Monday, December 13, 2004

புகழ்பெற்ற சாமியாராக ஆக பத்து சிறப்பு குறுக்கு வழிகள்

புகழ்பெற்ற சாமியாராக ஆக பத்து சிறப்பு குறுக்கு வழிகள்

இன்றைய தேதியில் குறுகிய காலத்தில் நிறைய செல்வம் சேர்க்க நம் சமூகத்தில் பல வழிகள் உள்ளன. கள்ளச்சாராயம் தயாரித்தல், கள்ளக்கடத்தல் பொருட்களை விற்பனை செய்வது, ரவுடியாக மாமூல் வாங்குவது, கட்டப் பஞ்சாயத்து செய்வது, போதைப் பொருட்கள் விற்பது போன்ற சமூகவிரோத செயல்களினால் பணம் சம்பாதிக்கலாம்தான் என்றாலும் அதில் உடல் மற்றும் மன பலமும், காவல் துறையினரை சமாளிக்கக்கூடிய சாமர்த்தியமும், சில சமயங்களில் பல ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டியதும், மக்களிடம் வெறுப்பையும் சம்பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமிருப்பதால் அதை தவிர்ப்போம்.

மற்றபடி அரசியல், சினிமா போன்ற துறைகள் இருக்கிறதுதானென்றாலும் அரசியலுக்கு மேற்கூறிய தகுதிகள் அனைத்தும், சினிமாவுக்கு கொஞ்சம் அழகும், நாக்கு குழறுகிறாற் போல் தமிழை பேச தெரிய வேண்டியிருப்பதாலும் அதையும் தவிர்ப்போம்.

எந்தவொரு தகுதியும் இல்லாமல், அதே சமயத்தில் நிறைய பணமும் சம்பாதிக்க வேண்டும் என்று பார்த்தால்....

சாமியாராகிவிடுவது மிகச்சிறந்த வழி.

எனக்கு ஒன்றும் தெரியாதே என்கிறீர்களா? அதுதானய்யா சாமியாராக சிறப்பு தகுதி.

கீழ்க்கண்ட வழிகளை பின்பற்றுங்கள். வெற்றி நிச்சயம்.

O

1) முதலில் உங்களுக்கு வேண்டியது ஒரு புனைப்பெயர். உங்களின் இயற்பெயர் முனுசாமியோ, மண்ணாங்கட்டியோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, சாமியாரின் லட்சணத்துக்கேற்றவாறு ஒரு நீளமான பெயரை சுட்டிக் கொள்வது மிக அவசியம். அதில், யக்ஷதிக்ஷமோக்ஷானந்தா என்பது போன்ற சம்ஸ்கிருத வாசனை அடிக்கிற பெயராக பார்த்து வைத்துக் கொள்வது மிகுந்த பயனளிக்கும். பல்லங்குடிஜில்லாங்கடி சாமியார் என்பது மாதிரி வைத்துக்கொண்டால் கிராமத்து மக்களை கவரலாம். முடிவெட்டிக் கொள்ளாமல் தாடியையும், மீசையையும் மழிக்காமல் வளர்த்துக் கொண்டால் சலூனுக்கு செய்யும் செலவும் மிச்சமாகும்.

2) நீங்களே உங்களை சக்தி வாய்ந்த சாமியார் என்று சொல்லிக் கொண்டால் மக்களை நம்பவைப்பது சற்று - கவனிக்கவும், சற்றுதான் - சிரமம். எனவே ஒரு கம்பெனியில் குமாஸ்தா வேலைக்கு வைத்துக் கொள்வது போல நீங்களும் சம்பளத்திற்கு இரண்டு அல்லது மூன்று ஆட்களை வேலைக்கு வைத்துக் கொள்வது அவசியம். இது ஆரம்ப நிலையில்தான் தேவைப்படும். உங்கள் புகழ் அகிலமெங்கும் பரவிவிட்ட பிறகு நிறைய பேர் தானாகவே வந்து உங்களுக்கு சீடர்களாக விழுவார்கள். உங்கள் ஆட்களின் முக்கிய வேலை, மக்களிடையே உங்கள் புகழைப் பரப்புவது, பேருந்துகளில் செல்லும் போது, உங்களின் பேரை உரக்க குறிப்பிட்டு, தீராத வியாதி ஒன்று அவருக்கு இருந்து உங்களிடம் வந்தபிறகு முழுக்க குணமாகிவிட்டதாக பல பேர் காதில் விழுமாறு சொல்ல வைக்கலாம்.

தப்பித்தவறி எந்த ஏமாந்த சோணாகிரியாவது உங்களை சந்திக்க வந்துவிட்டால், நீங்கள் உடனே அவரைப் பார்த்து விடக்கூடாது. சுவாமிஜி தியானத்தில் இருக்கிறார் என்று உங்கள் சீடர்களை சொல்ல வைக்க வேண்டும். நீங்களே பத்து, பதினைந்து ஆட்களை வரிசையில் நிற்க வைத்து கூட்டமா வராதீங்க, வரிசையா நில்லுங்க என்று உங்கள் அல்லக்கைகளை வைத்து சத்தம் போட வைக்கலாம். கூட்டம் பெருகிவரும் நிலையில் 100ரூ டிக்கெட் என்று நுழைவுச்சீட்டு கூட அளிக்கலாம். நீங்கள் பக்தர்களை சந்திக்க வரும் போது.. மன்னிக்கவும் காட்சி அளிக்கும் போது.... வழிவிடுங்க... வழிவிடுங்க என்று இரண்டு, மூன்று பேர் உங்கள் அருகில் கத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

3) நகருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் உங்களுக்கென்று ஓர் ஆசிரமம் வேண்டும். பொறம்போக்கு இடமாக இருந்தால் கூட பரவாயில்லை. ஓலைக்குடிசை போட்டு அமர்ந்து கொண்டால், உங்கள் புகழ் பெருகி பக்தர்கள் கூடும் வேளையில் உங்களை காலி செய்ய வைக்க பயப்படுவார்கள். பிறகு உங்களின் பணக்கார பக்தர்களே உங்களை பங்களா வாங்கி அமரவைப்பார்கள். அவர்கள் செய்த பாவங்களின் குற்ற உணர்ச்சியால் அவைகளை டெட்டால் போட்டு கழுவ உங்களை நாடுவார்கள், நீங்கள் ஏதோ தேவதூதர்கள் என்று.

ஜாக்கிரதை. நீங்களே ஒரு பழைய குற்றவாளி என்று தெரிந்தால், உங்களை போட்டு மொத்திவிடக்கூடிய சாத்தியக்கூறுகளும் உண்டு. ஆனால் பழகுகிற வரைக்கும்தான் இதெல்லாம். ஒருவரையருவர் நன்கு அறிந்து கொண்டபிறகு இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக் கொள்ளலாம்.

4) "டேய் கய்த, நம்ம காதர் கடையில போயி பரோட்டாவும் சால்னாவும் வாங்கிகினு ரெண்டு காஜா பீடியும் வாங்கிகினு சல்தியா வாடா பேமானி" என்ற உங்கள் பழைய பாஷையையெல்லாம் ஏறக்கட்டி பரணையில் போட்டுவிட வேண்டும். இப்போது நீங்கள் சுவாமிஜி என்பதால் அதற்குரிய ஜபர்தஸ்துடன் பேச வேண்டும். 'சொல் மகனே' என்றோ 'நீ யார் என்று உனக்குத் தெரியுமா?' என்றோ 'உலகமே மாயை எனும் போது பிரச்சினைகளும் மாயைதானே' என்று மையமாக பேச வேண்டும். மேலோட்டமாக கேட்கும் போது எதுவும் புரியக்கூடாது. அப்போதுதான் நீங்கள் ஏதோ செய்தி (?!) சொல்கிறீர்கள் என்று பக்தர்கள் புரிந்துகொள்வார்கள்.

எதற்கும் ஜெயகாந்தனின் 'குருபீடம்' என்கிற சிறுகதையை படித்துவைத்துவிடுவது நல்லது. பின்பு பிராக்டிகலாக செய்ய பயனுள்ளதாக இருக்கும்.

5) மருத்துவர்களையும், வழக்கறிஞர்களையும், சாமியார்களையும் தேடிப் போகிறவர்கள் பிரச்சினை என்று ஏதாவது இருந்தால்தான் போவார்கள் என்று அடிப்படை உளவியல் சமாச்சாரம். எனவே வருகிற பக்தர்களிடம் "உன் பிரச்சினையை நான் அறிவேன்" என்று குத்துமதிப்பாக ஆரம்பிக்க வேண்டும். 'அட நமக்கு பிரச்சினை இருப்பது சாமியாருக்கு எப்படி தெரியும்' என்று வருபவன் ஆடிப் போய்விடுவான். ஆனால் உண்மையாக உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதால் 'எனக்குத் தெரியும்தான் என்றாலும் அதை உன் வாயாலேயே சொன்னால்தான் இறைவனிடம் நானும் முறையிடுவேன்' என்று டகுல்பாஜி வேலை ஏதாவது செய்ய வேண்டும்.

6) பி.சி.சர்க்கார், ஜதுகர் ஆனந்த் போன்ற மாஜிக் நிபுணர்களிடம் ஒரு வருடம் உதவியாளராக வேலை செய்திருத்தல் இந்த தொழிலுக்கு நல்லது. இல்லையென்றாலும் பரவாயில்லை, இப்போது நீச்சல் அடிப்பது எப்படி? என்பது வரைக்கும் சொல்லிக்கெ(¡)டுக்க நிறைய புத்தகங்கள் உள்ளன. மாஜிக் கற்றுக் கொடுக்கிற புத்தகங்களை உருப்படியாக பின்பற்றினால் ஒரளவிற்கு கற்றுக் கொள்ளலாம்.

கையில் விபூதி வரவழைப்பது, வாயில் லிங்கம் வரவழைப்பது எல்லாம் நம் முன்னோர்கள் முயற்சித்து வெற்றி பெற்று விட்டதினால் நாமும் அதை பின்பற்ற வேண்டாம். இயக்குனர் ஷங்கர் தம் படங்களில் கிராபிக்ஸில் கலக்குவது போல நீங்களும் காலத்திற்கேற்றவாறு அப்-டேட் செய்து கொண்டால்தான் பிழைக்கலாம். நீங்கள் லிங்கத்தை வாயில் இருந்து வரவழைப்பதற்கு பதிலாக, பின்பக்கமாக..... இருங்கள் அவசரப்படாதீர்கள்..

பின்புறமாக சிஷ்யகே(¡)டிகளில் ஒருவனை சிவப்பு நிற ஒளியை வீசச் செய்து உங்கள் தலையின் பின்புறம் அது பிரதிபலிக்குமாறு செய்து இறைவனிடம் பேசிக் கொண்டிருப்பதாக பாவ்லா செய்யலாம். இதையெல்லாம் நம்புவார்களா? என்று பைத்தியக்காரத்தனமாக கேட்கக்கூடாது. இதைவிட பைத்தியக்காரத்தனங்களையெல்லாம் நம் மக்கள் ஏற்கெனவே நம்பியிருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

7) சாமியார் என்று ஆகிவிட்ட பிறகு உங்களுக்கென்று ஒரு தனித்தன்மை இருக்க வேண்டும். இதற்கு உங்கள் முன்னோர்களின் ஆசிரமங்களுக்கு ஒருமுறை டிரெயினிங் விசிட்செய்து விட்டு வருவது நல்லது. பிராந்திச் சாமியார், கோழி ரத்தத்தை குடித்துவிட்டு குறிசொல்லும் சாமியார், கோழி இறகு மூலம் கடவுளிடம் ISD லிங்க் மூலம் நேரடியாக பேசும் சாமியார், வருகிறவர்களை எல்லாம் ஆலிங்கனம் செய்யும் சாமியார், தேங்காயை உங்கள் மண்டையிலேயே மொட்டென உடைத்து உங்கள் மூளைக்கோளாறை ஏற்படுத்தும்..மன்னிக்கவும் சரிசெய்யும் சாமியார், உங்களை மண்ணில் புதைத்துவிட்டு பதினைந்து நிமிடம் கழித்து உங்களை மண்ணிலிருந்து எழுப்பி உங்கள் பிரச்சினைகளை நிரந்தரமாக (?!) சரிசெய்யும் சாமியார் என்று பலவிதமான சாமியார்களைப் போல நீங்களும் ஒரு முறையை பின்பற்றுவது பயனளிக்கும்.

கணினியின் உதவியைக் கொண்டு கடவுளிடம் மின்னஞ்சல் மூலமாகவோ அவசரமென்றால் சாட்டிங் மூலமாகவோ தொடர்பு கொள்ள முடியும் என்று சொல்லிப்பார்க்கலாம். நம்புவார்கள். கணினி தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் வந்தால் என்ன செய்வதென்று கேட்கிறீர்களா? பயப்படாதீர்கள்.. உயர்நீதிமன்ற நீதிபதிகள் முதற்கொண்டு காவல்துறை அதிகாரிகள், முன்னாள் ஜனாதிபதிகள் போன்ற மெத்தப்படித்த அறிவாளிகளே சாமியார்களின் கால்களில் விழுந்து எழுந்திருப்பதால் இந்த மாதிரியான அற்பத்தனமான சந்தேகமெல்லாம் உங்களுக்கு வரக்கூடாது.

8) நான்கைந்து வெளிநாட்டுக்கார வெள்ளைக்காரர்களை வாடகைக்கு வரவழைத்து உங்கள் ஆசிரமத்தில் தங்கவைப்பது நல்லது. திரைப்பட புரொடக்ஷன் மேனேஜர்களிடம் கேட்டால் இந்த மாதிரியான வெளிநாட்டவர்களை ஏற்பாடு செய்து தருவார்கள். இப்போது திரைப்படங்களில் பாடப்படும் டூயட்களில் பின்னால் ஆடுபவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டவர்களாக இருப்பதால் அவர்களுக்கு பஞ்சமிருக்காது. நீங்கள் பக்தர்களுக்கு காட்சிதரும் போது அவர்கள் முன்வரிசையில் உட்கார்ந்து கொண்டு கைகளை உயர்த்தி கோஷம் போட வேண்டும். இதையெல்லாம் அவர்களுக்கு எப்படி சொல்லித்தருவது என்று சஞ்சலப்படாதீர்கள். அவர்கள் டிஸ்கொதே போன்ற கூட்டங்களில் பாப் இசைக்கு ஏற்ப நடனமாடி பழக்கமாகி இருப்பதால், அவற்றையே நம் வசதிக்கு மாற்றிக் கொள்ளலாம்.

9) உங்களிடம் பிரச்சினைக்கு வருபவர்களிடம் எவ்வளவு காணிக்கை வாங்குகின்றீர்களோ அது உங்கள் சாமர்த்தியம். ஆனால் பிரச்சினை தீர பரிகாரம் என்று சொல்லும் போது மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நகருக்கு வெகு தொலைவில் உள்ள ஒரு கோவிலை குறிப்பிட்டு 60 சனிக்கிழமைகள் தவறாமல் சென்று பெட்ரோல் விட்டு... மன்னிக்கவும் நல்லெண்ணைய் விட்டு விளக்கேற்றி வைத்தால் உங்கள் பிரச்சினைகள் அகன்று சுபிட்சம் ஏற்படும் என்று அளந்துவிடலாம். ஏன் இவ்வளவு நீள காலக்கெடு என்றால்...

பெரும்பாலும் இத்தனை வாரமும் சென்று வர நம் மக்களுக்கு பொறுமை இருக்காது. அவர்களுக்குத்தேவை உடனடி சுலபமான தீர்வு. அதற்காகத்தானே உங்களிடம் வருகிறார்கள். எனவே அவ்வாறு செல்ல இயலாதவர்கள் 'நம்மால் பரிகாரத்தை செய்ய முடியவில்லை. அதனால்தான் சுவாமிகளின் ஆசி பலிக்கவில்லை' என்று தங்களைத் தேற்றிக் கொள்வார்கள். குருட்டாம் போக்கில் அவர்கள் பிரச்சினை பலித்துவிட்டதென்றால் உங்களுக்கு கொண்டாட்டம்தான். உங்களுக்கு மேலும் காணிக்கை வருவதோடு, அவர்களே உங்களுக்கான பி.ஆர்.ஓக்களாக மாறி மற்றவர்களிடம் உங்கள் புகழ்பரப்பி விடுவார்கள்.

இவ்வளவு நீளமான கால பரிகாரம் சொல்வது இன்னொரு வகையிலும் நல்லது. ஏதாவது பிரச்சினையெனில் உங்களுக்கு முன்ஜாமீன் எடுக்கவோ, ஊரை விட்டு ஓடிப் போகவோ இந்த கால இடைவெளி தேவைப்படும்.

10) நாம்தான் சாமியாராற்றே, லெளதீக வாழ்க்கையில் நமக்கென்ன வேலை என்று ஆசிரமத்திலேயே உட்கார்ந்து விடக்கூடாது. சாப்பிட்டது செரிக்க, சற்று வெளியுலகிற்கும் போய்வருவது நல்லது. உங்கள் புகழ் ஓங்கிவிட்டதால், பெரிய அரசியல்வாதிகளும் உங்களுக்கு பக்தர்களாகிவிடுவதால், அப்போதைய அரசியல் சமாச்சாரத்தில் மூக்கை விட்டுப் பார்க்கலாம். உங்கள் நேரம், அது சரியாகிவிட்டால், ஐ.நா. சபைக்கு கூட உங்களை கூப்பிட வாய்ப்புகள் வரலாம். ஆனால் அரசியல்வாதிகளிடம் பழகும் போது ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. சந்தர்ப்பம் சரியில்லையென்றால் உங்களையே போட்த்தள்ளி விடுவார்கள். எப்போதும் ஊரைவிட்டு ஓடத்தயாரான நிலையிலேயே இருப்பது நல்லது.

இதெல்லாம் பிரச்சினையாக இருக்கும் போல போலிருக்கிறதே என்று தயங்குகிறீர்களா? கவலையை விடுங்கள். இதிலேயே பல டிபார்ட்மெண்ட்கள் உள்ளன. அதில் பார்த்துக் கொள்ளலாம்.

கோட் சூட் எல்லாம் போட்டுக் கொண்டு, பெயரியல் நிபுணராகி விடுங்கள். 'உங்கள் இனிஷியலை மாற்றி விட்டு JS என்று போட்டுக் கொண்டால் வாழ்க்கையே சுபிட்சமாகிவிடும்' என்று சொல்லிப்பாருங்கள். அப்பன் பேரையே மாற்றி வைத்தால் அசிங்கமாச்சே என்றெல்லாம் நினைக்காமல் நீங்கள் சொன்னபடி செய்வார்கள்.

நீலக்கல், பச்சைக்கல் என்று கூட வியாபாரம் செய்யலாம். பிளாட்பாரத்தில் விற்பவனே ராசிக்கல் மோதிரம் என்று பின்னும் போது நீங்கள் hi-tech லெவலில் செய்யலாம். போகிற போக்கில் பாறாங்கல்லை கூறு போட்டு கூட அதிகவிலையில் விற்கலாம். வாங்கிக்கொள்ள ஆள் இருக்கிறது.

இன்னுமென்ன தயக்கம். இப்போதே புறப்படுங்கள்.

suresh kannan

28 comments:

தகடூர் கோபி(Gopi) said...

:))
கலக்கறீங்க!!! இது மாதிரியே வாஸ்து, பில்லி சூன்யம், ஆவி கூட பேசுறதுக்கெல்லாம் சிறப்பு குறுக்குவழி சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.

PKS said...

சுரேஷ், வலைப்பதிவு ஆரம்பிச்சாச்சு. உங்க இடம், நீங்க அதை எழுத முடியும். அதனால், எனக்கு உங்ககிட்ட இருந்து படிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கு. அதைக் கேட்கிறேன். ஒருமுறை இணையக் குழுவொன்றில் நகைச்சுவையாக சிற்றிதழ் (அல்லது எழுத்தாளர்களைப் பற்றி) 5 பாயிண்ட்டுகள் போட்டு, மீதியை அப்புறம் போடுகிறேன் என்று சொல்லி, எதிர்வினைகளால் நிறுத்திவிட்டீர்களே. அந்தப் பத்து பாயிண்டையும் இங்கே போடும் ஐயா. எனக்கு அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. அன்புடன், பி.கே. சிவகுமார்

Anonymous said...

சுவாமி சுரேஷானந்தா, தாங்கள் 1 கோடி ரூபாய் சேர்த்தவுடன் சொல்லுங்கள், தங்களின்
அந்தரங்க காரியதரிசியாய் நான் பணி மேற்கொள்கிறேன்.என்னைப் பற்றி
1, பெண்
2, நல்ல நிறம்
3,ஆங்கிலம் பேச,எழுதப்படிக்க நன்றாக தெரியும்
மற்றவை நேரில் :)

துளசி கோபால் said...

அன்புள்ள சுரேஷ்,

நானே ஃபாரின் ரிட்டர்ன் சாமியாரிணியாப் போலாமான்னு யோசனை செஞ்சுகிட்டு இருந்தேன். நல்ல சமயத்துலே இப்படி ஒரு 'கைடு' போட்டிருக்கீங்க!
ஜமாய்ச்சுட மாட்டேனா?
நல்லா இருங்க!

என்றும் அன்புடன்,
துளசி.

Anonymous said...

Suresh

Kalakal points. It is very interesting.
All your articles are good.

Keep writing...

Mayiladuthurai Sivaa...

இராதாகிருஷ்ணன் said...

:))

Kasi Arumugam said...

சுரேஷ்,

அடுத்த வருஷம் இந்தியா வந்து செய்ய என்னென்ன தொழில் வாய்ப்பெல்லாம் இருக்கிறதென்று யோசித்துக்கொண்டிருந்தேன். இந்த ஒரு தொழிலே போதும்போல இருக்கே. என் அம்மா பெயர் சரஸ்வதி. என் பெயரை 'காசிலிங்க சரஸ்வதி' என்று வைத்துக்கொண்டால், கொஞ்சம் ஓல்டு ஃபாஷனாக இருந்தாலும் ஒரு பிராண்ட் வேல்யூ இருக்காது? என்ன சொல்றீங்க? விளம்பர ஆலோசகராக உங்களையே போட்டுட எண்ணம்;-)

வீட்டில் சத்தம்போட்டுப் படிச்சு ரெண்டுபேரும் சிரிச்சோம். நன்றி.

Jsri said...

சுரேஷ், நீங்க எழுதினதெல்லாம் சரிதான்னாலும், இதை எல்லாம் எழுதி "நேரவிரயம்" செய்ய 'சுரேஷ்' தேவை இல்லை. உங்களால இதைவிட உருப்படியான பல விஷயங்கள் எழுதமுடியும். இது இந்தப் பதிவிற்காக நேரவிரயம் செய்து நான் எழுதியுள்ள என் கருத்து, விமர்சனம், திறனாய்வு எல்லாக் கழுதையும். எப்படியோ போங்க!

பிச்சைப்பாத்திரம் said...

பி.கே.எஸ்,

அந்த 10 பாயிண்ட்டுகளையும் செப்பனிட்டு விரைவில் போடுகிறேன்.

ஜெயsri

நான் எழுதின பழைய பதிவுகளைப் படித்துப் பார்க்கும் போது ரொம்ப சீரியஸா எழுதிட்டமோன்னு தோணுச்சு. அதனாலதான் இந்த டைவர்ஷன். ஆனா இதை எழுதின போது எவ்வளவு சீரியஸா இருந்தேன்னு எனக்குத்தான் தெரியும்.

பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

Jsri said...

அப்ப பாராட்டினவங்களுக்கு மட்டும்தான் நன்றி. ஒளிவுமறைவு இல்லாம கருத்து சொன்னவங்களுக்கு இல்லை, அப்படித்தானே? சரி. :)

பிச்சைப்பாத்திரம் said...

Ada Pongappa :)

Anonymous said...

யோவ் சுரேசு,

நீரு இப்படி 'சீரியசாவே' எழுதும்வே.
அப்பத்தான் மத்தவங்க சிரிச்சுக்கிட்டிருப்பாங்க.
அடுத்தவனைச் சிரிக்க வைக்குறது அப்படி ஒண்ணும்
லேசுப்பட்ட காரியம் இல்லன்னு புரிஞ்சுக்கிடும்.
வக்கீலம்மா, எதுனாச்சும் சொல்லணுமேன்னு சொல்லுவாங்க.

வேணும்னா அவங்களே "வூடு' கட்டிப் பொளக்கட்டும்.
வேணாம்னா சொல்லப் போறோம்?

சாத்தான்குளத்தான்

enRenRum-anbudan.BALA said...

கண்ணன்,
சமீபத்தில் படித்தவற்றில் மிகச் சிறந்த நகைச்சுவைப் பதிவு, இது தான் :-) கூறியவற்றில் நிறைய உண்மையும் உள்ளது! நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் தான் இவ்வளவு அருமையாக எழுத முடியும். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், உரித்தாகுக! இது போல் நிறைய எழுதுமாறு வேண்டும்,

என்றென்றும் அன்புடன்
பாலா

Anonymous said...

ͧÉ,
¿¢ƒÁ¡¸§Å ´ÕÅ÷ §Â¡¸¢Â¡¸§Å¡, »¡É¢Â¡¸§Å¡, ¾ý¨É ¯½÷óÐ ÁüÈÅÕìÌõ ¯¾Å ±ñ½õ ¦¸¡ñ¼Åḧš ´ÕÅ÷ þÕ츧ŠÓÊ¡¾¡... ÅûÇÄ¡÷, ÃÁ½ Á†Ã¢„¢ ±ýÚ Á†¡ ÒÕ„÷¸û þóÐ Á¾ò¾¢Ä¢ÕóÐ ÁðÎÁøÄ - ±øÄ¡ Á¾í¸Ç¢Öõ ¿øÄÅ÷¸û »¡É¢¸û þÕó¾¢Õ츢ȡ÷¸§Ç...

¿£í¸û ¾ü¸¡Äò¾¢Â ¿¢¸ú׸ǡø ¾¡ý þôÀÊôÀð¼ ¸ÕòÐì¸¨Ç ¦¸¡ñÊÕ츢ȣ÷¸û ±ýÚ ¿¢¨É츢§Èý...

«ýÒ¼ý
‚¸¡óò

By: k_sreekanth_in@yahoo.com

Unknown said...

வாத்யாரே, நம்ம பொயப்புல மண்ணள்ளி போட பாக்குறியே. நா வூரு பக்கமா வந்தா எதுனா குடுச கட்டி குந்திக்கின்னு ஆசி வயங்கலாம்ன்னு பாத்தா அல்லாருக்கும் ஐடியா குட்த்து நம்ம பொய்ப்புல மண்ண போடுறியே நாயமா இது.

Anonymous said...

I need a PA. Can You? Please don't say no!

Good Post. Keep it up.

Need to know one "SAI BABA" PA - Name Sadhayam - go to->http://sampiraani.blogspot.com/2005/09/30.html

நிழல்மனிதன் said...

பத்திரிக்ககை செய்திகளில் அடிபடாவிட்டால் உங்கள் புகழ் உள்ளுரிலேயே ஓய்ந்துவிடும். எனவே ஒரு பணமோசடி மற்றும் பாலியல் தொல்லை வழக்கு வருஷக்கணக்கில் நடக்கும்படி (இழுக்கும்படி) ஏதாவது செய்து கொள்ளவும். ரகஸிய(யா) பக்தர்களை அனுப்பி பிரேமானந்தா,சதுர்வேதி போன்றவர்களின் ஆலோசனைகளையும் கேட்டுக்கொள்ளவும்.

Suresh said...

:-)))))

Anonymous said...

நல்லா சிரிக்க வெச்சுட்டீங்க.

இதை படிக்கும்போது பிள்ளையார் பால் குடித்தது நியாபகம் வந்தது.
எங்கள் தெரு பெண்மணிகள் ஸ்பூனில் பிள்ளியாருக்கு பால் ஊட்ட
லைனில் நின்றார்கள். ஒரு வேளை அவர்கள் ச்பூனிலிருந்து பால்
உறிஞ்சவில்லையென்றால் நம் மேல் என்ன தவறோ
என்று நினைத்து இவர்களே ச்பூனை ஆட்டி ஆட்டி பாலை கீழே சிந்திவிட்டு
"ஆ பிள்ளையார் எல்லா பாலையும் குடிச்சுட்டார்"னு கதை விட்டார்கள்.

Sardhar said...

ஆன்மீகம் என்ற பெயரில் காசு பார்க்கும் காலிகளைக் கேலி செய்யும் நல்லதொரு பதிவு.

மிகவும் ரசித்தேன்.

G.Ragavan said...

காசேதான் கடவுளடா தேங்காய் நினைவுக்கு வருகிறாய்

தேங்காயப் பிரசித்தமா
அஸ்வ அஸ்வ அஸ்வாய
என்று ஒன்றிரண்டு மந்திரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். :-))

Anonymous said...

அந்த லிங்க் மூலமா (கவனிக்க லிங்கம் அல்ல) இது மாட்டுச்சு...

இதுவும் சூப்பர் !!!!!!!

வாசகன் said...

>>நீங்கள் லிங்கத்தை வாயில் இருந்து வரவழைப்பதற்கு பதிலாக, பின்பக்கமாக..... இருங்கள் அவசரப்படாதீர்கள்....>>

பதிவின் ஹை லைட் இந்த வரிகள்தான்

முரளிகண்ணன் said...

super

முரளிகண்ணன் said...

super

Dr.Rudhran said...

excellent suresh... i was planning a book on this subject. you have done a simpler and better job. congratulations.

மங்களூர் சிவா said...

சூப்பர்ப் ஐடியாஸ்!!

மங்களூர் சிவா said...

:))))))))))