Sunday, May 02, 2021

பதினெட்டு வயதில் பார்த்த நள்ளிரவுப் படம்

எனக்கு அப்போது 18 வயதிருக்கலாம். (நோ.. நோ.. இது அந்த மாதிரியான ‘அனுபவக் குறிப்பு அல்ல). 'கமலா, ரஜினியா?' என்று நண்பர்களிடம் குடுமிப்பிடிச் சண்டையிட்டுக் கொண்டிருந்த விடலை வயதின் காலக்கட்டம். (நான் கமல் கட்சி. இங்கு கட்சி என்பதை சம்பிரதாய வழக்கில் மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன்.)

வணிக எழுத்தின் வழியாக சுஜாதா அப்போது நன்கு பரிச்சயமாகியிருந்தார். அந்த ஏணியைப் பற்றிக் கொண்டு ‘கணையாழி’யையும் வாசிக்கும் பெரிய மனிதனாகியிருந்தேன். தனது பத்தி எழுத்தில் உலகின் சிறந்த படைப்புகளையும் எழுத்தாளர்களையும் அப்படியே ‘அசாலட்டாகவும்’ ஆழமாகவும் கடத்தி விடுவதில்தான் ‘வாத்தியார்’ மன்னராயிற்றே?

அந்த வகையில் ஓர் இந்திய இயக்குநரைப் பற்றி மிகவும் சிலாகித்து எழுதி ‘இவரின் படங்களைப் பார்க்கவில்லையெனில் நீங்கள் உயிர் வாழ்வதில் அர்த்தமேயில்லை’ என்கிற வகையில் எழுதி உசுப்பி விட்டார்.

‘என்ன.. இந்தாள் இப்படி ஏற்றி விடுகிறாரே.. அப்படி என்ன.. அவரின் படம் உசத்தி..?! பார்த்து விடுவோம்’ என்று காத்துக் கொண்டிருந்தேன். அதற்கான நேரமும் வந்தது. சம்பந்தப்பட்ட இயக்குநர் மருத்துவனையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த நேரம். வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது கூட அறிவிக்கப்பட்டிருந்தது. அவரது திரைப்படங்களை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு ஒளிபரப்பியது ‘தூர்தர்ஷன்’.

இப்படியொரு அசந்தர்ப்பமான நேரமா அமைய வேண்டும்?

இரவு பதினோரு மணி வரை காத்திருந்து பார்க்கத் துவங்கினேன். ("நைட்டு கண்ணு முழிச்சிருந்து என்ன கருமத்த பார்க்கறே?" – என் அம்மா. "சும்மாயிரும்மா. .இது வேற”)

படம் ஓடத் துவங்கியது. நான் மெல்ல மெல்ல அதில் அமிழத் துவங்கினேன். மனம் அதிரத் துவங்கியது.  நான் அதுவரை பார்த்திருந்த தமிழ் சினிமாக்கள் எல்லாம் எத்தனை குப்பையானது.. போலியானது.. என்பதை அந்தத் திரைப்படம் தோலுரித்துக் காட்டியது. ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை இத்தனை ரத்தமும் சதையுமாக காட்ட முடியுமா என்று வியந்தும் பிரமித்தும் போனேன். அதில் சித்தரிக்கப்பட்ட ஒவ்வொரு காட்சியும் எனக்கு மிக நெருக்கமாக இருந்தது. அதில் உலாத்தும் கிழவி.. எங்கள் வீட்டுக் கிழவியேதான்.

அதுவரையில்லாத புது அனுபவமாக என் மனம் மிகவும் நெகிழ்ந்தது. கண்ணில் இருந்து நீர் ஆறாக கொட்டியது. படம் முடியும் சமயத்தில் என்னால் மூச்சு விடவே முடியவில்லை. என் ரசனையின் கால்வாயில் ஒரு புதிய வழியை வெட்டி பெரிய வழியை ஏற்படுத்தியிருந்தார் அந்த இயக்குநர். அதன் வழியாக தேங்கியிருந்த சாக்கடை நீர் பெரும்பாலும் வெளியே ஓடியது.

‘உலகத்தீரே.. நான் ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்தேன். நீங்களும் அதைப் பற்றி கேளுங்கள்’ என்று நள்ளிரவிற்கும் மேலான அந்தச் சமயத்தில் ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி சொல்ல வேண்டும் போலிருந்தது. குறைந்தபட்சம் என் அம்மாவையாவது எழுப்பி சொல்ல வேண்டும். ஆனால் உன்மத்தம் பிடித்தவன் போலிருந்த என்னை அப்போது அவள் பார்த்திருந்தால் அவளே திகிலால் மூச்சடைத்துப் போயிருக்கலாம். அல்லது விபூதியை நெற்றியில் பூசி விட்டு விடிந்தவுடன் என்னை மந்திரிக்க அழைத்துச் சென்றிருக்கலாம்.

எனவே அவற்றை கைவிட்டு விட்டு எழுதாமல் வைத்திருந்த ஓர் ஓசி டயரியை எடுத்து மளமளவென்று அந்தத் திரைப்படத்தைப் பற்றிய என் எண்ணங்களையெல்லாம் மனம் கசிய எழுதிக் கொண்டிருந்தேன். பாமர எழுத்தென்றாலும் என்னளவில் அந்த டைரி ஒரு பொக்கிஷம். பிறகு எப்படியோ அது காணாமல் போயிற்று. அப்படி அதில் என்னதான் எழுதியிருப்பேன் என்று இன்று வரை பல்வேறு வகையில் நினைவு கூர்கிறேன். ஒன்றும் பிடிபடவில்லை.

பிறகு ஒவ்வொரு நாளும் அந்த இயக்குநரின் திரைப்படங்களை பார்த்து பார்த்து இன்பமடைந்தேன்.

*

விடலை வயதுள்ள பையன் ஒருவன் எப்போது முதிர்ச்சியுள்ள இளைஞன் ஆகிறான்..? அந்தக் கணம் எப்போது நிகழ்கிறது..? 

இதை அறிவது அத்தனை சாத்தியமில்லை. ஏதோவொரு நொடியில் அந்த மாயம் நிகழ்கிறது.. என்கிற விஷயத்தை மையமாக வைத்து ‘நிலா நிழல்’ என்கிற நாவலை சுஜாதா எழுதியிருப்பார்.

அந்த நாவலின் மையம் போல விடலை வயதிலிருந்து நான் இளைஞனான கணம் இந்தச் சமயத்தில்தான் நிகழ்ந்தது என்று நம்ப விரும்புகிறேன்.

*

இத்தனை விஸ்தாரமாக எழுதி விட்டு அந்த இயக்குநரின் பெயரைச் சொல்லாமல் இருப்பேனா? அந்த கலை மேதையின் பெயர் சத்யஜித்ரே. அப்படி நான் பார்த்த முதல் திரைப்படம் ‘பதேர் பாஞ்சாலி

வாத்தியார் சொன்னதையேதான் நானும் உங்களுக்குச் சொல்லுவேன்.

“அந்த மேதையின் திரைப்படங்களை இன்னமும் பார்க்காதிருப்பீர்கள் என்றால் உயிர் வாழ்வதில் பொருளில்லை” 😀

 


 

நான் பொதுவாக எவருக்கும் பிறந்த நாள் வாழ்த்து சொல்வதில்லை. ஆனால் சில அரிதான விதிவிலக்குகள் இருக்கும். அந்த வகையில் என் மனதினுள் வீற்றிருக்கும் பல ஆசான்களில் முக்கியமானவரான சத்யஜித்ரேக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு இந்த எளிய ரசிகனின் வணக்கமும் வாழ்த்தும்.

பிறந்த நாள் வாழ்த்துகள் மாஸ்டர்!

 


suresh kannan

1 comment:

Sundar said...

If you like and if you want, praise Satyajit Ray. But don't criticize Tamil cinema unnecessarily. Tamil cinema is not inferior to Satyajit Ray films. Tamil cinema is a different kind of cinema, different from the films of Ray, Ghatak and Sen. That's all. Ray's films entertained me; similarly the films of Balachander, Bharathiraja, Mahendran, Balu Mahendra also entertained.