Tuesday, December 26, 2017

American Made (2017) - ‘ஆகாயக் கோட்டை'


Barry Seal என்கிற விமானியின் வாழ்க்கைச் சம்பவங்களையொட்டி உருவான அமெரிக்கத் திரைப்படம் இது. மிகச்சிறந்த விமானியாக துவங்கும் பேரி சீலின் வாழ்க்கை, சர்வதேச கடத்தல்களில் ஈடுபட்டு வீழ்வதை திகிலும் பரபரப்புமாக விவரிக்கிறது.  சர்ரென்று உயரே பறந்து உற்சாகமாக பயணித்து தடாலென்று கீழே விழும் ஒரு விமானத்தைப் போலவே அவருடைய வாழ்க்கையும் அமைந்தது பரிதாபமான தற்செயல்.

**

வருடம் 1970. பேரி சீல் ஒரு திறமையான விமானி. குறைந்த வயதிலேயே கமாண்ட் பைலட் ஆன அளவிற்கான திறமை. விமான நிறுவனம் தரும் சம்பளம் அவனுக்கு போதுமானதாக இல்லை. எனவே பயணத்தின் இடையே சிகரெட் பெட்டிகளை கடத்தும் சிறிய குற்றத்தோடு துவங்குகிறது அவனுடைய சாகச வாழ்க்கை.

CIA அதிகாரி ஒருவர் அவனை அணுகுகிறார். “சின்ன விஷயங்களுக்காக உன் திறமையை வீணாக்காதே. நான் சொல்கிறபடி செய். நிறைய பணம்” என்கிறார். “என்ன வேலை?”.

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் பனிப்போர் உச்சத்தில் இருந்த காலக்கட்டம் அது. மத்திய அமெரிக்காவின் சில பகுதிகளில் கம்னியூஸ்ட் படைகளுக்கு ரஷ்யா உதவி செய்து கொண்டிருந்தது. அமெரிக்கா இதை தடுக்க விரும்பியது. பேரி சீல் ஒரு சிறிய விமானத்தின் மூலம் அந்தப் பகுதிகளில் தாழ்வாக பறந்து புகைப்படங்கள் எடுக்க வேண்டும். இன்னொரு வகையில் அதற்குப் பெயர் உளவு பார்த்தல்.

கிடைக்கப் போகும் ஆதாயங்களுக்காக மிக ஆபத்தான இந்தப் பணியை பேரி ஒப்புக் கொள்கிறான். விமான நிறுவன பணியை தூக்கிப் போட்டு விட்டு இதில் இறங்குகிறான். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்கிற விஷயத்தை அநாயசமாக கையாள்கிறான். இவனது திறமையான பணியைக் கண்டு CIA உற்சாகமாகிறது. அடுத்த பணியைத் தருகிறது. எதிரிப் பிரதேசங்களில் உள்ள ராணுவ அதிகாரிகளிடம் பணத்தைத் தந்து விட்டு ரகசியங்களைப் பெற்று வருவது. கூரியர் வேலை.

இந்தச் சமயத்தில்தான் இன்னொரு அதிர்ஷ்டம் அல்லது ஆபத்து பேரியைத் தேடி வருகிறது. கொலம்பியாவில் உள்ள மிகப்பெரிய போதை மருந்து கடத்தல் குழு இவனைத் தொடர்பு கொள்கிறது. “தோ… பாருப்பா.. ப்ளைட்ல சும்மாதானே திரும்பிப் போறே..  நாங்க தர்ற பாக்கெட்டுக்களை அமெரிக்காவிற்கு எடுத்துட்டுப் போ”. (இந்தக் குழுவின் தலைவனான பாப்லோ எஸ்கோபர் பற்றி தனியான திரைப்படமே இருக்கிறது).

முதலாளிக்குத் தெரியாமல் ரிடர்ன் டிரிப்பில் தக்காளி மூட்டைகளை ஏற்றிக் கொள்ளும் லாரி டிரைவர் மாதிரி, இதற்கும் பாரி சந்தோஷமாக ஒப்புக் கொள்கிறான். அவனே எதிர்பாராத அளவிற்கு பணம் கொட்டுகிறது. CIA இதைக் கண்டும் காணாமலும் இருந்தாலும் போதைமருந்து கடத்தலை கண்காணிக்கும் அதிகாரிகள் மோப்பம் பிடித்து விடுகிறார்கள். CIA அதிகாரியே இந்த தகவலைத் தருகிறார். “நான் சொல்கிற இடத்திற்கு குடும்பத்தோடு தப்பி ஓடு”.

தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியையும் குழந்தைகளையும் எழுப்பி பொருட்களை மூட்டை கட்டிக் கொண்டு ‘மேனா’ என்கிற சிறிய மாகாணத்திற்கு விரைகிறான் பாரி. அங்குள்ள ஏர்போர்ட்டையே அவனுக்குத் தரும் CIA அடுத்து வேறு ஒரு பணியைத் தருகிறது. இந்த முறை துப்பாக்கிகள். கம்யூனிஸ்ட்களை எதிர்க்கும் வலதுசாரி குழுவொன்றிற்கு சப்ளை செய்ய வேண்டும். செய்கிறான். அடுத்து ஆட்கள். அதையும் உற்சாகமாக செய்கிறான் பேரி.

ஒரு புறம் CIA, மறுபுறம் போதையுலகம் என்று இருபுறமும் பணம் கொட்டுகிறது. வீட்டில் புதைத்து வைக்க இடமில்லாத அளவிற்கு பணம். வங்கியில் கொண்டு போய்க் கொட்டுகிறான். இவனுடைய பணத்தை வைப்பதற்காகவே தனி காப்பறை அமைக்கிறார்கள். அந்தளவிற்கு பணம்.

ஏறத்தாழ பணத்தில் குளித்துக் கொண்டிருக்கும் பேரியின் வாழ்க்கையில் மச்சானின் உருவில் ஆபத்து வருகிறது. “எனது தம்பிக்கு வேலை போட்டுக் கொடுங்கள்” என்கிறாள் மனைவி. உச்சநீதிமன்ற உத்தரவை மறுக்க முடியுமா? சும்மா வெட்டியாக ஒரு வேலையைத் தருகிறான். பேரி ஒளித்து வைத்திருக்கும் சூட்கேஸ்களில் ஒன்றை திருடிக் கொண்டு உற்சாகமாக ஷாப்பிங் கிளம்புகிறான் ஊதாரி மச்சான்.

காவல்துறை இதைக் கவனித்து மச்சானைக் கைது செய்கிறது. பேரி அப்போது புதிய டீல் ஒன்றிற்காக கடத்தல் குழுவுடன் கொலம்பியாவில் இருக்கிறான். “காப்பாத்துங்க” என்று மச்சான் கதறுகிறான். “அதை நாங்க பார்த்துக்கறோம். எங்க வேலையை முதல்ல முடி” என்கிறது கடத்தல்குழு. மச்சான் தப்பிப்பதற்காக பேரி உதவி செய்கிறான். ஆனால் அவன் திமிராகப் பேசி விட்டு கிளம்பும் போது கார் வெடித்து சிதறுகிறது. ‘நாங்க பார்த்துக்கறோம்” என்று கடத்தல் குழு சொன்னதின் அர்த்தம் இதுதான் போல.

பேரி ஆகாயத்தில் கட்டிய கோட்டை ஒருவழியாக வீழ்ச்சியடையத் துவங்குகிறது.  FBI அவனுடைய வீட்டைச் சோதனையிட்டு எல்லா பணத்தையும் கைப்பற்றுகிறது. CIA அவனை கைகழுவுகிறது. வசமாக சிக்குகிறான் பேரி. ஆனால் அவன் தப்பிக்க இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. தனது அரசியல் எதிரிகளுக்கு போதை மருந்து கடத்தல் உலகத்துடன் தொடர்பிருக்கிறது என்பதை அமெரிக்கா நிரூபிக்க பேரியைப் பயன்படுத்துகிறது. தனது கூட்டாளிகளையே ரகசியமாகப் படம் எடுக்கிறான் பேரி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது பத்திரிகைகளில் வெளியாகி விடுகிறது. கடத்தல் குழு தன்னை உயிருடன் விடாது என்பது பேரிக்கு தெளிவாக தெரிந்து விடுகிறது. ஒவ்வொரு நாளும் தன் மரணத்தை எதிர்பார்க்கிறான்.

அரசியல் காரணங்களால் நீதிமன்றத்திலிருந்து எளிதாக அவன் தப்பித்து விட்டாலும் கடத்தல் குழுவின் பழிவாங்கலில் இருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை. சுடப்படுகிறான்.

**

எழுபதுகளின் காலக்கட்ட பின்னணியில், பேரி சீல் ஆக டாம் குரூஸ் அட்டகாசமாக நடித்திருக்கிறார். பணம் சேர சேர, ‘’மங்காத்தா’ அஜித் போல ‘மணி.. மணி..’ என்ற இவர் உற்சாகமாக சிரிப்பது கலக்கல். “கெட்டவங்களுக்கு ஆண்டவன் அள்ளித் தருவான். ஆனா கைவிட்டுடுவான்” என்கிற பாட்சா நீதியை சொல்லும் இந்தத் திரைப்படம், எதிரி நாடுகளில் அமெரிக்கா செய்யும் கலகங்களையும் குழப்பங்களையும் அம்பலப்படுத்துகிறது. ‘The Bourne Identity’ வரிசை திரைப்படங்களை இயக்கிய Doug Liman இத்திரைப்படத்தையும் அற்புதமாக உருவாக்கியுள்ளார். 

suresh kannan

No comments: