Monday, May 10, 2021

One (2021) மம்முட்டி நடித்த வேட்டி விளம்பரம்


 
மம்முட்டி நடித்த ‘One’ என்கிற மலையாளத் திரைப்படம் பார்த்தேன். படம் பேச முயன்றிருக்கும் மையப்பொருள் முக்கியமானது. ஆனால் பேசிய விதம் சலிப்பூட்டும் மசாலா.

நம்மூர் ஷங்கர் எடுத்த ‘முதல்வன்’ திரைப்படமானது, மலையாளத்தில் லோ –பட்ஜெட்டில் ரீமேக் செய்யப்பட்டது போன்று ஒரு ஃபீல். என்னவொன்று, முதல்வர் பாத்திரம், அர்ஜூன் மாதிரி ரோட்டில் இறங்கி சண்டை போடவில்லை. அதுவரைக்கும் தப்பித்தோம்.

ஆனால் ஒரு தொலைபேசியில் முடிக்க வேண்டிய விஷயத்திற்கு தானே போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார் முதல்வரான மம்முட்டி. இது போன்ற பரபரப்பான சென்ட்டிமென்ட் காட்சிகள் நிறைய உண்டு.

மற்றபடி ராம்ராஜ் வேட்டி விளம்பரம் மாதிரி மம்முட்டி ஸ்டைலாக நடக்கிறார்.. நடக்கிறார்.. நடந்து கொண்டே இருக்கிறார். நம்மூர் அஜித்திற்குப் போட்டி போல. நடந்து நடந்து தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி இங்கே வந்து விடுவாரோ என்று பயமாக இருந்தது.

*

படம் பேசும் விஷயம் என்ன?

ஒரு சாதாரண வணிகப் பொருளை வாங்கினால் கூட அதற்கு குறைந்தது ஒரு வருஷம் கியாரண்டி தருகிறார்கள்.

ஆனால் நாம் தேர்ந்தெடுக்கும் எம்.எல்.ஏக்களுக்கு அவ்வாறான கியாரண்டி எதுவும் இல்லை. (இந்தப் பொருட்கள் பெரும்பாலும் வேலைக்கு ஆகாது என்பது நமக்கு முன்பே தெரியும் என்பது வேறு விஷயம்).

நாம் தேர்ந்தெடுக்கும் எம்.எல்.ஏவை ஐந்து வருடத்திற்கு வேறுவழியின்றி சகித்துக் கொள்ள வேண்டியதுதான். இப்படியொரு ஜனநாயக வழிமுறையைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல்வாதிகள் செய்யும் அராஜகங்கள் ஏராளம்.

இதை மாற்றி Right To Recall என்னும் முறையை தனது மாநிலத்தில் கொண்டு வர போராடுகிறார் ஓர் ஆளுங்கட்சி முதல்வர்.

ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர்களில் ஐம்பது சதவீதத்தினருக்கு அந்த தொகுதி எம்.எல்.ஏவின் செயற்பாடுகளில் திருப்தியில்லையென்றால் அவரின் பதவியைப் பறிக்க முடியும்.

ஆனால் முதல்வரின் கட்சியில் இருக்கும் எம்.எல்.ஏக்களில் பெரும்பாலோனோரே இதை ஆதரிப்பதில்லை. பின்னே.. அவர்கள் என்ன லூசா?

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பு எதிர்ப்புகளுக்கிடையே தனது நேர்மையான முயற்சியை முதல்வர் எப்படி சாதிக்கிறார் என்பதை நோக்கி கடைசிப்பகுதி நகர்கிறது.

*

இப்படியொரு கற்பனாவாத (ஆம். கற்பனாவாதம்தான். சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் இந்த முறையை நம் நாட்டு அரசியல்வாதிகள் நிச்சயம் பாராளுமன்றத்தில் ஆதரிக்க மாட்டார்கள்) திரைப்படத்தை நீங்கள் பார்த்தேயாக வேண்டும் என்றால் அதற்கு ஒரே காரணம்தான்.

அது மம்முட்டி. நிச்சயம் சில இடங்களில் அவரது நடிப்பும் கம்பீரமும் நெகிழ்ச்சியும் நம்மைக் கவரத்தான் செய்கிறது. 'கடக்கல் சந்திரன்' என்கிற முதல்வர் பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார்.

திரையிலாவது ஒரு நேர்மையான முதல்வரைக் கண்டு சற்று நேரம் சந்தோஷப்படலாம் என்று விரும்பினால் இந்தப் படத்தைப் பார்த்து வைக்கலாம்.


suresh kannan

No comments: