Tuesday, July 20, 2010

நாளைய இயக்குநர் - இறுதிப் போட்டி - ஒரு பார்வை - பகுதி 2

இந்தப் பதிவின் தொடர்ச்சி....

கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் குறும்படங்களை  இந்த தளத்தில் பார்த்துவிட்டு பின்பு இந்தப் பதிவை வாசிப்பது நல்லது.

3) மூன்றாம் குறும்படம் : ஆடு புலி ஆட்டம் - இயக்குநர் ஷ்யாம்

பால் வேறுபாடுகளின் இடைவெளி மறைந்து கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டத்தில் கூட  ஆண் குழந்தை மீதான பிரேமையின் அபத்தத்தை செவிட்டில் அறைந்தாற் போல் கண்டிக்கும் குறும்படமிது.

ஒரு நள்ளிரவு பிரசவ வலியுடன் துவங்குகிறது. இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் அத்தகப்பன் ஆண் குழந்தைதான் பிறக்கும் / வேண்டும் என்று தீவிரமாக நம்புகிறான். ஆனால் அவருக்கு பெண் குழந்தை பிறக்கிறது.

திகைத்துப் போகும் அவர், செவிலிக்கு பணம்தந்து அதே சமயத்தில் இன்னொரு பெண்ணுக்கு பிறக்கும் ஆண் குழந்தையை தன் மனைவியிடம் மாற்றி வைக்குமாறு ஏற்பர்டு செய்கிறார். அவரைத்தவிர வேறு யாருக்கும் இது தெரியாது. காலையில் பக்கத்து படுக்கையில் இருக்கும் பெண்ணிடம் 'உங்கள் மகள் (?) நன்றாக வருவாள்' என்று பேசி தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொள்கிறார். 'உங்களுக்கு பெண் குழந்தை பிறந்ததில் வருத்தம் ஏதுமில்லையே?' என்று அவர் கேட்கும் போது அதற்கு பெண்ணின் அம்மா பதில் சொலலும் போதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் தெரியவருகிறது.

"எங்க தொழிலுக்கு பெண் குழந்தைதாங்க வேணும். வயசுக்கு வந்தவுடனே இவ சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவாளே"

நடிகர் தலைவாசல் விஜய் அந்தத் தகப்பன் பாத்திரத்தை சிறப்பாகவே செய்திருந்தார். அவரின் ஆண் குழந்தை ஆசை (வெறி) அவரது குடும்ப உறுப்பினர்களின் மூலம் அழுத்தமாக வெளிப்படுகிறது. பிரசவத்துக்கு முன் அவரது மனைவி 'நமக்கு நல்லபடியா ஆண் குழந்தை பிறக்குமில்லையா' என்று கேட்கிறார். (ஆனால் நான்கு பேர் எதிரில் தன்னுடைய பிற்போக்குத்தனத்தை ஒப்புக் கொள்ள மனமில்லாத அந்த நடுத்தர வாக்க தகப்பன் "எந்தக் குழந்தையா இருந்தா என்னம்மா, நல்லபடியா பொறந்தா சரி" என மழுப்புகிறார்). அவரது சிறு மகளும் "தம்பிப் பாப்பாதான் பொறக்கணும்னு சாமிய வேண்டிக்கறேன்" என்கிறாள். ஆண் குழந்தை குறித்து வீட்டில் தந்தையின்  உரையாடலை விருப்பத்தை  கேட்டு வளரும் மகள், தந்தையிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக தக்க சமயத்தில் இதை உபயோகப்படுத்திக் கொள்ளும் குழந்தைகளின் பிரத்யேக குணாதிசயமாக இதை புரிந்து கொள்ளலாம்.

தனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று செவிலியிடம் அவர் வற்புறுத்துகிற காட்சியில் "கொள்ளி போட பிள்ளையில்லன்னா என் சாதியில எவனுமே என்னை மதிக்க மாட்டான்" என்கிறார். அப்படி அது என்ன சாதி என்பது தெரியாவிட்டாலும் நிறைய பேர் தங்களது சாதிய உணர்வுகளை தங்களது சமூகத்திற்கு பயந்துதான் பின்பற்றுகிறார்கள் என்கிற யதார்த்தமான உண்மை  தெரிகிறது.

இந்தக் குறும்படத்தை லீனியர் முறையிலேயே சொல்லிச் சொல்லும் இயக்குநர், குழந்தை மாற்றப்பட்ட நிகழ்வை மாத்திரம் கட் செய்து இறுதிப் பகுதியில் சொல்கிறார். இதன் மூலம் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைக்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருக்கக்கூடும். ஆனால் இந்த உத்தியே அவரது நோக்கத்தை பாழாக்கி விட்டது என்பது என் அனுமானம். கதையை அதன் போக்கிலேயே சொல்லி அந்த 'பாலியல் தொழில்' அதிர்ச்சியை இறுதியில் வைத்திருந்தால் பார்வையாளர்களிடம் அதிக தாக்கததை ஏற்படுத்தியிருக்கலாம். இதன் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.

4) நான்காவது குறும்படம் : நீர் - இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்


தமிழக கடலோரங்களில் மீனவர்கள் ஆண்டாண்டுகளாக தொடர்ந்து அனுபவிக்கும் ஒரு சமூகப் பிரச்சினையை பிரச்சார தொனியின்றி கையாண்டுள்ளார் இயக்குநர் கார்த்திக்.

அண்ணன் - தம்பி ஈகோ மோதலோடு துவங்கும் குறும்படம் எதிர் பக்கத்திலிருந்து  குண்டு மழை பொழியும் போது காயப்பட்டு விடும் தம்பி மீது அண்ணன் வைத்திருக்கும் பாசம் இயல்பாக  வெளிப்படுவதோடு  தொடர்கிறது. அவனுக்காக மருந்து எடுத்துவர திரும்பவும் படகின் மேற்பகுதிக்கு வேறுவழியின்றி செல்லும் அண்ணன், குண்டு பட்டு இறப்பதும், தம்பி காயத்துடன் சக மீனவர்கள் உதவிக்காக நடுக்கடலில் காத்திருக்கும் நிராதரவான நிலையுடனும் படம் நிறைகிறது.

கணவன் மனைவி குடும்ப பிரச்சினை, ஆரம்பம் - பிரச்சினையின் முடிச்சு - அதிர்ச்சியான முடிவு .......என்று சிறுகதைகளை நகல் செய்யும் பாதுகாப்பான வழக்கமான உள்ளடக்கம் அல்லாமல் கதை என்று பெரிதாக ஒன்றுமில்லாமல் வசனங்களும் அதிகமில்லாமல் நிகழ்வுகளின் மூலமாகவே தன் படைப்பை நகர்த்திச் இயக்குநர் சென்ற விதம் திருப்தியை ஏற்படுத்துகிறது.அதுவும் தற்போது ஆட்சியிலிருக்கும் ஒர் அரசியல் கட்சியின் தொலைக் காட்சியிலேயே இப்படியொரு உள்ளடக்கத்தை தேர்வு செய்தது இயக்குநரின் துணிச்சலைக் காட்டுகிறது.

'பொட்டை' 'மயிரு' என்று தாராளமாக புழங்கும் வசனங்கள் யதார்த்த நோக்கில் உபயோகப்படுத்தப் பட்டிருந்தாலும் இது சென்சார் தடையில்லாமல் பெரும்பாலான வரவேற்பறைகளில் ஒலிக்கப் போவதை இயக்குநர் கவனத்தில் கொண்டிருக்கலாம். "அப்பன மாதிரியே நானும் செத்திருக்கணும்னு நெனக்கறியா" என்று குண்டடி பட்ட தம்பி மூலம் இந்த எல்லையோர அட்டூழியங்கள் காலங்காலமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது அழுத்தமாக பதிவாகிறது. படம் முழுவதும் தொடரும் அந்த பதட்டத்தை இறுதிவரை தக்கவைத்திருக்கிறார் இயக்குநர்.

இக்குறும்படத்தின் மிகப் பெரிய பலம் இதன் ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும். பதட்டமான ஒலிகளின் மூலமே அந்தச் சூழ்நிலையின் பயங்கரம் பார்வையாளர்களுக்கு உணர்த்தப்படுகிறது. அரைகுறையான வெளிச்சத்தில் உயிருக்கு போராடும் அவர்களின் வேதனையும், அண்ணனின் மரணம், தம்பியின் மடியில் அவர் சடலத்தின் மூலம் வெளிப்படும் இறுதிக் காட்சியின் ஏரியல் ஷாட்டும் படகு  நடுக்கடலில் அனாதையாக நிற்கும் லாங் ஷாட்டும் ஒளிப்பதிவாளரின் உழைப்பைக் காட்டுகிறது.  படகில் மாட்டப்பட்டிருக்கும் கடவுளின் படத்தில் 'யாமிருக்க பயமேன்' என்று எழுதப்பட்டிருப்பதை சில முறை காட்டி அதிலுள்ள நகைமுரணை சித்தரித்திருக்கிறார் இயக்குநர்.

விஷூவல் மீடியம் என்பதன் அடிப்படையை முறையாக உணர்ந்து உருவாக்கப்பட்டிருந்தது  இக்குறும்படம்.

6) ஆறாவது குறும்படம் : மிட்டாய் வீடு - இயக்குநர் பாலாஜி

வித்தியாசமாக தலைப்பிலுள்ள இக்குறும்படம், தன்னுடைய வருங்கால மனைவியை பெற்றோரிடம் அறிமுகப்படுத்தப் போகும் ஓர் இளைஞனின் பார்வையில் செல்கிறது. பெற்றோர் இருவருமே தன்னை எத்தனை அனுசரணையாக வளர்த்தனர் என்பதை தன் காதலிக்கு விளக்குகிறான் இளைஞன். பாத்திரங்களின் இடையில் இயக்குநர் குரல் துணையுடன் சுவாரசிய பின்னணிகளுடன் இது சொல்லப்படுகிறது. இறுதியில் அந்தப் பெண் தன்னுடைய மகனுக்கு ஏற்றவள்தான் என்று பெற்றோர் புரிந்து கொள்வதுடன்  படம் சுபம்.

தந்தையாக ராகவேந்தர். எனக்குத் தெரிந்து அறிமுகமானது முதல் இப்போது வரை மாற்றமேயில்லாமல் ஒரே மாதிரியாக நடிப்பவர்களில் இவரும் ஒருவர். (இவர் ரஜினிகாந்த்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது). தாயாக ரேணுகா. தரப்படும் சம்பளத்திற்கு  இரட்டிப்பாகவே  நடிப்பது இவர் வழக்கமென்றாலும் சில காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். குறிப்பாக அந்தப் பெண்ணை முதன் முறையாக கூர்ந்து பார்க்கும் காட்சி.

இயக்குநர் பாலாஜிக்கு பாலச்சந்தர், எஸ்.ஜே. சூர்யா படங்கள் மிக பிடிக்கும் போலிருக்கிறது. பாத்திரங்களின் அறிமுகங்களும், நிகழ்வுகளில் இயக்குநரின் சுவாரசிய படம் வரைந்து பாகங்கள் குறிக்கும் குறுக்கீடும் இதை யூகப்படுத்த வைக்கின்றன. பொதுவாக அந்நிய சூழலுக்குச் செல்லும் மருமகளுக்கு இருக்கும் பயம், குறிப்பாக மாமியாரிடம் மீதுள்ள படம் பல படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாமியாருக்கும் இதே போன்றுள்ள பயத்தை யாரும் சித்தரித்ததாக தெரியவில்லை. இந்த நுட்பமான விஷயத்தை இயக்குநர் தொட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

'ஒர் இளைஞன் தன்னுடைய அம்மாவின் குணாதியங்களையே உடைய பெண்ணைத்தான் காதலிப்பான்' என்கிற உளவியலை முன்வைக்கும் இயக்குநர், இதே காரணத்தினாலேயே, தன்னுடைய இடத்தை அபகரிக்க வந்திருக்கும் மருமகளை வெறுப்புடன் அணுகுவார் என்று அந்தப் பெண்ணின் மூலமாக வெளிப்படுத்துகிறார். ஆனால் படத்தின் இறுதியில் அம்மாவும் காதலியும் ஒரே விஷயத்தை தேர்வு செய்வதாக காட்டி, அவர்களுக்கு ஒரே மாதிரியான டேஸ்ட் இருப்பதுடன் நிறைவு செய்கிறார். எனில் இயக்குநர் முன்பு விளக்கிய லாஜிக்படி அம்மாவிற்கு அந்தப் பெண்ணின் மீது வெறுப்புதானே ஏற்பட வேண்டும்?

"வீட்டிற்கு 12.00 முன்னாலேயே வருவதாகச் சொல்லியிருக்கிறேன்" என்று காதலியை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் இளைஞன், வீட்டையடைந்தவுடன் அம்மாவிடம் தங்களின் அடுத்த நிகழ்ச்சியாக திரைப்படத்திற்குச் செல்வதாக சொல்கிறான். அம்மா இதை ஆட்சேபிக்கும் போது "லஞ்சுக்கு இங்கதாம்மா திரும்பி வரப் போகிறேன்" என்கிறான். அப்பவே லஞ்ச் நேரம் எனும் போது அவர்கள் திரைப்படத்திற்குச் சென்று திரும்பும் போது லஞ்ச் நேரம் கடந்திருக்கும் என்பதை இயக்குநர் கவனத்தில் கொண்டிருக்கலாம்.

சம்பவங்களின் தொடர்ச்சியையும் காலத்தையும் இயக்குநர் கவனமாக தொடர வேண்டும் என்பதற்கு உதாரணமாக சொல்லலாம் என்றாலும் 'எத்தனை கவனமாக பார்த்திருக்கிறேன் பார்த்தீர்களா?" என்று என்னைப் போன்றவர்கள் காட்டிக் கொள்வதற்காக சொல்லும் குறையாகவும் பார்க்கலாம். :-)

மொத்தத்தில் ஒரு ஃபீல் குட் திரைப்படத்தை பார்த்த உணர்வை இக்குறும்படம் ஏற்படுத்தியது.

இறுதிப் போட்டியின் அடுத்த இரண்டு  குறும்படங்கள், என்னைக் கவர்ந்த இயக்குநர்கள், குறும்படங்கள், இந்த நிகழ்சசியின் பின்னாலுள்ள அரசியல் போன்றவை... அடுத்த பதிவில்.

suresh kannan

3 comments:

Anonymous said...

நல்ல அலசல். இதில் பாலாஜி சினிமாவில் வெற்றி இயக்குநராக வருவார் என நினைக்கிறேன். அடுத்தபகுதிக்காக வெயிட்டிங்.

கோபிநாத் said...

யப்பா போட்டுட்டிங்களா...எனக்கு நீர் பிடித்திருந்தது தல.

\\இறுதிப் போட்டியின் அடுத்த இரண்டு குறும்படங்கள், என்னைக் கவர்ந்த இயக்குநர்கள், குறும்படங்கள், இந்த நிகழ்சசியின் பின்னாலுள்ள அரசியல் போன்றவை... அடுத்த பதிவில்.
\\

ஆகா...எழுதுங்க..எழுதுங்க..;)

Cable சங்கர் said...

அருமையான பார்வை சுரேஷ் கண்ணன்.