Sunday, May 29, 2011

அழகர்சாமியின் கழுதை ( பகுதி 1)


 
திரைப்படத்தின் பெயர் தவறாய் எழுதப்பட்டிருக்கிறதோ என்று சிலர் சந்தேகம் கொள்ளலாம். இல்லை. பிரக்ஞைபூர்வமாகத்தான் எழுதியிருக்கிறேன். நண்பன் ஒருவனிடம் இத்திரைப்படத்தின் சாதக, பாதக அம்சங்களை குறிப்பிட்டு உரையாடிக் கொண்டிருந்தேன். குறைபாடு உள்ள விஷயங்களைப் பற்றி பேசும போது நான் குறிப்பிட்டவைகளை தர்க்கபூர்வமாக மறுக்காமல்  கோபத்துடன் திட்ட ஆரம்பி்த்து விட்டான். 'நீ ஒரு சினிக். எதிலும் குறைசொல்வது ஒரு மனநோய். ஊரே பாராட்டும் ஒன்றை வீம்பிற்காகவது மறுத்துப் பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் சீப்பான டெக்னிக்' என்று அடுக்கிக் கொண்டே போனான். இத்தனைக்கும் அவன் பொதுவாக மாற்றுக் கருத்துக்களை கவனிக்கவும் வரவேற்கவும் செய்கிறவன். அவனே இத்தனை கோபம் கொள்ளும் போது பொதுத் தளத்தில் இந்தப் பதிவின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை எதிர்பார்க்க முடிந்தாலும் பயங்கலந்த சுவாரசியமாகத்தான் இருக்கிறது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். வீம்பிற்காக அல்லாமல் இத்திரைப்படம் குறித்து என் மனதிற்கு சரி எனப் பட்டவைகளையே எவ்வித பூசி மெழுகலும் இல்லாமல் நேர்மையாக பதிவு செய்ய முயன்றிருக்கிறென். பதிவை முழுவதும் வாசித்து விட்டு நான் சொல்ல முயன்றது சரியா அல்லது தவறா என்கிற முடிவிற்கு நீங்கள் வரலாம்.

'அழகர் சாமியின் குதிரை' என்கிற திரைப்படம் எனக்கு சற்றே சற்றுதான் பிடித்திருந்தது. ஆனால் ஊடகங்களும் விமர்சகர்களும் பெரும்பாலான ரசிகர்களும் கொண்டாடி மகிழுமளவிற்கு என்னைக் கவரவில்லை.

நான் எப்போதும் மறுபடியும் அடிக்கடியும் மீண்டும் மீண்டும் சொல்வதுதான். வழக்கமான தமிழ் சினிமாவிலுள்ள சம்பிதாயமான குப்பை மசாலாக்களைத் தவிர்த்து அதை சற்று தாண்டி ஒரு படம் வந்தாலே அதை நல்ல படம், உலக சினிமா என்றெல்லாம் கொண்டாடும் ஒரு கலை வறட்சியான, துரதிர்ஷ்டமான சூழலில் இருக்கிறோம். வணிக நோக்கு விஷயங்களை தவிர்ப்பதெல்லாம் நல்ல சினிமா அல்ல. இதைப் புரிந்து கொள்ளாமலேயே ஒரு திரைப்படத்தை கொண்டாடுவதிலிருந்து எத்தனை மொண்ணையான நுண்ணுணர்வற்ற சூழலில் வாழ்கிறோம் என்பதை பார்க்க பரிதாபமாகவே இருக்கிறது. முன்பெல்லாம் எந்தவொரு மோசமான தமிழ் சினமாவைப் பற்றி எழுதும் போதும் அதை நல்லதொரு உலக சினிமாவுடன் ஒப்பிட்டு ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பேன். இதற்காகவே என்னைத் திட்டினவர்களும் உண்டு. நான் வாழும் பிரதேசத்திலும் தரமான படங்கள் வெளிவரவே வராதா என்கிற ஆதங்கமும் ஏக்கமுமே என்னை அவ்வாறு எழுத வைத்தது. ஆனால் இனி அவ்வாறு செய்வதாய் இல்லை. ஏனெனில் தமிழ் சினிமாவையும் உலக சினிமாவையும் ஒப்பிட்டு எழுதுவது மைக் டைசனையும் ஓமக்குச்சி நரசிம்மனையும் மோத விட்டு பார்க்கும் அடிப்படை அறமேயில்லாத குரூரமான விளையாட்டு என்பது தாமதமாகத்தான் புரிந்தது. எனவே இனி அந்தத் தவறை செய்வதாக இல்லை. 
 


சரி. இனி 'அழகர்சாமியின் குதிரை' திரைப்படத்திலுள்ள சாதகமான, பாதகமான அம்சங்களைப் பார்ப்போம்.

ஓர் எழுத்தாளரின் படைப்பிலிருந்து தன்னுடைய சினிமாவை உருவாக்குவது என்று யோசித்த சுசீந்திரனின் அடிப்படையான விஷயம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. ஏனெனில் பெரும்பாலான தமிழ் சினிமா இயக்குநர்கள் தங்களுடைய நேர்காணல்களில் 'வாசிப்பு பழக்கம்' பற்றி பேசும் போது எவ்வாறு நடிகைகள் 'எனக்கு தமிழ் வராது' என்று பெருமை கலந்த தொனியுடன் சொல்கிறார்களோ அவ்வாறே 'நூல்கள் வாசிக்க நேரம் கிடைப்பதில்லை' என்கிறார்கள். சமீபத்தில் நிகழ்ந்த, தமிழ் சினிமா குறித்த கருத்தரங்கில் 'ஏதாவது கதையிருந்தால் என்னிடம் கொண்டு வாருங்கள்' என்று பேசுகிறார் ஒரு தமிழ் சினிமா இயக்குநர். அவர் பேசிக் கொண்டிருந்ததே தமிழ் இலக்கிய நூல்கள் நிறைந்திருந்த ஒரு நூலகத்தின் கட்டிடத்தில். இயக்குநர்களின் 'கலை குறித்தான தேடல்' இந்த லட்சணத்தில் இருக்கிறது. ஏற்கெனவே உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு டிவிடிகளின் காட்சிகளை, கதைகளை அப்படியே உருவிவிடலாம் என்கிற தைரியத்தினாலேயே பல இயக்குநர்கள் தைரியமாக படபூஜையைப் போட்டு விடுகிறார்கள்.

அவ்வாறில்லாமல் இயக்குநர் சுசீந்தரன், பாஸ்கர் சக்தியின் சிறுகதையினால் கவரப்பட்டு அதை படமாக்க முடிவு செய்ததற்காக பாராட்டு. ஆனால் பாஸ்கர் சக்தியின் சிறுகதை, வணிகப் பத்திரிகைக்காக, அவருக்கே உரிய பிரத்யேக மெல்லிய நகைச்சுவையுடன் எழுதிய ஒரு சாதாரண சிறுகதை. அதை சினிமாவாக உருமாற்றுவதற்கான முகாந்திரங்கள் பெரிய அளவில் சிறுகதையில்  இல்லை என்பது என் அவதானிப்பு.

ஆனால் அப்படியும் தீர்மானமாகச் சொல்லி விடமுடியாது. ஒரு திறமையான திரைக்கலைஞனால், ஒரு நாவலின் மையத்தை ஒரு வரியாக எடுத்துக் கொண்டு தன்னுடைய கலைத்திறனால் சினிமாவிற்கு ஏற்றாற் போல் நுண்ணுணர்வு மிகுந்த காட்சிகளுடன் அற்புதமான கலைப் படைப்பாக உருமாற்றி விட முடியும். உதாரணமாக, உமா சந்திரனின் 'முள்ளும் மலரும்' நாவலை எடுத்துக் கொண்டால் அதுவும் ஒரு வணிகப் பத்திரிகையில் தொடராக எழுதப்பட்ட ஒரு சாதாரண நாவல். ஆனால் மகேந்திரன் என்னும் திரைக்கலைஞனால் அதை 'முள்ளும் மலருமாக' மறக்க முடியாத அனுபவமாக உருமாற்ற முடிந்தது. (அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அது பீம்சிங் இயக்கிய 'பாசமலரின்' சற்று மேம்பட்ட வடிவம், அவ்வளவுதான்" என்பான், இந்தப் பதிவின் முதல் பாராவில் வந்த நண்பன்).

ஆனால் சுசீந்திரன், சாதாரணமான அந்த சிறுகதைக்கு விசுவாசமாக, சில காட்சிகளை மாத்திரம் சற்று நீட்டி தன் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். விளைவு, திரைப்படம் ஒரே மையத்தில் சுழன்று சுழன்று சாவகாசமாக மிக மெதுவாக நகர்ந்து ஊர்கிறது. (பதிவின் தலைப்பை கவனிக்கவும்).

ஒரு நல்ல திரைக்கதை என்பது 'ஒருவன் வழி தவறி அடர்ந்த கானகத்திற்குள் நுழைந்து விட்ட பயணத்தின் அனுபவத்தைப் போல் இருக்க வேண்டும்' என்று நினைக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் சிறுத்தையோ, கரடியோ வந்து தாக்கலாம். இருள் மேகம் சூழ கடும் மழை பெய்யலாம். அருவியில் பழங்குடி அழகி எவராவது குளித்துக் கொண்டிருக்கலாம். ஆபத்தின் வருகையை பறவைகளும் சிறு மிருகங்களும் எச்சரித்து குரல் கொடுக்கலாம். களைத்துப் போன நேரத்தில் வெளியே செல்லும் வழி சட்டென்று தோன்றலாம். கால் தவறி புதரின் சரிவில் விழ நேரிடலாம்.

அடுத்து நிகழப் போகும் காட்சியை, கதை செல்லும் போக்கை புத்திசாலியான பார்வையாளன் கூட யூகிக்க முடியாதபடியான திரைக்கதை எந்தவகையிலாவது நகர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். 'அழகர்சாமியில்' இந்த மாயம் பெரும்பாலும் நிகழவேயில்லை என்று சொல்லி விடலாம். குதிரை தொலைந்து போனது, அதை தேடுவது தொடர்பாகவே பெரும்பாலான படம், சோகையான நகைச்சுவையின் மூலம் நகர்வதால் சலிப்பு ஏற்படுகிறது. மோசமாக உருவாக்கப்பட்ட ஒரு பள்ளிக்கூட டிராமாவை பார்க்கும் உணர்வும் சமயங்களில்.

பணிக்குச் செல்லும் விடலை வயது மகளின் குடும்பம், ஊரை மிரட்டினாலும் வீட்டுக்குள் அஞ்சி நடுங்கும் கோடங்கியின் குடும்பம் (இதுவே ஒரு கிளிஷே), குதிரை ஊருக்கு வந்த புண்ணியத்தில் அதுவரை வாழாவெட்டியாக இருந்த பெண், கணவனைச் சென்று சேர்வது, பள்ளிக்கூடத்து உணவை தம்பியுடன் பகிர்ந்துண்ணும் சிறுவனின் பரிவு... என்று சில கிளைக்கதைகளுடன் இந்த சலிப்பை இயக்குர் சமன் செய்ய முயன்றாலும் அதை படம் முழுக்க நீட்டி வளர்க்காமல் துண்டு துண்டாக பதிவு செய்து அப்படியே விட்டு விட்டது முழுமையைத் தரவில்லை.

அடுத்ததாக இயக்குநரின் சிறப்பம்சமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது இந்தப் படத்தின் Casting. நடிகர்கள் தேர்வு. பிரதான நடிகர்களை விட்டு விடுவோம். சிறு சிறு வேடங்களில் கடந்து செல்பவர்களைப் பற்றி பேசுவோம். தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக என்ன நடந்து கொண்டிருந்தது என்றால், ஒரு சில துணை நடிகர்களே, வேறு வேறு பாத்திரங்களில் நூற்றுக் கணக்கான படங்களில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருப்பார்கள். ஒரு படத்தில் சுடுகாட்டு வெட்டியானாக வந்த அதே நபரே, இன்னொரு படத்தில் வெள்ளைக் கோட்டுடன் கண்ணாடியைக் கழற்றி வசனம் பேசுவார். (வெட்டியானுக்கும் டாக்டருக்கும் ஒரே நபரை தேர்வு செய்வதில் ஏதோ ஒரு நகைச்சுவையான தொடர்பு இருக்கும் போலிருக்கிறது). இவர்களை மீறி, கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நபர்களை தேர்வு செய்யும் சுதந்திரம் இயக்குநர்களுக்கு இல்லை. துணை நடிகர்களுக்கு என்று இருக்கும் சங்கத்தின் உறுப்பினர்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்கிற விதியின் காரணமாகவே இந்த அவலம். தொழிலாளர்களின் பாதுகாப்பு, இதையே நம்பியிருக்கும் அவர்களுக்கு தொடர்ந்த வேலை வாய்ப்பு என்கிற அடிப்படையில் இதை புரிந்து கொள்ள முடிகிறதுதான். ஆனால் சினிமா என்பது ஒரே மாதிரியான ரொட்டி சுடும் தொழிற்சாலை அல்ல. நம்பகத்தன்மை என்பது ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்பட வேண்டியது இயக்குநரின் கடமை. துணைநடிகர்கள் பயன்பாடு விஷயத்தில் இப்போதைய நடைமுறை நிலவரம் என்னவென்று தெரியவில்லை.

'அ.கு' வில் வரும் சிறு சிறு பாத்திரங்கள் கூட அசலான கிராமத்து முகங்களாக இருப்பது பெரிய ஆறுதல். கோயில் வரி தராமல் ஏய்க்கும் கிழவி (என்னவொரு சிறந்த நடிப்பு), லாரியில் ஏறி பணிக்குச் செல்லும் சிறுமி, பரோட்டா சிறுவன், உள்ளூர்க் கோடங்கி (நான் கடவுளில் கான்ஸ்டபிளாக வருபவர்), அப்புக்குட்டி உணவருந்தும் போது பக்கத்தில் மெளனமாக உணவருந்தும் கிழவி, காவல்துறை அதிகாரி, நாத்திக இளைஞன், கூலிங்கிளாஸ் மைனர், மகளின் திருமணத்திற்காக சோத்த சில்லறைகளை கோயில் வரிக்காக தரும் ஆசாரி, ("பூ'வில் பேனாக்காரராக நடித்தவர்), ஒல்லிப்பிச்சான கோழித் திருடன், ஊர் பெரிசுகள், அப்புக்குட்டி திருமணம் செய்யப் போகும் பெண்ணின் தந்தை, தாய், ஒரு சில பிரேம்களில் கடந்து போகும் முகங்களோடு முக்கிய பாத்திரத்தில் நடிததிருக்கும் அப்புக்குட்டி என்று பல இயல்பான முகங்கள்.

நெருடல் என்று பார்த்தால் மலையாள மாந்திரீகனாக வரும் கிருஷ்ணமூர்த்தி, (அவருடைய எரிச்சலூட்டும் நடிப்பும்) நாத்திக இளைஞனின் காதலி மற்றும் அப்புக்குட்டியின் வருங்கால மனைவி. ஆண்களின் பாத்திரங்களை துணிச்சலுடன் யதார்த்தமாக தேர்வு செய்த இயக்குநர், அதை சமன் செய்வதற்காகவோ என்னவோ, அதற்கு முரணான நகரப் பின்னணி முகங்களை தேர்வு செய்தது ஒரு சறுக்கல்.

(தொடரும்)
 
suresh kannan

21 comments:

Anonymous said...

தொடரவும்....

உண்மைத்தமிழன் said...

கிழிஞ்சது..!

CS. Mohan Kumar said...

முள்ளும் மலரும் படம் குறித்த தங்கள் நண்பரின் விமர்சனதிலிருந்தே அவரை பற்றி அறிய முடிகிறது. எதிலும் திருப்தி அடையாமல் குறை கூறுபவர்கள் மீது பரிதாபம் தான் படவேண்டும்.. (பாவம் அவர் குடும்பத்தார். எத்தனை குறை சொல்வாரோ!!)

Sivakumar said...

படைப்பு எதுவென கேட்டேன். படைத்துப்பார் என்றான் இறைவன்....

Anonymous said...

//கதை செல்லும் போக்கை புத்திசாலியான பார்வையாளன் கூட யூகிக்க முடியாதபடியான திரைக்கதை எந்தவகையிலாவது நகர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். //

தமிழ் சினிமா ரசிகன் ஒரு அடிமுட்டாள். அவனுக்குத் காட்சியை தெளிவாக brasso போட்டு விளக்கிக் காட்ட வேண்டியது என் கடமை என்ற எண்ணமே பெரும்பாலான இயக்குநர்கள், கதாசிரியர்களின் முடிவான முடிவு என்பது என் கருத்து.

அது அவர்களின் திறமைக் குறைவை மறைக்க ரசிகன் மீது பழி போட்டுத் தப்பித்துக் கொள்வதாகவும் இருக்கலாம்.

Ashok D said...

ரொம்ப பிஸியோ...?

வழக்கம் போல நச் :)

sasibanuu said...

Why u didn't stop to writing...I thought April 1 news is true. Why u r continuing unnecessarily??!!!

Always writing .. no tried good stories from books and tamil literature.. If any one tried, Start to Criticizing him...

As YOUR friend said "
நீ ஒரு சினிக். எதிலும் குறைசொல்வது ஒரு மனநோய். ஊரே பாராட்டும் ஒன்றை வீம்பிற்காகவது மறுத்துப் பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் சீப்பான டெக்னிக்".... Correct!

ரிஷி said...

கலையுலகம் பரந்துபட்டது. ஒரு சிறுகதையே எடுத்துக்கொண்டால் அது எவ்வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பினும் அது வாசிப்பாளர்களுக்கு ஒவ்வொரு விதமான உணர்வை ஏற்படுத்தும். அது அவரவர் மனப்பொதிகளின் சுமையையும், அளவீடுகளையும் பொறுத்தது.

என்னைப் பொருத்தவரை இப்படத்தை ரசித்துப் பார்த்தேன். திரைக்கதை சற்றே வேகம் குறைவெனினும் கதை மாந்தர்களுடன் இணைந்து நானும் பயணப்பட்டதால் அதை என்னால் ரசிக்க முடிந்தது.

Kite said...

'அழகர் சாமியின் குதிரை' என்கிற திரைப்படம் எனக்கு சற்றே சற்றுதான் பிடித்திருந்தது. ஆனால் ஊடகங்களும் விமர்சகர்களும் பெரும்பாலான ரசிகர்களும் கொண்டாடி மகிழுமளவிற்கு என்னைக் கவரவில்லை.


அவ்வாறில்லாமல் இயக்குநர் சுசீந்தரன், பாஸ்கர் சக்தியின் சிறுகதையினால் கவரப்பட்டு அதை படமாக்க முடிவு செய்ததற்காக பாராட்டு. ஆனால் பாஸ்கர் சக்தியின் சிறுகதை, வணிகப் பத்திரிகைக்காக, அவருக்கே உரிய பிரத்யேக மெல்லிய நகைச்சுவையுடன் எழுதிய ஒரு சாதாரண சிறுகதை. அதை சினிமாவாக உருமாற்றுவதற்கான முகாந்திரங்கள் பெரிய அளவில் சிறுகதையில் இல்லை என்பது என் அவதானிப்பு. //

வழிமொழிகிறேன்.

Anonymous said...

மிகச் சரியாக செல்கிறது உங்கள் பார்வை. cynic என சொல்பவர்கள் கோபித்துக் கொள்ளவேண்டாம், தங்களின் திரை ரசனையை கண்டிப்பாக வளர்த்துக்கொள்ளவேண்டும். மலின emotional dramaவிலிருந்து வெளியே வராதவர்கள்..பத்து வருடங்களுக்கு முன்புவரை உணர்ச்சி சார்ந்து பயணம் செய்த பார்வையாளர்கள்,இப்போதேல்லாம் கதாபாத்திரங்களின் போலி உணர்ச்சிகளுக்கு மதிப்பு தருவதில்லை.அங்கு அவர்களுக்கு இயக்குனரின் உணர்ச்சியோடு கூடிய அறிவை காண விரும்புகிறார்கள். அதற்கான லாஜிக் தேவை.( கமர்சியல் விசயங்களுக்கு கூட) முகம் தெரியாத ஒரு சாதரண ரசிகனுக்கு அறிவு சார்ந்த பார்வை வளர்ந்திருக்கிறது.கண்டிப்பாக இப்படம் முழு நிறைவை தந்திருக்காது. இல்லாவிட்டால் இப்படம் மக்களின் ரசனை சார்ந்து எல்லோரையும் ஈர்த்து இருக்கும். இமேஜில் சுற்றி அலையும் போலிகளுக்கு இந்த படம் சிறந்த படமாக இருக்கும்.
நல்ல படைப்பை சரியாக முழுமை பெறச் செய்ய வேண்டியதுதான் வேலையே. களத்தை கையாள ஆரம்பித்தவுடனேயே நாம் சிறந்த படைப்பை உருவாக்கிறோம் என்ற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். இப்படத்தின் கதையில் ஒர் உள்ளார்ந்த,அதுவும் ஒரு நல்ல படைப்பாளி தானாக விரித்துப் பார்க்கும் வாழ்க்கைக்கான முதிர்ச்சி இருக்கிறது. திரைக்கதையில் அதை முயலவில்லை. அ.கு -- அனைத்திலும் இன்னும் உழைப்பு தேவைப்படுகிறது.. Even a basic need……..

தமிழ் திரு said...

ஒரு நல்ல திரைக்கதை என்பது 'ஒருவன் வழி தவறி அடர்ந்த கானகத்திற்குள் நுழைந்து விட்ட பயணத்தின் அனுபவத்தைப் போல் இருக்க வேண்டும்' என்று நினைக்கிறேன். //

நினைப்பது என்ன அதுதான் சரி ...நச்! தொடருங்கள் ...

chandramohan said...

மிக சிறப்பான பதிவு சுரேஷ்... நீண்ட நாட்களுக்கு அப்புறம் மௌனம் கலைத்திருக்கிறீர்கள்.மகிழ்ச்சி.
இந்த படத்தை பற்றிய மிக தெளிவான விமர்சனம் உங்களுடையது மட்டும் தான். நீங்கள் சொன்னது போல் 'வித்தியாசமான' என்ற பிராண்டின் கீழ் வரும் படங்களை உடனே எல்லோரும் போற்ற துவங்கி விடுகிறார்கள். அவ்வளவு வறட்சி. படம் கடைசி இருபது நிமிடங்களுக்கு மட்டுமே ரசிக்கும்படியாய் இருந்தது. ஆரம்பம் முதல் வறட்சியான, சொல்லப்போனால் எந்த முன் அனுபவமும் சரியான பார்வையும் இல்லாமல் படம் எடுக்க முயலும் இயக்குனரின் படம் போல் தான் இருந்தது. மேலும் பல லாஜிக் குறைகள். அந்த 'காது கேளாத' பாட்டி அதே ஊரை சேர்ந்தவர் என்றாலும் அவர் தனக்கு காது கேட்காதது போல் நடிப்பதை கூடவா அதே ஊர்க்காரர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.? பஸ்ஸில் இருந்து புதிதாய் ஊருக்குள் இறங்கும் 'ரகசிய போலிசை' கண்டதும் 'நீ யார் ? ஊர்க்கு புதிதாய் இருக்கிறாய்?' என கேட்கும் அளவு ஒருவரை ஒருவர் அறிந்த மக்கள் என்று காட்டப்படும் காட்சி முன் சொன்ன காட்சியை கேள்விக்குரியதாக்குகிறது. தவிர அப்புக்குட்டி, அவரது மாமனார் போன்ற பலர் சலூனே இல்லாத ஊரில் குடியிருக்கிறார்களா? ஏன் இந்த 'கூத்துப்பட்டறை' பாணி கூந்தல்? அப்புக்குட்டி சில சமயம் முரண்டு பிடித்து கத்தும்போது நமக்கே நாலு அறை விடலாம் என்று தோன்றுகிறது. அந்த குதிரை (?) வெறி பிடித்து 'கொடியவர்களை' தண்டிப்பது போன்ற காட்சிகள் மிகையானவை. அதே போல் 'தாழ்த்தப்பட்ட' (அப்படி யாராவது கிராமங்களில் சொல்வார்களா? ) பூசாரி மகளை தன் மகன் மணந்ததை கேட்டு 'இந்த ஊரில் மழையே பெய்யாது' என சாபமிட்ட மறு வினாடி மழை கொட்டுகிறதாம். உடனே ஊர் மக்கள் தங்கள் ஜாதி துவேஷத்தை மறந்து மழையை வைரமுத்து பாணியில் கொண்டாடுகிறார்களாம். ஊர் தலைவருக்கு மட்டும் தான் ஜாதி வெறி இருக்குமா என்ன? மற்றவர்கள் சமத்துவ பண்போடு இயங்குபவர்களா? மலையாள மாந்திரீகர் காமெடி உச்சபட்ச வறட்சி. அதுவும் பக்கத்தில் இன்னொருவர் நிற்கும்போதே அவரது சிஷ்யரும் ம. மா. வும் ரகசியங்களை சத்தமாக பேசிக்கொள்வதும் அருகில் இருப்பவர் அதை 'கேட்டு'கொள்ளாமல் இருப்பதும் அபத்தம். இன்னும் பல குறைகள்!! உங்கள் அடுத்த பகுதிக்கு பிறகு..

ரிஷி said...

//இப்போதேல்லாம் கதாபாத்திரங்களின் போலி உணர்ச்சிகளுக்கு மதிப்பு தருவதில்லை.அங்கு அவர்களுக்கு இயக்குனரின் உணர்ச்சியோடு கூடிய அறிவை காண விரும்புகிறார்கள். அதற்கான லாஜிக் தேவை.( கமர்சியல் விசயங்களுக்கு கூட) முகம் தெரியாத ஒரு சாதரண ரசிகனுக்கு அறிவு சார்ந்த பார்வை வளர்ந்திருக்கிறது.கண்டிப்பாக இப்படம் முழு நிறைவை தந்திருக்காது. //

இந்தப்படத்தை விட 'சிறுத்தை'யும், 'கோ'வும் சூப்பர் ஹிட்டாயின! இதை என்னவென்று சொல்வது?? சாதாரண ரசிகனுக்கு அறிவு சார்ந்த பார்வை வளர்ந்திருக்கின்றதா??

Kite said...

அப்புக்குட்டி சில சமயம் முரண்டு பிடித்து கத்தும்போது நமக்கே நாலு அறை விடலாம் என்று தோன்றுகிறது. அந்த குதிரை (?) வெறி பிடித்து 'கொடியவர்களை' தண்டிப்பது போன்ற காட்சிகள் மிகையானவை. //

மூலக்கதையில் அழகர்சாமிக்கு இவ்வளவு பெரிய பாத்திரம் கிடையாது. அவனுடைய காதல் கதை, குதிரைக்கு வெறி பிடிப்பது, ஊர் மைனர் கதாபாத்திரம், அழகர்சாமியைக் கொலை செய்ய முயலும் பஞ்சாயத்துத் தலைவரின் பங்காளி கதாபாத்திரம், முதல் பாதியில் வரும் சிறுவன் கதாபாத்திரம் இவையெல்லாம் தேவையில்லாத இடைச்செருகல்கள். மூலக்கதையில் குதிரையைத் திருடியது யார் என்பது சுவாரசியமாகச் சொல்லப்பட்டிருக்கும். இதில் அதை மாற்றி சிலை செய்பவர் மீது பழியைப் போட்டு படத்தை முடித்து விடுகிறார்கள். அதிலும் போதுமான அழுத்தம் இல்லாமல் நாத்திக இளைஞர்கள் திடீரென ஆத்திகர்களாக வேடம் போடுவதை ஊர் மக்கள் நம்புவதாகக் காட்டியிருப்பது சறுக்கல். மூலக்கதையில் குதிரை கண்டுபிடிக்கப்பட்டதும் கிராம மக்கள் சொல்வது:

சாமிக்கெதிரா பேசினாலும் உன் மவன் சாமிக்கே உதவி செஞ்சிருக்கான் பாரு என்று.

மூலக்கதையைச் சிதைக்காமல் அதன் போக்கிலேயே எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Anonymous said...

// இந்தப்படத்தை விட 'சிறுத்தை'யும், 'கோ'வும் சூப்பர் ஹிட்டாயின! இதை என்னவென்று சொல்வது?? சாதாரண ரசிகனுக்கு அறிவு சார்ந்த பார்வை வளர்ந்திருக்கின்றதா??//
நம் பார்வையாளர்களுக்கு எப்போதுமே ஒரு தெளிவு உண்டு.கோ வாகட்டும்,சிறுத்தையாகட்டும் அப்படம் எடுத்துக்கொள்ளும்,தரும் உணர்வை, தரம் பிரித்து தொடக்கத்திலேயே தங்களை தயார் படுத்திக் கொள்கிறார்கள்.அப்படத்தில் அவர்களுக்கு cause and effect சரி சமமாக இருந்தால் போதும்.ரோட்டுக்கடையில் பிசா விற்றால் அதன் தரத்திற்கான விலையை கேட்டால் கொடுத்துவிட்டு நகர்ந்து விடுவார்கள். கமர்சியல் படமாக இருந்தாலும் பாத்திரத்தின் உணர்வு பின்புலத்தில் அதற்கு சமமான அறிவுசார்ந்த காரணம் இருக்க பார்வையாளர்கள் விரும்புவர். அப்படி இருப்பதானால்தான் மினிமம் கமர்சியல் கதையாக இருந்தாலும் திரைக்கதையின் தர்க்கமீறல்களை சகித்துகொள்ளாமல் அதனை ஆதரிப்பதில்லை. இது பார்வையாளர்களுக்குண்டான உளவியல். Billy wilderன் வாசகம் ஞாபகத்திற்கு வருகிறது. An Individual Audience may be a idiot.but but a thousand idiot together in the dark - that is critical genius.

த. முத்துகிருஷ்ணன் said...

அழகர்சாமியின் குதிரை சிறுகதை பிடித்துள்ளேன். விரைவில் சினிமா பார்க்கவேண்டும்.

PRABHU RAJADURAI said...

ஒரு திரைப்படத்திற்கு இடைவேளை என்பது எவ்வளவு அபத்தமோ, அதே அபத்தம்தான் விமர்சனத்துக்கு தொடரும் போடுவது...இரண்டு நாள் கழித்து மொத்தமாக பதிவு போட்டால் என்ன?

Anonymous said...

my quotes 17 to 31(about truth)

https://docs.google.com/document/d/18Kofbz3ouDprlRdd9G7GHm-3KJhNUCePHQhBisQCX8c/edit?hl=en_US

...d...

Anonymous said...

உங்கள் கட்டுரையின் தலைப்பில் கழுதை என்று போட்டுள்ளீர்கள்.

இப்படத்தில் வருவது குதிரை அல்ல என்று நினைக்கிறேன். அது கோவேறு கழுதையைப்(mule) போல் உள்ளது. குதிரைக்கும் கழுதைக்கும் சேர்ந்து பிறந்தது. உயரம் குறைவாய் இருக்கும். மலைகளில் நன்றாக ஏறும். பிதாமகன் படத்தில் கஞ்சா செடிகளைத் தூக்கிக் கொண்டு ஏறும்.

d.

rajamelaiyur said...

Very very deep analysis . . .

rajamelaiyur said...

Kalakuringa boss