Wednesday, December 11, 2019

பாரதிராஜாவின் 'திரைமொழி'
சமீபத்தில் 'புதிய வார்ப்புகள்' திரைப்படத்தை பார்த்த போது வியந்து பிரமித்தேன். என்னது, 1979-ல் வெளிவந்த திரைப்படத்தைப் பற்றி 2016-ல் ஒரு கட்டுரையா?  காந்தி இறந்து விட்டாரா' என்று மிரள வேண்டாம். வரலாற்றை மீள்நினைவு செய்வது மிக முக்கியமானது. ஏனெனில் கடந்த வரலாற்றின் மீதுதான் நிகழ்கால வரலாறு நின்று கொண்டிருக்கிறது. எனவே வரலாற்றின் அடித்தளத்தின் படிநிலைகளை அவ்வப்போது தோண்டிப் பார்ப்பது உபயோகமானது மட்டுமல்ல, சுவாரசியமானதும் கூட.

தமிழ் திரையின் சினிமா மொழியை குறிப்பாக பாடல் காட்சிகளில்  மாற்றியமைத்ததில் பாரதிராஜாவின் அழகியல் உணர்விற்கு பிரதானமான இடமுண்டு. இன்றைய திரைப்படங்களில் விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் சட்சட்டென பிரேம்கள் மாறுவது சமயங்களில் எரிச்சலூட்டினாலும் அது அந்தளவிற்கு உறுத்தாமல் நமக்கு பழக்கப்படுத்தின முன்னோடி பாரதிராஜாதான்.

அதுவரையான காலக்கட்டத்தின் திரைப்படங்களில் காட்சிகள் மாறும் போக்கின் பின்னணயை வைத்துதான்  பாரதிராஜா பிறகு செய்துள்ள இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்ள முடியும். அப்போதைய  திரைப்படங்களில் உதாரணமாக ஒரு பாத்திரம் சென்னையிலிருந்து மும்பைக்கு போவதாக வசனத்தின் மூலம் உணர்த்தினாலும் கூட ஒரு ரயிலையோ அல்லது விமானத்தையோ இணைப்புக் காட்சியாக காட்டிதான் அந்தப் பாத்திரம் வேறு ஊருக்குச் சென்றிருக்கிறது என்பதை பார்வையாளர்களிடம் நிறுவ முடியும். இல்லையெனில் பார்வையாளர்களுக்கு புரியாது என்கிற கருத்து இருந்தது. சமயங்களில் இப்படியாக இயக்குநர்களே கூட நினைத்துக் கொண்டார்கள்.

படப்பிடிப்புத் தளங்களில் இயங்கிக் கொண்டிருந்த தமிழ் திரையை இயற்கை வெளிகளுக்கு அழைத்து வந்ததைப் போலவே பாரதிராஜா இம்மாதிரியான மரபை உடைத்தார். அவருடைய பாடல் காட்சிகளின் பொதுவான மொழியை சற்று நினைவுகூருங்கள். நாயகியின் கண்கள், இமைகள், ஜிமிக்கி, கொலுசு, கடல் அலை,  கிளை நுனியில் மிதக்கும் மலர்கள், காற்றில் அலையும் பசுமையான நெற்கதிர்களின் நடனம், பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு, சூரியக் கதிர் போன்றவற்றின் காட்சித் துணுக்குகளை வைத்துக் கொண்டு இண்டர்கட்டில் மாற்றி மாற்றி அடுக்கி அவற்றிற்கு தனித்த அழகியலையும் பொருளையும் உருவாக்கித்  தந்த முன்னோடியாக பாரதிராஜாவைச் சொல்லலாம். இவை ஒருவகையான அசட்டு ரொமாண்டிசிஸத்தை உருவாக்குவதாக இருந்தாலும் பிற்கால திரைப்படங்களின் காதல் காட்சிகள், அது சார்ந்த உணர்வுகள், பாடல்கள் ஆகியவற்றை இலகுவாக பார்வையாளர்களுக்கு உணர்த்துவதற்கான ஒரு புதிய அழகியல் தடத்தை அமைத்தது பாரதிராஜாவின் இந்த திரைமொழி.

வெள்ளுடை அணிந்த பத்து பதினைந்து தேவதைகள் கொளுத்தும் வெயிலில் ஸ்லோமோஷனில் ஓடிவருவதை இதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து கற்பனித்துப் பாருங்கள். எத்தனை கொடுமையாக இருக்கும்? ஆனால் இது போன்ற அவல நகைச்சுவைகளையெல்லாம் தம்முடைய அபாரமான கற்பனையால் மழுப்பி அவைகளில் காதல் பொங்கி வழிவது போன்ற பாவனைகளை நிரப்பியது பாரதிராஜாவின் பிரத்யேகமான சாதனை.

புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் பாக்யராஜூம் ரதியும் கோயிலில் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் காட்சி வருகிறது. அதில் இருவருக்கும் குறிப்பாக ரதியின் கண்களுக்கு டைட் குளோசப் காமிராக் கோணத்தை உபயோகித்திருப்பார். இந்த வகையான கோணத்தை அழகியல் ரீதியாக தமிழ் திரைக்கு  அறிமுகப்படுத்தியவர் என்று கூட பாரதிராஜாவைச் சொல்லலாம். ஒளிப்பதிவாளர் நிவாஸின் பங்களிப்பையும் இணைத்தே இதைப் பாராட்டியாக வேண்டும்.

***

பாரதிராஜா உருவாக்கும் இந்தக் காட்சிகளுக்கு உயிர் ஊட்டி மேலதிக அழகியலைச் சேர்ப்பது என்பது இளையராஜாவின் பின்னணி இசைதான். இரண்டையும் பிரித்தே பார்க்க முடியாது. வேண்டுமானால் இந்தப் பாடல் காட்சியில் ஒலியில்லாமல் கவனித்துப் பாருங்கள். சமயங்களில் நகைச்சுவையாகக் கூட இருக்கும். தம்முடைய புத்துணர்ச்சியான இசையால் இந்தக் காட்சிகளையும் இதன் இடைவெளிகளையும் அபாரமான கற்பனையின் மூலம் நிரப்பிய சாதனை இளையராஜாவைச் சாரும்.

'புதிய வார்ப்புகள்' திரைப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியிருந்திருக்கா விட்டாலும் பாரதிராஜா+இளையராஜா+வைரமுத்து என்று இந்தக் கூட்டணி ஒரு காலக்கட்டத்திய தமிழ் திரைப்படயுலகை எத்தனை சிறப்பாக ஆட்சி புரிந்தது என்பதை அந்தக் காலக்கட்டத்திய ரசிகர்கள் இன்னமும் அழுத்தமாக உணர்வார்கள். தனிப்பட்ட நபர்களின் சுயமுனைப்பும் சுதந்திரமும் மதிக்கப்பட வேண்டும்தான் என்றாலும் இவர்களின் ஈகோ மோதல்களால் இந்தக் கூட்டணி உடைந்து போனதின் காரணமாக ஒரு காலக்கட்ட தமிழ்  திரையிசையே வெட்ட வெளியானது மிகப் பெரிய சோகம். தனிப்பட்ட நபர்களுக்குள்ளான சச்சரவுகளால் கலையுலக பொற்காலத்தின் ஒரு பகுதியையே ரசிகர்கள் இழக்க நேர்வது வரலாற்றிற்கு இழைக்கப்படும் துரோகம் என்பதை இந்தக் கலைஞர்கள் உணர்வார்களா?

இக்காலக்கட்டத்திய படைப்புகளைப் போலவே 'புதிய வார்ப்புகள்' திரைப்படமும் இளையராஜாவின் தெய்வீக இசையால் ஆசிர்வதிக்கப்பட்டது என்றாலும் கூட அது மிகையாகாது. வீடியோவை தனித்துப் பார்த்தால் ஒருவேளை சில காட்சிகள் நகைச்சுவையாக தெரியலாம் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அதற்கு மாறாக, ராஜாவின் பின்னணியிசையின் ஒவ்வொரு துளியையும் ஒலி வடிவத்தில் தனியாக கேட்டால் கூட மேலதிக ருசியாக இருப்பது ஒரு சுவாரசிய முரண்.

வேறு எவராலும் இட்டு நிரப்ப முடியாத ஜென்சி என்கிற பிரத்யேகமான குரல் கொண்ட பாடகியின் குரல் ஒலித்துக் கொண்டிருந்த காலம் இது. தமிழ் மொழியின் பிசிறுகளைக் கொண்ட மழலைத்தனம் அவர் குரலில் இணைந்திருந்தாலும் அதுவும் ஓர் அழகாகவே இருந்தது. 'இதயம் போகுதே' என்கிற காவியச்சோகப் பாடலை ஜென்சி இதில் பாடியிருக்கிறார். இதன் இடையிசையில் அவர் பாடிய ஹம்மிங் அத்தனை அற்புதமானதொன்று. 'நம்தன நம்தன தாளம் வரும்' என்கிற இன்னொரு துள்ளலிசைப் பாடலையும் இதில் பாடியிருக்கிறார் ஜென்சி. மலேசியா வாசுதேவனும் ஜானகியும் இணைந்து பாடிய 'வான் மேகங்களே' என்பது ஒரு டூயட் பாடல் என்றாலும் சோகச்சாயல் படிந்ததொன்று.

இளையராஜாவின் வருகையை நாட்டுப்புற இசையோடு தொடர்பு படுத்தி பார்க்கும் வழக்கம் உண்டு. அதுவரையான மெல்லிசையை உடைத்துக் கொண்டு நாட்டார் இசைக்கூறுகளை மிக அழுத்தமாக தமிழ் திரையிசைப் பாடல்களில் படியச் செய்தவர் இளையராஜா என்பது உண்மை. ஆனால் அந்த இசையை சினிமாவிற்கேற்ப ஜிலுஜிலுப்பாக மாற்றிதான் அவரால்தான் வழங்க முடிந்ததேயொழிய அதன் கச்சாத்தன்மையோடு வழங்க முடியவில்லை. அவ்வாறான பரிசோதனை முயற்சிகளை மிக அரிதாகத்தான் அவர் நிகழ்த்தியிருக்கிறார். அந்த அரிய வகையில் இத்திரைப்படத்தின் இறுதியில் ஒரு கூத்துப்பாட்டு வருகிறது. ஏறத்தாழ அசலான நாட்டார் இசை இப்பாடலில் ஒலிக்கிறது. இளையராஜா, பாரதிராஜா, கங்கைஅமரன் போன்றோர்கள் கூட இந்தப் பாடலில்  குரல் தந்திருக்கின்றனர். பல வருடங்களுக்குப் பிறகு இதே பாணியிலான ஒரு பாடலை 'பருத்தி வீரன்' திரைப்படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்தக் கூத்தில் நடிகர் சந்திரசேகரும் நடித்திருக்கிறார்.ஆனால் இந்தப் படத்தில் அவர் ரதிக்கு முறைமாமன் பாத்திரத்தில் ஒரு கிறுக்குப் போன்ற குணமுடையவராக வருவார். இந்தக் கூத்து நடக்கும் அதே நேரத்தில் அவர் இந்த இன்னொரு காட்சியிலும் வருவார். ஒரே நடிகர் வெவ்வேறு இடத்தில் எவ்வாறு இருக்க முடியும்?, நடிகர் பற்றாக்குறையோ என்னவோ தெரியவில்லை, கூத்து வேடத்தில் இருக்கும் சந்திரசேகரை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று பாரதிராஜா நினைத்து விட்டாரோ, என்னவோ. .

***

இந்தப் படத்தின் நாயகனாக பாக்யராஜை கதாநாயகன் வேடத்தில் துணிந்து நடிக்க வைத்தார் பாரதிராஜா. பாக்கியராஜ் அதுவரை பாரதிராஜாவின் முந்தைய திரைப்படங்களில் துணை நடிகர் பாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். ஹீரோ யாரும் சரியான கிடைக்காத வெறுப்பில் பாக்யராஜை ஹீரோவாக முடிவு செய்து விட்டார் பாரதிராஜா. பாக்யராஜ் தயங்கிய போது பாரதிராஜாவே அவருக்கு தைரியம் சொல்லி நடிக்க வைத்தார். அதிகம் சலனமில்லாத முகபாவம் கொண்ட அண்டர்பிளே நடிப்பில் ஒருமாதிரியாக பாக்யராஜ் ஜெயித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். அவர் பிறகு வெற்றிகரமான நடிகராகவும் இயக்குநராகவும் ஆனது எல்லோருக்கும் தெரியும்.

பாக்யராஜை இந்தப் படத்தில் ஹீரோவாக முடிவு செய்தது இளையராஜாவிற்கு கூட முதலில் சம்மதமில்லாமல் இருந்தது. 'தேசலான உருவம் கொண்ட இந்தப் பையனா ஹீரோ?' என்று நினைத்திருக்கிறார். ஆனால் படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றவுடன் 'இனி எவரையும் அவருடைய தோற்றத்தை வைத்து தவறான முடிவிற்கு வருவதில்லை' என்கிற உறுதியை இளையராஜா அடைந்திருக்கிறார். 'புதிய வார்ப்புகள்' திரைப்படத்தோடு பாரதிராஜா அதுவரை இயக்கியிருந்த ஐந்து திரைப்படங்களுமே மகத்தான வெற்றி பெற்று வெள்ளி விழா கொண்டாடிய திரைப்படங்கள். ஓர் இயக்குநரின் முதல் ஐந்து திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெற்றியடைந்தது என்பது தமிழ் திரையுலகில் ஒரு வரலாற்று சாதனை.

'புதிய வார்ப்புகள்' திரைப்படத்தின் கதை ஆர்.செல்வராஜ். இருந்தாலும் இத்திரைப்படத்தின் திரைக்கதையை பிரமாதமாக உருவாக்கியவர் பாக்யராஜ். இந்த இடத்தில் பாரதிராஜா மற்றும் பாக்யராஜின் ஆளுமைத் திறன்களைப் பற்றி  சற்று சொல்ல வேண்டும்.

சிறந்த திரைக்கதையாசிரியர் என்கிற பெருமைமிகு அடையாளம்  பாக்யராஜிற்கு உண்டு. அது பெரும்பாலும் உண்மைதான் என்றாலும் ஒருபகுதிதான் சரி என்பது என் தனிப்பட்ட கருத்து. பாக்கியராஜால் ஒரு மிகச்சிறந்த அவுட்லைனை உருவாக்க முடியும். அதன் திருப்பங்கள், நாடககத்தன்மை ஆகியவற்றை சுவாரசியமாகவும் நம்பகத்தன்மையுடன் எழுதி உருவாக்க முடியும். ஒரு சிறந்த நாடகம் போல. அதை அப்படியே அவர் இயக்கி திரைப்படமாக்கிய போது அவை இங்கு பெரும் வெற்றி பெற்றன. ஏனென்றால் இங்கு கூத்து மற்றும் நாடக மரபையே சினிமாவும் பின்பற்றியது. திரைப்படத்திற்கென உள்ள பிரத்யேக இலக்கணத்தை தமிழ் சினிமா இன்னமும் கூட முழுமையாக பின்பற்றவில்லை. எனவே அந்த சூழலுக்கு இணக்கமாக இருந்த பாக்யராஜின் பாணி சரியாகப் பொருந்தியது.

ஆனால் பாரதிராஜாவின் உருவாக்க முறை  இதற்கு நேர் எதிரானது. அவர் எல்லாவற்றையுமே காட்சி வடிவிலேயே யோசிக்கக்கூடியவர். எனவேதான் அவருடைய திரைப்படங்கள் கவிதைக் கணங்களால் நிரம்பி வழியும். குறிப்பாக பாடல்கள். அவருக்கு விரிவான, நுட்பமான திரைக்கதையோ, வசனங்களோ தேவையில்லை. ஓர் அவுட்லைன் இருந்தால் போதும். அதை மனதில் பதிய வைத்துக் கொண்டு  காட்சிகளால் சிந்தித்து நகர்த்திக் கொண்டே போவார். சமயங்களில் படப்பிடிப்புத் தளங்களில் சென்ற பிறகுதான் அன்றைய காட்சிகளை அந்தச் சூழலுக்கேற்ப உருவாக்குவார் என்கிறார்கள். ஆனால் ஒருவகையில் இது முறையற்ற உருவாக்க முறை. ஒரு திரைக்கதையை படப்பிடிப்பிற்கு முன்பே கச்சிதமாக திட்டமிட்டுக் கொண்டு பிறகு உருவாக்குவதன் மூலமே செலவை கட்டுப்படுத்த முடியும். திரைப்படமும் கோர்வையாக உருவாகி வரும்.

பாக்யராஜின் அச்சு வடிவிலான திரைக்கதை திறமை மற்றும் பாரதிராஜாவின் காட்சிப்படுத்துதல்களின் சிறப்பு ஆகியவை இணைந்து புதுமையான, அதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத நிறத்தை இந்தக் கூட்டணியின் படங்களுக்கு தந்தன. கூடுதலாக இளையராஜாவின் இசை மற்றும் வைரமுத்துவின் கவித்திறமை. எனவே இந்தக் கூட்டணி பல சமயங்களில் வெற்றி பெற்றதில் ஆச்சரியமில்லை. ஆனால் இந்தக் கூட்டணி உடைந்து பிரிந்த பிறகு இந்த மாயம் நிகழவேயில்லை என்பதை கவனிக்க வேண்டும்.  பாரதிராஜாவின் துவக்க கால திரைப்படங்களுக்கு பாக்யராஜின் திறமை அடிப்படையாக இருந்தது என்று சொல்லப்படுவதில் நிறைய உண்மையிருக்கிறது. பாக்யராஜ் பிறகு நடிகராகவும் இயக்குநராகவும் சென்று விட்ட பிறகு அதற்குப் பிறகான பாரதிராஜாவின் திரைப்படங்களில் அதுவரையிருந்த ஏதோவொரு மாயாஜாலம் இல்லாமல் போயிருந்தது. இளையராஜாவும் பிரிந்து சென்ற பிறகு இது கணிசமாக குறைந்து போனது. பிறகான பல திரைப்படங்கள் தோல்வி திரைப்படங்களாக அமைந்தன.

***

புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் கதை மிகச் சுமாரானது. முன்பு குறிப்பிட்ட கூட்டணியின் திறமையினால்தான் இந்தப் படம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்திருக்க வேண்டும். திரைப்படங்களின் உருவாக்க முறை வெகுவாக மாறிய இந்தக் காலத்திலும் கூட இத்திரைப்படம் என்னைக் கவர்ந்தது. பாத்திரங்களுடன் உணர்வுபூர்வமாக இணைய முடிந்தது. அவர்களின் மகிழ்ச்சியும், பிரிவின் துக்கமும் என்னையும் பாதித்தது. தனது திறமையான இயக்கத்தினால் இதை பாரதிராஜா சாதித்திருக்கிறார். இளையராஜாவின் அற்புதமான பின்னணி இசையும் பாக்யராஜின் திரைக்கதை  அற்புதமும்தான் கூடுதல் காரணம்.

பழமைவாத கலாசாரம் நிலவும் ஒரு கிராமத்திற்கு ஆசிரியராக வருகிறார் பாக்யராஜ். அங்கு அவர் சந்திக்கும் இளம்பெண்ணான ரதியை காதலிக்கத் துவங்குகிறார். அங்கு ஊர்ப்பெரியவராக இருக்கும் பணக்காரர் ஒருவர் ஊரிலுள்ள பல பெண்களை தன்னுடைய பாலியல் ஆசைக்கு பலியாக்குகிறார். ரதியின் மீதும் அவருக்கு ஒரு கண். ஆனால் ரதி பெரியவரை கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்தி விடுகிறார். இதற்கிடையில் வாத்தியார் ரதியை காதலிக்கும் விஷயமும் பெரியவருக்கு தெரிய வருகிறது. இருவரையும் பழிவாங்கும் நோக்கில் தான் செய்த ஒரு கொலையை வாத்தியார் செய்ததாக சொல்லி ஊராரை நம்ப வைத்து விடுகிறார். வாத்தியார் ஊரை விட்டு வெளியேற வேண்டியிருக்கிறது. என்றாலும் தான் திரும்பி வருவேன் என்ற உறுதிமொழியுடன் செல்கிறார். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் பெரியவர், ஒரு சிக்கலை உருவாக்கி தன் கையாளான கவுண்டமணிக்கு ரதியை திருமணம் செய்து வைக்கிறார். பிறகு அவனை துரத்தி விட்டு ரதியை அடைவது அவருடைய நோக்கம்.

அவருடைய நோக்கத்தைப் புரிந்து கொள்ளும் ரதி, அவரை தானே உறவுக்காக அழைத்து அந்தச் சமயத்தில் கத்தியால் குத்தி கொன்று விடுகிறார். அந்த தருணத்தில்  வாத்தியார் திரும்பி வர, ரதியை அழைத்துக் கொண்டு ஊரை விட்டுச் செல்லுமாறு வேண்டுகிறார் கவுண்டமணி. தான் கட்டிய தாலியையும் அறுத்து எரியச் சொல்கிறார். பிறகு பெரியவரின் பிணத்தை வைக்கோல் போருக்குள் மறைத்து வைக்க, கார்த்திகை திருநாள் என்பதால் அதைக் கொளுத்தும்  சடங்கில் ஊராரே அதில் தீ வைக்க பெரியவரின் பிணம் அதில் மறைகிறது. வாத்தியாரும் ரதியும் ஊரை விட்டுச் செல்லும் காட்சியுடனும்  "சில நிர்ணயங்களுக்குள் வாழ்வது ஒரு வாழ்க்கை.. சில நியதிகளை மீறி வாழ்வதும் ஒரு வாழ்க்கை.. மீறிய இவர்கள்..."புதிய வார்ப்புகள்" என்கிற இயக்குநரின் செய்தியோடும் படம் நிறைகிறது.

தனது முற்போக்கான சிந்தனையின் மூலம் பழமையான மரபுகளை உடைத்தெறிவதில் ஒரு முன்னோடி இயக்குநராக விளங்கும் பாரதிராஜாவின் தனித்திறமை இதிலும் வெளிப்படுகிறது.  பூணூலையும் சிலுவையும் அறுத்தெறிந்து தம்முடைய மதங்களைக் கழற்றி எறிந்த 'அலைகள் ஓய்வதில்லை' இளங்காதலர்களின் மூலமாக துவங்கிய பாரதிராஜாவின் முற்போக்குத்தன்மை இதிலும் உண்டு. வாத்யார் பாக்யராஜூடன் செல்ல தன் தாலி தடையாக இருப்பதை எண்ணி ரதி தயங்கும் போது அதைக் கட்டிய கவுண்டமணியே அறுத்து எறிகிறார். மட்டுமல்லாமல் இவர்களுடன் வரும் ஒரு விதவைப் பெண்ணிற்கு கவுண்டமணி வாழ்வு தருகிறார். படத்தின் இறுதிக்காட்சி உறைவதற்கு முன்னால் விதவைப் பெண்ணின் கையில் உள்ள குழந்தையை கவுண்டமணி பெற்றுக் கொள்வதாக காட்டும் குறியீட்டுக் காட்சியில் இதை நுட்பமாக உணர்த்தி விடுகிறார் இயக்குநர். நெருப்பின் மூலமாக வில்லன் பழிவாங்கப்படும் இத்திரைப்படத்தின் நாயகியின் பெயர் 'ஜோதி' என்பதையும் இறுதிக் காட்சி கார்த்திகை திருநாள் அன்று நடைபெறுவதையும் கவனிக்க வேண்டும்.

16 வயதினிலே மயில் முதல் கிழக்கே போகும் ரயிலின் நாயகி என்று பாரதிராஜாவின் பல நாயகிகள் நாயகனின் வரவிற்காக காத்துக் கொண்டேயிருக்கிறார்கள். இதிலும் ரதி, வாத்தியார் திரும்பி வருவதற்காக உருக்கத்துடன் காத்திருக்கிறார்.

இதயம், குங்குமம் ஆகிய பெயர்களில் வெளிவரும் வார இதழ்களைக் கொண்டு 'இதயத்தை தந்தா வாத்யார் குங்குமம் தருவாராம்'னு சொல்லு என்பது போன்ற குறும்பான வசனங்களில் கவர்கிறார் பாக்யராஜ். ரதியின் தம்பியான காஜா ஷெரீப், வாத்தியார் சொன்ன செய்தியை அக்காவிடம் சொல்லும் போது அது பாக்யராஜின் குரலிலேயே ஒலிக்கும் புதுமையான விஷயம், பாக்யராஜின் அற்புதமான யோசனையாக இருக்கக்கூடும். இத்திரைப்படத்தில் பாக்யராஜிற்கு குரல் தந்தவர் கங்கை அமரன் என்பது கூடுதல் தகவல்.

ஊர்ப்பெரியவரின் அக்கிரமங்களுக்கு எல்லாம் துணை நின்று இறுதியில் மனம் திருந்தும் 'அமாவாசை' என்கிற பாத்திரத்தில் கவுண்டமணி, ஊர்ப்பெரியவராக ஜி. சீனிவாசன், அவருடைய கிறுக்கு மகனாக ஜனகராஜ்,  கோயிலில் நாயனம் வாசிக்கும், ரதியின் தந்தை பாத்திரத்தில் வரும் கே.கே.செளந்தர், சமூக சேவகியாக வரும் உஷா (டி.ராஜேந்தரின் மனைவி) ரதியின் கிறுக்கு முறை மாமனாக சந்திரசேகர் என்று பலரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பெரிய பிரேம் கொண்ட கண்ணாடியும் அப்பாவித்தனமான முகமும் ஒல்லியான உடல்வாகும் கொண்ட பாக்கியராஜை அறிமுக நாயகனாக சிறப்பாக உருமாற்றியிருக்கிறார் இயக்குநர். போலவே வட இந்தியப் பெண்ணான ரதியை, ஒரு தமிழக கிராமத்து பெண்ணாக காட்டுவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார். இருவர் தொடர்பான காதல் காட்சிகள் மிகுந்த உயிர்ப்புடனும் ரசனையுடனும் பதிவாக்கப்பட்டிருக்கின்றன. போலவே இவர்களின் பிரிவுத் துயரமும் உருக்கமாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

எளிமையான கதை, அதற்கு அழுத்தமாக உருவாக்கப்பட்ட திரைக்கதை, அற்புதமான பின்னணி இசை மற்றும் பாடல்கள், அபாரமான இயக்கம் என்று பலவகைகளில்  இத்திரைப்படம் சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. தமிழ் திரைமொழியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய பாரதிராஜா எனும் இயக்குநரின் கைவண்ணத்தை பல காட்சிகளில் காண முடிகிறது. இன்றும் கூட இத்திரைப்படம் சுவாரசியமான காண்பனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. 


(காட்சிப்பிழை இதழில் பிரசுரமானது)  


suresh kannan

No comments: