Saturday, May 22, 2021

கார்த்திக் டயல் செய்த எண் - கெளதம் மேனன் (குறும்படம்)





லாக்டவுன் சமயத்தில் தன் ஐபோனிலேயே கெளதம் மேனன் இயக்கிய குறும்படம். இது குறித்த கிண்டல்களை இணையத்தில் கண்டபின் நானும் அத்தகைய எண்ணத்தோடுதான் இந்தக் குறும்படத்தைப் பார்க்கப் போனேன்.


ஆனால் – இதில் வெளிப்பட்ட அசலான உணர்வுகளும் வசனங்களும் என்னை உலுக்கி விட்டன. VTV-ன் அற்புதமான ஒரு சிறிய extension இது.


‘Gautham is such a sweet rascal’ என்பதுதான் குறும்படம் முடிந்தவுடன் தோன்றியது. அவருக்குள் இருக்கும் காதலன் இன்னமும் இளமையாகவும் பிரிவுத்துயரின் வலியுடனும் இருக்கிறான் என்று அழுத்தமாக யூகிக்கத் தோன்றியது. 

**


ஒரு திரைப்பட இயக்குநன் தன் அடுத்த படைப்பிற்கான ஸ்கிரிப்டை எழுதத் துவங்குகிறான். ஆனால் இயலவில்லை. Writers block என்பது மட்டும் காரணமல்ல. பிரிவின் வலி அவனை வதைக்கிறது. ஒரு காலத்தில் அவனுக்குள் ஆழமாக பாதிப்பைச் செலுத்திய ஒரு பெண், நினைக்கும் போதெல்லாம் அவனுடைய இதயத் துடிப்பை அதிகரித்து மூச்சடைக்கச் செய்த பெண், அண்டை மாநிலத்திற்கு வந்திருக்கும் செய்தியை சமூகவலைத்தளத்தின் மூலமாக அறிகிறான். 


அவளுடன் பேசினால்தான் மனபாரம் சற்றாவது குறையும் என்று தோன்றுகிறது. ‘உன் குரலை கேட்கணும் போல இருந்துச்சு” என்று கார்த்திக் சொல்லும் வசனமானது, வாழ்நாள் முழுக்க பிரிவுத்துயரால் இருப்பவர்களின் வேத வாக்கியம் எனலாம். அதைச் சொல்லாத ஒரு காதலனே இருக்க மாட்டான். 


இருவருக்குள்ளும் நிகழும் அந்த அழகான உரையாடல், யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக பயணிக்கிறது. 


‘I love you karthick’ன்னு மட்டும் சொல்லு.. போதும்.. நான் எல்லாப் பிரச்சினையையும் தாண்டிடுவேன்’ என்று கார்த்திக் சொல்வது, ஆண்கள் எப்போதுமே செய்யும் ஒரு விஷயம். காலம் கடந்து போனாலும் கூட அவள் தன் மேல் கொண்டிருக்கிற காதல் உறுதியானதுதானா என்பதை மறுபடி மறுபடி கேட்டுக் கொள்வதில், அவளுடைய வார்த்தைகளில் அது உறுதிப்படுவதில் ஒரு வித சந்தோஷம் அவர்களுக்கு கிட்டிக் கொண்டே இருக்கும். 


அதே சமயத்தில் அது சம்பிதாயமானதா என்கிற சந்தேகமும் இன்னொரு புறம் எழுந்து கொண்டே இருக்கும். ‘you didn’t mean’ல’ என்று கார்த்திக் கேட்பதும் இதுதான்.

 
அவனுடைய மனஇறுக்கத்தை குறைக்கும் நோக்கத்துடன் ‘ஐ லவ் யூ கார்த்திக்’ என்று சொல்லும் ஜெஸ்ஸியின் பெருந்தன்மை பிரமிக்கவும் நெகிழவும் வைக்கிறது. உண்மையான காதல் குறைந்தபட்சம் செய்யும் மரியாதை அது. அதே சமயத்தில் தான் ஐக்கியமாகி விட்ட நடைமுறை வாழ்க்கையையும் மறைக்காமல் சொல்கிறாள். 


“நான் என் பிள்ளையாகத்தான் உன்னைப் பார்க்கிறேன்” என்று ஜெஸ்ஸி அந்த உரையாடலைத் தொடர்வது இந்தக் குறும்படத்தை  இன்னமும் உன்னதமாக்குகிறது. ஒரு பெண் காதலியாகவும் தாயாகவும் இருக்க முடிவது உலக அதிசயமல்ல. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் தன் தாயைத்தான் ஓர் ஆண் தேடுகிறான் என்பதும் இயற்கையானதுதான். 


**


‘சைக்கிள் கேப்பில் லாரி ஓட்டுவது போல’ இந்தக் குறும்படத்தின் இடையே கொரானோ சமயத்தில் திரையுலகம் எதிர்கொள்ளும் பிரச்சினை, தன் பொருளாதார பிரச்சினை’ ஆகியவற்றையும் கெளதம் இணைத்திருப்பது சிறப்பு. 


ஒருவரையொருவர் நேரில் சந்திக்க முடியாத நெருக்கடியான சூழலில் இருக்கிற குறைந்தபட்ச தொழில்நுட்ப வசதியைக் கொண்டு ஓர் அட்டகாசமான குறும்படத்தை கெளதம் உருவாக்கியிருப்பது சிறப்பு. கலைஞர்களுக்கு எதுவும் தடையில்லை; எல்லையும் இல்லை.


**
சிம்பு ஒரு நல்ல நடிகர். ஒரு நல்ல இயக்குநரிடம் மாட்டினால் மிக அற்புதமாக பிரகாசிப்பார் என்பதை இந்தக் குறும்படமும் உறுதிப்படுத்துகிறது. இதில் அசலுக்கு மிக நெருக்கமான உணர்வு மற்றும் உடல்மொழியை வெளிப்படுத்துகிறார். உடல் எடை விஷயத்தில் கவனம் செலுத்தினால் நன்று. சமயங்களில் குறளரசனைப் பார்ப்பது போலவே இருக்கிறது. 


த்ரிஷாவும் க்யூட்டான ஃபெர்பாமன்ஸைத் தந்திருக்கிறார். 


நான் எப்போதுமே சொல்வதுதான். கெளதமால், விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் மாதிரி இன்னொரு க்யூட்டான ரொமான்ஸ் திரைப்படத்தை தர முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது இந்தக் குறும்படம்.
 

**
வழக்கம் போல் மெல்லுணர்வுகளைக் கிண்டலடிக்க ஏராளமான பேர் இருப்பார்கள். அவர்கள் இதைக் கிண்டலடிப்பார்கள். தங்களின் வலிகளை ஒளித்துக் கொண்டு இந்த ஜோதியில் கலந்து கும்மியடிப்பவர்களும் இருப்பார்கள். 


ஆனால் அசலான ஒரு காதலில் விழுந்து பிறகு வாழ்நாள் பிரிவுத் துயரின் வலியுடன் இருப்பவர்களால் இந்தக் குறும்படத்தை மனதிற்கு மிக நெருக்கமாக உணர முடியும். தன்னுடைய வாழ்க்கையை திரையில் இருவர் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டு மனம் கசிய முடியும். சில நொடிகள் அதை வாழ முடியும்.
 

**
இந்த அபாரமான குறும்படத்தைத் தாண்டி என்னை பொறாமை கொள்ளச் செய்த விஷயம், சிம்புவின் வீட்டிலிருந்த ஹோம் தியேட்டர். அது என் வாழ்நாள் கற்பனை. நிறைவேறவே முடியாத கற்பனையாகவும் முடிந்து போகலாம்.

 

குறும்படத்தைக் காண

suresh kannan

1 comment:

திருவாரூர் சரவணா said...

அட... படம் பார்த்து முடிச்சபோது காட்சிகளைப் போலவே ஹோம் தியேட்டரும் என் மனதை விட்டு அகலவில்லை. என் வீட்டில் இதுபோல் உருவாக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது.