Monday, July 19, 2010

களவாணியும் எம்.ஜி.ஆரின் தேவையும்

c

தமிழ்த் திரை  ஆரோக்கிய திசையில் பயணிக்க முயற்சிப்பதை நிரூபிக்க வந்திருக்கும் இன்னுமொரு சிறுமுதலீட்டு யதார்த்தத் திரைப்படம் 'களவாணி' இந்தப் போக்கை  எந்தவொரு 'எந்திர' சக்தியும் கைப்பற்றி சீரழித்து விடாமலிருக்க வேண்டும்.

வழக்கமான காதல் -  போராட்டம் - சுபம் - வகை கதைதான். திரைக்கதையிலும் சில சுவாரசியங்களைத் தவிர பெரிதாக ஒன்றுமில்லை. நிச்சயம் இதை 'ஆண்பாவம்' போன்ற ஆச்சரிய அற்புதங்களுடனெல்லாம் ஒப்பிடவே முடியாது. ஆனால் முழுத்திரைப்படத்தையும் தொய்வின்றி சுவாரசியமாக பார்க்கும் வகையில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்தது.

எந்த சூப்பர் ஹீரோ மாய்மாலங்களுமில்லாத இயல்பான நாயகன். (மோகன், முரளி போன்ற எவ்வித பிம்பங்களுமில்லாத நாயகர்களின் வெற்றிடத்தை விமல் நிரப்புவாராக). பள்ளி மாணவி என்பதை நம்பலாம் போன்ற நாயகி. சரண்யா, இளவரசு போன்ற அனுபவஸ்தர்களின் துணை, அறிமுக வில்லரான திருமுருகனின் அசத்தலான நடிப்பு, கஞ்சா கருப்புவின் உண்மையிலேயே சிரிக்க வைக்கும் காமெடி...போன்றவை இப்படத்தினை சுவாரசியமாக்குகின்றன.

பாரதிராஜா காட்டிய கிராமத்திலிருந்தே தமிழ்த்திரை இன்னும் பெரிதாக விலகி வராத நிலையில் ... இந்தியச் சுதந்திரத்திற்கு பிறகு இப்போதுதான் தாரை சநதிக்கும் புத்தம் புது ரோடு, டிவிஎஸ் 50 அல்லது யமஹா பைக்கில் சர்புர்ரென விரையும் மக்கள், வயலை இழந்தாலும் தொலைக்காட்சியை மாத்திரம் இழக்க விரும்பாத சினிமா மோகம், முன்பு போல் உக்கிரமாக அல்லாத பொருளாதார காரணங்களோடு சிந்திக்கும் ஊர்ப்பகை,  ரகசியமாக நடந்து கொண்டிருந்த ரெக்கார்ட் டான்ஸ், பாரம்பரிய கலைகளை ஒதுக்கிவிட்டு திருவிழாவிற்குள் புகுந்து விட்ட அபத்தம்..... என்று இன்றைய உலகமயமான காலக்கட்டத்தின் எதிரொலிகளை மிகச் சரியாக சித்தரிக்கும் கிராம பின்னணியைக் காட்டியிருப்பதே மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது. ஆனால் இதில் உரையாடப்பட்டிருப்பது தஞ்சை வட்டார வழக்கு என்று சில விமர்சனங்களை வாசித்தபின்தான் தெரிகிறது. சரியா என்பதை அந்த பிரதேசத்துக்காரர்கள் சொல்ல வேண்டும். சாலையோர வயல்வெளி காட்சிகள் அதிக இடங்களில் வந்து சலிப்பைத்தருகிறது. கிராமத்தின் பல பாத்திரங்களை அதற்கேயுண்டான கிளைக்கதைகளுடன் அமைத்து திரைக்கதை சலிப்பைத் தவிர்த்திருக்கலாம் இயக்குநர் சற்குணம். (மதராச பட்டிணம் 'விஜய்யிடம் அசோசியேட்டாக இருந்தவராமே) தனக்கு மிக நெருக்கமான சூழ்நிலைகளையும் சம்பவங்களையும படமாக்கியிருப்பதாக ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். பெரும்பாலான அறிமுக இயக்குநர்கள் தங்களி்ன் முதல் படத்தை நெடுநாள் ஊற வைத்திருப்பதின் காரணமாக திறமையாக திரை மொழி பெயர்த்து விடுவார்கள். ஆனால் இதன் வெற்றியின் மயக்கத்திலும் முறையாக திட்டமிடாததினாலும் அடுத்த படத்தை பெரும்பாலும் சொதப்பி விடுவார்கள். இந்த இயக்குநர் அதை தவிர்ப்பார் என்று நம்புவோம்.

நாயகனுக்கு 'களவாணி' என்கிற தலைப்பு பொருத்தமா எனத் தெரியவில்லை. 'தறுதலை' என்று வைத்திருக்கலாம். அப்பாவி அம்மாவிடமும் தங்கையிடமும் மிரட்டி பணம் பறிப்பதும் போகிற வருகிற பெண்களை 'கட்டிக்கறியா' என்று கேட்பதையே பிரதான வேலையாக வைத்திருக்கிறார்.

இவர் வண்டியை ரிப்பேர் செய்யும் காட்சியில்  இவருக்கும் ஒரு சிறுமிக்கும் நடக்கும் உரையாடலின் போது சிறுமியின் முகபாவங்கள் அத்தனை யதார்த்தமாய் இருக்கிறது. இம்மாதிரி சிறுவர், சிறுமிகளை வம்பிழுத்துக் கொண்டிருக்கும் போக்கிரிகளை நிஜ வாழ்வில் நிச்சயம் நாம் சந்தித்திருப்போம். ஜாதகக் கோளாறினால் தன் மகன் இப்படித் திரிகிறான் என்று யதார்த்த அம்மாவை பிரதிபலிக்கும் பாத்திரமாக சரண்யா அற்புதமாக நடித்திருக்கிறார்தான் என்றாலும் அவ்வ்ப்போது 'டாப்பா வருவான்' என்பது சற்று எரிச்சலாகவே இருக்கிறது.

திரைக்கதை சற்று தொய்வடையும் போது அதிரடியான பாத்திரமொன்று நுழைந்தால் பார்வையாளர்கள் நிமிர்ந்து அமர்வார்கள். இதற்கு சரியான உதாரணமாய் இளவரசு. 'வேதம் புதிது'-வில் சொற்ப நேரமே வந்தாலும் பிராமணச் சிறுவனை கலாய்க்கும் இவரின் யதார்த்த நடிப்பை கண்டு அப்போதே வியந்திருக்கிறேன். இதிலும் துபாய் ரிட்டர்ன் அப்பாவாக தறுதலை மகனின் மீது மறைமுக பாசமும் நேரடி எரிச்சலும் கொண்டவராக சிறப்பாக நடித்திருக்கிறார். 'சரி கட்டிக்கறேன்' 'அப்ராடா' என்று சிணுங்கும் போது மாத்திரம் நாயகி அழகாகத் தெரிகிறார். 'பார்த்து சூதானமா செய்ங்கடா' எனும் யதார்த்தமான பெரியப்பாவாக தாடியில்லாத (பார்க்க விநோதமாக இருக்கிறது) மு.ராமசாமி.

பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், வெண்ணிலா கபடி குழு, பூ.. போன்ற வரிசையில் தற்போதைய தமிழ்சசூழலோடு ஒப்பிடும் போது நல்ல படமொன்றை திருப்தியைத் தருகிறது 'களவாணி'.

()

இருந்தாலும் இந்த மாதிரியான யதார்த்த படங்களின் இன்னொரு புறத்தையும் காண வேண்டும். வன்முறையை வாழ்க்கையாய் வைத்திருப்பவர்கள், சாலை மாணவிகளை வழிமறித்து காதலைப் பிடுங்குபவர்கள், கல்விக்கூடம் செல்வதை கிண்டலாய்  பார்ப்பவர்கள், எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி கொலை செய்யும் இளங்குற்றவாளிகள் (ரேணிகுண்டா) என்று எதிர்மறை குணங்களைக் கொண்டவர்களையே பிரதான பாத்திரங்களில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இதன் எதிரொலியும் பாதிப்பும் இளம் பார்வையாளர்களின் மனதில் நிச்சயம் விஷம் போல் பரவும். ரோட்டில் செல்லும் சக மாணவியின் கையைப் பிடித்து இழுப்பதை ஹீரோயிசமாக கருதச் செய்யும். எப்படியாவது ஊரை விட்டு ஓடி திருமணம் செய்து  விட்ட பிறகு, ஒரு குழந்தை பிறந்துவிட்டால் இரு குடும்பங்களும் ராசியாகி விடும் என்று தப்புக் கணக்கு போடச் சொல்லும். சாதியின் வேர்கள் இன்னும் ஆழமாகப் பரவியிருக்கிற கிராமங்களில் இது அத்தனை எளிதா என்று தெரியவில்லை. ஆதிக்கச் சாதி பெண்ணை திருமணம் செய்த தாழ்த்தப்பட்ட சாதி ஆணை உயிரோடு கொளுத்தும் அவலம்தான் யதார்த்தத்தில் நீடிக்கிறது.

முன்பெல்லாம் முழுக்க முழுக்க  நல்லவராக எம்.ஜி.ஆர் சித்தரிக்கப்படும் திரைப்படங்களைக் காணும்  போதெலலாம் கொஞ்ச நேரம் கூட காணச் சகியாமல் எரிச்சலாக இருக்கும். ஆனால் இப்போது முற்றிலும் எதிர்மறையான குணாதியங்களுடன் இயங்கும் திரைநாயகர்களை  காணும் போது அதை  இளம் பார்வையாளர்கள் கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடிய அபாயத்தின் காரணமாகவே  சமகால நாயகர்களிலும் ஒரு எம்.ஜி.ஆர் இருக்கலாமோ என்று ஏனோ தோன்றுகிறது.

suresh kannan

32 comments:

D.R.Ashok said...

நச் - விமர்சனமும் பொறுப்பும்

(எங்கயோ போயிட்டீங்க சார்... இல்ல பல விஷயங்களை தொட்டு நகர்ந்தீர்கள் என்றும் சொல்லலாம் .. in all aspects.. worth reading.. keep கலக்கிfying)

:)

மாதவராஜ் said...

//சிறுமுதலீட்டு யதார்த்தத் திரைப்படம் 'களவாணி' இந்தப் போக்கை எந்தவொரு 'எந்திர' சக்தியும் கைப்பற்றி சீரழித்து விடாமலிருக்க வேண்டும்.//

என் கவலையும் அதே!

shabi said...

oru padattha padama mattum parunga virsanam eluthanumennu ethayavathu eluthathiinga ippa irukka soolnilayila entha mari karuthu sonnalum evanum kekka porathilla avanukku enna thonutho atha seyyaathan poran

enakku ooru mannargudi pakkamthan neenga solra mari yaarum padatha patthu oru ponna patthu odane kaiya pudicchu ilukka valam maatanunga

neengalee ella idea vum solluveenga polarukke

பிரியமுடன் பிரபு said...

இருந்தாலும் இந்த மாதிரியான யதார்த்த படங்களின் இன்னொரு புறத்தையும் காண வேண்டும். வன்முறையை வாழ்க்கையாய் வைத்திருப்பவர்கள், சாலைமாணவிகளை வழிமறித்து காதலைப் பிடுங்குபவர்கள், கல்விக்கூடம் செல்வதை கிண்டலாய் பார்ப்பவர்கள், எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி கொலை செய்யும் இளங்குற்றவாளிகள் (ரேணிகுண்டா) என்று எதிர்மறை குணங்களைக் கொண்டவர்களை பிரதான பாத்திரங்களில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இதன் எதிரொலியும் பாதிப்பும் இளம் பார்வையாளர்களின் மனதில் நிச்சயம் விஷம் போல் பரவும். ரோட்டில் செல்லும் சக மாணவியின் கையைப் பிடித்து இழுப்பதை ஹீரோயிசமாக கருதச் செய்யும். எப்படியாவது ஊரை விட்டு ஓடி திருமணம் செய்து விட்ட பிறகு, ஒரு குழந்தை பிறந்துவிட்டால் இரு குடும்பங்களும் ராசியாகி விடும் என்று தப்புக் கணக்கு போடச் சொல்லும். சாதியின் வேர்கள் இன்னும் ஆழமாகப் பரவியிருக்கிற கிராமங்களில் இது அத்தனை எளிதா என்று தெரியவில்லை. ஆதிக்கச் சாதி பெண்ணை திருமணம் செய்த தாழ்த்தப்பட்ட ஆணை உயிரோடு கொளுத்தும் அவலம்தான் யதார்த்தத்தில் நீடிக்கிறது.
//////////

yes

gulf-tamilan said...

/ எந்தவொரு 'எந்திர' சக்தியும் கைப்பற்றி சீரழித்து விடாமலிருக்க வேண்டும்./
சிவாஜி வந்தபோதும் இப்படித்தான் ஏதோ சொன்னதாக ஞாபகம் :)))

வஜ்ரா said...

//
முன்பெல்லாம் முழுக்க முழுக்க நல்லவராக எம்.ஜி.ஆர் சித்தரிக்கப்படும் திரைப்படங்களைக் காணும் போதெலலாம் கொஞ்ச நேரம் கூட காணச் சகியாமல் எரிச்சலாக இருக்கும். ஆனால் முற்றிலும் எதிர்மறையாக இயங்கும் திரைநாயகர்களை கண்மூடித்தனமாக பின்பற்றும் இளம் பார்வையாளர்களை காணும் போது சமகால நாயகர்களிலும் ஒரு எம்.ஜி.ஆர் இருக்கலாமோ என்று ஏனோ தோன்றுகிறது.
//

இக்கரைக்கு அக்கரை பச்சையோ ?

சுவாசிகா said...

பட விமர்சனத்தின் தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே என்று யோசித்தேன்..

கடைசியில் விமர்சனத்தையும் உங்கள் சமூக அக்கறையும் அற்புதமாக இணைத்துவீட்டீர்கள்..

பாராட்டுகள்

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

bandhu said...

//இருந்தாலும் இந்த மாதிரியான யதார்த்த படங்களின் இன்னொரு புறத்தையும் காண வேண்டும். வன்முறையை வாழ்க்கையாய் வைத்திருப்பவர்கள், சாலைமாணவிகளை வழிமறித்து காதலைப் பிடுங்குபவர்கள், கல்விக்கூடம் செல்வதை கிண்டலாய் பார்ப்பவர்கள், எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி கொலை செய்யும் இளங்குற்றவாளிகள் (ரேணிகுண்டா) என்று எதிர்மறை குணங்களைக் கொண்டவர்களை பிரதான பாத்திரங்களில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இதன் எதிரொலியும் பாதிப்பும் இளம் பார்வையாளர்களின் மனதில் நிச்சயம் விஷம் போல் பரவும். ரோட்டில் செல்லும் சக மாணவியின் கையைப் பிடித்து இழுப்பதை ஹீரோயிசமாக கருதச் செய்யும். எப்படியாவது ஊரை விட்டு ஓடி திருமணம் செய்து விட்ட பிறகு, ஒரு குழந்தை பிறந்துவிட்டால் இரு குடும்பங்களும் ராசியாகி விடும் என்று தப்புக் கணக்கு போடச் சொல்லும்.//
அற்புதமான கருத்துக்கள். வெளி நாட்டில் வேலை செய்து எத்தனையோ கஷ்டங்களுக்கு நடுவில் அனுப்பும் பணத்தை எந்தவிதமான குற்றவுணர்ச்சியும் இன்றி விரயம் செய்வதை பார்த்தால் பகீரென்கிறது. அதைப்பற்றி characterisation என்ற அளவிலேயே director உபயோகித்திருக்கிறார் என்பதும் கவலை அளிக்கிறது

chandru / RVC said...

கச்சிதமான திரைக்கதைக்கு உதாரணமான 'எங்க வீட்டுப்பிள்ளை' டிவிடி இருக்கு. அனுப்பவா அண்ணா? ;))))
விமர்சனம் அருமை.

மீனாட்சி சுந்தரம் said...

விமர்சனம் என்ற பெயரில் படத்தின் கதையை அப்படியே பிரதி எடுத்து எழுதாமல் உங்களின் பார்வையை பதித்தது மிகச் சிறப்பு.

உங்கள் கனவான "சத்யஜித் ராய்" போன்ற தமிழ் இயக்குனர்கள் மிகச் சீக்கிரமே வந்து விடுவார்கள் போல தோன்றுகிறது.

Anonymous said...

படம் முழுக்க தஞ்சாவூர்( மேலத் தஞ்சையில், ஒரத்தநாடு வட்டார வழக்கு) வட்டார வழக்கு சரியாக அமைந்தாலும் , சிறப்பாக பேசியவர்கள் கார் டிரைவர் (தாடிக் கார) மற்றும் வில்லன்.
மேலும் படத்தில் காட்டப்பட்ட நிழ்வுகளில் 85% உண்மையில் நிகழ்பவை. மேலத் தஞ்சை மற்றும் கீழத் தஞ்சையில் சொல்லப்படாத கதைகள் ஆயிரம் இருக்கும் நேரத்தில், இந்த படம் ஒரு நல்ல ஆரம்பமே.

---- ஒரத்தநாட்டு காரன்

Anonymous said...

நானும் இந்த படத்தின் கதைக்களன் பகுதியை சேர்ந்தவன். இந்த படம் எங்கள் பகுதி இளைஞர்களின் வாழ்க்கையைப் பற்றியது. TYPICAL OUR CULTUREof 1970 - 80's. ஆனால் நானும், இந்த படத்தின் இயக்குனரைப் போல அந்த மாயையிலிருந்து விடுபட்டு வெளியில் தேடியவர்கள்.

இந்த படம் பார்த்த பின் சந்தோசித்து இருந்தாலும், ஊரில் உள்ள என் தங்கை மகனை நினைத்து பயம் கொண்டேன். 16 -17 வயது மாணவர்களுக்கு இது எந்த மாதிரியான உணர்வினைக் கொடுக்கும்.

இந்த கதை 25 வருடங்களுக்கு முன் உண்மையாய் இருக்கும். more than 80% of the youths were like this film hero and his gang those days. இப்பொழுது all are studying. Because of the social pressure, (peer pressure) 95 % of youth are now more concerned about study, life and accomplishment and seek a better life than their fathers and cousins.

The director would have filmed this story in current context in order to avoid being branded as ' period film"

As being repeatedly said by the film gang " this film is just a fun movie " no message should be taken by the viewers.

But, How will I instill this truth in my nephew' mind?

மோகன் குமார் said...

உங்க சிந்தனையும் எழுத்தும் வித்யாசமா இருக்கு

Anonymous said...

கமல் என்ற அரை லூசு கோமாளி உன்னை போல ஒருவன் என்ற பைத்தியகார படம் எடுத்து இருக்கிறான். அதை பார்த்து பாட்டு சூப்பர் படம் அருமை என்ற பினாத்திய ஆள்தானே நீர். கமல் பைத்தியமே நீ கமலை தூக்கி வைத்து ஆடு அதற்க்காக ரஜினியை மட்டம் தட்ட வேண்டும் என்று கட்டாயம் இல்லை.

கமலை போல தமிழ் சினிமாவை நாசம் செய்தவர்கள் யாரும் இல்லை. ஹே ராம் ஆளவந்தான் உதாரணங்கள் வேண்டும். ஸ்ருதி என்ற கத்து குட்டி காப்பி அடிச்சான் குஞ்சு இசை அமைப்பாளரை கமல் மகள் என்ற காரணத்துக்காக தூக்கி வைத்து கொண்டாடிய உமக்கு ரஜினியை பேச யோக்கியதை இருக்கிறதா

யாசவி said...

suresh the review was good

//மோகன், முரளி போன்ற எவ்வித பிம்பங்களுமில்லாத நாயகர்களின் வெற்றிடத்தை விமல் நிரப்புவாராக//

why??? Vimal is good actor so far

இயக்குனர் சார்லஸ் said...

// அதை இளம் பார்வையாளர்கள் கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடிய அபாயத்தின் காரணமாகவே //

ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து சிந்தித்திருக்கிறீர்கள். [உங்களுக்கு வயதாகிக்கொண்டிருப்பதற்கான அறிகுறி இது, எச்சரிக்கை :) ] பத்து வருடத்துக்கு முன்பு உங்களுக்கு இப்படித் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை.

ஆயில்யன் said...

//ஆண்பாவம்' போன்ற ஆச்சரிய அற்புதங்களுடனெல்லாம் ஒப்பிடவே முடியாது. /


கரீக்ட்டு!

ஆண்பாவம் படத்துக்கு ஒரு விமர்சன பதிவிடுங்களேன் படிக்க ஆர்வமாக இருக்கின்றோம்!

ஆண்பாவம் ரசிகர் கூட்டம் :)

சுரேஷ் கண்ணன் said...

பின்னூட்டமிட்ட / வாசித்த நண்பர்களுக்கு நன்றி.

சினிமாவில் சித்தரிக்கப்படும் 'வெள்ளை' கதாபாத்திரங்களின் காரணமாக சமூகம் அதையே எதிரொலிக்கும் என்பது நடைமுறைச் சாத்தியமில்லாதது என்பதறிவேன். எம்.ஜி.ஆர் நடித்துக் கொண்டிருந்த காலத்திலும் சமூகக் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தானிருந்தன. ஆனால் தொடர்ந்து இருண்மையான குணங்களைக் கொண்டவர்களையே நாயகர்களாக சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து நிகழ்கிறது. வன்முறையை விரும்பும் நம் ஆழ்மனதிற்கு இவ்வாறான பிம்பங்கள் தீனியையும் ஊக்கத்தையும் கொடுக்கின்றன. இதைப் பார்க்கும் இளம் பார்வையாளர்கள் எல்லாம் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று நான் சொல்ல வரவில்லை. கல்வியறிவின் வளர்ச்சி சதவீதத்தின் காரணமாகவும் சினிமாவையும் வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்கத் துவங்கிய பரவலான விழிப்புணர்வு காரணமாகவும் இன்றைய நடுத்தர வாக்கம் உள்ளிட்ட பெரும்பான்மையான மக்கள் தங்களின் பொருள் சார்ந்த தேடலுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். திரையரங்கில் இதை ரசித்துவிட்டு தங்களின் அலுப்பான உலகத்திற்கு திரும்பிவிடுகிறார்கள். இந்த வன்முறை எண்ணங்கள் மனைவியை, குழந்தையை அடிக்கும் போது சற்று அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் கல்வியறிவு பெறாத அடிமட்ட சிறுவர்களிடம் இந்த மாதிரி பொறுக்கி நாயகர்கள் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தி இம்மாதிரி செய்வதுதான் ஹீரோயிசம் என்கிற தவறான வழிகாட்டுதலை ஏற்படுத்தலாம்.

எனவேதான் இன்றைக்கு எம்.ஜி.ஆர் போன்ற புனித பிம்பங்களின் தேவையின் நிர்ப்பந்தமிருக்கிறதோ என்கிற கேள்வியை ஐயத்துடன் முன்வைத்திருக்கிறேன். இதையே தீர்வாக அல்ல. இன்றைக்கும் கூட எம்.ஜி.ஆரின் படங்களையும் அறிவுரைகளையும் சிலாகிக்கும் அடிமட்ட மக்களை காண்கிறேன். பாத்திரங்களை முழுக்க கறுப்பு - வெள்ளையாக சித்தரிக்கும் எம்.ஜி.ஆர் படங்கள் கலை என்கிற நோக்கில் அபத்தமானவை என்றும் அவை யதார்த்த சினிமாவிற்கு பின்னடைவையே ஏற்படுத்துபவை என்பதை உணர்ந்தாலும் கலை மக்களுக்காக என்னும கோட்பாடடின் அடிப்படையில் சமநிலையான சமூகத்திற்கு இவ்வாறான பாவனைகளும் நமக்குத் தேவையோ என்று தோன்றுகிறது.

சார்லஸ்: நிச்சயமாய் பத்து பதினைந்து வருடத்திற்கு முன்பு இப்படி எழுதியிருக்க மாட்டேன். :)

ஆனால் வன்முறைக் காட்சிகளை நேரடியாக சித்தரிக்காமலேயே அதன் தாக்கத்தை உணர்த்தக்கூடிய முதிர்ச்சி பொதுவாக தமிழ் இயக்குநர்களுக்கு இல்லை என்றே கருதுகிறேன். உதாரணமாய் Mrs&Mr.Iyer திரைப்படத்தைச் சொல்லலாம். எல்லா அயோக்கியத்தனங்களையும் காட்டிவிட்டு இறுதிக் காட்சியில் நீதி சொல்வதால் அதை யாரும மனதில் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை.

ஷங்கர் said...

//சிறுமுதலீட்டு யதார்த்தத் திரைப்படம் 'களவாணி' இந்தப் போக்கை எந்தவொரு 'எந்திர' சக்தியும் கைப்பற்றி சீரழித்து விடாமலிருக்க வேண்டும்.//


உள்குத்து ????

ஷங்கர் said...

///சினிமாவில் சித்தரிக்கப்படும் 'வெள்ளை' கதாபாத்திரங்களின் காரணமாக சமூகம் அதையே எதிரொலிக்கும் என்பது நடைமுறைச் சாத்தியமில்லாதது என்பதறிவேன்.////

எந்திரனுக்கு இது பொருந்துமா ?

ஜாக்கி சேகர் said...

தமிழ்த் திரை ஆரோக்கிய திசையில் பயணிக்க முயற்சிப்பதை நிரூபிக்க வந்திருக்கும் இன்னுமொரு சிறுமுதலீட்டு யதார்த்தத் திரைப்படம் 'களவாணி' இந்தப் போக்கை எந்தவொரு 'எந்திர' சக்தியும் கைப்பற்றி சீரழித்து விடாமலிருக்க வேண்டும்.---//

முதல் வரியிலேயே ஆப்பு வச்சிட்டிங்களே

ஜாக்கி சேகர் said...

சார்லஸ்: நிச்சயமாய் பத்து பதினைந்து வருடத்திற்கு முன்பு இப்படி எழுதியிருக்க மாட்டேன். :) ///

சுரேஷ் பாசாங்கில்லாமல் ஒத்துக்கொண்ட அந்த நேர்மை எனக்கு பிடித்து இருக்கின்றது..

Anonymous said...

நல்ல பொறுப்பான விமர்சனம்.

//மோகன், முரளி போன்ற எவ்வித பிம்பங்களுமில்லாத//

"மைக்" மோகன், "காலேஜ்" முரளி. அவர்களுக்கும் ஒரு பிம்பம் இருந்தது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல விமர்சனம்.

பா.ராஜாராம் said...

அருமையான விமர்சனம்/ பார்வை.

Anonymous said...

athenna appdi solliteenga?

Namma Vijay 100 MGR ku equivalent.

MGR kooda ethaavathu thappu panniduvaar...but Vijay rommmbaa nallavaru! mudiyala saami :-(

athaan, intha maathiri padam ellam ooduthu.

Actually, the winning factor is yathartham. most of the people are like this, cant help it :-(

vasan said...

உங்க‌ள் ச‌முதாய‌ உள்ளார்ந்த‌ உண‌ர்வு 'டூ லேட்'
பார‌திராஜா சரிவை சரி க‌ட்ட‌ என் அலை ஓய‌லைன்னு
ஸ்கூல் ப‌ச‌ங்க‌ள்ள‌ போட்ட‌ புள்ளையார் சுழி, மு.முடிச்சுல‌
முருங்கையா காச்சி, ர‌ஜினி ச‌ம்ப‌ந்தி எடுத்து ம‌ரும‌க‌ன் ஹீரோ
ஆன‌ வ‌ரைக்கும் வ‌ந்தாச்சு. இப்ப‌ எம்ஜியார் வ‌ந்தாலும்
'ரொம்ப‌ நல்ல‌புள்ளை'யா இருக்காரேன்னுட்டு,
பொம்ப‌ளைக‌ளே பாக்க‌ மாட்டாங்க‌, சுரேஷ் க‌ண்ண‌ன்.

rajkumar said...

Why "Enthira" sakthi? Why cannot it be a ravana sakthi and dasavathara sakthi? There are other major forces are spoiling Tamil cinema. The entire distribution power is residing with one powerful family.

Please stop blaming Rajini for this. A honest analysis is required from you.

Anbudan

Rajkumar

சி.பி.செந்தில்குமார் said...

முன்பெல்லாம் முழுக்க முழுக்க நல்லவராக எம்.ஜி.ஆர் சித்தரிக்கப்படும் திரைப்படங்களைக் காணும் போதெலலாம் கொஞ்ச நேரம் கூட காணச் சகியாமல் எரிச்சலாக இருக்கும். ஆனால் இப்போது முற்றிலும் எதிர்மறையான குணாதியங்களுடன் இயங்கும் திரைநாயகர்களை காணும் போது அதை இளம் பார்வையாளர்கள் கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடிய அபாயத்தின் காரணமாகவே சமகால நாயகர்களிலும் ஒரு எம்.ஜி.ஆர் இருக்கலாமோ என்று ஏனோ தோன்றுகிறது. -வித்யாசமான சிந்தனை.பாராட்டுக்கள்.சர்ச்சைக்குரிய கருத்துக்கூறும் அனாமதேய கமெண்ட்டை அகற்றலாமே

Anonymous said...

°இருந்தாலும் இந்த மாதிரியான யதார்த்த படங்களின் இன்னொரு புறத்தையும் காண வேண்டும். வன்முறையை வாழ்க்கையாய் வைத்திருப்பவர்கள், சாலை மாணவிகளை வழிமறித்து காதலைப் பிடுங்குபவர்கள், கல்விக்கூடம் செல்வதை கிண்டலாய் பார்ப்பவர்கள், எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி கொலை செய்யும் இளங்குற்றவாளிகள் (ரேணிகுண்டா) என்று எதிர்மறை குணங்களைக் கொண்டவர்களையே பிரதான பாத்திரங்களில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இதன் எதிரொலியும் பாதிப்பும் இளம் பார்வையாளர்களின் மனதில் நிச்சயம் விஷம் போல் பரவும். °

முழுமையாக உடன்படுகிறேன். நானும் நண்பர்களும் களவாணி பார்த்துவிட்டு இது பற்றி கதைத்தோம்.

°எம்.ஜி.ஆர் சித்தரிக்கப்படும் திரைப்படங்களைக் காணும் போதெலலாம் கொஞ்ச நேரம் கூட காணச் சகியாமல் எரிச்சலாக இருக்கும். ஆனால் இப்போது முற்றிலும் எதிர்மறையான குணாதியங்களுடன் இயங்கும் திரைநாயகர்களை காணும் போது...°
இதன் காரணமா இந்த படத்தை என்னால் ரசிக்க முடியவில்லை.

பின்னோக்கி said...

அந்த சின்னப் பெண்ணின் முகபாவத்தைக் கவனித்து எழுதியது.

கடைசி பத்தியில் சமூகக் கவலை.

இரண்டும் நன்றாக இருந்தது.

சினிமாவை ரொம்ப டெக்னிக்கலாக பார்க்கத் தொடங்கிவிட்டனர். எனவே, வன்முறைகளை, நடிப்பு என்ற அளவில் தவிர்த்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அழகிரி கடலூர் said...

தற்போதைய தஞ்சை கிராம வாழ்க்கையை அப்படியே காட்டி இருப்பதுதான் படத்தின் பெரிய பலம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு போலிஸ் இல்லாத ஒரு படம் இதுவாகத்தான் இருக்கும். வில்லன் கதாநாயகன் என்ற பிம்பமும் இல்லை.