Thursday, June 29, 2006

பி.கே. சிவகுமாரின் கட்டுரைகள்

அழகிய சிங்கர் பல வருடமாக நடத்திக் கொண்டு வரும் சிற்றிதழான நவீன விருட்சத்தின் சமீபத்திய இதழில் (இதழ் எண்.71-72) பி.கே.சிவகுமாரின் கட்டுரைத் தொகுப்புக்காக நான் எழுதிய மதிப்புரை பிரசுரமாகியுள்ளது. அதை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். (நன்றி : நவீன விருட்சம்)

ஒரு வாசக மனத்தின் நுட்பமான அவதானிப்புகள்

அட்லாண்டிக்குக்கு அப்பால் - பி.கே.சிவகுமார் (கட்டுரைகள்)எனிஇண்டியன் பதிப்பகம், ரூ.120/-

()

தன்னைச் சுற்றி நிகழ்கிற அல்லது தன்னைப் பாதிக்கிற எந்த சமூக நிகழ்வைப் பற்றியும் கவலையில்லாத ஆட்டு மந்தைகளாக இருப்பவர் ஒருபுறமிருக்க, மாறாக அதை பொறுப்புணர்ச்சியோடு கூர்ந்து கவனித்து, உள்வாங்கி விமர்சிப்பதோ, பதிவு செய்வதோ சில பேருக்குத்தான் சாத்தியமாகிறது. எழுத்தாளர்களுக்கு தம் எண்ணங்களையும் கருத்துக்களையும் தம்முடைய படைப்புகளின் மூலம் வெளிப்படுத்த வாய்ப்பிருக்கிறது என்றால் சாதாரணர்களுக்கு வடிகாலாக அவர்களது நாட்குறிப்புகளே அமைகின்றன. இதனால் பலரின் சிறந்த கருத்துக்கள் வெளியுலகிற்கு தெரியாமலேயே போய்விடும் துர்ப்பாக்கிய நிலை இதுநாள் வரை ஏற்பட்டிருந்தது. ஆனால் கணினி தொழில்நுட்பம் சாதாரணர்களையும் எட்டியிருக்கிற இந்தக் காலகட்டத்தில் பல்வேறு விதமான இலவச வலைப்பதிவுச் சேவைகள், இந்தக் குறையை போக்கி எந்தவொரு மனிதரும் தம் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தவும் அதை பிறர் பார்வையிடுவதற்குமான வசதிகளை ஏற்படுத்தி தந்திருக்கின்றன. எழுத்து என்றாலே அச்சு ஊடகம்தான் என்கிற நிலை மாறி இன்று இணையத்தில் ஏராளமான தமிழ் படைப்புகள் படிக்கக் கிடைக்கின்றன. அந்த வகையில் எழுதப்பட்ட பி.கே.சிவகுமாரின் சிறந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு அச்சு ஊடகங்களை மட்டுமே சார்ந்திருப்பவர்களின் வசதிக்காக புத்தக வடிவிலே வெளியிடப்பட்டிருக்கிறது.

சிவகுமாரின் இந்த கட்டுரைகள் எல்லாமே இணையத்திலேயே வெளியாகி இணைய வாசகர்களின் பரவலான கவனத்தைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதிலுள்ள இலக்கியம், சமூகம், விவாதம், கவிதை, என்று வெவ்வேறு தலைப்புகளில் உள்ள 45 கட்டுரைகளை ஒருசேர வாசிக்கும் போது சிவகுமாரின் நுட்பமான ரசனையையும், வள்ளுவர் சொன்ன 'மெய்ப்பொருள் காணுதலை'யும், அவரின் பரந்துபட்ட வாசிப்பையும் நம்மால் உணரமுடிகிறது. 'வாசக அனுபவம்' என்கிற தலைப்பில் அமைந்துள்ள முதல் பகுதியில் பல்வேறு நூல்களின் விமர்சனங்கள் உள்ளன. விமர்சனக்கலை என்பது தமிழில் பொதுவாக சுய விருப்பு மற்றும் வெறுப்பு சார்ந்த, முன்தீர்மானங்களுடன் நூலை அணுகுகிற நிலையிலேயே இருக்கும் இன்றைய சூழலில் எவ்வித முகாமையும் சாராத இம்மாதிரியான பொதுவான வாசகர்களின் பார்வையில் சம்பந்தப்பட்ட நூலின் உண்மையான தகுதி குறித்து நம்மால் தெளிவாக உணரக்கூடும். ஒரு இளம் வாசகன் இந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது தன் வாசிப்பனுபவத்தின் போதாமையையும், அதன் எல்லையை விரிவாக்க வேண்டிய அவசியத்தையும் உணரக்கூடும்..

()

உமாமகேஸ்வரியின் 'வெறும் பொழுது' என்கிற கவிதைத் தொகுப்பைப் பற்றி சிவகுமார் குறிப்பிடுகையில், 'மேலை நாடுகளிலிருந்து பிரதியெடுக்கப்பட்ட பெண்ணியக் கருத்துக்கள்' என்று சிலரால் குற்றஞ்சாட்டப்படுகிற தற்போதைய பெண் கவிஞர்கள் அந்த குற்றச்சாட்டுக்களை தங்களின் உணர்வு ரீதியான படைப்புகளின் மூலம் பொய்யாக்கியிருக்கிறார்கள். தலித் இலக்கியம் போல் பெண்களின் உணர்வுகளை பெண்களினால் மட்டும் சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்கிறார். உமா மகேஸ்வரியின் கவிதைகள் பெண்ணியத்தை பெண்மையின் சிறப்பான குணாதியங்களுடன் சொல்ல விழைகின்றன என்பது இவரது கருத்து. 'கவிதை மனதிற்கு ஓர் அசைவை ஏற்படுத்தியதாக இருக்க வேண்டும்' என்கிற பிச்சமூர்த்தியின் கருத்திற்கேற்ப உமா மகேஸ்வரியின் கவிதைகளும் செயல்படுகின்றன என்று சிலாகிக்கும் இவர், ஆண்டாண்டுகளாக ஒடுக்கப்பட்ட பெண்கள், அதை ஆண்கள் மீதான வன்மமாக வெளிப்படுத்துவதைப் போல் அல்லாமல் அன்பும் நம்பிக்கையும் கொண்ட கவிதைகளாக இவரின் படைப்புகளை பார்க்கிறார் சிவகுமார்.

பழம்பெரும் எழுத்தாளரான வல்லிக்கண்ணனின் சுயசரிதமான 'வாழ்க்கைச் சுவடுகள்' என்கிற நூலைப் பற்றி எழுதும் போது, இந்த நூலின் மூலம் தமிழ்ச் சமூக வாழ்க்கையையும், கலை இலக்கியத்தையும், சிறுபத்திரிகைச் சூழலை அறிய உதவுகிற பொக்கிஷமாக குறிப்பிடுகிறார். சரித்திர நாவல்கள் என்று எழுதப்படும் பம்மாத்துகளை வெறுக்கும் வல்லிக்கண்ணனின் படைப்புகளை திராவிட இயக்கங்கள் ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கியே வைத்திருந்தன என்கிற செய்தி இந்த நூலின் மூலமாக நமக்கும் தெரிகிறது. திரைப்படத் துறையினரின் 'நீக்கு போக்குக்கு' ஏற்ப தம்மால் செயல்பட முடியாது என்று வந்த வாய்ப்பை உதறித் தள்ளிய வல்லிக் கண்ணனின் மீது சிவகுமாருக்கு ஏற்படுகிற மரியாதையைப் போலவே நமக்கும் ஏற்படுகிறது. 'பாராட்டுகிற மனம் வேண்டும்' என்கிற பாரதியின் வழியை தாமும் பின்பற்றுவதாக சொல்லும் வல்லிக்கண்ணனை, ஜெயமோகன் இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் இவ்வாறு விமர்சித்துள்ளார் "வல்லிக்கண்ணன் கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் பிற்காலத்தில் முக்கியமானவர்களாக ஆன பெரும்பாலான எழுத்தாளர்களை ஊக்குவித்து ஒருவரியேனும் எழுதியவரோ, பேசியவரோ அல்ல. அவர்களுக்கு தடைகளையும் உருவாக்கியவர். அவரை அங்கீகரிக்கும் முதிரா இளைஞர்களுக்கு மட்டும் ஓயாமல் ஊக்கம் கொடுப்பதே அவரது பாணி".

சுஜாதா (கணையாழியின் கடைசிப் பக்கங்கள்) சுகுமாரன் (திசைகளும் தடங்களும்) என்று நவீன இலக்கியம் மட்டுமல்லாது சித்தர் பாடல்களிலும், கம்ப ராமாயணத்திலும் சிவகுமாரின் வாசிப்பு நீள்கிறது. சிவவாக்கியரைப் பற்றி குறிப்பிடும் போது 'பகுத்தறிவைப் பயன்படுத்தி இறைவனை மறுக்கிற நாத்திகர்களிடையே, பகுத்தறிவால் இறைவனை உணர்ந்து அறிய முடியும் சொன்ன ஆத்திகர்' என்கிறார். பொருள்தேடி வெளிநாடு செல்லும் தமிழர்கள் பொதுவாக தங்கள் அடையாளங்களை அங்கே தொலைத்துக் கொண்டிருக்கும் சூழலில், சிவகுமார் தனது தாத்தாவிற்கு சொந்தமான பழுப்பேறிய புத்தகத்தை விருப்பமுடன் எடுத்துச் சென்றிருக்கிறார். வை.மு.கோபால கிருஷ்ணமாச்சர்யரின் கம்பராமாயண உரைத் தொகுப்பான அந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதும் போது அவரின் நினைவுகள் பின்னோக்கி தாத்தாவின் வீட்டைச் சுற்றியும், நூல்நிலையத்தைச் சுற்றியும் வி¡கிறது.

கம்பராமாயணத்தில் கதல் (நெல்) பாகம், திராட்சா (புல்) பாகம், நாரிகேள (கல்) பாகம் என்று மூவகை நடையும் இருப்பதையும், அதை விளக்கும் வண்ணமாக நெல்லென்பது வாழைப்பழம் தோலையுரித்த பின் சுவை தருவது போல வாசக மனம் சிறிது ஆராய்ச்சி செய்த பின் சுவை தருவது, திராட்சா பாகம் என்பது சுவைத்த மாத்திரத்தில் உள்ளும், புறமும் சுவை தருவது, அதன் மேலிருக்கும் கடினமாக பட்டையையும், ஓட்டையும் நீக்கியபின் அவை தருகிற தேங்காய் மாதிரியானது நாரிகேள பாகம் என்றும் விளக்கும் உரையாசிரியரை சிலாகிக்கும் சிவகுமார், 'தற்கால நவீன கவிதைகளில் பெரும்பாலானவற்றை நாரிகேள பாகத்தில் அடக்கி விட முடியும் என்று தோன்றுகிறது' என்றெழுதி நம்மையும் நகைக்க வைக்கிறார்.

'இலக்கியம்' என்கிற பகுதியில் சிவகுமாரின் வாசக மனம் இலக்கியம் குறித்து சில உரத்த சிந்தனைகளை நம் முன் வைக்கிறது. மரபுக்கவிதையா, புதுக்கவிதையா என்கிற வாதங்கள் இன்றளவும் நீடிக்கின்ற சூழலில், தமிழ்க் கவிதைகள் ஒவ்வொரு காலத்திலும் தன் வடிவத்தை இடையறாது மாற்றிக் கொண்டு வரும் போது மரபுக்கவிதையும் ஒருகாலத்தில் புதிய வடிவம்தான் என்பதையும், இப்போது கொண்டாடப்படுகின்ற புதுக்கவிதையின் வடிவமும் ஒழிந்து வேறொரு வடிவம் பின்னாளில் வரும் என்கிற விரிவான
பார்வையோடு 'புதுக்கவிதையும் மரபுக்கவிதையே' என்கிற கட்டுரை மொழிகிறது. தமிழ் படைப்புகளின் மீதான விமர்சனங்களையும், விமர்சகர்களையும் குறித்து ஒரு கட்டுரை கூறுகிறதென்றால் இன்னொன்று 'எது கவிதை?' என்கிற தலைப்பில் கவிதைக்கும் வாசகனுக்கும் இடையிலான உறவையும், புரிதலையும் ஆராய்கிறது. சமையலையும் எழுத்தையும் ஒப்பிட தைரியம் வேண்டுமென்றால் அது சிவகுமாரிடம் இருக்கிறது. எளிமையான சமையலில் குறை இருந்தால் உடனே தெரிந்து விடுவது மட்டுமல்லாது இவ்வகையான சமையலே சிரமமானது என்றும் கருதும் நூலாசிரியர், அதே போல் எளிமையான ஆனால் குறை இல்லாத எழுத்தை படைப்பதும் சிரமமான காரியமே என்பதை 'சமையலும் எழுத்தும்' என்கிற கட்டுரையில் கூறுகிறார்.

இதுவரையான பக்கங்களில் ஒரு வாசகராக நாம் பார்த்த சிவகுமார், 'விவாதம்' பகுதியில் ஒரு வழக்கறிஞராக உருமாறி கூர்மையுடனும், ஆதாரங்களுடனும், மெலிதான அங்கதத்துடனும் தாம் சரி என்று கருதும் வாதங்களை தீர்மானமாக முன்வைக்கிறார். ஜெயகாந்தனை விமர்சித்து முறையே அரவிந்தனும், மாலனும் இணையத்தில் எழுதிய கட்டுரைகளுக்கு இவரின் எதிர்வினைகள் தகவல்பூர்வமானதாகவும், பாராட்டத்தக்க அளவிலும் இருக்கிறது. என்றாலும் ஜெயகாந்தனை 'குருபீடமாக' ஏற்றுக் கொண்டிருக்கும் (இங்கே ஜெயகாந்தனின் 'குருபீடம்' என்கிற சிறுகதையை நினைவு கூர்வது பொருத்தமானது) சிவகுமார், 'எல்லா எழுத்தாளர்களின் படைப்புகளையும் அவற்றின் நிறை குறைகளோடு பரீசீலிப்பதும், தனது ஆதர்ச எழுத்தாளரின் படைப்புகளை கண்மூடித்தனமாக பாராட்டாதிருப்பதும், மாறாக தன்னைக் கவராத படைப்பாளிகளை முன்தீர்மானத்துடன் அணுகாதிருப்பதும், ஒரு சுதந்திரமான வாசகனின் ஆதாரமான செயல்பாடாக இருக்க வேண்டும்' என்று நான் கருதுகிற விஷயத்திற்கு மாறாக ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரை இறுகப் பற்றிக் கொண்டிருப்பது சரியா என சிவகுமார் யோசிக்க வேண்டும்.

'கவிதை கேளுங்கள்' பகுதியில் தன்னைக் கவர்ந்த சில கவிஞர்களின் படைப்புகளை தன் சுய அனுபவங்களுடன் ஒப்பிட்டு சிலாகிக்கிறார் சிவகுமார். 'தனித்தமிழ்' என்கிற விஷயம் மாயையான ஒன்று என்று ஆதாரங்களுடன் விளக்கும் இரண்டு கட்டுரைகளை (பொருந்தாக் காமம், தனித்தமிழ் என்னும் போலி') இந்தப் புத்தகத்தின் முக்கியமான கட்டுரைகளாக கருதலாம். பெரும்பாலோனோர் தினம் அருந்தும் பானமான, புழக்கத்திலுள்ள சொல்லாக விளங்கும் காப்பி (Coffee) என்ற சொல்லுக்கு மாற்றாக தனித்தமிழ் ஆர்வலர்கள் ஆக்கியிருக்கும் 'கொட்டைவடிநீர்' என்ற சொல்லை 'விந்து' என்று புரிந்து கொண்டதாக சிவகுமாரின் நண்பரொருவர் குறிப்பிடுகையில் திணிக்கப்படுகிற தனித்தமிழ் என்பது அபத்தமானதாகவும், அனர்த்தமான பொருள்படவும் ஆகிவிடக்கூடிய அபாயம் நமக்கு உறைக்கிறது. பரிதிமாற் கலைஞரும், மறைமலையடிகளும் ஆரம்பித்த 'தனித்தமிழ்' இயக்கத்திற்கு முன்பே எவ்வாறு பலவகையான பிறமொழி சொற்களை தன்னுள் ஏற்று பாதிப்படையாமல் தமிழ் செழுமையுடன் விளங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதை பல்வேறு உதாரணங்களுடன் இந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார் சிவகுமார்.

என்றாலும் "திசைச் சொற்கள் தொல்காப்பியத்திற்கு முன்பிருந்தே தமிழில் இருந்தன என்று அறிய வருகிறோம். உதாரணமாக 'அந்தோ' என்ற வார்த்தை சிங்களத்தில் இருந்து வந்தது என்றும் சிக்கு ('சிக்கெனப் பிடித்தேன்' என்கிறது நம் பக்தி இலக்கியம்) என்பது கன்னடத்திலிருந்து வந்தது என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்" என்று எழுதுவதின் மூலம் சிங்களமும் கன்னடமும் தமிழின் தொன்மைக்கு நிகரானது அல்லது அதற்கும் முந்தையது என்று கூற விரும்புகிறாரா என்று புரியவில்லை. 'சமூகம்' என்கிற பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கட்டுரைகளோடு வீரப்பன் மரணம், ஜெயேந்திரர் கைது, பெரியார், தலாய் லாமா, அரசியல் ஆகியவற்றின் உள்ளடக்கங்களில் இன்னபிற கட்டுரைகளும் நிறைந்துள்ளன.

இறுதிப் பகுதியான 'அமெரிக்கா' என்கிற தலைப்பில், வெளிநாட்டில் வாழும் தமிழரான கட்டுரையாசிரியரின் சுயஅனுபவங்களின் தொகுப்பு அடிப்படை மனித நேயத்துடனும், சுவாரசியமான சம்பவங்களுடனும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திண்ணை.காம் இணையத்தளம் குறித்த விமர்சனமும் இதில் அடக்கம். ஜெயமோகன் இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல "மேலை நாட்டு விஷயங்களை மிதமிஞ்சில் புகழ்ந்தேத்தி இந்தியாவை இறக்கி நோக்கும் பார்வை. என்ன இருந்தாலும் இந்தியா போல வருமா என்ற நோக்கு" ஆகிய தொனிகள் தவிர்க்கப்பட்டே இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

()

சிவகுமாரின் எழுத்து வாசிப்பிற்கு அப்பாலும் நம்மைச் சிந்திக்கச் செய்வதை (குறிப்பாக தனித்தமிழ் குறித்த கட்டுரைகள்) அவர் எழுத்தின் வெற்றியாகக் கருதுகிறேன். என்றாலும் சில கட்டுரைகள், ஆரம்பிக்கின்ற வேகத்திலேயே முடிந்து விடுகின்றன. சிவகுமார், சுகுமாரனின் கட்டுரைத் தொகுப்பைப் பற்றி குறிப்பிடும் போது "இப்படிப் பல இடங்களில் நிறுத்தி படிக்க வைக்கிற வரிகளைக் காணும் போது, அவற்றையெல்லாம் விரித்து இன்னும் எழுதியிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை" என்று எழுதுகிறார். இதையே இவரின் சில கட்டுரைகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. பின்னாளில் இந்தக் கட்டுரைகள் அச்சேறும் என்ற பிரக்ஞையுடன் எழுதப்பட்டிருந்தால் இந்தக் குறை தவிர்த்திருக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும் தோன்றுகிறது.
விவாதக் கட்டுரைகளின் முன்னும் பின்னுமான தொடர்ச்சியான மற்றவர்களின் பதிவுகளை இணையத்தில் மாத்திரமே வாசிக்க முடியும் எனும் போது, இணையப் பரிச்சயம் இல்லாத வாசகர்களுக்கு இது ஒரு தடையாக இருக்கக்கூடும். மேலும் இணையத்தில் மட்டுமே புழங்கும் சில எழுத்தாளர்களின் பெயர்கள் கட்டுரைகளில் ஊடாடும் போது, அவர்களைப் பற்றின அறிமுகங்கள் இல்லாத அச்சு ஊடக வாசகர்களுக்கு இது நெருடலை ஏற்படுத்தக்கூடும். ஆனால் இவையெல்லாம் எளிதில் தாண்டிவிடக்கூடிய சிறு தடைகளே எனும் போது பொருட்படுத்த வேண்டியதில்லை. ஏற்கெனவே குறிப்பிட்டது போல, ஒரு இளம் வாசகன் இந்தக் கட்டுரைகளைப் படிக்கும் போது தனது வாசிப்பு பயணத்தை - அபத்தமான படைப்புகளைத் தவிர்த்து - ஒரு திட்டமிடலுடனும் தீர்மானத்துடனும் தொடர்வதற்கு உதவிகரமானதாக இருக்கக்கூடும்.

ஜெயகாந்தனும், ஜெயமோகனும் தத்தமது முன்னுரைகளில் வாழ்த்தியிருப்பதைப் போல முதிர்ச்சியடைந்து கொண்டிருக்கும் சிவகுமாரின் எழுத்துலகம், புனைகதைகளின் பக்கமாகவும் திரும்புவது எழுத்தாளருக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

3 comments:

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி சுரெஷ் கண்ணன்.அளவான அமைதியான நடை. இந்தப் பிச்சைப்பாத்திரம் மணிமேகலையுடையதோ?:-)
நல்லன அல்லாததைத் தவிர்ப்பதெ நல்ல எழுத்து.மீண்டும் நன்றி.

Jayaprakash Sampath said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சுரேஷ் கண்ணன். பிகேஎஸ் புத்தகத்தை இன்னும் வாசிக்கவில்லை. வாசிக்க வேண்டும்

மரத் தடி said...

அந்த பொய்க்கதையும் புனைசுருட்டும் இருக்கட்டும். இப்படி வாழ்த்தி எழுதுமாறு சொன்ன பிகேசிவக்குமாரிடம் இருந்து எவ்வளவு பணம் பெற்றாய்?