வருதே வருதே' பாடல் மிகச்சிறப்பான முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. சிறுவர்களின் மிகையான அதிரடி ஆக்ஷன்கள், கிளைமாக்ஸ் சோகக்காட்சிகள் போன்றவற்றை தவிர படம் முழுவதும் மிக இயல்பான தொனியிலேயே இயங்குகிறது.


()

இயக்குநர் பாண்டிராஜ் அவரே பார்ப்பதற்கு பத்தாங்கிளாஸ் பையன் போலத்தான் இருக்கிறார். ஏவிஎம்ஸ்டுடியோவில் வாட்ச்மேன், பாக்யா பத்திரி¨கியில் ஆபிஸ் பையன், பின்பு உதவி ஆசிரியர், சேரனிடம் உதவி இயக்குநர்... என்று வளர்ந்திருக்கிறார். இந்தக்கதையை வைத்துக் கொண்டு பல தயாரிப்பாளர்களிடம் "லோல்" பட்டிருக்கிறார். ஆனால் சசிகுமார்தான் உடனேயே ஒப்புக் கொண்டாராம். இயக்குநரின் ஒரு தொலைக்காட்சி நேர்காண¨லை பார்த்த போது இந்த வெற்றி அவருக்கு எளிதில் வந்ததல்ல என்று தெரிகிறது. ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் யோசித்து அதற்கான திட்டமிடலும் பிரக்ஞையுடனும் செய்திருக்கிறார்.

புரட்சிதளபதி, இளையதளபதி.. என்று ஆரம்பித்து சுப்ரீம் ஸ்டார், சூப்பர் ஸ்டார்... என்று அலட்டும் தறு'தலை'களின் படங்களை பார்ப்பதை விட இம்மாதிரியான வித்தியாசமான உள்ளடக்கத்துடனும் இயல்பான திரைக்கதையுடனும் தயாரிக்கப்படும் திரைப்படங்களை நிச்சயம் நாம் ஆதரிக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இத்திரைப்படத்தை நாங்கள் காணும் போது எங்களுடன் இருந்தது நூற்றுக்கும் குறைவான பார்வையாளர்களே.

இத்திரைப்படத்தை இன்னும் நீங்கள் பார்க்கவில்லையென்றால் ஒரு உன்னதமான காண்பவனுத்தை இன்னும் பெறவில்லையென்று அர்த்தம்.


suresh kannan

20 comments:

Anonymous said...

நல்ல திரைப்படத்திற்கு நல்ல விமர்சனம் சுரேஷ்.

ஆனால் கோவையில் ஒரு திரையரங்கில் மட்டுமே ஓடியது இப்படம். அதே சமயம் மரியாதை 3 திரையரங்குகளிலும், அயன் 3 திரையரங்குகளிலும் ஒடியது.

நல்ல படம் வரலை வரலைன்னு கூச்சல் போடும் நாமே நல்ல படம் வந்தால் ஆதரிப்பதில்லை. இதே கதிதான் வென்னிலாக் கபடிக் குழுவுக்கும். அதே சமயம் வந்த சிவா மனசுல சக்தி வெற்றிகரமாக ஓடி தயாரிப்பாளருக்கு இரண்டு கோடி அளவில் லாபம் ஈட்டித் தந்திருக்கிறது.

சென்ஷி said...

//இத்திரைப்படத்தை இன்னும் நீங்கள் பார்க்கவில்லையென்றால் ஒரு உன்னதமான காண்பவனுத்தை இன்னும் பெறவில்லையென்று அர்த்தம். //

மன்னிச்சுடுங்க. இந்த படத்தை திருட்டு டிவிடில பார்க்கக்கூடாதுன்னு நினைச்சுட்டு இருக்குறதால இன்னும் பார்க்கல. நீங்க ஓக்கே சொல்லிட்டா இன்னைக்கே ஆன்லைன்ல பார்த்துட்டு விமர்சனம் எழுதிடறேன் :-))

//பதின்மத்திற்குள் நுழையும் சிறுவர்களைப் பற்றி நவீன தமிழ் இலக்கியமும் அவ்வளவாய் கண்டுகொண்டதாய் தெரியவில்லை. சுஜாதா மாத்திரம் 'நிலா நிழல்' என்றொரு அற்புதமான நாவலை எழுதியிருக்கிறார். ஒரு சிறுவன் எந்தக் கணத்தில் இளைஞனாகிறான் என்பதே அதன் ஆதார தொனி.//

ஜெயமோகன் கூட ‘கிளிக்காலம்’ன்னு ஒரு கதை எழுதியிருக்காருங்கண்ணே :)

சென்ஷி said...

//மரியாதை 3 திரையரங்குகளிலும், அயன் 3 திரையரங்குகளிலும் ஒடியது. /

அண்ணாச்சி துபாய்ல ஓடுற தமிழ் படத்த பத்தி எழுதுனா எங்கமேல அங்கேர்ந்தே காறித்துப்பிடுவீங்க. அதனால எச்சரிக்கையா அதை மறைச்சு வைக்கறேன் :-(

tamilraja said...

http://tamilcinema7.blogspot.com/2009/05/blog-post_5882.htmlமிக ஆச்சர்யமாக இரண்டு வாரங்களுக்கு பின் மக்களின்,பத்திரிக்கைகளின் பாராட்டால் இப்போது வெற்றிகரமாக ஓடுகிறது.
பல நகரங்களில் மறு வெளியீடு செய்து வெற்றியடைந்துள்ளது.
மறுபடி தமிழ்ரசிகர்களின் ரசனை சிறந்தது என்று நிருபிக்க பட்டுள்ளது.http://tamilcinema7.blogspot.com/2009/05/blog-post_20.html


இரண்டையும் படியுங்கள் வடகரை வேலன் அவர்களே

மோகன் கந்தசாமி said...

////[தமிழ் வலைப்பதிவிலும் இவ்வாறான சுவாரசியமான 'பசங்களை' காண முடிகிறது. மிகை உணர்ச்சியுடன் தாராளமான பில்டப்களோடு ஒருவர் பதிவெழுத, 'நச்;, 'சூப்பர், கலக்கிட்டீங்க" "போட்டுத்தாக்கு" என்று பின்னூட்டங்களில் உசுப்பேற்றும் 'பகோடாக்கள்" இங்கும் இருக்கிறார்கள்.]////

மிகை உணர்ச்சியுடன் பதிவுகள் எழுதுவது குற்றமல்ல. அவை மிகை உணர்ச்சிகள் என்று தெரிந்தே எழுதப்படுகின்றன. அப்படி பதிவேழுதுவதும் ஒருவகை. சீரியசானா விஷயங்களை எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக எழுதாமல் இஸ்கூல் பய்யன் மாதிரி அளப்பரையோடு அல்லது அடாவடியாக எழுதினால் படிக்கவாது செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அவை எழுதப்பட்டிருக்கலாம். மிகை உணர்ச்சிகள் இருப்பதாலேயே சொல்லும் விஷயம் ஓட்டை என்பதும் அல்லது அவ்வகைப் பதிவுகளை பெரிய மனுசங்க படிக்க மாட்டார்கள் என்று தனக்குத் தானே கற்பிதம் கொள்வதும்தான் இஸ்கூல் 'பசங்க' செய்கிற வேலை.

லக்கிலுக் said...

//////[தமிழ் வலைப்பதிவிலும் இவ்வாறான சுவாரசியமான 'பசங்களை' காண முடிகிறது. மிகை உணர்ச்சியுடன் தாராளமான பில்டப்களோடு ஒருவர் பதிவெழுத, 'நச்;, 'சூப்பர், கலக்கிட்டீங்க" "போட்டுத்தாக்கு" என்று பின்னூட்டங்களில் உசுப்பேற்றும் 'பகோடாக்கள்" இங்கும் இருக்கிறார்கள்.]//////

இதுவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ‘நச்’.

இதைவிட மோகன்கந்தசாமியின் பின்னூட்டம் சுவாரஸ்யமோ சுவாரஸ்யம். ‘கலக்கல்’.

Anonymous said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சுரேஷ். உங்கள் பதிவு படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. இன்னும் பார்க்கவிலலை. இதுபோன்ற படங்கள் அதிகம் வரவேண்டும்.

சென்ஷி said...

//மிகை உணர்ச்சிகள் இருப்பதாலேயே சொல்லும் விஷயம் ஓட்டை என்பதும் அல்லது அவ்வகைப் பதிவுகளை பெரிய மனுசங்க படிக்க மாட்டார்கள் என்று தனக்குத் தானே கற்பிதம் கொள்வதும்தான் இஸ்கூல் 'பசங்க' செய்கிற வேலை.//

நச் :-)

Starjan (ஸ்டார்ஜன்) said...

"பசங்க" இன்னும் பார்க்கலியா !!

விண்மீன் said...

துபாய்ல இப்பொ ரோதனை ஓடிக்கிட்டிருக்கு.

ஆர்வா said...

தோரணை, சர்வம் மாதிரி குப்பை படங்களை எப்படித்தான் மனசு வந்து Produce பண்றாங்களோ? பாண்டி ராஜ்' ஐ தலையில் வெச்சி கொண்டாட வேண்டியது நம்ம கடமை. கிரேட் மூவி....

நாடோடி இலக்கியன் said...

தவறவிடக்கூடாத படம் பசங்க.
தரமான படத்திற்கு மரியாதை செய்யும் விதமாக நல்ல விமர்சனம்.

அமீர்,வசந்தபாலன்,சசிக்குமார் என எதிபார்ப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் இயக்குனர்கள் வரிசையில் இனி பாண்டியராஜனும்.

வாழவந்தான் said...

//
தமிழ் வலைப்பதிவிலும் இவ்வாறான சுவாரசியமான 'பசங்களை' காண முடிகிறது.
//
சினிமா விமர்சனத்துலயுமா?

வாழவந்தான் said...

சார் இந்த பதிவு..
நச்,சூப்பர்,கலக்கிட்டீங்க,போட்டுத்தாக்கு ;-)

வாழவந்தான் said...

//
இம்மாதிரியான வித்தியாசமான உள்ளடக்கத்துடனும் இயல்பான திரைக்கதையுடனும் தயாரிக்கப்படும் திரைப்படங்களை நிச்சயம் நாம் ஆதரிக்க வேண்டும்
//
எதோ என்னால முடிஞ்ச ஆதரவு திருட்டு சிடில இத பார்க்காம தியேட்டருல பாக்குறதுதான்(வீட்டில் சிடி வந்து ஒரு வரம் ஆகியும் இன்னும் பாக்கல)

Anonymous said...

///அண்ணாச்சி துபாய்ல ஓடுற தமிழ் படத்த பத்தி எழுதுனா எங்கமேல அங்கேர்ந்தே காறித்துப்பிடுவீங்க. அதனால எச்சரிக்கையா அதை மறைச்சு வைக்கறேன் :-( ////


//மிகை உணர்ச்சிகள் இருப்பதாலேயே சொல்லும் விஷயம் ஓட்டை என்பதும் அல்லது அவ்வகைப் பதிவுகளை பெரிய மனுசங்க படிக்க மாட்டார்கள் என்று தனக்குத் தானே கற்பிதம் கொள்வதும்தான் இஸ்கூல் 'பசங்க' செய்கிற வேலை.//

நச் :-) //////

எனக்கென்னமோ போடுற பின்னுட்டத்தைப் பார்த்தா சென்ஷி இந்த பகோடா கூட்டத்துக்கு தலைவன் மாதிரி தெரியுது :-)

பாலகுமார் said...

சுரேஷ்..உங்க விமர்சனம் ரொம்ப நல்ல இருக்கு... நல்ல படம்... மிக சிறந்த நல்ல தமிழ் படத்தில் இதுவும் ஒன்று... யாரும் மிஸ் பண்ண வேண்டாம் ப்ளீஸ்...

KARTHIK said...

பக்கோட கேலண்டர் பாக்குர சீன்ன இன்னைக்கு வரைக்கும் நாங்க கண்டினு பண்டுறோம்.இந்த மாசம் இன்ன விசேசம்னு சொல்லு அந்த வர்சம் போரத ரொம்ப அழக காட்டிருக்காங்க.

பதி said...

படத்திற்கு எழுதியுள்ள விமர்சனத்தைப் போலவே இந்த பதிவுக்கு வந்துள்ள பின்னூட்டங்களும் அருமை !!!!!!

சென்ஷி said...

@ ஆசிப் அண்ணாச்சி

//
எனக்கென்னமோ போடுற பின்னுட்டத்தைப் பார்த்தா சென்ஷி இந்த பகோடா கூட்டத்துக்கு தலைவன் மாதிரி தெரியுது :-)//

ஆஹா அசத்திப்புட்டீங்க அண்ணாச்சி..

(துபாய்க்கு என்னிக்கு ரிட்டர்ன்னு சொல்லுங்க. அன்னிக்கு வச்சிக்கறேன் கச்சேரிய :-)) )