Thursday, June 02, 2011

அழகர்சாமியின் கழுதை - பகுதி (2)


படத்தின் பிரதான துணைப்பாத்திரங்களில் ஒன்றாக அப்புக்குட்டியை தேர்வு செய்ததற்காக இயக்குநரை பாராட்டலாம். பத்து வருடங்களாக கோமாவில் படுத்துக் கொண்டிருக்கும் நோயாளி பாத்திரம் கூட பத்து இன்ச்சுக்கு ஒப்பனை அணிந்திருக்கும் தமிழ் சினிமாவின் அசட்டுத்தனமான அழகியல் குறித்து எனக்கு நீண்ட வருடங்களாக ஒவ்வாமையுண்டு. இந்தத் திரைப்படத்தில் குதிரைக்காரன் பாத்திரத்திற்கு, மார்க்கெட்டிங் வால்யூவிற்காக முன்னணி நடிகரை தேர்வு செய்து முகத்தில் கரி பூசி செயற்கையாக ஒப்பனை செய்து, அவர் இமேஜிற்காக  ரெண்டு டூயட்களை சண்டைகளை சேர்த்து... இப்படியெல்லாம் செய்யாமல் குதிரைக்காரனின் அளவுக்கேற்ற காட்சிகளையும் அதற்குப் பொருத்தமான நபரையும் துணைப் பாத்திரமாக தேர்வு செய்தது நன்று. ஆம், அப்புக்குட்டி இதில் துணைப்பாத்திரம்தான். பலரும் குறிப்பிடுவதைப் போல் இப்படத்தின் ஹீரோ அல்ல. அவரின் வருங்கால மனைவியாக வருபவரும் ஹீரோயின் அல்ல. போஸ்டரில் யாருடைய படம் பெரிதாக இருக்கிறதோ, அவரை ஹீரோவாக நினைத்துக் கொள்ளும், திரைப்படம் என்றிருந்தாலோ அதில் ஹீரோவாக யாராவது இருந்தேயாக என்று எதிர்பார்க்கும்  சூழலில் சிறு சிறு கதாபாத்திரங்களை வைத்தே ஒரு சினிமாவை உருவாக்கியிருப்பது மகிழ்ச்சி.

குதிரைதான் இந்தப் படத்தின் மையப்பாத்திரம். அதனைச் சுற்றியே எல்லாப் பாத்திரங்களும் வந்து போகிறார்கள். சில விஷயங்களைத் தவிர்த்து இயக்குநர் சுசீந்திரன் இதை சாதித்துக் காட்டியிருப்பது, தங்களை தமிழ் சினிமாவின் தூண்களாக கருதிக் கொண்டு பஞ்ச் டயலாக் பேசும் சூப்பர் ஹீரோக்களுக்கு பேரிடியாக இருக்கும்.


முந்தைய பகுதியில் இதன் திரைக்கதையின் மெதுவான நகர்வு குறித்து உரையாடினோம். அ.சா.கு -வின் இன்னொரு பெரிய மைனஸ் காட்சிகளின் நம்பகத்தன்மையின்மை. 'நகைச்சுவைக்கு லாஜிக்  தேவையில்லை' என்பார்கள். அது மைலாப்பூர் சபா நாடகங்களுக்கு வேண்டுமானால் இருக்கலாம். உலகத்தின் மிகச் சிறந்த கிளாசிக் காமெடிகளை எடுத்துப் பார்த்தால் அதன் பாத்திரங்கள், அவற்றின் இயல்பிலிருந்து மாறாமலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கும். உதாரணம் சார்லி சாப்ளின். ஆனால் அ.சா.கு.விலோ பார்வையாளர்களிடம் சிரிப்பைப் பிடுங்கி விட வேண்டும் என்பதற்காக அசட்டுத்தனமாக நடித்தும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். ஊர்ப் பெரியவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் காட்சி ஒன்றே போதும்.

மரக்குதிரை தொலைந்து போன சமயத்தில் வந்து சேர்ந்த நிஜக் குதிரையை 'சாமி' எனக் கொண்டாடுகிறார்கள். குதிரைக்குச் சொந்தக்காரன் திடீரென அங்கு குதித்து அதைக் கட்டிப்பிடித்து கதறியழுகிறான். (இதைப் பார்த்து அழுகையே வந்து விட்டது என்கிறார் தமிழின் முன்னணி திரை விமர்சகர் ஒருவர்). குதிரைக்கும் அவனுக்கும் உள்ள உறவு அழுத்தமாக நிறுவப்படாமலேயே, எப்படி அந்தக் காட்சி பார்வையாளர்களை அழுததமாக கவர முடியும்?  கிராமத்துக் காடசிகள் ஒருபுறம் காட்டப்படும் போதே இணைக்கோடாக குதிரையும் குதிரைக்காரனின் நட்பை காட்டி பின்பு இந்தக் காட்சியை சேர்த்திருந்தால், பார்வையாளர்கள் இதை இன்னும் உணர்ச்சிப்பூர்வமாக அணுகியிருக்க முடியும். மேலும் விலங்கிற்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள நேச உறவு கூட இதில் அசட்டுத்தனமாகவே நிறுவப்பட்டுள்ளது. பின்னால் வரும் பிளாஷ்பேக்கிலும் ஒரே பாடலில் ஹீரோ பணக்காரனாக ஆவதைப் போல் குதிரையை அவனுடன் நடக்க விட்டு ஓட விட்டு  மேலோட்டமாகவே இதை இயக்குநர் சாதிக்க முயன்றிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் ஊரிலுள்ள கெட்டவர்களையெல்லாம் சரியாக அடையாளங்கண்டு குதிரை தண்டிக்க ஆரம்பிக்கும் போது படம் சின்னப்பா தேவர் அளவிற்கு தரமிரங்கி விடுகிறது. சாதாரண மனிதர்களைத்தான் ஊதிப் பெருக்கி சூப்பர் ஸ்டார் வேடமிட்டு திரையில் காண்பித்து கொல்கிறீர்கள் என்றால், விலங்குகளையாவது அதனுடைய இயல்பிற்கு திரையில் உலவ விடக்கூடாதா? குதிரைக்காரனின் திருமணத்தைக் கூட குதிரைதான் நிச்சயம் செய்ய வேண்டுமா? கடவுளே! பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஆட்டுக்கார அலமேலு திரைப்படம் குறித்து சுஜாதா எழுதியதுதான் நினைவிற்கு வருகிறது.

ஊர்ப் பெரியவர்களே காமெடி செய்யும் அந்த இத்துப் போன கிராமத்தில் அதன் தலைவர் பதவிற்கு போட்டி வேறு நிகழ்கிறது. இந்தப் பதவியை எப்படியாவது கைப்பற்றி விட வில்லன் தோற்றத்தில் அவ்வப் போது வந்து போகிறார். அவர் என்ன செய்கிறார், ஏன் அப்படி செய்கிறார் என்பதையெல்லாம் யாராவது விளக்கிச் சொன்னால் தேவலை. சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தை நிறுத்துவது போல திருவிழாவை நிறுத்த அவர் என்னென்னமோ சீரியசாக செய்கிறார். நமக்குத்தான் காமெடியாக தோன்றுகிறது.

இன்னொரு நம்பகத்தன்மையில்லாத பாத்திரம் குதிரைக்காரனின் வருங்கால மனைவி. ஏற்கெனவே குறிப்பிட்டது போல் இந்த பாத்திரத்திற்கு சாதாரண தோற்றமுடைய கிராமத்துப் பெண்ணை நடிக்க வைத்திருந்தாலே போதும். அத்தனை அழகுடைய பெண், குண்டான குள்ளமான கறுப்பான ஒருவரை திருமணம் செய்ய மனப்பூர்வமாக சம்மதிப்பது யதார்த்ததில் அபூவர்மானது. அன்றாட வாழ்க்கையில் இப்படியான தம்பதியினரைக் கண்டிருக்கிறேன் என்றால் அழகான பெண்கள், சுமாரான தோற்றமுடையவரை திருமணம் செய்ய சம்மதித்தால் பெரும்பாலும் மணமகன் செல்வந்தராக இருப்பார். நடிகைகள் ஏன் லைட்மேனை திருமணம் செய்து கொள்ளாமல் தொழில் அதிபர்களை சரியாகத் தேடி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று துவங்கி இதை யோசித்துப் பார்க்கலாம். பெண்கள் எதை வேண்டுமானாலும் விட்டுத் தருவார்கள், தன்னுடைய வாழ்க்கையின் பாதுகாப்பை எதற்காகவும் விட்டுத்தர மாட்டார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் மிக ஜாக்கிரதையானவர்கள். அவலட்சணமான ஒருவரைக் கூட திருமணம் செய்ய சம்மதிப்பார்கள். ஆனால் குதிரைக்காரனோ அன்றாட பிழைப்பிற்கே அவனுடைய குதிரையை நம்பியிருக்கும் அளவிற்கு வறுமையுள்ளவனாக இருக்கிறான். அல்லது மணப்பெண்ணின் வீடு வறுமையானது, பெண்ணை யாருக்காவது கட்டித்தந்து தலை முழுகிவிடும் நிலையிருக்கிறார்களா என்று பார்த்தால் அப்படியும் இல்லை. குதிரைக்காரன் குதிரையை திரும்பப் பெற்றால்தான் திருமணம் என்று கறாராக சொல்லுமளவிற்கு கெத்தாகவே இருக்கிறார்கள்.

'தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து விட்டானே என் மகன்' என்று ஊர்த்தலைவர் கதறுகிறார். அன்றாட பேச்சு வார்த்தையில், அதுவும சாதிப்புத்தி அழுத்தமாக படிந்து போன கிராமத்து  மனிதர் பேசும் போது 'தாழ்ததப்பட்ட சாதி' என்றா சொல்வார்?

இப்படி பல அபத்தங்களை இந்தப் படத்திலிருந்து பட்டியல் போடலாம்.

இத்தனை நுணுக்கமாகவெல்லாம் இயக்குநரோ, பார்வையாளனோ கவனிக்க வேண்டுமா என்று சிலருக்குத் தோன்றாலாம். பின்பு எதற்கு கதை உருவாக்கம், விவாதம் என்கிற சம்பிரதாயங்கள் எல்லாம் pre-production -ல் நடக்க வேண்டும்? எதைக் காட்டினாலும் பார்வையாளன் பார்த்து விட்டு கைத்தட்டி விடுவான் என்கிற நிலையில்தான் லாஜிக் என்கிற வஸ்துவை கண்டுகொள்ளாமலேயே இத்தனை வருட தமிழ்சினிமாவும் ஓடிக் கொண்டிருக்கிறது. இனியும் அது தொடரத்தான் வேண்டுமா?

மேலும் முழுமையான கலைப்படைப்பு என்று ஒன்று இல்லவே இல்லை. அது ஒரு மித். ஆனால் எல்லா கலைப்படைப்புகளும் அந்த உச்சத்தை நோக்கின உண்மையான முயற்சிகளாக இருக்க வேண்டும். அ.சா.கு அந்த முயற்சியை நோக்கி நகரவேயில்லை. ஒட்டுமொத்த தமிழ்சினிமாவே குப்பையாக இருப்பதால்தான் இப்படிப்பட்ட குறைப்பிரசவங்கள் கூட, 'சிறந்த படங்களாக' நமக்குத் தோன்றும் விசித்திரங்கள் நிகழ்கின்றன.

படத்திற்கு இசை ராஜா என்றாலே பல இயக்குநர்கள் உடனே அட்டென்ஷனில் எழுந்து நின்று அவர் என்ன தருகிறாரோ, அப்படியே பிரசாதம் போல் பெற்று வாயைப் பொத்தி ஏற்றுக் கொள்கிறார்கள். Captain of the ship என்பதெல்லாம் கோபத்தில் சரியாய் நடிக்கத் தெரியாத பெண்ணை கன்னத்தில் அறைவதோடு முடிந்து விடுகிறது. ராஜா என்கிற மேதை பல சமயங்களில் பிரசாதம் தருகிறார்தான், ஆனால் சமயங்களில் விபூதி என்கிற பெயரில் வெற்றுச் சாம்பலையும் தந்து விடுகிறார். இளம் இயக்குநர்களை கூட பெரும்பாலும் அவர் பேசவே விடுவதில்லை என்று தெரிகிறது. இதனால்தான் முன்னணி இயக்குநர்கள் சகிக்க முடியாமல் அவரிடமிருந்து விலகி விடுகிறார்கள் என நினைக்கிறேன். ரஹ்மான என்ற கலைஞனின் மகத்தான் உதயமும் இந்தக் காரணத்தினாலேயே நிகழ்ந்தது.

இந்த மிக எளிமையான கிராமத்து படத்தை 'உலகத் தரத்திற்கு' உயர்த்துவதற்காக ஹங்கேரியிலிருந்து இசைக்கலைஞர்களை வரவழைத்தாக ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் ராஜா குறிப்பிடுகிறார். உலக திரை விழாக்களில் கலந்து கொள்ளும் திரைப்படங்கள், அந்தந்த நாட்டின் கலாச்சாரத்தை, இசையை பிரதிபலிக்க வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. தமிழ்படத்தைக் காண வரும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு நம்முடைய மண்ணின் இசையை அளிக்காமல், இன்னொரு கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை தருவது சரியா எனத் தெரியவில்லை. எந்த ஹங்கேரி படத்திலாவது தமிழ் இசைக்கருவிகளின் பின்னணி இசையைக் கேட்டதுண்டா என்ற கேள்வியின் பின்புலத்தில் இதை யோசித்துப் பார்க்கலாம்.

இன்னொரு வகையில் பார்த்தால் இசைக்கு மொழியோ, கலாச்சாரமோ தடையில்லை. எந்தவொரு நாட்டின் இசைக்கருவியாலும் மனிதனின் சில ஆதாரமான, பொதுவான உணர்வுகளை பிரதிபலிக்க முடியும். அந்த வகையில் ராஜாவின் இசை மகத்தான பிரமிப்பைத் தருகிறது. குதிரையின் அறிமுகக் காட்சி, குதிரைக்காரனின் அறிமுகக் காட்சி, குதிரையை மீட்க போராட்டம் நிகழும் சண்டைக் காட்சி போன்றவைகளில் ராஜாவின் பின்னணியிசை உன்னதமான அனுபவத்தைத் தந்தது என்பதை மறுக்க மாட்டேன். ஆனால் அது இந்தப் படத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறதா என்று கேட்டால் பொருந்தவில்லை என்றுதான் சொல்வேன்.

பிட்ஸாவிற்கு நாட்டுக்கோழி குழம்பை தொட்டுச் சாப்பிடும் ஒரு சங்கடமான உணர்வை ராஜாவின் பின்னணியிசை தந்தது என்பதை இசை குறித்த பாண்டியத்தியம் அல்லாத ஒரு பாமர ரசிகனாக இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். (இசை குறித்த அறிவு உள்ளவர்கள் இங்கு அது குறித்து விளக்கமளிக்க கேட்டுக் கொள்கிறேன். பின்னணி இசையை இந்தத் தளத்தில் கேட்கலாம்). திரைப்படத்தில் காட்சிகளுக்கேற்பதான் செயல்பட வேண்டுமே தவிர, படைப்பாளி தன்னுடைய மேதமையை எந்த இடத்திலும் காட்டக்கூடாது என்பது ராஜாவின் நிலைப்பாடு என்பது மேற்குறிப்பிட்ட தொலைக்காட்சி நேர்காணலில் இருந்து அறிய முடிகிறது. சுசீந்திரன் தனது இயக்கத்தில் அவ்வாறு செயல்பட்ட ஒரு காட்சியை ராஜா சுட்டிக் காட்டியதில், இயக்குநரும் அந்தக் காட்சியை திருத்திக் கொண்டதாக குறிப்பிடுகிறார். இந்த நிலைப்பாட்டில் நம்பிக்கை கொண்ட ராஜா, படத்திற்கு பொருத்தமான அவரது அழுத்தமான அடையாளமான கிராமத்து இசையை அல்லவா பெரிதும் பயன்படுத்தியிருக்க வேண்டும்?

படத்தின் இன்னொரு பலம் பாஸ்கர் சக்தியின் இயல்பான அவருக்கேயுடைய பிரத்யேக நகைச்சுவை. ஆனால் இது மென் தீற்றலாக சில இடங்களில் மாத்திரமே வந்து போகிறது.

ஆங்காரமாய் உடுக்கையடிக்கும் கோடங்கியைப் பார்த்து ஒரு சிறுவன் கேட்கிறான்.

"டேய் கோடங்கி சாமியா, இல்ல பேயாடா?"

"ரெண்டுமே ஒண்ணுதான்டா"

இரவுக்காவல் செல்லும் இளைஞர்கள், ஒல்லிப்பிச்சான் ஒருவனும் அவன் மனைவியும் கோழி திருடுவதை காண்கிறார்கள். இளைஞர்களில் ஒருவன் சொல்கிறான். "என்னதான் திருடித் தின்னாலும் தொத்தலாத்தான் இருக்காய்ங்க"

கவனிக்கப்பட வேண்டும் என்கிற நோக்கமில்லாமல் போகிற போக்கில் இந்த வசனம் சொல்லப்படுவதினாலேயே இந்த நையாண்டி சிறப்பாகத் தோன்றுகிறது.

கோயில் வரி வசூலிக்க வந்திருக்கும் ஊர்க்காரர்களின் முன்னால் கட்டபொம்மன் வசனம் பேசும் சிறுவனின் காட்சி சற்று மிகை என்றாலும் ரசிக்கத்தக்கதாக இருந்தது.

இது போன்ற நையாண்டியும் பகடியும் படத்தின் ஆரம்பக் கட்டங்களில் சில இடத்தில் மாத்திரமே வந்து போகிறது. அசட்டு நகைச்சுவைக்கு பதில் படம் பூராவும் இது போன்றவை இடம் பெற்றிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.

படத்தின் ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வருக்கு இது முதல்படமாம். புகைப்படக்காரராக இருந்து ஒளிப்பதிவாளராக உருமாறியிருக்கிறார். ரசனையான ஒளிப்பதிவு. அந்தக் கிராமத்து நிலப்பகுதிகளின் விஸ்தீரணம் அழகாகத் தெரியும் பாடல்காட்சிகளிலும் 'கெட்டவர்களை' குதிரை துரத்திக் கொண்டு காட்சிகளிலும் சண்டைக்காடசிகளிலும் இவரது பணி சிறப்பாக இருக்கிறது. அழகுணர்ச்சியோடு பதிவு செய்வதுதான் சிறந்த ஒளிப்பதிவு என்பதாக ஒரு பிரமையிருக்கிறது. அந்த மாயையிலிருந்து தமிழ் சினிமா வெளிவந்தால் நல்லது.

அந்தக் கிராமத்தின் பிரத்யேக அடையாளம் படத்தில் வெளிப்படவேயில்லை. குதிரை கட்டிப் போடப்பட்டிருக்கும் இடமும் ஊருக்கு வெளியே வனாந்திரத்தில் அமைந்திருக்கும் மரக்குதிரையின் இடமும் (ஊரின் வெளியிலா அழகரின் வாகனத்தை வைத்திருப்பார்கள்) இது சினிமா செட் என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது. மேலும் 'சுப்ரமணியபுரத்தின்' பாதிப்பிலோ என்னமோ, படம் 80-களில் நிகழ்வதாக காட்டப்பட்டிருப்பதும் அதை நிறுவ பழைய காசுகளும் ரூபாய்களும் மாத்திரம் சில குளோசப்களில் காட்டப்படுவது படத்தின் அடிப்படை நிகழ்வுகளுக்கு எந்தவிதத்தில் உதவுகிறது என்பது புரியவி்ல்லை. 80-களில்தான் கிராமத்தில் இம்மாதிரியான மூடத்தனங்கள் இருந்தன என்றும் சொல்ல முடியாது. இன்றும் கிராமங்களில் சுருட்டு சாமியார்களும் பீர் சாமியார்களும் நீக்கமற நிறைந்திருக்கின்றார்கள்.


சுசீந்திரனின் முதல் திரைப்படமான 'வெண்ணிலா கபடி குழு' தமிழ்ச் சினிமாவின் வழக்கமான சட்டகத்திற்குள்தான் இயங்கியது என்றாலும் படம் நிறைந்த போது பார்வையாளனாக என்னால் ஒரு முழுமையை உணர முடிந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அ.சா.குவில் அதை உணர முடியவில்லை. படத்தின் சில சிறப்பான தருணங்கள் ஆங்காங்கே சிதறி அங்கேயே தேங்கி நின்று விட்டன.  முழுமையை நோக்கி நகரவேயில்லை என்பதுதான் என் ஆதங்கம். இதனால்தான் ஊடகங்களும் விமர்சகர்களும் இதை சிறந்த சினிமா என்றும் இளையராஜா உட்பட இதை 'உலக சினிமா' என்று குறிப்பிடும் போதும் கசப்புடன் மறுக்க வேண்டியிருக்கிறது.

உலக சினிமாவோடு தமிழ் சினிமாவை ஒப்பிட மாட்டேன் என்று முன்னரே குறிப்பிட்டிருந்தாலும் இதைச் சொல்லி விடுகிறென். இதே போன்றதொரு ஸ்கிரிப்டை, இரானிய இயக்குநர் அப்பாஸ் கிராஸ்தமி போன்றவர்கள் கையாண்டிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று யூகித்துப் பார்த்தால் நான் சொல்ல முயல்வது இன்னும் தெளிவாகப் புரியும். அப்படியெல்லாம் இங்கு சினிமாவை உருவாக்கினால் யார் பார்ப்பார்கள் என்றெல்லாம் கேட்டு நம்மை நாமே அவமதித்துக் கொள்ளவும் அடையாளங் காட்டிக் கொள்ளவும் வேண்டாம். மோசமான, அரைகுறைப் படைப்புகளை, கலையை உன்னதம் என்று புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கும் நம் சமூகம்தான் அதிலிருந்து தம்மை மீட்டெடுத்துக் கொண்டு மேலே வர வேண்டும்.

(தமிழில் ஒரு மாறுதலாக வருகிற முயற்சிகளைக் கூட இத்தனை குதறியெடுக்க வேண்டுமா என்று சிலருக்குத் தோன்றலாம். அசாகுவை முன்னிட்டு சில கேள்வி பதில்கள் - என்கிற பதிவில் அதைப் பற்றி உரையாடலாம்) :-)

மூன்று பின்குறிப்புகள்:

1) இந்தப் பதிவில் ஒரு நண்பருடன் உரையாடியதாக வந்த பகுதிகள் நினைவிருக்கலாம். அந்த நண்பர் வேறு யாருமல்ல. என்னுடைய ஆல்டர் ஈகோதான்.

2) என்னுடைய மகளிடம் விசாரித்த போது 'இந்தப் படம் பிடித்திருக்கிறது' என்றுதான் சொன்னாள்.

3) மிருகங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை கலை முதிர்ச்சியுடன் பதிவு செய்த படமாக பிரெஞ்ச் இயக்குநர் ராபர்ட் பிரெஸ்ஸான் இயக்கிய Au Hasard Balthazar -ஐ பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.

suresh kannan

19 comments:

அருண் வைத்யநாதன் said...

படம் அமெரிக்காவுக்கு இன்னும் வரலை - பார்க்கலை. ஆனால், நீங்க எழுதற பொதுவான விஷயங்கள் (படத்தின் கதை திரைக்கதை இசை பிரச்சினை ), முக்கால்வாசி 'வித்தியாசமான' தமிழ் படங்களுக்குப் பொருந்துகிறது என்ற வகையில் ஒரு நல்ல அலசல். உங்களது ஏக்கத்தில் நானும் பங்கு கொண்டு, பெருமூச்சு விடுகிறேன். நிறைய எழுதுங்கள் சுரேஷ் - உங்களைப் போன்றவர்களின் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அது கலைஞர்களுக்கு அவசியமானது. திரைப்படத்துறைக்குத் தேவையானது.

Kite said...

அருமையான விமர்சனம். அதுவும் பெண்கள் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் விதம் குறித்து நீங்கள் கூறியுள்ளது நிதர்சனம். இந்த படம் ஒரு நிறைவைத் தரவில்லை. அதைச் சரியாகச் சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். உங்கள் விமர்சனங்களில் எனக்கு ஏமாற்றம் அளித்தது விண்ணைத் தாண்டி வருவாயா விமர்சனம்தான். நீங்கள் இளைஞர்தான் என்று காட்டிக்கொள்ள அப்படத்தைப் பாராட்டி எழுதிய மாதிரி இருந்தது.

சரவணன்-சாரதி said...

//ஊரின் வெளியிலா அழகரின் வாகனத்தை வைத்திருப்பார்கள்//
ஆமாம்..... ஊரின் வெளியேதான் இருக்கும். தென் தமிழகத்தில் பல இடங்களில் குதிரை(வாகனம்) ஊரின் உள்ளே இருக்காது...

இன்னும் நிறைய விசயங்களை மறுக்கலாம் உங்கள் பதிவில்.

பல அபத்த விஷயங்கள் படத்தில் உண்டு என்றாலும், அபத்த முயற்சிகளே, உண்மையில் ஒரு மகத்தான பயணத்தின் துவக்கப்புள்ளிகள்.

நூறு கோடி ருபாய் ஆபாசங்களை (எந்திரன்) விட இது ஒன்றும் மோசமான முயற்சி இல்லை.

--பா.சரவணன்

CS. Mohan Kumar said...

// இந்தப் பதிவில் ஒரு நண்பருடன் உரையாடியதாக வந்த பகுதிகள் நினைவிருக்கலாம். அந்த நண்பர் வேறு யாருமல்ல. என்னுடைய ஆல்டர் ஈகோதான்.//

இதை ஊகித்தேன். ஆனால் உடனேயே/ பதிவிலேயே சொல்வீர்கள் என நினைக்க வில்லை

Unknown said...

நன்றி.. ஏறக்குறைய இதே மாதிரியான கருத்துகள் இந்த படம் பார்க்கும் போது எனக்கும் தோன்றியது.

இப்படம் ஒரு சிறந்த படத்திற்கான முயற்சி என்பதை வரவேற்கத்தான் வேண்டும். பாராட்டவும் செய்யலாம். ஆனால் இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது ஒன்றுண்டு.

மசாலாப் படங்களை விட so called எதார்த்தப் படங்கள் என அழைக்கப்படும் இந்த மாதிரியான படங்கள் எடுக்கப்படும் போதுதான் மிக திறமையாக செயல்படவேண்டும். இந்த மாதிரியான குறை முயற்சிகள் சரியான பாதையை அடைத்துவிடுகின்றன, பின் வருபவர்கள் முயல்வதற்கு வாய்ப்புகள் அற்றுப்போகிறது. மேலும் தவறான புரிதலோடு விமர்சனர்களும் பார்வையாளனும் திருப்த்தி பட்டுக்கொள்கிறார்கள். இது சரியான இடத்தை நோக்கி செல்லும் பாதையை திசைமாற்றி விடுகிறது. இசையை பொருத்தவரை நீங்கள் குறிப்பிட்டதை விட இன்னும் மோசமாகத்தான் நான் கருத்து கொண்டிருக்கிறேன்.

உலகின் சிறந்த படங்களுக்கு இணையாக நம் திரைப்படங்களையும் எடுக்க முடியும், அதில் எந்த விதத்திலும் நாம் குறைப்பட்டவர்கள் இல்லை. நமக்கு இது போதும் என்பதோ, இது ஆரம்பம் தானே, போக போக சரியாகி விடும் என்பதோ ஏற்றுக்கொள்ள கூடிய வாதங்கள் இல்லை. செய்வதை சரியாகச் செய்தால் தான், அது பின்பற்றக்கூடியதாக இருக்கும். இல்லை என்றால் அது பயத்தையே தோற்றுவிக்கும்.

நான் நம் இயக்குனர்களிடம் கேட்டுக்கொள்வது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். நல்லப்படங்களை மிக கவனத்துடன் செய்யுங்கள் என்பதுதான் அது.

மேற்கு தொடர்ச்சி மலை said...

அன்புள்ள சுரேஷ்கண்ணன்,
ஒரு படைப்பு உருவாக்கப்பட்டு பொதுவில் வைக்கப்பட்டு விட்டால் அது அனைத்து விதமான விமர்சனங்களுக்கும் உட்பட்டதே. இப்படம் குறித்த மிகுதியான பாராட்டுகளை கவனத்துடனும், சாடல்களை புன்னகையுடனும்தான் எதிர்கொள்கிறேன்... இப்படம் உங்களுக்குள் ஏற்படுத்திய உணர்வுகளை சொல்லியிருக்கிறீர்கள்..அது ஆளாளுக்கு வேறுபடும்.உதாரணமாக ஊர்ப் பெரிசுகள் காமெடி செய்வதெல்லாம் (அதென்ன நண்பரே இத்துப் போன கிராமம்?) உங்களுக்கு ஏற்புடையதாயில்லை...என்ன செய்வது ? கிராமத்தின் பெரிய மனிதர்கள் என்றாலே சாதியப் பெருமை பேசி மீசையை முறுக்குவதையே பார்த்து பழகி விட்ட சூழலில் அவர்களின் அபத்தமான பகுதியை சுட்டிக்காட்டி பகடி செய்திருக்கிறோம்.தனி நபர்களையே சுற்றிச் சுழலாமல் சமூகத்தை பற்றி கதை சொல்ல முயன்றிருக்கிறோம்...எவ்வளவு தூரம் வெற்றிகரமாக சொல்லி இருக்கிறோம் என்பதில் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம்...இருக்கட்டும். எனது இந்த பின்னூட்டம் உங்கள் விமர்சனத்துக்கான பதில் அல்ல... உங்கள் விமர்சனங்களின் மீது எனக்கு மதிப்பு உண்டு...இந்த விமர்சனத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒரு சில கருத்துகளுக்கான விளக்கம் மட்டுமே...
குதிரைக்காரனின் வருங்கால மனைவி அவ்வளவு அழகானவள் எப்படி அப்புக்குட்டியை கட்டிக்க சம்மதித்தாள் என்பது பல (அழகான?) ஆண்களின் பொதுப் புத்தி சார்ந்த பிரச்சினையாக இருக்கிறது...மலைக்கிராமத்தில் வாழும் பெண் அவள். அது மலையில் வாழும் ஒரு சிறிய சமூகம்...அச் சமூகத்துக்குள் மட்டுமே திருமணம் எனும்போது அவர்களின் சாய்ஸ் மிகவும் சிறிய அளவிலானது...நன்றாக வைத்துக் கொள்பவன், அன்பானவன் என்பது மிக முக்கியமான தகுதி... (கொஞ்சம் கவனித்தீர்களென்றால் சரண்யா மோகனின் அப்பா அழகில் கிட்டத்தட்ட அப்புக்குட்டியை ஒத்தவராகவும், அவரது மனைவி சரண்யாவை போலவே நிறமாய் அழகாய் இருப்பதையும் உணரலாம்.) அப்புறம் சரண்யா மோகனின் குடும்பம் வசதியானதல்ல (அவர் பொண்ணுக்கு தருவதாக சொல்லும் சீரின் அளவை கவனித்திருந்தால் புரியும்) அப்புக்குட்டிக்கு குதிரை இல்லையென்றால் ஜீவனத்துக்கு கஷ்டம், எனவே அவனுக்கு பொண்ணைக் குடுக்க முடியாதென்று சொல்லும் நிலையில்தான் அவர் இருக்கிறார்.
தாழ்த்தப்பட்ட சாதி என்று ஊர்த்தலைவர் சொல்லுவதை குறிப்பிட்டிருக்கிறீர்கள்..(அவர் மட்டுமல்ல அந்த காதலிக்கப்படும் பெண்ணும் கூட ஓரிடத்தில் அப்படித்தான் சொல்லுவாள்.) படத்தில் `சின்ன சாதி’ என்றுதான் வசனம் இருந்தது. சென்சாரில் அதை அனுமதிக்க முடியாது என்று பிடிவாதம் செய்து தாழ்த்தப்பட்ட சாதி என்று மாற்றி விட்டார்கள்..(சர்வசாதாரணமாக புழங்கும் ஒரு வார்த்தையைக் கூட உபயோகிக்க முடியாத நிலைதான் இங்கு இருக்கிறதென்பதையும் புரிந்து கொள்ளுங்கள்). மிக நுட்பமான வாசிப்பும், கூர்த்த மதியும் கொண்ட நீங்கள் எதை எதையோ யூகிக்கிறீர்கள்...இயல்பாக எழுதும் நான் இப்படி ஒரு வசனம் எழுதியிருக்க மாட்டேன் என்று யூகித்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் சுரேஷ் கண்ணன். 
ஊருக்கு வெளியிலா அழகர்சாமியின் வாகனத்தை வைத்திருப்பார்கள்? என்பது உங்கள் கேள்வி..ஆமாம் . அப்படித்தான் வைத்திருப்பார்கள். எங்கள் ஊரில் அப்படி வைக்கப்பட்ட குதிரை வாகனம் திருடு போன சம்பவம்தான் இக்கதைக்கான இன்ஸ்பிரேஷன்....நீங்கள் அசட்டு நகைச்சுவை என்று குறிப்பிடுவது போன்ற சம்பவங்களை எனது கிராம வாழ்க்கையில் தினமும் அனுபவித்திருக்கிறேன்...நமக்கு பரிச்சயமில்லாத விஷயங்களெல்லாம் சாத்தியமற்றவை என்று கருத வேண்டியதில்லை...நன்றி.

மேற்கு தொடர்ச்சி மலை said...

நான் பாஸ்கர்சக்தி (மேற்குத் தொடர்ச்சி மலை)

பிச்சைப்பாத்திரம் said...

நண்பர்களுக்கு நன்றி.

//நமக்கு பரிச்சயமில்லாத விஷயங்களெல்லாம் சாத்தியமற்றவை என்று கருத வேண்டியதில்லை..//

ஏற்றுக் கொள்கிறேன்.

அன்பான பாஸ்கர் சக்தி,

உங்கள் விளக்கங்களுக்கு நன்றி. அவற்றில் சில தெளிவை அளித்தன. இந்த so called விமர்சனத்தை ஒருவேளை நீங்கள் ஒருவேளை வாசிக்க நேர்ந்தால் புன்னகையுடன் கடந்து செல்வீர்கள் என்று தெரியும். :-)

சரண்யா மோகனின் பெற்றோர்களின் தோற்றததை நானும் கவனித்தேன். இந்த நம்பகத்தன்மையை படம் முழுவதும் கையாண்டிருந்தால், இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்பது என் எதிர்பார்ப்பு.

வழக்கமாக கிராமத்து பெரியவர்கள் என்றாலே சாதியப்புத்தியுடன் மீசையை முறுக்கிக் கொண்டு வீரமாக சித்தரித்தற்கு ஒரு மாற்றாக அவர்களின் அசட்டுத்தனங்களையும் காண்பித்திருப்பதாக நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். ஆனால் சொல்லி வைத்தாற் போல ஒரே மாதிரி அத்தனை பேருமா காமெடி செய்வார்கள் என்பதுதான்.

தாழ்த்தப்பட்ட சாதி' என்று வந்திருப்பது நீங்கள் முதலில் எழுதியிருக்க மாட்டீர்கள் என்பதும் சென்சார் பிரச்சினையினால்தான் என்பதும் எளிதாகவே யூகிக்க முடிந்தது. ஆனால் படத்தின் இறுதி வடிவத்தைப் பற்றிதானே பேச முடியும்? வேறு வார்த்தைகளை தேர்ந்தெடுத்திருக்கலாமோ?

//ஒரு படைப்பு உருவாக்கப்பட்டு பொதுவில் வைக்கப்பட்டு விட்டால் அது அனைத்து விதமான விமர்சனங்களுக்கும் உட்பட்டதே//

இதேதான் என்னுடைய நிலைப்பாடும். பொதுவில் வைக்கப்பட்ட இந்த so called விமர்சனத்தை எவர் ஒருவரும் ஒரே வார்ததையில் 'குப்பை' என்று சொன்னால் கூட அது என்னைப் பாதிக்காது. நான் எழுதியிருப்பதின் பின்னால் உள்ள உழைப்பு பற்றியும் அதன் மதிப்பு பற்றியும் எனக்குத் தெரியும்.

அ.சா.குவின் முயற்சி பற்றி எனக்கு மதிப்பிருக்கிறது. அதை இன்னும் கச்சிதமாக்கியிருக்கலாம் என்கிற ஆதங்கம்தான் இந்தப் பதிவு.

ஒரு சினிமாவை உருவாக்குவதற்கான சிரமங்களையும் நடைமுறைச் சிக்கல்களையும் என்னால் யூகிக்க முடியும்.
ஆனால் ஒரு கறாரான பார்வையாளனாக அதன் இறுதி வடிவத்தைத்தான் எப்போதும் கணக்கில் எடுத்துக் கொள்வேன்.

உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி பாஸ்கர் சக்தி.

உலக சினிமா ரசிகன் said...

//தாழ்த்தப்பட்ட சாதி' என்று வந்திருப்பது நீங்கள் முதலில் எழுதியிருக்க மாட்டீர்கள் என்பதும் சென்சார் பிரச்சினையினால்தான் என்பதும் எளிதாகவே யூகிக்க முடிந்தது//
தெரிந்தே இதை உங்கள் விமர்சனத்தில் குறையாக குறிப்பிட்டது விமர்சன வக்கிரம்.

hariharan said...

உங்கள் விமர்சனம் நன்றாகத்தான் உள்ளது, தமிழ் சினிமா எனறாலே ஹீரோயிசம், பட்ஜெட் அதிகம் என்பவற்றைக் கடந்து யார் ஹீரோ என தெரியாமலேயெ ஒரு படம் வந்திருக்கிறது. எல்லாப்படத்திஅயும் விமர்சனம் செய்யமுடியும்,.

குதிரை கெடவர்களை உதைக்கிறது எப்படி? இப்படி லாஜிக் உதைத்தாலும் ச்மீபத்தில் நான் பர்த்த என்னைப் பாதித்த சினிமா அழகர்சாமியிம் குதிரை, மனிதனை அவன் திருடனாக இருந்தாலும் நேசிக்க கற்றுக்கொடுத்த படம்.
சாமியார்களை பகடி செய்த படம், வழக்காமான சினிமாக்களில் வரும் போலீஸ் மோசமானவர்கள், சமூகவிரோதிகளுக்கு ஆதரவானவர்கள். ஆனால் இப்படியும் இருக்கிறார்கள் என்பதை அங்கிகரித்த படம். குதிரை கிடைத்தால் ஊருக்கு எப்படியாவது சென்றுவிடலாம் என இருக்கும் அழகர்சாமி, ரேடியோ செடுகாரன், ராட்டினம், மெளக்காரான் போன்றோர் தன்னால் வருமானம் இழக்ககூடது என நினைப்பதோடு கிராமத்து மக்களின் சந்தோசத்தை கெடுக்க விரும்பவில்லை. உண்மையில் தமிழ் சினிமாவிற்கு நல்ல எதிர்காலத்தை இந்த படம் இருப்பதாக சொல்கிறது.

Sivakumar said...

சுரேஷ், இப்படம் குறித்து தாங்கள் எழுதிய இரண்டு பாகத்தையும் படித்தேன். ஆனால் ஒரு கறாரான பார்வையாளனாக அதன் இறுதி வடிவத்தைத்தான் எப்போதும் கணக்கில் எடுத்துக் கொள்வேன் என்று கூறி உள்ளீர்கள். அதே சமயம் தங்கள் விமர்சனத்தில் "இதெல்லாம் நடக்குமா", அசட்டை, அபத்தம் போன்ற குற்றச்சாட்டுகள் சில இடங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏனைய சம்பவங்கள் எல்லாம் படத்தில் கூறப்பட்டுள்ள இடங்களில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே பரிச்சயமாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு விமர்சகன் என்பவன் இரான், அமெரிக்கா, மும்பை, மதுரை போன்ற இடங்களில் உருவாகும் படங்களை பார்த்து நிறை, குறைகளை அடுக்கலாம். அதே சமயம், "இந்த ஊர் மக்கள் இப்படியே இருப்பார்கள். நம்ப முடியவில்லை" போன்ற வரிகளை எழுதுவதற்கு முன் அப்பகுதிகளில் சில காலமெனும் வாழ்ந்திருந்தால் மட்டுமே சரியான புரிதலுடன் குற்றம் சாட்ட முடியும் என்பதில் சந்தேகமில்லை. சமீபத்தில் நான் பார்த்த ஈசன் படம் கூட சென்னை பற்றி சரியான புரிதலோ, அனுபவமோ இன்றி சசிகுமாரால் எடுக்கப்பட்டது என்பேன். திறமையான படைப்பாளிகளோ அல்லது விமர்சகர்களோ....இந்த விஷயத்தை மட்டும் சரியாக புரிந்து கொள்ள அவ்வப்போது மறப்பது அல்லது மறுப்பது ஏன் என்பது அவர்களுக்கே வெளிச்சம்!!

எவ்வாறாயினும் இப்படம் குறித்த தங்கள் பார்வை எனக்கு ஒரு புதிய அனுபவத்தையும், சினிமா பற்றிய வேறு கதவுகளையும் திறந்து வைத்திருக்கிறது. இனி அவ்வப்போது தங்களிடம் உரையாடுவான் இந்த பாமர சினிமா ரசிகன். வாழ்த்துகள்!!

சாணக்கியன் said...

/* 'தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து விட்டானே என் மகன்' என்று ஊர்த்தலைவர் கதறுகிறார். அன்றாட பேச்சு வார்த்தையில், அதுவும சாதிப்புத்தி அழுத்தமாக படிந்து போன கிராமத்து மனிதர் பேசும் போது 'தாழ்ததப்பட்ட சாதி' என்றா சொல்வார்?

*/

அவர், ‘தாழ்ந்த சாதி’ என்று சொல்லியிருந்தாலோ அல்லது ஒரு ஜாதியின் பெயரைச் சொல்லியிருந்தாலோ படத்திற்கு எத்தகைய எதிர்ப்புகள் வந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்... பட டைட்டில் வைத்ததற்கே பிரச்சனையான படங்கள் விருமாண்டி முதல், வெற்றித் திருமகள் வரை... எனவே இதைத் தவிர்க்க முடியாது...

/*
உலக திரை விழாக்களில் கலந்து கொள்ளும் திரைப்படங்கள், அந்தந்த நாட்டின் கலாச்சாரத்தை, இசையை பிரதிபலிக்க வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. தமிழ்படத்தைக் காண வரும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு நம்முடைய மண்ணின் இசையை அளிக்காமல், இன்னொரு கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை தருவது சரியா எனத் தெரியவில்லை. எந்த ஹங்கேரி படத்திலாவது தமிழ் இசைக்கருவிகளின் பின்னணி இசையைக் கேட்டதுண்டா என்ற கேள்வியின் பின்புலத்தில் இதை யோசித்துப் பார்க்கலாம்.
*/

உண்மைதான். உலக சினிமா என்றில்லை. ஆடியன்ஸ் லோக்கல்தான் என்று முடிவு செய்துவிட்டாலும் அந்தச் சூழலுக்கு பொருந்துகின்ற நேட்டிவிடி கொண்ட இசையையே கொடுக்க வேண்டும். என்ன செய்ய, ரகுமானோ வேறு இசையமைப்பாளர்களோ அப்படி போட்டால் நாம் ஒன்றும் சொல்வதில்லை... பெரிய ஹிட்டும் ஆகிவிடுகிறது. ராஜா சூழலுக்கு தக்கவாறு இசையமைத்தால் அவர் தன்னை அப்டேட் செய்துகொள்ளவில்லை என்று சொல்கிறார்கள் சில மேதைகள். தானும் ஓட்டப் பந்தயத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக குழம்ம்பிப்போய் மேற்கத்திய வாத்தியங்களுடன் சில சமயங்களில் இசையமைக்கிறார்... இதனால் இழப்பு நம்மைப் போன்ற ரசிகர்களுக்குத்தான்.

/*
இன்னொரு வகையில் பார்த்தால் இசைக்கு மொழியோ, கலாச்சாரமோ தடையில்லை. எந்தவொரு நாட்டின் இசைக்கருவியாலும் மனிதனின் சில ஆதாரமான, பொதுவான உணர்வுகளை பிரதிபலிக்க முடியும். அந்த வகையில் ராஜாவின் இசை மகத்தான பிரமிப்பைத் தருகிறது. குதிரையின் அறிமுகக் காட்சி, குதிரைக்காரனின் அறிமுகக் காட்சி, குதிரையை மீட்க போராட்டம் நிகழும் சண்டைக் காட்சி போன்றவைகளில் ராஜாவின் பின்னணியிசை உன்னதமான அனுபவத்தைத் தந்தது என்பதை மறுக்க மாட்டேன்.
*/

இதே காரணங்களுக்காகத்தான் கையாண்டிருப்பார் என நம்பலாம். ஹேராம் இந்தியச் சுழல் என்றாலும் சிம்பொனி இசை நன்றாகப் பொருந்தியதல்லவா? நந்தலாலாவுக்கு அடுத்தபடியாக இது ஒரு உலக சினிமா ரேஜ்சிற்குப் போகும் என ராஜா ஏமாந்த படம் போலும் இது :)

/* இதனால்தான் முன்னணி இயக்குநர்கள் சகிக்க முடியாமல் அவரிடமிருந்து விலகி விடுகிறார்கள் என நினைக்கிறேன் */

பாலா, கமல் போன்ற முன்னணி இயக்குநர்களால் எப்படி ராஜவோடு வேலை செய்து நல்ல பாடல்களைப் பெற்றுவிட முடிகிறது என்பதையும் சேர்த்து யோசிக்கலாம்.

Anonymous said...

//அழகான பெண்கள், சுமாரான தோற்றமுடையவரை திருமணம் செய்ய சம்மதித்தால் பெரும்பாலும் மணமகன் செல்வந்தராக இருப்பார்//

அன்னக்காவடி சீமான் மீது அழகுபுயல் விஜயலட்சுமி கொடுத்த புகார் எல்லாம் பார்த்துமா இப்படி ஒரு அவதானிப்பு?

Anonymous said...

ஒரு நல்ல படத்தை தர வேண்டும் என்று நினைத்து தன்னால் முயன்ற‌ வரை முயன்று சுசீந்திரன் இப்படத்தை தந்துள்ளார். ஆனால் நீங்களோ படத்தை கோளாறு சொல்கின்றீர்கள். உங்களிடம் உள்நோக்கம் உள்ளது. பாஸ்கர் சக்தி ஒருமுறை அவசரப்பட்டு உங்களை கேவலமாய் ஒரு கமெண்ட் செய்து விட்டார். அதனால் அவரை உங்களுக்கு பிடிக்கவில்லை. அவரை அதற்கு அப்புறம் எங்கோ பார்த்த போது கூட அவரை சந்திக்க ஏனோ விருப்பம் இல்லை என்று சொல்லியிருந்தீர்கள். ஏனோ என்பது பொய். உங்களுக்கு அவர் மேல் வெறுப்பு. அதனால் தான் அவரை நீங்கள் சந்திக்கவில்லை. அவருடைய கதை அழகர்சாமியின் குதிரை. அவரை பழி வாங்கவே படம் சரியில்லை என்று கட்டுரை எழுதி உங்கள் மனதை சாந்தப்படுத்திக் கொள்கின்றீர்கள். இது கண்டிக்கத்தக்கது.

Anonymous said...

Hi suresh...you better stop writing reviews..just because you saw a couple of so called world movies does not make you a genius reviewer...i liked this movie so much i saw it nearly three times...its like a rustic fairytale with plenty of black humour.Everything is cliched(damn where the hell you have learned the word cliche,i dont know) to you is because we have seen it already. does that mean its unnecessary..your mind is cliched and broken..you better admit yourself in mental hospital.if robert bresson's au hazard balthazar is taken in tamil i dont think you will celebrate it.waht makes you think you can review a work of art just because you saw a couple of world movies..pls don come off this iranian,korean movie bullshit..this is a tamil movie and it does not have to be comparable with any world movies nor it is necessary for any people to c it..it is a movie for tamil audiences and you dont have to worry about it getting into international arena..do you think the foriegners wont like this because it looks cliched to you.didnt paruthi veeran and raam get international recogntion you idiot?even if does not get recogntion who cares..why do we have always think that our ass needs to be kissed by foriegners ..are they having two dicks or what?sorry for the language but this is how they talk in wold movies isnt it?motherfucker,asshole,cunt?do you think our tamil movie also should have these type of words..ohh i unsderstand thats why you are encouraging gautam vasudev menon.this movie looks cliched to you because you have watched thousands of tamil movies in your life.if you watch 100 korean movies then you can see the cliches in korean and iranian movies.talking about music...does korean movies BGM has nativity..does kikujiro BGm has nativity..does slumdog millionaaire has nativity especially when the movie is taking place in indian slums..does aadukalam music has nativity?have you seen the korean movie classic...you know what comes has background score...pachelbel's music which is nothing but western classical..is western classical the music of korean people you idiot?.you think we have stuck up with emotional drama's other have moved in a very progressive way..what about shawshank redemption..that movie will be loved nearly 3/4 th of the world.talking about animals behaving like an hero..why do you have to compare it with aatukara alamelu..have you seen hachiko a dog's tale..c this movie and if you dont cry i will kiss your feet.dont you know that movie viewing is all about an emotional experience.dont world movies are emotional?what about amelie,maria full of grace,sea inside,color of paradise,a moment to remember,forrest gump.are you saying that these movies are overrated you idiot.i think you have delusions of grandeur....check your mind with a good psychitrist?

hitherto said...

by the way comparing world movies and tamil movies is like mike tyson and narasimhan fighting....by the way suresh i like oamakutchi narsimhan's sense of humour better than mike tyson...if you compare this nature then oama kutchi narasimhan will easily win.not only that oamakutchi narasimhan will be a better and loving person than mike tyson...think about this

சாணக்கியன் said...

/* மிருகங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை கலை முதிர்ச்சியுடன் பதிவு செய்த படமாக பிரெஞ்ச் இயக்குநர் ராபர்ட் பிரெஸ்ஸான் இயக்கிய Au Hasard Balthazar -ஐ பரிந்துரை செய்ய விரும்புகிறேன் */

சு.க. கடந்த ஞாயிறு அன்றுதான் இப்படத்தைப் பார்த்தேன். அ.சா.கு.வுக்கும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான உணர்வுப்பூர்வமான உறவுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை... அதாவது அந்தப் படத்தின் மையம் அதுவில்லை... எனும் போது எதற்காக அந்த பிரெஞ்சுப் படத்துடன் ஒப்பிடுகிறீர்கள்?

Mr.Anon said...

படம் ஒரு குப்பை என்பது ஒருபுறம் இருந்தாலும் , தங்களது விமர்சனம் முழுவதிலும் ஒரு மேதாவித்தனமும் , போலி அறிவுஜீவித்தனமும் தெரிகிறது.

சாணக்கியன் said...

படம் பார்த்தேன். அது ஒரு எளிய சினிமா. மிகப்பெரிய கலைப் படைப்பு என்றோ, உலகத்தரம் என்றோ அதன் இயக்குநரும், ஆசிரியரும் எண்ணிக்கொண்டு வேலை செய்திருக்கவில்லை என்பதும் தெரிகிறது. பத்தாம் வகுப்பு மாணவனின் கட்டுரையை பி.ஹெச்.டிக்கு சமர்பித்த கட்டுரை என நீங்களே தவறாக எண்ணிக்கொண்டு கடுமையாக மதிப்பீடு செய்தது போல இருக்கிறது உங்கள் விமர்சனம்...

யாரோ சிலபேர் ரொம்பப் புகழ்ந்துவிட்டார்கள் என்பதற்காகத்தான் உங்கள் பதிவா? சாதாரண புண்ணுக்கு அறுவை சிகிச்சைத் தேவையா?